Chocks: வளைகுடாப் போர் 1991

Sunday, May 24, 2026

வளைகுடாப் போர் 1991

வளைகுடாப் போர் 1991

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

பொருளடக்கம்
  1. முகவுரை
  2. என்ன நடந்தது?
  3. நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்கா
  4. அமெரிக்காவின் தாக்குதல்
  5. ராஜீவ் காந்தியின் அமைதி முயற்சிகள்
  6. தீர்மானம் 687
  7. முடிவுரை
  8. விவரணைகள்
முகவுரை

1990 ஆகஸ்டில் ஈராக் குவைத்தை ஆக்கிரமித்த சம்பவம் நவீன உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த ஆக்கிரமிப்பு அமெரிக்கா தலைமையிலான 42 நாடுகளின் கூட்டுப் படையை உருவாக்கியது மட்டுமல்லாமல், மத்திய கிழக்கின் அரசியல் சமநிலையையும் எண்ணெய் சந்தையையும் கடுமையாக உலுக்கியது. வெறும் 100 மணி நேர தரைவழித் தாக்குதலில் முடிவடைந்த இந்தப் போர், பின்னாளில் 2003 ஈராக் போருக்கான விதையையும் விதைத்தது.
என்ன நடந்தது?

02 ஆகஸ்ட் 1990 அன்று ஈராக் திடீரென குவைத்தை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்ட சம்பவம் உலகையே உலுக்கியது. 1990-91 வளைகுடாப் போர் அல்லது பாரசீக வளைகுடாப் போர் என பலவாறாக அழைக்கப்படும் இந்தப் போர், 1991 பிப்ரவரி 28 வரை நீடித்தது.

நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்கா

குவைத் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, ஐ.நா பாதுகாப்பு சபை உடனடியாக ஈராக் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும், எண்ணெய் சார்ந்த உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில், அமெரிக்கா உடனடியாக நடவடிக்கை எடுத்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் H.W. புஷ், சவுதி அரேபியாவில் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்த உத்தரவிட்டு, பிற நாடுகளும் படைகளை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையில் 42 நாடுகள் இணைந்தன. அவற்றில் சவுதி அரேபியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளே பெரும் பங்கு வகித்தன. மொத்தப் போர்ச் செலவு சுமார் 61 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதில் பெரும்பகுதியை சவுதி அரேபியா, குவைத் மற்றும் பிற வளைகுடா நாடுகள் ஏற்றுக்கொண்டன.

ராஜீவ் காந்தியின் அமைதி முயற்சிகள்

இந்தியாவிலும் வளைகுடாப் போர் அரசியல் விவாதங்களை கிளப்பியது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஐ.கே.குஜ்ரால் பாக்தாத்தில் சதாம் ஹுசைனைச் சந்தித்து, குவைத்திலிருந்து சுமார் 1,70,000 இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டார். அந்தச் சந்திப்பின்போது, ஐ.கே.குஜ்ரால் சதாம் ஹுசைனை கட்டிப்பிடித்த புகைப்படம் உலகெங்கிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், பிரதமர் சந்திரசேகர் அமெரிக்க போர் விமானங்களுக்கு மும்பை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கினார். இதனை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவர் ராஜீவ் காந்தி கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, எரிபொருள் நிரப்பும் அனுமதி ரத்து செய்யப்பட்டது.

ஈராக்கை குவைத்திலிருந்து வெளியேறச் செய்வதற்கும், ஈராக் பாதிப்பிலிருந்து மீள உதவும் வகையில் அணிசேரா இயக்கத்தின் (Non-Aligned Movement) அமைதி முயற்சியைத் தொடங்குவதற்கும் ராஜீவ் காந்தி ஒரு இராஜதந்திர முன்னெடுப்பை மேற்கொண்டார். அவர் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, ஈராக் அதிபர் சதாம் ஹுசேனைச் சந்திக்க முயன்றார். ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை.
அமெரிக்காவின் தாக்குதல்

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் தாக்குதல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதலில், 1991 ஜனவரி 17 அன்று வான்வழித் தாக்குதல் தொடுக்கப்பட்டு குண்டுகள் பொழியப்பட்டன. இதற்கு பதிலடியாக, ஈராக் அரசு சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலில் அமைந்திருந்த கூட்டணிப் படை முகாம்களை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. 

பின்னர், 1991 பிப்ரவரி 23 அன்று தரைவழிப் படைகள் நுழைந்தன. குவைத்திலிருந்து ஈராக்கியப் படைகளை விரட்டிய கூட்டுப் படையினர், ஈராக் நிலப்பகுதிக்குள்ளும் முன்னேறினர். தரைவழித் தாக்குதல் தொடங்கிய வெறும் 100 மணி நேரத்திலேயே (24 பிப்ரவரி - 28 பிப்ரவரி 1991) அமெரிக்கப் படையினருக்கு வெற்றி கிடைத்தது.
அமெரிக்க செய்தி தொலைக்காட்சியான CNN, போர் நிலைகளிலிருந்தே நேரடி ஒளிபரப்புகளை (Live War Coverage) வழங்கி, அக்கால செய்தித் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர், அந்தப் போருக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு காணொளி விளையாட்டு உருவாக்கப்பட்டதால், இந்தப் போர் "Video Game War, Television War" என்று அழைக்கப்பட்டது.

தீர்மானம் 687

இறுதியில், 1991 ஏப்ரலில், “ஈராக் தனது குவைத் மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருதல், ஈராக்கின் பேரழிவுக்குரிய அணு ஆயுதங்களை (ரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்கள்) ஒழித்தல், மற்றும் ஐ.நா சபை ஆய்வாளர்களுக்கு ஈராக் முழு ஒத்துழைப்பு வழங்குதல்” ஆகியவற்றை ஐ.நா பாதுகாப்பு சபை (தீர்மானம் 687) வலியுறுத்தியது. இத்தீர்மானம் போர் நிறுத்தத்திற்கான அதிகாரப்பூர்வ நிபந்தனைகளை வகுத்தது. ஆனால், இந்த நிபந்தனைகளை முழுமையாக செயல்படுத்துவதில் ஈராக் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பின்னர் 2003 இல் மீண்டும் ஈராக் போருக்கு வழிவகுத்தன.
முடிவுரை

ஜார்ஜ் H. W. புஷ் தலைமையில் நடைபெற்ற 1990-91 வளைகுடாப் போர் குவைத்தை விடுவித்ததுடன் முடிவடைந்தாலும், சதாம் உசேன் ஆட்சி தொடர்ந்ததால் அமெரிக்காவுக்கும் ஈராகிற்கும் இடையே பதற்றம் நிலவியது. மேலும், ஐ.நா சபை ஆய்வாளர்களுக்கு ஈராக் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை; தனது ஆயுதத் திட்டங்கள் தொடர்பான தகவல்களை மறைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் மேலும் அதிகரித்தது.

இந்த தொடர்ச்சியான பதற்றமும் சந்தேக சூழ்நிலையும், ஒரு தசாப்தத்திற்குப் பிறகு ஜார்ஜ் W. புஷ் தலைமையிலான அமெரிக்கா 2003 இல் ஈராக் மீது படையெடுக்க முக்கிய பின்னணியாக அமைந்தது. இந்த படையெடுப்பை நியாயப்படுத்த, ஈராக் பேரழிவுக்குரிய அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால், போருக்குப் பின் அமெரிக்கா மேற்கொண்ட ஆய்வுகளில் அத்தகைய ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், தந்தை தொடங்கியதை முடிக்க முயன்ற மகன் சதாம் ஹுசைனை தூக்கிலிடச் செய்தார். ஆனால், வளைகுடாப் போர்களைச் சுற்றிய சர்ச்சைகள் இன்னும் தொடர்கின்றன.
விவரணைகள்

வாசித்தமைக்கு நன்றி. 

வணக்கம்.

No comments:

Post a Comment

Overview of the Global Narcotics Trade

Overview of the Global Narcotics Trade Note = This post gives a basic overview based on available information and is not a complete analysis...