விடியல் தள்ளிப் போகலாம் ஆனால் தடுக்க முடியாது!
குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம்
- முகவுரை
- கொள்கை அரசியல்
- தேர்தல் படிப்பினை
- ஊடகங்கள் விவாதிக்காத கேள்விகள்
- விஜய்யின் உண்மையான நோக்கம்
- கொள்கை விட்டால் கட்சி இல்லை
- த.வெ.க அரசின் தெளிவற்ற நிலை
- முடிவுரை
முகவுரை
நடந்துமுடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளின் ரேடாரில் சிக்காமல், The Route மூலம் த.வெ.க மேற்கொண்ட அவதூறான பிரச்சாரங்களும், பெற்றோர்களை "Emotional Blackmail" செய்த குழந்தைகள் மூலமும், த.வெ.க ஆட்சிக்கு வந்துள்ளது. த.வெ.கவுக்கும் தி.மு.கவுக்கும் மற்றும் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையே ஏறக்குறைய 20 லட்சம் வாக்குகள் தான் வித்தியாசம். இருப்பினும், த.வெ.க சார்பில் விஜய் முதலமைச்சராகவும், தி.மு.க சார்பில் உதயநிதி எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளனர்.
இப்போது இருக்கும் அரசியல் சூழலில் தி.மு.க என்ன செய்தாலும் திட்டவும், த.வெ.க என்ன செய்தாலும் பாராட்டவும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. அதனால் புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க அரசு, அண்டாவில் கையை விட்டு தேனை குடிக்க முயன்றால், அதே அண்டாவில் தேள் இருந்தால் அதை எப்படி கையாள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதையே அரசு நிர்வாகத்தின் சவால் என்று சொல்லலாம்.
கொள்கை அரசியல்
மனிதன் காலம் காலமாக கையால் உணவை எடுத்து வாய் வழியாகவே உண்கிறான். மாற்றம் வேண்டும் என்பதற்காக உணவு உண்ணும் முறையே மாறிவிடாது. அதுபோல, அரசியல் என்பது அடிப்படையில் உறுதியான கொள்கை மற்றும் சித்தாந்தங்களை மையமாகக் கொண்டதே. ஒரு மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்துக்காக, நீதிக்கட்சியின் நேரடி வாரிசான திமுக உருவாக்கி வளர்த்த தமிழ்நாட்டின் அடித்தளமான சமூகநீதி கொள்கை ஒருபோதும் அழிந்து போகாது.
அதே நேரத்தில், 2026 தேர்தலில் மக்கள் கொள்கைக்காக வாக்களிக்கவில்லை என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. அதற்கு சான்றாக, தி.மு.க கூட்டணிக்கு 1.54 கோடி வாக்குகள் கிடைத்துள்ளன. மேலும், புதியதாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்ற த.வெ.க கட்சிக்கு நம்மைவிட வெறும் 17.5 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. இருப்பினும் அவர்கள் ஆளுங்கட்சி; நாம் எதிர்க்கட்சி. அதுவே ஜனநாயகத்தின் தீர்ப்பு. ஆனால், தி.மு.கவின் கொள்கை அரசியலின் பயணம் இதனால் முடிவுக்கு வராது.
தேர்தல் படிப்பினை
இந்தத் தேர்தல் தி.மு.க.வினருக்கு ஒரு தெளிவான உண்மையை உணர்த்தியுள்ளது. சமூக ஊடகங்களில் நாம் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அரசியல் என்பது களத்தில் மட்டுமல்ல; சமூக ஊடக உலகிலும் நடக்கிறது. அங்கே நம்முடைய குரல் இன்னும் வலுப்பெற வேண்டியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், தி.மு.க தன்னைத் தானே சீரமைத்து, வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் தெளிவாக உள்ளது.
நீங்கள் அரசியல் பற்றிய புரிதல் கொண்டவராக இருந்தால், மாத வருமானத்தைத் தாண்டி சமூக நலனில் ஈடுபாடு கொண்டவராக இருந்தால், நாட்டையே ஒரு குடும்பமாகக் கருதுபவராக இருந்தால், வரலாற்றில் ஆர்வம் கொண்டவராக இருந்தால், தி.மு.கவின் இந்தத் தோல்வியை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக, நம் தலைவரின் தோல்வி மனதை அதிகமாகப் பாதிக்கிறது.
ஆனால், வரலாறு எதைக் கற்றுக் கொடுக்கிறது? பேரறிஞர் அண்ணா கூட தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். ஆக, தோல்வி இறுதி முடிவு அல்ல; ஒரு இடைநிறுத்தம் மட்டுமே. அதே உணர்வோடு நாம் இதையும் பார்க்க வேண்டும்.
நாம் அடங்கி வாழும் மக்கள் அல்ல. எந்தச் சூழ்நிலையிலும், எந்த இடத்திலும், நம் கொள்கையையும் கருத்தையும் உறுதியாக முன்வைக்கும் துணிச்சலே தி.மு.கவினராகிய நம் அடையாளம். இந்தத் தேர்தல் முடிவு நம்மைப் பின்வாங்கச் செய்யாது; மாறாக, இன்னும் உறுதியாக நிற்கத் தூண்டும்.
ஊடகங்கள் விவாதிக்காத கேள்விகள்
முதல் நாளில் கையெழுத்தான திட்டங்கள், கம்யூனிஸ்ட், வி.சி.க, முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவை நாடியது, தலைவர்கள் சந்திப்பு, வீட்டு சாப்பாடு, கூட்டணி அமைச்சரவை, அதிக அளவில் தலித் மற்றும் பெண் அமைச்சர்கள் இடம்பெற்ற அமைச்சரவை போன்றவை தொடர்பான விஜய் குறித்த செய்திகள் அதிகமாக பரப்பப்படுகின்றன. ஆனால், அதே நேரத்தில் ஊடகங்கள் விவாதிக்காத செய்திகள் பல உள்ளன,
1. "தீயசக்தி" என்று கூறிவிட்டு தி.மு.க கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடியது ஏன்?
2. "ஊழல் சக்தி" என்று கூறிவிட்டு அ.தி.மு.கவை சந்தித்தது ஏன்? "ஊழலை ஒழிப்பேன்" என்ற வாக்குறுதி என்னானது?
3. பார்ப்பன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி வந்த இந்து அறநிலையத்துறைக்கு பார்ப்பனரை அமைச்சராக நியமித்தது ஏன்?
4. "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" என்ற கொள்கையை பின்பற்றிய தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் எதற்கு?
5. PM Shri திட்டத்தை அமல்படுத்தக் கோரிய ABVP தரப்பின் கோரிக்கைக்கு "முடியாது" என்று உறுதியாகக் கூறாமல் "பரிசீலனை செய்வோம்" என்று விஜய் கூறியது ஏன்?
6. 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, 500 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு மட்டுமே இலவசம் என்று ஏமாற்றியது ஏன்?
7. 6 சிலிண்டர், ரூ.2,500 உரிமைத் தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம், தாய் மாமன் சீர் போன்ற வாக்குறுதிகள் எப்போது நடைமுறைக்கு வரும்?
8. "பாட்டிலுக்கு 10 ரூபாய்" என்று பாடியவர்கள், இன்று பாட்டிலுக்கு 20 ரூபாய் வாங்குவது ஏன்?
9. 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு, பின்னர் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது ஏன்?
10. டாஸ்மாக் கடைகளை மூடுவதாக நாடகமாடிவிட்டு புதிய FL-2 உரிமங்களுக்கு கையெழுத்து போடுவது ஏன்?
11. "அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவோம்" என்று சொல்லிவிட்டு, 8000 புதிய தனியார் மருத்துவமனைகளுக்கு அவசரமாக அனுமதி வழங்கியது ஏன்?
12. த.வெ.க மருத்துவ அணியினர் அரசு மருத்துவமனைக்கு ஆய்வு செய்தது ஏன்?
13. விஜய் தரப்புக்கு இசைவான நிறுவனத்துடன் புதிய மின்மாற்றி ஒப்பந்தம் கையெழுத்தான விவகாரத்தில், அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ததை தாண்டி என்ன விசாரணை?
14. 6 மணி நேரத்தில் தண்ணீர் தொட்டி கட்டும் ஒப்பந்தம் முடிக்கப்பட்ட விவகாரத்தில், அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ததை தாண்டி என்ன விசாரணை?
15. மின் வெட்டு இல்லாமல் நிர்வாகம் செய்த தி.மு.க அரசுக்கு பதிலாக, இன்று த.வெ.க ஆட்சியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டுக்கு என்ன தீர்வு?
16. விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மே 13-22 வரை வெளியான குறுகிய கால டெண்டர்களை ஏன் ரத்து செய்தார்? என்ன மறைக்கப்படுகிறது
17. மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் நடைபெற்றதாக கூறும் குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? வாகனத்தில் முகத்தை மூடி சென்ற நபர் யார்?
18. முதலமைச்சர் விஜய் ஊடகங்களை எப்போது சந்திப்பார்?
19. முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடரை நியமிக்க விரும்பியது விஜய்யின் மூடநம்பிக்கை அல்லவா?
20. ஆட்சி அமைக்க விஜய்யை அலைக்கழித்ததாக கூறப்படும் புதிய ஆளுநர் ஏன் கள்ள மௌனம் காக்கிறார்?
21. தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு சென்றதற்கு என்ன எதிர் நடவடிக்கை?
22. பா.ஜ.கவில் இருந்து வந்தவர் த.வெ.க சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராகி இருக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது?
23. சிங்கப்பெண் திட்டம், போதைத்தடுப்பு பிரிவு என்ற பெயரில் "Pink Patrol, போதைத்தடுப்பு புகார் மையம்" போன்ற கடந்தகால தி.மு.க. அரசின் நலத்திட்டங்களுக்கு விஜய் ஸ்டிக்கர் ஒட்டுவது ஏன்?
24. தினசரி அதிகரிக்கும் கொலை, கொள்ளைக்கு என்ன நடவடிக்கை?
விஜய்யின் உண்மையான நோக்கம்
வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, ஜோதிட நியமனம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சந்திப்பு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமானம் போன்ற நிகழ்வுகளே "தூய சக்தி" என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்ட விஜய்யின் Manipulative அரசியலை அம்பலப்படுத்துகின்றன; மக்களும் இதை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
விஜய் ஆட்சியில் அரங்கேறி வரும் அவலங்களைப் பற்றி, தி.மு.கவை விட்டு பிரிந்த கூட்டணியினர் இன்று விஜய்யை எதிர்த்து விமர்சிக்கவில்லை. காரணம், இனிமேல் அவர்கள் "உள்ளேன் அய்யா" என்று சொல்லும் நிலைக்கு சென்றுவிட்டனர்.
மொத்தத்தில், பொது மக்களுக்கோ, கூட்டணி கட்சிகளுக்கோ நன்மை செய்வது விஜய்யின் அரசியல் நோக்கம் அல்ல. தி.மு.கவை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்துவதற்காகவே அவர் அரசியல் செய்கிறார் என்பது தெளிவாகிறது.
கொள்கை விட்டால் கட்சி இல்லை
தி.மு.கவுடன் பயணித்த கூட்டணி கட்சியினர், தி.மு.கவின் உழைப்பையும் லாபத்தையும் பெற்றுவிட்டு, இன்று கொள்கை தெளிவற்ற விஜய்யின் த.வெ.க அமைச்சரவையில் இணைந்துள்ளனர். இந்நிலையில், அதிகாரமா? கொள்கையா? என்ற கேள்வி மீண்டும் முன் வருகிறது. அதற்கான விடையை நம் வரலாறே தருகிறது.
அதிகாரத்தைத் தேடிச் சென்றால் அது கொள்கைகளில் சமரசத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை உணர்ந்திருந்த பெரியார், தேர்தல் அரசியலிலிருந்து விலகியே இருந்தார். கொள்கைக்காக அதிகாரத்தை விட்டு விலகுவதே பெரியாரியம். அதிகாரத்திற்காக கொள்கையை விட்டு விலகுவதை சுயமரியாதை உள்ள மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அதே உணர்வோடு தான், பேரறிஞர் அண்ணா ராஜாஜியுடன் கூட்டணியில் இணைந்த போதும் கூட தனது கொள்கைகளைக் கைவிடவில்லை. அதனால் தான், தேர்தலுக்கு பிறகு விரக்தியடைந்த ராஜாஜி, "தி.மு.கவுடனான தேனிலவு முடிந்துவிட்டது" என்று குறிப்பிட்டார். ஆக, அதிகாரமா? கொள்கையா? என்ற கேள்விக்கு "பெரியார் - அண்ணா" காட்டும் பாதையே தெளிவானது; மற்றவை போலியானவை.
த.வெ.க அரசின் தெளிவற்ற நிலை
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க அரசின் நிலைப்பாடுகள் பல முக்கிய பிரச்சினைகளில் தெளிவாக இல்லை. தொகுதி மறுவரையறை, இந்தி திணிப்பு, திருப்பரங்குன்றம் தீப விவகாரம், நீட் விலக்கு, புதிய தேசிய கல்விக் கொள்கை போன்றவற்றில் "வேண்டுகோள் (Request) வைத்தோம்; ஆனால் ஒன்றிய பா.ஜ.க அரசு செவி சாய்க்கவில்லை" என்று சொல்லும் நிலையிலேயே த.வெ.க அரசு செயல்பட்டு வருகிறது. இதனால், இந்தத் தேர்தலில் மக்கள் மாற்றத்திற்கு அல்ல; மாறாக ஏமாற்றத்திற்காக வாக்களித்துவிட்டார்களோ என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கான பதிலை காலம் விரைவில் தரும்.
முடிவுரை
த.வெ.கவிற்கு ஒன்றை சொல்லி முடிக்கிறேன், போற்றுவார் போற்றட்டும்! தூற்றுவார் தூற்றட்டும்! ஆனால் இத்தோடு தி.மு.க முடிந்துவிட்டது என்று எண்ணிவிடாதீர்கள். தி.மு.க தொடங்கி 77 ஆண்டுகள் ஆகின்றன. அதில், 26 ஆண்டுகள் ஆளும் கட்சியாகவும் (வெள்ளிவிழா), 51 ஆண்டுகள் எதிர்க்கட்சியாகவும் (பொன்விழா) செயல்பட்டுள்ளது. இந்த நீண்ட அரசியல் பயணத்தில், சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, ஆளும் கட்சிக்கான முன்னுதாரணத்தையும் எதிர்க்கட்சிக்கான இலக்கணத்தையும் இந்திய அரசியலுக்கே உருவாக்கிய இயக்கம் தி.மு.க என்றால் அது மிகையாகாது.
அதே நேரத்தில், உட்கட்சி சவால்களாலும் அரசியல் பரபரப்புகளாலும் கூட தனது அடையாளத்தை இழக்காமல் நிலைத்திருக்கும் கட்சியும் தி.மு.க தான். கூவத்தூர், பாண்டிச்சேரி போன்ற சம்பவங்கள் இல்லாத ஒரே கட்சி; கட்சி பெயர் மாற்றம் காணாத ஒரே கட்சி; சின்னத்தை இழக்காத ஒரே கட்சி அது தான் தி.மு.க.
விஜய்க்கு "நட்சத்திர புகழ்" இருக்கலாம்; ஆனால் "கொள்கை" இல்லை. தி.மு.கவுக்கு "நட்சத்திர புகழ்" இல்லையெனலாம்; ஆனால் மக்களுக்காக நிற்கும் "கொள்கை" உள்ளது. வானில் ஜொலிக்கும் நட்சத்திரம் இறக்கும்; ஆனால் கிழக்கில் சூரியன் தினமும் உதிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
தி.மு.க போராடும்!
தி.மு.க வெல்லும்!
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.


