சோழர்கள் பற்றி சில செய்திகள்
விளக்கம் = இந்த சுருக்கமான கட்டுரை, ஆழமாக (Depth) விவரிக்காமல், குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் மேலோட்டத்தை அகலமாக (Broad) வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆதித்த கரிகாலன் படுகொலை மற்றும் ராஜராஜ சோழன் வயது குறித்து ஐயங்கள் நிலவினாலும், இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, தலைப்பில் இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம்
- தலைநகரங்கள்
- சிறப்புகள்
- விமர்சனங்கள்
- சாளுக்கிய சோழ வம்சம்
- இலங்கையில் சோழர்கள்
- ஆட்சியில் பொன்னியின் செல்வன்
- ஆதித்த கரிகாலன் படுகொலை
- உடையார்குடி கல்வெட்டு
- படுகொலையின் பின்னணி
- காந்தளூர் சாலைப் போர்
- முடிவுரை
- விவரணைகள்
தலைநகரங்கள்
1. முற்காலச் சோழர்கள் காவிரிப்பூம்பட்டினம், உறையூர் மற்றும் திருவாரூர் நகரங்களை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.
2. இடைக்கால சோழர்கள் தஞ்சை, கும்பகோணம் மற்றும் சிதம்பரம் நகரங்களை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.
3. பிற்காலச் சோழர்கள் கங்கைகொண்ட சோழபுரம், பழையாறை மற்றும் தாராசுரம் நகரங்களை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.
சிறப்புகள்
1. தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற, முதல் நீர்ப்பாசன திட்டம் கொண்ட அணை என பரவலாக அறியப்படும் கல்லணையை கி.பி 1 ஆம் நூற்றாண்டில் திருச்சி அருகே கரிகால சோழன் கட்டினார்.
2. பெரிப்ளசு என்ற பண்டைய கிரேக்க நூல், முற்காலச் சோழர்களின் நாட்டையும், அதன் நகரங்கள், துறைமுகங்கள், வர்த்தகம் போன்றவற்றை போற்றி உள்ளது.
3. பேரரசுகளின் காலத்தில் தந்தையும் மகனும் இணைந்து ஆட்சி புரிவது மிகவும் குறைவாகவே நடக்கும் செயல் என்ற நிலையில், 1012 இல் ராஜராஜ சோழன் தனது மகனான முதல் ராஜேந்திர சோழனுக்கு இணை அரசனாக பட்டம் சூட்டினார்.
4. முதலாம் ராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டினார், மேலும், முதலாம் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டினார்.
5. இலங்கை, மாலத்தீவுகள், கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, போர்னியோ போன்ற பல்வேறு நாடுகளை சோழ அரசர்கள் கைப்பற்றினர்.
6. கடல் மாநகரங்களை சோழர்கள் போல எந்த இந்திய பேரரசும் கைக்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7. பிற்காலச் சோழர்கள் பட்டியலில், விசயாலயச் சோழன் முதல் அதிராஜேந்திர சோழன் வரை, நேரடி சோழ வாரிசுகளாக ஆட்சி புரிந்தனர். இதன் பின்னர், சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்ட முதலாம் குலோத்துங்க சோழனின் சாளுக்கிய சோழ வம்சம் ஆட்சியை தொடர்ந்தது.
விமர்சனங்கள்
1. முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சி "பார்ப்பனர்-வேளாளர் கூட்டணி" (மதம்-வணிகம்) தரப்புக்கு பொற்காலமாக இருந்தது.
2. பிற சமயங்களை ஒதுக்கி, வைதீக ரீதியிலான சைவ சமயத்தை வளர்த்தார்கள்.
3. சிறுதெய்வ வழிபாட்டை ஒதுக்கி, பெருந்தெய்வ வழிபாட்டை ஊக்குவித்தார்கள்.
4. சோழர்களின் கலைத்திறன் மெச்சத்தக்கது, ஆனால் ஆட்சிமுறை மக்களுக்கு எதிரானது.
5. இறுதி காலங்களில் உழுகுடி, வெட்டிக்குடி, வணிகக்குடி இடையிலான பிரச்சனைகள் மற்றும் அதிக வரி விதிப்பு சோழர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.
6. ராஜராஜ சோழனையும் ராஜேந்திர சோழனையும் பாராட்டி பேசும் இந்து சாதியினர் சாளுக்கிய சோழ வம்சத்தின் ஆட்சியைப் பற்றி பேசுவதில்லை. சுருக்கமாக, சுங்கம் விதித்த சோழனைப் பற்றி பேசுகிற கூட்டம் சுங்கம் தவிர்த்த சோழனைப் பற்றி மெச்சுவதில்லை.
சாளுக்கிய சோழ வம்சம்
ராஜராஜ சோழன், தனது மகளான குந்தவைக்கு, சாளுக்கிய நாட்டில் (இன்றைய ஆந்திராவின் கோதாவரி-கிருஷ்ணா பகுதி) வேங்கியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த விமலாதித்தனுக்கு மணம் முடித்தார். அவர்களது மகன் ராஜராஜ நரேந்திரன், முதலாம் ராஜேந்திர சோழனின் மகளான மங்கை தேவியை மணம் முடித்தார்.
முதலாம் ராஜராஜ சோழனின் எள்ளுப் பேரனான வீரராஜேந்திர சோழனின் மகனான அதிராஜேந்திர சோழன் வாரிசு இல்லாமல் இறந்ததால், கீழைச் சாளுக்கிய அரச மரபைச் சேர்ந்த ராஜராஜ நரேந்திரனின் மகன், கீழைச் சாளுக்கிய இளவரசன் "முதலாம் குலோத்துங்க சோழன்" சோழ நாட்டை ஆட்சி புரிய தொடங்கினார். இதனால், சோழர்களின் ஆட்சி சாளுக்கிய சோழ வம்சமாக மாறியது.
இலங்கையில் சோழர்கள்
பல்வேறு சோழ அரசர்கள், பல்வேறு காலகட்டங்களில், இலங்கை அரசர்களுக்கு எதிராக போரிட்டனர். குறிப்பாக, முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை கைப்பற்றி அப்பகுதிக்கு “மும்முடி சோழ மண்டலம்” என பெயரிட்டார். 1070 இல் முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிப் பொறுப்புக்குப் பெற்றார். சாளுக்கியர்கள், கலிங்கர்கள், பாண்டியர்கள், சேரர்கள் உள்ளிட்ட பல்வேறு போர்களில் ஈடுபட்ட முதலாம் குலோத்துங்க சோழன், இலங்கையில் சோழப் படைகளை வழிநடத்த, அவரது மைத்துனன் ராஜேந்திரனை அனுப்பினார்.
1. அண்ணன் கண்டராதித்த சோழனின் மகன் மதுராந்தக சோழன் என்ற உத்தம சோழன்.
2. கண்டராதித்த சோழனின் தம்பி அரிஞ்சய சோழனின் மகன் சுந்தர சோழன்.
3. சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன், ஒரே மகள் குந்தவை மற்றும் இளைய மகன் முதலாம் ராஜராஜ சோழன்.
4. குந்தவையின் கணவர் வந்தியத்தேவன், மற்றும் வந்தியத்தேவன்-குந்தவை தம்பதியினருக்கு குழந்தை இல்லை.
கண்டராதித்த சோழன் சிவச் சாமியாராகிறார். அவரது மகன் மதுராந்தக சோழன் குழந்தை என்பதால், கண்டராதித்த சோழனின் தம்பி அரிஞ்சய சோழன் அரியணை ஏற்கிறார். அவருக்கு பிறகு, அவரது மகன் சுந்தர சோழன் அரியணை ஏற்கிறார். இப்போது, சுந்தர சோழன் இறந்துவிடுகிறார். கண்டராதித்த சோழனின் மகன் மதுராந்தக சோழன் அரியணை ஏற்கிறார். அவருக்கு பின்னால், சுந்தர சோழனின் இளைய மகன் ராஜராஜ சோழன் (பொன்னியின் செல்வன்) அரியணை ஏற்கிறார்.
ராஜராஜ சோழன் வழியிலான சோழ ஆட்சி தென்னிந்தியாவில் புகழ்பெற்றது; கடல் கடந்து கொடி நாட்டியது என்றெல்லாம் போற்றினாலும், ராஜராஜ சோழன் ஆட்சியானது பார்ப்பனர்களுக்கு பொற்காலமாக விளங்கியது மற்றும் பாமர மக்களுக்கு பாரமாக அமைந்தது என்பது வரலாற்றாசியர்களின் கருத்தாகும்.
ஆதித்த கரிகாலன் படுகொலை
சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொல்கிறார். அதை தொடர்ந்து, ஆதித்த கரிகாலனை பாண்டியனின் ஆபத்துதவிகளான ரவிதாசன், சோமன், பரமேஸ்வரன் உள்ளிட்ட பார்ப்பனர்கள் கொல்கிறார்கள். மூத்த மகன் ஆதித்த கரிகாலன் முதலில் இறந்துவிடுகிறார்; அடுத்ததாக அவரது தந்தையான சோழ அரசர் சுந்தர சோழன் துயருற்று இறந்துவிடுகிறார். அதன் பின்னர், கண்டராதித்த சோழனின் மகன் மதுராந்தக சோழன் ஆட்சிக்கு வருகிறார், ராஜராஜ சோழன் இளவரசர் ஆகிறார்.
ஆதித்த கரிகாலனை கொன்ற குற்றவாளிகள் பற்றி அரசர் மதுராந்தக சோழன் விசாரிக்கவில்லை என்றும், அதற்கான கேள்விகளை எழுப்பிய குந்தவையின் கணவர் வந்தியத்தேவனை சிறையில் அடைத்ததாகவும் வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, மதுராந்தக சோழனுக்குப் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற ராஜராஜ சோழன், குற்றவாளிகளான ரவிதாசனின் கூட்டத்தை கண்டறிந்து, அவர்களை கொல்லாமல் நாடு கடத்துகிறார். அத்துடன், வந்தியத்தேவனையும் விடுதலை செய்கிறார். மேலும், பார்ப்பனர்களை கொல்வது பாவம் என்ற மதத் தத்துவத்தால், ரவிதாசன் உட்பட பார்ப்பன கூட்டத்தை ராஜராஜ சோழன் கொல்லவில்லை என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
உடையார்குடி கல்வெட்டு
ஆதித்த கரிகாலனை கொன்ற கொலையாளிகள் பார்ப்பனர்கள் என்பதற்கான ஆதாரம், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலூகா, உடையார்குடியில் அமைந்துள்ள அனந்தீஸ்வரர் கோவிலின் கருவறை மேற்கு புற சுவட்டில் காணப்படுகிறது. இதுவே உடையார்குடி கல்வெட்டு என அழைக்கப்படுகிறது.
ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலியும், ஆதித்த கரிகாலன் கொன்ற வீரபாண்டியனின் மகளுமான நந்தினி என்ற கற்பனை கதாபாத்திரத்தின் சதி வலைப்பின்னலே, ஆதித்த கரிகாலனின் மரணத்திற்கு காரணம் என்றொரு பிரபல நாவலின் கதை, பார்ப்பனர்களை பழிப்பதில் இருந்து காப்பாற்றியது. ஆனால், உடையார்குடி கல்வெட்டுப்படி சொல்ல வேண்டுமெனில், "ஆதித்த கரிகாலனை கொன்ற கொலையாளிகள் பார்ப்பனர்கள்". ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகு, மதுராந்தகச் சோழன் அரசராக ஆட்சிப் பொறுப்பேற்றார். ராஜராஜ சோழன், மதுராந்தகச் சோழன் மறைந்த பிறகு, அரசனாகி பார்ப்பனர்களுக்கு அனுசரணையாக ஆட்சி புரிந்தார்.
பின் குறிப்பு = உடையார்குடி கல்வெட்டின் போல, திருவாலங்காட்டுச் செப்பேட்டில் "ஆதித்தன் மறைந்தான், காரிருள் சூழ்ந்தது" என்ற சொற்றொடரும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இதில் ராஜராஜசோழனின் வயது குறித்து வரலாற்றாசியர்கள் மத்தியில் ஐயப்பாடு நிலவுகிறது.
படுகொலையின் பின்னணி
முதலாம் ராஜராஜ சோழன் தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்ட நிலையில், குந்தவை ராஜராஜ சோழனுக்கு அக்கா அல்லது தாய் என்ற விவாதங்கள் உள்ளன. ராஜராஜ சோழனின் ஆட்சியில் கட்டுங்கடா அதிகாரம் செலுத்திய குந்தவை உண்மையில் ராஜராஜ சோழன் அரியணை ஏற, பார்ப்பனர்களின் உதவியை நாடி ஆதித்த கரிகாலனை கொன்றாரா? அல்லது அரியணைக்கு ஆசைப்பட்டு மதுராந்தகச் சோழன் பார்ப்பனர்களின் உதவியை நாடி ஆதித்த கரிகாலனை கொன்றாரா? என்பதற்கு விடையில்லை. எப்படியாகினும், மிக சிறுவயதில் இருந்த முதலாம் ராஜராஜ சோழன், நிச்சயம் ஆதித்த கரிகாலனை கொன்றிருக்க முடியாது.
மொத்தத்தில், ஆதித்த கரிகாலன் படுகொலையால் பார்ப்பனர்கள், மதுராந்தகச் சோழன், ராஜராஜ சோழன், குந்தவை மற்றும் சிற்றரசுகள் லாபம் பெற்றார்கள் என்றால் அது மிகையாகாது.
காந்தளூர் சாலைப் போர்
அரியணை ஏறியவுடன், ராஜராஜ சோழன் பங்கெடுத்த போர்களில் காந்தளூர் சாலைப் போர் முக்கியமானதாகும். சோழனுக்கும் சேரனுக்கும் இடையே நடைபெற்ற போரில், சோழப் படைகள் காந்தளூர் கல்விச் சங்கத்தை அழித்தனர். காந்தளூர் கல்விச் சங்கத்தில் பயிற்சி பெற்ற பார்ப்பனர்கள், ஆதித்த கரிகாலனை கொன்றதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக ராஜராஜ சோழன் காந்தளூர் சாலைப் போரை தொடுத்தாரா? அப்படியெனில், ஆதித்த கரிகாலனை படுகொலை செய்த பார்ப்பனர்களை கொல்லாமல் நாடு கடத்திவிட்டு, காந்தளூர் கல்விச் சங்கத்தை முற்றிலும் அழித்தது ஆய்வுக்குரியது.
முடிவுரை
ஆதித்த கரிகாலன் பார்ப்பனர்களை எதிர்த்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக, சேர நாட்டில் பார்ப்பனர்களின் கலசத்தை ஆதித்த கரிகாலன் எட்டி உதைத்தது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், ஒரு கொலை நடக்கிறதானால், அதன் பயன் யாருக்கு போய் சேர்கிறது என்பதை பொறுத்து தான் விசாரணை அமையும். அந்த வகையில், ஆதித்த கரிகாலன் படுகொலை யாருக்கு பயன் தந்திருக்கிறது? சோழ ஆட்சிக்காலத்தில் கொடி கட்டி பறந்த பார்ப்பனர்களுக்கும், எதிர்பாராதவிதமாக ஆட்சிக்கு வந்த மதுராந்தக சோழனுக்கும், பிரமாண்டத்தை பரப்பிய ராஜராஜ சோழனுக்கும் தான் அந்த பயன் சென்றடைந்து இருக்கிறது.
விவரணைகள்
ராஜமாணிக்கனார், சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி மற்றும் பல வரலாற்றாசிரியர்கள் எழுதிய சோழர்களின் வரலாற்று நூல்கள்.
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.