9/11 தாக்குதலின் போது காணாமல் போன சினேகா ஆன் பிலிப்
பொருளடக்கம்
- முகவுரை
- இரண்டு ஆதாரங்கள்
- 2001 செப்டம்பர் 10
- 2001 செப்டம்பர் 11
- 2,751வது பலி
- புரியாத புதிர்
- முடிவுரை
- விவரணைகள்
முகவுரை
உலகத்தையே உலுக்கிய அமெரிக்க 9/11 தாக்குதலின் பின்னணியில் சினேகா ஆன் பிலிப் என்ற பெண் காணாமல் போனது, உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய மர்மக்கதைகளில் ஒன்றாகும்.
மர்மமாக காணாமல் போன சினேகா ஆன் பிலிப் தொடர்பாக, New York City Police Department (NYPD) காவல்துறை மற்றும் தனியார் புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, சினேகா ஆன் பிலிப்பின் தனிப்பட்ட வாழ்க்கையில் “உறவுச் சிக்கல்கள், பொய்யான பாலியல் வழக்கு, போதைப் பொருள் பயன்பாடு மற்றும் திருமணப் பிரச்சனைகள்” இருந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
இரண்டு ஆதாரங்கள்
வழக்கின் ஆரம்பத்தில், NYPD அதிகாரிகள் உதவியளிக்கவில்லை என்று கருதிய சினேகா ஆன் பிலிப்பின் கணவர் லிபர்மேன், தனியார் புலனாய்வாளரை பணியமர்த்தினார்.
செப்டம்பர் 11 அதிகாலையில் சினேகா ஆன் பிலிப் தனது வீட்டிற்கு திரும்பியிருக்க வாய்ப்பு இருப்பதைக் குறிக்கும் இரண்டு முக்கிய ஆதாரங்களான தொலைபேசி அழைப்பு மற்றும் CCTV காட்சிகளை தனியார் புலனாய்வாளர் கண்டுபிடித்தார்.
2001 செப்டம்பர் 10
இந்தியா-அமெரிக்க மருத்துவர் சினேகா ஆன் பிலிப் (வயது 31) 2001 செப்டம்பர் 10 ஆம் தேதி, நியூயார்க் மாநகரில் லோயர் மான்ஹாட்டனில் (Lower Manhattan) உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள Century 21 பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, கடைசி முறையாக CCTV மூலம் காணப்பட்டார். மேலும், சினேகா ஆன் பிலிப் உடன் ஒரு பெண்ணுடன் வந்ததாக கடை ஊழியர் கூறினாலும், அதை CCTV மூலம் உறுதி செய்ய வழியில்லாமல் போனது.
Century 21 கடையில் உள்ளாடை, காலணிகள் மற்றும் தனது வீட்டில் உள்ள கட்டிலை விட பெரிய மெத்தை விரிப்புகளை சினேகா ஆன் பிலிப் வாங்கியுள்ளார். ஆனால், அவர் வாங்கிய அந்த பொருட்கள் எங்கே இருக்கின்றன என்பதும், 2001 செப்டம்பர் 10 ஆம் தேதி இரவு அவர் எங்கே தங்கி இருந்தார் என்பதும் இன்று வரை தெரியவில்லை.
2001 செப்டம்பர் 11
இரவில் வெளியே தங்கியிருந்த சினேகா ஆன் பிலிப், 2001 செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படும் நிலையில், அதே நாள் அதிகாலையில் தனது வீட்டுத் தொலைபேசியில் இருந்து கணவரை அழைத்ததாக, தனியார் புலனாய்வாளர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. ஒரே வீட்டிற்குள் இருப்பதாக இருந்தால், எதற்காக தொலைபேசியில் அழைக்க வேண்டும்? என்பது குறித்தும் இன்று வரை தெரியவில்லை.
மேலும், அன்றைய தினம் (2001 செப்டம்பர் 11), American Airlines Flight 11 உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தில் மோதுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், குடியிருப்பு முகப்பில் (Lobby) உள்ள CCTV இல், "ஒரு பெண் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்குள் நுழைந்து, மின் தூக்கியை நோக்கி நடந்து சென்று, சில நிமிடங்கள் காத்திருந்து, பின்னர் அந்த கட்டிடத்திலிருந்து வெளியேறும்" காட்சிகள் பதிவாகியுள்ளன. விசாரணையின் போது அந்த பெண் சினேகா ஆன் பிலிப் என்று குடும்பத்தினர் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை என்றாலும், அது அவர்தான் என காவல்துறை நம்பியது.
2,751வது பலி
பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்த சினேகா ஆன் பிலிப், 9/11 தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்று பிறருக்கு உதவ முயன்றபோது உயிரிழந்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் நம்புகின்றனர்.
பல கட்ட விசாரணைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஆதாரமாகக் கொண்டு, பல வருட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 2008 ஜனவரி 31 ஆம் தேதி அமெரிக்க நீதிமன்றம் சினேகா ஆன் பிலிப்பை 9/11 தாக்குதலில் உயிரிழந்த 2,751வது பலியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
புரியாத புதிர்
2012 ஆம் ஆண்டு PostSecret (https://postsecret.com/) வலைத்தளத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு அநாமதேய அஞ்சல் அட்டையில், "9/11 தாக்குதலுக்கு முன்பு என்னை அறிந்த அனைவரும், நான் இறந்துவிட்டேன் என்று நம்புகிறார்கள்" என்று கூறப்பட்டிருந்தது. அந்த அஞ்சல் அட்டை சினேகா ஆன் பிலிப்பிடம் இருந்து வந்ததாக சிலர் நம்புகிறார்கள், சிலர் புரளி என்கிறார்கள்.
முடிவுரை
9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும்போது சினேகா ஆன் பிலிப் உயிரிழந்தாரா?
அல்லது
முதல் நாள் இரவு, அறியப்படாத இடத்தில் தங்கியிருந்த சினேகா பிலிப் கொலை செய்யப்பட்டாரா?
அல்லது
சினேகா ஆன் பிலிப் தற்கொலை செய்துக் கொண்டாரா?
அல்லது
9/11 சம்பவத்தை தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க பயன்படுத்தி, சினேகா ஆன் பிலிப் மறைந்துவிட்டாரா?
என்பது இன்னமும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. மொத்தத்தில், இன்று வரை, அமெரிக்க 9/11 தாக்குதலின் பின்னணியில் சினேகா ஆன் பிலிப் காணாமல் போன விவகாரம் இன்னும் ஆய்வுக்குரியதாகவே இருந்து வருகிறது.
விவரணைகள்
சினேகா ஆன் பிலிப்பின் மர்மக்கதை குறித்து பல கட்டுரைகள், நூல்கள் மற்றும் வலையொலிகள் வெளியிடப்பட்டுள்ளன.
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment