Chocks: தொகுதி மறுவரையறை விவகாரம்

Saturday, June 7, 2025

தொகுதி மறுவரையறை விவகாரம்

தொகுதி மறுவரையறை விவகாரம்

பொருளடக்கம்
  1. முகவுரை
  2. கடந்தகால தொகுதி மறுவரையறை
  3. தொகுதி மறுவரையறை முடக்கம்
  4. எதிர்கால தொகுதி மறுவரையறை
  5. தென் மாநிலங்களுக்கு எதிரான அநீதி
  6. வெறும் எண்கள் அல்ல
  7. முடிவுரை
  8. விவரணைகள் 
முகவுரை

1952 இல் நிறைவேற்றப்பட்ட எல்லை நிர்ணய ஆணையச் சட்டப்படி, ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் தொகுதி மறுவரையறை செய்யத் தொகுதி வரையறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை பெற வேண்டும் என்றும், ஒவ்வொரு தொகுதியிலும் சீரான மக்கள் தொகை இருக்க வேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது.

கடந்தகால தொகுதி மறுவரையறை (1952, 1963, 1973)

சுருக்கமாகச் சொன்னால், தொகுதி மறுவரையறை என்பது ஒவ்வொரு மாநிலத்திலிருந்து எத்தனை மக்களவை உறுப்பினர்கள் அனுப்பப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் ஒரு நடைமுறையாகும். தொகுதி வரையறை ஆணையத்தின் அடிப்படையில், 1952, 1963 மற்றும் 1973 ஆகிய ஆண்டுகளில் தொகுதி வரையறை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. அதன் படி, 1952 இல் 494 ஆகவும்; 1963 இல் 522 ஆகவும், 1973 இல் 543 ஆகவும் தொகுதிகள் எண்ணிக்கை உயர்ந்தது. தற்போது இந்தியாவில் மொத்தம் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன.

தொகுதி மறுவரையறை முடக்கம் (1976, 2001)

1960 - 70களில், ஒன்றிய அரசு மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை ஊக்குவித்தது. வட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தென் மாநிலங்கள் மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டன. இந்த பின்னணியில், 1976 இல் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, நிறைவேற்றப்பட்ட 42 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, மக்களவை தொகுதிகளின் மறுவரையறை 2001 ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

எதிர்கால தொகுதி மறுவரையறை

2001 இல் நிறைவேற்றப்பட்ட 84 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், மக்களவை தொகுதிகளின் மறுவரையறை 2026 வரை, மேலும் 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, 2001 இல் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவிற்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இதற்கிடையில், ஒன்றிய அரசு 2027 இல் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில், மக்களவை தொகுதி மறுவரையறை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதனுடன் தொடர்புடைய விளக்கத்தை ஒன்றிய பாஜக அரசு இன்னும் தெளிவாக வழங்கவில்லை.

தென் மாநிலங்களுக்கு எதிரான அநீதி

இந்த சூழலில், தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக தொகுதி மறுவரையறை அமையக்கூடும் என்றும், இது ஒன்றிய அரசின் திட்டமிட்ட சதி எனவும் அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். புதிய தொகுதி மறுவரையறையின் மூலம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் தங்களது மக்களவை தொகுதிகளை கணிசமாக இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மக்களவையின் மொத்த தொகுதி எண்ணிக்கையை மாற்றாமல், தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், தமிழ்நாடு தற்போதைய 39 இடங்களில் இருந்து 8 இடங்களை இழந்து 31 இடங்களாகக் குறையும். அதே வேளை, உத்தரப் பிரதேசம் 11 இடங்களைப் பெற்று, தற்போதைய 80 இடங்களிலிருந்து 91 இடங்களாக உயரும். மாற்றாக, மக்களவையின் மொத்த தொகுதி எண்ணிக்கையே அதிகரித்து மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாடு 39 இடங்களில் இருந்து 10 இடங்களை அதிகரித்து 49 இடங்களாகவும், உத்தரப் பிரதேசம் 63 இடங்களை அதிகரித்து, 80 இடங்களிலிருந்து 143 இடங்களாகவும் பெறும்.

வெறும் எண்கள் அல்ல

நியாயமற்ற தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் உரிமைக்குரலை நெரிக்கும் ஒரு சதிச் செயல் ஆகும். மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தைச் சரியாகக் கடைபிடித்த தென்னிந்திய மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிக்கிறது. மக்கள் தொகை வளர்ச்சி விகித வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு, தென்னிந்திய மாநிலங்களின் தலைக்கு மேல் தொங்கும் ஒரு கத்தியாக இந்த தொகுதி மறுவரையறை சதித் திட்டம் அமைந்துள்ளது. இதனை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

இது வெறும் எண்கள் அல்லது அரசியல் பற்றிய பிரச்சினையல்ல; இது நீதியையும், சமத்துவத்தையும், கூட்டாட்சியின் அடித்தளத்தையும் பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். சுகாதாரம், கல்வி, மக்கள் தொகை கட்டுப்பாடு போன்ற துறைகளில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு, இப்போது, அவற்றிற்கே எதிரான வகையில் பாதிக்கப்படுகிறதா? என்ற கேள்வி மிக முக்கியமானதொரு உள்நோக்கமாகத் திகழ்கிறது.

முடிவுரை

நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக இந்தியாவுக்கே வழிகாட்டியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2025 மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தையும், அதன் பின்னர் 2025 மார்ச் 22 ஆம் தேதி பல மாநில தலைவர்களுடன் செயல் திட்ட கூட்டத்தையும் நடத்தினார். இந்த கூட்டங்களில், சட்டபூர்வமான நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உள்ளிட்ட பல முக்கியமான யோசனைகள் விவாதிக்கப்பட்டன. இது வெறும் அரசியல் நிகழ்வாக மட்டுமல்ல, மக்கள் பிரதிநிதிகள் நீதிக்காக ஒன்றுகூடிய முக்கியமான சமூக-அரசியல் நடவடிக்கையாகவும் கருதப்பட வேண்டியது.

தமிழ்நாடு உட்பட முன்னேறிய தென் மாநிலங்களின் அரசியல் குரல் அடக்கப்படக் கூடாது. நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் குரல் கொடுக்க வேண்டும், ஏனெனில் இங்கு ஒவ்வொரு குரலும் முக்கியமானது.

விவரணைகள்




வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

The Butterfly Effect: How Tamil Movies Changed History

The Butterfly Effect: How Tamil Movies Changed History Synopsis Introduction End of the B.R.Panthulu - Sivaji Partnership Sivaji Valued In...