எரிசக்தி அரசியலில் மோடியால் வந்த புதிய சிக்கல்
பொருளடக்கம்
- முகவுரை
- நேருவின் அணிசேரா கொள்கைக்கு விரோதமாக மோடி
- இந்தியா மீதான அமெரிக்காவின் அழுத்தம்
- அமெரிக்காவால் பறிபோன ரஷ்ய எண்ணெய் தள்ளுபடி
- எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு அச்சம்
- அமெரிக்காவில் தடம் பதிக்கும் ரிலையன்ஸ்
- "மோடி-அம்பானி-அதானி-அமெரிக்கா" கூட்டணி
- முடிவுரை
- விவரணைகள்
முகவுரை
அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக, பல நாடுகளுக்கு எண்ணெய் கொண்டு செல்வதற்கான முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
இந்நிலையில், போதுமான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக ஒன்றிய பா.ஜ.க அரசு கூறி வந்தாலும், எரிபொருள் தட்டுப்பாடுகள் இருப்பதாக அரசு எண்ணெய் நிறுவனங்களே அறிக்கை வெளியிட்டுள்ளன. சுமார் 2,800 கிலோமீட்டர் தொலைவில் நடக்கும் இந்தப் போரின் தாக்கம் ஏற்கனவே இந்திய சமையலறைகளைத் தொட்டுவிட்டது. சமையல் எரிவாயு பற்றாக்குறை இப்போதே தெரிகிறது; போர் மேலும் நீடித்தால், பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறையும் தவிர்க்க முடியாமல் போகலாம்.
நேருவின் அணிசேரா கொள்கைக்கு விரோதமாக மோடி
இந்தியாவின் பரந்த மக்கள் தொகை உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதால் அது ஒருபோதும் குறிப்பிட்ட எந்தவொரு அந்நிய ஆதிக்கத்திற்கும் உட்படக்கூடாது என்று நேரு விரும்பினார். அதனால், இந்தியாவின் சுதந்திரத்தையும் வர்த்தகத் தன்னாட்சியையும் காக்கவும், எந்த வல்லரசின் கட்டுப்பாட்டிலும் சிக்காமல் இருக்கவும், கடந்த காலங்களில் உலகப் போர்களுக்குக் காரணமானதும் மேலும் பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடியதுமான போட்டி குழுக்களுக்கு இடையிலான அதிகார அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற நோக்கில் 07 செப்டம்பர் 1946 அன்று அணிசேரா கொள்கையை நேரு உருவாக்கினார். நேருவின் அணிசேராக் கொள்கையை உலகின் பல நாடுகள் ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்கெடுத்தாலும் 62 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த நேருவை விமர்சிக்கும் மோடி, இன்று நேருவின் அணிசேரா கொள்கைக்கு எதிராக இந்தியாவை நேரடியாக அமெரிக்க அதிகாரத்தின் பிடிக்குள் இட்டுச் சென்றுள்ளார்.
இந்தியா மீதான அமெரிக்காவின் அழுத்தம்
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவை வற்புறுத்துவதற்காக, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான வரியை, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 25% க்கு மேலாக மேலும் 25% உயர்த்தி, இந்தியப் பொருட்களின் மீது மொத்த வரியை 50% ஆக அமெரிக்கா உயர்த்தியது.
இதைத் தொடர்ந்து, இந்திய ஒன்றிய அரசுக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில், அமெரிக்கப் பொருட்கள் மற்றும் எரிசக்தி கொள்முதலை அதிகரிக்கவும், அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை குறைக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டது. இதன் பின்னர் இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
சர்ச்சைக்குரிய இந்த புதிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியா மீதான வரியை 50% இலிருந்து 18% ஆக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்தப் பின்னணியில், இந்தியா வரும் நாட்களில் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவால் பறிபோன ரஷ்ய எண்ணெய் தள்ளுபடி
ரஷ்யா இந்தியாவிற்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை விற்று வந்தாலும், அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் காரணமாக இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது. இன்று, இந்தியா யாரிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்வது அமெரிக்க அதிபர் டிரம்ப் தான். இதற்கிடையில், ஈரான் போர் காரணமாக, அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (30 நாட்களுக்கு) ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை "அனுமதித்துள்ளது".
நமது நாட்டின் சொந்த உபயோகத்திற்காக எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளிப்பது தேசிய அவமானத்தின் உச்சமாகும். இப்போது, அமெரிக்காவுடன் இந்தியா கூட்டு சேர்ந்து ரஷ்யாவை விரோதித்ததன் மூலம், ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வழங்க மறுத்துவிட்டதால், இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு அச்சம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு உயரக்கூடும் என்று பெட்ரோலிய ஆய்வாளர்கள் எச்சரிக்கும் போது, இந்த அத்தியாவசியப் பொருட்கள் விரைவில் எந்த விலையிலும் கிடைக்காது என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்கனவே இந்தியா முழுவதும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது, ஆனால் மோடி முற்றிலும் கவலைப்படாமல் சிலிண்டர் விலையை உயர்த்தினார்.
அமெரிக்காவில் தடம் பதிக்கும் ரிலையன்ஸ்
இந்தியாவின் இறையாண்மையை மோடி அமெரிக்காவிடம் அடகு வைத்ததன் நேரடி விளைவு இது. குறிப்பாக, இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தால் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தைப் பாராட்டி, அதை "அமெரிக்க எரிசக்தி ஆதிக்கத்தின்" ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப், விவரித்துள்ளார். இந்தத் திட்டம் 300 பில்லியன் டாலர்களுடன் தொடர்புடையது, இது உடனடியாக பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
300 பில்லியன் டாலர் குறித்து எழும் கேள்வி
அமெரிக்காவிற்குள் ரிலையன்ஸ் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நிதி ஆதாரம் என்ன? முழு திட்டத்திற்கும் ரிலையன்ஸ் தனது சொந்த வளங்களிலிருந்து நிதியை அளிக்கிறதா அல்லது இந்திய பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடன் பெறுகிறதா? முதலில் ரிலையன்ஸ் போன்ற ஒரு நிறுவனம் ஒரே திட்டத்தின் கீழ் 300 பில்லியன் டாலர்களை (ரூ.2,76,000 கோடி) முதலீடு செய்வது சாத்தியமானதா? மேலும், 300 பில்லியன் டாலர் என்பது முதலீடா அல்லது ஆலை உருவாக்கப்போகும் பொருளாதார மதிப்பைக் குறிக்கிறதா?
"மோடி-அம்பானி-அதானி-அமெரிக்கா" கூட்டணி
இந்திய நிறுவன முதலாளித்துவ நலன்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அமெரிக்க எரிசக்தி கொள்கைக்கும் இடையிலான இத்தகைய நெருக்கமான இணக்கம், இந்தியாவின் தேசிய முன்னுரிமைகள் "மோடி-அம்பானி-அதானி-அமெரிக்கா" கூட்டணிகளின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக ஒதுக்கித் தள்ளப்படுகின்றன என்ற கடுமையான கவலைகளை எழுப்புகிறது. இந்த வகையான நெருக்கமான முதலாளித்துவ கூட்டணிகள் இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை பலவீனப்படுத்துவதைக் குறிக்கின்றன. மொத்தத்தில் இன்று, இந்திய மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு தெளிவான பாதை இல்லாமல் மோடி நடுரோட்டில் நாட்டை தவிக்க விட்டுவிட்டதாகத் தெரிகிறது.
முடிவுரை
வல்லரசுகளுக்கு எதிராக சவால் விட துணிந்தால், இறுதியில் அதற்கான விலை யார் கொடுப்பார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இந்த பின்னணியில், எதிர்காலத்தில் இந்தியாவின் இத்தகைய நிலை ஒரே இரவில் மாறிவிடும் என்று கருதுவது நடைமுறைக்கு மாறானது. ஏனெனில் வரலாற்று ரீதியாக வல்லரசுகள் எப்போதும் மோசமான அரசியல் விளையாட்டுகளை விளையாட முயற்சித்துள்ளன.
இதனால்தான் நேருவின் அணிசேரா கொள்கை மிகவும் தொலைநோக்குடையதாக இருந்தது; அது அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இந்திய இறையாண்மையை பாதுகாக்க முயன்றது. துரதிர்ஷ்டவசமாக, மோடியின் அடிபணிந்த அணுகுமுறை மற்றும் அம்பானி, அதானி மீதான மோடியின் முதலாளித்துவ பாசம் காரணமாக, நேருவின் அணிசேரா கொள்கை ரீதியான நிலைப்பாட்டிலிருந்து இந்தியா விலகியுள்ளது. இதன் விளைவாக, இன்று இந்தியா அமெரிக்க வல்லரசின் கைப்பாவையாக மாறி, தனக்கு ஒருபோதும் தேவையில்லாத சிக்கலில் சிக்கியுள்ளது.
துணுக்குச்செய்தி
எண்ணெய் தொழிலில் அம்பானி கொடிகட்டிப் பறக்க தொடக்க நிலையில் வித்திட்டது வாஜ்பாய் என்றால் அது மிகையாகாது. அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றது. பெட்ரோலியத் துறையில் உரிமத்தை ரத்து (Delicensing) செய்யும் கொள்கையை (ஜெயலலிதா ஆதரவுடன்) பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தியது. பா.ஜ.கவிற்கான தனது ஆதரவை வாபஸ் பெறுவதற்கு முன்பு, பெட்ரோலிய அமைச்சர் பதவியை கேட்டும் வாஜ்பாயை ஜெயலலிதா தொந்தரவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அம்பானியின் "ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்" வாஜ்பாய் பதவிக் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. மொத்தத்தில், வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இருந்து இந்தியாவின் பெட்ரோலியக் கொள்கைகளில் மெல்ல மாற்றங்களை ஏற்படுத்தின.
விவரணைகள்
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.






No comments:
Post a Comment