Chocks: பேரறிஞர் அண்ணாவின் கருத்து - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

Friday, February 16, 2024

பேரறிஞர் அண்ணாவின் கருத்து - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணாவின் கருத்து - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்
Anna about being a Dravidian! 👇

I claim Sir, to come from a country, a part in India now, but which I think is of a different stock, not necessarily antagonistic. I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian. That does not mean that I am against a Bengali or a Maharashtrian or a Gujarati. As Robert Burns has stated, “A man is a man for all that”. I say that I belong to the Dravidian stock and that is only because I consider that the Dravidians have got something concrete, something distinct, something different to offer to the nation at large. Therefore it is that we want self-determination.

அண்ணா பார்வையில் தமிழன்! 👇

தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழ வேண்டும்.

தி.மு.கவின் நோக்கம் பற்றி அண்ணா!  👇

1.சாதி ஒழிப்பு.
2.ஜனநாயக சோசலிசம்.
3.மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சி.
4.பயனுள்ள கூட்டாட்சியாக மாறும்படி அரசியலமைப்பின் மறுவடிவமைப்பு.
5.வகுப்புவாத சிறுபான்மைகளின் பிரச்சனைகளை தீர்க்க விகிதாச்சார பிரதிநிதித்துவம்.

இந்தியை பற்றி அண்ணா! 👇

ஒரு வடநாட்டு பெரியவர் என்னிடத்திலே மிகுந்து, என்னை பாராட்டிவிட்டு சொன்னார், நீங்கள் முயற்சி செய்தால், மூன்றே மாதத்தில் இந்தியை படித்துவிடலாம், என்றார். நான் ஒப்புக் கொண்டேன்! ஆமாம், அய்யா, மூன்றே மாதத்தில் படித்து விடலாம்? என்றேன். இல்லை, அதற்கு மேலே படிப்பதற்கு, அந்த மொழியில என்ன இருக்கிறது? ஆனால், நம்முடைய தமிழ் மொழி அப்படி சொல்வதற்கு இல்லை. முப்பது ஆண்டுகள் படித்தவர்கள் கூட, இன்னும் விளக்கம் இந்த இடத்தில், பொருள் சரியாக விளங்கவில்லை, என்று இன்றைய தரம் கூட புலவர்கள் கஷ்டப்படுகிறார்கள், நம்மை போன்ற சாதாரண மக்கள் அல்ல. அப்படிப்பட்ட மொழி, நம்முடையது.

போப்பிடம் அண்ணா முன் வைத்த கோரிக்கை! 👇

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அண்ணா, அமெரிக்கா சென்ற போது போப் ஆண்டவரை சந்தித்தார். போப், "என்னிடம் எதாவது கேளுங்கள்," என்றார். அதற்கு அண்ணா, "எங்கள் நாட்டின் விடுதலை வீரர் மோகன் ரானடேவை விடுவிக்க, போர்ச்சுக்கல் அரசிடம் நீங்கள் பேச வேண்டும்," என்றார். போப் புன்னகைத்து, "நம்பிக்கையுடன் சென்றுவாருங்கள்," என்றார். இதற்குப் பிறகு, போர்ச்சுக்கல் விரைவில் மோகன் ரானடேவை விடுவிக்கிறார்கள். விடுதலையான மோகன் ரானடே முதலில் அண்ணாவை சந்திக்க விரும்பினார், ஆனால் அப்போது அண்ணா மறைந்திருந்தார். சென்னை வந்த மோகன் ரானடே, அண்ணா சமாதியில் கதறியழுதார்.

கோவா விடுதலைக்குப் போராடிய மோகன் ரானடே, போர்ச்சுக்கீசிய அரசால் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1961 இல் கோவா இந்தியாவின் ஒரு பகுதியாக மாறினாலும், மோகன் ரானடே 1968 இல் தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தனக்காக எதுவும் கேட்காமல், ஒரு போராளியை விடுதலை செய்யுமாறு அண்ணா போப்பிடம் கேட்டது தான் "உரிமைக்குரல்" எனப்படும்.

அண்ணா தான் தமிழ்நாட்டை ஆள்கிறார்! 👇

ஒரு ஆண்டுக்கு முன்னாள் நான் பதவியில் வந்தேன். இந்த ஓராண்டில் நான் மூன்று முக்கியமான காரியங்களை செய்திருக்கிறேன்:

1.சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்.
2.தாய் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம்.
3.தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை என்று இருமொழி கொள்கை அறிவிப்பு.

இதை பார்த்து விட்டு பலருக்கும் கோவமும் ஆத்திரமும் வருகிறது, இவர்களை விட்டு வைக்கலாமா? ஆட்சியை கலைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். முடியுமா என்று சவால் விட மாட்டேன், உங்களால் முடியும். ஆனால் கலைத்து விட்டு வேறொருவர் வந்து அமர்ந்து அண்ணாதுரை கொண்டு வந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும். அந்த அச்சம் உள்ளவரை அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்திற்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்திற்கு யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்வதாக பொருள்.

கல்விச்செல்வம் பற்றி அண்ணா! 👇

கல்விச்செல்வம் காலத்தால் அழியாதது. அந்தச் செல்வம் நாட்டிலே - பாறைக்கடியிலே - சுரங்கத்திலிருக்கும் தங்கக் கட்டிகளாக இருக்கக் கூடாது. அதை எடுத்து பயன்படுத்திப் பளபளப்புள்ள - நல்ல ஒளியுள்ள தங்கமாக ஆக்க வேண்டும்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பற்றி அண்ணா! 👇

கூற்று 1 = நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே சரஸ்வதி பூசை இல்லை! ஓலைக்குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள். தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை. கற்பூரம் கூட, நீ செய்ததில்லை. கடவுட் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட, சரஸ்வதி பூஜை அறியாதவன் கொடுத்ததுதான். நீ, கொண்டாடுகிறாய். சரஸ்வதி பூசை, ஆயுத பூசை! ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா? மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சு யந்திரத்தின் உதவி கொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அகமகிழ்கிறாயே! ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த, நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய அதிசயப் பொருளைப் பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்குத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை, அப்படித்தான், கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல், யோசி - உன்னையுமறியாமல் நீயே சிரிப்பாய். உன், பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ய நூற்களை எல்லாம்கூட, ஓலைச்சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சுயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே! எல்லாம் மேனாட்டான், கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு, அவைகளை, உபயோகப்படுத்திக் கொண்டு, பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்!

கூற்று 2 = மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே உடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம், சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை கொண்டாடாதவர்கள்!

மனுதர்மம் பற்றி அண்ணா! 👇

கூற்று 1 = மனுதர்மம் - பிராமணிய ஏற்பாடு. இது கண்ணுக்குத் தெரியாத உருக்கிரும்புக் கோட்டை. கடவுள், தலைவிதி, மோட்ச நரகம், முன்ஜென்மப் பின்ஜென்மம் என்ற வன்மை மிக்கக் காவலாளிகளால் காக்கப்படுவது! எனவே தான், இதனை உடைத்தெறிந்து, புது நிலையை நாட்டில் தோற்றுவிப்பது என்பது, நினைத்ததும் நடந்து விடக்கூடிய இலகுவான காரியமாக இருக்கவில்லை. இதன் தாக்குதல் வெளியிலிருந்து வருவது அல்ல; உடன்பிறந்தே கொல்லும் வியாதியைப் போன்றது. களத்திலே கலங்காத வீரனும், வர்ணாஸ்ரமத்தின் வாடை வீசின விநாடியிலேயே கைகால் நடுக்குறுகிறான்?

கூற்று 2 = இன்னும் சாதி இருக்கிறது. சாதிப் பிரிவினையும் வேறுபாடுகளும் இன்னும் நீங்கவில்லை. சனாதனம் என்ற இந்த நோய் இன்னும் உள்ளது. விஷயங்கள் மாறவில்லை என்பதை இது காட்டுகிறது. சனாதன நோயை மருத்துவரால் குணப்படுத்த முடியாது. அப்படியானால் நோயை யார் குணப்படுத்த முடியும்? இளம் மாணவர்களால் மட்டுமே முடியும்.

கூற்று 3 = ஆபத்தான நேரத்தில் அடங்கியது போல் பாசாங்கு செய்யும். ஆனால் சனாதனச் சோமரசம் பருகியதும் மீண்டும் தலைகால் தெரியாது வர்ணாசிரம ஆட்டம் ஆடும். இது பார்ப்பனியத்தின் இயல்பு. இந்த இயல்பை யாராலும் மாற்ற முடியாது.

கூற்று 4 = பகுத்தறிவு என்ற ஒரே மருந்து தான் சனாதன நோயை குணப்படுத்தும், வேறு எந்த மருந்தும் அதை குணப்படுத்தாது.

விநாயகர் பற்றி அண்ணா! 👇

விநாயகர், பிள்ளையார், என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டுப் பூஜிக்கப்படும், கணபதி தமிழ்நாட்டுக்குரிய தெய்வமல்ல, பழந்தமிழர்கள் அவ்விதமான ஒரு கடவுளை, வணங்கினதில்லை, மிக மிகப் பிற்காலத்திலே வடநாட்டிலிருந்து இங்கு வந்து புகுந்த வழக்கம்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் பற்றி அண்ணா! 👇

முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற கோட்பாட்டை மாற்றி, சைவ மதத்தை போற்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர் திருமூலர். இந்த கோட்பாட்டை பகடி செய்து, வேலைக்காரி நாடகத்தில் பாத்திரப் பேச்சாக உருவாக்கியவர் அண்ணா. நாளடைவில், அண்ணாவின் கோட்பாடு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திரிக்கப்பட்டது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் பற்றி அண்ணாவின் பார்வையில், ⏬

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்றால், புற்றீசல் போன்ற பல குலங்களும் பல கடவுளரும் இருப்பானேன்? ஒரு கடவுளே பல பெயர்களால் வணங்கப்படுகிறார் என்றால், ஒரு கடவுள் இன்னொரு கடவுளோடு “நான் பெரியவன் நீ சிறியவன்” என்று சண்டையிட்டுக் கொள்வானேன்? ஒரு குலத்தவன் இன்னொரு குலத்தவனை “நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன்” என்று கூறிக் குலப்போர் நடத்தி குடுமி விளைப்பானேன்?

ஓர் அரசன், தனக்குக் கீழே பல சிற்றரசர்களை வைத்து தன்னாட்டை ஆளுவதுபோல, ஒரு முழு முதற்பெருங் கடவுளும், தமக்கு கீழே பல சிறுசிறு கடவுளரை வைத்து இவ்வுலகத்தை இயக்குகின்றதா? அங்ஙனமாயின், அக்கடவுளுக்கு முழு முதற்றன்மையும்; எல்லாம் வல்ல இயல்பும், உண்டென்று கற்பிப்பதன் பொருள் என்ன? இந்து மதத்தில் பேசப்படும் கடவுளுக்கு, இச்சொல்லப்பட்ட தன்மைகள் உண்மையாகவே இருக்குமானால் இந் நாவல தீவில் பல்வேறு மதங்களும், அவற்றிற்குரிய பல்வேறு கடவுளரும் இருக்கக் காரணமில்லையே.

விருப்பு வெறுப்பற்ற ஒரு கடவுள், தன்னைப் பிறர் வணங்க வேண்டுமென்று விரும்புமா? தன்னை வணங்கியவர்களுக்குப் பிறப்பும் வணங்காதவர்களுக்கு பிறவாமையும் கொடுக்குமா? அப்படித்தானென்றால், கைக்கூலி பெற்றுக்கொண்டு ஒரு காரியத்தை முடித்துக் கொடுப்பவனுக்கும் அந்த கடவுளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று இதுவரை கூறிய சுருக்கமான இவ்வுண்மைகளை உள்ளபடியே அறிவோடு ஆராய்ந்து பார்ப்பவர்க்கு, கடவுளின் தன்மை இப்படிப்பட்டது என்பதும், கடவுள் இல்லாமலேயே உலகில் வாழ முடியுமா? முடியாதா என்பதும், திராவிட மக்களுக்குக் கடவுள் கொள்கை எப்படி யாரால் – எந்த காலத்தில் உண்டானதென்பதும் எளிதில் விளங்குவதோடு, இயஞ்சும் உலகம் இயற்கையோடு அமைந்துள்ளது என்ற உண்மையும் விளங்கும் என்ற காரணத்தால், இன்னும் இதுபற்றி விரித்து எழுதாமல் இந்த அளவோடு முடிக்கிறேன்.

ஒன்றிய அரசின் வரி விதிப்பு பற்றி அண்ணா! 👇

இந்த அரசாங்கம், மக்கள் மீது இவ்வளவு வரி விதித்த பிறகும், சரியான வருமானத்தையோ, சரியான கணக்கையோ நாட்டுக்கு வழங்கவில்லை என்று சொல்கிறேன். எனவே, அதைத் தடுக்க எனக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்தாலும், நடத்தப்படும் இந்த திறமையற்ற, யதார்த்தமற்ற, பதிலளிக்காத மற்றும் ஜனநாயகமற்ற அரசாங்கத்திற்கு பெரும் தொகையை ஒதுக்கிய குற்றத்தை என்னால் தடுக்க முடியாது. 

விமர்சனங்கள் இருந்த போதிலும், அவர்களின் நிலைப்பாட்டை ஆதரிக்க அவர்களிடம் எண்கள் உள்ளது. எனவே, நாங்கள் எங்கள் கவலைகளை வெளிப்படுத்தும் அதே வேளையில், இறுதி அதிகாரம் கொண்ட பொதுமக்களிடம் இருந்து நீதியைப் பெற வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.  

இந்தியா நாட்டை பற்றி அண்ணா! 👇

கூற்று 1 = இப்படியும் ஒரு நாடா? ஊரார் உழைப்பைத் தின்று கொழுத்துக் கொண்டு, முக்திக்கு வழிகாட்டுவதாகக் கூறிக்கொண்டு, ஒரு பட்டாளமே இருக்கிறதே. எந்த நாட்டிலாவது இப்படி ஒரு பயனற்ற கூட்டத்தை அனுமதிப்பார்களா?

கூற்று 2 இந்தியா ஒரு நாடு அல்ல. இந்தியா பல்வேறு இனக்குழுக்களைக் கொண்டுள்ளது, இந்தியா பல்வேறு மொழிக் குழுக்களைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியா ஒரு துணைக் கண்டம் என்று மிகச் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூற்று 3 மாகாணங்களுக்குத் தரப்படும் அதிகாரத்தின் தன்மை, அளவு, நிதியின் அளவு, வகை, ஆகியவற்றைக் கவனிக்கும்போது, ஒரு பெரிய ஜில்லா போர்டு போன்ற நிலையே, மாகாணங்களுக்குத் தரப்பட்டிருப்பது விளங்கும். 

கூற்று 4 சுயநிர்ணய அதிகாரம் வேண்டுமென்பதே திராவிட மக்களின் கோரிக்கை! திராவிடர்களை விருப்பத்திற்கு மாறாக அடிமையாகவும், இழிந்த குலத்தவனாகவும் “இந்து” என்ற தரித்திரப் பெயர் சூட்டி இறுகப்பிணைத்து ஆரியத்தின் காலடியில் வாழச் செய்வது பலாத்காரமல்லாது வேறென்ன?

கூற்று 5 = முதலாளித்துவமும் தேசியமும் ஒன்றாக இணைந்திருக்கிறது. இத்துடன் மதமும் இணைந்து கிடக்கிறது. இந்த முக்கூட்டு பயங்கர விளைவுகளுக்கு ஏற்றதானதால்தான் இதனை அழிக்க உண்மையான விடுதலை உணர்ச்சி உள்ளவர்கள் துடிக்கிறார்கள்.

திராவிட நாடு கோரிக்கை பற்றி அண்ணா! 👇 

திராவிட நாடு கோரிக்கை என்பது வேறுவிதமானது. பாகிஸ்தான், சீக்கிஸ்தான் போன்றதல்ல. ஏனெனில், பாகி்ஸ்தான் ஒரு புது படைப்பு. சீக்கிஸ்தான் ஒரு புதுக் கோரிக்கை. திராவிடஸ்தான் என்பது தனியாக இருந்த நாடு, இருக்கும் நாடு. நாங்கள் கோரும் திராவிடநாடு பூகோள நீதியிலும் சரித்திர ரீதியிலும் எப்போதும் தனியாகவே இருந்ததாகும். வட இந்தியாவைப் போன்றதல்ல. பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் வடக்கே இருந்திருக்கின்றன. சந்திரகுப்தன், அக்பர், அவுரங்கசீப் போன்றோருடைய சாம்ராஜ்யங்கள் வடக்கில் இருந்திருக்கின்றன. அப்போதும் நாங்கள் கூறும் திராவிட நாடு, தென்னாடு - தனியாகத் தனி அரசுடனே இருந்ததாகும். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்து, இந்திய நாட்டைத் தங்கள் வசப்படுத்திய பின்னரே இந்தியா உருவாயிற்று. நிர்வாக வசதிக்காகத் தென்னாடும் இணைக்கப்பட்டு டெல்லி ஆட்சி ஏற்பட்டது.அதற்கு முன்னதாகத் தென்னாடு - தக்காணம் - ஒரு சுதந்திர நாடாகத்தான் இருந்தது.

எல்லா அதிகாரங்களும் எம்மிடமே இருக்க வேண்டும் என்பது தான் தனி நாடு கோருவதன் நோக்கம் ஆகும். இப்போது எதற்கெடுத்தாலும் டெல்லிக்குப் போக வேண்டி இருக்கிறது. அந்நிலை இல்லாமல், எங்களது வர்த்தகத்தை நாங்களே நடத்த உரிமை இருக்க வேண்டும். இது போன்ற எங்களது விவகாரங்களில் இன்னொருவர் தலையீடு இருக்கக் கூடாது எல்லாம் எங்களாலேயே கவனித்துக் கொள்ளப்படவேண்டும்.

தோழர் லெனின் பற்றி அண்ணா! 👇

உலகில் ஒப்பற்ற மாறுதலைக் காட்டி, ஜாரின் வேட்டைக் காட்டினை மக்களின் பூந்தோட்டமாக்கிய, மாபெரும் புரட்சி வீரன் லெனின் பாட்டாளி உலகின் தலைவன், அவர் வரலாற்றுச் சுருக்கம், மே முழக்கம் மேதினியெங்கும் கிளம்பிய இக்கிழமை, ஒவ்வொருவர் நெஞ்சிலும் பதிய வேண்டும்; படித்தோர் புதியதோர் சக்தி பெறுவர்; கோழைகளும் வீரராகும் விதமானது அவருடைய வாழ்வு. அவர் சித்தரித்த சோவியத் நாட்டுக்குச் சொல்லொணாக் கஷ்டம் ஏற்பட்டுள்ள இந்நாளிலே லெனின் வரலாறு, படித்திடல் அவசியம். எத்தகைய வீரனின் சித்திரத்தை இன்று நாஜி வெறியன் நாசமாக்க நினைக்கிறான் என்பதை உணர்ந்து, தோள்தட்டி, எழுந்து போரிடத் தக்க புத்துணர்ச்சி தரும் புரட்சிப் பானம், அவர் வரலாறு.

அவரிடம் ரஷ்யர் கொண்ட அன்பு அளவற்றதென்பது, கோடிக்கணக்கான மக்கள் அவருக்குக் காட்டிய கடைசிக் கல்லறை மரியாதையிலிருந்து புலப்படுகின்றது. மாஸ்கோ காட்சிச் சாலையின் இன்றைக்கும் அவருடைய உடல் அழிந்துபோகா வண்ணம் காப்பாற்றி மயக்கப்பட்டிருக்கின்றது. தாய் நாடு மட்டுமன்று, ஜனசமுகத்திற்கே தம்முடைய தத்துவங்களைப் பறைசாற்றி ஏழைகளுக்குத் தன் ஆவியையே அர்ப்பணம் செய்த லெனினை எவரும், என்றைக்கும் மறக்க முடியாது. இராஜீய சுதந்திரம் மட்டுமல்லாது பொருளாதார சுதந்திரத்தின் அவசியத்தை உலகிற்கெடுத்துக் காண்பித்த லெனின் அழியாப்புகழ் பெற்றுவிட்டார்.

மே தினம் பற்றி அண்ணா! 👇

துப்பாக்கிக்கும் ஈட்டிக்கும், தடியடிக்கும் மார்பு காட்டியே, மேதின விழாவின் காரணகர்த்தர்கள்; மேதினியில், இந்நாள் தோன்றிடச் செய்தனர். 16, 12, 10 மணி நேரங்கள் செக்கு மாடுகள் போல் உழைத்து அலுத்த தோழர்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரமே வேலை செய்வோம் என்று உறுதியுடன் கூறினர். 1880ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி, இச் சூள் உரைத்த, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டம் கிளர்ச்சி நடத்திற்று. கிளர்ச்சியை அடக்கக் கடுமையான தண்டனைகள் தரப்பட்டன. கஷ்ட நஷ்டம் அதிகம். ஆனால், தோழர்கள் துளியும் அஞ்சாது கிளர்ச்சியில் உறுதியுடன் நின்றனர். வென்றனர், அவர்கள் அன்று சிந்திய இரத்தத்தை ஆண்டுதோறும் மே தின விழாவில், பாட்டாளி மக்கள் தமது நினைவினில் இருத்துவர். அதனால் உண்டாகும் உணர்ச்சியே கவைகளை உண்மைக் காட்சி களாக்கும். இவ்வாண்டு மே விழாவில் ஸ்டாலின் பேசுகையிலே இதுபோது உலகுக்கும், சோவியத் நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள இடுக்கணைத் தீர்க்கத் தீரமாகப் போரிட வேண்டும் என்பதனை வலியுறுத்திச் செஞ்சேனையின் வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டியதுபோல, மேதின விழாவன்று, பொதுவான இலட்சியத்தை பற்றி அறிந்து கொள்வதுடன், திராவிடத் திருநாட்டினைக் கெடுத்துவரும் ஆரியத்தை அழிப்போம், என சூள் உரைத்து சோர்வின்றி உழைக்கத் திராவிடத் தோழர்கள் முன் வேண்டுகிறோம். ஏனெனில், ஆரியம் அழிந்தாலன்றி இங்கு அபேதவாதம் ஏற்படாது. புகுத்தப்படினும் நிலைக்காது. எனவே மே தின விழா முழக்கமாகத் திராவிடர் தோழர்கள்,

ஆரியம் அழிக
அபேதவாதம் வாழ்க
சனாதனம் வீழ்க
சமதர்மம் வாழ்க

என்ற சூளுரைகளைக் கொள்ள வேண்டுகிறோம்.

விவரணைகள் 



வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...