எனது 100 வது தமிழ் கட்டுரையை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வதோடு, தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி.
தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
குறிப்பு = பெரியார் ஆற்றிய சமூக தொண்டுகள் குறித்து வெளிவந்துள்ள புத்தகங்களின் பக்கங்கள் 10 ஆயிரத்தைத் தாண்டும் நிலையில், ஒரு எளிய அறிமுகத்தை வழங்குவதற்காக 60 பக்க புத்தகமாக சுருக்கியிருக்கிறேன். இந்த சுருக்கமான கட்டுரை முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, தலைப்பில் இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சுருக்கம்
- முகவுரை
- தொடக்க காலகட்டம்
- காசியில் இருந்து வீடு திரும்புதல்
- காங்கிரஸ் கட்சியில் பெரியார்
- கள்ளுக்கடை மறியல் போராட்டம்
- நீதிக்கட்சியின் நலத்திட்டங்கள்
- வைக்கம் போராட்டம்
- சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்
- காங்கிரஸ் கட்சியுடன் விரிசல்
- சுயமரியாதை இயக்கம்
- காந்தியுடன் கருத்து வேறுபாடு
- சுயமரியாதைத் திருமணம்
- வெளிநாடுகளுக்கு பயணம்
- சுயமரியாதை சமதர்ம கட்சி
- நீதிக்கட்சியில் பெரியார்
- பெரியாரை சந்தித்த அண்ணா
- பெரியார் பட்டம் வழங்கல்
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
- கோவில் நுழைவுப் போராட்டம்
- திராவிட நாடு கோரிக்கை
- நீதிக்கட்சியின் பெயர் மாற்றம்
- சுதந்திர நாள் துக்க நாள்
- அடுத்த வாரிசு
- பெரியாரும் மணியம்மையும்
- திராவிட முன்னேற்ற கழகம்
- இட ஒதுக்கீட்டின் வரலாறு
- பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம்
- அரசியலமைப்பு சட்ட நகல் எரிப்புப் போராட்டம்
- சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி
- பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்
- பெரியார் நடத்திய இதழ்கள்
- மதங்கள் மீதான விமர்சனம்
- சமூக நீதிக் கொள்கைகள்
- பெரியாரும் காமராஜரும்
- பெரியாரும் அம்பேத்கரும்
- பெரியார் மறைந்துவிட்டாரா?
- முடிவுரை
- விவரணைகள்
முகவுரை
அவர் இறந்து அரை நூற்றாண்டுக்கு பிறகும் அவரது பெயரைக் கண்டு ஒரு கூட்டம் அஞ்சுகிறது. அவர் தாம் தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியார். ராமசாமி என்று பெற்றோரால் பெயரிடப்பட்ட ஒரு மனிதர், தமிழ்நாட்டின் ஓர் அரசியல்வாதியாக சமூகப் பணியில் நுழைந்து, அதன் மூலம் ஒரு முக்கிய சீர்திருத்தவாதியாக மாறியது எளிதானது அல்ல. அரசியல், சுயமரியாதை, மொழி, அடையாளம், பகுத்தறிவு என்று மட்டும் பேசியிருப்பார் எனில், அவர் வெறும் ஈ.வே.ராமசாமியாக மட்டுமே இருந்திருப்பார். பெண்களின் உரிமை, விளிம்புநிலை சமூகங்களின் உரிமை, சமத்துவத்திற்கான உரிமை, கல்விக்கான உரிமை, அறிவியலுக்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூகச் சீர்திருத்தங்களுக்கு வாதிட்டதால் தான் அவர் தந்தை பெரியார் எனப் பெயரிடப்பட்டார்.
தென்னிந்திய சமூக - அரசியல் நிலப்பரப்பில், சுயமரியாதை இயக்கத்தை நிறுவி, சமூகப் பணிக்காகச் சமரசமின்றிக் களத்தில் நாளும் நின்ற மாபெரும் தலைவர் அய்யா பெரியார். எளிமையாகச் சொன்னால், தன் அயராத சமூக நோக்கப் பணிகளால் அழியாத முத்திரையைப் பதித்த தந்தை பெரியார், சமூக மாற்றத்தின் நிலையான அடையாளமாக திகழ்கிறார். அடக்குமுறை மூலம் எதையும் சாதித்துவிடலாம் என்று வலதுசாரிகள் நினைத்து கொண்டிருக்கும் வேளையில், பெரியார் நமக்கு நேற்றும் - இன்றும் - நாளையும், ஏன் என்றென்றும் கலங்கரை விளக்கமாக திகழ்வார் என்றால் அது மிகையாகாது.
தொடக்க காலகட்டம்
ஈரோட்டில் “ஈரோடு வெங்கட்ட நாயக்கர் - சின்னத்தாயம்மாள்” தம்பதியினர் கூலித் தொழிலாளியாக வேலைக்குச் சென்று, பின்னர் மளிகை கடை, அரிசி வியாபாரம் எனப் பல வணிகம் செய்து ஈரோட்டில் வசதியான குடும்பமாகினர். இத்தம்பதிக்கு ஈ.வெ.கிருஷ்ணசாமி, ஈ.வெ.ராமசாமி என்ற இரு மகன்களும், பொன்னுத்தாயம்மாள், கண்ணம்மாள் என்ற இரு மகள்களும் இருந்தனர்.
17 செப்டம்பர் 1879 இல் பிறந்த ஈ.வெ.ராமசாமி (ஈ.வே.ரா), இளம் வயதில் தனது சின்னம்மா வீட்டில் சில காலம் வளர்ந்தார். இளம் வயதில் இருந்தே தாழ்த்தப்பட்ட பள்ளி நண்பர்கள் மீது அன்பு கொண்டு அவர்கள் வீட்டில் பண்டங்கள் உண்பது, தண்ணீர் அருந்துவது போன்ற செயல்களில் ஈ.வே.ரா ஈடுபட்டார். இதை கண்டு ஈ.வே.ராவை சின்னம்மா வீட்டில் இருந்து அழைத்து வந்த தாய் சின்னத்தாயம்மாள் தாழ்த்தப்பட்டவர்களுடன் பழக்கக்கூடாது என்று கடுமையான அறிவுரைகளை வழங்கினார். அதை காதில் வாங்கி கொள்ளாமல் தாழ்த்தப்பட்ட பள்ளி நண்பர்களுடன் தொடர்ந்து நட்பு பாராட்டினார் ஈ.வெ.ரா. நாளடைவில் பள்ளிப்படிப்பில் கவனம் கொள்ளாத ஈ.வெ.ராவை தனது தரகு மண்டியில் பணிக்கு அமர்த்தினார் தந்தை.
இந்து சமயத்தில் ஆர்வமுள்ள ஈ.வே.ரா பெற்றோரின் வீட்டில் பக்தி சொற்பொழிவுகள் அடிக்கடி நடைபெறும். கடவுள் நம்பிக்கை கொண்டவராக வளர்ந்தாலும், இளம் வயதில் இருந்தே பக்தி சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஈ.வெ.ரா.வுக்கு அந்தச் சொற்பொழிவில் உள்ள புராண கதைகள் முரணாக இருப்பதைக் கண்டார். நாளடைவில் பகுத்தறிவு கொள்கையில் ஆர்வம் கொண்டார்.
1898 இல் ஈ.வே.ரா தனது தாய்மாமன் மகள் நாகம்மாளை மணந்தார். திருமணமான இரண்டாவது ஆண்டில் நாகம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து ஆறு மாதத்தில் இறந்த பிறகு குழந்தை பெறுவதை இடையூறாக கருதி இனி குழந்தை வேண்டாம் என முடிவு செய்தார் ஈ.வே.ரா. 11 மே 1933 இல் நாகம்மாள் மரணமடைந்தார். நாகம்மாள் மறைவுக்கு ஈ.வே.ரா உருக்கமான இரங்கல் செய்தி எழுதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
காசியில் இருந்து வீடு திரும்புதல்
சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்து வந்த ஈ.வே.ரா மீது அவரது தந்தை ஒரு நாள் கோபித்துக் கொண்டார். இதனால், 1904 இல் வீட்டை விட்டு வெளியேறிய ஈ.வே.ரா துறவறம் பூண்டு காசிக்கு செல்ல முடிவு செய்தார். காசிக்கு செல்லும் போது பல்வேறு ஊர்களில் தங்கி நண்பர்களை சந்தித்தார். காசியில் சிறு சிறு வேலைகள் செய்தும் பிச்சை எடுத்தும் உண்டார். பார்ப்பனர்களுக்கு கிடைக்கின்ற மரியாதை தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைக்காமல் இருப்பதை கண்டு கடுங்கோபம் கொண்டார்.
காசி பயணத்தை முடித்துக் கொண்டு ஆந்திர மாநிலம் ஏலூருக்கு வந்திருந்த ஈ.வெ.ராவைப் பற்றி கேள்விப்பட்ட தந்தை, மகனை சமாதானம் செய்து ஈரோட்டிற்கு அழைத்து வந்தார். அதை தொடர்ந்து தன் மகனுக்கு பொறுப்பு அளிக்கும் நோக்கில் தரகு மண்டியை ஈ.வே.ரா பெயருக்கு மாற்றி பொறுப்புகளை அவரிடம் கொடுத்தார். அதே காலகட்டத்தில் மக்களோடு மக்களாக சாதி வேறுபாடு பாராமல் அனைவருடனும் பாசத்தோடு பழகி வந்த ஈ.வே.ரா, ஊருக்குள் நடக்கும் சச்சரவுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டார். நற்பணிகள் காரணமாக அரசு ஊழியர்கள், பேராசிரியர்கள், தொழிலதிபர்கள், தலைவர்கள் என்று வெளிவட்டார பழக்கவழக்கம் அதிகரித்தது. தன் தந்தை வகித்த அறங்காவலர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சில கோவில்களை புதுப்பித்தார். கடவுள் நம்பிக்கையற்றவர் என்றாலும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை திறம்பட முடிக்கும் ஆற்றல் ஈ.வே.ராவிடம் இருந்தது. ஈரோடு நகர்மன்ற தலைவராக குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி போன்ற மக்கள் பணிகளை செய்து மக்களின் நல்லாதரவை பெற்றார். இடைவிடாது நற்பணி ஆற்ற அறக்கட்டளைகளை தொடங்கினார். 1911 இல் காலமான தனது தந்தை வெங்கட்ட நாயக்கரின் உடலை குடும்ப வழக்கப்படி எரியூட்டாமல் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே வள்ளலார் கூற்றுப்படி புதைத்தார்.
காங்கிரஸ் கட்சியில் பெரியார்
இந்தியாவின் விடுதலைக்காக போராடி வந்த காங்கிரஸ் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு 1914 முதல் உள்ளூரிலும் வெளியூரிலும் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ள தொடங்கினார். காந்திய கொள்கைகளை பின்பற்றி காங்கிரஸ் கட்சி ஆதரவாளராக இருந்து வந்த ஈ.வே.ரா 1919 இல் தனது தொழிலை விட்டுவிட்டு நகர்மன்ற தலைவர் பதவி உட்பட 29 பொதுப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வ உறுப்பினராக இணைந்தார். 1921 இல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1922 இல் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் மனுதர்மத்தையும் புராணங்களையும் எரிக்க வேண்டும் என்று ஈ.வெ.ரா முழங்கினார். 1923 டிசம்பரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியில் பயணித்த காலத்தில் சேலம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த டாக்டர் வரதராஜலு நாயுடு, சேலம் தொரப்பள்ளி பகுதியை சேர்ந்த சி.இராஜகோபாலாச்சாரி (ராஜாஜி), காஞ்சிபுரம் தண்டலம் பகுதியை சேர்ந்த திரு.வி.கலியாணசுந்தரனார் (திரு.வி.க) உட்பட பலர் ஈ.வே.ராவுக்கு நெருங்கிய நண்பர்களாக விளங்கினர்.
கள்ளுக்கடை மறியல் போராட்டம்
“பனை மரங்களில் இருந்து கள் இறக்கப்படுவதால் அம்மரங்களை வெட்டுவது மதுவிலக்கு பிரச்சாரத்திற்கு துணை நிற்கும்” என்று நாட்டு மக்களிடம் காந்தி வேண்டுகோள் வைத்தார். தமிழ்நாட்டில் பனை மரத்தில் மட்டுமல்ல தென்னை மரத்தில் இருந்தும் கள் இறக்கப்படுவதுண்டு. அதையொட்டி, சேலம் தாதம்பட்டி பகுதியில் குத்தகைக்கு விடப்பட்டிருந்த தனது தென்னை மரத்தோப்பில் இருந்து கள் இறக்க வேண்டாமென்று கோரிக்கை வைத்தார். அதற்கு குத்தகைக்காரர் மறுத்ததையொட்டி இரவோடு இரவாக சுமார் 500 தென்னை மரங்களையும் வெட்டி சாய்த்தார். 1921 இல் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் செய்ததற்காக ஈ.வே.ரா சிறையில் அடைக்கப்பட்டார். 28 டிசம்பர் 1921 அன்று காந்தி தனது “Young India” பத்திரிகையில் ஈ.வே.ராவின் கள்ளுக்கடை மறியல் குறித்து பாராட்டி எழுதினார்.
பின் குறிப்பு = பிற்காலத்தில் மதுவிலக்கு பற்றி பெரியார் ஆழ்ந்து சிந்தித்தார். மதுவிலக்கு அரசாங்கத்திற்கு உதவாது என்றும், சட்டவிரோதமாக சாராயம் விற்பர்களுக்கு லாபமாக அமையும் என்றும், மதுவிலக்கு என்பது இயற்கையோடு போராடும் ஒரு முட்டாள்தனமான போராட்டம் என்றும் உணர்ந்தார். மதுவிலக்கைப் பற்றி பேசுவது எளிதாக இருக்கும், ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவது வெறும் கடினம் மட்டுமல்ல, அது தேவையற்றது, பலன்தராதது, மேலும் பல சமூகப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் பெரியார் கூறினார்.
காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் பயணித்த ஈ.வே.ரா தனது குடும்பத்தினருடனும் மக்களுடனும் இணைந்து கதராடை விற்பனை, கள்ளுக்கடை மறியல், விடுதலைப் போராட்டம் என்று பல்வேறு காரியங்களில் ஈடுபட்டார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று ஈ.வே.ரா. சிறை சென்றுள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் தாமிரப் பட்டயம் 1972 இல் ஈ.வே.ராவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக 20 நவம்பர் 1916 அன்று சி.நடேசன், டி.எம்.நாயர், பிட்டி தியாகராயர் ஆகிய மூவரும் பல்வேறு தோழர்களுடன் இணைந்து பார்ப்பனரல்லாதோரின் உரிமைகளை பெறும் நோக்கில் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கி சமூக நீதி கொள்கைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து வந்தனர். 1917 இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் ஆங்கில பத்திரிகை “ஜஸ்டிஸ்” (Justice) என்று பெயரிடப்பட்டது. பின்னர், அதையொட்டி சங்கமானது “நீதிக்கட்சி” (Justice Party) என்று அழைக்கப்பட்டது. இதற்கிடையே, 20 செப்டம்பர் 1917 அன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து பார்ப்பனரல்லாதோர் விலகாமல் இருக்க காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மாகாண சங்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. ஈ.வே.ரா, திரு.வி.க, வரதராஜுலு நாயுடு, கூட்டி கேசவ பிள்ளை ஆகியோர் இச்சங்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்தனர்.
1920 சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற நீதிக்கட்சி 16 செப்டம்பர் 1921 அன்று பார்ப்பனரல்லாதோர் (அனைத்து மதத்தினரும்) வகிக்கும் பதவிகளின் விகிதத்தை அதிகரிக்க முதல் வகுப்புவாரி அரசாங்க ஆணையை பிறப்பித்தது. இதுவே இந்தியாவில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு முன்னோடியானது. மேலும் 1921 இல் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
மேலும், 1924 இல் நீதிக்கட்சி அரசு ரோஸ்டர் முறையை பயன்படுத்தி அரசு ஊழியர்களை நியமிக்க பணியாளர் தேர்வு வாரியத்தை (Staff Selection Board - S.S.B) நிறுவியது. இந்த அமைப்பு குறிப்பிட்ட சதவீதங்களின் அடிப்படையில் ஒரு கேடருக்குள் வெவ்வேறு பிரிவுகளுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தது. S.S.B அமைப்பின் அடித்தளம் பின்னர் இன்றைய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமாக (Tamil Nadu Public Service Commission - T.N.P.S.C) மாற்றப்பட்டது.
வைக்கம் போராட்டம்
கேரளாவில் திருவிதாங்கூர் அரசின் கீழ் வைக்கம் சோமநாதர் கோவிலின் வழிபாட்டு உரிமை நம்பூதிரிகளின் வசம் இருந்தது. ஈழவர், புலையர், தீயர் ஆகிய சாதியினர் கோவிலை சுற்றியிருக்கும் தெருக்களில் நடக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 1905 இல் நம்பூதிரிகளின் அநீதியை எதிர்த்து ஈழவர்கள் நடத்திய உரிமை போராட்டத்தை திருவிதாங்கூர் திவான் வேலுப்பிள்ளை முறியடித்தார். திருவிதாங்கூர் மாநில சட்டசபையில் (Sree Moolam Popular Assembly), சமூக சீர்திருத்தவாதி நாராயண குருவின் “ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா” உறுப்பினர்களால் ஈழவர்களின் கோரிக்கை எழுப்பப்பட்டது, ஆனால் அரசால் உடனடியாக நிராகரிக்கப்பட்டது.
30 மார்ச் 1924 அன்று ஸ்ரீ நாராயண குருவின் சீடரான டி.கே.மாதவன் முயற்சியில் கோவிலை சுற்றியிருக்கும் தெருக்களில் நடக்க அனுமதி அளிக்கக் கோரி வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்டது. வைக்கம் போராட்டம் தொடங்கிய போது சுமார் ஒரு வாரத்திற்கு தினமும் சோமநாதர் கோயிலுக்கு அருகே தடுக்கப்பட்ட பகுதியில் ஒற்றை எண்ணிக்கையில் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிய போது அவர்களை திருவிதாங்கூர் அரசு கைது செய்தது. இறுதியில் போராட்ட தலைவர்களான டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்றவர்களை திருவிதாங்கூர் அரசு கைது செய்தது.
போராட்டத்தில் தொய்வு ஏற்பட அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து ஆதரவு திரட்ட போராட்ட குழுவினர் முடிவு செய்தனர். அதை தொடர்ந்து மே மாதம் 1924 இல் வைக்கம் போராட்ட குழுவினரிடம் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்ள ஈ.வே.ராவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈ.வே.ராவுக்கு மக்களைத் திரட்டி திறம்பட போராட்டம் நடத்தவது கைவந்த கலையாக இருந்தது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை மீட்புப் போராட்டத்தில் தீவிரமாக செயல்படக்கூடியவர் என்பதால் ஈ.வே.ரா அழைக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்புகளை ராஜாஜியிடம் ஒப்படைத்துவிட்டு வைக்கம் போராட்டத்தில் ஈ.வே.ரா களப்பணி ஆற்றினார்.
வைக்கம் போராட்டத்தில் ஸ்ரீ நாராயண குரு, டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப், சகோதரன் ஐயப்பன், அய்யாமுத்துக் கவுண்டர் மற்றும் பல்வேறு சமூக நீதி ஆர்வலர்கள் கலந்து கொண்டு களப்பணி ஆற்றினர். திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட ஈ.வே.ரா கைது செய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பசுப்புரா சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில் சமூக சமத்துவம் ஏற்படுத்திட போராடும் ஈ.வே.ரா மரணமடைய வேண்டுமென்று வைதீகர்கள் “சத்ரு சம்ஹார யாகம்” நடத்தினர். ஆனால் யாகம் நடந்து கொண்டிருந்த போது திருவாங்கூர் மன்னர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னர் மறைவுக்கு பிறகு கைது செய்யப்பட்ட போராட்ட வீரர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர எண்ணி வைக்கத்திற்கு வருகை தந்த காந்தி, ராணி மற்றும் ஈ.வே.ராவிடம் சமரசம் பேசியதன் விளைவாக, போராட்ட குழுவினரின் பெரும்பாலான கோரிக்கைகளை திருவிதாங்கூர் அரசு நிறைவேற்றியது. அதை தொடர்ந்து 08 அக்டோபர் 1925 அன்று வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்தது. வைக்கம் போராட்டத்தில் மக்கள் தொண்டாற்றிய ஈ.வே.ராவுக்கு “வைக்கம் வீரர்” என்ற பட்டத்தை திரு.வி.க வழங்கினார்.
சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்
காந்தியின் ஆதரவுடன் நெல்லை சேரன்மாதேவியில் குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார் வ.வே.சு.அய்யர். இக்குருகுலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பல குழந்தைகள் படித்து வந்தனர். பார்ப்பனரல்லாதோர் நன்கொடையின் ஆதரவில் நடத்தப்பட்ட குருகுலத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆண்டுதோறும் ரூபாய் பத்தாயிரம் நன்கொடை வழங்கி வந்தது. அந்நேரத்தில் ஓமந்தூர் ராமசாமியின் மகன் விடுமுறைக்கு வந்திருந்த போது தந்தையிடம் குருகுலத்தில் பார்ப்பனர்கள் உயர்வாக நடத்தப்படுவதாகவும், மற்றவர்கள் தாழ்வாக நடத்தப்படுவதாகவும், பார்ப்பனர்களுக்கு அறுசுவை உணவு கொடுக்கப்படுவதாகவும், மற்றவர்களுக்கு ருசியற்ற உணவு கொடுக்கப்படுவதாகவும், தனிப்பானை, தனிப்பந்தி போன்ற விவரங்களையும் கவலையுடன் பகிர்ந்து கொண்டான். இந்த கொடுமையான செய்தி ஈ.வே.ராவின் காதுகளுக்கு எட்டியதை தொடர்ந்து 17 ஜனவரி 1925 அன்று காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டப்பட்டது.
குருகுலத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும், சமபந்தியில் ஒரே உணவு வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி செயற்குழு கேட்டுக்கொண்டது. ஆனால் செயற்குழு தீர்மானத்தை வ.வே.சு.அய்யர் ஏற்காததால் பிரச்சனை காந்தியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சாதி ஒழிப்பில் நீக்கு போக்காக நடந்து கொள்ளும் காந்தி “சம்பந்தி கோரிக்கை பாவம் அல்ல அதே போல ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து உண்ண மறுப்பதும் பாவம் அல்ல” என்றார். வ.வே.சு.அய்யர், ராஜாஜி, காந்தி உட்பட பலரும் ஈ.வே.ராவின் சமத்துவ கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இப்பிரச்சனையில் சுமூகத் தீர்வை எட்ட சோமயாஜுலு கணபதி சாஸ்திரி இருதரப்புக்கும் பஞ்சாயத்து செய்து வந்த நிலையில் பாபநாசம் அருவியில் மகளை காப்பாற்ற முயன்ற போது வ.வே.சு.அய்யர் மரணமடைந்ததால் குருகுலம் மூடப்பட்டது.
காங்கிரஸ் கட்சியுடன் விரிசல்
பார்ப்பனரல்லாதோர் சமநிலைக்கு வர வேண்டுமென்றால் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (இட ஒதுக்கீடு) இன்றியமையாதது என்பதை அறிந்த ஈ.வே.ரா தேர்தல் வேட்பாளர் தேர்வில், அரசு பணியாளர் தேர்வில் ஒவ்வொரு வகுப்பினருக்கும் விகிதாசார பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்று கூட்டங்களில் பொதுவாழ்க்கை தொடங்கியது முதலே கோரிக்கை வைத்தார். 1920 இல் நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஈ.வே.ரா முன்மொழிந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (இட ஒதுக்கீடு) தீர்மானத்தை சீனிவாச அய்யங்கார் நிராகரித்தார். 1921 இல் தஞ்சையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஈ.வே.ரா முன்மொழிந்த இட ஒதுக்கீடு தீர்மானத்தை எதிர்த்து இட ஒதுக்கீடு கொள்கையாக இருக்கலாம் ஆனால் தீர்மானமாக கொண்டு வர தேவையில்லை என்றார் ராஜாஜி. 1922 இல் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஈ.வே.ரா முன்மொழிந்த இட ஒதுக்கீடு தீர்மானத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டனர். 1923 இல் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஈ.வே.ரா முன்மொழிந்த இட ஒதுக்கீடு தீர்மானத்தை எதிர்த்து டெல்லி காங்கிரஸ் கட்சி மாநாடு முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார் ராஜாஜி.
1924 இல் திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கிய ஈ.வே.ரா “பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர் நிலை சரிசமமாக மாற வேண்டுமென்றால் இட ஒதுக்கீடு அவசியம்" என்பதை எடுத்துரைத்தார். ஈ.வே.ராவின் கருத்தால் பார்ப்பன ஆதரவாளர்களுக்கும் ஈ.வே.ரா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு மாநாடு கூச்சல் குழப்பத்தில் முடிந்தது. இப்படி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் ஈ.வே.ராவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது.
இறுதி முயற்சியாக 22 நவம்பர் 1925 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் பார்ப்பனரல்லாதோர் நலன்கள் பாதுகாக்கப்பட இட ஒதுக்கீடு அவசியம் என்ற தீர்மானத்தை ஈ.வே.ரா சமர்ப்பித்தார். தீர்மானத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் 30 உறுப்பினர்களின் கையொப்பம் தேவையென்று மாநாட்டுக் குழு கூற அதற்கு 50 உறுப்பினர்களின் கையொப்பயத்தைப் பெற்றுச் ஈ.வெ.ரா சமர்ப்பித்தார். ஆனால் மாநாட்டுத் தலைவராக இருந்த திரு.வி.க தீர்மானத்தை தோற்கடித்தார். இட ஒதுக்கீடு கொள்கையில் ராஜாஜி போன்று திரு.வி.கவும் இருந்ததை எண்ணி ஈ.வெ.ரா வேதனையடைந்தார். “தேசியவாதிகளின் உள்ளத்தில் வர்ணாசிரமக் கொள்கைகள் இருக்கும் வரை என் போன்றவர்கள் இடைவிடாது போராடிக் கொண்டே இருப்போம்” என்று கூறி காங்கிரஸ் கட்சியை விட்டு ஈ.வெ.ரா வெளியேறினார்.
சுயமரியாதை இயக்கம்
குருகுல அணுகுமுறை மற்றும் இடஒதுக்கீடு தீர்மானம் ஏற்கப்படாததால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பார்ப்பனிய மயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய ஈ.வே.ரா 1925 இல் சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார்.
பிரிட்டிஷ் அரசிடம் இருந்து பெறும் விடுதலையை காட்டிலும் பார்ப்பனர்களிடம் இருந்து பெறும் விடுதலையே முதன்மையானது என்று ஈ.வே.ரா கருதினார். பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று மனிதர்களை வேறுபடுத்துவது கொடுமை. ஒவ்வொரு மனிதனுக்கும் மான உணர்வு உண்டு, அதை மதித்து ஒருவருக்கு ஒருவர் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 24 ஜனவரி 1926 அன்று குடியரசு இதழில் “சுயராஜ்ஜியமா? சுயமரியாதையா?” என்ற தலைப்பில் “தீண்டாமை ஒழிவதன் மூலமே நாடு முழுமையான சுயராஜ்ஜியம் அடைந்திடும்” என்று ஈ.வே.ரா எழுதிய தலையங்கம் சுயமரியாதை கொள்கைகளின் பிரகடனமாக விளங்கியது. மேலும் 1927 இல் ஈ.வெ.ரா என்ற ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தமது பெயரில் ஒட்டியிருந்த நாயக்கர் என்ற சாதிப் பெயரை நீக்கி, ஈ.வெ.ராமசாமி என்று மாற்றினார்.
தெருவில் நடக்கக்கூடாது, கோவிலுக்குள் நுழையக்கூடாது, பொதுக்குளத்தை பயன்படுத்தக்கூடாது, ஒரே உணவு கூடாது, ஒரே பந்தி கூடாது, ஒரே பானையில் நீர் அருந்தக்கூடாது, பார்ப்பனர்கள் குடியிருக்கும் பக்கம் செல்லக்கூடாது, தாழ்த்தப்பட்டவர்களின் நிலை உயரக்கூடாது போன்ற பல்வேறு சமூக கொடுமைகளை கண்டு கொதித்தெழுந்த ஈ.வே.ரா சுயமரியாதை பிரச்சாரத்தை வீதி வீதியாக மேற்கொள்ள தொடங்கினார். தனியாக களம் கண்டு உழைத்து வந்த ஈ.வே.ராவை காலம் நீதிக்கட்சி பக்கம் திருப்பியது. சமூக நீதி கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வந்த நீதிக்கட்சி மாநாடுகளை பயன்படுத்திக் கொண்டு சுயமரியாதை பிரச்சாரங்களை ஈ.வே.ரா மேற்கொண்டார்.
1928 இல் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு தடையை மீறி போராட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ததற்காக ஈ.வே.ரா சிறைத் தண்டனை பெற்றார். தமிழ்நாடெங்கும் சுயமரியாதை இயக்கத்தின் கிளை அமைப்புகள் தொடங்கப்பட்டன. காலம் காலமாக கற்பிக்கப்பட்ட பார்ப்பன சடங்குகளை எதிர்த்து பார்ப்பனர் இல்லாமல் திருமணம், நினைவு நாள், புதுமனை புகுவிழா போன்ற பல்வேறு நிகழ்வுகளை ஈ.வெ.ரா புரட்சிகரமாக நடத்தினார். அவரது வழியில் நாடெங்கும் உள்ள தொண்டர்கள் இப்புரட்சியை பின்பற்ற தொடங்கினர்.
சுயமரியாதை இயக்கம் சார்பில் சுயமரியாதை பெண்கள் மாநாடு, சுயமரியாதை இளைஞர்கள் மாநாடு என பல்வேறு மாநாடுகளை நடத்தி சுயமரியாதை சிந்தனைகளை ஈ.வே.ரா மக்களிடம் கொண்டு சென்றார். 1929 இல் செங்கல்பட்டில் முதலாவது சுயமரியாதை இயக்க மாநாடு, 1930 இல் ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாடு, 1931 இல் விருதுநகரில் மூன்றாவது சுயமரியாதை இயக்க மாநாடு நடத்தப்பட்டன. ஒரு கட்டத்தில் 1967 முதல் “கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்! கடவுளை பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!” என்ற முழக்கத்தோடு சுயமரியாதைக் கூட்டங்கள் நடைபெறலாயின. பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் நூலை எரிக்க வேண்டும் என்று ஈ.வே.ரா தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். இதை முன்னிட்டு இந்தியாவிலே முதல் முதலாக 17 அக்டோபர் 1927 அன்று காட்பாடியில் நடைபெற்ற ஆதி திராவிடர் மாநாட்டில் எம்.சி.ராஜா அவர்களால் மனுதர்மம் நூல் எரிக்கப்பட்டது, 04 டிசம்பர் 1927 அன்று குடியாத்தத்தில் ஈ.வே.ரா தலைமையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர் அவர்களால் மனுதர்மம் நூல் எரிக்கப்பட்டது. இதற்கு மூன்று வாரம் கழித்து, 25 டிசம்பர் 1927 அன்று மகத்தில் அம்பேத்கர் அவர்களால் மனுதர்மம் நூல் எரிக்கப்பட்டது.
காந்தியுடன் கருத்து வேறுபாடு
“ஒவ்வொரு வர்ணத்தாரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அடிப்படையாக கொண்டு பணியாற்றினால் அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள்” என்று "சுதேசமித்திரன்" இதழில் காந்தி எழுதிய கட்டுரையை கண்டு வெகுண்டெழுந்த ஈ.வே.ரா, காந்தியிடம் விவாதிக்க 1927 இல் பெங்களூரு சென்றார். அங்கு காந்தியிடம் காங்கிரஸ் கட்சியை ஒழிக்கவும், சாதியை ஒழிக்கவும், இந்து மதத்தை ஒழிக்கவும் கோரிக்கை வைத்து விவாதம் செய்தார் ஈ.வே.ரா. காந்தியுடன் கருத்து வேறுபாடுகள் முற்றிடவே ஈ.வே.ரா வேதனையுடன் திரும்பிவிட்டார். வர்ணத்தை ஆதரித்து காந்தி பேசிய பின் ஈ.வே.ரா சுயமரியாதை பிரச்சாரத்தை அதி தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கினார்.
சுயமரியாதைத் திருமணம்
05 மே 1928 அன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி சுக்கிலநத்தம் சிற்றூரில் சண்முகத்திற்கும் "கைம்பெண்" மஞ்சுளாவிற்கும் பெரியார் தலைமையில் முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. 08 டிசம்பர் 1929 அன்று பிரபல சுயமரியாதை தீரர் குத்தூசி குருசாமிசாமிக்கும் குஞ்சிதம் அம்மாளுக்கும் பெரியார் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் குறிப்பிடத்தக்கது. சுயமரியாதைத் திருமணம் புரிவது தெய்வகுற்றம் என்று கூச்சலிட்ட சனாதனவாதிகளிடம் “நான் என்ன மனிதருக்கும் மாட்டுக்குமா திருமணம் செய்து வைக்கிறேன்? ஆறறிவு மனிதர்களாக பிறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே திருமணம் செய்து வைக்கிறேன்? அது எப்படி தவறாகும்?” என்று பெரியார் பேசினார்.
1951 இல் அம்பேத்கரின் இந்து சட்ட மசோதா நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டு வரப்பட்ட போதும், பெரும் எதிர்ப்பின் காரணமாக மசோதா நிறைவேற்றப்படாத போது, அம்பேத்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 1955 இல் நேருவின் முயற்சியால் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சில மாற்றங்களுடன் இந்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்து மதத்தின் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் சாஸ்திர சடங்குகளுடன் கலப்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இந்து சட்ட மசோதா கோரியது. ஆனால் சாதி, மதம், சாஸ்திரம், சடங்கு போன்ற விஷயங்களை உடைத்து நடைபெறும் சுயமரியாதை திருணத்தை அங்கீகரிக்க ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பெரியார் எண்ணினார்.
சுயமரியாதைத் திருமணத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்த பெரியாரின் கொள்கையை தமிழ்நாட்டு அளவிலாவது சட்டமாக்க முதல்வர் அண்ணா விரும்பினார். மசோதா சட்டமாக வருவதற்கு முன்பே அண்ணா பெரியாருக்கு மசோதாவின் வரைவு நகலை அனுப்பினார். அதில் “மாலை மற்றும் தாலி” என்று குறிப்பிடப்பட்டு தாலி கட்டாயமாக்கப்பட்டத்தை கவனித்த பெரியார், “மாலை அல்லது தாலி” என்று மாற்றி, தாலியை கட்டாயமாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதன் பிறகு 1967 இல் இந்து திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்களுடன் “சுயமரியாதை திருமணச் சட்டம்” தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் அண்ணாவால் நிறைவேற்றப்பட்டது.
வெளிநாடுகளுக்கு பயணம்
சுயமரியாதை கருத்துக்களுடன் பொதுவுடைமைக் கருத்துக்களையும் பேசி வந்த ஈ.வே.ரா 13 டிசம்பர் 1931 முதல் 08 நவம்பர் 1932 வரை கிரேக்கம், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்சு, ஸ்பெயின், போர்த்துகல் போன்ற ஐரோப்பா நாடுகளுக்கும் ஆப்பிரிக்கா, எகிப்து, இலங்கை போன்ற இதர நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக ரஷ்ய பயணத்தின் போது சாதி, மதம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் இல்லாமலும் கடவுள் நம்பிக்கை, மூடநம்பிக்கை இல்லாமலும் பொதுவுடைமைக் கொள்கையால் மக்கள் மகிழ்வுடன் சமமாக வாழ்வதை கண்டு ஈ.வே.ரா மகிழ்ந்தார். இந்தியா திரும்பிய பின் குடியரசு இதழில் சுயமரியாதை இயக்கத்தினர் ஒருவருக்கு ஒருவர் அழைத்து கொள்ளும் போது தோழர் என்ற சொல்லை பயன்படுத்திட வேண்டும் என்றும் திருவாளர், திருமதி போன்ற சொற்களை தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியாவில் பார்ப்பனிய கொள்கை ஒழிந்தவுடன் சுயமரியாதை கொள்கையும், பொதுவுடைமை கொள்கையும் தானாக வந்துவிடும் என்றும் கூறினார் ஈ.வே.ரா. அதே சமயம் தற்போதுள்ள இந்திய பொதுவுடைமை கட்சிக்குள் நிலவும் பார்ப்பனிய மயம் ஒழிந்தால் மட்டுமே நாம் அவர்களுடன் இணைந்து பயணிக்க முடியும் என்றார்.
சுயமரியாதை சமதர்ம கட்சி
பெரியார், சமுதாயத்திற்கு பொதுவுடைமையின் நன்மைகள் பற்றி பிரச்சாரம் செய்தார்; அதோடு, இந்திய பொதுவுடைமையில் நிலவும் பார்ப்பனவாதத்தை கண்டிக்கவும் செய்தார். இந்நிலையில், சுயமரியாதை தோழர்களுடன் சமரசமில்லா பொதுவுடைமைக் கொள்கைகளை தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் பிரச்சாரம் செய்ய எண்ணிய ஈ.வே.ராவுக்கு “சிந்தனைச் சிற்பி” ம.சிங்காரவேலர் பக்கபலமாக இருந்தார். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் எழுதிய பொதுவுடைமைக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து, ஈ.வே.ரா வெளியிட்டார். 28 டிசம்பர் 1932 அன்று ஈரோட்டில், ம.சிங்காரவேலர் முன்னிலையில் சுயமரியாதை சமதர்ம திட்டத்தை ஈ.வே.ரா அறிவித்தார். அதன்படி, சுயமரியாதை இயக்கத்தின் ஒரு பிரிவாக, சுயமரியாதை மற்றும் பொதுவுடைமைக் கொள்கைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட சுயமரியாதை சமதர்ம கட்சியின் (Self Respect Communist Party) பொதுச் செயலாளராக ஜீவானந்தத்தை ஈ.வே.ரா நியமித்தார்.
1934 இல் பிரிட்டிஷ் அரசு, இந்திய பொதுவுடைமை கட்சிகளுக்கு தடை விதித்த பிறகு, பல பொதுவுடைமை கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு குழுவாக செயல்பட்ட காங்கிரஸ் சமூகவுடைமை கட்சியின் கீழ் ஒன்றிணைந்தது. அத்தகைய சூழலில் “இங்கு அதிகம் பேசப்படாத பகுத்தறிவு கொள்கைகளை பற்றி பேசி கொண்டிருக்கும் நமக்கு இந்த தடை வந்துவிட்டால், அரும்பி வரும் மலர் மொட்டிலேயே கருகியது போல் ஆகிவிடும். அதனால் கட்சிக்குள் பொதுவுடைமைக் கொள்கை பிரச்சாரத்தை ஒத்தி வைப்போம். மேலும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ் கட்சியுடன் சுயமரியாதை சமதர்ம கட்சியை இணைக்க விரும்பவில்லை. இங்கிருந்து வெளியேற விரும்புபவர்கள் தாராளமாக வெளியேறலாம்” என்று ஈ.வே.ரா பேசினார். இதன் பின்னணியில், சுயமரியாதை சமதர்மக் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணையவில்லை.
இதற்கிடையே, ஈ.வே.ராவின் ஒத்தி வைப்பு வேண்டுகோளை ஏற்காதவர்கள் ஜீவானந்தம் தலைமையில் வெளியேறி சுயமரியாதை சமூகவுடைமை கட்சியை (Self Respect Socialist Party) தொடங்கினர். ஒரு கட்டத்தில் சுயமரியாதை சமூகவுடைமை கட்சி, காங்கிரஸ் சமூகவுடைமை கட்சிக்குள் (Congress Socialist Party) கரைந்தது. இந்திய பொதுவுடைமை கட்சிகள் மீதான தடை சுதந்திரத்திற்கு பிறகு நீக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாட்டில் பொதுவுடைமை கட்சியின் முகமாக ஜீவானந்தம் செயல்படத் தொடங்கினார்.
நீதிக்கட்சியில் பெரியார்
29 அக்டோபர் 1933 அன்று குடியரசு இதழில் பணக்காரர்கள் செழிக்க உதவும் முதலாளித்துவ அரசை விமர்சித்து “இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதினார் ஈ.வே.ரா. இதை எழுதிய ஈ.வே.ராவையும் குடியரசு இதழின் வெளியீட்டாளர் கண்ணம்மாவையும் 20 டிசம்பர் 1933 அன்று அரசால் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாக, தண்டனைப் பெற்று, அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜாஜி, ஈ.வே.ராவை சந்தித்து பேசி அவரை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் பக்கம் இழுக்கப் பார்த்தார். தனது சுயமரியாதை கொள்கை திட்டத்தை ஏற்பவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார் என்றார் ஈ.வே.ரா. அவர் வகுத்த சுயமரியாதை கொள்கை திட்டத்தை காங்கிரஸ் கட்சி நிராகரித்தது ஆனால் நீதிக்கட்சி முழுமையாக ஒப்புக்கொண்டது. இதையொட்டி, கொள்கை ரீதியாக சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் இணைந்த பிறகு 1934-1935 வாக்கில் நீதிக்கட்சியை அதிகாரப்பூர்வமாக ஆதரிக்க தொடங்கினார் ஈ.வே.ரா.
பெரியாரை சந்தித்த அண்ணா
பெரியாரின் சமூக நீதித் திட்டங்களுக்கு ஆதரவாக நீதிக்கட்சி அரசியல் செய்து வந்தது. இருப்பினும், நீதிக்கட்சி “பணக்காரர்களின் கூட்டமைப்பு” என்று விமர்சிக்கப்பட்டதன் காரணமாக கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், தனி உதவியாளர் போன்ற பணிகளில் அனுபவம் பெற்றவரும் சமூக நீதி குறித்து எழுதுவதிலும் பேசுவதிலும் ஆர்வம் கொண்ட எம்.ஏ பட்டதாரி இளைஞர் பெரியாருக்கு பக்கபலமாக வந்து சேர்ந்தார். 1934 இல் திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டில் அந்த இளைஞர் பெரியாரை முதன்முறையாக சந்தித்தார். பெரியாரின் சமூக நீதி திட்டங்களால் ஈர்க்கப்பட்ட அந்த இளைஞர் வேறு யாருமல்ல, இந்நாடு போற்றும் பேரறிஞர் அண்ணா தான். தந்தை பெரியாரின் அழைப்பை ஏற்று அவருடன் இயக்கப் பணிகளை மேற்கொள்ள தன்னை முழுதாக அர்பணித்துக் கொண்டார் அண்ணா.
1935 இல் தனது 26 வயதில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிக்கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, அண்ணா தேர்தல் ஜனநாயகத்தில் நுழைய முயன்றார், ஆனால் வெற்றி பெறவில்லை. முதல் தேர்தல் தோல்விக்கு பிறகு பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்ட அண்ணா, 1937 இல் பெரியாரின் குடியரசு இதழின் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மேலும் 1942 இல் பெரியாரின் வழிகாட்டுதலின்படி “திராவிட நாடு” என்ற இதழை அண்ணா தொடங்கினார்.
பெரியார் பட்டம் வழங்கல்
13 நவம்பர் 1938 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் “நம் மண்ணில் அதிகம் பேசப்படாத சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் பேசியும், சமூக நலனுக்கு நற்காரியங்களை ஆற்றியும் வரும் ஈ.வே.ராவை இனி சொல்லிலும், எழுத்திலும், பேச்சிலும் பெரியார் என்ற சிறப்புப் பெயரால் அழைக்க வேண்டும்” என்ற தீர்மானத்தை மீனாம்பாள் சிவராஜ், நீலாம்பிகை, மூவலூர் இராமாமிர்தம், தருமாம்பாள், நாராயணி, தாமரைக் கண்ணி உட்பட்ட பற்பல பெண்கள் குழு முன்னின்று ஒருமனதாக நிறைவேற்றினர். தன் வாழ்நாளில் பெரியார் பட்டத்தை ஈ.வே.ரா பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், தற்போது அறிவுலகம் ஈ.வே.ராவை “பெரியார்” என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
1937 இல் சென்னை மாகாண காங்கிரஸ் முதல்வர் ராஜாஜி பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்கினார். நீதிக்கட்சியின் சார்பில் பெரியாரும் தோழர்களும் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததன் காரணமாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. பெரியாரின் தளபதியாக அண்ணா களமாடிய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது நடராசன், தாளமுத்து இருவரும் சிறையில் உயிரிழந்தனர். “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே” என்று 13 வயது சிறுவனாக கலைஞர் முழங்கினார். “இந்தி மொழியை கட்டாயமாக்கி இந்தி மொழி பேசும் வட இந்தியர்களை முதல் தர குடிமக்களாக ஆக்கவும், தமிழ் மொழி பேசும் தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கவும், இந்தித் திணிப்பு மூலம் திராவிடர்களின் பண்பாட்டை சிதைக்கவும் ஆரியர்கள் திட்டமிடுகின்றனர்” என்று பெரியார் குற்றம் சாட்டினார்.
1938 இல் சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற தீர்மானத்தை தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த பேராசிரியர் மறைமலையடிகள் முன்மொழிந்து பேசியதை வழி மொழிந்து பெரியார், சோமசுந்தர பாரதியார் பேசினார்கள். இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு முன், இந்திய வீரர்களை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்திய பிரிட்டிஷ் அரசை கண்டித்து 29 அக்டோபர் 1939 அன்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்களது அரசு பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னர் மாநில ஆளுநர் எர்ஸ்கின் 21 பிப்ரவரி 1940 அன்று இந்தி கட்டாயப் பாடம் அல்ல என்றும் விருப்பப் பாடமாக இருக்கும் என்றும் ஆணை பிறப்பித்தார். 1937 இல் பெரியார் தலைமையில் தோழர்கள் அனைவரும் அணி திரண்டு நடத்திய முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டக் களத்தை முன்மாதிரியாக கொண்டு 1948, 1952, 1965, 1986, 2014 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.
கோவில் நுழைவுப் போராட்டம்
1924-1925 காலகட்டத்தில் கேரளாவில் பெரியார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டம், தமிழ்நாட்டில் கோவில் நுழைவுப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டது. 8 ஜூலை 1939 அன்று இரவு 8.45 மணியளவில் காங்கிரஸ்வாதி வைத்தியநாத ஐயர் தன்னுடன் முத்து, சின்னையா, பூவலிங்கம், முருகானந்தம், கக்கன் (முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்) ஆகிய ஐந்து ஆதி திராவிடர்களையும் நாடார் சமூகத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவது குற்றமாக கருதப்பட்ட காலகட்டத்தில் அப்படி நுழைபவர்களையும் அவ்வாறு நுழைய ஊக்குவிப்பவர்களையும் மட்டும் பாதுகாக்கும் வகையில் சென்னை மாகாண காங்கிரஸ் முதல்வர் ராஜாஜி 11 ஜூலை 1939 அன்று The Madras Temple Entry Authorization and Indemnity Act என்னும் அவசரச் சட்டத்தை இயற்றினார்.
1939 இல் மேம்போக்கான சட்டத்தை இயற்றிய ராஜாஜியின் அரசியல் சூழ்ச்சியை அறிந்து “கோவிலுக்குள் அனைவரும் செல்லலாம் என்றொரு பொது சட்டத்தை இயற்றாமல் கோவிலுக்குள் நுழைய நினைப்பவர்களை மட்டும் பாதுகாக்க ஓர் சட்டம் இயற்றுவது சமூக அநீதி ஆகும்” என்று பெரியார் கண்டனம் தெரிவித்தார். இறுதியாக 1947 இல் சென்னை மாகாண காங்கிரஸ் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி, அனைத்து சாதியினரும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் The Madras Temple Entry Authorization Act என்னும் சட்டத்தை இயற்றினார்.
திராவிட நாடு கோரிக்கை
1937 இல் பெரியாரின் நீதிக்கட்சி இந்தித் திணிப்பு எதிர்ப்பு தொடர்பாக “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழக்கமிட்டது. அதே நேரத்தில், சென்னை மாகாணத்தில் உள்ள மொழிகளின் பன்முகத்தன்மை காரணமாக, தமிழ் மொழி அல்லாதோர் நிலையையும் பரிசீலனையில் கொண்ட பெரியார், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் பேசும் பகுதிகளை ஒன்றிணைத்து, "திராவிட நாடு திராவிடருக்கே" என்று முழங்கத் தொடங்கினார். சுதந்திரத்திற்குப் பிறகு வடமாநில ஆதிக்க பார்ப்பன - பனியா உயர்சாதிக் கும்பல் தென்னாட்டைச் சுரண்டிவிடும் என்ற கவலையில் இந்தக் கோரிக்கை எழுந்தது.
29 டிசம்பர் 1938 அன்று, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் உட்பட பலரின் கோரிக்கையை ஏற்று, நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை பெரியார் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், திராவிட நாடு கோரிக்கை அதிவேகமாக பரவியது. இதன் பின்னணியில், 03 டிசம்பர் 1939 அன்று பெரியாரின் குடியரசு இதழில் “திராவிட நாடு” வரைபடம் வெளியிடப்பட்டது. 04 ஆகஸ்ட் 1940 அன்று திருவாரூரில் பெரியார் தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “சமூக விடுதலையை அடைய வேண்டுமானால் திராவிடர்களை உள்ளடக்கிய தனிநாடு பிரிக்கப்பட வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் ஏகாதிபத்தியத்தை விட பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொடுமையானது என்றும் பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து விடுபட தனிநாடு மூலம் விடுதலை பெறுவதே உண்மையான சுதந்திரம் என்றும் பெரியார் நம்பினார். அதே சமயம் இங்கிலாந்து நாட்டில் அறிவுஜீவிகளைக் கொண்டு திறம்பட நிர்வாகத்தைக் கட்டிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, இந்தியாவில் மட்டும் பார்ப்பனர்களுடன் சேர்ந்து சுரண்டலில் ஈடுபடுவதையும் பெரியார் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
முகமது அலி ஜின்னாவின் முஸ்லீம் லீக் இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் நாடு வேண்டும் என்ற சித்தாந்த கோரிக்கையானது, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் இந்தியாவில் இருந்து பிரிந்து திராவிட நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு உத்வேகம் அளித்தது. 1940 இல் பெரியார், அம்பேத்கர், ஜின்னா ஆகியோர் மும்பையில் சந்தித்து, "பாகிஸ்தான், திராவிடஸ்தான், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், முஸ்லீம்கள் மற்றும் பார்ப்பனரல்லாதோர் இணைந்து செயல்படுவது, ஜின்னாவும் அம்பேத்கரும் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து திராவிடநாடு கோரிக்கையை ஆதரிப்பது" போன்ற பல்வேறு செய்திகள் விவாதிக்கப்பட்டன. ஆனால், இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயரின் நிலைப்பாட்டை முகமது அலி ஜின்னா எதிர்த்ததும், பெரியார் அதை ஆதரித்ததும், பின்னர் தனிநாடு கோரிக்கை குறித்த இருதரப்பு பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் மொழி பேசும் மக்களை உள்ளடக்கி திராவிட நாடு கோரிக்கையை எழுப்பிய பெரியாருக்கு ஆதரவாக “அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு” என்றார் அண்ணா. தி.மு.க என்னும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை தோற்றுவித்த பின்னரும் திராவிட நாடு கோரிக்கைக்காக அண்ணா தீவிர பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், “மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு முன்பு நாமும் திராவிட நாடு பற்றிப் பேசினோம். இப்போது தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாகியுள்ளன. எனவே, நமது நோக்கம் தனித் தமிழ்நாடு தானே தவிர, திராவிட நாடு அல்ல” என்றார் பெரியார்.
1962 இல் நடந்த இந்திய-சீனா போருக்குப் பிறகு, பிரதமர் நேரு 1963 இல் பிரிவினைக் கோருவதை சட்டவிரோதமாக்கும் பிரிவினைவாத தடுப்பு சட்டத்தை கொண்டு வந்தார். இதையெடுத்து, பிரிவினைவாதக் கட்சிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்ததுடன், தனி நாட்டிற்கு குரல் கொடுக்கும் பேச்சாளர்களை கைது செய்தது. இதனைக் கணக்கில் கொண்ட தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணா, “நூலால் மட்டுமே நெய்தல் முடியும்” என்பது போல ஒன்றிய அரசு தன்னை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்த முயல்வதை உணர்ந்து தி.மு.கவின் “திராவிட நாடு” கோரிக்கையை ஒத்தி வைத்தார். திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டாலும் அதற்கான காரணங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக அண்ணா நாடாளுமன்றத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது. “திராவிட நாடு” அல்லது “தனி தமிழ்நாடு” என்ற கோரிக்கை, தி.மு.க தலைவர் கலைஞரால் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” கோரிக்கையாக தற்காலத்தில் பரிணமித்துள்ளது.
நீதிக்கட்சியின் பெயர் மாற்றம்
"பணக்காரர்களின் கூட்டமைப்பு" என்று நீதிக்கட்சி மீது வைக்கப்படும் விமர்சனத்தை களையெடுக்கும் வகையில் 27 ஆகஸ்ட் 1944 அன்று சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை "திராவிடர் கழகம்" என்று மாற்றும் தீர்மானத்தை நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணா முன்மொழிந்தார். அனைவராலும் வரவேற்கப்பட்ட பெயர் மாற்றத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் நீதிக்கட்சித் தலைவர்கள் பிரிட்டிஷ் அரசு வழங்கிய பதவிகளையும் பட்டங்களையும் துறக்க வேண்டும் என்ற தீர்மானமும், பிரிட்டிஷ் அரசின் கீழ் திராவிட நாடு தனி நாடாக பிரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 1944 முதல் திராவிடர் கழகம் ஒரு சமூக அமைப்பாக மாறி தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்தி சமூக சீர்திருத்தங்களில் முழுதாக ஈடுபட தொடங்கியது. 04 ஏப்ரல் 1946 அன்று “கருப்பு செவ்வகத்தின் நடுவில் சிவப்பு வட்டத்துடன்” கூடிய திராவிடர் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு கட்டத்தில், வெறும் 3% பார்ப்பனர்களுக்காக 97% மக்களை பார்ப்பனரல்லாதோர் என அழைப்பதற்குப் பதிலாக, ஆரியர்களை (பார்ப்பனர்களை) அந்நியப்படுத்த "திராவிடர்" என்ற குறிப்புச் சொல்லால் அழைக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கருத்தை முன்வைத்து, தந்தை பெரியார் பிரச்சாரம் செய்தார்.
சுதந்திர நாள் துக்க நாள்
முகமது அலி ஜின்னாவின் போராட்டத்தைத் தொடர்ந்து, ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தானுக்கு 14 ஆகஸ்ட் 1947 அன்று பிரிட்டிஷ் அரசு சுதந்திரம் வழங்கியது. அதே சமயம் இந்தியாவில் நிலவி வந்த சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்காமல் 1947 ஆகஸ்ட் 15 அன்று பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியது. இதையொட்டி, பார்ப்பனர்களிடம் இருந்து சமூக விடுதலை பெறாமல், பிரிட்டிஷ் அரசிடம் இருந்து அரசியல் விடுதலை பெறுவதால், சாமானிய மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது என்று பெரியார் கூறினார். சமூக விடுதலைக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய “திராவிட நாடு” கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இந்தியாவுக்கு, பிரிட்டிஷ் அரசு வழங்கிய சுதந்திர நாளை துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்று பெரியார் வெளியிட்ட அறிக்கை திராவிடர் கழகத்திற்குள் புகைச்சலை கிளப்பியது.
பெரியாரின் அறிக்கை குறித்து அண்ணாவும் ஏனைய தலைவர்களும் வேதனை அடைந்தனர். தலைவர்களுடன் கலந்தாலோசித்த அண்ணா முடிவில் “சுதந்திர நாள் துக்க நாள் அல்ல, இன்ப நாள்” என்று அறிக்கை விடுத்தார். கழகத்திற்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அறிக்கை, பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதைப் பகிரங்கப்படுத்தியது.
அடுத்த வாரிசு
கருத்து வேறுபாடுகள் உருவான சூழலில் அண்ணா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியாரின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். அதற்கு “என்னைக் கழகத்தை விட்டு நீக்கினாலும் என் கருத்துக்களை தயங்காமல் கூறுவேன்” என்று அண்ணா கூறினார். பெரியாரும் அண்ணாவும் பிரிந்துவிட்டார்கள் என்றும் இருவரும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பில்லை என்றும் பலர் கருதிய போது ஈரோட்டில் ஒரு அதிசயம் நடைபெற்றது.
ஈரோட்டில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் பெரியாரும் அண்ணாவும் கலந்து கொண்டனர். மாநாட்டுத் தலைவரான அண்ணாவை அலங்கார வண்டியில் அமரச் செய்து நடந்தே வந்தார் பெரியார். மாநாட்டில் “பெட்டிச்சாவியை நானே வைத்துக் கொண்டு எத்தனைக் காலம் அலைந்து திரிவது? அதனால் சாவியை அண்ணாவிடம் கொடுக்க முடிவு செய்துள்ளேன் ” என்று பெரியார் பேசினார். மாநாட்டில் எழுந்த கைதட்டல் அடங்க வெகுநேரம் பிடித்தது. பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கியதாக கழகத் தொண்டர்கள் எண்ணினார்கள்.
14 மே 1949 அன்று திருவண்ணாமலை வந்திருந்த கவர்னர் ஜெனரல் ராஜாஜியைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் தனியாக பேசினார் பெரியார். கொள்கையில் இருவரும் இரு துருவங்கள் என்றாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இருவரும் நீண்ட நேரம் தனியாக சந்தித்துப் பேசியது திராவிடக் கழகத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நேரத்தில் கோவையில் “முத்தமிழ் மாநாடு” நடைபெற்றது. இதில் பெரியாரும் அண்ணாவும் கலந்து கொண்டனர். “திருவண்ணாமலையில் ராஜாஜியுடன் பெரியார் என்ன பேசினார் என்பதை அறிய நாடு ஆவலுடன் உள்ளது. அதை இந்த மாநாட்டில் பெரியார் விளக்க வேண்டும்'' என்று அண்ணா பேசினார். "இது முழுக்க முழுக்க என் சொந்த விஷயம், மாநாட்டில் வெளியிட முடியாது” என்று பெரியார் பதிலளித்தார்.
சில நாட்களுக்கு பிறகு, “தனக்கென ஒரு வாரிசை ஏற்படுத்திக் கொள்வது குறித்து ராஜாஜியிடம் பேசினேன்” என்று பெரியார் ஒரு அறிக்கையை வெளியிட்டார். “எனக்கும் எனது சொத்துக்கும் சட்டப்பூர்வ வாரிசை நிறுவுவது அவசியம் மற்றும் அவசரமானது. ஆகையால் நான் ஐந்தாறு ஆண்டுகளாகப் பழகியதன் மூலம் எனது முழு நம்பிக்கையை பெற்றவரும், எனது நலனுக்காகவும், இயக்க நலனுக்காகவும் உண்மையாகவே அர்ப்பணிப்புடன் செயல்படும் மணியம்மையை வாரிசுதாரராக நியமித்து ஒரு அறக்கட்டளை பத்திரத்தை எழுதி வைக்க ஏற்பாடு செய்துள்ளேன்” என்று பெரியார் இன்னொரு அறிக்கையை வெளியிட்டார். அண்ணாவிடம் சாவியை ஒப்படைக்கப் போவதாக அறிவித்த பெரியார், தற்போது திடீரென வேறொருவரை வாரிசாகப் நியமிக்கப் போவதாக அறிவித்தது திராவிட கழகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பெரியாரும் மணியம்மையும்
சுயமரியாதை கொள்கையில் உறுதியாக இருந்த நீதிக்கட்சியைச் சேர்ந்த கனகசபையின் மறைவுக்குப் பிறகு, அவரது மகள் மணியம்மை 1943 இல் திராவிடர் கழகத்தில் இணைந்தார். சுயமரியாதை கொள்கையில் தீவிரமாக இருந்த தோழர் மணியம்மை, பெரியாரின் நம்பிக்கைக்குரிய சீடராகவும், பெரியாரின் முதுமைக் காலத்தில் அவரைப் பராமரிப்பவராகவும் இருந்தார்.
திராவிடர் கழகத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவிய காலத்தில் “கழக சொத்துக்களை பாதுகாக்கவும், அறக்கட்டளை மூலம் இயக்க பணிகள் மற்றும் சமூக நலப் பணிகளை மேற்கொள்ளவும், பெண்களை அதிகளவு இயக்கத்தில் ஈடுபடுத்தவும்” மணியம்மையை தனது சட்டபூர்வ வாரிசாக்க 09 ஜூலை 1949 அன்று பெரியார் மணியம்மையை மணந்தார். சுருக்கமாக, பெரியாரின் வயது முதிர்ந்த திருமணம் என்பது தனது செல்வத்தை தனது இயக்கத்தின் சமூக நலனுக்காக பொருத்தமான பெண் வாரிசுக்கு மாற்றுவதைத் தவிர வேறில்லை.
1973 இல் பெரியாரின் மறைவுக்கு பிறகு பெரியாரின் சமூக நீதிக் கருத்துக்களை வீதி வீதியாக பிரச்சாரம் செய்து, திராவிடர் கழகத்தை தோழர் மணியம்மை திறம்பட நடத்தினார். 16 மார்ச் 1978 அன்று தோழர் மணியம்மை மறைந்த பிறகு இன்று வரை திராவிடர் கழகத்தை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழிநடத்தி வருகிறார்.
திராவிட முன்னேற்ற கழகம்
சுதந்திர நாளை துக்க நாளாக அனுசரித்த பெரியார், தேர்தல் அரசியலை ஒதுக்கி வைத்த பெரியார், பெரியாரின் அரசியல் வாரிசாக அண்ணா அல்லது ஈ.வி.கே.சம்பத் கருதப்பட்ட சூழலில் “பெரியார்-மணியம்மை திருமணம்” போன்று திராவிடர் கழகத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அண்ணா உட்பட பல தோழர்கள் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினர். பெரியாரை விட்டு கண்ணீருடன் பிரிவதாக தோழர்கள் கூறிய போது, ”போகட்டும் கண்ணீர்த்துளி பசங்க!" என்றார் பெரியார்.
அண்ணா தலைமையில் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன், கலைஞர், மதுரை முத்து, சத்தியவாணி முத்து, டி.கே.சீனிவாசன், கே.அன்பழகன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, கே.கே.நீலமேகம் மற்றும் பலர் 17 செப்டம்பர் 1949 அன்று சென்னை இராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற அரசியல் கட்சியை தொடங்கினர். பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து விலகியிருந்தாலும், பெரியாரின் “சமூக நீதி” கொள்கைகளை வலியுறுத்தி, பெரியாரின் பிறந்தநாளில் தி.மு.க.வைத் தொடங்கினார் அண்ணா.
17 செப்டம்பர் 1949 அன்று மாலை ராபின்சன் பூங்காவில் நடைபெற்ற தி.மு.க.வின் தொடக்க விழாப் பொதுக்கூட்டத்தில் “பெரியாருடன் எனக்கு மாறுபட்ட கருத்து இருப்பதாக கூறப்படுகிறது. சில விஷயங்களில் நான் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தாலும், நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. முடிந்த வரை ஒத்துழைத்து வந்திருக்கிறேன். முடியாத போது மிகவும் கண்ணியமாக ஒதுங்கி இருந்திருக்கிறேன். பெரியார் காலம் வரை கழகம் அவர் வழிப்படியே நடக்கட்டும் பிற்காலத்தில் பார்த்து கொள்வோம் என்ற போக்கை கொண்டிருந்தவன்” என்று தனது உரையின் ஒரு பகுதியாக அண்ணா பேசியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அண்ணா “கட்சிக்கு பெயர் வைத்த விதம், தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்திய விதம் மற்றும் அண்ணா முதலமைச்சரான பிறகு பெரியார் - அண்ணா சந்திப்பு” போன்ற அத்தியாயங்கள் வாசகர்களுக்கு நெகிழ்ச்சியைத் தரக்கூடியது என்றால் மிகையாகாது.சுயமரியாதைத் திருமணம், கைம்பெண் மறுமணம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது, கோவிலில் தமிழ் ஆகமங்கள் ஒலிப்பது, கோவில் சொத்துக்களை பராம்பரிக்க இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை, சமச்சீர் பாடத்திட்டம், அறிவியல் வளர்ச்சிக்கு முக்கியத்துவம், நில உச்சவரம்பு சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை, மருத்துவ காப்பீட்டு திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலவாரியம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசியலின் மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைத்தன. சுருக்கமாக, திராவிட இயக்க அரசியலின் சமூக நலத் திட்டங்கள் ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கும் மிகச் சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இட ஒதுக்கீட்டின் வரலாறு
19 ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் இருந்தே பார்ப்பனரல்லாதோர் சங்கமும் முஸ்லீம் லீக் அமைப்பும் வகுப்புவாரி உரிமைகளை கோரி வந்தனர். 1912 இல் பிரிட்டிஷ் இந்தியா அரசாங்கம் மாகாண சேவைகளில் பல்வேறு சமூகங்களின் பிரதிநிதித்துவம் பற்றி விசாரிக்க ராயல் ஆணையத்தை (Royal Commission) நியமித்தது. பார்ப்பனரல்லாத இந்துக்களின் அந்தஸ்தை உயர்த்த குறிப்பிடத்தக்க அளவில் பாடுபட்ட நீதிக்கட்சி, அரசு ஊழியர்கள் தேர்வு மற்றும் கல்வி சேர்க்கையில் இட ஒதுக்கீடு அவசியம் என்றும் போராடியது. 1916 இல் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்வி, தொழில், அரசுப் பணிகளில் பங்கேற்கவும் பார்ப்பனரல்லாதோரின் நலன்களை பாதுகாக்கவும் "பார்ப்பனரல்லாதோர் கொள்கை" (Non-Brahmin Manifesto) அறிக்கை வெளியிடப்பட்டது.
நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, கல்லூரி மாணவர் சேர்க்கை குழுவை (College Students Admission Committee) உருவாக்கி, உயர்கல்வியில் பிராமண ஆதிக்கத்தை குறைக்க முயற்சித்தது. எடுத்துக்காட்டாக, 1921 மற்றும் 1922 இடையே, மருத்துவக் கல்லூரிகளில் பிராமண மாணவர்களின் எண்ணிக்கை 58 இல் இருந்து 33 ஆகக் குறைந்தது; அதே சமயம், பார்ப்பனரல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 15 இல் இருந்து 36 ஆக இரு மடங்காக அதிகரித்தது. இந்த மாற்றம், நீதிக்கட்சி குழுவின் முயற்சியின் நேரடி விளைவாகும்.
மேலும், 1921 இல் பார்ப்பனரல்லாதோருக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்த, அரசாங்க வேலைவாய்ப்பு மற்றும் கல்வி இட ஒதுக்கீடுக்காக சமூகங்களை வகைப்படுத்தி, நீதிக்கட்சி அரசு இந்தியாவில் முதல் வகுப்புவாத அரசாங்க ஆணையை (Communal G.O) அமல்படுத்தியது. ஆரம்ப புள்ளி விவரங்கள் சமமற்ற பிரதிநிதித்துவத்தை காட்டியதால், 1922 இல் இரண்டாவது வகுப்புவாத அரசாங்க ஆணை உடன் திருத்தத்திற்கு வழிவகுத்தது. இது பார்ப்பனரல்லாதவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு சமூகங்களுக்கு அனைத்து வேலை தரங்களையும் (Grades) திறக்கும் ஒரு ரோஸ்டர் முறையை (Roster System) அறிமுகப்படுத்தியது. இருப்பினும், பார்ப்பனர்களின் லாபி 1927 வரை ஆணைகளை முழுமையாக செயல்படுத்துவதை தாமதப்படுத்தியது.
இறுதியில், பெரியாரின் தொடர் முயற்சிகள் காரணமாக 1928 இல் கட்சி சாராத சென்னை மாகாண முதல்வர் பி.சுப்பராயனால் மூன்றாவது வகுப்புவாத அரசாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, பார்ப்பனரல்லாதவர்களுக்கு 44%, பார்ப்பனர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தலா 16% மற்றும் பட்டியல் சாதியினர் 8% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. சமூக அரசியல் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி இந்த ஏற்பாடு சுதந்திரத்திற்கு பிறகும் நடைமுறையில் இருந்தது. இது பார்ப்பனரல்லாதோரின் முன்னேற்றத்திற்கு உதவியது.
இதற்கிடையே, 1950 இல் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்காத சி.ஆர்.ஸ்ரீநிவாஸன் என்ற பார்ப்பன மாணவரும், மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்காத போதும் சம்பகம் துரைராஜன் என்ற பார்ப்பன மாணவியும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (1928) ஆணை அமலில் இருந்தால் தங்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காது என்று தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இரு வழக்குகளும் இணைக்கப்பட்டு "சென்னை மாநில அரசு எதிர் சம்பகம் துரைசாமி வழக்கு" என்ற பெயரில் விசாரிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உறுப்பினரான பார்ப்பனர் ஆலடி கிருஷ்ணசுவாமி ஐயர், சம்பகம் துரைராஜன் சார்பில் ஆஜராகி வாதாடினார். இது அதிகார அரசியலில் பார்ப்பனர்களின் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் "கல்வித்துறையானது, மாணவர்கள் சேர்க்கையில் பாகுபாடு கூடாது அதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (1928) செல்லாது" என்று தீர்ப்பளித்தது. இதன் மேல்முறையீட்டு வழக்கில் சமத்துவ உரிமைக்கு எதிராக இட ஒதுக்கீடுகளை வழங்குவது இந்திய அரசியலமைப்பின் 16(2) பிரிவின்படி, உரிமையை மீறுவதாகும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுதந்திர இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமைகள் பறிபோனதாக குற்றம் சாட்டி தமிழ்நாட்டில் பெரியார் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் காமராஜர் பிரதமர் நேருவிடம் தமிழ்நாட்டில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை விளக்கி நியாமான நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதையொட்டி, பிரதமர் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1951 இல் இந்திய அரசியலமைப்பின் 15(4) பிரிவின்படி, “சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்ய மாநில அரசாங்கத்தை அனுமதிக்கிறது” என்ற முதல் சட்ட திருத்தத்தை அமல்படுத்தியது. அதன்படி, வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
# இதையொட்டி, பிரிவு 15, உட்பிரிவு 4 சட்டத்தின் மூலம் SC/ST பிரிவுக்கு 15%, BC பிரிவுக்கு 25% மற்றும் OC பிரிவுக்கு 60% என்று இட ஒதுக்கீடு சீரமைக்கப்பட்டது.
# 1951 இல் முதல்வர் குமாரசாமி ராஜா SC/ST பிரிவுக்கு 16% மற்றும் BC பிரிவுக்கு 25% என இட ஒதுக்கீட்டை சீரமைத்தார்.
# 1969 இல் முதல்வர் கலைஞர் SC/ST பிரிவுக்கு 18% மற்றும் BC பிரிவுக்கு 31% என இட ஒதுக்கீட்டை உயர்த்தினார்.
# 1980 இல் முதல்வர் எம்.ஜி.ஆர் BC பிரிவுக்கு 31% இல் இருந்து 50% என இட ஒதுக்கீட்டை ஏற்றினார்.
# 1990 இல் முதல்வர் கலைஞர் ST பிரிவுக்கு 1%, SC பிரிவுக்கு 18%, BC பிரிவுக்கு 30% மற்றும் MBC பிரிவுக்கு 20% என இட ஒதுக்கீட்டை திருத்தினார்.
சம்பகம் துரைசாமி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை மீட்டெடுக்கவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் பெரியார் மேற்கொண்ட அதிரடி போராட்டத்தால் விளைந்த முதல் சட்ட திருத்தம் தான் மண்டல் ஆணையத்தை நியமிக்க உதவியது என்று சொன்னால் மிகையாகாது. மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் கலைஞர். 07 ஆகஸ்ட் 1990 அன்று வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு சமூகத்தில் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு நிறுவன வேலைவாய்ப்பில் 27% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. அந்நேரத்தில், தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு பகிர்வு 69% நிலையை அடைந்தது.
வி.பி.சிங் அரசு வழங்கிய 27% இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் 1992 இல் உச்சநீதிமன்றத்தில் இந்திரா சஹானி தொடுத்த வழக்கில் மாநிலங்களில் இட ஒதுக்கீடு 50% வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது. அந்நேரத்தில், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்று தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தனர். இதையொட்டி, 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் நோக்கில், 1993 இல் அ.தி.மு.க முதல்வர் ஜெயலலிதா "தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மற்றும் மாநிலத்தின் கீழ் பணி நியமனங்கள் அல்லது பதவிகள்)" சட்டத்தை இயற்றி 1994 இல் குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்றார். இச்சட்டமானது இந்திய அரசியலமைப்பின் 31(B) பிரிவின்படி ஒன்பதாவது அட்டவணையில் (குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள், ஒழுங்குமுறைகள், விதிகள் எதுவும் செல்லாததாக கருதப்படக்கூடாது) இணைக்கப்பட்டு எதிர்கால நீதிமன்றங்களின் தலையீட்டிலிருந்து காப்பாற்ற வழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தமிழ்நாட்டு முதல்வர்களின் முயற்சியால் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை 69% ஆக உயர்த்தி, அதற்கான உரிய சட்டங்களை இயற்றி, சட்ட மோதல்களில் இருந்து இட ஒதுக்கீட்டு விதிகளைப் பாதுகாத்து உள்ளனர். மொத்தத்தில், பெரியார் பற்ற வைத்த நெருப்பு இன்று வரை இட ஒதுக்கீடு முறையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம்
“பிற்படுத்தப்பட்ட குடிமக்களை தாழ்ந்த பிறவிகளாகவும், பார்ப்பனர்களை உயர்ந்த பிறவிகளாகவும் சித்தரிக்க காரணமான கடவுள்களை ஒழிக்க வேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தி ஆரியக் கடவுள் சிலைகளை உடைக்க முடிவு செய்து, எந்தக் கடவுள் சிலையை முதலாவதாக உடைப்பது என்று எண்ணிய போது, எந்த செயலையும் மேற்கொள்வதற்கு முன் முதல் கடவுள் பிள்ளையாரை வணங்க வேண்டும் என்று கூறுகிறார்களே! எனவே பிள்ளையார் சிலையை முதலாவதாக உடைக்க முடிவு செய்யப்பட்டது” என்றார் பெரியார். 27 மே 1953 அன்று புத்தர் ஜெயந்தி நாளன்று தனது சொந்த காசில் வாங்கப்பட்ட பிள்ளையார் சிலைகளை உடைக்கும் போராட்டத்தை பெரியார் நடத்தினார். இதற்கு மாறாக, "பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம் பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்" என்பதே தி.மு.கவின் நிலைப்பாடு என்றார் அண்ணா.
அரசியலமைப்பு சட்ட நகல் எரிப்புப் போராட்டம்
26 நவம்பர் 1957 அன்று சாதியையும் இந்து மதத்தையும் பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். இதற்கு எதிர்வினையாக “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பிடிக்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்” என்று நேரு பேசினார். காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பெரியார் எரிப்பதைத் தடுக்க “தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1957” (Prevention of Insults to National Honour Act, 1957) என்றொரு சட்டத்தை இயற்றியது. 25 நவம்பர் 1957 அன்று சட்ட எரிப்பு நாளுக்கு முன் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மற்றொரு வழக்கில் பெரியார் கைது செய்யப்பட்டார்.
புதிய சட்டம் மற்றும் பெரியார் கைதை கண்டு துவண்டுவிடாமல், இந்தியாவின் அரசியல் சாசன தினமான 26 நவம்பர் 1957 அன்று பெரியாரின் தோழர்கள் சுமார் 10,000 பேர் சாதியையும் இந்து மதத்தையும் பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பகுதியை தீ வைத்து எரித்து அதன் சாம்பலை ஒன்றிய அமைச்சர்களுக்கும் மாநில அமைச்சர்களுக்கும் அனுப்பி வைத்தனர். போராட்டத்தைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை வெவ்வேறு கால அளவில் சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியலமைப்பு சட்ட நகல் எரிப்புப் போராட்டம் என்பது பெரியாரின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான போராட்ட நடவடிக்கையாகும்.
சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி
ஜனவரி 1971 அன்று கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியின் போது சேலத்தில் "மூடநம்பிக்கை ஒழிப்பு" பேரணியை பெரியார் நடத்தினார். பெரியாரின் பேரணிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட தமிழ்நாடு அரசிடம் ஜனசங்கம் அனுமதி கேட்டது, அதற்கு ஜனநாயகத்தின் அடிப்படையில் ஜனசங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
இரண்டாம் நாள் பேரணியில் “மூடநம்பிக்கை” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடவுள் படங்கள் வாகனங்களில் கொண்டு வரப்பட்ட போது சேலம் தீயணைப்பு நிலையம் அருகே கருப்புக்கொடி காட்டிய ஜனசங்கத்தினர் பெரியார் மீது செருப்பை வீசினர். ஆனால் அப்போது பெரியார் வாகனம் சற்றே முன்னோக்கிச் சென்றதால், அந்த கடவுள் படங்கள் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் அருகே செருப்பு விழுந்துவிட்டது. இதையொட்டி, பேரணியில் கொதிப்படைந்த தோழர்கள் கீழே விழுந்த அதே செருப்பை எடுத்து கடவுள் படத்தை செருப்பால் அடித்தனர். செருப்பை எடுத்து வீசியது முதல்வினை என்றால் செருப்பை எடுத்து அடித்தது எதிர்வினை. இது திட்டமிடப்பட்ட நிகழ்வு அல்ல. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பேரணியின் நோக்கத்தை சிதைத்து, ஊடகங்களின் உதவியுடன் வதந்திகளை பரப்பி பல்வேறு வழக்குகளை இந்துத்துவாவாதிகள் தொடர்ந்தனர். ஆனால் அவை அனைத்தும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்
மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் உருவான தமிழ் மொழி, காலத்திற்கு ஏற்ப மாறாத மொழியாக விளங்கினால், சமூக வளர்ச்சிக்கும் அறிவியல் முன்னேற்றத்திற்கும் பயனில்லை என்ற பொருளில் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார். கற்றலின் எளிமை மட்டுமே எந்த மொழியின் பெருமையையும் எழுத்தின் மேன்மையையும் உணர்த்தும் என்றும், ஆங்கில மொழியில் உள்ள 26 எழுத்துக்களை வைத்து ஆங்கிலேயர்கள் உலகையே ஆளும் சூழலில் நம் தமிழ் மொழிக்கு எழுத்துக்கள் அதிகம் தேவையில்லை என்றும் உயிரெழுத்து 10, உயிர் மெய்யெழுத்து 18, ஒற்றெழுத்து 19, எழுத்துக்களின் குறிப்புகள் 7, குற்றெழுத்து உள்பட ஒரு 10 எழுத்து ஆக மொத்தமுள்ள 64 எழுத்துகளுக்கு ஏற்ப தமிழ் எழுத்துக்களை சீர்திருத்த வேண்டியது அவசியம் என்றும் பெரியார் வலியுறுத்தினார்.
1930 களில் பெரியார் வலியுறுத்திய எழுத்துச் சீர்திருத்தத்தில், “அவ், அய், ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ” ஆகிய 15 எழுத்துகள் இடம் பெற்றன. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்களை திராவிட இயக்க இதழ்கள் செயல்படுத்தத் தொடங்கின. 1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், “எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்துவோம்” என்று தி.மு.க அறிவித்தது. ஆனால் 1977 தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்ற பிறகு “அவ், அய்” ஆகிய இரு எழுத்துகளைத் தவிர பெரியாரின் 13 எழுத்து சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டார்.
பெரியார் நடத்திய இதழ்கள்
"அனைவருக்கும் சுயமரியாதை, எவ்விடத்திலும் சமத்துவம், ஒவ்வொரு வகுப்பாரும் முன்னேற்றம் பெறுதல்" போன்ற சமூகக் கருத்துக்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க இதழ்கள் சிறந்த வழி என்பதை அறிந்த ஈ.வே.ரா 2 மே 1925 அன்று "குடியரசு" இதழை தொடங்கி தனது கருத்துக்களை பரப்புரை செய்தார். பார்ப்பனர்களிடம் தனிப்பட்ட குரோதம் இல்லை என்றும் ஒரு கூட்டத்தார் எப்போதும் அடிமையாக இருக்க வேண்டுமென்று எண்ணும் பார்ப்பனர் உள்ளிட்ட ஆதிக்கவாதிகளின் செயல்பாடுகளை தட்டி கேட்பதே குடியரசு இதழின் நோக்கம் என்றும் ஈ.வே.ரா தெளிவுபடுத்தினார்.
வெவ்வேறு காலகட்டங்களில் புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை, The Modern Rationalist, Justice, Revolt போன்ற இதழ்களை ஈ.வே.ரா நடத்தி வந்தார். பெரியாரின் வழியில் பயணித்த திராவிட இயக்க போர்வீரர்கள் “திராவிட நாடு, முரசொலி, திராவிடன், சமநீதி, குமரன், மாதர் மறுமணம், அறப்போர், மன்றம், தென்னகம், தென்றல், முல்லை” போன்ற பல இதழ்களை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
மதங்கள் மீதான விமர்சனம்
1936 இல் கொச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் “மக்களை ஒன்றுபடவிடாமல் மதம் தடுக்கிறது. எனவே அனைத்து மதங்களும் அவற்றின் கோட்பாடுகளும் இந்தியாவில் இருந்து விரட்டப்பட வேண்டும். நான் எந்த மதத்திற்கும் விரோதி, அதனால் எந்த மதத்தையும் வேண்டாம் எனக் கூறுவதே சரியாகும்” என்று பெரியார் பேசினார்.
கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஆகியவற்றுக்கு எதிராக முழங்கி அறிவை குருவாக போற்றிய புத்தரின் கருத்துக்களை மதமாக அல்லாமல் கொள்கை என்றளவில் பெரியார் ஆதரித்தார். அதே வேளையில் புத்தரின் கொள்கைகளை பெயரளவில் மட்டுமே பௌத்தர்கள் பின்பற்றுவதாக விமர்சித்தார். பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றிய விமர்சனங்களை அந்தந்த மத அமைப்புகள் நடத்திய கூட்டங்களிலே பெரியார் முன் வைத்தார்.
“பார்ப்பனர்களின் நலனுக்காக மட்டும் வேதம் படைத்த கடவுள் அனைவருக்குமான கடவுளாக இருக்க முடியாது. முதலில் கடவுள் என்பதே புரட்டு. வேதங்களை கடவுளின் பெயரால் எழுதி, அதிலிருந்து சாதிகளை உருவாக்கி, மக்களை பல வகுப்பாகப் பிரித்துள்ள இந்து மதம் வேண்டாம்” என்று பெரியார் பட்டித்தொட்டி எங்கும் பிரச்சாரம் செய்தார். இந்தியாவில் இந்து மதம் பெரும்பான்மையினரின் மதமாக இருந்ததால் பெரியார் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராகக் கடுமையாகப் பேசினார்.
“திராவிட பண்பாட்டை சிதைத்து பார்ப்பனர்கள் ஆரிய பண்பாட்டை திட்டமிட்டு புகுத்தினர். அறுவடைத் திருநாள் (பொங்கல்) தவிர இன்று கொண்டாடப்படும் மற்ற பண்டிகைகள் நாம் அடிமைப்படுத்தப்படும் காட்டுமிராண்டித்தனத்திற்கு மட்டுமே வழிவகுக்கிறது. அடிமைச் சங்கிலியை உடைக்க வேண்டும் என்றால் பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி, சூத்திரர்களுக்கு ஒரு நீதி என சாதி வேறுபாட்டை வளர்க்கும் ஆரியக் பண்பாட்டைப் பின்பற்றக் கூடாது. ஆரிய மாயையில் இருந்து வெளிவர முயலாவிட்டால் நாம் காட்டுமிராண்டிகள்” என்றார் பெரியார்.
சமூக நீதிக் கொள்கைகள்
பெரியார் கூறியது போல் “சமூக நீதி மூலம் சமத்துவம் பெற சுயமரியாதையும் பகுத்தறிவும் தேவை”. மேலும் பகுத்தறிவுடன் பகுப்பாய்வு (Analyze) செய்யத் தெரிந்தால் மூடநம்பிக்கை, தீண்டாமை, பார்ப்பனியம் உள்ளிட்டவை தனிமனிதனின் சுயமரியாதைக்கு இழுக்கு என்கிற பொறி தட்டும். ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? என்ற கேள்வி பகுத்தறிவுக்கு அடிப்படை, பகுத்தறிவு சுயமரியாதைக்கு அடிப்படை.
ஆரம்ப காலத்தில் “சுதந்திரம், பார்ப்பனியம், முதலாளித்துவம்” போன்ற கருத்துக்களை பரப்புவதற்கு “இயல், இசை, நாடகம், சினிமா” ஆகிய கலை ஊடகங்களை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது. அவ்வேளையில் “அண்ணா, கலைஞர், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், புலவர் குழந்தை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், கண்ணதாசன், முரசொலி மாறன், கே.ஆர்.ராமசாமி” போன்ற பல்வேறு கலைஞர்கள் பெரியாரின் “சமூக நீதி” கொள்கைகளை கலை ஊடகங்கள் மூலம் எழுச்சி ஊட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முன்வைத்த "சமூக நீதி" கொள்கைகளை சுருக்கமாகச் சொன்னால்,
*குழந்தை திருமணத்தை தடை செய்ய வேண்டும்.
*கைம்பெண் மறுமணத்தை அங்கீகரிக்க வேண்டும்.
*அலங்காரத்தில் பெண்கள் நாட்டம் செலுத்த கூடாது.
*வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
*அடிமை சின்னமாக விளங்கும் தாலியை தவிர்க்க வேண்டும்.
*விஞ்ஞான ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
*அறிவை வளர்க்கவும் ஒழுக்கத்தை பேணவும் திருக்குறளை பரப்ப வேண்டும்.
*போலி அறிவியலை போதிக்கும் ஜோதிடத்தை ஒழிக்க மக்கள் முன்வர வேண்டும்.
*பார்ப்பனர்களிடம் இருந்து தொற்றிய வரதட்சணை சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டும்.
*கல்விக்கூடங்களில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களை மேம்படுத்த வேண்டும்.
*இந்து மதத்தை நிலைநாட்ட உதவும் புராண, இதிகாச பிரச்சாரங்களை ஒழிக்க வேண்டும்.
*தகுந்த காரணம் இருந்தால் ஆண்களும் பெண்களும் விவாகரத்து கோருவதை எளிதாக்க வேண்டும்.
*விளையாட்டு துறையிலும் கல்வித் துறையிலும் சாதிக்க துடிக்கும் பெண்களை ஊக்குவிக்க வேண்டும்.
*சுயமரியாதை திருமணங்களையும் கலப்பு திருமணங்களையும் சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.
*பார்ப்பனர்களை மையமாக வைத்து கட்டமைக்கப்பட்ட இந்து மதத்தை தகர்த்தெறிய வேண்டும்.
*இந்து மதத்தின் பெயரால் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும்.
*பார்ப்பனர் சடங்கு இல்லாமல் திருமணம், நினைவு நாள், புதுமனை புகுவிழா போன்றவற்றை நடத்த வேண்டும்.
*பெற்றோர் தங்கள் சொத்துக்களில் சரிபாதி ஆணுக்கும் சரிபாதி பெண்ணுக்கும் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும்.
*அனைத்து துறைகளிலும் ஆணாதிக்கத்தை ஒழித்து பெண்களை உள்ளடக்கி சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்.
*சுயமரியாதை உணர்வு கொண்டவர்கள் சாதி, மதம், பூதம், மூடநம்பிக்கை போன்றவற்றை உடைத்தெறிய வேண்டும்.
*ஆரியர்கள் திரிபுபடுத்தி எழுதிய நூல்களை ஒழித்து சமூக நீதி நூல்களை எழுதி சமத்துவத்தை நிலைநாட்ட அறிஞர்கள் முன் வர வேண்டும்.
*கற்பு என்று வரும் போது, பெண்களை அடிமைகளாகக் கருதாமல், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும்.
*புராணத்தை விட, சாஸ்திரத்தை விட, முன்னோர்கள் சொன்ன வெங்காயம் வெளக்கமாத்தை விட அறிவு மேலானது என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
பெரியாரும் காமராஜரும்
1962 இல் இந்தியா - சீனா போரில் சீனாவிடம் இந்தியா தோல்வியடைந்த சூழலில், பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சிக்கு பிறகு, 1963 இல் காங்கிரஸ் கட்சியை புத்துயிர் பெற வைக்கும் நோக்கத்தில் காமராஜர் திட்டத்தை (K-Plan) தமிழ்நாடு காங்கிரஸ் முதல்வர் காமராஜர் முன்மொழிந்தார். கட்சிக்காக களப்பணி செய்து மீண்டும் காங்கிரஸ் கட்சியை கட்டியெழுப்ப மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்வதே காமராஜர் திட்டத்தின் சாரம்சமாகும். இதற்கு, பிரதமர் நேரு ராஜினாமா செய்ய முதலில் விருப்பம் தெரிவித்த போதிலும், காமராஜர் அவரை பிரதமர் பதவியில் தொடரும்படி வற்புறுத்தினார். காமராஜர் திட்டத்தின் மூலம் "காமராஜரின் ராஜினாமா தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும், தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பாகும்" என்று பெரியார் காமராஜரை எச்சரித்தார். ஆனால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து தேசிய அரசியலுக்கு சென்றார் காமராஜர். காமராஜருக்கு பிறகு பக்தவத்சலம் தமிழ்நாடு முதல்வரானார். அவருடைய இந்தி திணிப்பு, அரிசி பஞ்சம் உள்ளிட்ட மோசமான நிர்வாகம் தி.மு.கவின் வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது.
1966 இல் டெல்லியில் இந்துத்துவ அமைப்புகள் நடத்திய வன்முறை போராட்டத்தின் போது பசுவதை தடுப்புச் சட்டத்தை எதிர்த்ததால் காமராஜருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இந்துத்துவா அரசியலுடன் தொடர்புடைய தந்திரங்களை அம்பலப்படுத்தி, பார்ப்பனரல்லாத தலைவருக்கு எதிரான பார்ப்பன வெறுப்புடன் இந்தத் தாக்குதலை பெரியார் தொடர்புபடுத்தி கண்டித்தார்.
1967 இல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழ் நாட்டை பச்சை தமிழர் காமராஜர் தான் ஆள வேண்டும் என்று காமராஜருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் பெரியார். அப்போது ராஜாஜியின் சுதந்திரக் கட்சி, தி.மு.கவுடன் கூட்டணி வைத்தது. ராவணனாகிய காமராஜரை வீழ்த்துவதற்காக குரங்கு அனுமனாகிய தி.மு.கவின் உதவியை நாடிய ராமனுடன் கூட்டணியை ஒப்பிட்டார் ராஜாஜி. காமராஜரை ராவணனுடனும், குரங்கை தி.மு.க.வுடனும் ஒப்பிட்டுப் பேசிய ராஜாஜியை பெரியார் கண்டித்தார். காங்கிரஸ் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தின் மீதான மக்களின் அதிருப்தி, தி.மு.கவின் வெற்றிக்கு வழிவகுத்தது, அத்துடன் தமிழ்நாட்டின் அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தைக் குறித்தது. இதையொட்டி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சரிந்தது மட்டுமின்றி படிப்படியாக தேசிய அளவிலும் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டதன் மூலம் காமராஜரின் திட்டம் தோல்வியாக அமைந்தது, பெரியாரின் எச்சரிக்கை உண்மையாகிப் போனது.
பெரியாரும் அம்பேத்கரும்
தென்னாட்டு அம்பேத்கரான பெரியாருக்கும் வடநாட்டு பெரியாரான அம்பேத்கருக்கும் இடையே ஆழமான நட்பும் புரிதலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. பௌத்த கொள்கையை பற்றி பேசிய பெரியாரும், பௌத்த மதத்தை தழுவிய அம்பேத்கரும் சமூக நீதிக்காக அரும்பாடுபட்டனர்.
1924-1925 காலகட்டத்தில் ஈ.வெ.ரா தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட அம்பேத்கர் 1927 மார்ச் 20 அன்று மகாராஷ்டிர மாநிலம் மகத் நகரில் உள்ள பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் ஆதரவுடன் மகத் போராட்டத்தை நடத்தி வெற்றிக் கண்டார். மேலும் 25 டிசம்பர் 1927 அன்று மகத் போராட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் நூலை அம்பேத்கர் எரித்தது குறிப்பிடத்தக்கது.
1944 இல் நீதிக்கட்சியில் இருந்த ஒரு பிரிவினர், பெரியாரின் அரசியல் முன்னெடுப்புகளால் அதிருப்தி அடைந்து, கட்சிக்குள் கிளர்ச்சி செய்ய திட்டமிட்டு, அம்பேத்கரின் ஆதரவுடன் பெரியாரை வென்று விடலாம் என்ற நம்பிக்கையில், சிறப்பு கூட்டத்திற்கு அழைக்க அம்பேத்கரை சந்தித்தனர். இதையொட்டி, சென்னை கன்னிமாரா ஹோட்டலில் சண்டே அப்சர்வர் (Sunday Observer) இதழின் ஆசிரியர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அம்பேத்கர் கலந்துகொண்டு, “பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க பெரியாரின் கொள்கைத் திட்டங்களும் சமூக நீதிக் கருத்துகளும் தேவை” என்று அழைத்தவர்களின் விருப்பத்திற்கு எதிராக உரை நிகழ்த்தினார். பெரியார் மற்றும் அம்பேத்கர் நட்புக்கு இது ஒரு சான்றாக அமைந்தது.
உயர்சாதி இந்துக்களின் சார்புநிலை இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் தமது அரசியல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்து மதத்தின் சாதி அமைப்பு சீர்குலையும் என்று காந்தி கருதினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை தவிர்த்து பிற சாதி மத மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு வழங்கிய தேர்தல் சலுகைகளை காந்தி ஏற்றுக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்க நுண்ணரசியல். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இரட்டை வாக்குரிமையுடன் கூடிய 71 தனித்தொகுதி அறிவிப்பை ரத்து செய்ய கோரி பூனா ஏர்வாடா சிறையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை காந்தி அறிவித்தார். காந்தியின் உயிரைக் காட்டிலும் மக்களின் அரசியல் அதிகாரம் முக்கியமானது என்று அம்பேத்கர் கருதினார். “காந்தியின் உண்ணாவிரத அரசியலில் தனக்கு நம்பிக்கை இல்லை. மேலும் காந்தி இறந்துவிடுவாரோ எனக் கருதி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இந்த சலுகையை திரும்ப பெறுவது, ஒருவரை காப்பாற்றுவதற்காக கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரை தியாகம் செய்வது போன்றது” என்று 1932 செப்டம்பர் 18 அன்று ரஷ்யாவில் இருந்து அம்பேத்கருக்கு பெரியார் தந்தி அனுப்பினார். எனினும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு காந்தி கடைசியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் மறைந்துவிட்டாரா?
கடைசிக் காலத்தில் மூத்திர சட்டிடன் நடக்க முடியாமல் சிரமப்பட்ட பெரியார், வீட்டில் முடங்கிவிடாமல், சமூக நீதிக் கொள்கைகளுக்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். 8-9 டிசம்பர் 1973 அன்று சென்னையில் நடைபெற்ற “தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு” மாநாட்டில் “சுதந்திர தமிழ்நாடு” கோரிக்கையை முன்வைத்து இதுவே நமது இறுதிப் போராட்டம் என்றார் பெரியார். மேலும் தமிழ்நாட்டை தமிழருக்கே தாருங்கள் என்று ஒன்றிய அரசுக்கு 25 ஜனவரி 1974 வரை காலக்கெடு விதித்தார்.
19 டிசம்பர் 1973 அன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற “கடைசி” பொதுக்கூட்டத்தில் “வாழ்ந்தால் இழிவுகளை ஒழித்துவிட்டு வாழ வேண்டும் இல்லையேல் செத்து மடிய வேண்டும் என்றும், சாதி அமைப்பையும் இழிவு நிலையையும் ஒழித்துக்கட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் 10 ஆண்டுகளில் நாம் பல்வேறு முன்னேற்றங்களை காணலாம்” என்றும் பேசினார் பெரியார்.
20 டிசம்பர் 1973 அன்று குடலிறக்க நோயால் ஏற்பட்ட தாங்க முடியாத வலியால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் பெரியார் அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து 21 டிசம்பர் 1973 அன்று கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் உயர் சிகிச்சைக்காக பெரியார் அனுமதிக்கப்பட்டார். 24 டிசம்பர் 1973 அன்று காலை 7:22 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார் பெரியார். பெரியார் உடலால் மறைந்திருக்கலாம், ஆனால் உள்ளதால் அவர் என்றென்றும் நம்மை வழிநடத்துவார். சமூக நீதிக் கொள்கைகளால் "நேற்றும் வாழ்ந்தார், இன்றும் வாழ்கிறார், நாளையும் வாழ்வார், என்றும் வாழ்வார்" பெரியார்.
இரண்டாயிரம் ஆண்டுகால ஆரிய அரசியலுக்கு எதிராக பெரியார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இயன்றவரை போராடினார். தமிழ்நாட்டில் “சமூக நீதி” கொள்கைகளை மக்களிடம் பரப்பிய பெரியார் மறைந்து அரை நூற்றாண்டு கடந்தும், இன்றும் பெரியாரை வலதுசாரிகள் அணுகும் விதத்தில் இருந்தே பெரியாரின் அவசியத்தை நாம் தெளிவாக உணர முடிகிறது.
முடிவுரை
பேரரசுகள் வீழ்ந்து, ஜனநாயகத்துவமும் தொழில்நுட்பமும் பிறந்த பிறகும், பார்ப்பனியம் நிலைபெற்ற காலகட்டத்திலே சமத்துவத்திற்காக போராடியவர் பெரியார். கடவுளின் பெயரால் சாதியைக் கற்பித்த பார்ப்பனர்கள் பிற உயர்சாதியினரின் ஆதரவுடன் தாழ்த்தப்பட்ட மக்களின் சுதந்திரத்தை நசுக்கிய போது உருவான சமத்துவமின்மைக்கு எதிராக பெரியார் குரல் கொடுத்தார். தன் வாழ்நாளில் 8,20,000 மைல்கள் பயணம் செய்து, 10,700 நிகழ்ச்சிகளில் பங்கேற்று, 21,400 மணி நேரம் பேசிய பெரியாரின் சொற்பொழிவுகளை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள், 5 மாதங்கள், 11 நாட்கள் தொடர்ந்து ஒலிபரப்பப்படும். இது சமூக நலனை மேம்படுத்துவதில் அவரது கணிசமான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
பெரியார் காட்டிய வழியில் பயணித்த திராவிட இயக்கம் மக்களைப் படிக்கவும், சிந்திக்கவும், எழுதவும் செய்து சமுதாயத்தையே புரட்டிப் போட்டது. பெரியாரின் திராவிடர் கழகமும் அதன்வழி பயணிக்கும் திராவிட இயக்கங்களும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் எண்ணிலடங்கா நற்காரியங்களைச் செய்துள்ளன. "பெரியார், அண்ணா, கலைஞர்" போன்ற திராவிட இயக்கத் தலைவர்கள் கட்டியெழுப்பிய திராவிட மாடல் அரசியலை இந்திய ஒன்றியத்தில் தனித்துவத்துடன் ஒளிரச் செய்வதில் இன்றைய தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் முக்கியப் பங்காற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவரணைகள்
பெரியாரின் கதை
அண்ணாவின் கதை
தேவதாசிகள் வரலாறு
திராவிட மாதத்தின் கதை
பெரியாரின் கடைசி பேச்சு
திராவிட இயக்க இதழ்கள் - 1
திராவிட இயக்க இதழ்கள் - 2
என்ன சாதித்தார் பெரியார்?
இட ஒதுக்கீட்டுக் கொள்கை
பெரியார் (2007) திரைப்படம்
நீதிக்கட்சி வரலாறு ஒரு பார்வை
பெரியார் - மணியம்மை திருமணம்
"துக்ளக்" சோ நேர்மையானவரா?
தமிழ்நாட்டின் சுருக்கமான வரலாறு
அண்ணா ஆட்சியைப் பிடித்த கதை
திராவிட மண்ணில் ஆரியர்களின் நுழைவு
திராவிடத் தலைமகன் அண்ணாவின் கதை
திராவிட முன்னேற்றக் கழகம் உருவான வரலாறு
பெரியாரின் இனி வரும் உலகம் நூலின் சாராம்சம்
பெரியாரின் அழியட்டும் ஆண்மை நூல் PDF வடிவத்தில்
பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் நூல் PDF வடிவத்தில்
1971 சேலம் பேரணி குறித்த வழக்கில் "துக்ளக்" சோ கேட்ட மன்னிப்பு
Periyar and Kamaraj
Periyar Timeline Events
The Social Reformer Periyar
Importance of Periyar in Tamil Nadu
State of Madras vs Champakam Dorairajan
Reservation for Backward Classes in Tamil Nadu
Benefits for Adi Dravidar during the Justice Party Ruling
Reservation Policy: A Vital Strategy for Social Transformation
Welfare Schemes for Dalits during Justice Party Regime
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
தேவையான காலகட்டத்தில் சிறப்பான பணி! வாழ்த்துகள்
ReplyDelete