Chocks: K-10 என்னும் கேதன் பரேக்

Tuesday, January 4, 2022

K-10 என்னும் கேதன் பரேக்

K-10 என்னும் கேதன் பரேக்

சுருக்கம்
  1. முகவுரை
  2. பங்குச்சந்தை சூட்சமம்
  3. K-10 பரேக்
  4. Ready Forward
  5. Canfina Mutual Funds Scam
  6. ITC and ACC பங்குகள்
  7. IT and Telecom பங்குகள்
  8. K-10 பங்குகள்
  9. Pump and Dump நுட்பம்
  10. Pay Order
  11. Pay Order மோசடி
  12. பங்கு வர்த்தகம் வலைப்பின்னல்
  13. Dotcom Bubble
  14. இந்தியாவிலும் எதிரொலித்தது
  15. MMC வங்கியின் கதை
  16. GT வங்கியின் கதை
  17. முடிவுரை
  18. இதர செய்திகள்
  19. விவரணைகள்
இதர செய்திகள்
  1. MMC வங்கியும் அமித் ஷாவும்
  2. வேறொரு கேதன் பரேக்
முகவுரை

ஒரு கை தட்டினால் ஓசை வராது, இரு கைகளையும் சேர்த்து தட்டினால் தான் ஓசை வரும். அதுபோல, பண்டமாற்று காலம் தொடங்கி உலகமயமாக்கல் காலம் வரை, விற்பவரும் வாங்குபவரும் கைகோர்த்து செயல்படும் போது தான் வியாபாரம் லாபகரமாக இருக்கும். எந்தவொரு வணிகத்திலும் லாபம் ஈட்டுவதற்காக வேலை செய்யும் தரகர்கள், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. பொன் முட்டையிடும் வாத்து போன்ற பங்குச்சந்தை வணிகத்தில் ​​பங்குத் தரகர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. 
பங்குச்சந்தை சூட்சமம்

ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீட்டுக்கான தளமாகவும் பொருளாதார நிலையை அறிய உதவும் குறியீடுகளில் ஒன்றாகவும் பங்குச்சந்தை விளங்குகிறது. பங்குச்சந்தை வணிகத்தில் முதலீட்டாளர்கள் சில நொடிகளில் பணத்தை பெருக்கவும், பணத்தை இழக்கவும் நேரிடலாம். பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதன் சூட்சுமங்களை அறிந்து வாரன் பபெட், கார்ல் இகான், ஜார்ஜ் சோரோஸ், பீட்டர் லிஞ்ச், ஜான் போகல், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ராதாகிஷன் தமானி போல வெற்றி பெற்ற நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களும் உண்டு. மறுபுறம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதன் சூட்சுமங்களை அறியாமல் பேராசையால் பணத்தை இழந்த லட்சக்கணக்கான முதலீட்டாளர்களும் உண்டு. மக்கள் தங்கள் கைகளால் தொடுதிரையில் வாங்கவும் விற்கவும் குறியீட்டை அழுத்துவதன் மூலம், தங்கள் இருக்கைகளில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க வழிவகுக்கும் பங்குச்சந்தையின் சூட்சுமங்களை அறிந்தும் அறியாமலும் பங்குச்சந்தையில் குதிக்கின்றனர்.

K-10 பரேக்
பங்குச்சந்தையின் சூட்சுமங்களை அறிந்த ஒருவர் இந்திய பங்குச்சந்தையை ஆட்டிப்படைத்து, மிகப்பெரிய பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டார். அவர் தான் K-10 என்னும் கேத்தன் பரேக். அதென்ன K-10? அது குறித்து கட்டுரையின் பிற்பகுதியில் காண்போம். ஹர்ஷத் மேத்தா ஊழலுக்கு பிறகு, கேதன் பரேக் ஊழல் இரண்டாவது பெரிய பங்குச்சந்தை ஊழலாகும். முதலீட்டாளர்கள், Securities Exchange Board of India (SEBI) மற்றும் பல ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு இது ஒரு கண் திறப்பாக இருந்தது. ஹர்ஷத் மேத்தாவின் சீடர் கேதன் பரேக் செய்த மோசடி என்ன? முதலீட்டாளர்களை ஏமாற்றி அவர் எப்படி வெற்றி பெற்றார்? எப்படி சிக்கினார்? என்பதை பற்றி பார்ப்போம்.

1980 களின் பிற்பகுதியில் பட்டய கணக்காளரான கேதன் பரேக் தனது தந்தையின் பங்கு தரகு நிறுவனமான NH Securities வணிகத்தை கையாண்டார். 1990 களில் ஆடம்பரமான வாழ்க்கை முறையை அனுபவித்து கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தாவால் ஈர்க்கப்பட்ட கேதன் பரேக் அவரை போலவே வாழ விரும்பினார். பணக்காரர் ஆக விரும்பினால் பணக்காரர்களை போல சிந்திக்க வேண்டும் அதற்கு முதலில் பணக்காரர்களுடன் பணிபுரிய செய்ய வேண்டும் என்பதை உணர்ந்த கேதன் பரேக் முதலில் ஹர்ஷத் மேத்தா நடத்தி வந்த Grow More Invesments நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கினார். நுண்ணறிவு ஆராய்ச்சியை விட "பணம் பணத்தை ஈர்க்கிறது மற்றும் பணம் மக்களை ஈர்க்கிறது" என்ற கொள்கையே பங்குச்சந்தையில் பணத்தை ஈட்டுவதற்கு சிறந்த வழி என்ற ஹர்ஷத் மேத்தாவின் அறிவுரையை பின்பற்றி கேதன் பரேக் பங்குச்சந்தையில் மேலேற தொடங்கினார்.

ஹர்ஷத் மேத்தா போல ஆடம்பரமாக வாழ்வது நம்மை பலரின் பொறாமைக்கு ஆளாக நேரிட்டு சிக்கலில் மாட்டிவிடும் என்பதையும், சொந்த நிதிக்கு பதிலாக வங்கி கடன் உதவி பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும், செயற்கையாக ஒரு பங்கின் விலையை உயர்த்தி உச்சத்தில் விற்கவும், அதே பங்கின் விலை கணிசமாக குறைந்தவுடன் வாங்கி மீண்டும் விலையை உயர்த்துவதற்கான சுழற்சி செயல்முறை குறித்தும் கேதன் பரேக் கற்றுக்கொண்டார்.

பங்குத் தரகர் மற்றும் பங்கு ஆய்வாளராக புகழ் பெற்ற கேதன் பரேக்கிடம், சமாஜ்வாதி கட்சி தலைவர் அமர் சிங், Adani நிறுவனர் கவுதம் அதானி, நடிகர் அமிதாப் பச்சன், HFCL நிறுவனர் வினய் மாலூ, DSQ Software நிறுவனர் தினேஷ் டால்மியா, ஆஸ்திரேலிய Media Baron கெர்ரி பேக்கர் உட்பட பல்வேறு நிறுவனர்கள், விளம்பரதாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் நட்சத்திரங்கள் நட்பு பாராட்டினர்.

Ready Forward

அன்றைய காலகட்டத்தில், பத்திர பரிவர்த்தனைகள் வங்கிகளுக்கு இடையில் நேரடியாக செய்யப்படாமல், நேரத்தையும் மனிதவளத்தையும் (Time and Manpower) சேமிக்க தரகர்கள் மூலமாக, உரிய கண்காணிப்பு திட்டம் இல்லாமல் செய்யப்பட்டு வந்தது. எடுத்துக்காட்டாக, பத்திரங்களை வைத்திருக்கும் ABC வங்கிக்கு 1 கோடி ரூபாய் குறுகிய கால வட்டியுடன் கூடிய கடன் தேவைப்படுகிறது. 1 கோடி ரூபாய் வைத்திருக்கும் XYZ வங்கிக்கு பத்திரங்கள் தேவைப்படுகிறது. ABC வங்கியையும் XYZ வங்கியையும் தரகர் இணைப்பார். இதுவே ஆயத்த முன்மை (Ready Forward) பங்கு எனப்படும். இந்த பரிவர்த்தனை ஓட்டைகளை பயன்படுத்தி 1992 இல் Canfina மோசடியை கேதன் பரேக் செய்தார்.

Canfina Mutual Funds Scam

கனரா வங்கியின் துணை நிறுவனமான பெங்களூரை சேர்ந்த Canbank Financial Services (Canfina) நிறுவனம், 10 அக்டோபர் 1991 மற்றும் 11 பிப்ரவரி 1992 கால இடையில், கனரா வங்கியின் மற்றொரு துணை நிறுவனமான மும்பையை சேர்ந்த Canbank Mutual Fund (CBMF) நிறுவனத்திடம் இருந்து அரசு பத்திரங்களை வாங்க 47.7 கோடி ரூபாய் செலுத்தியது. இந்த பரிவர்த்தனை அரசு பத்திரங்களை வாங்குவதாக கூறப்பட்டாலும், உண்மையில் Canfina மற்றும் CBMF இடையே போலியான Ready Forward ஒப்பந்தம் போடப்பட்டு, Canfina மூலமாக 47.7 கோடி ரூபாய் CBMF நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டது.

இந்த 47.7 கோடி ரூபாயை CBMF நிறுவனம், கேதன் பரேக் வகையறா, பல்லவ் ஷெத், ஹிதென் தலால் மற்றும் ஷ்ரேனிக் ஜாவேரி ஆகிய பங்குத் தரகர்களின் கணக்குகளுக்கு அனுப்பியது. பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய பங்குத் தரகர்கள் 47.7 கோடி ரூபாயை பயன்படுத்தி வந்த வேளையில், Canfina நிறுவனம் வாங்க திட்டமிட்டு இருந்த அரசு பத்திரங்கள் மீதான பரிவர்த்தனையை திரும்பப் பெற (Reverse Transactions), அதை தொடர்ந்து Canfina நிறுவனத்திற்கு 47.7 ரூபாயை CBMF நிறுவனம் திருப்பி அனுப்பியது. தங்களுக்காக வர்த்தகம் செய்த பங்குத் தரகர்களை பாதுகாக்க, Canfina மற்றும் CBMF நிறுவன அதிகாரிகள், மோசடி நடவடிக்கைகளை மறைக்க தங்கள் கணக்குகளை மாற்றி எழுதின.

வங்கி ஆய்வின் (Bank Audit) போது முறைகேடு விவகாரம் பூதாகரமாகி, விசாரணையின் முடிவில் Canfina உதவி துணைத் தலைவர் சாய்நாத் மோகன், அசோக்குமார், CBMF பொது மேலாளர் ஆச்சார்யா மற்றும் கேதன் பரேக் உள்ளிட்ட பங்குத் தரகர்கள் மீதும் கூட்டுச் சதித்திட்டம், நிதி முறைகேடு மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 2008 இல் 1 வருடம் சிறைத் தண்டனை விதித்தது நீதிமன்றம்.

ITC and ACC பங்குகள்
1997 இல் பங்கு வர்த்தகம் செய்ய கேதன் பரேக் கல்கத்தா பங்குச்சந்தையை பயன்படுத்தி கொண்டார். அன்றைய காலகட்டத்தில் கடுமையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உருவாக்கப்படாமல் இருந்த கல்கத்தா பங்குச்சந்தையின் பரிமாற்ற சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, தனது சார்பாக பங்கு வர்த்தகம் செய்ய பல தரகர்களை நியமித்து  அவர்களுக்கு பணமும் கொடுத்தார். கல்கத்தா பங்குச்சந்தையில் ITC நிறுவன பங்குகளை பெரிய அளவில் வாங்கி கேதன் பரேக் லாபகரமாக இயக்கி வந்தார். ஒரு நாள் தீடீரென கேதன் பரேக் தற்கொலை செய்து கொண்டதாக கேதன் பரேக்கின் தொழில் போட்டியாளர்கள் வதந்தியை பரப்பினர். இந்த வதந்தியை தொடர்ந்து கேதன் பரேக்கின் முதலீட்டாளர்கள் தங்களின் ITC பங்குகளை மளமளவென விற்றனர். இதன் மூலம் ITC பங்குகளின் விலையை குறைப்பதில் கேதன் பரேக்கின் போட்டியாளர்கள் வெற்றி கண்டனர். கேதன் பரேக் முகாம் வதந்திகளை மறுத்த நேரத்தில் பங்குச்சந்தையில் ITC மிகவும் செங்குத்தான சரிவை சந்தித்தது.

இதில் இருந்து மீண்டு, 1998 இல் கேதன் பரேக் ACC நிறுவன பங்குகளை பெரிய அளவில் வாங்கி இயக்க தொடங்கினார். அந்நேரத்தில் பொக்ரான் அணுக்கரு சோதனை காரணமாக இந்திய பங்குச்சந்தை பின்னடைவை சந்திக்க தொடங்கியது. அப்போது ACC நிறுவன பங்குகளை விற்று வெளியேறாமல், கூடுதலாக அதிக பங்குகளை வாங்கினால் பங்குச்சந்தையில் அதற்குரிய உணர்வையும் மதிப்பையும் மாற்றலாம் என்று நம்பி ACC நிறுவன பங்குகளை அதிகளவில் வாங்கினார் கேதன் பரேக். மேலும், ரஷ்யா நிதி நெருக்கடி காரணமாக உலகளவில் பங்குச்சந்தை பாதகமான நிலையை அடைய, Foreign Institutional Investors (FII) குழுவினர் ACC நிறுவன பங்குகளை பெரிய அளவில் விற்க, அதை தொடர்ந்து வேறு வழியில்லாமல் கேதன் பரேக் தனது ACC நிறுவன பங்குகளை நஷ்டத்தில் விற்றார்.

IT and Telecom பங்குகள்
ACC நிறுவன பங்குகளின் வீழ்ச்சி பங்குச்சந்தையில் பேசுபொருளாக இருந்ததால், கேதன் பரேக் சில காலம் பங்குச்சந்தையில் ஈடுபடமாட்டார் என்று கருதப்பட்ட சூழலில், அதை பின்னடைவாக கருதாமல், அடுத்து பெரும் லாபத்தை ஈட்ட திட்டமிட்டு மறுபிரவேசம் செய்தார். 1999 - 2000 காலகட்ட Dot-com ஏற்றத்தின் போது, பங்குச்சந்தைகளில் அதிக பணம் சம்பாதிக்க விரும்பினால், தொழில்நுட்பம் சார்ந்த Dot-com, Telecom மற்றும் Media பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும், ஏனெனில் தொழில்நுட்பம் எதிர்காலத்தின் முதுகெலும்பாக இருக்கும் என்பதை கேதன் பரேக் நன்கு அறிந்திருந்தார்.

K-10 பங்குகள்

வளர்ந்து வரும் Dot-com, Telecom மற்றும் Media நிறுவனங்களை ஆய்வு செய்து சுமார் 10 நிறுவன பங்குகளை கேதன் பரேக் தேர்வு செய்தார். இது பின்னர் K-10 பங்குகள் என்று அழைக்கப்பட்டது. K-10 என்னும் கேதன் பரேக்கின் பங்குச்சந்தை நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்த போது அவரது விருப்பமான பங்குகளாக Himachal Futuristic Communications Limited (HFCL), Amitabh Bachchan Corporation Limited (ABCL), Software Solutions Integrated (SSI), Global Telesystems (GTL), Silverline Technologies, Crest Communications, DSQ Software, Aftek Infosys, Zee Telefilms, Pentamedia, Mukta Arts, Ranbaxy, Satyam, TIPS போன்ற நிறுவனங்கள் அறியப்பட்டன. மேலும், Madhavpura Mercantile Cooperative Bank (MMCB), Global Trust Bank (GTB) உட்பட பல வங்கிகள் கேதன் பரேக்கின் வர்த்தக சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டது.

நிறுவனத்தின் முக்கிய முன்னெடுப்புகள் பற்றிய ரகசிய தகவல்களை கேதன் பரேக் உடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் தங்கள் சொந்த நலனுக்காக பங்குச்சந்தையில் உள் வர்த்தகம் (Insider Trading) செய்யும் சட்டவிரோத நடவடிக்கையில் சில நிறுவனங்கள் ஈடுபட்டன. இத்தகைய சூழலில், கேதன் பரேக் ஊழல் வெடித்த பிறகு அதில் சிக்கிய சில நிறுவனங்கள் தப்பித்தது, சில நிறுவனங்கள் கவிழ்ந்தது, சில நிறுவனங்கள் தொழிலை விட்டு ஒதுங்கியது, சில நிறுவனங்கள் வேறொரு நிறுவனத்துடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

சொந்த நிதியை பயன்படுத்தாமல் வங்கி நிதியை பயன்படுத்தி பங்குகளின் விலையை நம்பமுடியாத அளவிற்கு உயர்த்தினார் கேதன் பரேக். அதற்கு உறுதுணையாக MMC வங்கியில் இருந்து சுமார் 1000 கோடி ரூபாயும் Global Trust வங்கியில் இருந்து சுமார் 250 கோடி ரூபாயும் சட்டவிரோதமாக கடன் பெற்று கேதன் பரேக் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்தார்.

Pump and Dump நுட்பம்
கேதன் பரேக், ஒரே நாளில் X நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 40% பங்குகளை ரூ.50 வீதம் வாங்குகிறார். இதையெடுத்து, X நிறுவனம் அதன் 40% பங்குகளை ரூ.50 வீதம் விற்க முடிந்த காரணத்தால் X பங்கின் விலை ரூ.50 இல் இருந்து ரூ.60 ஆக உயர்கிறது. புதிய யோசனைகள், திட்டங்கள், கண்டுபிடிப்புகள் அல்லது தர அடையாளம் காரணமாக இல்லாமல், ஒரே நாளில் 40% பங்குகள் வாங்கப்பட்டதால் X நிறுவன பங்கின் விலை ஏற்றப்பட்டது. சுருக்கமாக, கேதன் பரேக் செய்த குறிப்பிடத்தக்க பங்கு கொள்முதல் பங்கு விலையை செயற்கையாக உயர்த்தியது.

இதை தொடர்ந்து, X நிறுவனத்தின் பங்கு விலையில் விரைவான அதிகரிப்பு முதலீட்டாளர்கள் ஆட்டு மந்தையை போல X பங்குகளில் முதலீடு செய்யத் தூண்டியது. அதாவது கேதன் பரேக் என்ற தனி நபர் X நிறுவனத்தின் பங்கு விலையை உயர்த்துவதன் மூலம், முழு நிறுவனத்தின் பங்கு விலையையும் கையாள முடிந்தது. இது Pump நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. பலர் அதிக அளவில் முதலீடு செய்ததால் X பங்கின் விலை ரூ.60 இல் இருந்து ரூ.100 வரை உயர்கிறது. கேதன் பரேக், கடந்த காலத்தில் ரூ.50 க்கு வாங்கிய அனைத்து X பங்குகளையும் இப்போது 100 ரூபாய் வீதம் விற்று லாபம் சம்பாதிக்கிறார். அதாவது 40% பங்குகளை மொத்தமாக விற்று ஒரு பங்கிற்கு (100-50=50) 50 ரூபாய் லாபம் ஈட்டினார். இது Dump நுட்பம் என்று அழைக்கப்படுகிறது.

50 ரூபாய் பங்கு 100 ரூபாய்க்கு ஏறியதை அறிந்து மற்ற பங்குதாரர்கள் தங்கள் X பங்குகளை விற்க (Sell) முயல்கிறார்கள். அதற்குள், X பங்கின் விலை மிகைப்படுத்தப்பட்டதை அறியும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அவற்றை வாங்க (Buy) மறுக்கிறார்கள். இந்த பின்னணியில், உயர்த்தப்பட்ட விலையில் மற்ற பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை விற்க முயற்சிக்கும் போது, ​​பங்குகளின் விலை உடனடியாக ஒரு பங்கிற்கு ரூ.20 ஆக குறைகிறது. விலை அதள பாதாளமாக இறங்கியதால் முதலீட்டாளர்கள் அனைவரும் பணத்தை இழக்கின்றனர். இவ்வாறு, Pump and Dump மோசடி மூலம் பங்குகளின் விலையை செயற்கையாக ஏற்றிவிட்டு லாபம் ஈட்டினார் கேதன் பரேக்.

பங்கு வர்த்தகம் வலைப்பின்னல்

கேதன் பரேக், பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட சொந்தமாக 25 நிறுவனங்களை கொண்ட அமைப்பை உருவாக்கினார். வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்கள் தரப்பிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை கேதன் பரேக் தனது வலைப்பின்னலில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு முதலில் அனுப்ப, பின்னர் அப்பணம் அதே வலைப்பின்னலில் உள்ள மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றப்படும். இவ்வாறு, கேதன் பரேக் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட பணத்தை தனது வலைப்பின்னலில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு மாற்றி பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்.  பல வங்கி கணக்குகள் மற்றும் வங்கி பரிமாற்றங்கள் கேதன் பரேக் தனது பணத்தை வர்த்தகத்தில் முதலீடு செய்ய உதவியது. கேதன் பரேக் தனது வலைப்பின்னலை சுழல் வணிகத்திற்கும் (Circular Trading) வங்கியில் இருந்து கடன் பெறவும் (Bank Loans) பயன்படுத்தினார்.

"பங்குத் தரகர்களின் குழு, ஒரே நிறுவன பங்குகளை தங்களுக்குள் வாங்கி விற்பதன் மூலம் உண்மையான வர்த்தக நடவடிக்கையின் மாயையை உருவாக்குவது" சுழல் வணிகம் எனப்படும். இந்த நுட்பம் பங்கு விலைகளை செயற்கையாக உயர்த்தவும், வர்த்தக முதலீட்டை அதிகரிக்கவும், முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தவும் வழிவகுக்கிறது.

Pay Order

வங்கியாளரின் காசோலை (Banker's Cheque) என்று அழைக்கப்படும் Pay Order என்பது வாடிக்கையாளரின் சார்பாக வங்கியால் வழங்கப்படும் Prepaid நிதிக் கருவியாகும். Pay Order ஆணையை பெற பயனாளி அதற்குரிய தொகையை X வங்கியில் செலுத்த வேண்டும். பின்னர் இந்த X வங்கியின் Pay Order ஆணையை வைத்துக் கொண்டு பயனாளி கடனுக்காக வேறு எந்த வங்கிகளிலும் அடகு வைக்கலாம்.

சுருக்கமாக, Pay Order என்பது அனுப்புநர் வங்கியின் ஆணையை பெற்று பெறுநர் வங்கி பயனாளிக்கு பணத்தை செலுத்தும் அல்லது ஒரு வங்கி தங்களது வங்கிக் கணக்கில் போதுமான தொகையை வைத்திருப்பவருக்கு உரிய தொகையை செலுத்துமாறு மற்றொரு வங்கிக்கு அறிவுறுத்தும் ஆவணம் ஆகும்.

Pay Order மோசடி

அன்றைய காலகட்டத்தில் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி ஒரு பங்குத் தரகருக்கு 15 கோடி ரூபாய்க்கு மேல் கடன் கொடுக்க வங்கி அனுமதிக்கப்படவில்லை. ஆனால் 2001 இல் MMC வங்கியின் தலைவர் ரமேஷ் சந்திரா பரிக், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்புகளுக்கு அப்பால் போதிய பிணையை பெறாமல், 137 கோடி ரூபாய்க்கான Pay Order ஆணையை கேதன் பரேக்கிற்கு வழங்கினார். உடனடியாக, Pay Order ஆணையை Bank of India வங்கியிடம் கேதன் பரேக் சமர்ப்பித்தார்.

137 கோடி ரூபாய்க்கான Pay Order ஆணையை Clearance செயல்முறைக்கு Bank of India வங்கி சமர்ப்பித்தது. இந்த செயல்முறை உறுதியான பிறகு Pay Order ஆணை வழங்கிய MMC வங்கியிடமிருந்து 137 கோடி ரூபாயை Bank of India வங்கி பெறும். பொதுவாக, 3 நாட்களுக்குள் Pay Order ஆணை திரும்ப வரவில்லை என்றால், Pay Order Clearance ஆகிவிட்டதாக கருதப்படும். அதையொட்டி, Pay Order Clearance ஆகியிருக்கும் என்று கருதி Bank of India வங்கி 137 கோடி ரூபாயை கேதன் பரேக் கணக்கிற்கு மாற்றியது. அவை முறையே கேதன் பரேக்கின் Classical Share and Stockbrokers நிறுவனத்திற்கு 65 கோடி, Panther Investrade நிறுவனத்திற்கு 20 கோடி, Panther Fincap நிறுவனத்திற்கு 52 கோடி மாற்றப்பட்டன.

இதற்கிடையில், யாரும் எதிர்பாராத விதமாக, 12 நாட்களுக்கு பிறகு போதிய பணம் இல்லாமல் Bounce ஆன Pay Order ஆணையை ரிசர்வ் வங்கி திருப்பி அனுப்பியது. இதன் விளைவாக, MMC வங்கி கடனை திருப்பிச் செலுத்தாதவர் (Defaulter) என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது மற்றும் Bank of India வங்கி 137 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. இது தொடர்பாக, Bank of India வங்கியின் துணை பொது மேலாளர் சோமையா மற்றும் துணை தலைமை மேலாளர் சுவர்ணா ஆகியோர் செயல்முறை மீறல்களுக்காக வங்கியால் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Bank of India வங்கி தலைமை, தீர்வுத் திட்டத்தின் (Settlement Plan) மூலம் பணத்தை கேட்க, கேதன் பரேக் 7 கோடி ரூபாயை மட்டுமே திருப்பி கொடுத்தார். இதையெடுத்து, மீதமுள்ள 130 கோடி ரூபாயை கடன் மீட்பு தீர்ப்பாயம் (Debt Recovery Tribunal - DRT) மூலம் கேட்டது Bank of India வங்கி. கேதன் பரேக், DRT உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தோல்வியடைந்தார். இறுதியில், கேதன் பரேக் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வட்டி ஏதும் இல்லாமல் பாக்கி தொகையை செலுத்த முன்வந்தார். ஆனால், அதனை Bank of India வங்கி ஏற்க மறுத்தது. ஒரு வழியாக 17 வருட சட்டப் போராட்டத்திற்கு பிறகு, 2018 இல் Bank of India வங்கி கேதன் பரேக்கிடம் இருந்து 137 கோடி ரூபாயை மீட்டெடுத்தது.

Dot-com Bubble
1990 களின் பிற்பகுதியில், Dot-com சார்ந்த தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் வளர்ச்சி அதிகரித்ததால், அமெரிக்க பங்குச்சந்தையில் இருந்து விரைவான லாபம் ஈட்ட முதலீட்டாளர்கள் கணிசமான அளவு பணத்தை Dot-com சார்ந்த Startup நிறுவனங்களில் முதலீடு செய்தனர். இதை தொடர்ந்து, 1995 இல் 1,000 ஆக இருந்த NASDAQ கூட்டுக் குறியீடு 2000 இல் 5000 ஆக உயர்ந்தது.

ஒரு நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை மற்றும் பங்கு வருவாயுடன் ஒப்பிடும்போது (P/E Ratio = Share Price / Earnings Per Share) என்ன நிலை என்றறியும் பாரம்பரிய அளவீடுகளை புறக்கணித்து, விரைவாக பணம் சம்பாதிக்கும் அவசரத்தில், முதலீட்டாளர்கள் உரிய மதிப்பையும் மீறி (Over Valued) Dot-com நிறுவனங்களில் முதலீடு செய்தனர். இதை தொடர்ந்து, முதலீட்டுக்கு ஏற்ற லாபத்தை ஈட்ட முடியாத பல நிறுவனங்களின் பங்குகள் சரியத் தொடங்கின. பீதியடைந்த முதலீட்டாளர்கள் Dot-com பங்குகளில் இருந்து வெளியேறியதால் பல்வேறு Dot-com நிறுவனங்கள் சரிந்தன. North Point Communications, pets.com, webvan.com, boo.com போன்ற அமெரிக்க நிறுவனங்கள் திவாலாகி விட்டதாக அறிவித்தன. Dot-com சர்ச்சையில் சிக்கி Microsoft, Qualcomm, Amazon, Ebay, Cisco போன்ற பிரபல நிறுவனங்களும் சரிவை சந்தித்து மீண்டது குறிப்பிடத்தக்கது.

ஊதி பெரிதாக்கப்பட்ட பலூனாக (Bubble Balloon) வெடித்த Dot-com நிறுவனங்களின் வீழ்ச்சியை தொடர்ந்து Telecom மற்றும் Online Media வணிகங்கள் பாதிக்கப்பட்டன. Dot-com Bubble மத்தியில், 2001 இல் புகழ்பெற்ற அமெரிக்க எரிசக்தி நிறுவனமான Enron Corporation கணக்கியல் ஊழலால் திவாலானதாக அறிவித்தது. இச்சம்பவம் அமெரிக்க பங்குச்சந்தையின் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மேலும், Dot-com Bubble, Y2K Problem, 9/11 சம்பவங்கள் 2000 முதல் 2002 வரையிலான உலகளாவிய பங்குச்சந்தையின் வீழ்ச்சிக்கும், நிதி நெருக்கடிக்கும், தொழில்நுட்பத் துறையில் பரவலான பணிநீக்கத்திற்கும், புதிய நிதி பாதுகாப்பு விதிமுறைகளுக்கும் வித்திட்டது.

இந்தியாவிலும் எதிரொலித்தது
அமெரிக்காவில் வெடித்த Dot-com Bubble, இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. அதை தொடர்ந்து, இந்திய முதலீட்டாளர்கள் Dot-com, Telecom, Media சார்ந்த K-10 பங்குகளை குறுகிய காலத்திற்குள் மளமளவென்று விற்க தொடங்கினர். இதன் விளைவாக, கேதன் பரேக் செயற்கையாக விலை உயர்த்திய பங்குகள் பெருமளவில் சரியத் தொடங்கின. கூடுதல் நிதியை பங்குசந்தையில் முதலீடு செய்வதன் மூலம் தனது பங்குகளின் விலை சரிவை ஈடுகட்ட முயன்ற கேதன் பரேக் இறுதியில் தோல்வியடைந்தார். 

2001 இல் Pay Order ஆணை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் கேதன் பரேக்கின் பங்குச்சந்தை ஊழல் அம்பலமானது. கேதன் பரேக்கின் பங்குச்சந்தை ஊழல் காரணமாக முதலீட்டாளர்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தனர். கல்கத்தா பங்குச்சந்தை சுமார் 200 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. MMC வங்கி மற்றும் GT வங்கியின் ஸ்திரத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகை கேள்விக்குறியானது.

MMC வங்கியின் கதை
2001 இல் கேதன் பரேக்கிற்கு சட்டவிரோத கடன்களை வழங்கியதன் மூலம் முடங்கிய MMC வங்கியில் வைப்புத்தொகை வைத்துள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், அந்த வைப்புத்தொகையை செயல்படாத சொத்துகளாக (Non Performing Assets - NPA) கருதுமாறு ரிசர்வ் வங்கி 2004 இல் அறிவுறுத்தியது. அத்துடன், பலகட்ட விசாரணைக்கு பிறகு MMC வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி 2012 இல் ரத்து செய்தது. மேலும், 17 ஆண்டுகளுக்கு பிறகு, 2018 இல் MMC வங்கியில் வைப்பீடு செய்த சுமார் 45,000 வாடிக்கையாளர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான வைப்புத்தொகை திரும்ப கொடுக்கப்பட்டது.

GT வங்கியின் கதை
2001 இல் கேதன் பரேக் ஊழல் வெடித்த பிறகு, 1990 இல் பத்மஸ்ரீ விருதை பெற்ற முதல் வங்கி நிர்வாகியான ரமேஷ் கெல்லி, GT வங்கியின் தலைவர் பதவி மற்றும் GT வங்கியின் இயக்குநர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், 2004 இல் "தவறான நிதி அறிக்கை" (Inaccurate Financial Reporting) என்ற அடிப்படையில் செயல்படாத சொத்துக்கள், எதிர்மறை நிகர மதிப்பு, தவறான மேலாண்மை மற்றும் பொறுப்பற்ற கடன் அனுமதி போன்றவற்றின் காரணமாக GT வங்கி தடை செய்யப்பட்டது. இறுதியில், நிரந்திர தீர்வை அடையும் நோக்கில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் GT வங்கி OBC வங்கியுடன் 2004 இல் இணைக்கப்பட்டது. இதையொட்டி, வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகை பாதுகாக்கப்பட்டது.

முடிவுரை

1990 களின் முற்பகுதியில், ஹர்ஷத் மேத்தா காகித அடிப்படையிலான அமைப்பை (Paper Based System) கொண்ட பங்குச்சந்தையில் புதிய உத்திகள் மூலம் ஊழல் புரிந்தார் என்றால் 1990 களின் பிற்பகுதியில், கேதன் பரேக் தொழில்நுட்ப அடிப்படையிலான அமைப்பை (Tehnology Based System) பயன்படுத்தி புதிய உத்திகள் மூலம் ஊழல் புரிந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

Overseas Corporate Bodies (OCB) உதவியுடன், பங்குச்சந்தை மோசடி மூலம் சம்பாதித்த 4,000 கோடி ரூபாயை சுவிஸ் வங்கி உட்பட பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட கேதன் பரேக் பொருளாதார குற்றம் புரிந்ததாக அறிவிக்கப்பட்டு 2003 முதல் 2017 வரை, 14 ஆண்டுகளுக்கு பங்குச்சந்தையில் பங்கு வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டார். மேலும், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட கேதன் பரேக் மீது சுழல் வணிகம், பங்கு மோசடி, பொய் கணக்கு, முதலீட்டாளரை ஏமாற்றுதல், பொதுப்பணத்தை தவறாக கையாளுதல், நிறுவன இயக்குநர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், உள் வர்த்தகம் செய்தல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில், 2009 இல் பங்குச்சந்தையில் கேதன் பரேக் மறைமுகமாக பங்கு வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு உதவியதாக குற்றம் சாட்டி 26 நிறுவனங்களை SEBI தடை செய்தது.

இதர செய்திகள்

MMC வங்கியும் அமித் ஷாவும்

2000 இல் சுமார் 50 ஆயிரம் முதலீட்டாளர்களுடன் 1300 கோடி ரூபாய் மதிப்புடன் குஜராத்தின் மிகப்பெரிய கூட்டுறவு வங்கியாக MMC வங்கி செயல்பட்டு வந்தது. ரிசர்வ் வங்கி விதிகளின்படி பங்குத் தரகர்களுக்கு வங்கிகள் 15 கோடிக்கு மேல் கடன் கொடுக்கக்கூடாது என்ற விதியை மீறி MMC வங்கி கேதன் பரேக்கிற்கு 1030 கோடி ரூபாய் கடனை வழங்கியது. 

2001 இல் கேதன் பரேக்கின் பங்குச்சந்தை ஊழல் வெடித்ததை தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்புகளை மீறி, MMC வங்கி தனது 1300 கோடி ரூபாய் கையிருப்பில் 1030 கோடி ரூபாயை கேதன் பரேக்கிற்கு கடனாக வழங்கிய விவகாரம் வெளியானது. இதன் விளைவாக, MMC வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை திரும்ப தருமாறு கோரினர், ஆனால் வைப்புத்தொகையை கொடுப்பதற்கு வங்கியிடம் போதுமான நிதி இல்லை.

ரிசர்வ் வங்கியின் வரம்புகளை மீறி போதிய பிணை இல்லாமல் கேதன் பரேக்கிற்கு MMC வங்கி எப்படி கடன் வழங்கியது என்று விசாரித்ததில், “கேதன் பரேக் கடன் கேட்கும் போதெல்லாம் உடனடியாக கடன் வழங்குமாறு அனைத்து கிளை மேலாளர்களுக்கும் வங்கி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது” என்று MMC வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையெடுத்து, 2001 இல் ரிசர்வ் வங்கி விதித்துள்ள நடைமுறைகளை பின்பற்றாததால், கடனைத் திருப்பிச் செலுத்தாத (Defaulter) வங்கியாக MMC வங்கி அறிவிக்கப்பட்டது. இறுதியாக, 2018 இல் வைப்பீடு செய்த சுமார் 45,000 வாடிக்கையாளர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை திருப்பி அளிக்கப்பட்டது.

விசாரணை காலத்தில், MMC வங்கி தலைவர் ரமேஷ் சந்திரா பரிக், தலைமை நிர்வாக அதிகாரி தேவேந்திர பாண்டியா, மும்பை மேலாளர் ஜகதீஷ் பாண்டியா,  கேதன் பரேக் மற்றும் அவரது கூட்டாளி தர்மேஷ் ஜோஷி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ரிசர்வ் வங்கி MMC வங்கியின் நிர்வாகக் குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகக் குழுவை நியமித்தது. இந்த புதிய நிர்வாக குழுவில் அமித் ஷாவும் ஒரு இயக்குனராக இருந்தார்.

MMC வங்கியில் 1030 கோடி ரூபாய் ஏமாற்றிய கேதன் பரேக் மீது வழக்கு தொடரப்பட்டது. அடுத்த மூன்றாண்டுகளுக்குள் 380 கோடி ரூபாயை திருப்பி செலுத்துவதாக கேதன் பரேக் முன்வைத்த கோரிக்கையை MMC வங்கி ஏற்றது. இதையெடுத்து, நீதிமன்றம் கேதன் பரேக்கிற்கு ஜாமீன் வழங்கியது. உரிய காலத்தில் பணத்தை செலுத்தவில்லை என்றால் கேதன் பரேக்கின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று MMC வங்கி 2003 இல் நீதிமன்றத்தில் SLP (No. 1701/2003) மனுவை தாக்கல் செய்தது. அந்த மனு பின்னர் MMC வங்கியால் திரும்ப பெறப்பட்டது.

MMC வங்கியின் ஸ்திரத்தன்மையை கவிழ்த்த கேதன் பரேக்கிற்கு இணக்கமாக செயல்பட அமித் ஷா லஞ்சம் வாங்கியதாகவும் அது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் குஜராத் ADGP (CID) குல்தீப் ஷர்மா 01-08-2005 அன்று மூன்று பக்க அறிக்கையை குஜராத் மாநில தலைமைச் செயலாளர் சுதீர் மன்கட்டிற்கு அனுப்பினார். அன்றைய முதல்வர் மோடியின் குஜராத் பா.ஜ.க அரசு அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ADGP குல்தீப் ஷர்மாவை CID பிரிவில் இருந்து விலக்கி Gujarat Sheep and Wool Development Corporation இயக்குநராக நியமித்தது. மேலும், குல்தீப் ஷர்மா மீது போலி என்கவுன்டர் வழக்கை அரசு பதிவு செய்து விசாரணை நடந்து வந்த போது நீதிமன்றம் குல்தீப் ஷர்மா மீதான FIR அறிக்கையை விலக்கி (Quash) வைத்தது.

// ADGP (CID) குல்தீப் ஷர்மா அறிக்கையின் சாராம்சம் //

MMC வங்கியின் இயக்குனராக இருந்த அமித் ஷா 31-08-2004 அன்று வங்கி அதிகாரிகளையும் காவல்துறையினரையும் அழைத்து “கேதன் பரேக் மூன்று ஆண்டுகளுக்குள் செலுத்த ஒப்புக்கொண்ட 380 கோடி ரூபாயை செலுத்தவில்லை என்பதால் அவருடைய ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று கோருகிறார்.

இதற்கிடையே, 2004 அக்டோபர் முதல் வாரத்தில் கிரீஷ் தானி என்ற அரசியல் தரகர் ஏற்பாட்டின் பேரில் அமித் ஷாவும் கேதன் பரேக்கும் சந்தித்து பேசுகின்றனர். இதன் பிறகு, கேதன் பரேக்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட SLP மனுவை MMC வங்கி வாபஸ் பெறுகிறது. இதையெடுத்து, MMC வங்கி வழக்கில் இருந்து கேதன் பரேக்கை விடுவிக்க அமித் ஷா 2.5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று அகமதாபாதைச் சேர்ந்த ஹஸ்முக் ஷா என்பவர் எழுத்து வடிவிலான புகார் கொடுத்தார். இந்த புகாரை தொடர்ந்து CID நடத்திய விசாரணையில் அமித் ஷா மற்றும் கேதன் பரேக் சந்திப்பு நடைபெற்றதும், 2004 ஆகஸ்டில் கேதன் பரேக்குக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு 2004 அக்டோபரில் திரும்ப பெறப்பட்டதும் கண்டறியப்பட்டது. இறுதியில் 2013 ஜனவரியில் 1030 கோடி ரூபாய் மோசடி வழக்கில் 396 கோடி ரூபாய் மட்டும் செலுத்தி MMC வங்கி வழக்கில் தண்டனையே இல்லாமல் கேதன் பரேக் தப்பித்தது குறிப்பிடத்தக்கது. 
இன்னொரு கேதன் பரேக்

1989-1991 காலகட்டத்தில், மும்பையில் உள்ள Bank of Baroda வங்கியில் அசல் கடனீட்டு பத்திரங்கள் (Debentures) தொலைந்து போனதாக கூறி, நகல் கடனீட்டு பத்திரங்களை வாங்கி, சூர்யகாந்த் அம்பாலால் படேல் மற்றும் ஜோத்ஸ்னா சூர்யகாந்த் படேல் ஆகியோரின் பெயர்களில் பிணையமாக வைத்து, கேத்தன் பரேக் நான்கு நிறுவனங்களின் பெயரில் 15 லட்சம் ரூபாய் கடன் பெற்று ஏமாற்றினார்.

இதை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த CBI, கேத்தன் பரேக் மற்றும் மூன்று வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. மும்பையில் உள்ள CBI சிறப்பு நீதிமன்றம், 2014 இல் கேதன் பரேக்கிற்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்தும், கூட்டுச்சதியை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மூன்று வங்கி அதிகாரிகளை விடுவித்தும் தீர்ப்பளித்தது. Bank of Baroda வங்கியை ஏமாற்றிய பங்கு தரகர் கேதன் பரேக்கின் முழுப் பெயர் கேதன் மன்ஹர்லால் பரேக். பங்குச்சந்தையை ஆட்டம் காண வைத்த பங்கு தரகர் கேதன் பரேக்கின் முழுப் பெயர் கேதன் வினய்சந்திர பரேக். இருவரும் வெவ்வேறு நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விவரணைகள் 


ஹர்ஷத் மேத்தா கதை 


MMCB Case Articles ⏬





வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -