Chocks: October 2022

Saturday, October 22, 2022

ஆணையமும் வரலாறும்

ஆணையமும் வரலாறும்

குறிப்பு = இந்த சுருக்கமான கட்டுரை முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, தலைப்பில் இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பொருளடக்கம்
  1. முகவுரை
  2. ஆணையங்கள்
  3. கள யதார்த்தம்
  4. வாரன் ஆணையம் (1963)
  5. வாட்டர்கேட் ஆணையம் (1973)
  6. இந்திய தேர்தல் ஆணையம் (1950)
  7. கபூர் ஆணையம் (1964)
  8. மண்டல் ஆணையம் (1979)
  9. சர்க்காரியா ஆணையம் (1983)
  10. தக்கர் ஆணையம் (1984)
  11. வர்மா ஆணையம் (மே 1991)
  12. ஜெயின் ஆணையம் (ஆகஸ்ட் 1991)
  13. லிபரான் ஆணையம் (1992) 
  14. ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் (1993)
  15. வோரா ஆணையம் (1993)
  16. நானாவதி-மேத்தா ஆணையம் (2002)
  17. கலைஞரின் ஆணையங்கள்
  18. ராஜமன்னார் ஆணையம் (1969)
  19. சர்க்காரியா ஆணையம் (1976)
  20. பாமதி ஆணையம் (1992)
  21. கோகுலகிருஷ்ணன் ஆணையம் (1998)
  22. சதாசிவம் விசாரணை ஆணையம் (1999) 
  23. ஆறுமுகசாமி ஆணையம் (2017)
  24. அருணா ஜெகதீசன் ஆணையம் (2018)
  25. முடிவுரை
  26. விவரணைகள்
முகவுரை

ஒரு பிரச்சனையை பற்றிய தகவல்களை கண்டறிய அல்லது பிரச்சனைக்கான காரணங்களை ஆராய அரசின் அதிகாரம் பெற்ற ஒரு நபர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட குழுக்கள் "ஆணையம்" என்று அழைக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சியின் போது ஆணையங்கள் முக்கிய பங்காற்றியதன் விளைவாக ஆணைய பரிந்துரைகளின் சார்பில் சமூக நலன் சார்ந்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பொதுவாக ஒவ்வொரு ஆணையத்திற்கும் ஒரு கதை இருக்கும், ஆனால் இப்போதெல்லாம் ஆணையங்களை அமைப்பது பயனற்றது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். மேலும், ஆணையங்களின் முடிவுகளை கையாள்வதில் அரசியல்வாதிகள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

ஆணையங்கள் உண்மையில் பயனுள்ளதா? இல்லையா? என்று கேட்டால், அசுரன் திரைப்படத்தின் ஒரு காட்சியை இரவல் வாங்கி கொள்கிறேன். அப்படத்தின் ஒரு காட்சியில் நடிகர் வெங்கடேஷ் “அரசாங்கத்த நடத்துறதே நாங்க தான் தெரியும்ல?” என்பார். அதற்கு எதிர்வினையாக நடிகர் பிரகாஷ் ராஜ் “அந்த அரசாங்கத்துல ஒரே ஒரு நேர்மையான அதிகாரி இருந்தா உங்க ஜோலி முடிஞ்சது தெரியும்ல?” என்பார். நீங்கள் இத்துடன் ஆணையங்களின் வரலாறையும் இணைத்து அணுக வேண்டும்.
ஆணையங்கள் 

ஆணையங்கள் தற்காலிக அமைப்பாக அல்லது நிரந்தர அமைப்பாக அமைக்கப்படலாம். தலைமை கணக்கு தணிக்கையாளர் ஆணையம், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம், மனித உரிமைகள் ஆணையம், மத்திய புலனாய்வு பணியகம், இந்திய தேர்தல் ஆணையம், மத்திய தகவல் ஆணையம், திட்டக்குழு ஆணையம், நிதி ஆணையம் போன்றவை நிரந்தர அமைப்புகளாகும். மேலும், நிரந்தர ஆணையங்கள் Constitutional, Statutory, Quasi Judicial அமைப்பின் கீழ் வருகின்றன. இந்த கட்டுரையில், நிரந்தர ஆணையங்களை விட ஒரு பிரச்சனையை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக ஆணையங்கள் குறித்து தான் பெருமளவில் காண இருக்கிறோம்.

கள யதார்த்தம்

ஆணையங்கள் வெளியிட்ட அறிக்கைகளால் மக்கள் மன்றங்கள் அதிர்ந்து போன கதைகள் ஏராளம். எடுத்துக்காட்டாக, ஜெயின் ஆணையம் மற்றும் மண்டல் ஆணையம் அறிக்கைகளால் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி இரண்டு முறை கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆணையத்தின் அறிக்கைபடி நடவடிக்கை எடுக்கவும், ஆணையத்தை கலைக்கவும், ஆணையத்தை மாற்றவும் அரசுகளுக்கு உரிமை உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலகளாவிய ஆணையங்கள் பற்றி விரிவாக எடுத்துரைப்பது நீண்ட நேரம் பிடிக்கக்கூடிய காரியம் என்பதால் மேற்கோளுக்கு சில ஆணையங்களின் கதைகளின் சுருக்கத்தை (Summary) மட்டும் கையாண்டு அமெரிக்காவில் தொடங்கி, இந்தியாவில் நிறுத்தி, தமிழ்நாட்டில் முடிவடைகிறது.

வாரன் ஆணையம் (1963)

அமெரிக்காவில் ஜனாதிபதி ஜான் எப்.கென்னடியின் படுகொலை குறித்தும் கொலையாளி என்று கூறப்பட்ட லீ ஹார்வி ஓஸ்வால்ட் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் விசாரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன் அவர்களால் வாரன் ஆணையம் நியமிக்கப்பட்டது.

வாரன் ஆணையம் தனது விசாரணை அறிக்கையில், ஜான் எப்.கென்னடியின் படுகொலை மற்றும் லீ ஹார்வி ஓஸ்வால்டின் நடவடிக்கைகள் குறித்து விவரித்திருந்தாலும், அது ஓஸ்வால்டின் நோக்கங்களை பகுப்பாய்வு செய்ய முயற்சிக்கவில்லை என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது. மேலும், இரகசிய பாதுகாப்பு சேவையை வலுப்படுத்தவும், ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தவும், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியின் கொலையை மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாக மாற்றும் சட்டத்தை வாரன் ஆணையம் முன்மொழிந்தது. 
வாட்டர்கேட் ஆணையம் (1973)

வாட்டர்கேட் ஊழல் என்பது "1972 ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ரிச்சர்ட் நிக்சனை மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கும் பொருட்டு, ஜனநாயக கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளின் அரசியல் உரையாடல்களை ஒட்டுக்கேட்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் நிர்வாகம் மேற்கொண்ட சட்டவிரோத முயற்சியாகும்." வாஷிங்டன் போஸ்ட் நிருபர்கள் வாட்டர்கேட் ஊழலை ஜூன் 1972 அன்று முதன்முதலில் வெளிப்படுத்தினர். ரிச்சர்ட் நிக்சன் நவம்பர் 1972 அன்று ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வாட்டர்கேட் ஊழல் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன, இது இறுதியில் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் ராஜினாமாவிற்கு வழிவகுத்தது. மேலும், வாட்டர்கேட் ஊழல் காரணமாக பதவியை ராஜினாமா செய்த ஒரே அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் ஆவார்.

செனட்டர் சாம் எர்வின் தலைமையில் அமைக்கப்பட்ட வாட்டர்கேட் ஆணையம், அரசியல் குற்றங்களை செய்ததற்காக வெள்ளை மாளிகை அதிகாரிகளை குற்றஞ்சாட்டுவதற்கும், ரிச்சர்ட் நிக்சனின் உதவியாளர்களுக்கு தண்டனை வழங்குவதற்கும் ஆதாரங்களை சேகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. மேலும், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும், அரசாங்கத்திற்கு தகுதிநிலையுடன் கூடிய சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கவும், காங்கிரஸில் சட்ட சேவையை உருவாக்கவும் வாட்டர்கேட் ஆணையம் பரிந்துரைத்தது.

இந்திய தேர்தல் ஆணையம் (1950) 

உலகின் மிகப்பெரிய மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக 15 ஆகஸ்ட் 1947 அன்று இந்திய ஒன்றிய அரசு உருவான பிறகு, 25 ஜனவரி 1950 அன்று அரசியலமைப்பின் 324 வது பிரிவின் கீழ் ஒரு நிரந்தர அரசியலமைப்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. 

ஒன்றிய அளவிலும் மாநில அளவிலும் தேர்தல் செயல்முறைகளை நிர்வகிக்கும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அரசியலமைப்பாகும். சுருக்கமாக, மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டமன்றங்கள், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியவற்றுக்கான தேர்தல்களை நடத்துதல், கண்காணித்தல், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகியவற்றை இந்திய தேர்தல் ஆணையம் நிர்வகிக்கிறது. 

இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் பரிணாம வளர்ச்சி இருந்த போதிலும், வாக்குச் சீட்டுகள் வாக்காளர்களுக்கு தனிப்பட்ட சரிபார்ப்புக்காக கொடுக்கப்பட்டு, அவர்களால் ஒரு தனி வாக்குப்பெட்டியில் வைக்கப்பட வேண்டும், அதை தொடர்ந்து 100% சீட்டுகளை எண்ண வேண்டும் என்று காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்ததும் அதற்கு ஆணையம் மறுப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 
கபூர் ஆணையம் (1964)
 
1964 இல் காந்தி படுகொலை வழக்கில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் புனேவில் நடைபெற்ற கூட்டத்தில் “காந்தி கொல்லப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு காந்தியை கொல்லும் எண்ணத்தை நாதுராம் கோட்சே வெளிப்படுத்தியதாகவும், தொடக்கத்தில் எதிர்த்து அந்த தகவலை புனே காங்கிரஸ் தலைவர் பாலுககா கனிட்கர் வாயிலாக கடிதம் மூலம் பம்பாய் முதல்வர் பி.ஜி.கேருக்கு தெரிவித்ததாகவும்” பாலகங்காதர திலகரின் பேரன் கஜனன் விஸ்வநாத் கேட்கர் பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக, கஜனன் விஸ்வநாத் கேட்கர் கைது செய்யப்பட்டார். 

இதைத் தொடர்ந்து, காந்தியின் படுகொலை சதியை விசாரிக்க கோபால் சுவரூப் பதக் தலைமையில் 1965 இல் பதக் ஆணையம் அமைக்கப்பட்டது. பதக் ஒன்றிய அமைச்சராகவும் பின்னர் மைசூர் ஆளுநராகவும் பணியாற்ற வேண்டியிருந்ததால் பதக் ஆணையத்துக்கு பதிலாக கபூர் ஆணையம் 1966 இல் அமைக்கப்பட்டது. 

காந்தி படுகொலை வழக்கில் முன்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத சாவர்க்கரின் மெய்க்காப்பாளர் ராமச்சந்திர காசர் மற்றும் செயலாளர் கஜனன் விஷ்ணு டாம்லே ஆகியோரின் சாட்சியங்களை கபூர் ஆணையம் ஆய்வு செய்தது. காந்தியின் படுகொலைக்கு முன்னும் பின்னும் கோட்சே கும்பல் சாவர்க்கரை பலமுறை சந்தித்ததை ராமச்சந்திர காசர் மற்றும் கஜனன் விஷ்ணு டாம்லே இருவரும் உறுதிப்படுத்தினர்.

“காந்தி படுகொலையில் சாவர்க்கரின் உடந்தையை நிரூபிக்கும் இரண்டு சாட்சியங்கள் (Corroborative Evidence) விசாரிக்கப்படவில்லை. காந்தி படுகொலை வழக்கின் முதற்கட்ட நீதிமன்ற விசாரணை போது இருவரையும் முறையாக விசாரித்திருந்தால் காந்தி படுகொலையில் சாவர்க்கரின் பங்கு உறுதி செய்யப்பட்டு அவருக்கு குறைந்தபட்ச ஆயுள் தண்டனை கிடைத்திருக்கும்” என்று கபூர் ஆணையம் தெரிவித்த கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. சாவர்க்கர் 1966 இல் இறந்தார் என்பதையும் கபூர் ஆணையத்தின் இறுதி அறிக்கை 1969 இல் வெளியிடப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மண்டல் ஆணையம் (1979) 

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சோசலிஸ்ட் கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து, டிசம்பர் 1978 அன்று, ஜனதா கட்சியின் பிரதமர் மொரார்ஜி தேசாய், இந்தியாவில் சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கண்டறிந்து, சாதி ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறையாக இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.மண்டல் தலைமையில் மண்டல் ஆணையத்தை அமைத்தார்.  

டிசம்பர் 1980 அன்று "சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரை வரையறுப்பதற்கான அளவுகோல்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மத்திய அரசு வேலைகளில் இடஒதுக்கீடு" ஆகியவற்றை பரிந்துரைத்து மண்டல் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்தது.

இந்திய மக்கள் தொகையில் 52 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை உள்ளடக்கியதாக ஆணையம் கண்டறிந்தது. இந்த பின்னணியில், மண்டல் ஆணையம், ஒன்றிய அரசு பணிகளில் 52 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று முதலில் வாதிட்டது. இருப்பினும், அரசியலமைப்பின் 15(4) மற்றும் 16(4) பிரிவுகளின் கீழ் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலை கருத்தில் கொண்டு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சாதிகளுக்கு முன்பு இருந்த 22.5 சதவீத இடஒதுக்கீட்டுடன் கூடுதலாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது.

// வி.பி.சிங் ஆட்சி கவிழ்ப்பு //

1989 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு ஏற்றுக்கொண்டது. அதையொட்டி, 07 ஆகஸ்ட் 1990 அன்று ஒன்றிய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்து, மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் தி.மு.க தலைவர் கலைஞரின் முயற்சியால் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் செயல்படுத்தப்பட்டது.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த முடிவு செய்த பிரதமர் வி.பி. சிங்கின் ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்து இந்துத்துவா தரப்பை கவர அத்வானி தலைமையிலான பா.ஜ.க ராம ரத யாத்திரை நடத்தியது. இதையெடுத்து, பீகாரில் முதல்வர் லாலு பிரசாத் அத்வானியை கைது செய்தார். இதனால், வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க வாபஸ் பெற்றது. மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட போது, ஆதரவாக 142 வாக்குகளும், எதிராக 346 வாக்குகளும் பெற்று வி.பி.சிங் அரசு பெரும்பான்மையை இழந்தது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி, "உங்களுக்கு எப்படிப்பட்ட நாடு வேண்டும்?" என்று வி.பி.சிங் கேட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
சர்க்காரியா ஆணையம் (1983)

1983 இல் ஒன்றிய அரசு “கூட்டாட்சி முறையை மேம்படுத்தவும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள அதிகார சமநிலையை ஆய்வு செய்யவும், இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் மாற்றங்களை பரிந்துரைக்கவும்” சர்க்காரியா ஆணையத்தை அமைத்தது. குறிப்பாக சட்டமன்றத்தின் அதிகாரங்கள், ஆளுநர்களின் அதிகாரங்கள் மற்றும் 356 வது சட்டப்பிரிவின் பயன்பாடு குறித்து பல்வேறு மாநில அரசுகள் முன்வைத்த வாதங்கள் ஆராயப்பட்டன. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அதிகார பகிர்வு குறித்து சர்க்காரியா ஆணையம் தனது அறிக்கையை 1988 இல் சமர்ப்பித்தாலும் சர்க்காரியா ஆணையத்தின் பெரும்பாலான பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தக்கர் ஆணையம் (1984)

பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட இருபது நாட்களுக்கு பிறகு, படுகொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகளை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி.தக்கர் தலைமையில் தக்கர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதனுடன், இந்திரா காந்தி படுகொலையின் சதி கோணத்தை விசாரிக்க ஆனந்த் ராம் IPS தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனந்த் ராம் ஆணையம் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவே இல்லை.

பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்பு குழுவில் இருந்து நீக்கப்பட்ட பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோரை மீண்டும் பணியில் சேர்த்ததாகவும், 31 அக்டோபர் 1984 இல் காலை பீட்டர் உஸ்டினோவ் உடனான இந்திரா காந்தியின் தொலைக்காட்சி நேர்காணலின் நேரத்தை கவனக்குறைவாக கையாண்டதன் மூலம்  படுகொலையை எளிதாக்கியதாகவும் ஆர்.கே.தவான் மீது குற்றம் சாட்டப்பட்டது. “குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்க கணிசமான காரணங்கள் உள்ளன என்ற முடிவில் இருந்து தவான் தப்ப முடியாது” என்று தக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்திரா காந்தியின் தொலைக்காட்சி நேர்காணல் காலை 8:30 மணிக்கு திட்டமிடப்பட்ட பிறகு, அது பிரதமரின் நாட்குறிப்பில் 8:45 மணி ஆக மாற்றப்பட்டு, அச்சிடப்பட்ட அட்டவணையில் காலை 9 மணி ஆக பட்டியலிடப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தியின் அலுவலகத்தில் இருந்து வந்த மர்மமான தொலைபேசி அழைப்பு பீட்டர் உஸ்டினோவை நேர்காணலுக்கு காலை 8:30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு வருமாறு கூறியது. பீட்டர் உஸ்டினோவும் மர்மமான தொலைபேசி அழைப்பை உறுதிப்படுத்தினார். ஆணையத்தின் விசாரணைப்படி, நேரத்தை மாற்றி பீட்டர் உஸ்டினோவை அழைத்த மர்ம நபர் குறித்து கண்டறியப்படவில்லை.

ஐந்து தொகுதிகளை கொண்ட தக்கர் அறிக்கையின் இரண்டு தொகுதிகள் மட்டுமே நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டன. பிரதமரின் பாதுகாப்பை கையாளும் பாதுகாப்பு குழு மற்றும் பிரதமரின் உடல்நிலையை கையாளும் மருத்துவக் குழு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அறிக்கை முன்வைத்தது. மேலும், வெளிநாட்டு தொடர்புகளை ஆணையம் நிராகரிக்கவில்லை. இந்திரா காந்தியின் சிறப்பு உதவியாளர் ஆர்.கே.தவான், பாதுகாப்பு ஆலோசகர் ராம்நாத் காவ், டெல்லி காவல் ஆணையர் டாண்டன், உளவுத்துறை இணை இயக்குனர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கடமை தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
வர்மா ஆணையம் (மே 1991)

குறிப்பு = ராஜீவ் காந்தி படுகொலையின் போது, ​​தமிழ்நாடு குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தது.

ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களை விசாரிக்க வர்மா ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பேரில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள் குறித்து வர்மா ஆணையம் விசாரித்தது.

வர்மா ஆணையம், உளவுத்துறை அமைப்புகளின் தவறுகளை கண்டறிந்தது. பிரதமர் வி.பி.சிங்கின் தேசிய முன்னணி அரசு, ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்பு குழுவின் (Special Protection Group - SPG) பாதுகாப்பை திரும்ப பெற்றதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் பிரச்சார கூட்டத்தில், ராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்யவில்லை என்றும், பொறுப்பற்ற முறையில் கட்சியினர் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், குற்றம் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.

மனித வெடிகுண்டு தனுவை ராஜீவ் காந்திக்கு அருகில் செல்லவிடாமல் காவலர் தடுக்க முயன்றார் என்ற காவல்துறையின் வாதத்தை வர்மா நிராகரித்தார். பாதுகாவலர்கள் பெண்களை அரிதாகவே சோதனை செய்ததாகவும், தனு மாலையுடன் நடந்து சென்று ராஜீவ் காந்தியை தடையின்றி சென்றடைந்ததையும் புகைப்படங்கள் காட்டுவதாகவும், வெடிகுண்டு வெடித்தவுடன் மைதானத்தில் இருந்த மொத்த கூட்டமும் சிதறியதாகவும் வர்மா கூறினார். மேலும், ராஜீவ் காந்தியை காண துடித்த தொண்டர்களின் கூட்டத்தை அடக்க தனு உள்ளிட்ட தொண்டர்களை 30 அடி தூரத்தில் தள்ளியே நிற்க வைத்திருந்தால், வெடிகுண்டு வெடித்திருந்தாலும் ராஜீவ் காந்தி தப்பியிருக்கலாம் என்று வர்மா கூறினார். இதற்கிடையில், வர்மா ஆணையத்தின் அறிக்கை அனைவரையும் குற்றம் சாட்டியதால் பரந்த ஆதரவை பெறவில்லை.
ஜெயின் ஆணையம் (ஆகஸ்ட் 1991)

ராஜீவ் காந்தி படுகொலை ஏற்படுத்திய அரசியல் தாக்கங்கள், 1981 முதல் 1991 வரையிலான ராஜீவ் காந்தியின் அரசியல் சூழ்நிலைகள், சதியில் ஒரு நபர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அல்லது வெளிநாட்டு உளவு நிறுவனம் ஈடுபட்டதா என்பதை விசாரிக்க ஜெயின் கமிஷன் அமைக்கப்பட்டது.

சீக்கிய விடுதலை அமைப்பு, காஷ்மீர் விடுதலை அமைப்பு, அசாம் விடுதலை அமைப்பு, ஈழ விடுதலை அமைப்பு, நேபாளம் மன்னர் வகையறா உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து ஒருங்கிணைந்த அச்சுறுத்தலை ராஜீவ் காந்தி எதிர்கொண்டதாக ஆணையத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியது. மேலும், படுகொலைக்கு மதகுரு சந்திரசாமி நிதியுதவி செய்ததாக சந்தேகிக்கப்பட்டது. ஜெயின் ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு அதன் பரிந்துரைகள் முறையாக ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
// சீக்கிய விடுதலை அமைப்பு //

ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவின் தம்தாமி தக்சல் (Damdami Taksal) அமைப்பு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற புதிய நாட்டை உருவாக்க போராடியது. இதையொட்டி, காலிஸ்தான் இயக்கத்தை ஒடுக்க இந்திரா காந்தி பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டார், இது சீக்கிய கோவில் வளாகத்தில் ப்ளூஸ்டார் நடவடிக்கைக்கு (Operation Bluestar) வழிவகுத்தது. இது உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, இந்தியா முழுவதும் சீக்கியர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் கலவரமாக மாறியது.
// காஷ்மீர் விடுதலை அமைப்பு //

காஷ்மீர் மீதான உரிமையை கோரும் பிரச்சனை முதன்மையாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ளது. அதே நேரத்தில் சீனா மூன்றாம் தரப்பு பாத்திரத்தை வகிக்கிறது. 1947 இல் இந்தியாவின் பிரிவினைக்கு பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரின் முழு உரிமையை கோர தொடங்கின, பல்வேறு கட்ட ஆயுத மோதலுக்கு பிறகு, காஷ்மீர் பிராந்தியத்தின் நிலப்பரப்பில் சுமார் 55% இந்தியா கட்டுப்பாட்டிலும், 30% பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலும், 15% சீன கட்டுப்பாட்டிலும் உள்ளது. "போராட்டம், வாக்கெடுப்பு, மதப் பிரச்சாரம் மற்றும் மத்தியஸ்தம்" போன்ற பல்வேறு வழிகளில் பல்வேறு காஷ்மீர் விடுதலை அமைப்புகள் சுதந்திர காஷ்மீருக்காக குரல் கொடுத்து வருகின்றன.
// அசாம் விடுதலை அமைப்பு //

அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front of Asom - ULFA) அசாமின் பழங்குடியினருக்கு தனி மாநிலம் கோரி ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டது. இந்நிலையில், அசாம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, 1985 இல் அசாம் ஒப்பந்தம் (Assam Accord) கையெழுத்தானது. இது பழங்குடி அசாமிய மக்களின் கலாச்சார, சமூக மற்றும் அரசியல் உரிமைகளை காக்கவும், 1971 க்கு பிறகு வந்த ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை அடையாளம் கண்டு நாடு கடத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. அத்தியாவசிய பிரச்சினைகளை போதுமான அளவில் கையாளத் தவறியதாக கூறி ஒப்பந்தத்தை ULFA நிராகரித்தது. இதன் விளைவாக, சுதந்திர அசாமின் ஆயுதப் போராட்டம் நீடித்தது. இதற்கிடையில், ராஜீவ் காந்தி படுகொலைக்கு மூல காரணமான ஒற்றைக்கண் சிவராசனின் நாட்குறிப்பில் (Diary) உல்பா அமைப்பு பற்றிய குறிப்புகள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
// ஈழ விடுதலை அமைப்பு //

இந்திய ஒன்றிய அரசும் இலங்கை அரசும் இந்திய அமைதி காக்கும் படை (Indian Peace Keeping Force - IPKF) ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜூலை 1987 அன்று இந்தியாவின் அரசு விருந்தினராக டெல்லியில் உள்ள அசோகா விடுதியில் அறை எண் 518 இல் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்தார். இச்சந்திப்பில் ஈழ அரசியல் நடவடிக்கை மற்றும் இந்திய அமைதி காக்கும் படை ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இலங்கையில் தமிழ் மாகாணங்களின் ஆட்சியை வலுப்படுத்தவும், ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கவும் உறுதிமொழி கூறிய ஒன்றிய அரசின் கோரிக்கைக்கு ஈடாக இந்திய அமைதி காக்கும் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க விடுதலைப் புலிகள் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டனர்.

எவ்வாறாயினும், நாளடைவில் ஈழத்தில் நடைபெற்ற சம்பவங்களை தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்திய அமைதி காக்கும் படையில் இருந்து “அமைதி” கைவிடப்பட்டதாக குற்றம் சாட்டி, விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிராக திரும்பினர். இந்த பின்னணியில் ராஜீவ் காந்தி படுகொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய சிறப்பு புலனாய்வு குழு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
// நேபாளம் மன்னர் வகையறா //

சீனாவுடனான நேபாள உறவுகள் வளர்ந்து வந்த நிலையில், சீனாவின் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை வாங்க நேபாளம் திட்டமிட்ட நிலையில், பிரதமர் ராஜீவ் காந்தி நேபாளத்தின் மீது 1989 இல் முற்றுகையை (Blockade) விதித்தார். அதிலிருந்து விடுபட, அரசியல் கட்சிகள் இல்லாத பஞ்சாயத்து முறையை கைவிட்டு, நேபாள மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியலமைப்பு முடியாட்சிக்கு மாறுமாறு நேபாளத்தை ஒன்றிய அரசு வலியுறுத்தியது. இவை அனைத்தும் 1990 இல் மக்கள் இயக்கத்திற்கு வழிவகுத்தது, இது முழுமையான முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நேபாள மன்னரை ஜனநாயக சீர்திருத்தங்களை ஏற்கும்படி அரசியலமைப்பு முடியாட்சியை நிறுவியது. நேபாளத்தின் இந்து மன்னராட்சிக்கு எதிராக போராடிய கட்சிகளை ராஜீவ் காந்தி ஆதரித்ததாக நேபாளம் மன்னர் குடும்பம் கருதியது.  
// ஐ.கே.குஜ்ரால் ஆட்சிக் கவிழ்ப்பு //

நவம்பர் 1997 அன்று, ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளுடன் தி.மு.க நட்புறவை பேணியதாக ஜெயின் ஆணையத்தின் அறிக்கை கசிந்ததை தொடர்ந்து, ஜனதா தளம் பிரதமர் I.K.குஜ்ரால், தி.மு.க அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அரசுக்கு அளித்து வரும் ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொள்ளும் என்று கூறியது. இதையெடுத்து, 1998 இல் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் தி.மு.க கட்சியில் இல்லை என்றும் தி.மு.கவை படுகொலையில் தொடர்புபடுத்துவது தவறு என்றும் வலுவான காரணம் இல்லாமல் தி.மு.க அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் கூறி I.K.குஜ்ரால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
// கோப்புகள் காணவில்லை //

ராஜீவ் காந்தி படுகொலை விசாரணையின் போது "1987 இல்  ரஜீவ் காந்தி ஆட்சியை கவிழ்க்க ஜைல் சிங் மற்றும் சந்திரசாமி முயற்சித்த பங்கு, சந்திரசாமி மற்றும் சுப்பிரமணியசாமிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் வெளிநாட்டு உளவு நிறுவனங்களில் இருந்து இடைமறித்த செய்திகள், வர்மா மற்றும் ஜெயின் ஆணையங்களின் குறிப்புகள் அடங்கிய கோப்பு எண் 1/12014/5/91-IAS/DIII, நவம்பர் 1989 முதல் ராஜீவ் காந்திக்கான பாதுகாப்பு குறித்த அதிகாரப்பூர்வ குறிப்புகள் அடங்கிய கோப்பு எண் 8-1-WR/JSS/90/Vol.III" உள்ளிட்ட முக்கியமான கோப்புகள் ஒன்றிய அரசின் அலுவலகத்தில் இருந்து காணாமல் போனது சர்ச்சையானது.
// சிறப்பு புலனாய்வு குழு விசாரணை //

வர்மா ஆணையம் மற்றும் ஜெயின் ஆணையம் தவிர, சிறப்பு புலனாய்வு குழு ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக கள விசாரணை நடத்தியது. உள்நாடு முதல் வெளிநாடுகள் வரை விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, விடுதலைப் புலிகள் சார்பில் ஒற்றைக்கண் சிவராசன் தலைமையில் தீட்டப்பட்ட சதியால் தான் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற முடிவுக்கு வந்தது.

ராஜீவ் காந்தி படுகொலையில் விடுதலைப் புலிகளின் தொடர்பு குறித்து குறிப்பிடத்தக்க விவாதம் நடைபெற்று வரும் நிலையில், விடுதலைப் புலிகள் பொறுப்பை மறுத்து வருகின்றனர். இதனிடையே, இப்படுகொலை தொடர்பாக பிரபாகரன், சந்திராசாமி, அட்னன் கஷோகி, சுப்ரமணிய சுவாமி, எம்.கே.நாராயணன் போன்ற முக்கிய நபர்களிடம் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் விடுதலைப் புலிகளை தாண்டி விசாரணை கோணம் நகரவில்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அதிகாரிகளில் ஒருவரான கே.ரகோத்தமன் கூறியது கவனிக்கத்தக்கது. அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்டிருக்கக்கூடிய ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விசாரணை, விரிவான ஆய்வு மற்றும் அலசல்களுக்கு உட்பட்டது.
லிபரான் ஆணையம் (1992)

1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் லிபரான் ஆணையம் அமைக்கப்பட்டது. 2009 இல் ஆணையம் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், பல்வேறு பா.ஜ.க அரசியல் தலைவர்கள் மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் திட்டமிட்ட சதியின் விளைவாக பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டியது. மேலும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, அடல் பிஹாரி வாஜ்பாய், பால்தாக்கரே, சாத்வி ரிதம்பரா, கல்யாண் சிங், கல்ராஜ் மிஸ்ரா, வினய் கட்டியார், நிருத்ய கோபால் தாஸ், அசோக் சிங்கால், லால்ஜி தாண்டன் உட்பட 68 வலதுசாரி தலைவர்கள் பாபர் மசூதி இடிப்புக்கு வழிவகுத்த "மத மோதலை தூண்டிய குற்றவாளிகள்" என்று ஆணையம் கூறியது.

ஆணையத்தின் அறிக்கையின்படி செயல்பட காங்கிரஸ் திட்டமிட்டிருந்த நிலையில், ​​பாபர் மசூதி இடிப்பு வழக்கில் புதிய வழக்கை பதிவு செய்ய முதன்மையான ஆதாரம் இல்லாததால், அது சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்பட்டது அல்ல என்று புலனாய்வு துறை கூறியதை அடுத்து அது கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையில்,  2020 இல், பாபர் மசூதி இடிப்பு அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் நடத்தப்பட்டது என்றும் அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி மற்றும் 28 பேர் வன்முறையை தூண்டவில்லை என்றும் கூறி நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையெடுத்து, விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் விரிவானவை என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆணையத்தின் முடிவுகளுக்கு முற்றிலும் முரணானது என்றும் லிபரான் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் (1993)

டிசம்பர் 1992 முதல் ஜனவரி 1993 வரையிலான மும்பை கலவரம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அமைக்கப்பட்டது. 1998 இல் ஆணையம் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், "முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல்களை நடத்த சிவசேனா உறுப்பினர்களுக்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே உத்தரவிட்டதே மும்பை கலவரத்தின் பெரும்பகுதிக்கு காரணமாகும். பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிவசேனா தலைவர்களும், காவல்துறை அதிகாரிகளும் முஸ்லிம்களுக்கு எதிராக மத வன்முறையை தூண்டிவிட்டதாலே பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை சிவசேனா கொண்டாடியது முஸ்லிம்களை எதிர்த்து போராடத் தூண்டியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணையம் சிவசேனா மீது பகிரங்க குற்றசாட்டுகளை முன் வைத்த போதும், அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த சிவசேனா, குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளை விசாரணையின்றி உயர் பதவிகளில் நியமித்தது மற்றும் சிவசேனா தலைவர்களை முழுமையாக விசாரிக்காமல் விடுவித்தது.

வோரா ஆணையம் (1993)

மார்ச் 1993 அன்று நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு பிறகு இந்தியாவில் நிழல் உலக குற்றவாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பிரபலங்களுக்கு இடையேயான தொடர்புகளை விசாரிக்க வோரா ஆணையம் ஜூலை 1993 அன்று ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டது. சுருக்கமாக, குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க உதவும் உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண வோரா ஆணையம் அமைக்கப்பட்டது.

அரசியல்வாதிகளின் ஆதரவுடனும், அரசு அதிகாரிகளின் பாதுகாப்புடனும், அரசு இயந்திரத்தை இருளில் மூழ்கடித்து, இணை ஆட்சி நடத்திய நிழல் உலக குற்றவாளிகள் குறித்து, ஆணையம் ஆராய்ந்தது. 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு முன்னும் பின்னும் D Company குற்றவாளிகளுக்கு உதவிய அரசியல்வாதிகள் மற்றும் பல ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள், மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. வோரா ஆணையத்தின் அறிக்கையில் சரத் பவார், அகமது படேல் போன்ற மகாராஷ்டிரா அரசியல்வாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், மகாராஷ்டிர அரசியல்வாதிகள், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் போல செயல்பட்டு ஹவாலா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதாக விமர்சிக்கப்பட்டனர். 

வோரா ஆணையத்தின் அறிக்கை அக்டோபர் 1993 அன்று அரசுக்கு வழிகாட்டும் பரிந்துரைகளுடன் சமர்ப்பிக்கப்பட்டது. ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும், அதன் பரிந்துரைகள் குறிப்பிடத்தக்க அளவில் செயல்படுத்தப்படவில்லை. மேலும், அறிக்கையின் 13 பக்கங்கள் மட்டுமே வெளியாகி மீதமுள்ள 100 பக்க அறிக்கை வெளியிடப்படாமல் அதிகாரத்தின் தாழ்வாரத்தில் புதைந்து கிடக்கிறது. இந்நிலையில், வோரா ஆணையத்தின் மீதமுள்ள பக்கங்களின் விவரம் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஒன்றிய தகவல் ஆணையர் ஷைலேஷ் காந்தி தாக்கல் செய்த மனுவானது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டு, இறுதியில் அத்தகைய கோப்புகள் எதுவும் இல்லை என பதில் வந்தது குறிப்பிடத்தக்கது.
நானாவதி-மேத்தா ஆணையம் (2002)

2002 இல் சர்ச்சைக்குரிய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி நானாவதி தலைமையில் நானாவதி-மேத்தா ஆணையம் அமைக்கப்பட்டது. 2014 இல் ஆணையம் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், "முன்கூட்டியே திட்டமிட்ட சதியின் விளைவாக சபர்மதி ரயிலின் S6 பெட்டி எரிக்கப்பட்டது என்றும் அது விபத்து அல்ல என்றும் தெரிவித்தது. மேலும், குஜராத் பா.ஜ.க முதல்வர் நரேந்திர மோடி அரசில் உள்ள எவரும் வன்முறையில் நேரடியாக ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கலைஞரின் ஆணையங்கள்

தமிழ்நாட்டில் கலைஞரின் தி.மு.க ஆட்சிக்காலத்தில் மக்கள் நலன் கருதி பல்வேறு ஆணையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் பலவும் "இந்தியாவில் முதன்முதலாக" என்ற தலைப்பை தாங்கி நிற்கின்றன. ஆணையத்தின் பரிந்துரைகளின்படி பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டன. கலைஞரின் சில ஆணையங்கள் எடுத்துக்காட்டாக,

*1969 = தமிழ்நாடு காவல் ஆணையம்

*1969 = மாநில சுயாட்சி குறித்து ஆராய ராஜமன்னார் ஆணையம்

*1969 = பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து ஆராய சட்டநாதன் ஆணையம்

*1971 = மாநில திட்டக்குழு ஆணையம்

*2011 = பஞ்சமி நிலங்களை மீட்க மருதமுத்து ஆணையம்
ராஜமன்னார் ஆணையம் (1969)

1967 இல் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திலும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை ஆராய ஒரு குழுவின் அவசியத்தை பேரறிஞர் அண்ணா வலியுறுத்தினார். இந்த பின்னணியில், அண்ணா மறைவுக்கு பிறகு, அண்ணாவின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், 1969 இல் ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை ஆராய உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஆணையத்தை கலைஞர் அமைத்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.லெட்சுமணன், ஆந்திர முன்னாள் தலைமை நீதிபதி பி.சந்திரா ஆகியோரும் ஆணையத்தில் உறுப்பினர்களாக இருந்தனர்.

ராஜமன்னார் ஆணையம், “நிதி ஆணையத்தை நிரந்தர அமைப்பாக்குதல், மாநிலங்களுக்கு இடையேயான சபைகளை அமைத்தல், அகில இந்தியப் பணிகளான IAS - IPS - IFS ஆகியவற்றை ஒழித்தல், ஒன்றிய திட்டக்குழு ஆணையத்திற்கு பதிலாக சட்டப்பூர்வ அமைப்பை நிறுவுதல், குடியரசுத் தலைவர் ஆட்சியை கையாளும் 356 / 357 / 365 ஆகிய பிரிவுகளை நீக்குதல்” போன்ற முக்கியமான பரிந்துரைகளை வழங்கியது. மேலும், சர்வதேச சட்ட அறிஞர்களின் கருத்துக்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், கட்டுரைகள் மற்றும் செய்தித்தாள் அறிக்கைகளை மேற்கோள் காட்டி, “சட்டமன்ற அதிகாரம், நிதி உறவுகள், நிர்வாகப் பரவலாக்கம், நெருக்கடி மேலாண்மை, வர்த்தக மேம்பாடு” உள்ளிட்ட 21 தலைப்புகளில் ராஜமன்னார் ஆணையம் 1971 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இன்றும் மாநில அதிகாரங்கள் தொடர்பான கோரிக்கைகள் எழுப்பப்படும் போதெல்லாம் ராஜமன்னார் ஆணையத்தின் அறிக்கை மேற்கோள் காட்டப்படுகிறது. மேலும், ராஜமன்னார் ஆணையத்தின் அறிக்கையை ஒன்றிய அரசு முழுமையாக ஏற்கும் என்ற நம்பிக்கையில் முன்வைக்கப்படவில்லை, அதே நேரத்தில் மாநில சுயாட்சி குரலை நியாயமாக வெளிப்படுத்தும் வாய்ப்பாக இந்த அறிக்கை பார்க்கப்பட்டது.
சர்க்காரியா ஆணையம் (1976)

1972 இல் அ.தி.மு.க தலைவர் எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் தமிழ்நாடு முதல்வர் கலைஞருக்கு எதிராக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் ஊழல் புகார்களை அளித்தனர். 1976 இல் நெருக்கடி நிலை அடக்குமுறைக்கு அடிபணியாத கலைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு முனைந்ததை தொடர்ந்து, நான்கு ஆண்டுகள் கழித்து, 1972 இல் எம்.ஜி.ஆரும் கல்யாணசுந்தரமும் கொடுத்த ஊழல் புகார்களை ஒன்றிய அரசு தூசி தட்டி, 1971 முதல் 1976 வரை தமிழ்நாடு முதல்வராக பணியாற்றிய கலைஞர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, 1976 இல் ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது.

அண்ணா திரையரங்க அவதூறு, லண்டன் டிராக்டர், திருவாரூர் வீடு, மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ், வீராணம் ஒப்பந்தம் என பல குற்றச்சாட்டுகள் கலைஞர் மீது சுமத்தப்பட்டன. பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு கலைஞர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றசாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று சர்க்காரியா கூறினார். 

சர்க்காரியா ஆணையத்தின் விசாரணை அறிக்கை எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு பலனளிக்காததால், அதை சரிக்கட்டுவதற்காக கலைஞர் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று பொய் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். உண்மையில் சர்க்காரியா தனது விசாரணை அறிக்கையில் விஞ்ஞான பூர்வமாக ஊழல் என்று எங்கும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாமதி ஆணையம் (1992)

1992 இல் பல அரசு அதிகாரிகள் வாச்சாத்தி கிராமத்திற்கு சென்று, கடத்தப்பட்ட சந்தன மரங்களை தேடியும், வீரப்பன் உதவியாளர்களை கைது செய்யவும் வந்ததாக கூறி,  கொடூரமான வன்முறையில் ஈடுபட்டனர். திட்டமிட்ட தாக்குதலால் விளைந்த வன்முறையால் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், ஆண்கள் தாக்கப்பட்டனர், வீடுகள் சூறையாடப்பட்டன, கால்நடைகள் கொல்லப்பட்டன. நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வன்முறைக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சி புகார்களை பதிவு செய்தது. ஆனால், புகார்கள் ஜோடிக்கப்பட்டவை என்று கூறி ஜெயலலிதாவின் அ.தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க மறுத்தது.
இதையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலம், 1992 இல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி ஐ.ஏ.எஸ் தலைமையில் பாமதி ஆணையத்தை நியமித்தார். பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தினார்கள். இறுதியில், பாமதி ஆணையத்தின் விரிவான அறிக்கை வாச்சாத்தி தாக்குதலின் திட்டமிட்ட, வெட்கக்கேடான, கொடூரமான தன்மையை வெளிப்படுத்தியது. மேலும், வாச்சாத்தி மக்களின் கோரிக்கையை ஏற்று, பாமதியின் விரிவான அறிக்கையின் அடிப்படையில், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த சி.பி.ஐக்கு உத்தரவிட்டது.
2011 இல் தருமபுரி நீதிமன்றம் 122 வனத்துறை அதிகாரிகள், 4 இந்திய வனப்பணி அதிகாரிகள், 84 காவல்துறை அதிகாரிகள், 5 வருவாய் துறை அதிகாரிகள் உட்பட  215 அதிகாரிகளை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.  குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 215 பேருக்கு ஒன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நீண்ட மேல்முறையீடு சட்டப்போராட்டத்திற்கு பிறகு, 2023 இல் தருமபுரி நீதிமன்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிகள் மற்றும் பாமதி ஆணையத்தின் அறிக்கைகள் வழக்கில் முக்கிய பங்கு வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கோகுலகிருஷ்ணன் ஆணையம் (1998)

1998 இல் கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமையில் கோகுலகிருஷ்ணன் ஆணையம் அமைக்கப்பட்டது. 2000 இல் ஆணையம் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், "மத கலவரங்கள் குறித்த எச்சரிக்கைகளை காவல்துறை கவனத்தில் கொண்டு கண்காணிப்பையும் பரிசோதனையையும் முடுக்கிவிட்டிருந்தால், 1998 கோவை குண்டுவெடிப்பு தடுத்திருக்ககலாம். 1997 கலவரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அல் உம்மாவால் ஏவப்பட்ட மூன்று மனித வெடிகுண்டுகள் அத்வானியை அணுக இயலவில்லை, ஏனெனில் அவருடன் பாதுகாப்பு படையினரும் இருந்தனர். இக்குழு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் காணொளிகளை அனுதாபத்திற்காகவும் நிதி உதவிக்காகவும் பயன்படுத்திக் கொண்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சோதனை சாவடிகளை அமைக்கவும், சட்டவிரோத அமைப்புகளை தடை செய்யவும், உளவுத்துறை முயற்சிகளை மேம்படுத்தவும், விரிவான பாதுகாப்பு ஆய்வுகளை திட்டமிடவும் ஆணையம் பரிந்துரைத்தது.
சதாசிவம் விசாரணை ஆணையம் (1999)

1993 இல் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசு காவல்துறை இணைந்து வீரப்பனை பிடிக்க ஒரு சிறப்பு அதிரடிப்படையை (Special Task Force - STF) அமைத்தது, பின்னர் 2004 இல் சிறப்பு அதிரடிப்படையினரால் வீரப்பன் கொல்லப்பட்டார். வருந்தத்தக்க வகையில், சிறப்பு அதிரடிப்படையின் நடவடிக்கைகளின் போது மலைவாழ் மக்கள் மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டனர். இதில் சட்டவிரோத கொலைகள், தன்னிச்சையான தடுப்புக்காவல், பாலியல் வன்முறை, மின்சார அதிர்ச்சி மற்றும் தடாவின் கீழ் போலி வழக்குகள் போன்ற சித்திரவதைகள் ஆகியவை அடங்கும்.

இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission of India - NHRC), சமூக ஆர்வலர்களின் வழிகாட்டலின் மூலம் மலைவாழ் மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையின் நடவடிக்கை குறித்து விசாரிக்க நீதிபதி சதாசிவம் தலைமையில் சதாசிவம் விசாரணை ஆணையத்தை 1999 இல் அமைத்தது. சிறப்பு அதிரடிப்படை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, இழப்பீடுகளை பரிந்துரைத்து, 2003 இல் ஆணையம் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. இதை தொடர்ந்து, சிறப்பு அதிரடிப்படை அட்டூழியத்தால் பாதிக்கப்பட்ட 89 பேருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2.80 கோடியை NHRC அறிவித்தது.

2004 இல் ஆணையத்தின் அறிக்கையில், சிறப்பு அதிரடிப்படைக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, வீரப்பனை கொன்றதற்காக சிறப்பு அதிரடிப்படையினருக்கு பாராட்டு விழா நடத்தி பதக்கங்கள் வழங்கியது சர்ச்சையானது. சிறப்பு அதிரடிப்படை அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் வீரப்பன் மரணத்தை சுற்றியுள்ள சூழ்நிலைகள் இன்னும் விவாதத்திற்குரியவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆறுமுகசாமி ஆணையம் (2017)

செப்டம்பர் 2017 அன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகளை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது.

ஜெயலலிதா இறந்த தேதியில் முரண்பாடு இருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது. அதாவது, 05 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 04 டிசம்பர் 2016 அன்று மாலை 3 மணி முதல் 3.30 மணிக்கு இடையில் ஜெயலலிதா காலமானார் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜெயலலிதாவின் மறைவு தொடர்பான உண்மைகள் குறித்து சசிகலா மற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கு நன்கு தெரியும் என்றும் ஆணையம் குற்றம் சாட்டியது.

ஜெயலலிதாவின் ஒரே அரசியல் வாரிசாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள ஓ.பன்னீர்செல்வம் முயற்சிப்பதை தற்செயலாக கருத முடியாது என்றும், அதிகார மையத்தின் சூழ்ச்சியால் தனது முதல்வர் பதவி நீண்ட நாள் நீடிக்கவில்லை என கோபமடைந்த ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் அரசியல் செய்தார் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. 
முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், டாக்டர் சிவக்குமார் (சசிகலாவின் உறவினர்), சசிகலா, அப்பல்லோ மருத்துவர்கள் உட்பட பலர் மீது விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பல்வேறு ஐயங்களை எழுப்பி உள்ளது. 

*லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மூத்த மருத்துவர்களின் பரிந்துரைகளை அப்பல்லோ மருத்துவக் குழு ஏன் முழுமையாகப் பின்பற்றவில்லை?

*ஜெயலலிதா இருந்த படுக்கை தொகுதியில் (Ward) பொருத்தப்பட்டிருந்த CCTV கருவிகளை அப்பல்லோ மருத்துவமனை அகற்றியது ஏன்?

*ஜெயலலிதாவை காப்பாற்ற மருத்துவக் குழு குருதிக்குழாய்ச் சீரமைப்பை (Angioplasty) செய்ய விடாமல் சசிகலா தடுத்தது ஏன்?

*அமெரிக்க மருத்துவர் சமீன் சர்மாவின் பரிந்துரைப்படி ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை ஏன் செய்யப்படவில்லை?

*ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை பொய்யான அறிக்கைகளை கொடுத்தது ஏன்?

*ஜெயலலிதாவை உயர் மருத்துவ சிகிச்சைக்காக சுகாதாரத்துறை ஏன் வெளிநாடு அழைத்து செல்லவில்லை?

அருணா ஜெகதீசன் ஆணையம் (2018)

22 மற்றும் 23 மே 2018 அன்று தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்பட்ட மாசுபாட்டை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க அ.தி.மு.க அரசு சார்பில் அருணா ஜெகதீசன் ஆணையம் 23 மே 2018 அன்று அமைக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டதாக கூறியிருந்தார். ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிலவரத்தை அதிகாரிகள் நிமிடத்திற்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்ததாக ஆணையத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் கூற்று பொய் என்பது நிரூபணமானது.

தூத்துக்குடி கலவரத்திற்கு சமூகவிரோதிகளே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு ஆதாரம் இல்லை என்றும், பிரபலங்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கும் போது சமூக பொறுப்பை உணர்ந்து ஆதாரத்துடன் பேச வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது. மேலும், அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது, அரசு இயந்திரம் நெறிமுறைகளை பின்பற்றாதது, காவல்துறை வரம்பு மீறி செயல்பட்டது என ஆணையம் கண்டறிந்தது.

அசாதாரண சூழ்நிலையை சரியாக கையாளாத தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மூன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீடாக ரூபாய் 20 லட்சத்திற்கு பதிலாக ரூபாய் 50 லட்சத்தை வழங்கவும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்தது. இதையொட்டி, ஆணையத்தின் பரிந்துரையின்படி தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

"ஒவ்வொரு ஆணையமும் தெளிவான நிலைப்பாட்டுடன் அதன் இறுதி இலக்கை அடைந்துள்ளதா?" என்ற கேள்விக்கு பதில் சொல்வது கடினம். எடுத்துக்காட்டாக, காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி விமான விபத்தில் மர்மமான முறையில் இறந்தது குறித்து நீதிபதி எம்.எல்.ஜெயின் தலைமையிலான ஆணையம் விசாரித்து வந்தது. விசாரணையின் ஒரு கட்டத்தில், தெரியவராத காரணங்களால் ஆணையம் திடீரென கலைக்கப்பட்டது.

இந்தியாவின் வங்கித் துறைக்கான விதிமுறைகளை ஆய்வு செய்த நரசிம்மம் ஆணையம், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து விசாரித்த நானாவதி ஆணையம், தெலங்கானாவின் தனி மாநில கோரிக்கையை ஆய்வு செய்த ஸ்ரீகிருஷ்ணா ஆணையம், கலைஞரின் நள்ளிரவு கைதுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரித்த பக்தவச்சலம் ஆணையம், மாஞ்சோலை பேரணியில் நடந்த வன்முறை குறித்து விசாரித்த மோகன் ஆணையம், கும்பகோணம் தீ விபத்து குறித்து விசாரித்த சம்பத் ஆணையம், ஏர்வாடி தீ விபத்து குறித்து விசாரித்த ராமதாஸ் ஆணையம், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் என ஒன்றிய - மாநில அளவில் பல்வேறு ஆணையங்கள் அமைக்கப்பட்டு அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

உலகளாவிய ரீதியில், கடந்த கால சம்பவங்கள் மற்றும் எதிர்கால மாற்றங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசுகளுக்கு வழிகாட்டும் ஒரு பயனுள்ள கருவியாக ஆணையம் (Commission / Committee) பார்க்கப்படுகிறது. ஆணையங்கள் பொதுவாக நீதித்துறை, நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் அனுபவம் கொண்ட தலைவர்களால் (Chairperson) வழிநடத்தப்படுகின்றன. சுருக்கமாக, பரிந்துரைகளை செய்வது ஆணையர்களின் வேலை மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது அரசுகளின் வேலை என்றால் அது மிகையல்ல.

விவரணைகள்

Warren Commission (1963)


Watergate Commission (1973)


Election Commission of India (1950)


Kapur Commission Report (1964)


Mandal Commission Report (1979)


Thakkar Commission (1984)


Verma Commission (May 1991)


Jain Commission (August 1991)


Srikrishna Commission Report (1993)


Vohra Commission Report (1993)


Rajamannar Commission (1969)


Sarkaria Commission (1976)


Vachathi Case (1992)


Gokulakrishnan Commission (1998) (Page No 81-83)


Amnesty on Sadashiva Commission (1999)


Aarumugasamy Commission Report (2017)


Aruna Jagadeesan Commission (2018)


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -