Chocks: திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவும் தீப மரபும்

Tuesday, June 23, 2026

திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவும் தீப மரபும்

திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவும் தீப மரபும்

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

பொருளடக்கம் 

  1. முகவுரை
  2. கந்தூரி மற்றும் சந்தனக்கூடு
  3. சிக்கந்தர் தர்கா வரலாறு
  4. தீபம் ஏற்றும் வரலாறு
  5. நல்லிணக்கத்தை காக்கும் தமிழ்நாடு
  6. விவரணைகள்

முகவுரை 

திருப்பரங்குன்றம் குறித்து அண்மைக் காலமாக பேசப்பட்டு வரும் சிக்கந்தர் தர்கா மற்றும் தீபம் ஏற்றும் மரபு தொடர்பான தகவல்களின் வரலாற்றுப் பின்னணிகளை சுருக்கமாகக் காண்போம்.

கந்தூரி மற்றும் சந்தனக்கூடு

பக்கீர்ஷா = பற்றுகளைத் துறந்து, இறைச் சிந்தனையுடன் வாழ்பவர்.

அவுலியா = இறைவனின் நண்பர் அல்லது இறைநேசர்.

தர்கா = அவுலியாக்களின் அடக்கத்தலத்தின் மீது அமைக்கப்பட்ட நினைவிடம் அல்லது வழிபாட்டுத் தலம்.

கந்தூரி = அவுலியாக்களின் நினைவு நாளை முன்னிட்டு, சாதி-மத பேதமின்றி அனைவருக்கும் கறி விருந்துடன் நடத்தப்படும் சிறப்பு விழா.

சந்தனக்கூடு = கந்தூரி விழாவிற்கு முன்பாக நடைபெறும் சந்தன ஊர்வல விழா.


சிக்கந்தர் தர்கா வரலாறு
நூல் மரபுகள் மற்றும் வாய்மொழி மரபுகளின்படி, இஸ்லாமிய மதத்தைப் பரப்பும் நோக்கத்துடன் அரேபியாவின் ஜித்தாவைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷாவும், மதீனாவைச் சேர்ந்த செய்யது இப்ராகீம் பாதுஷாவும் ஆகிய இரு ஆன்மிகவாதிகள் இந்தியா வந்தனர். கேரளா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த அவர்கள், பின்னர் மதுரைக்குச் சென்றனர்.

அந்தச் சமயத்தில், மதுரைப் பாண்டிய மன்னனின் படைகளுக்கும் தஞ்சைச் சோழ மன்னனின் படைகளுக்கும் இடையே சோழவந்தான் பகுதியில் கடும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மதத்தைப் பரப்புவதற்கான அனுமதி கோரி வந்த சிக்கந்தர் பாதுஷாவையும் செய்யது இப்ராகீம் பாதுஷாவையும், போர்ச்சூழலால் கோபமடைந்திருந்த மதுரைப் பாண்டிய மன்னன் விரட்டியடித்தான். இதனால் ஏற்பட்ட மோதல் பின்னர் போரில் முடிந்தது. சிக்கந்தர் பாதுஷாவும் அவரது ஆதரவாளர்களும் மதுரைப் பாண்டிய மன்னனைத் தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றினர்.

மதுரையை மீட்டெடுக்கும் நோக்கில், நெல்லை மற்றும் முகவைப் பகுதிகளைச் சேர்ந்த பாண்டியப் படைகள் அணிதிரண்டன. அவர்களை முகவையில் எதிர்கொண்ட செய்யது இப்ராகீம் பாதுஷா வெற்றி பெற்றார். அதன் பின்னர், கடலோர எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் நோக்கில் அவர் முகவையிலேயே தங்கிவிட்டார்.

இதற்கிடையில், திருப்பதி பகுதியில் தஞ்சமடைந்திருந்த மதுரை பாண்டிய மன்னன் மீண்டும் படை திரட்டி மதுரையை நோக்கிப் புறப்பட்டான். வரவிருக்கும் போருக்குத் துணை தேவை என்பதை உணர்ந்த சிக்கந்தர் பாதுஷா, முகவையில் இருந்த செய்யது இப்ராகீம் பாதுஷாவிடம் தூதுக்குழுவை அனுப்பினார். ஆனால், அந்தத் தூதுக்குழு வழியிலேயே பாண்டியப் படையினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டது. இதனால், உதவிக் கோரிய செய்தி செய்யது இப்ராகீம் பாதுஷாவைச் சென்றடையவில்லை.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் போராடிய சிக்கந்தர் பாதுஷா, இறுதியில் திருப்பரங்குன்றம் மலையை அடைந்து அங்கு தஞ்சம் புகுந்தார். அவரைத் தொடர்ந்து தேடிவந்த பாண்டியப் படையினர், சிக்கந்தர் மறைந்திருந்த இடத்தைக் கண்டறிந்து மலையிலேயே அவரைச் சூழ்ந்துகொண்டு கொன்றனர். சிக்கந்தர் பாதுஷா உயிர்நீத்த இடத்தில்தான் இன்று சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. அதேபோல், செய்யது இப்ராகீம் பாதுஷாவின் நினைவாக முகவையில் இப்ராகீம் தர்காவும் அமைந்துள்ளது.

தீபம் ஏற்றும் வரலாறு

தீபம் ஏற்றுவதற்குப் பின்னால், ஜோதி வடிவில் சிவன் தோன்றிய கதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் தொடர்பான கதை என இரு வேறுபட்ட புராண வரலாறுகள் உள்ளன.

ஜோதி வடிவில் சிவன் = பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே மேலானவர் யார் என்ற சண்டை ஏற்பட்ட போது, ஜோதி வடிவில் சிவன் தோன்றி, அந்த ஜோதியின் உச்சியையும் அடிப்பகுதியையும் கண்டுபிடிக்குமாறு இருவரையும் சவாலுக்கு அழைத்தார். எவ்வளவு முயன்றும் அவர்களால் அதைக் கண்டறிய முடியவில்லை. சிவன் இவ்வாறு ஜோதி வடிவில் தோன்றிய நாள் கார்த்திகை நாள் என்பதால், அந்நாளே தீபம் ஏற்றும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலையும் ஆமணக்கு எண்ணெயும் = இருளால் ஏற்படும் பயத்தைப் போக்கி விளக்கின் மூலம் ஒளியைப் பரப்பும் நோக்கில், பௌத்தர்கள் ஆமணக்கு எண்ணெயைக் கண்டுபிடித்தனர். அதைச் சோதனை செய்வதற்காக, உயரமான ஒரு மலையின் உச்சியில் தீ மூட்டப்பட்டது. அந்த மலையே இன்றைய திருவண்ணாமலை. அங்கு ஏற்றப்பட்ட தீ, காலப்போக்கில் வீடுதோறும் விளக்கேற்றும் வழக்கமாகப் பரவியது. இதனால் இருள் குறித்த பயம் படிப்படியாக நீங்கியது. அதன் அடையாளமாக ஆண்டுதோறும் "தீபம்" ஏற்றும் மரபு உருவானது. இதற்கிடையில், "தீபம்" ஏற்றும் மரபு முதன்மையாக சிவன் வழிபாட்டுடன் தொடர்புடையது. எனினும், காலப்போக்கில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட ஒரு சில முருகன் கோவில்களிலும் அந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.
நல்லிணக்கத்தை காக்கும் தமிழ்நாடு

சிக்கந்தர் மலையில் உள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாக உரிய அனுமதியுடன் கந்தூரி விழாவை நடத்தி வருகின்றனர். அங்கு நடைபெறும் வழிபாடுகள் மற்றும் கறி விருந்து வழங்கும் நிகழ்வுகள் நீண்டகால பாரம்பரியமாக இருந்து வருகின்றன. மேலும், சிக்கந்தர் மலை தொடர்பாக பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் இஸ்லாமியர்களின் உரிமையை உறுதி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலஅளவைக்காக நிறுவப்பட்ட கல்தூணை தீபத்தூண் எனப் பிரசாரம் செய்து, திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி மத உணர்வுகளைத் தூண்டும் இந்துத்துவ அமைப்புகளின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஏனெனில், மதச்சார்பின்மை, சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மத நல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் காக்கும் பண்பை தொடர்ந்து பேணுவதன் அவசியத்தையே இந்த விவகாரம் எடுத்துக்காட்டுகிறது.

விவரணைகள் 

"பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம்" நூல் பத்திரிகையாளர் சுஜாதா சிவஞானம்

"திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு" நூல் சமூக ஆர்வலர் சூர்யா சேவியர்

"திருப்பரங்குன்றம் தீர்ப்புகளும் வரலாற்று உண்மைகளும்" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

30 ஆண்டு கால தீப விவகாரத்தின் பின்னணி 


திருப்பரங்குன்றம் கல்தூண் மற்றும்  சிக்கந்தர் தர்கா வரலாறு


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவும் தீப மரபும்

திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவும் தீப மரபும் குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்...