Chocks: கரூர் பேரழிவுக்கு யார் காரணம்?

Sunday, October 5, 2025

கரூர் பேரழிவுக்கு யார் காரணம்?

கரூர் பேரழிவுக்கு யார் காரணம்?

பொருளடக்கம் 
  1. முகவுரை
  2. கரூர் இடத்தேர்வு
  3. திட்டமிட்ட காலதாமதமா?
  4. விமான நேரத் திட்டம் என்ன?
  5. போதுமான போலீஸ் பாதுகாப்பு
  6. மின்வெட்டு நடக்கவில்லை
  7. தாக்குதல் நடக்கவில்லை
  8. செருப்பு வீச்சுக்கான காரணம்
  9. ஆம்புலன்ஸ்களை தாக்கிய த.வெ.க 
  10. விதிமுறைகளை புறக்கணித்த த.வெ.க
  11. பொறுப்பைத் தவிர்க்க பழி சுமத்தல்
  12. திரையில் வீரன், அரசியலில் வில்லன்
  13. ஒன்றிய பா.ஜ.க அரசின் நிலைப்பாடு
  14. விஜய்யை கண்டித்த நீதிமன்றம் 
  15. அரசு நடவடிக்கை  
  16. முடிவுரை
  17. விவரணைகள்
முகவுரை

அரசியலில் கூட்ட வலிமையை காட்டுவது மட்டும் போதாது; பொதுமக்களின் பாதுகாப்பும் முக்கியமானது என்பதையும் கரூர் பேரழிவு சம்பவம் தெளிவாக காட்டுகிறது. த.வெ.க தலைவர் விஜய்யின் கால தாமதம், தவறான கூட்ட மேலாண்மை மற்றும் கட்டுப்பாடற்ற ரசிகர்களின் கூட்டம் இந்த பேரழிவுக்கு முக்கிய காரணங்களாகும். அரசியல் கட்சித் தலைவர்கள் பொறுப்புடன், பொதுமக்களின் பாதுகாப்பு நலனுக்காக செயல்பட வேண்டிய அவசியத்தை கரூர் பேரழிவு நமக்கு நினைவூட்டுகிறது.

கரூர் பேரழிவை பற்றி பல காணொளிகள் மற்றும் பத்திரிக்கை அறிக்கைகள் பொதுவில் கிடைக்கின்றன. இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், கரூர் பேரழிவு விவரங்களை சுருக்கமாகக் கூறி ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தை வழங்குகிறது; இதை முழுமையான பகுப்பாய்வாகக் கருதக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்து கொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராய பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

கரூர் இடத்தேர்வு

த.வெ.க முதலில் அனுமதி கோரிய லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியின் அருகே பெட்ரோல் பங்கு மற்றும் அமராவதி ஆற்றுப்பாலம் இருந்தன. இரண்டாவது, உழவர் சந்தை பகுதி மிகவும் குறுகியதால் அங்கு அதிகபட்சம் 5,000 பேர் மட்டுமே திரள முடியும். இந்நிலையில், கூட்டத்தில் 10,000 பேர் பங்கேற்பார்கள் என த.வெ.க அனுமதி கோரியது. செப்டம்பர் 25 அன்று, தமிழ்நாடு அரசு வேலுச்சாமிபுரம் இடத்தை ஒதுக்கீடு செய்வதாக பரிந்துரைத்தபோது, த.வெ.கவினர் அதனை ஏற்றுக் கொண்டனர். இறுதியில், வேலுச்சாமிபுரம் இடத்திற்கு அனுமதி கேட்டு, த.வெ.க நிர்வாகி கடிதம் வழங்கப்பட்டு, முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டது.

திட்டமிட்ட காலதாமதமா?

தமிழ் செய்தி ஊடகங்கள் தங்கள் TRP ரேட்டிங்கை அதிகரிக்க விஜய்யின் அரசியல் வருகையை மிகைப்படுத்தினர். செப்டம்பர் 27 அன்று நாமக்கல்லில் காலை 8:45 மணிக்கும், கரூரில் மதியம் 12 மணிக்கும் விஜய் பேசுவதாக அறிவித்ததும், அவரது ரசிகர்களின் கொண்டாட்டங்களையும் உற்சாகத்தையும் செய்தியாக்க தமிழ் செய்தி ஊடகங்கள், காலையிலேயே இரு பகுதிகளிலிருந்தும் நேரடி ஒளிபரப்பைத் தொடங்கின.

பிரச்சாரம் நடைபெற தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதம் ஏற்படுவது புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால், அதை மீறி பல மணி நேரம் தாமதமாக வருவது நியாயமில்லை. நேரம் செல்ல செல்ல, விஜய்யை காணும் ஆர்வத்தையும் கூட்ட அளவையும் அதிகரிக்க இந்த தாமதம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கை எனக் கருத முகாந்திரம் உள்ளது.

விமான நேரத் திட்டம் என்ன?

செப்டம்பர் 27 அன்று காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்திற்கு விஜய் வருவார் என்று த.வெ.க தரப்பில் இருந்து 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு சென்று, அங்கிருந்து தரைவழி பயணமாக நாமக்கல் செல்வதே விஜய்யின் பயணத்திட்டம் என்ற நிலையில், விஜய் சென்னையில் தனது வீட்டில் இருந்து கிளம்பியதே காலை 8 மணிக்குப் பிறகே என்று தெரிய வருகிறது.

தனி விமானம் மூலம் பயணிக்க DGCA மற்றும் ATC அனுமதி அவசியம். அப்படியெனில், சென்னையிலிருந்து விஜய்யின் தனி விமானம் புறப்படும் நேரம் முன்கூட்டியே தாமதமான நேரத்திற்காகவே திட்டமிடப்பட்டதா, அல்லது திடீரென மாற்றப்பட்டதா என்பதைக் த.வெ.க விளக்கவில்லை. மேலும், கரூர் சம்பவத்திற்குப் பிறகு, சட்டென கரூரிலிருந்து திருச்சிக்கு தரைவழியாகவும், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்ட விஜய்க்கு, ATC அனுமதி எத்தனை மணிக்கு, எவ்வாறு, யாரால் பெறப்பட்டது?

போதுமான போலீஸ் பாதுகாப்பு

பொதுவாக, ஒரு கூட்டத்தில் 50 பேருக்கு ஒருவரை போலீஸ் பாதுகாப்பிற்காக நியமிப்பது வழக்கம். ஆனால், கரூரில் த.வெ.க தரப்பு கேட்டு கொண்டதற்கிணங்க 10,000 பேர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு, போலீசார் 20 பேருக்கு ஒரு அதிகாரி என்ற அளவில் மொத்தம் 500 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினர்.

மின்வெட்டு நடக்கவில்லை

விஜய்யின் கரூர் வருகையின் போது த.வெ.க மின்தடையை கோரியது. ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் மின்சார வாரியம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. இதன் விளைவாக, மின்வெட்டு செய்யப்படவில்லை. இதற்கிடையில், த.வெ.க தரப்பினர் கூட்டத்திற்காக ஜெனரேட்டர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், ரசிகர்களின் குறுக்கீட்டினால் அவை செயலிழந்தன என்பதை காணொளிகளில் பார்க்கலாம்.

தாக்குதல் நடக்கவில்லை

விஜய்யை எப்படியாவது காண வேண்டும் என்ற ஆவலில், அவரது ரசிகர்கள் மரக்கிளைகளில் ஏறினர். மரக்கிளைகள் சாய்ந்தபோது, கீழே நின்றிருந்த பல பெண்களும் குழந்தைகளும் சரிந்து விழுந்தனர். இதில் ஒரு குழந்தை உயிரிழந்ததோடு மட்டுமல்லாமல், பலர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்களின் விரைவான உதவியால் பலரை மீட்டதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை பெரிதும் குறைக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டத்தில் இருந்த சிலரால் பெண்கள் தாக்கப்பட்டதாகவும், ஆயுதங்களால் பலர் வெட்டப்பட்டதாகவும், கல்வீச்சு நடைபெற்றதாகவும் விஜய் ரசிகர்கள் கூறுவது எள்ளளவும் உண்மையல்ல.

செருப்பு வீச்சுக்கான காரணம்

கரூரில் நடைபெற்ற கூட்டத்தில், கலந்து கொண்டவர்களுக்கு குடிநீர் வசதிகளை த.வெ.க தரப்பினர் முறையாக வழங்காததால், நீர்ப்போக்கால் சிலர் மயக்கமடைந்ததை தெரிவித்து, விஜய்யின் கவனத்தை ஈர்க்க முயன்று, அவரது வாகனத்தை நோக்கி செருப்புகள் வீசப்பட்டதை காணொளிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் கூட்டத்தில் இருந்த அனைவரும் விஜய் ரசிகர்கள். இருப்பினும், இந்த சம்பவத்துக்குப் பிறகு, கூட்டத்தில் இருந்த மர்ம நபர்கள் செருப்புகளை வீசியதாக விஜய் ரசிகர்கள் பரப்பிய தகவல்கள் வெறும் வதந்திகள் என்றே உறுதி செய்யப்பட்டது. இதற்கு உதாரணமாக, கூடியிருந்த ரசிகர்கள் குடிநீருக்காக கத்தி, விஜய் பேருந்தில் இருந்து தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டதை காணொளிகளில் பார்க்கலாம்.

ஆம்புலன்ஸ்களை தாக்கிய த.வெ.க 

கரூர் கூட்டப்பகுதிக்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை விஜய் ரசிகர்கள் தொந்தரவாகக் கருதி, அவற்றை தடுக்க முயன்றதோடு, ஓட்டுநர்களையும் தாக்கினர். போலீசார் உடனடியாக தலையிட்டு, லேசான தடியடியுடன் ஆம்புலன்ஸ்களை மீட்டு, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசாரின் விரைவு நடவடிக்கைகள் பலரின் உயிரை காப்பாற்ற உதவியது.

விதிமுறைகளை புறக்கணித்த த.வெ.க

நாமக்கல்லில் காலை 8:45 மணிக்கு விஜய் பேசுவார் என்று த.வெ.க தெரிவித்திருந்த நிலையில், பிரச்சார இடத்திற்கு சுமார் 7 மணி நேரம் தாமதமாக விஜய் வந்தார். மதியம் 3 மணியளவில், கடும் வெயிலில் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது, அவரை திரண்ட கூட்டத்தில் 15 பேர் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நாமக்கல் கூட்டத்தை முடித்துவிட்டு கரூர் வந்த விஜய், கரூரில் கூட்டம் அதிகமாக இருந்ததால், கூட்டத்தின் முன்புறத்தில் பேசுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

ஆனால் அந்த கோரிக்கையை ஏற்காமல், கூட்டத்திற்குள் சென்று நடுவில் விஜய் பேசும்படி த.வெ.க ஏற்பாடு செய்தது. இதனால், கூட்டத்திற்குள் வரும் விஜய்யின் பேருந்துக்கு மக்கள் வழி விட போதுமான இடம் இல்லாமல், இறுக்கமான சூழல் உருவாகியது. மேலும், தண்ணீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் த.வெ.க தரப்பால் முறையாக ஏற்பாடு செய்யப்படாததால், கூட்ட நெரிசலின் நடுவே விஜய் பேசிக் கொண்டிருந்தபோது பலர் மயக்கமடைந்தனர். இதையடுத்து, 41 பேர் உயிரிழந்த அந்த பேரழிவில், 9 வயது குழந்தை ஒருவர் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இது அந்த பேரழிவின் தொடக்க சூழலை நன்கு வெளிப்படுத்தியது.

விஜய் தனது பேருந்துக்குள் சென்று அமர்ந்த பிறகு, பேருந்தில் இருந்த மின்விளக்குகள் அணைக்கப்பட்டதால், அவரது முகத்தை காண விரும்பிய ரசிகர்கள் பேருந்தை நோக்கி திரண்டனர். இதனால், கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் தள்ளுமுள்ளுக்கு உள்ளாகி, அந்த இடம் களேபரமாக மாறியது. சுருக்கமாகச் சொன்னால், போலீசார் கூறிய அறிவுரைகளை த.வெ.க முறையாக பின்பற்ற முயலவில்லை. போலீசாரின் வேண்டுகோளை ஏற்று விஜய் கூட்டத்திற்கு முன்புறத்தில் பேசியிருந்தால், மேலும் பேருந்தில் மின்விளக்குகளை அணைக்காமல் இருந்திருந்தால், கரூரில் ஏற்பட்ட அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

பொறுப்பைத் தவிர்க்க பழி சுமத்தல்

தலைமை பொறுப்புக்குரிய மாண்பு இல்லாமல், கரூர் பேரழிவுக்குப் பிறகு சம்பவ இடத்தை விட்டு சில மணித்துளிகளில் சென்னைக்கு தப்பியோடிய விஜய், சுமார் 69 மணி நேரம் (சுமார் 3 நாட்கள்) மௌனமாக இருந்த பிறகு, பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் விதமாகவும், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கிலும் ஒரு காணொளி வெளியிட்டு பேசினார்.

பொறுப்பான தலைவராக நடந்து கொள்ளாமல், ரசிகர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் அந்த காணொளி தயாரிக்கப்பட்டது. திரைப்பட ஷூட்டிங் போன்ற மேக்கப்பில் காட்சியளித்த விஜய், உயிரிழந்தவர்களை நினைவுகூராமல், கரூர் பேரழிவில் தனது பங்கினைக் மறந்து, தவறான தகவல்களை பரப்பி, பொறுப்பை தமிழ்நாடு அரசின் மீது பழி சுமத்தும் போக்கில் காணொளி வடிவமைக்கப்பட்டது.

திரையில் வீரன், அரசியலில் வில்லன்

திரைப்படங்களில் விஜய் வெளிப்படுத்தும் வீரத்துக்கும் அரசியலில் அவர் வெளிப்படுத்தும் கோழைத்தனத்துக்கும் இடையிலான முரண்பாடு கரூர் பேரழிவில் வெளிப்படையாகத் தெரிந்தது. திரைப்படங்களில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்த விஜய், கரூர் பேரழிவில் பொறுப்பற்ற செயல்பாட்டால் அரசியலில் வில்லன் வேடத்தை தரித்துக் கொண்டார்.

விஜய் வெளியிட்ட காணொளியில் கரூர் சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கவில்லை, இறந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை, தனது ரசிகர்களை அமைதியாக இருக்கச் சொல்லவில்லை, சட்ட விசாரணையை எதிர்கொள்வதாக உறுதி அளிக்கவில்லை. எனவே, திரைப்படங்களில் கதாநாயகனாகக் கொண்டாடப்படும் விஜய், தனது அரசியல் நடத்தையில் “மோசடி, அலட்சியம் மற்றும் பழி சுமத்துதல்” மூலம் மக்கள் நலனை புறக்கணிப்பவராகவும், அரசியல் அபிலாஷைகளுக்காக சுயநலமாக செயல்படுவதாகவும் அம்பலப்பட்டு நிற்கிறார்.

ஒன்றிய பா.ஜ.க அரசின் நிலைப்பாடு

மணிப்பூர் வன்முறை, ஆந்திர சந்தன மரக் கடத்தல் சம்பவம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு போன்ற பற்பல நிகழ்வுகளை விசாரித்து உண்மையை கண்டறிய நேரமில்லாத ஒன்றிய பா.ஜ.க. அரசு, தனது தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ) உறுப்பினர்களைக் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினரை கரூரில் நடந்த விபத்தை பெயரளவில் ஆய்வு செய்ய அனுப்பியது. அவர்கள் வருவதற்கு பின்னர் விஜய்யின் காணொளி வெளியாகிறது. உண்மை கண்டறியும் குழுவினர் டெல்லிக்கு திரும்பும் நாளே, ஆதவ் அர்ஜுனா உடன் 2006 ஆம் ஆண்டு ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த மகேந்திரன் மற்றும் இரண்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுடன் தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.

விஜய்யை கண்டித்த நீதிமன்றம் 

புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோருக்காக முன்ஜாமீன் கோரி த.வெ.க வழக்கறிஞர் அணி மனு தாக்கல் செய்தது. ஆதாரமில்லாமல் தமிழ்நாடு அரசுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் குற்றம் சுமத்திக் கொண்டிருந்த நிலையில், "கரூர் பேரழிவுக்கு தாங்கள் பொறுப்பல்ல; கரூர் த.வெ.க. மாவட்டச் செயலாளர் மதியழகனே பொறுப்பாளர்" என த.வெ.க வழக்கறிஞர் அணியினர் முன்ஜாமீன் மனுவில் வாதாடினர். எனினும், மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளதால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளனர். அவர்களின் கைது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்ததாகும்.

விபத்துக்குப் பிறகு கரூரில் இருந்து தப்பிச் சென்றதற்காக விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, த.வெ.க தலைவர் விஜய் மற்றும் கட்சியினரின் மனநிலையைப் பற்றியும் கேள்வி எழுப்பியது. மேலும், அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வது கூட்டம் நடத்தும் கட்சியின் பொறுப்பு என்றும், விபத்தில் தொடர்புடைய விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யவும், நேபாளத்தில் ஏற்பட்ட சூழ்நிலையைப் போலவே தமிழ்நாட்டிலும் கலவரத்தைத் தூண்டும் வகையில் ட்வீட் செய்த ஆதவ் அர்ஜுன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், கரூர் பேரழிவு குறித்து தீர விசாரிக்க, அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது.

அரசு நடவடிக்கை  

கரூர் பேரழிவை முதிர்ச்சியுடனும் பொறுப்புடனும் கையாண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறர் மீது குற்றம் சுமத்துவதை தவிர்த்து, உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார் மற்றும் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்கச் செய்தார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூர் மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தனர். இதற்கிடையில், கரூர் பேரழிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து, கனிமொழி நிவாரண நிதியையும் வழங்கினார்.

கரூர் பேரழிவு சம்பந்தமான தகவல்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுடன் பகிர்ந்தனர். இருப்பினும், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என விஜய் தெரிவித்த போதும், த.வெ.க உறுப்பினர்கள் யாரும் கரூர் பேரழிவு குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கவில்லை. மேலும், அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து நிவாரண நிதியை இதுவரை வழங்கவில்லை.

பொறுப்புடன் செயல்படும் தமிழ்நாடு அரசுக்கு எதிர்மாறாக, கரூர் பேரழிவைச் சுற்றி கற்பனை கதைகளை உருவாக்கி, அரசியல் ஆதாயத்திற்காக விஜய்யும் அவரது ரசிகர் கூட்டாளிகளும் தமிழ்நாடு அரசைக் குறை கூற முயற்சிக்கின்றனர். இருப்பினும், யாராலும் உண்மைகளை மறைக்க முடியாது; ஏனெனில், சட்டம் தனது கடமையை தவறாது செய்யும். 

முடிவுரை

கரூர் கூட்ட நெரிசலுக்கு த.வெ.கவின் தவறான கூட்ட மேலாண்மை, அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யாதது, விஜய்யின் கால தாமதம் மற்றும் பேருந்தில் விஜய் மின் விளக்குகளை அணைத்தது முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. மேலும், சம்பவத்தின் போது போலீசாரின் குறைவான பாதுகாப்பு அல்லது ரசிகர்கள் மீது தாக்குதல் நடந்தது என்ற தகவல்கள் உண்மைக்கு எதிராகும்.

த.வெ.க தலைவர் விஜய் தனது வலிமையை காட்டுவதற்காக ரசிகர்களை கும்பல் மனநிலைக்கு அழைத்து செல்கிறார். தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்கள் பொறுப்பும் முதிர்ச்சியும் கொண்டு செயல்படும் இந்த காலகட்டத்தில், விஜய் எதிர்கால தலைமுறையையே அபாயகரமான பாதையில் தள்ளுகிறார். ஒரு சினிமா ஹீரோவைப் போல, தன்னால் எல்லாவற்றையும் தனியாகத் தீர்க்க முடியும் என்ற மாயையை விஜய் தனது ஆதரவாளர்களிடையே உருவாக்கி வருகிறார். மேலும், தொண்டர்களாக ஒழுங்கமைக்கப்படாத ரசிகர்களிடையே கும்பல் மனநிலையையும் தூண்டிவிடுகிறார். ஜனநாயக அமைப்பில், விஜய்யின் இது போன்ற அரசியல் செயல்பாடுகள் ஆபத்தானவை.

விவரணைகள்















வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

கரூர் பேரழிவுக்கு யார் காரணம்?

கரூர் பேரழிவுக்கு யார் காரணம்? பொருளடக்கம்  முகவுரை கரூர் இடத்தேர்வு திட்டமிட்ட காலதாமதமா? விமான நேரத் திட்டம் என்ன? போதுமான போலீஸ் பாதுகாப்...