Chocks: மகளிர் இடஒதுக்கீட்டை தடுக்கும் "Census + Delimitation"

Sunday, April 19, 2026

மகளிர் இடஒதுக்கீட்டை தடுக்கும் "Census + Delimitation"

மகளிர் இடஒதுக்கீட்டை தடுக்கும் "Census + Delimitation"

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

பொருளடக்கம்
  1. முகவுரை 
  2. 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதா
  3. சட்டம் அல்ல, சதித்திட்டமே தடுக்கப்பட்டது
  4. நீடிக்கும் சிக்கல்
  5. இணைப்பை நீக்குவதே  தீர்வு
  6. பொய்களுக்கு எதிரான உண்மை விளக்கம்
  7. கூட்டாட்சிக்கு முன் நிற்கும் சவால்கள்
  8. முடிவுரை
  9. விவரணைகள்
முகவுரை 

அரசியல் மன்றங்களில் மிக முக்கியமான "மகளிர் இடஒதுக்கீடு", ஒன்றிய பா.ஜ.க அரசின் "Census + Delimitation" என்ற சூழ்ச்சியால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. மகளிருக்கு அரசியல் வாய்ப்புகளை வழங்குவது முக்கியம்; அதே போல் மாநில உரிமைகளை பாதுகாப்பதும் அவசியம். இந்நிலையில், இது குறித்த உண்மை நிலையும் நீடித்து வரும் சிக்கல்களையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதா 

19 செப்டம்பர் 2023 அன்று, "Census + Delimitation" முடிந்த பின்னரே நடைமுறைக்கு வரும் என்ற நிபந்தனையுடன், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. இதையொட்டி, 20 செப்டம்பர் 2023 அன்று, மசோதாவின் தெளிவின்மை குறித்து தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே எச்சரித்தார். "Census + Delimitation" தாமதத்தால், மசோதாவின் அமலாக்கம் 2029 ஆம் ஆண்டிற்கு முன்னர் வராது என்றும், Census கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் Delimitation மூலம் எந்த மாநிலத்திற்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு தீங்கு விளைவிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த மசோதா குறித்த விவாதத்தின் போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கும் "Census + Delimitation" திட்டத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கு தெளிவான பதில் அளிக்கப்படாத நிலையில், அந்த நிபந்தனையை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு அதை ஏற்கவில்லை. இருப்பினும், மகளிர் நலன் கருதி, இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் 543 தொகுதிகளை "Freeze" செய்து, எந்த மாநிலமும் தனது பிரதிநிதித்துவத்தை இழக்காதபடி உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் Census அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்து, சமமான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் கோரிக்கையாகும். மேலும், இது இந்திரா காந்தி மற்றும் வாஜ்பாய் ஆட்சிக் காலங்களிலும் பின்பற்றப்பட்ட நடைமுறையாகும்.

சட்டம் அல்ல, சதித்திட்டமே தடுக்கப்பட்டது

16 ஏப்ரல் 2026 அன்று, ஒன்றிய பா.ஜ.க அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அரசியலமைப்பு திருத்தச் சட்டமாக [Officially Notified] அறிவித்தது. அதே நேரத்தில், அதனுடன் இணைந்த "Census + Delimitation" செயல்முறைகளை குறுக்கு வழியில் விரைவாக நிறைவேற்றும் நோக்கில், [1971 Census அடிப்படையில் Delimitation என்பது Freeze செய்யப்பட்டதற்கு மாறாக], கடைசியாக எடுக்கப்பட்ட 2011 Census கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 543 தொகுதிகளை 850 ஆக உயர்த்தும் 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை முன்மொழிந்தது. மாநிலங்களுக்கு 50% வரை தொகுதிகள் அதிகரிக்கும் என்று அமித் ஷா கூறியிருந்தாலும், அது எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அல்ல; வாய்மொழி உறுதி மட்டுமே.
இந்த சூழ்ச்சியான முன்மொழிவு, தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தீர்க்கமான எதிர்ப்பால் நாடாளுமன்றத்தில் முறியடிக்கப்பட்டது. இதையொட்டி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் முறியடித்துவிட்டதாக, பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கின்றன.

உண்மை என்னவென்றால், 2023 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா அப்போதே நிறைவேற்றப்பட்டு, 2026 ஏப்ரலில் சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், அந்த சட்டத்தை அமல்படுத்தும் செயல்முறையில் [Procedure to Execute] இன்னமும் சிக்கல்கள் நீடிக்கின்றன. அந்த செயல்முறையைச் சார்ந்த ஒன்றிய பா.ஜ.க அரசின் சதித்திட்டமான 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை முறியடித்ததன் மூலம், தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நாட்டை ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ளன. இருந்தபோதிலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையே முறியடித்துவிட்டதாக ஒன்றிய பா.ஜ.க அரசும் அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.கவும் பொய் பரப்புரை செய்து வருகின்றன.

நீடிக்கும் சிக்கல்

மொத்தத்தில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்னும் செயல்பாட்டிற்கு வராத முக்கிய காரணம், அது "Census + Delimitation" செயல்முறைகளுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டிருப்பதே. இந்த இணைப்புகளை நீக்கி, மசோதாவை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, தி.மு.க எம்.பி. வில்சன் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார். ஆனால், அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இணைப்பை நீக்குவதே  தீர்வு

இப்போது நமக்கு முன்னால் உள்ள நிலை தெளிவாக உள்ளது; அதன் முக்கிய கூறுகள் பின்வருமாறு,

*"Census + Delimitation" செயல்முறையிலிருந்து மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பிரித்து [Delink], 543 தொகுதிகளிலும் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

*மகளிர் இடஒதுக்கீட்டில் "OBC, SC, ST" உள் ஒதுக்கீடுகளை சேர்த்து, 2029 தேர்தல்களுக்கு முன்பாக அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

*Caste அடிப்படையிலே புதிய Census கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

*மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் "வட இந்தியாவில் அதிகமாகவும், தென் இந்தியாவில் குறைவாகவும்" உள்ள நிலையில், புதிய Census கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது.

*1971 Census கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு Delimitation செயல்முறைக்கு விதிக்கப்பட்டுள்ள "Freeze" மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.

*புதிய Census கணக்கெடுப்பிற்குப் பிறகு, தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல், தொகுதி எல்லைகளை மறுசீரமைத்து சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டும்.

இதனை ஒன்றிய பா.ஜ.க அரசு செய்ய முன்வருமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

பொய்களுக்கு எதிரான உண்மை விளக்கம்

இந்தச் சூழலில் "பா.ஜ.க + அ.தி.மு.க" சில தவறான புரிதல்களை உருவாக்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றன.

பொய் பிரச்சாரம் 1: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனதற்கு தி.மு.கவே காரணம்.

உண்மை நிலை: 2026 ஏப்ரலில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பொய் பிரச்சாரம் 2: "Census + Delimitation" நடந்தால் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையும்; அதற்கு தி.மு.கவே காரணம்.

உண்மை நிலை: தி.மு.க ஆரம்பத்திலிருந்தே Delimitation திட்டத்தை 25 ஆண்டுகளுக்கு "Freeze" செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

பொய் பிரச்சாரம் 3: நாட்டின் மகளிர் நலனில் தி.மு.கவுக்கு அக்கறை இல்லை.

உண்மை நிலை: இந்திய அளவில் மகளிர் நலனுக்காக பல முன்னோடி திட்டங்களைக் கொண்டு வந்த இயக்கம் தி.மு.க தான். இதை, வரலாறு தெளிவாகச் சொல்கிறது.
கூட்டாட்சிக்கு முன் நிற்கும் சவால்கள்

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் "Census + Delimitation" ஆகியவை கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டிய சிக்கலான அரசியல், சமூகவியல் மற்றும் பொருளாதார அம்சங்களை உள்ளடக்கியவை. குறிப்பாக, மகளிர் இடஒதுக்கீட்டுடன் Delimitation திட்டத்தை ஒன்றாக இணைப்பது, மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரச் சமநிலையைப் பாதித்து, கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தக்கூடும். அதே நேரத்தில், கொள்கை முடிவுகளுக்குத் தேவையான தரவுகளைச் சேகரிக்கும் Census கணக்கெடுப்பில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

இதற்கிடையில், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியச் சமூகத்தில், அரசியல் மன்றங்களில் இடஒதுக்கீடு மட்டும் மகளிருக்கு முழுமையான அதிகாரத்தை அளிக்க முடியாது. கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகள் போன்ற தொடர்ச்சியான ஆதரவு இல்லையெனில், அதன் தாக்கம் குறைந்ததாகவே இருக்கும். மேலும், இத்திட்டம் மேட்டுக்குடியினருக்கு [Elites] மட்டுமே அதிகம் பயனளிக்கும் அபாயமும் உள்ளது. மகளிரை கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றவும், இடஒதுக்கீட்டைச் சுற்றியுள்ள ஐயங்களைத் தீர்க்கவும் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் தெளிவான திட்டம் எதுவும் இல்லாததே தற்போதைய நிலை.

மேலும், Delimitation திட்டத்தில் Census கணக்கெடுப்பை அடிப்படையாக பயன்படுத்துவது, மாநிலங்கள் முழுவதும் அரசியல் அதிகாரத்தின் சமநிலையை மாற்றக்கூடும். குறிப்பாக, மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத வடக்கு மாநிலங்கள் அதிக அதிகாரம் பெறவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தெற்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படவும் வழிவகுக்கும். பேரறிஞர் அண்ணா சொன்னது போல, "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்ற நிலையை உறுதி செய்யத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் சூழ்ச்சியான மசோதாவை முன்னிட்டு, அதன் நீண்டகால விளைவுகள் குறித்து சிந்திக்கவும், தகவல்களை அறிந்துகொள்ளவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் தயாராக உள்ளோமா என்பதே முக்கியக் கேள்வியாகும்.

முடிவுரை

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் "Census + Delimitation" நிபந்தனைகளை விதித்து அதைத் தாமதப்படுத்துவது ஒன்றிய பா.ஜ.க அரசு தான் என்பது வெள்ளிடைமலையாகும். எனவே, இந்தக் குழப்பங்களை நீக்கி மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே தி.மு.கவின் நிலைப்பாடு. ஏனெனில், மகளிர் இடஒதுக்கீடு என்பது வெறும் அரசியல் கருவி அல்ல; அது சமூக நீதியின் ஒரு முக்கிய அங்கமாகும். 

மொத்தத்தில், "மகளிர் இடஒதுக்கீடு" என்ற விவகாரத்தை குறுகியகால அரசியல் ஆதாயங்களை ஈட்டும் நோக்கத்துடன் பா.ஜ.க அணுகுகிறது; மாறாக, "மகளிர் இடஒதுக்கீடு + மாநில உரிமைகள்" என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு "சமூக நீதி + சம நீதி" கொள்கையை நிலைநாட்டும் பொறுப்புணர்வுடன் தி.மு.க அணுகுகிறது.

விவரணைகள் 

2023 Women's Reservation Bill 


20-09-2023 = முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு 


தொகுதி மறுவரையறை விவகாரம்


தென் மாநிலங்களை பாதிக்கும் Delimitation


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

மகளிர் இடஒதுக்கீட்டை தடுக்கும் "Census + Delimitation"

மகளிர் இடஒதுக்கீட்டை தடுக்கும் "Census + Delimitation" குறிப்பு  =  இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையா...