Chocks: November 2023

Wednesday, November 29, 2023

பிணவறை வழக்கு

பிணவறை வழக்கு

பொருளடக்கம் 
  1. முகவுரை
  2. என்ன பந்தயம்?
  3. பந்தயத்தை ஏற்ற நண்பர்
  4. சடலத்தின் அருகில் சடலமாய்
  5. குற்றவாளியான நண்பர்
  6. முடிவுரை
  7. துணுக்கு செய்தி 
  8. விவரணைகள் 
முகவுரை

1977 ஆம் ஆண்டில் கோட்டயம் மருத்துவ கல்லூரியை சேர்ந்த நண்பர்களான இரண்டு மருத்துவ மாணவர்கள் துணிச்சலை பற்றி உரையாடினர். இவ்விவாதமானது அவர்களுக்கிடையே ஒரு பந்தயத்தை முன்மொழிவதில் முடிந்தது.

என்ன பந்தயம்?

“பகல் நேரத்தில் பிணவறையில் ஒரு சடலத்தின் உதட்டில் அடையாளக்குறியுடன் கூடிய சிகரெட் (Marked Cigarette) வைக்கப்படும் எனவும் பந்தயத்தை ஏற்பவர் நள்ளிரவு 12 மணிக்கு மருத்துவ கல்லூரியின் பிணவறைக்கு சென்று சடலத்தின் உதட்டில் இருந்து அந்த சிகரெட்டை எடுத்து வர வேண்டும்” என பந்தயம் முடிவு செய்யப்பட்டது.

பந்தயத்தை ஏற்ற நண்பர்

வினையான விவாதத்தில் பந்தயத்தை ஏற்று கொண்ட நண்பர் நள்ளிரவு 12 மணிக்கு விடுதியில் இருந்து கிளம்பி பிணவறையை நோக்கி சென்றார். பிணவறைக்கு வெளியே இருந்த காவலாளி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். சடலங்கள் வைக்கப்பட்டிருந்த பிணவறையை முன் ஏற்பாடு செய்யப்பட்ட சாவியுடன் திறந்து அமைதியாக நுழைந்தார். சடலத்தின் உதட்டில் சிகரெட் இருப்பதை அறிந்து கொள்ள தீக்குச்சி வெளிச்சத்தை பயன்படுத்தினார்.

சடலத்தின் அருகில் சடலமாய்

தனது நண்பர் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு சடலத்தின் உதட்டில் சிகரெட் இருப்பதை நண்பர் கண்டார். சடலத்தின் உதட்டில் இருந்து சிகரெட்டை எடுக்க நண்பர் தனது கையை நீட்டிய போது, ​​சடலத்தின் உதடுகள் அசைவதை கவனித்தார், அடுத்த நொடியில், சிகரெட் மறைந்தது. அசையும் சடலத்தையும் திடீரென சிகரெட் காணாமல் போனதையும் கண்ட நண்பர் அதிர்ச்சியில் மூழ்கினார். தீவிர அதிர்ச்சியின் விளைவாக திகிலடைந்த நண்பர் சடலத்தின் அருகில் சரிந்து விழுந்து இறந்தார்.

குற்றவாளியான நண்பர்

விசாரணையின் தொடக்கத்தில் கோட்டயம் காவல்துறைக்கு தலைவலியாக அமைந்த இவ்வழக்கு இறுதியில் பந்தயத்தை பரிந்துரைத்த நண்பர் தான் குற்றவாளி என்பதை கண்டறிந்து அவரை கைது செய்தது.

பந்தயத்தை பரிந்துரைத்த நண்பர் அதன்படி நடக்காமல் தனது சக நண்பரை திகிலூட்டும் நோக்கில், பிணவறையில் சடலங்களுக்கு இடையே மறைந்து கொண்டு குறிப்பிட்ட சடலத்தை மெல்ல அசைத்து, வெளிச்சம் இல்லாத நேரத்தில் சிகரெட்டை மறைத்து, இறந்து போன நண்பரை அதிர்ச்சியூட்டி இருக்கிறார். நீதிமன்றம், அந்நண்பரை குற்றவாளி என தீர்ப்பளித்து சிறைத் தண்டனை விதித்தது.

முடிவுரை

“பெரிய சித்தப்பா இறந்ததை பத்தி சின்ன சித்தப்பாகிட்ட கேக்க வந்தா, வந்த இடத்துல தீடீர்னு சின்ன சித்தப்பாவும் இறந்து போனார்” என்ற வாய்மொழி சொலவடை உண்டு. அது போல “சடலத்தை தேடி போன நண்பரும் சடலமாகி போனார்”. துணிச்சலை பற்றிய விவாதத்தின் வெளிப்பாடாக விளையாட்டுக்கு செய்யப்பட்ட பந்தயம் ஒரு விபரீத விளையாட்டாக மாறிவிட்டது. மேலும் உண்மை என்று பரவலாக அறியப்பட்ட இந்த வழக்கின் பிற விவரங்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

துணுக்கு செய்தி 

பிணவறை வழக்கின் கதையை தழுவி Mortuary என்ற மலையாளம் திரைப்படம் 1983 இல் வெளியானது. மலையாள திரைப்படத்தை தழுவி Amma Pillai என்ற தமிழ் திரைப்படம் 1990 இல் வெளியானது. Amma Pillai திரைப்படத்தில் ஜெயலலிதாவின் 1990 காலகட்ட அரசியலை S.S.சந்திரன் மற்றும் கோவை சரளா நையாண்டி செய்திருப்பர்.
விவரணைகள் 

Mortuary Movie


Amma Pillai Movie


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Sunday, November 5, 2023

நுழைவுத் தேர்வை ரத்து செய்த கலைஞர்

நுழைவுத் தேர்வை ரத்து செய்த கலைஞர்
பகுதி 1 

# 09.06.2005 தேதியிட்ட அரசாணையின்படி (G.O Ms 184) நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற ஜெயலலிதாவின் உத்தரவை எதிர்த்து பிரியதர்ஷினி என்பவர் 2005 இல் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதாவின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தலைமையிலான அமர்வு ரத்து செய்தது. 

பகுதி 2 

# பிரியதர்ஷினி தொடர்ந்த வழக்கில், அன்றைய உயர்நீதிமன்றம், நுழைவுத் தேர்வு கூடாது என்று ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு நினைத்தால், அதற்கு முறையான சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

பகுதி 3 

# G.O ஆணை செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, 2006 இல் Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act என்ற சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதலின்றி ஜெயலலிதா இயற்றினார், மைனர் நிஷாந்த் ரமேஷ் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்தது. 

பகுதி 4 

# குடியரசு தலைவரின் ஒப்புதலை பெரும் முயற்சியில் ஈடுபடாமல் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் சென்றார். 

# இதற்கிடையே, 2006 இல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 

# இதையடுத்து, பதவியேற்ற தி.மு.க அரசு சார்பில், ஜெயலலிதாவை போல "தும்பை விட்டு வாலை பிடிக்காமல்" நுழைவுத் தேர்வை முறைப்படி ரத்து செய்ய இயற்றிய சட்டத்தை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார் முதல்வர் கலைஞர். 

# கலைஞரின் அரசு இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி அப்துல் கலாம்.

# அதன்படி கலைஞரின் முறையான முயற்சியால் 07.03.2007 அன்று நுழைவுத் தேர்வுக்கு முடிவுரை எழுதப்பட்டது. 

# இது தான் நுழைவுத் தேர்வு ரத்துக்கான உண்மை வரலாறு.

2005-2006 கதையின் சுருக்கம்

பிரியதர்ஷினி வழக்கில், நுழைவுத் தேர்வை ரத்து செய்ய உரிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. ஆனால், நீதிமன்ற அறிவுரைப்படி ஜனாதிபதி ஒப்புதலை பெற ஜெயலலிதா முயற்சியே செய்யவில்லை.

பிரியதர்ஷினி வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அறிவுரையை முறையாக கேட்காமல் ஜெயலலிதா தொடர்ந்து செயல்பட்டதால் மைனர் நிஷாந்த் வழக்கிலும் ஜெயலலிதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முறைப்படி சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அதை ரத்து செய்தார் கலைஞர்.

நுழைவுத் தேர்வு கடந்து வந்த பாதை 

1984 இல் MGR தலைமையிலான அ.தி.மு.க அரசு, தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து, 1984-85 முதல் Tamil Nadu Professional Courses Entrance Examination (TNPCEE) அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரின் நலனுக்காக போராடிய பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் கொள்கைகளுக்கு எதிரானது நுழைவுத் தேர்வு முறை என்று தி.மு.க கடுமையாக எதிர்த்தது.

1997 இல் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு, ஒற்றை சாளர சேர்க்கை முறை (Single Window Admission System) அறிமுகப்படுத்தியது. அதுவரை, மாணவர்கள் பல கல்லூரிகளுக்கு பல விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால், ஒற்றை சாளர முறை மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கையை ஒரே அமர்வில் உறுதி செய்தது.

2005 இல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு, மாணவர்களை பாதிக்கும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். நீதிமன்ற அறிவுறுத்தலை பின்பற்றி வாக்குறுதியை முறையாக செயல்படுத்த ஜெயலலிதா முயற்சிக்கவில்லை. ஜனாதிபதியுடன் ஒப்பிடும்போது தன்னை உயர்ந்தவர் என்று ஜெயலலிதா நினைத்து கொண்டார் போலும். ஒரு வழியாக அதன் பின்னர், 2006 இல் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு, ஜனாதிபதி ஒப்புதலுடன் Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act, 2006 மூலம் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் அவை சார்ந்த இதர படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பின் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற கடைசி TNPCEE தேர்வு

Examination = 18-19 May 2006 

Results = 04 June 2006 

நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி கலைஞர் எடுத்த முயற்சியால், 2007 முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, +2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் கல்லூரி கலந்தாய்வு முறை உறுதி செய்யப்பட்டது. 

குறிப்பு = அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனிரத்னா ஆனந்தகிருஷ்ணன், உயர்கல்விக்கான நுழைவு தேர்வை ரத்து செய்து, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை முறையை அறிமுகப்படுத்திய தி.மு.க அரசின் கொள்கை வரைமுறைக்கு (Policy Formation) வழிகாட்டியாக இருந்தார்.
விவரணைகள் 

G.O Ms No 184 (09.06.2005)


Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act, 2006 


N.Priyadarshini vs The Secretary To Government on 27 June, 2005


Minor Nishanth Ramesh vs The State Of Tamil Nadu on 27 February, 2006 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

காந்தி அகிம்சைவாதியா?

காந்தி அகிம்சைவாதியா?
1. முதல் உலக போருக்கு பிறகு பிரிட்டன் அரசு இந்தியாவுக்கு அரசியல் சுதந்திரத்தை வழங்கும் என்ற நம்பிக்கையில் தன்னார்வ நிதி திரட்டும் பிரச்சாரங்களை மேற்கொள்ள இந்தியர்களை காந்தி ஊக்குவித்தார்.

2. முதல் உலக போருக்கு பிறகு, 1919 இல் "மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்" மூலம் பிரிட்டன் ஆட்சியில் இந்தியர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 

3. இரண்டாம் உலக போரில் இந்திய ஆதரவுக்கான நிபந்தனையாக இந்தியாவிலிருந்து பிரிட்டன் அரசு வெளியேற வேண்டும் என்று காந்தி கோரினார்.

4. காந்தியின் கோரிக்கையை பிரிட்டன் அரசு ஏற்காததால், 1942 இல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை காந்தி தொடங்கினர். 

5. இரண்டாம் உலக போர் தீவிரமடைந்து, இந்தியாவில் ஜப்பானிய படையெடுப்பின் சாத்தியமான அச்சுறுத்தல் எழுந்ததால், பிரிட்டனின் போர் முயற்சியை ஆதரிக்க காந்தி ஒப்புக் கொண்டார்.

6. அதே நேரத்தில் இரண்டாம் உலக போருக்கு பிறகு, பிரிட்டன் அரசு இந்தியாவுக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை காந்தி விதித்தார். 

7. இந்திய ராணுவ வீரர்கள் போராட காந்தி இசைவு தெரிவித்தது அவரது அகிம்சை கொள்கைக்கு எதிரானது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

8. பாசிசத்தை முறியடிக்கும் உலக போரை ஆதரித்த காந்தி, நேதாஜியை ஏன் ஆதரிக்கவில்லை என்று நேதாஜி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

9. வரலாற்று தரவுகளின்படி, அம்பேத்கரின் கோரிக்கை மீதான காந்தியின் செயல்பாடும், இந்து மதம் குறித்த காந்தியின் கருத்தும் சர்ச்சைக்குரியவை.

10. காந்தியை மேற்கூறியவாறு பல அடுக்குகளில் ஆய்வு செய்யலாம், ஆனால் அதே நேரத்தில் காந்தியின் அகிம்சை எதிர்ப்பு பிரிட்டன் அரசின் அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருந்ததை மறுக்க இயலாது.

11. 1917 இல் சம்பாரண் இயக்கம், 1918 இல் கெடா இயக்கம், 1919 இல் கிலாபத் இயக்கம், 1920 இல் ஒத்துழையாமை இயக்கம், 1930 இல் கீழ்ப்படியாமை இயக்கம் மற்றும் 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவை காந்தியின் முக்கிய அகிம்சை இயக்க போராட்டங்கள் ஆகும்.

12. ஏற்கனவே உள்ள அமைப்புக்குள் இருந்து கொண்டு அமைப்பை சீர்ப்படுத்த முயன்ற காந்தியின் கருத்துக்கள் மற்றும் வழிமுறைகளுடன் உடன்படாத இந்துத்துவா குழுவின் உறுப்பினரான நாதுராம் கோட்சேவால் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

13. அகிம்சையை தீவிரமாக பின்பற்றிய காந்தியை பற்றிய சிலரது தவறான நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய "காந்தி அகிம்சைவாதியா?" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது.

14. ஆம்! காந்தி அகிம்சைவாதி தான். "காந்தி அப்படி செய்திருக்கலாம்! காந்தி இப்படி செய்திருக்கலாம்!" என்று நாம் பேசி போராட வேண்டியது காந்திக்கு எதிராக அல்ல மாறாக காந்தியின் கொள்கைகளுக்காக அவரை வெறுக்கும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

"அகிம்சைவாதியாக வாழ்ந்த காந்தி 

இறுதியில் கொல்லப்பட்ட காந்தி" 

இதுவே காந்தியின் இரண்டடி சுருக்கமாகும்.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Saturday, November 4, 2023

இந்தியாவின் சுதந்திர போராட்டம் - அகிம்சைக்கு அப்பால்

இந்தியாவின் சுதந்திர போராட்டம் - அகிம்சைக்கு அப்பால்

பொருளடக்கம்
  1. முகவுரை
  2. சிற்றரசர்களின் போராட்டம்
  3. வேலூர் கிளர்ச்சி
  4. 1857 கிளர்ச்சி
  5. சபேக்கர் சகோதரர்கள்
  6. புரட்சிகர இயக்கங்களின் எழுச்சி
  7. கெதர் இயக்கத்தின் முயற்சி
  8. கிறிஸ்மஸ் தின சதி
  9. ஜாலியன் வாலாபாக் படுகொலை
  10. பகத் சிங்கின் புரட்சி
  11. இந்தியா தேசிய ராணுவம்
  12. அன்றும் இன்றும்
  13. முடிவுரை
  14. விவரணைகள்
முகவுரை

ஆரம்பத்தில் வணிக நோக்கங்களுடன் வந்து பின்னர் அரசர்களுக்கு இடையிலான மோதல்களை பயன்படுத்தி இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்தனர். இத்தகைய ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை சுற்றியுள்ள மேலாதிக்க தகவல்கள், காந்தியின் அகிம்சை பிரச்சாரத்தை மட்டுமே முன்னிறுத்துகிறது. இந்த வரலாற்று மரபின் தாக்கம் உலக அரங்கில் தொடர்ந்து எதிரொலிக்கிறது. எவ்வாறாயினும், இந்தியாவின் சுதந்திர போராட்டமானது ஒப்பீட்டளவில் குறைவாக அறியப்பட்ட புரட்சி பரிமாணத்தையும் உள்ளடக்கியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிற்றரசர்களின் போராட்டம்

17 ஆம் நூற்றாண்டில் வணிக நோக்கத்திற்காக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் ஒரு கட்டத்தில் நமது அரசுகளுக்கு எதிராக தங்களது இராணுவ படைகளுடன் நின்றார்கள். அப்படிப்பட்ட ஆங்கிலேய அரசுக்கு எதிராக 18 ஆம் நூற்றாண்டில் முத்து வடுகநாதர், மருது பாண்டியர்கள், வேலு நாச்சியார், குயிலி, பூலித்தேவன், ஒண்டிவீரன், அழகுமுத்து கோன், கட்டபொம்மன், ஊமைத்துரை, சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, மருதநாயகம், ஹைர் அலி, திப்பு சுல்தான், உய்யலவாடா நரசிம்ம ரெட்டி, வேலுத்தம்பி, பழங்குடியினர் போன்றோர் போராடி மடிந்தார்கள்.
வேலூர் கிளர்ச்சி

சிப்பாய்களின் உடை மற்றும் தோற்றத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்துக்கள் நெற்றியில் விபூதி, நாமம், திலகம் ஆகியவற்றை இடக்கூடாது மற்றும் முஸ்லீம்கள் தாடி, மீசையை மழிக்க வேண்டும் என்ற ஆங்கிலேய அரசின் உத்தரவு, மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் முயற்சி என்று சிப்பாய்கள் நினைத்தனர். இது 1806 ஆம் ஆண்டு வேலூர் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. இது 1857 இந்திய கிளர்ச்சிக்கு அரை நூற்றாண்டுக்கு முந்தையது. சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்களை கொன்று காலையில் வேலூர் கோட்டையை கைப்பற்றி மைசூர் சுல்தானகத்தின் கொடியை சிப்பாய்கள் ஏற்றினார்கள். ஆங்கிலேய அரசு வேலூர் கிளர்ச்சியை ஒரே நாளில் அடக்கியது. 1857 கிளர்ச்சி போன்ற உடனடி வெளிப்புற ஆதரவு இல்லாதது வேலூர் கிளர்ச்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
1857 கிளர்ச்சி

ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்திய தோட்டாக்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் இந்துக்களை புண்படுத்தும் மாட்டிறைச்சி கொழுப்பும், இஸ்லாமியர்களை புண்படுத்தும் பன்றி இறைச்சி கொழுப்பும் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பின்னணியில் 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய வீரர்கள் கிளர்ச்சி செய்தனர். டெல்லி, ஆக்ரா, கான்பூர் மற்றும் லக்னோ வரை பரவிய கலகத்தை ஆங்கிலேயர்கள் நசுக்கினர் ஆனால் அவர்களது அதிகார வளர்ச்சி கேள்விக்குள்ளானது. அதையொட்டி கலகத்தின் வழக்கு விசாரணையானது கிழக்கிந்திய கம்பெனியின் திறமையின்மையின் மீது விழுந்தது. 1858 ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றம் இந்திய அரசாங்க சட்டத்தை நிறைவேற்றி இந்தியா மீதான அதிகாரத்தை கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்திடமிருந்து பிரிட்டனின் நேரடி கண்காணிப்புக்கு மாற்றியது.
சபேக்கர் சகோதரர்கள்

1897 ஆம் ஆண்டு புனே நகரில் பிளேக் தொற்றுநோய்க்கு தீர்வு காணும் நோக்கில் முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்கு பொறுப்பான ஆங்கிலேய அதிகாரியான W.C.ராண்ட் என்பவரை சபேக்கர் சகோதரர்கள் படுகொலை செய்தனர். குடியிருப்புகளுக்குள் கட்டாய ஊடுருவல், நோயாளிகளை கொடுமைப்படுத்தல், பெண்களை இழிவுபடுத்தல் உள்ளிட்ட பிளேக் தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு கொடுங்கோலன் ராண்டின் மதிப்பீடுகள் மிருகத்தனமானவை என்று குற்றம் சாட்டி சபேக்கர் சகோதரர்கள் அவரை படுகொலை செய்தனர். 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு பிறகு, சபேக்கர் சகோதரர்கள் ஆங்கிலேய அதிகாரி W.C.ராண்டை கொலை செய்த சம்பவம் போர்க்குணமிக்க தேசியவாதத்தின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வாக அமைந்தது.
புரட்சிகர இயக்கங்களின் எழுச்சி

1905 ஆம் ஆண்டு வங்காளத்தின் சர்ச்சைக்குரிய பிரிவினைக்கு பிறகு, வன்முறையற்ற அகிம்சை ஆர்ப்பாட்டங்களை விட வன்முறையுடன் கூடிய புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு சவாலாக அமைந்தது. 1911 இல் வங்காள பிளவு திரும்ப பெறப்பட்டாலும், புரட்சிகர அமைப்புகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ரகசியமாக செயல்பட தொடங்கின. சுதந்திரத்திற்கான ஒரு கருவியாக கிளர்ச்சியை மையமாக கொண்ட பல்வேறு இந்திய பத்திரிகைகள் வாசகர்களிடையே விரைவாக பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

கெதர் இயக்கத்தின் முயற்சி

1914 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராட, புலம்பெயர்ந்த இந்திய புரட்சியாளர்கள் ஒன்றிணைந்து, சீக்கியரான சோகன் சிங் பக்னா தலைமையில், அமெரிக்காவில் கெதர் இயக்கம் என்ற புரட்சிகர அமைப்பை உருவாக்கினர். இந்தியாவின் வைஸ்ராயை கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த புரட்சியாளரான ராஷ் பிகாரி போஸ் தலைமையின் கீழ், கெதர் இயக்க உறுப்பினர்கள் 1915 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியை தூக்கியெறிய வேண்டும் என்ற இறுதி நோக்கத்துடன், வட இந்தியாவில் ஒரு கிளர்ச்சியை உருவாக்க திட்டமிட்டனர். இதன்படி, லாகூர், ராவல்பிண்டி மற்றும் மீரட் ஆகிய இடங்களில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தை கலகம் செய்ய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், ஆங்கிலேய அரசின் சார்பாக தகவல் கொடுப்பவர் (Informer) புரட்சிகர குழுவிற்குள் ஊடுருவ முடிந்தது. அது புரட்சிகர நடவடிக்கையை ஒடுக்குவதற்கும் தீவிர சித்தாந்தங்களைக் கொண்ட பலரை கைது செய்வதற்கும் வழிவகுத்தது.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கலகத்தை தூண்டுவதை நோக்கமாக கொண்ட கெதர் இயக்கத்தின் முயற்சி தோல்வியடைந்தது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான முக்கிய சதிகாரராக ராஷ் பிகாரி போஸ் அடையாளம் காணப்பட்டார். ஆங்கிலேயர்களால் கைது செய்யப்படுவதை தவிர்க்க, ராஷ் பிகாரி போஸ் ஜப்பானுக்கு தப்பி சென்றார். அவர் 1940 களில் ஜப்பானில் இந்திய தேசிய இராணுவத்தை வழி நடத்தினார்.
கிறிஸ்மஸ் தின சதி

1906 ஆம் ஆண்டு ஆயுத போராட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தரும் நோக்கத்துடன் பாகா ஜதின், ஜதீந்திர நாத் பானர்ஜி, அரவிந்தோ கோஷ், பேரின் கோஷ், ஹேமச்சந்திர கனுங்கோ, உபென் பானர்ஜி போன்ற தலைவர்கள் இணைந்து ஜுகாந்தர் என்ற புரட்சிகர அமைப்பை கொல்கத்தாவில் உருவாக்கினர். 

1915 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த இந்திய புரட்சியாளர்கள், கொல்கத்தாவிற்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் நோக்கத்துடன் அன்னி லார்சன் மற்றும் மேவரிக் ஆகிய இரண்டு கப்பல்களை கைப்பற்றினர். அவர்கள் அந்தமான் தீவுகளின் சிறைச்சாலைகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி சிறையில் அடைக்கப்பட்ட புரட்சியாளர்களை விடுவிக்கவும் இந்திய கடற்கரை மீது ஆதிக்கம் செலுத்தி வந்த ஆங்கிலேய அரசை அச்சுறுத்தவும் கிளர்ச்சிக்கு திட்டமிட்டனர். கிறிஸ்மஸ் தின சதி என அழைக்கப்பட்ட கிளர்ச்சி, முந்தைய கெதர் இயக்கத்தின் கிளர்ச்சியை போலவே, ஆங்கிலேய அரசின் உளவுத்துறை சேவைகளால் முறியடிக்கப்பட்டது.
1900 காலகட்ட புரட்சிகர இயக்கங்களின் நடவடிக்கைகளின் விளைவாக, 1916 ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு சட்டம் உட்பட கடுமையான போர்க்காலச் சட்டம் இயற்றப்பட்டது. பல போராளிகளின் கைது செய்யப்பட்டனர். புரட்சி இயக்கங்கள் இரகசிய நடவடிக்கைகளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை

முதலாம் உலக போருக்கு பிறகு, பிப்ரவரி 1919 ஆம் ஆண்டு ரவுலட் சட்டம், முறையான விசாரணைகள் இல்லாமல் கைது செய்யப்படுவதையும், நடுவர் மன்றம் இல்லாத விசாரணையையும் அனுமதிப்பதன் மூலம் ஆங்கிலேய அதிகாரத்தை பலப்படுத்தியது. ஏப்ரல் 1919 ஆம் ஆண்டு ரவுலட் சட்டத்திற்கு எதிராகவும் சுதந்திர போராட்ட வீரர்களான சைபுதீன் கிட்ச்லேவ் மற்றும் சத்யபால் ஆகியோரின் கைதுக்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவிக்க அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் அமைதியான முறையில் மக்கள் கூட்டம் கூடியது. கர்னல் ரெஜினோல்ட் டயர் உத்தரவின் பேரில் ஆங்கிலேய படைகள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதன் விளைவாக சுமார் 1500 பேர் கொல்லப்பட்டனர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை எனப்பட்ட இந்நிகழ்வு குறிப்பிடத்தக்க அளவில் மக்களின் சீற்றத்தை தூண்டிய நிலையில், ஆங்கிலேய அரசின் வெறுப்பை முறியடிக்க புரட்சியை துறந்து அன்பை மட்டுமே மக்கள் பிரத்தியேகமாக பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தி ரவுலட் சட்டத்திற்கு எதிராக சத்தியாகிரகம் செய்ய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் காந்தி. ஒரு கட்டத்தில் அகிம்சை பேச்சுகளும் அமைதியான போராட்டங்களும் காந்தியை அகிம்சையின் முகமாக நிலைநிறுத்தியது.

பகத் சிங்கின் புரட்சி

பகத் சிங் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஆங்கிலேய ஆட்சியை கடுமையாக எதிர்த்தார். அவர் ஆங்கிலேய அரசுக்கு எதிரான இரண்டு உயர்மட்ட தாக்குதல்களிலும் ஈடுபட்டார். முதலாவது உள்ளூர் காவல்துறை தலைவர் மீதான தாக்குதல், இரண்டாவது டெல்லியில் உள்ள சட்டப்பேரவை மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த இரண்டு நடவடிக்கைகளும் அக்காலகட்டத்தில் பெரும் கவனத்தை பெற்றன. ஆங்கிலேய அரசுக்கு எதிரான தாக்குதல்களுக்காக பகத் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர்.
இந்தியா தேசிய ராணுவம்

இரண்டாம் உலக போரின் போது, ஆகஸ்ட் 1942 ஆம் ஆண்டு ஜப்பானிய பேரரசின் வழிகாட்டலில், இராணுவ அதிகாரி மோகன் சிங் தலைமையின் கீழ், ராஷ் பிஹாரி போஸ் வழிவகுத்த கொள்கையில், இந்திய சுதந்திரத்தை வேண்டி இந்திய போர்க்கைதிகளால் இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. ஆசியாவில் ஜப்பானின் போரில் அதன் பங்கு தொடர்பாக இந்திய தேசிய இராணுவ தலைமைக்கும் ஜப்பானிய இராணுவ தலைமைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் டிசம்பர் 1942 ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவம் கலைக்கப்பட்டது.

அகிம்சையால் சுதந்திரம் பெற முடியாது என்பதில் சுபாஷ் சந்திர போஸ் உறுதியாக இருந்தார். எனவே, இரண்டாம் உலக போரின் போது, "எனது எதிரியின் எதிரி என் நண்பன்" என்பதன் அடிப்படையில், இந்திய சுதந்திரத்தை வேண்டி ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற பிரிட்டன் எதிர்ப்பு நாடுகளிடம் இராஜதந்திர ரீதியிலான உதவி கேட்க சுபாஷ் சந்திர போஸ் திட்டமிட்டார். ஜெர்மனியின் உதவி கிடைக்காததால் ஜப்பான் மிக முக்கியமான முறையில் உதவ முடியும் என்ற நம்பிக்கையில் சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானுக்குச் சென்றார்.

இந்நிலையில், கலைக்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தை சுபாஷ் சந்திர போஸிடம் ஒப்படைத்தார் ராஷ் பிஹாரி போஸ். 1943 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் இவ்வியக்கம் புத்துயிர் பெற்று சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசு (Provisional Government of India) என்று அழைக்கப்பட்டது. இதற்கிடையே, இரண்டாம் உலக போரின் முடிவில், ஜப்பான் தடுமாற தொடங்கிய போது, பிரிட்டனும் ரஷ்யாவும் ஒரே அணியில் இருந்த போதிலும், பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் ரஷ்யா உதவக்கூடும் என்று கருதிய சுபாஷ் சந்திர போஸ் ரஷ்யாவிடம் உதவி பெற திட்டமிட்டதாக பரவலாக கூறப்படுகிறது. இருப்பினும், 1945 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸின் மர்மமான மறைவுக்கும் ஜப்பானின் சரணடைவுக்கும் பிறகு, முகமது ஜமான் கியானியின் தலைமையில் மீதமுள்ள வீரர்கள் ஆங்கிலேய அரசிடம் சரணடைந்தனர்.
அன்றும் இன்றும்

இந்திய அரசியல் தலைவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். காந்தியத்தின் மூலம் நவீன உலகிற்கு அகிம்சையை பரிசளித்த போதிலும், நினைவு தபால் தலைகள் மற்றும் நினைவுகூரும் நிகழ்வுகள் மூலம் சுதந்திர போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்கை இந்தியா ஒப்புக்கொண்டது. அதே சமயம், இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பயங்கரவாதம் வகித்த பங்கு மற்றும் அதன் வரலாற்று பொருத்தம் குறித்து இன்றைய தலைவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வது அவசியம்.

மேலும், உலகமயமாக்கலின் பின்னணியில், அணு ஆயுத உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள உலக அரசியல் தலைவர்களின் பங்களிப்பை ஆராய வேண்டும். அதன் மூலம் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் ஒத்துழைப்பதில் இந்த தலைவர்கள் எந்த அளவிற்கு தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள உதவும்.
முடிவுரை

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை ஒரு சம்பவத்துடன் இணைக்க முடியாது. இருப்பினும், காந்தியின் அகிம்சை திட்டம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பெருமை சேர்த்தது. காந்தியின் அகிம்சை அணுகுமுறை உலகளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், “பாளையக்காரர் முதல் போஸ்” வரையிலான புரட்சிகர தலைவர்களை உள்ளடக்கிய சுதந்திர போராட்டத்தின் முழு வரலாற்று பின்னணியும் பாரபட்சமின்றி ஆராயப்பட வேண்டும்.

மேலும், ஆங்கிலேய அரசு கலைக்கப்பட்ட பிறகு இந்திய ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதற்கான சுதந்திர போராட்ட தலைவர்களின் உள்நோக்கங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும். அதன் மூலம் அகிம்சை அல்லது புரட்சியின் அடிப்படையில், சுதந்திர போராட்ட தலைவர்கள் மக்களின் நல்வாழ்வை போதிக்கும் சமூக நீதிக்காக போராடினார்களா அல்லது பிரிவினைகளை ஆதரிக்கும் ஆரிய நீதிக்காக போராடினார்களா என்பதை நாம் தீர்மானிக்க முடியும்.
விவரணைகள்






வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -