Chocks: ஹர்ஷத் மேத்தா கதை

Monday, November 16, 2020

ஹர்ஷத் மேத்தா கதை

ஹர்ஷத் மேத்தா கதை

குறிப்பு = இந்த சுருக்கமான கட்டுரை முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, தலைப்பில் இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சுருக்கம் 
  1. முகவுரை
  2. முதலீட்டு சந்தை
  3. யார் இந்த ஹர்ஷத் மேத்தா?
  4. CRR - SLR
  5. PDO - SGL
  6. Ready Forward
  7. Bank Receipt
  8. முதலாம் செயல்திட்டம் என்ன?
  9. இரண்டாம் செயல்திட்டம் என்ன?
  10. போலி வங்கி ரசீது எடுத்துக்காட்டு
  11. எதனால் சிக்கினார்?
  12. எப்படி சிக்கினார்?
  13. பத்திரிகையாளர் சுசேதா தலால்
  14. 1992 வழக்கு விபரம்
  15. மீண்டு(ம்) வந்தார் 
  16. இறுதி முடிவு
  17. SEBI Act, 1992
  18. சரியா? தவறா?
  19. முடிவுரை
  20. இதர செய்திகள்
  21. விவரணைகள் 
இதர செய்திகள்
  1. மனு மானெக் - திருபாய் அம்பானி
  2. ப.சிதம்பரம் ராஜினாமா 
முகவுரை

உலகம் முழுவதும் பல தொழில்களில் பல ஊழல் மோசடிகள் இருக்கலாம் ஆனால் பங்குச் சந்தையில் ஹர்ஷத் மேத்தாவின் மோசடி பெரிய வரலாற்றை கொண்டது. ஹர்ஷத் மேத்தா ஊழலுக்கு பிறகு, இந்திய அரசு தனது பொருளாதார அமைப்புகளின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தியது. அவ்வகையில், செபி (SEBI), வங்கி (Bank), பங்குச்சந்தை (Share Market), உயர் வணிக நிறுவனம் (Corporates) உட்பட பல்வேறு அமைப்புகள் விதிமுறை மாற்றங்களை கண்டது. 

National Housing Bank (NHB), State Bank of India (SBI), Standard Chartered Bank, ANZ Grinlays Bank, Bank of America, Bank of Madura, Andhra Bank, Vijaya Bank, UCO Bank, Citi Bank உட்பட பல்வேறு வங்கிகள் மற்றும் Apollo Tyres, Hero Honda, Reliance, Sterlite, Videocon, TISCO, BPL உட்பட பல்வேறு நிறுவனங்கள் ஹர்ஷத் மேத்தா செய்த ஊழலால் சில காலம் திணறியது. 1990 களின் இந்திய பங்குச்சந்தை ஊழலுக்கு ஹர்ஷத் மேத்தா மட்டும் தான் காரணமா என்பதை புரிந்துகொள்ள இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.
முதலீட்டு சந்தை

நீண்ட கால பலன் தரக்கூடிய "முதலீடு" (Investments) மற்றும் குறுகிய கால பலன் தரக்கூடிய "வர்த்தகம்" (Trade) ஆகியவை பங்குச்சந்தையில் லாபம் ஈட்டுவதற்கான இரண்டு வெவ்வேறு முறைகள் ஆகும். மேலும் பங்குச்சந்தையில் கடந்த கால பங்கு விலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை கணித்து (Technical Analysis) எதிர்காலத்தில் பங்கு விலைகள் இவ்வளவு மாற்றம் அடையலாம் என்று கணித்து பங்குகளை வாங்க முற்படுவது பங்குச்சந்தை யுத்திகளில் ஒன்று.

மின்னணு கருவிகள் பயன்பாட்டில் இல்லாத காலத்தில், தரகர்கள் மூலம் பத்திரங்களை பரிமாறிக்கொள்ளும் வங்கிகளுக்கு இடையேயான செயல்முறையை நுட்பமாக பயன்படுத்தி பெற்ற பணத்தை பங்குச்சந்தை நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தி கொண்டார் ஹர்ஷத் மேத்தா. அரசு பத்திரங்கள் (Goverment Securities) மற்றும் பங்குச்சந்தைகள் (Stock Markets) ஆகிய இரண்டு சந்தைகளை பற்றி புரிந்து கொள்வது ஹர்ஷத் மேத்தா ஊழலை புரிந்து கொள்வதற்கு முக்கியமானது.

யார் இந்த ஹர்ஷத் மேத்தா?

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் 29 ஜூலை 1954 அன்று வறுமைமிக்க குடும்பத்தில் பிறந்தார் ஹர்ஷத் மேத்தா. தனது பட்டப்படிப்புக்குப் பிறகு New India Assurance Company Limited (NIACL) மும்பை அலுவலகத்தில் விற்பனைப் பணியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1980 இல் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு பங்குச்சந்தையில் தனது ஆர்வத்தையும் நேரத்தையும் முழுமையாயக செலுத்தினார். முதலில் P.Ambalal & Sons என்ற தரகு நிறுவனத்தில் தரகர் P.D.Shukla என்பவரிடம் பணியாற்றினார். பின்னர்  பங்கு தரகர்களான J.L.Shah மற்றும் Nandalal Sheth ஆகியோரிடம் தரகராக பணியாற்றினார்.

பங்குச்சந்தையில் போதுமான அனுபவத்தைப் பெற்ற பிறகு 1987 இல்  ​​ஹர்ஷத் மேத்தா தனது சகோதரர்களுடன் இணைந்து Growmore Research and Asset Management Company Limited  என்ற பெயரில் புதிய நிறுவனத்தை ஆரம்பித்தார். Bombay Stock Exchange (BSE) அமைப்பானது தரகர் அட்டையை (Broker's Card) விற்பனை செய்ய முன் வந்த போது, ஹர்ஷத் மேத்தா J.L.Shah மற்றும் Nandalal Sheth ஆகியோரின் நிதி உதவியை நாடி அதை வாங்கினார். 1980 களின் இறுதியில் இந்தியப் பங்குச்சந்தையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார். ஊடகங்கள் அவரை பங்குச்சந்தையின் அமிதாப் பச்சன் என்று புகழ்ந்தன. 

நம்பிக்கைக்குரிய தரகராக வங்கிகளுக்கு இடையே பரிவர்த்தனைகளை செய்து வந்தார் ஹர்ஷத் மேத்தா. இந்த பரிவர்த்தனைகள் மூலம் பல மோசடிகளை செய்து, அதில் கிடைத்த பணத்தை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டை நிர்ணயிக்கும் சில  நிறுவனங்களின் பங்குகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து, அப்பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி லாபம் ஈட்டினார்.
CRR - SLR

ரொக்க கையிருப்பு விகிதம் (Cash Reserve Ratio - CRR) மற்றும் சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் (Statutory Liquidity Ratio - SLR) ஆகியவற்றின் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பூர்த்தி செய்ய வங்கிகள் பத்திரங்களில் வர்த்தகம் செய்கின்றன. CRR என்றால் வங்கிகள் தங்கள் மொத்த வைப்புத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை பூஜ்ஜிய வட்டியில் ரிசர்வ் வங்கியிடம் செலுத்த வேண்டும். SLR என்றால் வங்கிகள் தங்கள் வைப்புத்தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பத்திரங்களை வாங்க வேண்டும்.

பணத் தட்டுப்பாடு காரணமாக ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டிய CRR தொகையை சில வங்கிகளால் செலுத்த இயலாது. பத்திரங்கள் குறைவாக இருந்தால் ரிசர்வ் வங்கி கூறிய SLR தேவைகளை சில வங்கிகளால் பூர்த்தி செய்ய இயலாது. இதையெடுத்து, CRR மற்றும் SLR பற்றாக்குறைகள் ஏற்பட்டால் அதை சமன் செய்ய வாங்குபவர் (Buyer) மற்றும் விற்பவர் (Seller) என்ற செயல்முறையின் கீழ் ஆயத்த முன்மை பங்கு (Ready Forward) மற்றும் வங்கி ரசீது (Bank Receipt) வழிமுறை பின்பற்றப்படுகிறது.

PDO - SGL

மின்னணு கருவிகள் இல்லாத காலத்தில் அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கு புத்தகங்களில் எழுதப்பட்டு வந்தது. ரிசர்வ் வங்கிக்கென்று பொதுக் கடன் அலுவலகம் (Public Debt Office - PDO) உள்ளது. PDO அலுவலகத்தில் உள்ள துணைப் பொதுப் பேரேடு (Subsidiary General Ledger - SGL) வங்கிகளுக்கு இடையே வழங்கப்பட்ட பத்திரங்கள் குறித்த வங்கி ரசீது பரிவர்த்தனைகளை பராமரிக்கிறது. 

ஒவ்வொரு காலாண்டிலும் SGL பரிவர்த்தனைகள் ஒன்றுக்கொன்று சரியாக உள்ளதா? என்று ஒவ்வொரு வங்கியாலும் பரிசோதிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு காசோலையில் பணம் இல்லையென்றால் Cheque Bounce ஆவது போலவே SGL பேரேட்டில் போலி வங்கி ரசீதுகள் (Bank Receipt) சமர்ப்பிக்கப்பட்டு இருந்தால் அதற்குரிய உள் ஆவணங்கள் (Internal Documents) இல்லாமல் SGL Bounce ஆகும். இதன் மூலம் கடன் வாங்கிய வங்கியிடம் போதுமான அளவு பத்திரங்கள் இல்லை என்பதையும் கடன் கொடுத்த வங்கியை ஏமாற்றியதையும் அறிந்துகொள்ளலாம்.

Ready Forward

எடுத்துக்காட்டாக, பத்திரங்களை வைத்திருக்கும் SBI வங்கிக்கு 1 கோடி ரூபாய் குறுகிய கால வட்டியுடன் கூடிய கடன் தேவைப்படுகிறது. 1 கோடி ரூபாய் வைத்திருக்கும் PNB வங்கிக்கு பத்திரங்கள் தேவைப்படுகிறது. SBI வங்கியையும் PNB வங்கியையும் தரகர் இணைப்பார். இதுவே ஆயத்த முன்மை (Ready Forward) பங்கு ஆகும்.

வங்கிகளுக்கு இடையிலான பத்திர பரிவர்த்தனைகள் நேரடியாக நடைபெறாமல் நேரத்தையும் மனிதவளத்தையும் சேமிக்க (Saving Time and Manpower) தரகர்கள் மூலமாக செய்யப்படுவதே அன்றைய காலகட்டத்தில் இருந்த நடைமுறை. இந்த நடைமுறையை கண்காணிக்க அரசிடம் உரிய திட்டம் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Bank Receipt

ஆயத்த முன்மை பங்கு பரிவர்த்தனையில் பத்திரங்களை விற்பவர், பத்திரங்கள் உண்மையில் முன்னும் பின்னுமாக நகர்த்தப்படாமல் (Without the Securities actually being moved back and forth) அப்பத்திரங்களை வாங்குபவருக்கு வங்கி ரசீதை (Bank Receipt) கொடுப்பார். இங்கே ஆயத்த முன்மை பங்கு பரிவர்த்தனைகளின் செயல்பாடுகள் வங்கி ரசீதுகளைப் பொறுத்தது என்பதை கவனிக்க வேண்டும்.

பத்திரங்களை விற்கும் SBI வங்கியையும் பத்திரங்களை வாங்கும் PNB வங்கியையும் தரகர் இணைப்பார். அதாவது பத்திரங்களை விற்கும் SBI வங்கியின் வங்கி ரசீதை பத்திரங்களை வாங்கும் PNB வங்கியிடம் ஒப்படைத்து அவர்கள் கொடுக்கும் கடனை SBI வங்கியிடம் தரகர் ஒப்படைப்பார். இவ்விடத்தில் உண்மையான பத்திரங்கள் கைமாற்றப்படாமல் வங்கி ரசீதுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.

PNB வங்கியானது வங்கி ரசீதை ஏற்றுக்கொண்டு அசல் பத்திரங்களை பெறாமல் நம்பிக்கையின் அடிப்படையில் SBI வங்கிக்கு முன்கூட்டியே பணம் செலுத்துகிறது. மேலும் SBI வங்கி பெற்ற பணத்திற்கான ரசீதாகவும் PNB வங்கிக்கு அசல் பத்திரங்களை விரைவில் பட்டுவாடா செய்யவும் வங்கி ரசீது உறுதியளிக்கிறது.

முதலாம் செயல்திட்டம் என்ன?

பத்திரங்களை விற்கும் SBI வங்கி அதனை உடனடியாக பட்டுவாடா செய்ய முடியாத காரணத்தால் வங்கி ரசீதை ஹர்ஷத் மேத்தாவுக்கு வழங்குகிறது. SBI வங்கி வழங்கிய வங்கி ரசீதை நம்பி, PNB வங்கி ஹர்ஷத் மேத்தா பெயரில் காசோலையை வழங்குகிறது. இந்த காசோலையை ஹர்ஷத் மேத்தா தன்னுடைய கணக்கில் டெபாசிட் செய்வார். 

வங்கிகளுக்கு பரிவர்த்தனை தரகராக செயல்பட்டு, PNB வங்கி வழங்கிய குறுகிய கால வட்டியுடன் கூடிய கடனுக்கு பிணையமாக SBI வங்கி சார்பில் காசோலையை பெற்ற ஹர்ஷத் மேத்தா 14 நாட்களுக்குள் பத்திரங்களை அல்லது கடனை பட்டுவாடா செய்ய வேண்டும். 1992 இல் தீர்வு சுழற்சி முறை (Settlement Cycle) 14 நாட்களாக இருந்தது. அதனால் 14 நாட்களுக்கு ஹர்ஷத் மேத்தா தன்னுடைய வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் வைத்திருந்தார். அந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்படி பல்வேறு வங்கிகளிடம் பெற்ற பணத்தை ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையில் முதலீடு செய்வார். இதற்கிடையே, 14 நாட்களுக்கு பிறகு PNB வங்கிக்கு பத்திரங்களுக்கு பதிலாக முழு கடனையும் செலுத்திவிடுகிறார் ஹர்ஷத் மேத்தா.

இரண்டாம் செயல்திட்டம் என்ன?

அசல் வங்கி ரசீதுகளின் அடிப்படையில் ஹர்ஷத் மேத்தாவுக்கு பல நூறு கோடிகளை வங்கிகள் வழங்கியது. Settlement Cycle இடைவெளியை நுட்பமாக பயன்படுத்தி அந்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்தார். ஒரு கட்டத்தில் அசல் வங்கி ரசீதுகளைப் பெறுவதில் பற்றாக்குறை இருப்பதை உணர்ந்தார். அப்போது தான் போலி வங்கி ரசீதுகளை அச்சிட முடிவு செய்தார். அதற்காக Bank of Karad மற்றும் Metropolitan Cooperative Bank போன்ற சிறு வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து போலி வங்கி ரசீதுகளை அச்சடிக்கத் தொடங்கினார்.

பத்திரங்கள் மீது கடன் வழங்கும் வங்கிகள் ஹர்ஷத் மேத்தா ஒப்படைத்த போலி வங்கி ரசீதுகளை உண்மையென நம்பி பணத்தை கொடுத்தது. அதே Settlement Cycle இடைவெளியை சாதகமாக பயன்படுத்தி அப்பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். ஒரே வித்தியாசம் யாதெனில் முதலாம் செயல்திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது அசல் வங்கி ரசீதுகள் ஆனால் இரண்டாம் செயல்திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது போலி வங்கி ரசீதுகள் ஆகும்.

போலி வங்கி ரசீது எடுத்துக்காட்டு

# Bank of Karad வங்கி உதவியுடன் போலி வங்கி ரசீதுகளை தயாரிக்கிறார்.

# SBI வங்கியை அணுகி Bank of Karad வங்கி வழங்கிய போலி வங்கி ரசீதுகளை வழங்குகிறார்.

# பத்திரங்களுக்கு எதிராக கடன் வழங்குவதாகக் கருதி போலி வங்கி ரசீதுகளை நம்பி SBI வங்கி ஹர்ஷத் மேத்தாவுக்கு காசோலை வழங்குகிறது.

# இங்கே பத்திரம் இல்லாமல் Bank of Karad வங்கி செய்யும் வேலை கடன் வாங்குதல் (Borrowing).

# இங்கே பத்திரம் இருப்பதாக கருதி SBI வங்கி செய்யும் வேலை கடன் வழங்குதல் (Lending).

# இப்போது Metropolitan Cooperative Bank வங்கி உதவியுடன் போலி வங்கி ரசீதுகளை தயாரிக்கிறார்.

# PNB வங்கியை அணுகி Metropolitan Cooperative Bank வங்கி வழங்கிய போலி வங்கி ரசீதுகளை வழங்குகிறார்.

# பத்திரங்களுக்கு எதிராக கடன் வழங்குவதாகக் கருதி போலி வங்கி ரசீதுகளை நம்பி PNB வங்கி ஹர்ஷத் மேத்தாவுக்கு காசோலை வழங்குகிறது.

# இங்கே பத்திரம் இல்லாமல் Metropolitan Cooperative Bank வங்கி செய்யும் வேலை கடன் வாங்குதல் (Borrowing).

# இங்கே பத்திரம் இருப்பதாக கருதி PNB வங்கி செய்யும் வேலை கடன் வழங்குதல் (Lending).

# இப்போது கடன் வழங்கிய SBI வங்கிக்கு PNB வங்கியிடம் பெற்ற பணத்தை செலுத்துகிறார்.

# இவ்வாறு, ஹர்ஷத் மேத்தா, 14 நாட்கள் தீர்வு சுழற்சி முறையின் இடைவெளியை நுட்பமாக கையாண்டு அதன் மூலம் தனது முதலீட்டுத் தேவைகளுக்காக பல்வேறு வங்கிகளை பயன்படுத்தினார்.

இந்த செயல்திட்டத்தில் வங்கி ரசீதுகள் போலியானது என்பது Bank of Karad மற்றும் Metropolitan Cooperative Bank வங்கியை தவிர மற்ற வங்கிகளுக்கு தெரியாது. ஏனெனில் வங்கிகள் ஹர்ஷத் மேத்தாவை நம்புவதில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. அதற்கு காரணம் ஹர்ஷத் மேத்தா பல வங்கிகளின் கீழ் மட்டத்தில் இருந்து உயர் நிர்வாகம் வரை அனைவரின் நட்பையும் நம்பிக்கையையும் பெற்றிருந்தார். மேலும் சில அதிகாரிகளுக்கு கடன் கொடுத்து அவர்களை நெருங்கிய நண்பர்களாக வைத்திருந்தார்.

ஹர்ஷத் மேத்தா நேரடியாகவும் மறைமுகமாகவும் சில பங்குகளை மொத்தமாக வாங்குவார். அதையொட்டி பங்குகளின் விலை கணிசமாக உயரும். ஹர்ஷத் மேத்தா எந்த பங்கைத் தேர்ந்தெடுத்தாலும் அது தங்கமாக மாறும் என்று எண்ணி அதே பங்குகளில் மக்கள் அதிகமாக முதலீடு செய்தார்கள். அதனால் பங்குகளின் விலை மேலும் உயர்ந்தது. எடுத்துக்காட்டாக, ACC நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 200 ரூபாய். இதை 3 மாதங்களுக்குள் 4,400% அதிகரித்து 9,000 ரூபாய்க்கு கொண்டு சென்றார் ஹர்ஷத் மேத்தா.

எதனால் சிக்கினார்?

1991 இல் காங்கிரஸ் ஆட்சியில் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது நிதியமைச்சர் மன்மோகன் சிங் தாராளயமாக்கல் (Liberalism) கொள்கையை அறிவித்தார். நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்திய தாராளயமாக்கல் கொள்கை தடையற்ற சுதந்திர சந்தையை (Free Market) திறந்துவிட்டதால், வர்த்தகத்துறை அமைச்சகம் (Ministry of Commerce) அதன் இலாபகரமான உரிம வணிகத்தை (Licensing Business) இழந்தது. இந்த புதிய கொள்கை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது. இதையடுத்து, இந்திய முதலீட்டு சந்தையை சீர்திருத்த வேண்டிய தேவை எழுந்தது. அவ்வகையில், 1992 ஏப்ரலில் வெடித்த ஹர்ஷத் மேத்தா ஊழலுக்கு அரசு, வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்கள் செலுத்திய பெரும் விலையிலிருந்து அந்த சீர்திருத்தம் வந்தது.

24 ஜூலை 1991 அன்று நிதியமைச்சர் மன்மோகன் சிங் புதிய இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு ஏற்ப “இறக்குமதி தடைகளை குறைத்தல், தொழில்களுக்கான விதிகளை எளிதாக்குதல், வெளிநாட்டு நிறுவனங்களை (Foreign Institutional Investor - FII) இந்தியாவில் முதலீடு செய்ய அழைத்தல், தனியார் நிறுவனங்கள் Mutual Funds தொடங்க அனுமதித்தல், முதலீட்டு சந்தையை ஒழுங்குபடுத்த Controller of Capital Issues, 1947 அமைப்புக்கு பதிலாக SEBI அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குதல்” போன்ற முக்கிய அம்சங்களை எடுத்துரைத்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

ஆரம்பத்தில் SEBI அமைப்பு, நேர்மையற்ற தரகர்களை களையெடுக்கும் விதமாக அதிக பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி தங்களை மீண்டும் பதிவு செய்யும்படி தரகர்களை கேட்டுக் கொண்டது. அதுவரை தங்களுக்குள் சொந்த விதிகளை அமைத்து செயல்பட்டு கொண்டிருந்த முதலீட்டு தரகர்கள் குழு, SEBI அமைப்பின் புதிய உத்தரவை எதிர்த்து 16 ஏப்ரல் 1992 முதல் 24 ஏப்ரல் 1992 வரை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. இதனால் அனைத்து பங்கு வர்த்தக நடவடிக்கைகளும் ஸ்தம்பித்தது. Settlement Cycle காலத்திற்குள் பல கோடி ரூபாய் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக பங்குச்சந்தையில் இருந்து பணம் எடுக்க எண்ணிக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தாவுக்கு தரகர்களின் வேலை நிறுத்தம் சிக்கலான சூழலை ஏற்படுத்தியது.

எப்படி சிக்கினார்?

பிணைய உத்தரவாதத்தின் (Collateral Guarantee) அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்ட காலத்திற்குள் பத்திரங்கள் மீது கடன் வாங்கிய வங்கியால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், கடன் வழங்கிய வங்கியானது வங்கி ரசீதுகளை PDO அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று பத்திரங்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்வது நடைமுறை. ஒவ்வொரு காலாண்டிலும் PDO அலுவலகத்தில் உள்ள SGL பேரேட்டின் பரிவர்த்தனைகள் பரிசோதிக்கப்படும் போது அவை போலி வங்கி ரசீதுகளாக இருந்தால் அதற்குரிய உள் ஆவணங்கள் இருக்காது. அதையொட்டி, கடன் கொடுத்த வங்கி போலி வங்கி ரசீதுகளால் ஏமாந்த கதை தெரிய வரும். ஹர்ஷத் மேத்தா சிக்க இது முக்கிய காரணமானது. 

SBI வங்கியானது PDO அலுவலகத்தில் துணைப் பொதுப் பேரேடு  (Subsidiary General Ledger - SGL) புத்தகத்தை ஆய்வு (Audit) செய்த போது கணக்குப்படி 500 கோடி ரூபாய் பணத்திற்கு ஏற்ப பத்திரங்களை ஹர்ஷத் மேத்தா பட்டுவாடா செய்யவில்லை என்பதும் போலி வங்கி ரசீதுகளை சமர்ப்பித்ததும் SBI வங்கி அறிந்ததும் ஹர்ஷத் மேத்தாவுக்கு இறுதிக் காலம் தொடங்கியது. பத்திரங்களை வழங்குமாறு அல்லது பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு SBI வங்கி ஹர்ஷத் மேத்தாவை வற்புறுத்தியது. ஹர்ஷத் மேத்தா ஊழல் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, பல வங்கிகளும் தங்கள் விசாரணையில் ஹர்ஷத் மேத்தா காரணமாக போலி வங்கி ரசீதுகளை வைத்திருப்பதை கண்டறிந்தன. அதற்குள் வங்கிகளில் 4,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்திருந்தார் ஹர்ஷத் மேத்தா. மேலும் ஹர்ஷத் மேத்தா வங்கிகளுடன் ஒரு தீர்வை (Settlement Plan) எட்டுவதற்குள் இவ்விஷயம் பத்திரிகையாளர் சுசேதா தலாலுக்கு எட்டியது.

பத்திரிகையாளர் சுசேதா தலால்

பங்கு தரகராக இருந்து கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார் ஹர்ஷத் மேத்தா. அவ்வகையில் ஒரு நாள் SBI அலுவலகத்திற்கு சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தம் புதிய டொயோட்டா லெக்ஸஸ் காரில் இருந்து ஹர்ஷத் மேத்தா இறங்குவதை கண்டு ஒரு தரகர் எப்படி இவ்வளவு செல்வதில் கொழிக்க முடியும் என்பதை அறிய பத்திரிகையாளர் சுசேதா தலால், ஹர்ஷத் மேத்தா பற்றிய தனது ஆராய்ச்சியை (Investigative Journalism) தொடங்கினார். 

இறுதியாக, தீவிர விசாரணைக்கு பிறகு SBI வங்கியின் SGL பிரச்சினையை அறிந்து கொண்டு 23 ஏப்ரல் 1992 அன்று ஹர்ஷத் மேத்தா சட்ட விரோதமாக பங்குச்சந்தைக்கு நிதி திரட்ட வங்கி முறையை எப்படி பயன்படுத்தினார் என்பதை The Times of India பத்திரிகையில் பத்திரிகையாளர் சுசேதா தலால் (Sucheta Dalal) அம்பலப்படுத்தினார். அதை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையே ஆட்டம் கண்டது. சுசேதா தலாலின் புலனாய்வு கட்டுரை ஹர்ஷத் மேத்தாவின் வாழ்வை புரட்டிப்போட்டது என்றல் மிகையல்ல.

1992 வழக்கு விபரம்

1992 இல் ஹர்ஷத் மேத்தா ஊழலின் உடனடி தாக்கம் பங்கு விலைகளில் கடும் சரிவுக்கு வழிவகுத்தது. சென்செக்ஸ் 4500 புள்ளிகளிலிருந்து 2500 வரை இறங்கி, பங்குச்சந்தை மூலதனத்தில் பலாயிரம் கோடி ரூபாய் சரிந்தன. ஹர்ஷத் மேத்தா மீது அரசு விதிமுறைகளில் உள்ள பாதுகாப்பு குறைகளின் வலைப்பின்னல் மூலம் சுமார் 5,000 கோடி ரூபாய் வரை ஊழல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. ஹர்ஷத் மேத்தா ஊழல் வழக்கில் ரிசர்வ வங்கி, SEBI, புலனாய்வுத் துறை, வரித்துறை, காவல்துறை என்று கிட்டத்தட்ட எல்லா அரசு இயந்திரங்களும் விசாரணையில் ஈடுபட்டன.

இதையெடுத்து, பங்குச்சந்தை ஊழலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹர்ஷத் மேத்தா, சகோதரர்கள் அஷ்வின் மேத்தா, சுதிர் மேத்தா மற்றும் சிலரை Central Bureau of Investigation (CBI) கைது செய்தது. ஹர்ஷத் மேத்தா மீது 72 கிரிமினல் வழக்குகள் (லஞ்சம், ஏமாற்றுதல், மோசடி, குற்றவியல் சதி மற்றும் கணக்கு ஆவணங்களை பொய்யாக்குதல்) மற்றும் அவர் செலுத்த வேண்டிய பணத்திற்காக வங்கிகள் மற்றும் நிறுவனங்களால் 600 க்கும் மேற்பட்ட சிவில் நடவடிக்கை வழக்குகளை CBI சுமத்தியது. 

Bank of Karad மற்றும் Meteropolitan Cooperative Bank போலி வங்கி ரசீதுகளை தயாரித்தது குறித்து விசாரிக்கப்பட்ட போது, அவர்களின் சொத்துக்களை விட கடன்கள் அதிகமாக இருந்ததால் அவை கலைக்கப்பட்டு மூடப்பட்டன. மேலும் ஹர்ஷத் மேத்தா ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் பல வங்கி மற்றும் நிதி நிறுவங்களின் தலைவர்கள் நீக்கப்பட்டனர், விடுவிக்கப்பட்டனர், தண்டிக்கப்பட்டனர், சிலர் ராஜினாமா செய்தனர். 1992 இல் நீதிமன்றத்தில் தனக்காக வாதாட தலைசிறந்த வழக்கறிஞர்களான ராம் ஜெத்மலானி மற்றும் பக்தாவை அமர்த்தினார் ஹர்ஷத் மேத்தா. 3 மாத காவலில் இருந்த ஹர்ஷத் மேத்தா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

ஜாமீனில் வெளிவந்த பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் "நவம்பர் 1991 இல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்து முதலில் 67 லட்சம் ரூபாயும் பின்னர் கூடுதலாக 33 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 1 கோடி ரூபாய் ஹர்ஷத் மேத்தா கொடுத்துள்ளார்" என்று வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்தார். ஹர்ஷத் மேத்தா தரப்பு கூறிய குற்றசாட்டை மறுத்து அப்படி ஒரு கூறிய சந்திப்பு நடைபெறவில்லை என்று பிரதமர் நரசிம்மராவ் அலுவலகம் மறுத்தது. 
1992 இல் ஹர்ஷத் மேத்தா ஊழலை விசாரிக்க ராம் நிவாஸ் மிர்தா தலைமையில் கூட்டு நாடாளுமன்றக் குழு மற்றும் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஜானகிராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் பங்குச்சந்தை ஊழல் குறித்து குழுவினர் கூறிய பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்படவில்லை அல்லது செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டு(ம்) வந்தார்

1992 பங்குச்சந்தை ஊழலை தொடர்ந்து சில காலம் அடக்கி வாசித்த ஹர்ஷத் மேத்தா 1998 இல் மீண்டும் களத்திற்கு வந்தார். அதையொட்டி, 1998 இல் ஹர்ஷத் மேத்தா வழிகாட்டலில் அவரது குடும்பத்தினர் தமயந்தி குழுமத்தை (Damayanti Group) தொடங்கினர். மேலும் ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசனைகளை பொது தளத்தில் பகிர்ந்து கொண்டு பங்குச்சந்தை குருவாக மீண்டு(ம்) வந்தார்.

1998 இல் தமயந்தி குழுமத்தை முன்னோடியாக (Front Entity) பயன்படுத்தி ஹர்ஷத் மேத்தா BPL, Videocon, Sterlite நிறுவனங்களுடன் இணைந்து கூட்டுசதியில் ஈடுபட்டு அதன் பங்குகளின் விலைகளை செயற்கையாக உயர்த்தியதாக SEBI அமைப்பு குற்றம் சாட்டியது. ஏப்ரல் 2001 இல் SEBI அமைப்பு ஹர்ஷத் மேத்தா பத்திரங்களை கையாள்வதற்கு வாழ்நாள் தடை விதித்தது. BPL, Videocon, Sterlite ஆகியவை முறையே 4, 3 மற்றும் 2 ஆண்டுகளுக்கு மூலதனச் சந்தையை அணுகுவதை தடை செய்தது. இது குறித்து விசாரணைகள் நடைபெற்றது தனிக்கதை. மொத்தத்தில் 1998 இல் மீண்டும் வந்த ஹர்ஷத் மேத்தாவின் மறுபிரவேச முயற்சி தோல்வியில் முடிந்தது.

இறுதி முடிவு 

1992 பலாயிரம் கோடி பங்குச்சந்தை ஊழல் தொடர்பாக ஹர்ஷத் மேத்தா மீது 72 கிரிமினல் வழக்குகள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் இருந்திருந்தாலும் 4 வழக்குகளில் மட்டுமே தண்டனை உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக Maruti Udyog Limited (MUL) நிறுவனத்திடமிருந்து சுமார் 39 கோடி ரூபாயை தனது தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்ற சதி செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையெடுத்து, செப்டம்பர் 1999 இல் மும்பை உயர்நீதிமன்றம் ஹர்ஷத் மேத்தாவை குற்றவாளி என அறிவித்து 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 

ஹர்ஷத் மேத்தா, தானே சிறைச்சாலையில் (Thane Prison) தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்டு தானே சிவில் சிறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பல வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 47 வயதில் 31 டிசம்பர் 2001 அன்று ஹர்ஷத் மேத்தா காலமானார். ஹர்ஷத் மேத்தாவின் மரணம் ஒரு சதி என்று வாதிடுபவர்களும் உண்டு.

சரியா? தவறா?

வங்கிகள் சிறிது கால அவகாசம் கொடுத்ததால் ஹர்ஷத் மேத்தா வங்கி நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். பரிவர்த்தனை விதிமுறைகளில் இருந்த பாதுகாப்பு குறைகளை (Security Lapses) பயன்படுத்தி ஹர்ஷத் மேத்தா செய்தது தவறென்பதில் ஐயமில்லை. ஆனால் இங்கே ஹர்ஷத் மேத்தா தவறு என்றால் வங்கிகள் அவரிடம் காட்டிய பரிவு ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு எதிரானது என்பதையும் பத்திரங்களின் பரிமாற்றம் குறித்த கண்காணிப்பில் கோட்டைவிட்டது ரிசர்வ் வங்கியின் தவறு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சுருங்கச்சொன்னால், இந்திய முதலீட்டு சந்தைக்கு அரசு அறுவை சிகிச்சை செய்திட ஹர்ஷத் மேத்தா நோயாளியாக வந்து சேர்ந்தார்.

ஒரு வேளை தீர்வு சுழற்சி முறைக்குரிய (Settlement Cycle) 14 நாட்கள் இடைவெளியை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி அல்லது தனது வங்கிக் கணக்கில் போதுமான இருப்பு வைத்திருந்து, தேவையான நேரத்தில் பணத்தை ஹர்ஷத் மேத்தா திருப்பி கொடுத்திருப்பார் என்றால் அவரது பரிவர்த்தனைகள் உண்மையானதாக நம்பப்பட்டு இருக்கும். ஆனால் தினசரி பங்குச்சந்தையில் சவாரி செய்யவும், அதற்குரிய பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஹர்ஷத் மேத்தா புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார். சுருங்கச்சொன்னால், பல போலி பரிவர்த்தனைகளை அடுத்தடுத்து செய்து திணறி மாட்டிக் கொண்டார் ஹர்ஷத் மேத்தா. மேலும், எப்போது வர்த்தக பகடையை (Trading Game) நிறுத்துவது என்பதை அறியாமல் விளையாடியது ஹர்ஷத் மேத்தாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஹர்ஷத் மேத்தாவை 1992 இந்திய பங்குச்சந்தை ஊழலின் ஒற்றை முகமாக மாற்றுவதன் மூலம், மற்ற சக்திவாய்ந்த நிறுவனர்கள் மற்றும் தரகர்கள் அரசியல்வாதிகளின் தயவிலிருந்து தப்பிக்க வழிவகை செய்யப்பட்டது என்று ஹர்ஷத் மேத்தாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ, "தலால்" தெருவில் தனது வாழ்க்கையை தொடங்கிய ஹர்ஷத் மேத்தாவின் கதை, 23 ஏப்ரல் 1992 அன்று ஹர்ஷத் மேத்தா பற்றி Times of India பத்திரிக்கையில் பத்திரிகையாளர் சுசேதா "தலால்" அம்பலப்படுத்தியதும் முடிந்தது.

SEBI Act, 1992

மின்னணு நடைமுறைக்கு முன்பு 1990 களின் தொடக்கத்தில் இந்திய முதலீட்டு சந்தையில் அனைத்து விதமான வர்த்தக பரிவர்த்தனைகளும் காகித அடிப்படையில் தான் நடைபெற்று வந்தது. மேலும் 1988 இல் உருவாக்கப்பட்ட SEBI அமைப்பு முதலீட்டு சந்தையை ஒழுங்குப்படுத்த மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை (Limited Powers) தான் கொண்டிருந்தது. அதாவது முதலீட்டாளர்களுக்கும் தரகர்களுக்கும் இடையே நடக்கும் பரிவர்த்தனைகளை மேற்பார்வையிட SEBI அமைப்புக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை ஏனெனில் இவ்விவகாரத்தை விசாரிக்கும் அதிகார வரம்பைக் கொண்ட ஒரே அமைப்பாக CBI மட்டுமே விளங்கி வந்தது.

ஹர்ஷத் மேத்தா ஊழல் குறித்த செய்திகள் வெளிவர தொடங்கிய காலத்தில் முதலீட்டு சந்தையின் ஒழுங்குமுறையில் நிலவிய இடைவெளி குறித்து அரசுக்கு தெரிய வந்ததால் முதலீட்டு சந்தைக்கென்று முறையான கண்காணிப்புக்குழுவை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை அரசுக்கு எழுந்தது. அவ்வாறு நிலவிய இடைவெளியை களையும் விதமாக (Bridge the Gap) 1992 முதல் SEBI அமைப்பு தன்னாட்சி அதிகாரத்துடன் (Autonomous Authority) இயங்க சட்டப்பூர்வ உரிமைகளை அளித்து SEBI Act, 1992 சட்டம் இயற்றப்பட்டது.

இதையெடுத்து, SEBI என்ற தன்னாட்சி அமைப்பு ஒரு வலுவான முதலீட்டு சந்தை கட்டுப்பாட்டாளராக உருவெடுத்தது. மேலும் முதலீட்டு சந்தையின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும் முதலீட்டாளர்களுக்கும் தரகர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனையை ஒழுங்குப்படுத்தவும் குறைபாடுகளை களையவும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக விசாரணை செய்யும் அமைப்பாகவும் SEBI அமைப்பு செயல்பட தொடங்கியது. மொத்தத்தில் 1992 ஹர்ஷத் மேத்தா ஊழல் SEBI அமைப்பை ஒழுங்குமுறை ஆணையம் என்ற நிலையில் இருந்து சட்டப்பூர்வ ஆணையம் என்ற நிலைக்கு உயர்த்தியது.
முடிவுரை

ஹர்ஷத் மேத்தா ஊழல், வங்கி பரிவர்த்தனைகளை மேற்பார்வையிட ரிசர்வ் வங்கியும் (Reserve Bank of India Act, 1934) முதலீட்டு சந்தை பரிவர்த்தனைகளை மேற்பார்வையிட SEBI அமைப்பும் (SEBI Act, 1992) சக்தி வாய்ந்த அமைப்பாக மாற்றப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தது. 1992 இல் பத்திரங்களை கொடுக்க அல்லது பணத்தை திரும்ப செலுத்த தீர்வு சுழற்சி முறை 14 நாட்களாக (T + 14) இருந்தது. இப்போது, SEBI அமைப்பு அதனை 1 நாளாக (T + 1) மாற்றி உள்ளது. தாராளமயமாக்கல் திட்டத்திற்கு பிறகு வர்த்தகக் கணக்கை மின்னணு மயமாக்குதல் (Digitalize), காகித வடிவிலான பங்குச் சான்றிதழை நீக்குதல் (Dematerialize), பத்திர வைப்புத்தொகைகளை (Depository) ஒழுங்குப்படுத்துதல் ஆகிய தொடர்புடைய விஷயங்களுக்கு Depositories Act, 1996 சட்டம் இயற்றப்பட்டது. இதையொட்டி, 1996 இல் இந்தியாவில் Demat Account அறிமுகம் செய்யப்பட்டது. பத்திர வைப்புத்தொகை நிறுவனங்களான NSDL (National Depository Services Limited, 1996) மற்றும் CSDL (Central Depository Services Limited, 1999) ஆகியவை SEBI அமைப்பின் வழிகாட்டலில் நிறுவப்பட்டது.

இவ்வாறு, வங்கி மற்றும் முதலீட்டுச் சந்தையின் பாதுகாப்பு அம்சங்கள் இன்று பல வழிகளில் மேம்பட்டிருந்தாலும், ஆங்காங்கே பொருளாதார ஊழல் நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது. எடுத்துக்காட்டாக, இன்றைய காலகட்டத்தில் Nirav Modi, Vijay Mallya, Mehul Choksi போன்றோர் வங்கிகளை ஏமாற்றி பொருளாதார ஊழலை செய்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இத்தகைய சூழலில், எதிர்காலத்தில் பொருளாதார ஊழலை தடுக்க இந்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.
இதர செய்திகள் 

மனு மானெக் - திருபாய் அம்பானி

1980 களின் பிற்பகுதியில், KR Choksey Shares and Securities நிறுவனரான மனு மானெக் (Manu Manek) இந்திய பங்குச்சந்தையில் புகழ்பெற்ற ஆளுமையாக விளங்கினார். The Black Cobra என்று அழைக்கப்பட்ட மனு மானெக், பங்கு தரகர்கள் வலைப்பின்னலின் ராஜா என்று அறியப்படுகிறார். அக்காலத்தில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த மனு மானெக்கின் ஆதரவை நிறுவனங்கள் பாராட்டின.

பங்குச்சந்தையில் மனு மானெக் Bear Cartel என்ற குழுவை உருவாக்கினார். அதில் மனு மானெக்கின் பிரபலமான கூட்டாளிகளாக Triple R (Radhakishan Damani, Rakesh Jhunjhunwala, Chartist Raju) இருந்தனர். பங்குச்சந்தையில் மனு மானெக் குழுவும் ஹர்ஷத் மேத்தா குழுவும் பலமுறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். Radhakishan Damani, Rakesh Jhunjhunwala, Chartist Raju, Nimesh Shah, Shankar Sharma, Dinesh Dalmia, Ajay Kayan, Raamdeo Agrawal, Nimesh Kampani உட்பட பல்வேறு வர்த்தக முதலீட்டாளர்களுக்கு மனு மானெக் குருவாக விளங்கினார். தற்போது Radhakishan Damani மற்றும் Rakesh Jhunjhunwala ஆகிய இருவரும்  Forbes பத்திரிகை வெளியிடும் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் வருடாவருடம் இடம் பிடிப்பதுண்டு. இதில், Rakesh Jhunjhunwala அண்மையில் (14 ஆகஸ்ட் 2022) இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1980 களில் மனு மானெக்கின் வழிகாட்டலில் Bear Cartel குழுவினர் பங்குச்சந்தையில் Reliance பங்குகளை குறுகிய விற்பனை (Short Selling) செய்து வந்தனர். இதனால், Reliance பங்குகள் சரியத் தொடங்கின. பங்குச்சந்தையில் மனு மானெக்கின் செயலுக்கு எதிர்த் தாக்குதல் நடத்தவும் Bear Cartel குழுவினரின் ஆட்டத்தை தடுக்கவும் எண்ணி Reliance நிறுவனர் Dhirubhai Ambani தனது நம்பிக்கைக்குரியவராக Anand Jain என்பவரை பணிக்கு அமர்த்தினார். Bear Cartel குழுவினர் குறுகிய விற்பனை செய்த Reliance பங்குகளை Anand Jain குழுவினர் அதிரடியாக வாங்கத் தொடங்கினர். அதாவது மனு மானெக் Reliance பங்குகளை எவ்வளவு அதிகமாக விற்றாரோ அவ்வளவு அதிகமாக Anand Jain வாங்கினார். அதையெடுத்து, Reliance பங்குகளின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது.

குறுகிய விற்பனை செயல் திட்டத்தின்படி கடனுக்கு வாங்கிய Reliance பங்குகளை விற்றுவிட்டு விலை குறைந்த பின் Reliance பங்குகளை மீண்டும் வாங்கி லாபம் ஈட்ட திட்டமிட்டது Bear Cartel குழு. ஆனால் Dhirubhai Ambani வழிகாட்டலில் Anand Jain அதிரடியில் Reliance பங்குகளின் விலை குறையாமல் உயர்ந்தது. மொத்தத்தில் Bear Cartel குழுவினர் யூகித்தப்படி Reliance பங்குகளின் விலை குறையாமல் எகிறியது. அதனால் விலையேறிய Reliance பங்குகளை நஷ்டத்திற்கு திரும்ப வாங்குவதை தவிர Bear Cartel குழுவுக்கு வேறு வழியில்லை. ஒரே நாளில் இவ்வளவு பெரிய பரிவர்த்தனையை செய்ய Bear Cartel குழுவால் முடியவில்லை. 

இப்போது, Reliance வர்த்தகர்கள் தொகையை முறையாக செலுத்துமாறு கேட்டனர் ஆனால் Bear Cartel குழு மறுத்துவிட்டது. இதையடுத்து, Bear Cartel மற்றும் Dhirubhai Ambani இடையே ஏற்பட்ட நெருக்கடியால் இந்திய பங்குச்சந்தை 3 நாட்களுக்கு மூடப்பட்டது. இந்த இடைப்பட்ட நாட்களில் பேச்சுவார்த்தை மூலம் Anand Jain குழுமத்திடம் நிலுவைத் தொகையை செலுத்த Bear Cartel குழு ஒப்புக்கொண்ட பின்னர் பங்குச்சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.
// Short Selling //

குறுகிய விற்பனை (Short Selling) என்பது ஒரு வர்த்தகர் ஒரு தரகரிடம் இருந்து பங்குகளை கடனாக பெற்று, விரைவில் பங்கு விலை குறையும் என்ற எதிர்பார்ப்புடன் உடனடியாக அவற்றை விற்பதாகும். அப்படி செய்தால், வர்த்தகர் குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார், பின்னர் அவற்றை தரகரிடம் திருப்பித் தருகிறார், மேலும் அந்த வித்தியாசத்தை லாபமாக தக்க வைத்துக் கொள்கிறார்.

எடுத்துக்காட்டு =  X நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை 300 ரூபாய் ஆனால் ஒரு வாரத்தில் அதன் பங்கு விலை குறையும் என ரமேஷ் எதிர்பார்க்கிறார். X நிறுவனத்தின் 10 பங்குகளை தனது தரகரிடம் இருந்து 3000 ரூபாய்க்கு கடன் வாங்கி பங்குகளை தற்போதைய சந்தை விலையான 300 ரூபாய்க்கு ரமேஷ் விற்கிறார். X நிறுவனத்தின் பங்கு விலை ஒரு வாரத்தில் கணித்தபடி 250 ரூபாய்க்கு குறைந்ததால் ரமேஷ் 10 பங்குகளை 2500 ரூபாய்க்கு வாங்குகிறார். அவர் கடன் வாங்கிய பங்குகளை தரகரிடம் திருப்பித் தருகிறார். இங்கு ரமேஷுக்கு நிகர லாபம் 500 ரூபாய் (3,000 - 2,500). X நிறுவனத்தின் பங்கு விலை ரமேஷின் யூகத்திற்கு மாறாக 400 ரூபாய் ஆக உயர்ந்தால் ரமேஷ் 1000 ரூபாய் (3,000 - 4,000) இழக்க நேரிடும்.

ப.சிதம்பரம் ராஜினாமா 

1990 இல் ஹர்ஷத் மேத்தா குழுவினரால் தொடங்கப்பட்டது Fairgrowth Investments Limited நிறுவனம். Fairgrowth Investments Limited நிறுவனத்தின் சந்தை விலை அதிகமாக இருந்தாலும், இந்நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான பங்குகளை விளம்பரதாரர் ஒதுக்கீடு மூலம் குறைந்த முக மதிப்பில் வர்த்தகத்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வாங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது.

எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால், ஹர்ஷத் மேத்தா தொடர்பான நிறுவனத்தில் தனது மனைவி முதலீடு செய்தது முறையற்றதாக கருதப்பட்டால் ராஜினாமா செய்ய தயார் என பிரதமர் நரசிம்மராவுக்கு ப.சிதம்பரம் கடிதம் எழுதினார். இதையெடுத்து, பிரதமர் நரசிம்மராவ் ஆலோசனையின் பேரில் வர்த்தகத்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஏற்றுக் கொண்டார். 

இதனிடையே, ப.சிதம்பரம் மனைவி மீதான முறைகேடு தொடர்பாக CBI விசாரணை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதா கட்சி மனு தாக்கல் செய்தது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அருண் ஜெட்லி, ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக வாதாடி ஜனதா கட்சி மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வழிவகை செய்தார் என்பதும் நரசிம்மராவ் அமைச்சரவையில் இருந்து விலகிய ப.சிதம்பரம், 1995 இல் மீண்டும் வர்த்தகத்துறை அமைச்சரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவரணைகள் 


Harshad Mehta claims to have paid 1 Crore to PM Narasimha Rao



Top Government functionaries also accused by JPC


Securities Scam Genesis, Mechanics and Impact

https://www.jrvarma.in/papers/vik18-1.pdf

Harshad Mehta remanded to Police Custody


Documentary on Harshad Mehta 1


Documentary on Harshad Mehta 2


How Harshad Mehta did it again?



Harshad Mehta is Dead

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

3 comments:

  1. அருமையான கட்டுரை

    ReplyDelete
  2. இந்த கால ( 1990) கட்டத்தில் மிகவும் பிரபலங்கள் எப்படி
    எல்லாம் கொள்ளை அடித்தார்கள் என்பதை
    அன்று தமிழ்வாணன் துப்பறியும் கதை போல
    சுவரசியமாக படித்ததை இன்று அப்படியே
    படித்த உணர்வு தகவல்கள் என்றும் புண்ணிய
    தீர்த்தங்களில் முழ்கி நீர்த்துப்போவதில்லை.
    நன்றி.
    முடிந்தால் கார்வி ஸ்டாக் புரோக்கர்ஸ் தனது
    வாடிக்கையாளர்களோடு விளையாடினார்கள்
    என்பதை எழுதலாமே🕯️🪔

    ReplyDelete

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...