Chocks: இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை : ஓர் சுருக்கமான பார்வை

Thursday, December 11, 2025

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை : ஓர் சுருக்கமான பார்வை

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை : ஓர் சுருக்கமான பார்வை

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம் 
  1. முகவுரை
  2. இந்து-முஸ்லிம் பிளவின் வரலாற்று வேர்கள்
  3. இந்துத்துவா அரசியலின் ஆரம்பநிலை  
  4. முஸ்லீம் அரசியலின் ஆரம்பநிலை 
  5. சாவர்க்கரின் இரு தேசக் கோட்பாடு
  6. 1937 மாகாணத் தேர்தலால் திருப்புமுனை
  7. லாகூர் தீர்மானம்
  8. சுதந்திரப் போராட்டமா? அதிகாரப் போராட்டமா?
  9. பாகிஸ்தான் - திராவிடஸ்தான்
  10. அமைச்சரவைத் தூதுக்குழு
  11. காந்தி உண்ணாவிரதம் 
  12. காந்தி படுகொலை  
  13. முடிவுரை
  14. விவரணைகள் 
முகவுரை

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைப் புரிந்துகொள்ள, வரலாற்றின் இரண்டு முக்கிய மனிதர்களான மகாத்மா காந்தி மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோரின் சிந்தனைக் பயணத்தை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. இரண்டு பேருமே லண்டனில் படித்தவர்கள். இரண்டு பேரும் வழக்கறிஞர்கள். ஆரம்பக் கட்டத்தில், சனாதன தர்மத்தை முன்னிறுத்திய காந்தி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக கிலாபத் போராட்டத்தை முன்னெடுத்தார். அதே சமயம், ஜின்னா “இந்து – முஸ்லிம்” ஒற்றுமையை வலியுறுத்திய ஓர் மேற்கத்திய அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தினார். ஆனால் காலப்போக்கில், இருவரின் அரசியல் பாதைகளும் மாற்றமடைந்தன. இறுதி வரை சனாதனியாக வாழ்ந்த காந்தி, பிரிவினைச் சூழலில் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கொள்கையைத் தன் அரசியலின் மையமாக மாற்றினார். மறுபுறம், தொடக்கத்தில் ஒற்றுமையைப் பேசிய ஜின்னா, இறுதியில் “நேரடி நடவடிக்கை நாள்” (Direct Action Day) போன்ற போராட்ட நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தான் பிரிவினையை முன்னெடுத்தார். 

காந்தியும் ஜின்னாவும் தங்கள் நிலைப்பாடுகளை ஏன் மாற்றிக்கொண்டார்கள்? சுதந்திரத்திற்கும் பிரிவினைக்கும் எது வழிவகுத்தது? இதை அறிந்துகொள்ள, நாம் அந்தக் காலகட்டத்தின் அரசியல் சூழலை காலவரிசைப்படி ஆராய வேண்டும்.
இந்து-முஸ்லிம் பிளவின் வரலாற்று வேர்கள்

ஆரம்பக் காலத்தில் வட இந்தியாவில் அதிகாரப் போட்டி என்பது பார்ப்பன மேட்டுக்குடியினருக்கும் பார்ப்பனர் அல்லாத சாதி ஆட்சியாளர்களுக்கும் இடையே நிலவியது. இடைக்காலத்தில், இது பார்ப்பன மேட்டுக்குடியினருக்கும் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் இடையேயான போட்டியாக மாறியது. பின்னர், பார்ப்பன மேட்டுக்குடியினர் முஸ்லிம்களைப் பொதுநலனுக்கு அச்சுறுத்தலாகச் சித்தரித்து, பார்ப்பனர் அல்லாத இந்து சமூகங்களைத் திரட்டி, படிப்படியாக சமூக-அரசியல் மோதல்களை ஒரு இந்து-முஸ்லிம் மதப் பிளவாக மாற்றினர். இந்து-முஸ்லிம் அரசியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்த 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இந்த வரலாற்றுப் போக்கு உறுதியான வடிவம் பெற்றது.

இந்துத்துவா அரசியலின் ஆரம்பநிலை  

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுத்தாளர் சந்திரநாத் பாசு “இந்துத்துவா” என்ற சொல்லை முதன்முறையாகப் பயன்படுத்தினார். காந்தியின் தேசிய அரசியலுக்கு முன்பே, இந்திய சுதந்திர இயக்கத்தின் ஆரம்ப வடிவத்தை உருவாக்கிய உறுதியான தேசியவாதிகளாக “லால் – பால் – பால்” (லாலா லஜ்பத் ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்) உருவெடுத்தனர்.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்த, இவர்களின் அணுகுமுறையில் இந்து கலாச்சார அடையாளங்கள் தெளிவாகக் காணப்பட்டன. குறிப்பாக, பால கங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தி மற்றும் சிவாஜி ஜெயந்தி போன்ற விழாக்களை அரசியல் ஒருங்கிணைப்பு கருவிகளாக பயன்படுத்தினார். மேலும், ஆர்.எஸ்.எஸ் முன்னோடியான இந்து மகாசபையின் தலைவராக லாலா லஜ்பத் ராய் செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் அரசியலின் ஆரம்பநிலை 

1880 களில் சர் சையது அகமது கான், இஸ்லாமியர்கள் ஆங்கில கல்வியை கற்க வேண்டும் என்று பேசினார். முகம்மதன் ஆங்கிலோ-ஓரியண்டல் (Muhammadan Anglo-Oriental / MAO) கல்லூரியை உருவாக்கி, பின்னாளில் 1920-ல் அது பல்கலைக்கழகமாக மாறியது. நவீன அறிவியல் கல்வி, மேற்கத்தியக் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மூலம் இந்திய முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக அலிகார் இயக்கத்தை அவர் வழிநடத்தினார்.  1930 களில், உருது கவிஞர் முகமது இக்பால், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அரசியல் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தேவை என வலியுறுத்தினார். இவை எதுவும் தனி நாட்டுக்கான கோரிக்கையாக இல்லை.
முஸ்லிம் லீக் கட்சி உருவானபோது அதன் நோக்கம் பாகிஸ்தான் உருவாக்குவது அல்ல; மாறாக, “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடிப்படையில் முஸ்லிம் மத மற்றும் கலாச்சார அடையாளங்களைப் பாதுகாப்பதே ஆகும். உண்மையில், இந்துத்துவ இயக்கங்கள் “இந்து – முஸ்லிம்” பிரிவினையை தீவிரமாகப் பேசிய காலகட்டத்திலும், ஜின்னா தொடர்ந்து “இந்து – முஸ்லிம்” ஒற்றுமை அரசியலை மட்டுமே முன்னெடுத்தார்.

சாவர்க்கரின் இரு தேசக் கோட்பாடு

1920 களில் தொடங்கி, இரு தேசக் கோட்பாட்டை முதன்முதலில் முன்வைத்தது சாவர்க்கர் தலைமையிலான இந்துத்துவ இயக்கமே என்பது நினைவில் கொள்ளத்தக்கது. “இந்துக்கள் ஒரு தேசம், முஸ்லிம்கள் ஒரு தேசம்” என்ற கருத்து, முஸ்லிம் லீக்குக்கு முன்பே இந்துத்துவ அரசியலில் வலியுறுத்தப்பட்டது. இந்த அரசியல் பின்னணியில், முஸ்லிம்களுக்குள் பாதுகாப்பற்ற உணர்வு மெதுவாக வளரத் தொடங்கியது.
1937 மாகாணத் தேர்தலால் திருப்புமுனை

1937 இந்தியா முழுவதும் நடந்த மாகாணத் தேர்தல்களில் ஜின்னாவின் முஸ்லிம் லீக் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் வெற்றி பெற்றது ஆனால் ஒரு மாகாணத்தில் கூட ஆட்சி அமைக்க முடியவில்லை. அனைத்திலும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. முஸ்லிம்களுக்கு எந்த வித பங்களிப்பும் காங்கிரஸ் கொடுக்காமல் ஆட்சியமைத்தே பிரிவினைக்கு தொடக்கமாக அமைந்தது.

இதன் பின்னர், 1937 க்கு பிறகு, ஜின்னா முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பாதுகாப்பைப் பற்றி தீவிரமாகப் பேசத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஒற்றுமையை வலியுறுத்திய ஜின்னாவின் அரசியல் நிலைப்பாடு, இக்காலகட்டத்தில் பாகிஸ்தான் கோரிக்கையை நோக்கி நகர்ந்தது.

லாகூர் தீர்மானம்

1940 லாகூர் மாநாட்டில், முஸ்லிம் லீக் “பாகிஸ்தான் முன்மொழிவு” தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன் பின்னர், பாகிஸ்தானே ஜின்னாவின் மைய அரசியல் கோஷமாக மாறியது. “நேரடி நடவடிக்கை நாள்” போன்ற நிகழ்வுகள், இந்த கோரிக்கையை ஒரு பெருமளவிலான மக்கள் இயக்கமாக மாற்றின. இதே காலகட்டத்தில், இந்தியா முழுவதும் “இந்தியா – பாகிஸ்தான்” என்ற இரு தேசக் கோட்பாடு அரசியல் ரீதியாக வலுப்பெற்றது.

சுதந்திரப் போராட்டமா? அதிகாரப் போராட்டமா?

இந்திய சுதந்திரப் போராட்டம், 1930களில் பிரிட்டிஷ் பிரதமர் இராம்சே மெக்டொனால்ட் நடத்திய வட்டமேசை மாநாட்டிலேயே முடிந்ததாகக் கூறலாம். அதன் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தை முழுக்க அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சுவார்த்தைகளாகவே இருந்தன.

வட்டமேசை மாநாட்டில், சிறுபான்மையினரின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் பிரிட்டிஷ் அரசால் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டன. இதற்கிடையில், அடுத்த 17 ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளியேறத் தயாரான பிரிட்டிஷ் அரசு, தங்களது இந்திய சொத்துக்களை லாபகரமாக விற்றுவிட முயன்றது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, பிரிட்டிஷ் அரசு வணிகர்களின் சொத்துகளை சாதகமான விலையில் கைப்பற்றியதுடன், அதற்குப் பதிலாக இந்தியாவை ஆளும் உரிமையையும் “பார்ப்பன - பனியா” கூட்டணி பெற்றது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த வலதுசாரிப் பிரிவினரும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவா இயக்கங்களும் இணைந்து, முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் உரிமைகளை படிப்படியாகப் பறித்தன. இதன் விளைவாக, இந்தியா முழுவதும் “பார்ப்பன - பனியா” கூட்டணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. இதில், அரசியல் அதிகாரத்தை பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்குட்பட்ட பொருளாதார அதிகாரத்தை பனியாக்களும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

“பார்ப்பன - பனியா” கூட்டணியால் இழைக்கப்பட்ட அநீதிகளை அடையாளம் கண்ட சமூக நீதித் தலைவர்களான பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரும், அவர்களது இரண்டாம் கட்ட தலைவர்களும், “பிரச்சாரங்கள், இயக்கங்கள், புத்தகங்கள், பத்திரிகைகள்” போன்றவற்றின் மூலம் “பார்ப்பன - பனியா” கூட்டணியின் ஒடுக்குமுறைக்கு எதிராக விளிம்புநிலை சமூகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தினார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், 1920 களில் முஸ்லிம் மற்றும் தலித் சிறுபான்மையினர் அரசியல் உரிமைகளைப் பெறத் தொடங்கியபோது, காந்தி சனாதன தர்மத்தை முன்னிறுத்துவதில் கவனம் செலுத்தினார், அதே சமயம் ஜின்னா “இந்து - முஸ்லிம்” ஒற்றுமைக்காக வாதிட்டார். இதற்கு மாறாக, 1940 களில் முஸ்லிம் மற்றும் தலித்துகளின் சமூக - பொருளாதார உரிமைகள் குறையத் தொடங்கி, “பார்ப்பன - பனியா” கூட்டணி வலுப்பெற்றபோது, காந்தி தேசிய ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்தார், அதே சமயம் ஜின்னா முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாக்கப் பிரிவினையை முன்னெடுத்தார்.

பாகிஸ்தான் - திராவிடஸ்தான் 

1940 களில் பாகிஸ்தான், திராவிடஸ்தான், விளிம்புநிலை மக்கள் நலன் குறித்து பெரியார், ஜின்னா, அம்பேத்கர் ஆகியோருக்கிடையே சந்திப்புகளும் கடிதத் தொடர்புகளும் நடந்தன. திராவிடஸ்தான் உருவாக்க ஜின்னாவின் ஆதரவை பெரியார் கேட்டபோது, “இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியாக நாங்கள் பேசுவது போல, திராவிடஸ்தான் குறித்து பார்ப்பனர் அல்லாத கூட்டமைப்பே பேச வேண்டும்” என்று ஜின்னா பதிலளித்தார்.
1940 களில் பெரியாரால் வழிநடத்தப்பட்டு, பேரறிஞர் அண்ணாவால் ஆதரிக்கப்பட்ட திராவிட நாடு (திராவிடஸ்தான்) என்பது “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம்” உள்ளிட்ட தென்னிந்தியாவின் திராவிட மொழி பேசும் பகுதிகளுக்கு தனியொரு நாட்டை கோரியதாகும். இதன் அடிப்படை காரணங்கள் பார்ப்பனிய எதிர்ப்பு, சமூக சீர்திருத்தம், திராவிட இனம், மொழி, பண்பாடு மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகும். திராவிட நாடு கோரிக்கை தொடர்பாக பல்வேறு பிரிவினை மாநாடுகள் நடத்தப்பட்டன. காஞ்சிபுரம் மாநாட்டில் திராவிட நாட்டின் வரைபடம் வெளியிடப்பட்டது. “அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” போன்ற அரசியல் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திராவிட இயக்கத்தின் முன்னோடியான ஏ.டி.பன்னீர்செல்வம் விமான விபத்தில் சிக்காமல், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் நேரடியாக பேசியிருந்தால், திராவிட நாடு கோரிக்கைக்கு அதிக ஆதரவு கிடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இறுதியில், தமிழ்நாட்டிற்கு வெளியே குறைந்த ஆதரவையே பெற்ற “திராவிட நாடு” கோரிக்கை, 1960 களின் முற்பகுதியில் பலவீனமடைந்து, முறையாகக் கைவிடப்பட்டது.

மொத்தத்தில், திராவிடஸ்தான் உருவாகாததற்கு பல காரணங்கள் இருந்தன. பாகிஸ்தான் போல மதம் ஒரு மைய அரசியல் விவகாரமாக திராவிடஸ்தானில் இல்லை; சாதி என்பது இந்து மதத்தின் உள்நிலை பிரச்சினையாக பிரிட்டிஷ் அரசால் கருதப்பட்டது. 

அமைச்சரவைத் தூதுக்குழு

பிரிட்டிஷ் அரசு இந்தியாவிலிருந்து விலகுவதற்கு முன், நாட்டின் பிரிவினையைத் தவிர்க்க அமைச்சரவைத் தூதுக்குழு (Cabinet Mission) பல முக்கிய ஆலோசனைகளை முன்மொழிந்தது. கூட்டாட்சி அமைப்பு உட்பட பல தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. ஆரம்பத்தில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பின்னர் அவற்றின் அரசியல் விளக்கங்கள் குறித்து காங்கிரஸ் – முஸ்லிம் லீக் இடையேயான  முரண்பாடுகள் காரணமாக, அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இறுதியில், வேறு வழியின்றி, நாடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாக பிரிக்கப்பட்டது.
பாகிஸ்தான் என்ற கருத்து, மக்கள் சார்ந்த வெகுஜனப் போராட்டங்களிலிருந்து உருவானதை விட, மாநாட்டு மேசைகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலிருந்தே அதிகமாக உருவானது. இதுவே ஜின்னாவின், “பாகிஸ்தானை உருவாக்கியது யார் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நானும், என் செயலாளரும், அவருடைய தட்டச்சுப் பொறியுமே” என்று கூறப்பட்டதாகக் கருதப்படும் கூற்றில் பிரதிபலிக்கிறது. இது மக்களை அவமதிக்கும் கூற்றல்ல; மாறாக, அரசியல் யதார்த்தத்தை நிர்வாணமாக வெளிப்படுத்தும் உண்மையாகக் கருதலாம்.

காந்தி உண்ணாவிரதம்

பிரிவினைக்குப் பிறகு, இந்தியா முழுவதும் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்களுக்கிடையே ஏற்பட்ட கடுமையான வகுப்புவாத வன்முறைகளைத் தடுப்பதோடு, அமைதி மற்றும் ஒற்றுமையை மீட்டெடுப்பதற்காக, அத்துடன் பாகிஸ்தானுக்கு ஒப்பந்தத்தின்படி ரூ.55 கோடி நிதியை விடுவிக்க கோருவதற்காக காந்தி 13 ஜனவரி 1948 அன்று தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.75 கோடியில், 15 ஆகஸ்ட் 1947 அன்று இந்திய அரசு ரூ.20 கோடி மட்டுமே வழங்கியது. 22 அக்டோபர் 1947 அன்று பாகிஸ்தான் ஆதரவுடன் பதான் குழுக்கள் காஷ்மீரில் படையெடுத்ததால், மீதமுள்ள ரூ.55 கோடி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், காந்தியின் உண்ணாவிரத கோரிக்கைக்கு இணங்க இந்திய அரசு முழுத் தொகையையும் பாகிஸ்தானுக்கு வழங்கியதைத் தொடர்ந்து, 18 ஜனவரி 1948 அன்று அவர் உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.

காந்தி படுகொலை 

“வேற்றுமையில் ஒற்றுமை கொள்கை, இந்திக்கு பதிலாக இந்தி - உருது கலந்த இந்துஸ்தானி மொழிக்கு வழங்கிய ஆதரவு, பாகிஸ்தானுக்குச் சேர வேண்டிய நிதியை விடுவிக்க மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம், மத நல்லிணக்க கொள்கை” ஆகிய காந்தியின் அரசியல் நிலைப்பாடுகளை எதிர்த்த இந்துத்துவவாதி நாதுராம் கோட்சே, பாகிஸ்தான் உருவாக்கத்தை காந்தி தடுக்கத் தவறியதால் இந்தியாவின் அகண்ட பாரதக் கனவு சிதைந்ததாகவும், காந்தி இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்றும் குற்றம் சாட்டி, நாதுராம் கோட்சே என்கிற பார்ப்பான் 30 ஜனவரி 1948 அன்று காந்தியைக் படுகொலை செய்தான்.
பின்குறிப்பு = இறந்த காந்தியார் நம் காந்தியார்; இந்த நாட்டுக்கு "காந்தி தேசம், காந்திஸ்தான்" என்று பெயரிட வேண்டும்; இருந்தவர் ஆரிய காந்தி, இறந்தவர் திராவிட காந்தி என்று பெரியார் பேசியதும், "உத்தமர் காந்தியின் உயிரைக் குடித்தது ஒரு ஊதாரி பார்ப்பான்" என்று கலைஞரின் முரசொலி தலையங்கம் வெளியிட்டதும் கவனிக்கத்தக்க அரசியல் செய்திகளாகும்.

முடிவுரை

முஸ்லிம்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு அணுகிய இந்துத்துவ இயக்கங்களின் ஆதிக்கம், சிறுபான்மையினரிடையே ஆழமான அச்சத்தை உருவாக்கியது. மொத்தத்தில், அன்றைய அரசியல், சமூக மற்றும் உளவியல் சூழலில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை தவிர்க்க முடியாததாக இருந்தது. 

காந்தி – ஜின்னா சிந்தனைகளின் மாற்றங்கள், இந்துத்துவ அரசியல் ஆதிக்கம், முஸ்லிம்களின் அச்சங்கள், “பார்ப்பன - பனியா” அதிகாரப் போராட்டம், பிரிட்டிஷ் அரசின் வெளியேற்றம், சமூக மனோநிலைகள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து உருவாக்கிய வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாகவே இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை அமைந்தது.

விவரணைகள் 





வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

  1. Great articulation of data and so much of effort has gone into this. Proud of you chocks

    ReplyDelete

Overview of the Global Narcotics Trade

Overview of the Global Narcotics Trade Note = This post gives a basic overview based on available information and is not a complete analysis...