Chocks: உதயசூரியன் சின்னம் பிறந்த கதை

Sunday, June 8, 2025

உதயசூரியன் சின்னம் பிறந்த கதை

உதயசூரியன் சின்னம் பிறந்த கதை

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி

1948 இல் எஸ்.எஸ்.ராமசாமி தலைமையில் "வன்னியர் குல சத்திரியர்" என தொடங்கப்பட்ட கட்சி, 1951 இல் "தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி" எனப் பெயர் மாற்றப்பட்டது. இதில் எஸ்.எஸ்.ராமசாமி தலைவராகவும், ஆ.கோவிந்தசாமி செயலாளராகவும் இருந்தனர். தி.மு.க ஆதரவுடன், 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில், சேவல் சின்னத்தில் போட்டியிட்ட "தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி" 19 சட்டமன்ற மற்றும் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.

வழி மாறிய எஸ்.எஸ்.ராமசாமி

1950 களில் சமூக இயக்கமாக மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த தி.மு.கவின் கொள்கைகளை ஆ.கோவிந்தசாமி ஆதரித்தார். காங்கிரஸ் கொள்கைகளை ஆதரித்த எஸ்.எஸ்.ராமசாமி, 1954 ஆம் ஆண்டு தனது தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை கலைத்து காங்கிரசில் இணைந்து காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றார்.

உழவர் கட்சி

திராவிடக் கொள்கைகளை பின்பற்றி, காங்கிரசுடன் இணங்க மறுத்த உறுப்பினர்கள், ஆ.கோவிந்தசாமியின் தலைமையில் "திராவிட பாராளுமன்றக் கட்சி" என்ற பெயரில் தனி குழுவாக செயல்பட்டனர். ஒரு கட்டத்தில், அண்ணாவின் ஆலோசனையின்படி "உழவர் கட்சி" என்ற புதிய கட்சியை ஆ.கோவிந்தசாமி நிறுவினார். அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கியது. அந்த சின்னத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், தி.மு.க ஆதரவாளர்கள் பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

தி.மு.கவும் உதயசூரியனும் 

1956 இல் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டில், தி.மு.க தேர்தலில் பங்கேற்பதற்கான தீர்மானம் பெரும்பான்மையானோர் ஆதரவால் நிறைவேற்றப்பட்டது.

1957 தேர்தலில் தி.மு.க பங்கேற்ற போது, அண்ணா தேர்தல் ஆணையத்திடம், “உதயசூரியன் சின்னத்தில் ஏற்கனவே எங்கள் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த சின்னத்தின் உரிமையாளர் ஆ.கோவிந்தசாமி இப்போது தி.மு.கவில் உள்ளார். எனவே அந்த சின்னத்தை எங்களுக்கு ஒதுக்குங்கள்” எனக் கோரினார்.

தேர்தல் ஆணையம் அண்ணாவின் கோரிக்கையை ஏற்று, உதயசூரியன் சின்னத்தை தி.மு.கவுக்கு ஒதுக்கியது. அதன் பிறகு, தி.மு.க அந்த சின்னத்தில் தொடர்ச்சியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதன் மூலம், தி.மு.கவின் நிரந்தர சின்னமாக உதயசூரியன் அமைந்தது.

கொள்கைக் குன்று

தி.மு.கவின் "கொள்கைக் குன்று" என அறியப்படும் ஆ.கோவிந்தசாமியின் உதயசூரியன் சின்னம், தி.மு.கவின் "கொள்கை சூரியன்" என அழைக்கப்படும் அளவிற்கு பெரும் முக்கியத்துவம் பெற்றது. அண்மையில், ஆ.கோவிந்தசாமி நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.


வாசித்தமைக்கு நன்றி. 

வணக்கம்.

No comments:

Post a Comment

9/11 தாக்குதலின் போது காணாமல் போன சினேகா ஆன் பிலிப்

9/11 தாக்குதலின் போது காணாமல் போன சினேகா ஆன் பிலிப் குறிப்பு =  இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்த...