Chocks: December 2025

Thursday, December 11, 2025

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை : ஓர் சுருக்கமான பார்வை

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை : ஓர் சுருக்கமான பார்வை

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

பொருளடக்கம் 
  1. முகவுரை
  2. இரு தேசக் கோட்பாட்டின் வேர்கள்
  3. ஜின்னா - பெரியார் சந்திப்பு 
  4. அமைச்சரவைத் தூதுக்குழு
  5. பாகிஸ்தான் - திராவிடஸ்தான் ஒப்பீடு
  6. காந்தியின் படுகொலை 
  7. முடிவுரை 
  8. விவரணைகள்
முகவுரை

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றி அறிய, வரலாற்றின் இரண்டு முக்கிய மனிதர்களான காந்தியும் ஜின்னாவும் எடுத்துச் சென்ற சிந்தனைக் பயணத்தை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

துவக்கத்தில் காந்தி சனாதன தர்மத்தின் அடிப்படைகள் குறித்து பேசினார்; அதே நேரத்தில் ஜின்னா, "இந்து - முஸ்லீம்" ஒற்றுமையை வலியுறுத்தும் அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தினார். காலப்போக்கில் அவர்கள் இருவரின் சிந்தனைப் பாதைகளும் மாறின. இறுதி வரை இந்துவாக வாழ்ந்த காந்தி, பிரிவினைச் சூழலில் "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற கொள்கையை வலியுறுத்துவதை தன் முக்கியப் போராட்டமாகக் கொண்டார். மறுபுறம், தொடக்கத்தில் ஒற்றுமையைப் பேசிய ஜின்னா, இறுதியில் "நேரடி நடவடிக்கை நாள்" போன்ற அரசியல் நடவடிக்கைகள் மூலம் "இந்து - முஸ்லீம்" பிரிவினையை முன்னெடுத்தார்.
இரு தேசக் கோட்பாட்டின் வேர்கள்

19 ஆம் நூற்றாண்டின் இறுதியும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் "இந்து–முஸ்லீம்" அரசியல் சிந்தனையில் மிக முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்த காலமாகும்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுத்தாளர் சந்திரநாத் பாசு "இந்துத்துவா" என்ற சொல்லை முதன்முறையாக பயன்படுத்தினார். காந்தியின் சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பே, இந்தியாவின் ஆரம்பகால சுதந்திர இயக்கத்தை வடிவமைக்க உதவிய செல்வாக்கு மிக்க உறுதியான தேசியவாதிகளாக "லால்-பால்-பால்" (Lala Lajpat Rai, Bal Gangadhar Tilak, and Bipin Chandra Pal) மூவரும் உருவெடுத்தனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிக்க, "லால் - பால் - பால்" கூட்டணியின் அணுகுமுறையில் இந்து கலாச்சார நோக்கங்கள் தென்பட்டன. குறிப்பாக, சுதந்திரப் போராட்டத்தைச் சுற்றி மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு வழியாக, பால கங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தி மற்றும் சிவாஜி ஜெயந்தி விழாக்களை ஊக்குவித்தார்.

இதற்கிடையில், 1880 களில் இஸ்லாமிய தத்துவவாதி சையது அகமது கான், "இந்தியாவிற்கு உட்பட்ட முஸ்லீம் தேசியம்" பற்றியும், 1930 களில் உருதுக் கவிஞர் முகமது இக்பால், "இந்தியாவில் முஸ்லீம்களுக்கு தனி உரிமை" பற்றியும் பேசினர்.
ஆரம்பத்தில், முஸ்லீம் லீக் கட்சியின் நோக்கம் பாகிஸ்தானை உருவாக்குவது அல்ல, மாறாக "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற அடிப்படையில் முஸ்லீம் கலாச்சார மற்றும் மத அடையாளத்தைப் பாதுகாப்பதாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால், "இந்து - முஸ்லீம்" பிரிவினை பற்றி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவா இயக்கங்கள் தீவிரமாகப் பேசிய காலகட்டத்தில், ஜின்னா "இந்து - முஸ்லீம்" ஒற்றுமை அரசியலை மட்டுமே பிரகடனப்படுத்தினார்.

இந்நிலையில், 1937 மாகாணத் தேர்தல்களில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் பின்தங்க, காங்கிரஸ் முன்னிலை பெற்றது. இந்த சூழலில் தான் ஜின்னா பாகிஸ்தான் கருத்தியல் குறித்து ஆழமான சிந்தனைக்குள் நுழைந்தார். ஏனெனில், மேலாட்சி அரசு (Dominion) முறையின் கீழ் மாகாண அளவிலான ஆட்சிக்கு வந்த காங்கிரசின் வலதுசாரிகள் ஆதரவுடன் இந்துத்துவா இயக்கங்கள் முஸ்லீம்களை ஒடுக்கக்கூடும் என்ற நியாயமான அச்சத்தால், ஜின்னா 1937 க்கு பிறகு முஸ்லீம்களின் அரசியல் உரிமைகளை தீவிரமாக பேசத் தொடங்கினார்.

1920 களில் தொடங்கி இரு தேசக் கோட்பாட்டை முதன்முதலாக முன்வைத்தது சாவர்க்கர் தலைமையிலான இந்துத்துவா இயக்கம் என்பதை நினைவில் கொள்ளத்தக்கது. பின்னர் நாட்டின் நிலைமைகளைக் கவனித்து முஸ்லீம் லீக்கும் அதையே பேசத் தொடங்கியது. இந்தப் பின்னணியில், 1940 லாகூர் மாநாட்டில் "பாகிஸ்தான் முன்மொழிவு" தீர்மானத்தை முஸ்லீம் லீக் நிறைவேற்றியது. அதன்பின் பாகிஸ்தானே ஜின்னாவின் அரசியல் கோஷமாக மாறியது. அதே காலகட்டத்தில், படிப்படியாக நாடு முழுவதும் "இந்தியா - பாகிஸ்தான்" என்ற இரு தேசக் கோட்பாடு வலுப்பெற்றது.

மொத்தத்தில், ஆரம்பத்தில் ஒற்றுமையை வலியுறுத்திய ஜின்னாவின் நிலைப்பாடு, பின்னர் பாகிஸ்தான் உருவாக்கம் நோக்கி மாறியதற்கு முக்கிய காரணம் காங்கிரசின் வலதுசாரி பிரிவுகளும் இந்துத்துவம் சார்ந்த இயக்கங்களுமே இருந்ததாக கூறினால் அது மிகையாகாது.
ஜின்னா - பெரியார் சந்திப்பு

1940 களில் பாகிஸ்தான் மற்றும் திராவிடஸ்தான் குறித்து "பெரியார் - ஜின்னா - அம்பேத்கர்" இடையில் சந்திப்புகளும் கடிதத் தொடர்புகளும் நடந்தன.

திராவிடஸ்தான் உருவாக்க ஜின்னாவின் ஆதரவை பெரியார் கேட்டார். ஆனால், "இந்திய முஸ்லீம்களின் பிரதிநிதியாக நான் பேசுவது போல, திராவிடஸ்தான் குறித்து பார்ப்பனர் அல்லாத கூட்டமைப்பே பேச வேண்டும்" என்று ஜின்னா பதிலளித்தார்.

அமைச்சரவைத் தூதுக்குழு

பிரிட்டிஷ் இந்தியாவின் இறுதி காலத்தில், இந்தியத் தலைவர்களுடன் அரசியல் பேச்சுவார்த்தைகள் நடத்த பல வட்டமேசை மாநாடுகள், ஆணையங்கள் மற்றும் தூதுக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றுள், ஆங்கிலேய அரசின் அமைச்சரவைத் தூதுக்குழு (Cabinet Mission) நாட்டின் பிரிவினையைத் தடுப்பதற்காக மேற்கொண்ட முக்கிய முயற்சியாகும்.

அமைச்சரவைத் தூதுக்குழு நாட்டின் பிரிவினையைத் தவிர்க்க "கூட்டாட்சி அமைப்பு" (Federalism) உட்பட பல முக்கிய ஆலோசனைகளை முன்மொழிந்தது. ஆரம்பத்தில் இந்த ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பின்னர் அவற்றின் அரசியல் விளக்கங்களைப் பற்றிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இடையேயான தீர்க்க முடியாத கருத்து மோதல்கள் காரணமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளாக பிரிந்தன.
பாகிஸ்தான் - திராவிடஸ்தான் ஒப்பீடு

பாகிஸ்தான் உருவாக பல காரணங்கள் இருந்தன; அதில் இந்துத்துவா இயக்கங்களின் அரசியல் ஆதிக்கம், முஸ்லீம் மத உரிமைகள் மீதான விவாதங்கள் மிக முக்கியமானது. அதனுடன், இந்தியாவின் "இந்து - முஸ்லீம்" பிரச்சினை சர்வதேச கவனத்தையும் ஈர்த்தது. மேலும், முஸ்லீம் லீக் தனிநாடு கோரிக்கையை ஒரு மாபெரும் இயக்கமாக முன்னெடுத்தது. இதற்கு, "நேரடி நடவடிக்கை நாள்" (Direct Action Day) முக்கிய எடுத்துக்காட்டு.

திராவிடஸ்தான் உருவாகாமல் போனதற்கு காரணங்கள் வேறு. அதில் மதம் பேசுபொருளாக இல்லை; சாதியை இந்து மதத்தின் ஒரு உள் பிரச்சினையாகவே ஆங்கிலேயர்கள் பார்த்தனர். மேலும், அன்றைய திராவிட இயக்கம் முஸ்லீம் லீக் அளவுக்கு ஒரு தேசிய மாற்று சக்தியாக முன்னெழ முடியாத சூழலில் இருந்தது.

இன்று இந்தியாவில் மத அடையாளத்தில் சிக்கி பலவீனமான நிலையில் உள்ள முஸ்லீம் லீக்கை ஒப்பிடும் போது, சாதி - மத பேதமற்ற திராவிட இயக்கம் ஒரு வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

காந்தியின் படுகொலை 

ஒப்பந்தத்தின்படி, பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.75 கோடியில், 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்திய அரசு ரூ.20 கோடி மட்டுமே வழங்கியது. 1947 அக்டோபர் 22 அன்று, பாகிஸ்தான் அரசு ஆதரவோடு பதான் குழுக்கள் காஷ்மீரில் படையெடுத்ததால், மீதமுள்ள பாக்கித் தொகை ரூ.55 கோடி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தின்படி ரூ.55 கோடியை பாகிஸ்தான் அரசுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி, 1948 ஜனவரி 13 அன்று காந்தி உண்ணாவிரதம் தொடங்கினார். காந்தியின் கோரிக்கைக்கு இணங்கிய இந்திய அரசு பாக்கித் தொகையை முழுமையாக வழங்கியது. 

இவ்வாறு, "இந்து - முஸ்லீம் ஒற்றுமை, பாகிஸ்தான் மீதான நலன், வேற்றுமையில் ஒற்றுமை" போன்ற அரசியல் கொள்கைகளை பேசிய காந்தியின் அரசியல் செயல்பாடுகளை விரும்பாத இந்துத்துவவாதி கோட்சே காந்தியை படுகொலை செய்தார்.

முடிவுரை 

மாற்றான் தாய் மனப்பான்மையோடு முஸ்லீம்களை அணுகிய இந்துத்துவ இயக்கங்களின் ஆதிக்கம், சிறுபான்மையினராக இருந்த முஸ்லீம்களில் அச்ச உணர்வை உருவாக்கியது. மொத்தமாகப் பார்த்தால், அன்றைய சூழலில் பிரிவினை தவிர்க்க முடியாததாக இருந்ததுதான் கள யதார்த்தம்.

மேலும், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை என்பது காந்தி - ஜின்னா சிந்தனைகளின் தாக்கங்கள், மத ரீதியாக உருவான அரசியல் சச்சரவுகள் மற்றும் அச்சங்கள், காந்தியின் படுகொலை, சமூக மனோநிலைகள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து உருவாக்கிய வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாகும். 

விவரணைகள் 





வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை : ஓர் சுருக்கமான பார்வை

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை : ஓர் சுருக்கமான பார்வை குறிப்பு =   இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத...