பிணவறை வழக்கு
குறிப்பு = இந்த வழக்கு ஏற்கனவே பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஒரு பொதுவான கண்ணோட்டத்தை முன்வைக்கிறது. கட்டுரையின் நோக்கம் இவ்வழக்கை சுயாதீனமாக விசாரிக்கவோ, கேள்விக்குரிய நிகழ்வுகளுக்கு தீர்ப்புகளை வழங்கவோ அல்லது இறுதி ஆய்வாக கருதப்படவோ அல்ல. முழுமையான புரிதலுக்காக, இவ்வழக்குகள் குறித்து மேலும் சான்றுகளைப் பார்வையிட வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம்
- முகவுரை
- என்ன பந்தயம்?
- பந்தயத்தை ஏற்ற நண்பர்
- சடலத்தின் அருகில் சடலமாய்
- குற்றவாளியான நண்பர்
- முடிவுரை
- துணுக்கு செய்தி
- விவரணைகள்
முகவுரை
1977 இல் கோட்டயம் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மருத்துவ மாணவர்கள் 'துணிச்சல்’ பற்றி உரையாடினர். இவ்விவாதம், அவர்களுக்கிடையே ஒரு பந்தயத்தை முன்மொழிவதுடன் முடிந்தது.
என்ன பந்தயம்?
'பிணவறையில் உள்ள ஒரு சடலத்தின் உதட்டில் அடையாளக் குறியுடன் கூடிய சிகரெட் (Marked Cigarette) வைக்கப்படும். பந்தயத்தை ஏற்பவர், நள்ளிரவு 12 மணிக்கு மருத்துவ கல்லூரி பிணவறைக்கு சென்று, அந்த சிகரெட்டை சடலத்தின் உதட்டில் இருந்து எடுத்து வர வேண்டும்' என்ற பந்தயம் முடிவு செய்யப்பட்டது
பந்தயத்தை ஏற்ற நண்பர்
வினையான விவாதத்தில் பந்தயத்தை ஏற்றுக் கொண்ட நண்பர், விடுதியில் இருந்து கிளம்பி நள்ளிரவு 12 மணிக்கு பிணவறையை நோக்கிச் சென்றார். பிணவறைக்கு வெளியே இருந்த காவலாளி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். சடலங்கள் வைக்கப்பட்டிருந்த பிணவறையை, முன் ஏற்பாடு செய்யப்பட்ட சாவியைக் கொண்டு திறந்து, அமைதியாக நுழைந்தார். சடலத்தின் உதட்டில் சிகரெட் இருப்பதை அறிந்து கொள்ள, தீக்குச்சியின் வெளிச்சத்தைப் பயன்படுத்தினார்.
சடலத்தின் அருகில் சடலமாய்
பந்தயத்தில் குறிப்பிடப்பட்டதன் பேரில், பிணவறைக்குள் ஒரு சடலத்தின் உதட்டில் சிகரெட் இருப்பதை நண்பர் கண்டார். சடலத்தின் உதட்டிலிருந்து சிகரெட்டை எடுக்க நண்பர் சடலத்தை நெருங்கிய போது, திடீரென சடலம் அசைந்தது. அடுத்த நொடியில், சிகரெட் விழுங்குவது போல் மறைந்து போய்விட்டது. சடலத்தின் அசைவையும் சிகரெட்டின் மறைவையும் கண்ட நண்பர் அதிர்ச்சியில் மூழ்கினார். அதிர்ச்சியின் தீவிர விளைவாக, திகிலடைந்த அவர் சடலத்தின் அருகிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
குற்றவாளியான நண்பர்
விசாரணையின் தொடக்கத்தில் கோட்டயம் காவல்துறைக்கு தலைவலியாக அமைந்த இவ்வழக்கு, இறுதியில் பந்தயத்தை பரிந்துரைத்த நண்பர் தான் குற்றவாளி என்பதைக் கண்டறிந்து அவரைக் கைது செய்தது.
பந்தயத்தை பரிந்துரைத்த நண்பர் அதன்படி நடக்காமல், தனது சக நண்பரை திகிலூட்டும் நோக்கில் பிணவறையில் சடலங்களுக்கு இடையே மறைந்து, குறிப்பிட்ட சடலத்தை மெல்ல அசைத்து, வெளிச்சம் இல்லாத நேரத்தில் சிகரெட்டை மறைத்து இறந்து போன நண்பரை அதிர்ச்சியூட்டி இருக்கிறார். நீதிமன்றம், அந்நண்பரை குற்றவாளி என தீர்ப்பளித்து சிறைத் தண்டனை விதித்தது.
முடிவுரை
'பெரிய சித்தப்பா இறந்ததைப் பற்றி சின்ன சித்தப்பாகிட்ட கேட்க வந்தா, வந்த இடத்துல தீடீரென்று சின்ன சித்தப்பாவும் இறந்து போனார்' என்ற கிராம சொலவடை உண்டு. அது போல, 'சடலத்தை தேடிப் போன நண்பரும் சடலமாகி போனார்'. துணிச்சலைப் பற்றிய விவாதத்தின் வெளிப்பாடாக விளையாட்டுக்காக செய்யப்பட்ட பந்தயம் ஒரு விபரீத விளையாட்டாக மாறிவிட்டது.
துணுக்குச் செய்தி
பிணவறை வழக்கின் கதையைத் தழுவி Mortuary என்ற மலையாள திரைப்படம் 1983 இல் வெளியானது. மலையாள திரைப்படத்தை தழுவி Amma Pillai என்ற தமிழ் திரைப்படம் 1990 இல் வெளியானது. Amma Pillai திரைப்படத்தில் ஜெயலலிதாவின் 1990 காலகட்ட அரசியலை S.S.சந்திரன் மற்றும் கோவை சரளா நையாண்டி செய்திருப்பர்.
விவரணைகள்
Mortuary Movie
Amma Pillai Movie
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment