Chocks: இஸ்ரேல்-ஈரான் மோதல் மற்றும் யூத-அரேபிய உறவுகள்

Wednesday, October 2, 2024

இஸ்ரேல்-ஈரான் மோதல் மற்றும் யூத-அரேபிய உறவுகள்

இஸ்ரேல்-ஈரான் மோதல் மற்றும் யூத-அரேபிய உறவுகள்

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

பொருளடக்கம் 
  1. முகவுரை 
  2. தற்கால போர்கள்
  3. ஒளிந்திருக்கும் உள் அரசியல்
  4. புவிசார் அரசியல்
  5. ஈரான் அரசியல் வரலாறு 
  6. இஸ்ரேல்-ஈரான் மோதல்
  7. இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்
  8. முடிவுரை 
  9. பின்னிணைப்பு
  10. விவரணைகள்
முகவுரை 

ஒரு வல்லரசு மற்றொரு வல்லரசின் அண்டை நாடுகளுக்கு அல்லது எதிரி நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கும் போது, ​​அதனை வல்லரசுகள் பெரிதாக அலட்டிக் கொள்ளாது. ஆனால், தொழில் ரீதியாக ஆயுதங்களை வழங்குவதோடு நிறுத்தாமல், ஒரு வல்லரசு மற்றொரு வல்லரசின் விவகாரங்களில் நேரடியாக தலையிட்டால், அது குறிப்பிடத்தக்க மோதலுக்கு வழிவகுக்கும். மேலும், வல்லரசுகள் தங்களுக்கிடையே நேரடி மோதலில் ஈடுபட்டால், அது உலகப் போர் அல்லது மிகப் பெரிய மோதலாக விரிவடையக்கூடிய சாத்தியம் உள்ளது. இந்த இடுகையில், 2014 முதல் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க போர்களை வரலாற்று சூழலுடன் சுருக்கமாக ஆராய்வோம்.
தற்கால போர்கள்

தற்கால போர்களின் நிகழ்வுகள் 2014 இல் "ரஷ்யா-கிரிமியா" மோதலுடன் தொடங்கின. இது உலகளாவிய அரசியல் பதட்டத்திற்கு சாத்தியமான ஊக்கமாக கருதப்பட்ட போதிலும், ரஷ்யா-கிரிமியா மோதல் உலகத்தின் கவனத்தைப் பெறவில்லை. அதன் தொடர்ச்சியாக, 2022 இல் "ரஷ்யா-உக்ரைன்" மோதல் ஏற்பட்டது. அதன் பின், யூத-அரேபிய இடையிலான மோதலாக 2023 இல் "இஸ்ரேல்-பாலஸ்தீனம்" மோதல் உருவானது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதலின் தாக்கத்தால் 2024 இல் "இஸ்ரேல்-ஈரான்" இடையிலான பதட்டங்களை உருவாக்கி, யூத-அரேபிய பிரிவின் பரந்த சூழலை பரிணமித்தது.

மொத்தத்தில், ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் மற்றும் இஸ்ரேல்-ஈரான் போர் சூழல்கள் உலக நாடுகளையும் ஊடகங்களையும் அதிக அளவில் ஈர்த்துள்ளன.

ஒளிந்திருக்கும் உள் அரசியல்

சபஹார் துறைமுகம் (Chabahar Port) தொடர்பாக இந்தியாவுடன் ஈரான் செய்துள்ள ஒப்பந்தத்தை அமெரிக்கா ரசிக்கவில்லை. மேலும், ஈரானின் எண்ணெய் வளம் மற்றும் அதன் கடல் போக்குவரத்து வழிகள் மீதும் அமெரிக்காவுக்கு கவனம் உள்ளது. இந்த பின்னணியில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாடு, யூத வழி வந்த இஸ்ரேலின் வளர்ச்சிக்கு எதிராக ஷியா வழி வந்த ஈரான் கொண்டுள்ள நிலைப்பாடு போன்றவை கூர்ந்து கவனிக்க வேண்டியதாகும்.

யூத-அரேபிய போரில் ரஷ்யாவின் பங்கு ஆய்வுக்குரியதாகும், ஏனெனில் தற்சமயம் ரஷ்யா வகிக்கும் நடுநிலைமை முக்கியத்துவம் வாய்ந்தது. அதே நேரத்தில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. ஒரு வேளை, ரஷ்யா களத்தில் இறங்கி அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால், யூத-அரேபிய மோதலில் குறிப்பாக "இஸ்ரேல்-ஈரான்" மோதல் உலகளாவிய மூன்றாம் உலகப் போராக அல்லது மீண்டும் ஒரு பனிப்போராக வெடிக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அரசியலில் புயலை கிளப்பியிருக்கும் Epstein Files வழக்கில் உலகின் பல சக்திவாய்ந்த அரசியல்வாதிகள், பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே, மக்களின் கவனத்தை திசைதிருப்ப அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவளித்து ஈரானுக்கு எதிரான போர் பதட்டங்களைத் தூண்டுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டணி அமைத்துள்ளன; உதாரணமாக, ரஷ்யா ஈரானுக்கு ராணுவ உதவி செய்கிறது, சீனா ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது, மூன்று நாடுகளும் BRICS நாணய முறையை ஆதரிக்கின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.
புவிசார் அரசியல்

ஈரானியர்கள் ஷியா (Shia) பிரிவை, பாலஸ்தீனியர்கள் சன்னி (Sunni) பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆவர். எனவே, இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் என்பது பாலஸ்தீனிய அரசியல் கோரிக்கைகளை ஆதரிப்பதற்காக அல்ல; மாறாக, இஸ்ரேலின் பிராந்திய மேலாதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாகும்.

சன்னி பிரிவை சேர்ந்த பாலஸ்தீனியர்கள், "ஏமன், ஈரான், ஈராக், லெபனான், சிரியா" போன்ற ஷியா பிறை (Shiite Crescent) நாடுகளில் உள்ள அரசியல் செல்வாக்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குகிறார்கள். ஷியாவை சேர்ந்த சிரியா மற்றும் பிற பிராந்தியங்களுக்கு எதிரான சன்னி தலைமையிலான ISIS போர் போன்ற பல்வேறு மோதல்களின் மூலம், சன்னி தரப்பினர் ஷியா சக்தி பலவீனமடைவதை விரும்புகிறார்கள்.

மொத்தத்தில், ஷியா நாடுகள், சன்னிகள் அதிகமாக உள்ள பாலஸ்தீனப் போராட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. மாறாக, அரேபியர்களுக்கு (சன்னிகள்) எதிராக யூத இஸ்ரேலின் அரசியல் எழுச்சி, ஈரான் மற்றும் ஈராக் (ஷியாக்கள்) நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. எனவே, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் போரிடுகிறது. அதாவது, இஸ்ரேல்-ஈரான் மோதல் புவிசார் அரசியலில் (Geopolitical Dynamics) வேரூன்றியுள்ளது.

ஈரான் அரசியல்  வரலாறு 

தற்கால போர்களின் நெருக்கடியான சூழலில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி 19 மே 2024 அன்று விமான விபத்தில் மரணித்துள்ளார். ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக இப்ராஹிம் ரைசி வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இந்த விமான விபத்தை சாதாரணமாகக் கருத முடியாது. ஈரானும் உலக அரசியலும் புதிதல்ல. எடுத்துக்காட்டாக, 1953 மற்றும் 1979 சம்பவங்களை சுருக்கமாகப் பகிர்கிறேன்.

தொடக்கத்தில் இஸ்ரேலுடனான உறவுகளை ஈரான் வலுப்படுத்தி வந்தது. ஈரான் 1950 இல் இஸ்ரேலை அங்கீகரித்து, இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் தகவல் பரிமாற்றம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட்டன. 1950-70களில் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார தொடர்புகள் வளர்ந்தன. இதற்கிடையில், 1951 இல் ஈரான் எண்ணெய் தொழிலில் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உரிமை கொண்டாடுவதை விரும்பாத பிரதமர் முகமது  மொசாடெக் (Mohammad Mosaddegh), எண்ணெய் தொழிலை தேசியமயமாக்கினார். இதற்கு எதிராக, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா அரசுகள் 1953 இல் CIA மற்றும் MI6 உறுதுணையுடன் ஈரான் அரசை சதித்திட்டம் தீட்டி கவிழ்த்தன.

ஏற்கனவே அரசராக இருந்த முகமது ரேசா பஹ்லவி (Mohammad Reza Pahlavi), பிரதமரின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் வல்லரசுகளின் ஆதரவுடன் அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் கொண்டு வலுவான அரசராக உயர்ந்தார். அவர் ஈரான் எண்ணெய் தொழிலில் அமெரிக்க நிறுவனங்களுக்கு சுமார் 40% உரிமையை வழங்கினார். 1953 முதல் 1979 வரை மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ஆட்சி செய்த பஹ்லவியை விரும்பாத ஈரான் மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, பஹ்லவி ஆட்சி கலைக்கப்பட்டு, ரூகொல்லா கொமெய்னி (Ruhollah Khomeini) ஈரானின் உச்சத் தலைவராக பதவிக்கு வந்தார். மேற்கத்திய அடிப்படையிலான ஆட்சி தூக்கியெறியப்பட்டு, இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் மதவாத ஆட்சி அமைக்கப்பட்டது. 1989 இல் கொமெய்னி காலமான பிறகு அலி காமெனி (Ali Khamenei) உச்சத் தலைவராக பதவியேற்றார்.

இஸ்ரேல்-ஈரான் மோதல்

1982 இல் இஸ்ரேலிய படைகள் லெபனானை ஆக்கிரமித்து, பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களின் (PLO) தளங்களை அழித்து, தெற்கு லெபனானில் தங்கள் எல்லையை பாதுகாக்க முயற்சி செய்து பெய்ரூட் வரை முன்னேறின. பின்னர் ஹிஸ்புல்லாவின் தொடர்ச்சியான தாக்குதல்களின் காரணமாக, 2000 இல் இஸ்ரேலிய படைகள் லெபனானை முழுமையாக விட்டு வெளியேறின. இதனால், லெபனானில் உள்ள ஷியா முஸ்லிம்கள் மற்றும் தேசப்பற்றாளர்களுக்கு இடையே ஹிஸ்புல்லாவின் செல்வாக்கு உயர்ந்தது. அமெரிக்க ஆதரவுடன் மத்திய கிழக்கில் நீண்டகால ஆதிக்கத்தை செலுத்தி வரும் இஸ்ரேலை தோற்கடித்த ஒரே குழுவான ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் அழிக்க முயற்சிக்கிறது.

இதனிடையே, ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் வழங்கும் உதவிகளை அச்சுறுத்தலாக கருதும் இஸ்ரேலும், ஈரானின் எண்ணெய் வளத்தையும் கடல்வழிப் போக்குவரத்தையும் கைப்பற்ற முயற்சிக்கும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக போரிடுகின்றன. இதில், 28 பிப்ரவரி 2026 அன்று ஈரானின் உச்சத்தலைவர் அலி காமெனி அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டார். பின்னர் அவரது மகன் முஜ்தபா காமெனி (Mojtaba Khamenei) புதிய உச்சத்தலைவராக பதவியேற்றார்.

இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுத்ததற்கு பதிலாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கி வருகிறது. அதே சமயம், உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியையும் (Strait of Hormuz) மூடியுள்ளது. தொடங்கிய போரை முடிக்க முடியாமல் அமெரிக்கா திணறி வரும் நிலையில், ஒரு தீர்வை எட்ட விட ஈரானும் இஸ்ரேலும் மோதி வருகின்றன.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்

ஆபிரகாமின் வழித்தோன்றல்களான பண்டைய இஸ்ரவேலர்கள் கானானில் குடியேறினர். கானானில் ஏற்பட்ட பஞ்சம், இஸ்ரவேலர்களை எகிப்துக்கு குடிபெயர வழிவகுத்தது; அங்கு அவர்கள் இறுதியில் அடிமைப்படுத்தப்பட்டனர். பத்து கட்டளைகளை பெற்ற பிறகு, மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட தேசத்தை (The Promised Land) நோக்கி அழைத்து சென்றார். பாலைவனத்தில் தண்ணீர் வழங்கல் தொடர்பாக மோசேயின் கீழ்ப்படியாமை (Striking the Rock), அவரை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் நுழைவதை தடுத்தது. மோசேக்கு பதிலாக, யோசுவா இஸ்ரவேலர்களை கானானுக்கு அழைத்து சென்றார்; அங்கு அவர்கள் கானானிய பழங்குடியினரை எதிர்கொண்டனர்.

பல்வேறு பேரரசுகளின் வரலாற்றை கொண்ட இன்றைய நாடுகளின் பகுதிகளை கானான் உள்ளடக்கியது. 7 ஆம் நூற்றாண்டு தொடங்கி, கானானில் அரேபியர்களின் செல்வாக்கால் மதமாக இஸ்லாம் உருவானது. 1917 இல் பால்ஃபோர் பிரகடனம் (Balfour Declaration), யூத தாயகத்தை ஆதரித்தது; பிரிட்டன் ஆட்சியின் போது, பாலஸ்தீனத்தில் யூதர்கள் அதிக அளவில் குடியேற்றத்திற்கு வழிவகுத்தது. பல நூற்றாண்டுகளாக ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த பாலஸ்தீனம், சுயநிர்ணயம் மற்றும் மாநில உரிமையை கோரி வந்த நிலையில், 1948 இல் உருவாக்கப்பட்ட இஸ்ரேல், இஸ்ரேல் எதிர் நிலையில் பாலஸ்தீனம் என இரு நாட்டு மோதலுக்கு வழிவகுத்தது.

யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களுக்கு புனிதமான இடமாகக் கருதப்படும் கோவில் மலையை (Temple Mount) இஸ்ரேல் பராமரிக்கிறது. கானான் பகுதியில் அமைந்துள்ள காசா (Gaza Strip) பகுதியை ஹமாஸ் (பாலஸ்தீனம்) நிர்வகிக்கிறது. காசா மற்றும் கோவில் மலை, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான அரசியல், மத மற்றும் கலாச்சார மோதல்களுக்கு மைய புள்ளிகளாக மாறி, யூத-அரபு மோதலின் அடிப்படையை உருவாக்குகின்றன.

யூதர்கள் தங்களை கடவுளின் குழந்தைகள் என்றும், உலகின் மூத்த குடிமக்கள் என்றும் கருதுகின்றனர். யூத மதத்தில் வேரூன்றிய கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்கள், உலகளாவிய சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் மத விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதால், மேட்டிமை மனப்பான்மை கொண்ட யூத மதம் அதை விரும்பவில்லை. இதுவும் தொடரும் மோதல்களுக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றாலும், நிலம், இறையாண்மை, வரலாற்று உரிமைகோரல்கள் மற்றும் புவிசார் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களே இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் அடிப்படை என வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.
முடிவுரை 

யூத-அரேபிய மோதலுக்கு கிறிஸ்தவ பெரும்பான்மையுள்ள நாடுகள் மத்தியஸ்தப் பாத்திரமாக இருந்தாலும், 2024 இல் பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திய போது அந்த நாடுகள் பெரும்பாலும் செயலற்ற நிலையில் இருந்தன. ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பதிலடி கொடுத்த போது, அவை திடீரென விழித்து கொண்டு கண்டனங்களைத் தெரிவித்தன. தற்போது 2026 இல் இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரானை தாக்கி அதன் உச்சத்தலைவரை கொன்று, போரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இதனால் தற்கால போர்களில் முக்கியமாக "இஸ்ரேல்-ஈரான்" மோதல் தீவிரமடையக்கூடும். இந்த மோதல் தனிப்பட்ட நாடுகளுக்கிடையே வளைகுடா போராக விரிவடையலாம், அமெரிக்காவை தொடர்ந்து பல்வேறு வல்லரசுகள் ஈடுபட்டால் மூன்றாம் உலகப் போராக பரிணமிக்கலாம், அல்லது அமைதி முயற்சிகள் வெற்றி பெற்றால், அடுத்தடுத்து போருகள் நடைபெறாமல் அமைதிக் கொடியை உயர்த்தும் வாய்ப்பும் இருக்கலாம்.

உலக நாடுகளில் நிலவும் அரசியல் நிகழ்வுகள் போர் பதட்டங்களை மட்டுமல்ல, பொருளாதார இழப்புகளையும் அதிகரிக்கின்றன. எனவே, இந்த மோதலின் உலகளாவிய விளைவுகளையும், அடுத்ததாக வரவிருக்கும் நிலைமைகளையும் கவனித்து, அவற்றின் பாதிப்புகளை புரிந்துகொண்டு மட்டுமே மதிப்பிட வேண்டும்.

பின்னிணைப்பு 

// நேரு-மோடி நிலைப்பாடு //

வரலாற்று ரீதியாக, 1950 களுக்குப் பிறகு, பாலஸ்தீனிய நிலங்கள் இஸ்ரேலால் சர்வதேச ஆதரவும் எதிர்ப்பும் எதிர்கொண்ட நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டன. இந்நிலையில், நேருவின் ஆட்சிக்காலத்தில், இந்தியா பாலஸ்தீனின் கோரிக்கைகளை ஆதரித்தது. ஆனால் மோடியின் ஆட்சிக்காலத்தில், இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியது.

// ஆரிய அரசியல்  // 

பாலஸ்தீனம் முதல் ஈரான் வரை உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை இந்துத்துவா கும்பல் தீவிரமாக ஆதரிக்கிறது. இவ்வாறு, இஸ்ரேலுக்கான இந்துத்துவா கும்பலின் ஆதரவு ஒரு வரலாற்று தொடர்பைக் கொண்டுள்ளது. அதாவது, யூதர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும், அவர்கள் அரசியல் நடவடிக்கைகள் மூலம் பாலஸ்தீனத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறார்கள். அதே நேரத்தில், ஆரியர்கள் (இந்துத்துவா கும்பல்) எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும், அவர்கள் மத சடங்குகள் மூலம் இந்தியாவில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறார்கள். மேலும், யூதர்களும் ஆரியர்களும் பிற இனங்களுடன் கலந்தாலும், இனத்தூய்மை பற்றி இன்னமும் பேசிக் கொண்டிருப்பது விசித்திரமானது.

விவரணைகள்

யூதம் - கிறிஸ்தவம் - இஸ்லாம் ஓர் பார்வை

https://chocksvlog.blogspot.com/2020/10/1.html

ஆதாம் ஏவாள் வம்சமும் ஆபிரகாமிய மதங்களும்

https://chocksvlog.blogspot.com/2020/11/3.html

Israeli-Palestinian Conflict

https://chocksvlog.blogspot.com/2023/10/israeli-palestinian-conflict.html

Fundamentals of Abrahamic Religions

https://chocksvlog.blogspot.com/2020/11/2.html




Scientist Einstein and Socialist Nehru on Israel and Palestine


Israel’s first PM asked Nehru to help promote peace in the Region


Why did US and Israel attack Iran?


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை

அணிசேரா இந்தியா  இப்போது  அமெரிக்காவின் கைப்பாவை குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே ...