Chocks: அயோத்தி வழக்கு

Sunday, January 21, 2024

அயோத்தி வழக்கு

அயோத்தி வழக்கு

குறிப்பு = இந்த சுருக்கமான கட்டுரைத் தொகுப்பு முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின், விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கட்டுரைத் தொகுப்பு ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. எனினும் இஃது, புத்தகத் தலைப்பின் இறுதி ஆய்வாகக் கருதப்படக்கூடாது. கூடுதல் புரிதலுக்காக, இது தொடர்பான இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

விளக்கம் = இந்தியாவில் பெரும்பான்மை - சிறுபான்மை சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு சங்கப் பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு அரசியல் சூழ்ச்சியால் மெல்ல மெல்ல வெறுப்பரசியலை அரங்கேற்றியதன் விளைவாகத் தகர்க்கப்பட்டதே பாபர் மசூதி. இஸ்லாமியர்கள் வழிபட்டு வந்த பாபர் மசூதிக்குள் தான் ராமர் பிறந்தார் என்று ஒரு பொய்ப் பரப்புரையை தொடர்ந்து செய்தார்கள். ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லி வந்தால் அது உண்மையாகிவிடும் என்று கோயபல்ஸ் (Goebbels) பாணியை நடைமுறைப்படுத்தி வெல்லவே செய்துள்ளனர். இந்து - முஸ்லிம் சமய நல்லிணக்கத்தைத் சீர்குலைக்க, தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பையும் பெரும்பாலான இந்துக்களுக்கு தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தும் அவதூறுகள் மூலமும் தனக்கான அரசியலைக் கட்டமைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள சங்கப் பரிவார் அமைப்புகள் அதை மேலும் விரிவுப்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகிறது. இந்த சூழலில் “அயோத்தி வழக்கு” என்ற கட்டுரைத் தொகுப்பு, பாபர் மசூதி பிரச்சினை கடந்து வந்த வரலாற்றைப் பதிவு செய்கிறது.
பொருளடக்கம் 
  1. முகவுரை
  2. பசு ஒரு மத அரசியல் விலங்கு
  3. ராமரும் அயோத்தியும் 
  4. பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் 
  5. நேரு காலத்தில்
  6. மொரார்ஜி தேசாய் காலத்தில்
  7. இந்திரா காந்தி காலத்தில்
  8. ராஜீவ் காந்தி காலத்தில்
  9. வி.பி.சிங் காலத்தில்
  10. சந்திரசேகர் காலத்தில் 
  11. நரசிம்ம ராவ் காலத்தில்
  12. 06 டிசம்பர் 1992
  13. லிபரான் ஆணையம்
  14. மும்பை கலவரமும் குண்டுவெடிப்பும்
  15. ஸ்ரீகிருஷ்ணா ஆணையம்
  16. குஜராத் ரயில் எரிப்பும் கலவரமும் 
  17. நானாவதி-மேத்தா ஆணையம்
  18. கோவை கலவரமும் குண்டுவெடிப்பும்
  19. கோகுலகிருஷ்ணன் ஆணையம்
  20. 2010 உயர் நீதிமன்ற தீர்ப்பு
  21. 2019 உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
  22. இறுதித் தீர்ப்பின் சாராம்சங்கள் 
  23. அயோத்தியில் கோவில் 
  24. வரலாற்றில் 22 ஜனவரி
  25. ஆரிய அரசியல்
  26. பாகிஸ்தானில் ஒரு வழக்கு
  27. ஜெயலலிதாவின் நிலைப்பாடு 
  28. கலைஞரின் நிலைப்பாடு 
  29. முடிவுரை 
  30. விவரணைகள் 
முகவுரை

500 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி 1992 இல் சங்கப் பரிவார் அமைப்புகளால் இடிக்கப்பட்டது. அதன் வழக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து, 22 ஜனவரி 2024 அன்று சங்கப் பரிவார் ஆதரவாளர்களை மகிழ்விக்கும்  வகையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மரண ஓலத்தின் மத்தியில் கட்டி முடிக்கப்படாத ராமர் கோவில் திருவிழாவை ஊரார் கூடி, கொண்டாடி உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இரத்தக்களரியான அயோத்தி விவகாரத்தை மீண்டும் நினைவூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.

பசு ஒரு மத அரசியல் விலங்கு

1966 இல் பசுவதைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி, டெல்லியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் பாரதிய ஜன சங்கம் ஆதரவுடன் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினர்.  போராட்டம் வன்முறையாக மாறியதால் பொதுச் சொத்துக்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர் இல்லத்தைக் குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இறுதியில், இந்த வன்முறையானது, காவல்துறையின் துப்பாக்கிச் சூடு மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது.

காமராஜரின் பசுவதைத் தடைச் சட்டத்திற்கு எதிரான முந்திய பேச்சால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் அவரது இல்லத்தைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்திய போதும் காமராஜர் காயத்திலிருந்து தப்பித்தார். இந்நிகழ்விற்கு, "பிற்போக்கு மற்றும் சமூக விரோத சக்திகள்" தான் காரணம் என்று கூறி வன்முறையைப் பகிரங்கமாகக் கண்டனம் செய்தார் காமராஜர். "பிராமணரல்லாத தலைவரின் வெற்றிக்கு எதிரான பிராமண வெறுப்பின் வெளிப்பாடே இந்த தாக்குதல்" என்று காமராஜர் மீதான தாக்குதலைப் பெரியார் கண்டித்தார்.

1966 இல் டெல்லியில் நடந்த பசுவதைக்கு எதிரான கலவரம், "பசுப் பாதுகாப்பு" என்ற பதாகையின் கீழ் இந்துத்துவா அரசியலுடன் தொடர்புடைய தந்திரங்களை வெளிப்படுத்தியது. 1960 களில் பசுவை ஒரு மத அரசியல் விலங்காக வைத்து பசுப் பாதுகாப்புக்கு ஆதரவைத் திரட்டுவதில் சவால்களை எதிர்கொண்ட பிறகு, இந்துத்துவா அரசியல்வாதிகள் ராம ஜென்மபூமி இயக்கத்தின் மீது தங்கள் முதன்மையான கவனத்தை மாற்றினர். இவ்வாறு, வலதுசாரிகள் தீவிர பசு அரசியலை விட்டு விலகி, அதற்கு பதிலாக ராமரை மத அரசியல் சின்னமாக மாற்றி அரசியல் ஆதரவைப் பெற தொடங்கினர். இதுவே, இறுதியில் 1992 இல் பாபர் மசூதியை இடித்து 2024 இல் ராமர் கோவில் கட்டுவதற்கு வழிவகுத்தது.
ராமரும் அயோத்தியும் 

ஆரியர்களின் கடவுளான விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் ராமர், வழிப்பறிக் கொள்ளையை விட்டுவிட்டு சமஸ்கிருத கவிஞரான வால்மீகி எழுதிய இந்து இதிகாசமான ராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, தனது சகோதரர் லட்சுமணன் மற்றும் குரங்கு அனுமன் ஆகியோரின் உதவியுடன் ராவணன் கொண்டு சென்ற தனது மனைவி சீதையை மீட்டார். ராமர், சீதை, ராவணன், அனுமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன், வாலி, சுக்ரீவன் போன்ற பல கதாபாத்திரங்களை கொண்டுள்ள ராமாயணம் இதிகாசத்தின் கதைக்களம் அயோத்தியில் ராமர் ஆட்சி புரிவதற்கு முன்னும் பின்னும் நடந்தாகும். இந்திய தொல்லியல் துறையின் கூற்றுப்படி, ராமர் உட்பட ராமாயணக் கதாபாத்திரங்கள் இருந்ததை உறுதிப்படுத்த வரலாற்று அல்லது அறிவியல் சான்றுகள் இல்லாத போதிலும், அயோத்தி ராமர் பிறந்த இடமாகவும், ராம ராஜ்யத்தின் தலைநகராகவும் போற்றப்படுவது விவாதத்திற்குரிய பொருளாகும்.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, அயோத்தியில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதியை ராமர் பிறந்த இடம் என்று கூறி, பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று சங்கப் பரிவார் அமைப்புகள் வலியுறுத்தின. இந்த சர்ச்சைக்குரிய கோரிக்கை பரவலான மதக் கலவரங்களுக்கு வழிவகுத்தது. மேலும், 2018 இல் உத்தரப் பிரதேச பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத், தொல்பொருள் சான்றுகள் இல்லாத ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராண நகரத்துடன் இணைத்து, பைசாபாத் நகரத்தை அதிகாரப்பூர்வமாக அயோத்தி என மறுபெயரிட்டார். இறுதியாக, 2019 இல் உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, அயோத்தியில் ராமாயண கதையின் அடிப்படையில் ராமர் கோவில் கட்டப்படுகிறது.
பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் 

1857 இல் கொழுப்பு தடவிய தோட்டாக்களை இந்து மற்றும் முஸ்லீம் வீரர்கள் கூட்டாக பயன்படுத்த மறுத்தது கலகத்திற்கு வழிவகுத்தது. இந்நிலையில், 1857 கலகத்தையடுத்து, பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிக்கு எதிராக இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான இடமாக அயோத்தி உருவானது. அதையொட்டி, பாபர் மசூதி வளாகம், முஸ்லீம்கள் தொழுகை நடத்த உள் முற்றமாகவும், இந்துக்கள் சிலைகளுக்கு பிராத்தனை செய்ய வெளிப்புற முற்றமாகவும் இரும்பு தண்டவாளங்களால் பிரிக்கப்பட்டது.

1885 இல் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி கோரி மதகுரு ரகுபர் தாஸ் வழக்கு தொடுத்ததில் இருந்து அயோத்தி வழக்கின் சட்ட சிக்கல்கள் பற்றிய ஆரம்பப் பதிவுகள் தொடங்கியது. எனினும், முதல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு 1886 இல் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது மேல்முறையீடும் தாக்கல் செய்யப்பட்டு, அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

1934 இல் அயோத்தியில் முஸ்லீம்கள் பசுவைக் கொன்றதாக வதந்திகள் பரவியதை தொடர்ந்து மதக் கலவரம் வெடித்தது. இது இந்துக்கள் பாபர் மசூதியை சேதப்படுத்த வழிவகுத்தது. பின்னர், இந்து கலவரக்காரர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையை பயன்படுத்தி மசூதி பழுது பார்க்கப்பட்டது. இந்நிலையில், பாபர் மசூதி 1528 இல் சன்னி முஸ்லீம் பேரரசர் பாபரால் கட்டப்பட்டது என்ற ஆவணங்களை 1936 இல் வக்பு வாரிய ஆணையர் விசாரணை குழுவிடம் சமர்ப்பித்தார்.

எப்படியாகினும், பாபர் மசூதி பகுதியில் ஏற்பட்ட வகுப்புவாதப் பதற்றத்தைத் தொடர்ந்து, முஸ்லீம்கள் மசூதிக்குச் சென்று பிரார்த்தனை செய்வதைக் குறைத்தனர். அதே நேரத்தில் இந்துக்கள் அந்த இடத்திற்கு சென்று பிரார்த்தனை செய்வதை அதிகரித்தனர். இந்த பின்னணியில், கோரக்நாத் மடத்தை சேர்ந்த திக்விஜய் நாத், 1937 இல் தொடங்கி ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களை அணி திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டார். இம்மடத்தின் தற்போதைய தலைவர் உத்தரப் பிரதேச பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரு காலத்தில்

1946 இல் இந்து மகாசபையின் பிரிவான சேர்ந்த அகில பாரதிய ராமாயண மகாசபை, பாபர் மசூதியின் இடத்தைக் கட்டுப்படுத்தக் கோரத் தொடங்கியது. 1949 இல் திக்விஜய் நாத், அகில பாரதிய ராமாயண மகாசபை சார்பில் ஒன்பது நாள் பாராயணத்தை ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, பீகாரைச் சேர்ந்த சாதுவும், திக்விஜய் நாத்திற்கு நெருக்கமானவருமான அபிராம் தாஸ் தலைமையில் இந்துத்துவா குழுவினர் பாபர் மசூதிக்குள் நுழைந்து, ராமர் மற்றும் சீதை சிலைகளை மசூதிக்குள் வைத்தனர். சிலைகளை வைத்த பிறகு, வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டி மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவை ஈர்க்கும் நோக்கில், சிலைகள் சுயம்பாக தோன்றியது ஒரு தெய்வீக வெளிப்பாடு என்று கதைத்து இந்துத்துவா குழு பொய் செய்தியைப் பரப்பியது.

இதையடுத்து, பிரதமர் நேரு, பாபர் மசூதியைச் சர்ச்சைக்குரிய இடமாக அறிவித்து, அதன் கதவுகளை பூட்ட உத்தரவிட்டார். மேலும், சிலைகளை அகற்ற முதல்வர் கோவிந்த் வல்லப் பந்திற்கு உத்தரவிட்டார். ஆனால், உள்ளூர் அரசியல் காரணமாக சிலைகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், 1950 இல் சிலைகளை வழிபட அனுமதி கோரி கோபால் சிங் விஷாரத் என்பவரும் சிலைகளை அகற்றி இடத்தை மசூதியாக பாதுகாக்க கோரி ஹாஷிம் அன்சாரி என்பவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். "சிலைகளை அகற்றத் தேவையில்லை. தினசரி பூஜை அனுமதிக்கப்படுகிறது, வழிபாட்டு உரிமை விலக்கப்பட்டுள்ளது. வளாகத்தை பூட்டுவது சரியானது” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுருக்கமாக, தினசரி பூஜைகள் அனுமதிக்கப்பட்ட அதே வேளையில் சர்ச்சைக்குள்ளான பாபர் மசூதி பூட்டப்பட்டு இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் நுழையவும் அனுமதிக்கப்படவில்லை.
மொரார்ஜி தேசாய் காலத்தில்

நெருக்கடி நிலை காலத்திற்குப் பிறகு, 1977 இல் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தியைத் தோற்கடித்து, ஜனதாக் கட்சியின் சார்பில் மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கு மொரார்ஜி தேசாய் சென்ற போது, உயர்மட்ட முஸ்லீம் தூதுக்குழு அவரைச் சந்தித்து முஸ்லீம் சமூகத்தின் சார்பாக சமூகத்தில் நிலவும் கவலைகளைத் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலிப்பதாக உறுதியளித்த மொரார்ஜி தேசாய், அயோத்தி, மதுரா மற்றும் காசி ஆகிய மூன்று இந்துக்களின் மிக முக்கியமான புனிதத் தலங்கள் மீதான உரிமைப் போராட்டத்தை முஸ்லீம்கள் கைவிட ஒப்புக்கொண்டால், அது முஸ்லீம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனளிக்கும் என்று தூதுக்குழுவிடம் கேட்டார். முஸ்லீம் தூதுக்குழு இந்த விவகாரத்தில் மௌனம் காத்ததுடன் அதிருப்தியுடன் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

பின் குறிப்பு = ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாகக் காசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதி அஜய் கிருஷ்ணா விஸ்வேஷா, 2024 இல் ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் இந்துக்களுக்கு வழிபடும் உரிமையை வழங்கினார். அவர் அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, லக்னோவில் உள்ள மருத்துவர் சகுந்தலா மிஸ்ரா தேசிய மறுவாழ்வுப் பல்கலைக்கழகத்தின் லோக்பாலாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சங்கப் பரிவாரின் அடுத்த இலக்கு ஞானவாபியில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அரசியலமைப்புகளின் மீது பா.ஜ.கவின் செல்வாக்கு என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்திரா காந்தி காலத்தில்

பிரதமர் இந்திரா காந்தி, இந்துக்களின் உணர்வுகளையும் முஸ்லீம்களின் கவலைகளையும் மூலோபாய (Strategically) ரீதியாகச் சமநிலைப்படுத்தினார். 1970 களில் முஸ்லீம்களை ஈர்க்கும் விதமாக, சட்ட விஷயங்களில் முஸ்லீம்களின் சட்ட நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தை நிறுவினார்.  கிழக்குப் பாகிஸ்தானை வங்கதேசமாக உருவாக்க உதவினார். அரசியலுடன் இந்துத்துவா கருத்தியல் இணைந்த 1980 களில் இந்து யாத்ரீகர்களை ஈர்க்கும் நோக்கில், சுற்றுலாத் துறையை நவீனமயமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். அவர் தொடர்ந்து இந்து கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு, மத குருக்களையும் சந்தித்து வந்தார். இந்த நுட்பமான அரசியல் மூலோபாயம் சமநிலையைப் பேணியது மட்டுமின்றி, ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிகளுக்கும் பங்களித்தது.

இதற்கிடையில், ஜனதா கட்சி ஆட்சிக்கு பிறகு, இந்துத்துவா சக்திகள் முக்கியத்துவம் பெற்று தேர்தல் அரசியலில் கணிசமான பங்கை வகிக்கத் தொடங்கியதால் இந்திய அரசியல் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. அதையொட்டி, 1980 களில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்டுவது மத நம்பிக்கைக்குரியது, அது வழக்குக்குரிய விவகாரம் அல்ல என்று சங்கப் பரிவார் அமைப்புகள் பிரச்சாரம் செய்யத் தொடங்கின. 1984 இல் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, இந்துத்துவா அடையாளத்துடன் அரசியல் வடிவங்களைப் பிரதிபலிக்கும் சங்கப் பரிவார் அமைப்புகள் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.
ராஜீவ் காந்தி காலத்தில்

1985 இல் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அமைப்பான ஸ்ரீ ராம் ஜென்மபூமி முக்தி யக்ஞ சமிதி, ராம ஜென்மபூமிக்குக் கோரிக்கை விடுத்து சீதை பிறந்த இடமாகக் கதைக்கப்படுகிற சீதாமர்ஹியில் இருந்து அயோத்திக்கு ரத யாத்திரையை ஏற்பாடு செய்தது. இந்த பின்னணியில், இந்துக்கள் வழிபாடு செய்யப் பாபர் மசூதியைத் திறக்க வேண்டும் என்று ஹரி சங்கர் துபே மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, 1986 இல், பைசாபாத் (இப்போது அயோத்தி) மாவட்ட நீதிமன்றம் பாபர் மசூதியின் பூட்டைத் திறக்க உத்தரவு பிறப்பித்து வழிபாட்டிற்கு அனுமதித்தது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல், காங்கிரஸ் அரசு பாபர் மசூதியை வழிபாட்டிற்காக திறந்து விட்டது. மேலும், 1980 களின் இறுதியில், தூர்தர்ஷன் தொலைக்காட்சி ராமாயணம் மற்றும் மகாபாரதம் தொடர்களை ஒளிபரப்பத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

1989 இல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சர்ச்சைக்குரிய இடம் முழுவதையும் ராம் லாலாவிடம் ஒப்படைக்கக் கோரி சங்கப் பரிவார் அமைப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் வக்பு வாரியம் பிரதிவாதி ஆனது. சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதைய நிலையே (Status Quo) தொடர வேண்டும் என இரண்டு தரப்புக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில், 1987 முதல் பல்வேறு நகரங்களில் சங்கப் பரிவார் அமைப்புகள் நடத்திய "தேசிய சிந்தனையாளர்கள் மாநாடு" மூலம் ராமர் கோவில் வேட்கை வேகம் பெற்றது. 1989 இல் பா.ஜ.க.வின் பாலம்பூர் தீர்மானம் ராமர் கோவில் கோரிக்கையை மேலும் தீவிரப்படுத்தியது. 1989 நாடாளுமன்றத் தேர்தலின் போது, பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற குரல் வலுத்தது. சுருக்கமாக, 1980 களின் பிற்பகுதியில், வட இந்தியாவில் ஒரு அசாதாரண சூழல் வெளிப்பட்டது. இதனால், ராமர் கோவில் தொடர்பான இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பாபர் மசூதி எதிர்காலம் குறித்து முஸ்லீம்களின் கவலைகளைப் பிரதமர் ராஜீவ் காந்தி தீர்க்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர். அதையொட்டி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பாபர் மசூதி வளாகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ராஜீவ் காந்தி உறுதியாக இருந்தார். 

இதைத் தொடர்ந்து, 1989 நாடாளுமன்ற தேர்தல் காலகட்டத்தில், Bofors பிரச்சாரத்திற்குப் பிறகு ராமர் கோவில் பா.ஜ.கவின் முக்கியப் பிரச்சாரமாக விளங்கிய போது, அதை எதிர்கொள்ள, பாபர் மசூதிக்கு அருகில் அயோத்தி கோவிலுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்ற விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கோரிக்கையை ராஜீவ் காந்தி, எம்.எல்.ஃபோட்டேதார் மற்றும் ஆர்.கே.தவானின் ஆலோசனையின் பேரில் அனுமதித்தார். அத்துடன் மகாத்மா காந்தி குறிப்பிட்ட ராம ராஜ்ஜியத்தை அமைப்போம் என்று ராஜீவ் காந்தி தனது தேர்தல் உரையில் கூறினார். இதையெடுத்து, 1989 இல் "சர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகில் இல்லாமல், சர்ச்சைக்குரிய இடத்தின் ஒரு பகுதியில்" அயோத்தி கோவிலுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அடிக்கல் நாட்டியது. இந்நிலையில், "சர்ச்சைக்குரிய இடத்தின் ஒரு பகுதியிலே பூஜை நடைபெறப் போவது தனக்குத் தெரியாது" என்று ராஜீவ் காந்தி வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், பாபர் மசூதி இடத்தின் உரிமை தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருப்போம் என ராஜீவ் காந்தி அரசுக்கு உறுதியளித்த விஷ்வ ஹிந்து பரிஷத், கொடுத்த வாக்குறுதியை மீறி, சர்ச்சைக்குரிய இடத்தில் அடிக்கல் நாட்டியது. ராஜீவ் காந்தியின் தாராள மனப்பான்மை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக அமைந்து. ராம ஜென்மபூமி பிரச்சாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது.
// துணுக்கு செய்தி //

பிரதமர் ராஜீவ் காந்தியைக் கலந்தாலோசிக்காமல், உள்துறை இணை அமைச்சராக இருந்த தனது நெருங்கிய நண்பரான அருண் நேரு உத்தரவின் பேரில், உத்தரப் பிரதேச முதல்வர் வீர் பகதூர் சிங் மசூதியை வழிபாட்டிற்காக திறந்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையில், பிரதமர் அலுவலக அதிகாரி வஜாஹத் ஹபிபுல்லாவிடம் "தன்னைக் கலந்தாலோசிக்காமல் பூட்டைத் திறக்க உத்தரவு பிறப்பித்து அதைச் செயல்படுத்திய பிறகு தான் தனக்குத் தெரியும்" என்று ராஜீவ் காந்தி கூறியதும், சில மாதங்கள் கழித்து அமைச்சர்கள் குழுவில் இருந்து அருண் நேருவை ராஜீவ் காந்தி நீக்கியதும் குறிப்பிடத்தக்கது. 

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, "1986 இல் ஷா பானு வழக்கில் முஸ்லீம் அரசியலை மையமாக வைத்து முஸ்லீம் பெண்கள் மசோதா நிறைவேற்றப்பட்ட போது, இந்து அரசியலை மையமாக வைத்து பாபர் மசூதியின் பூட்டைத் திறந்தது பற்றி முதல்வர் வீர் பகதூர் சிங்கிடம் கேட்டால், அவர் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் கேட்கச் சொன்னார், அவர் விளக்கம் கொடுக்க வேண்டும்" என்று அருண் நேரு கூறினார். இந்த சம்பவத்திற்கு ராஜீவ் காந்தி தான் பொறுப்பேற்க வேண்டும் என்றாலும் பூட்டைத் திறக்க உத்தரவிட்டது யார்? ஏன் மேல்முறையிடு செய்யவில்லை? என்ற சர்ச்சை தீர்க்கப்படாமல் போனது. 

மொத்தத்தில், தாத்தா காலத்தில் பூட்டப்பட்ட கதவுகள் பேரன் காலத்தில் திறக்கப்பட்டது அயோத்தி சர்ச்சையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும், அன்னை இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் அடக்கி வாசித்த சங்கப் பரிவார் அமைப்புகள், உள்கட்சி எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்த ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் எழுச்சி பெற்றது என்பதை மறுப்பதற்கில்லை. Bofors ஊழலைச் சுற்றியுள்ள கடுமையான சர்ச்சைகளுக்கு மத்தியில் அயோத்தி விவகாரம் ராஜீவ் காந்திக்கு அரசியல் நகர்வுகளை மேலும் சிக்கலாக்கியது குறிப்பிடத்தக்கது.

வி.பி.சிங் காலத்தில்

1989 இல் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க ஆதரவுடன் தேசிய முன்னணிக் கூட்டணி சார்பில் வி.பி.சிங் பிரதமரானார். பிரதமர் வி.பி.சிங் பதவியேற்ற பிறகு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தினார். மேலும், பாபர் மசூதியைப் பாதுகாக்கும் வகையில் சர்ச்சைக்குரிய இடத்தின் உரிமையை ஒன்றிய அரசுக்கு மாற்றும் நோக்கில் கையகப்படுத்தவும் உத்தரவிட்டார். ஆனால், ஒரு நாள் கழித்து அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

அயோத்தி நிலப்பிரச்சனையை தீர்ப்பதற்காக 1990 இல் வி.பி.சிங் வழிகாட்டலில் ஒரு சிறப்பு அமர்வு (Special Bench) அமைக்கப்பட்டு, அதன்படி சர்ச்சைக்குரிய இடத்தின் உரிமையைத் தீர்க்கும் வரை கட்டுமானத் தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அடிக்கல் நாட்டிய நிலையில் கோவிலைக் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று இந்து பூசாரி ஒருவர் மனு தாக்கல் செய்தார். இதற்கு, நீதிமன்றத்தில் பதிலளித்த ஒன்றிய ஜனதா தளம் அரசு, சிறப்பு அமர்வின் முன் நிலுவையில் உள்ள அனைத்து சிவில் வழக்குகளும் தீர்க்கப்படும் வரை எந்த கட்டுமான பணியையும் தொடர முடியாது என்று கூறியது.

இந்த பின்னணியில், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளின் உத்தரவுக்கு எதிராகவும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டவும் பா.ஜ.க தலைவர் அத்வானி ரத யாத்திரை நடத்தினார். ரத யாத்திரையின் போது அத்வானி பீகாரில் கைது செய்யப்பட்டார். அத்வானியின் கைதுக்குப் பிறகு அயோத்தியில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்வலர்கள் மசூதியின் சிறிய பகுதியை சேதப்படுத்தினர். அங்கு சங்கப் பரிவார் கூட்டத்தினர் பெருமளவில் திரண்டதால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவின் உத்தரவின் பேரில் சங்கப் பரிவார் ஆதரவாளர்கள் சிலர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மண்டல் ஆணையம் நிறைவேற்றம், அத்வானி கைது மற்றும் அயோத்தி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, வி.பி.சிங் அரசுக்கு அளித்த ஆதரவைப் பா.ஜ.க  விலக்கிக் கொண்டது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி, "உங்களுக்கு எப்படிப்பட்ட நாடு வேண்டும்?" என்று வி.பி.சிங் கேட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
சந்திரசேகர் காலத்தில் 

வி.பி.சிங் அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு, காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமரான சந்திரசேகர், அயோத்தி சர்ச்சையை ஒரு அவசரச் சட்டத்தைப் பரிசீலிப்பதன் மூலம் தீர்க்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தார். எனவே, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அமைப்பான ராம் ஜென்மபூமி அறக்கட்டளை மற்றும் பாபர் மசூதி பாதுகாப்பு குழுவின் முக்கியத் தலைவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். மகாராஷ்டிர முதல்வர் சரத் பவார், உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ், ராஜஸ்தான் முதல்வர் பைரன் சிங் ஷெகாவத் ஆகியோர் மேற்பார்வையில் ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிக்கலை முழுமையாக ஆராய, இரு தரப்பின் ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, வரலாற்று, தொல்பொருள், சட்ட மற்றும் வருவாய் பதிவுகளை விசாரிக்க நான்கு நிபுணர் குழுக்களை சந்திரசேகர் அரசு அமைத்தது.

கோவில் மற்றும் மசூதிக்குப் புதிய நிலங்களை ஒதுக்குவது மற்றும் சர்ச்சைக்குரிய இடத்தை நினைவுச்சின்னமாகப் பாதுகாப்பது அல்லது கோவிலுக்காக மசூதியை முஸ்லீம்கள் ஒப்படைத்து மாற்று நிலம் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு இடையே, ஆதாரங்களின் சுருக்கத்தைப் பொதுமக்களுக்கு வெளியிட்ட விஸ்வ ஹிந்து பரிஷத், கால அவகாசம் வேண்டும் என்ற மறுதரப்பின் கோரிக்கையை நிராகரித்தது. இதனால், விஸ்வ இந்து பரிஷத் சுமுகத் தீர்வுக்கு ஆர்வம் காட்டாததால், இரு சமூகத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சி தோல்வியடைந்தது.

"எவ்வளவு காலம் நான் பிரதமராக இருப்பேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் பிரதமராக இருக்கும் போது யாரும் மசூதியை தொடக்கூடாது. அதையும் மீறி மசூதியை யாராவது தொட்டால் அவர்களை சுட உத்தரவிடுவேன். இந்தியா ஒரு ஏழை நாடு, இந்த சர்ச்சைக்கு இவ்வளவு பணம் செலவழிக்கிறோம், இதைத் தொடர்ந்து செய்ய முடியாது" என்று சந்திரசேகர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ராஜீவ் காந்தியின் வீட்டைச் சுற்றி இரண்டு போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து சந்திரசேகர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டது.
நரசிம்ம ராவ் காலத்தில்

1991 இல் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நரசிம்ம ராவ் பிரதமரானார். அதே சமயம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. 1991 இல் பா.ஜ.க தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஜம்மு காஷ்மீரில் குடியரசு தினத்தன்று கொடி ஏற்றி தேசிய ஒற்றுமையை வலியுறுத்த ஏக்தா யாத்திரையை நடத்தினார். இந்த யாத்திரைப் பேரணியின் ஒருங்கிணைப்பாளராக நரேந்திர மோடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசு சார்பில் முதல்வர் கல்யாண் சிங் சர்ச்சைக்குரிய இடத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதாகக் கூறி, பாபர் மசூதியைச் சுற்றியுள்ள 2.77 ஏக்கர் உள்ளிட்ட நிலங்களை கையகப்படுத்தி, ராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கினார். மேலும், பாபர் மசூதி பாதுகாக்கப்படும் என்று நீதிமன்றம் மற்றும் ஒன்றிய காங்கிரஸ் அரசிடம் கல்யாண் சிங் உறுதிமொழி அளித்திருந்தார்.
06 டிசம்பர் 1992

1992 காலகட்டத்தில் பாபர் மசூதி பகுதியில் நிலவிய அசாதாரண சூழலைத் தடுக்க உள்துறை அமைச்சகம் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. எவ்வாறாயினும், சட்டப்பிரிவு 355 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கும் மற்றும் 356 வது பிரிவின் கீழ் மாநில அரசைப் பதவி நீக்கம் செய்வதற்கும், பிரதமர் நரசிம்ம ராவ் முடிவெடுக்க அரசியல் தலையீட்டால் தாமதமானது. ஆரம்பத்தில், தேசிய ஒருமைப்பாட்டு மன்றம் (National Integration Council - NIC) நடத்திய கூட்டத்தின் போது, உத்தரப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரை செய்யும் என்று நரசிம்ம ராவ் நம்பினார். ஆனால், அந்த முடிவு அவருக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், மேற்கு ஆப்ரிக்காவின் செனகலில் 21 முதல் 23 நவம்பர் 1992 வரை நடைபெற்ற மூன்றாவது G-15 மாநாட்டிற்கு நரசிம்மராவ் புறப்பட்டுச் சென்றார். ஒருவேளை அவர் இல்லாத நேரத்தில் அவரது சகாக்கள் முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்த்து இருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அயோத்தி பிரச்சனையில் நீதித்துறை சம்பந்தப்பட்டிருக்கும் போது தன்னால் முடிவெடுக்க முடியாது என்று நரசிம்ம ராவ் வாதிட்டார். நீதிமன்றத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தி நரசிம்ம ராவ் செயல்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பின்னர், நரசிம்ம ராவ் தரப்பினர் "முடிவு செய்யாமல் இருப்பதும் ஒரு முடிவு" என்று வாதிட்டனர்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டால், அதை இடிக்க நீதிமன்றம் உத்தரவிடாது, அதன் பிறகு எந்த நீதிமன்ற உத்தரவையும் தாங்கள் ஏற்க மாட்டோம் என்று சங்கப் பரிவார் அமைப்புகள் கருத்து தெரிவித்தன. எனவே, சர்ச்சைக்குரிய இடத்தை அறக்கட்டளைக்கு மாற்றியதன் உண்மையான நோக்கம் ராமர் கோவில் கட்டுவதாகும். இதையொட்டி, சர்ச்சைக்குரிய இடத்தில் அதிகரித்து வந்த பதற்றத்தைக் கட்டுப்படுத்த ஒன்றிய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க முனைந்த போது, நீதிமன்ற உத்தரவையும் மீறி உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங் ராம ஜென்மபூமி இயக்கத்திற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார். மேலும், கல்யாண் சிங் ஆதரவால் அயோத்தியில் பராமரிப்புப் பணிகள் என்ற பெயரில் தொடங்கப்படவிருந்த ராமர் கோவில் திட்டம், பிரதமர் நரசிம்ம ராவ் தலையீட்டால் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் முன்னிலையில் சங்கப் பரிவார் தலைவர்களுக்கும், பாபர் மசூதி பாதுகாப்புக் குழுவிற்கும் இடையே சந்திப்பு தொடங்கியது.

டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகவும், 06 டிசம்பர் 1992 முதல் அயோத்தி கோவிலுக்கு கரசேவை தொடங்க போவதாகவும் சங்கப் பரிவார் அமைப்பினர் அறிவித்தனர். அப்பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகளை நிறுத்தவும், மாநில அரசைக் கலைக்கவும் ஒன்றிய காங்கிரஸ் அரசு பரிசீலித்தது, ஆனால் அவ்வாறு முடிவெடுக்கவில்லை. இதற்கிடையில், சர்ச்சைக்குரிய இடத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய மாநில பா.ஜ.க அரசு, வேண்டுமென்றே திட்டமிட்டு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்தது. இதனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில், மாநில பா.ஜ.க அரசின் ஆதரவோடும் பாதுகாப்போடும், 1,50,000 இந்துத்துவா கரசேவர்கள் பாபர் மசூதியை இடித்த போது, மாநில காவல்துறை உட்பட அனைத்து அரசு துறைகளும் வேடிக்கை பார்த்தன. குறிப்பாக, உயர் வகுப்பினர் ஆதிக்கத்தில் கட்டமைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரித்தாளும் (Divide & Rule) தந்திரத்தால் உணர்ச்சிவசப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெருமளவில் திரண்டு, பாபர் மசூதியை இடித்தனர். பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, கல்யாண் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதே நாளில் ஒன்றிய காங்கிரஸ் அரசு உத்தரப் பிரதேச மாநில அரசை பதவி நீக்கம் செய்தது.

ஆரம்பத்தில் நீதிமன்ற அறைக்குள் மட்டுப்படுத்தப்பட்ட அயோத்தி வழக்கு, சங்கப் பரிவார் அமைப்புகளின் வன்முறையால் வீதிக்கு வந்தது. மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் பலவந்தமாக பதிலடி கொடுக்க முஸ்லிம்களைத் தூண்டினர். பாபர் மசூதி இடிப்பின் விளைவாக, உடனடியாக நாடு முழுவதும் கலவரம் வெடித்தது, அதில் சுமார் 2000 பேர், பெரும்பாலும் முஸ்லீம்கள், கொல்லப்பட்டனர். இதையொட்டி, பாபர் மசூதி இடிப்பு மற்றும் கலவரம், பாபர் மசூதி பாதுகாக்கப்படும் என்று பலமுறை வாக்குறுதி அளித்த முதல்வர் கல்யாண் சிங் செய்த "துரோகம்" என பிரதமர் நரசிம்மராவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பாபர் மசூதி இடிப்புக்கு முன், அயோத்தி போல புதிய வழிபாட்டு சர்ச்சை எழாமல் இருக்க, வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடு) (Places of Worship (Special Provisions) Act) சட்டத்தை 1991 இல் கொண்டு வந்தார் பிரதமர் நரசிம்ம ராவ். இந்த சட்டத்தால் மதுராவையும் காசியையும் கைப்பற்றுவது பா.ஜ.கவுக்கு கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இஸ்லாமிய அமைப்புக்கு பாதுக்காப்பு அரணாக உள்ள திருத்தப்பட்ட வக்பு வாரியச் சட்டத்தை (Waqf Act) 1995 இல் கொண்டு வந்தார் பிரதமர் நரசிம்ம ராவ்.
லிபரான் ஆணையம்

1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் லிபரான் ஆணையம் அமைக்கப்பட்டது. பல தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை செய்தபின், 2009 இல் ஆணையம் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், "பல்வேறு பா.ஜ.க அரசியல் தலைவர்கள் மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் திட்டமிட்ட சதியின் விளைவாக பாபர் மசூதி இடிக்கப்பட்டது மற்றும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, அடல் பிஹாரி வாஜ்பாய், பால்தாக்கரே, சாத்வி ரிதம்பரா, கல்யாண் சிங், கல்ராஜ் மிஸ்ரா, வினய் கட்டியார், நிருத்ய கோபால் தாஸ், அசோக் சிங்கால், லால்ஜி தாண்டன் உட்பட 68 வலதுசாரி தலைவர்கள் பாபர் மசூதி இடிப்புக்கு வழிவகுத்த மத மோதலைத் தூண்டிய குற்றவாளிகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணையத்தின் அறிக்கையின்படி செயல்பட காங்கிரஸ் திட்டமிட்டிருந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் புதிய வழக்கை பதிவு செய்ய முதன்மையான ஆதாரம் இல்லாததால், அது சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்பட்டது அல்ல என்று புலனாய்வுத் துறை கூறியதையடுத்து அது கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையில், பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வன்முறையைத் தூண்டவில்லை மாறாக வன்முறையைத் தடுக்க முயன்றனர் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், புலனாய்வு துறை வழங்கிய ஆடியோ மற்றும் வீடியோ நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்றும், மசூதியை இடித்தவர்கள் சமூக விரோதிகள் என்றும் கூறி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் 28 பேரை 2020 இல் நீதிமன்றம் விடுவித்தது. இதையெடுத்து, விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் விரிவானவை என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆணையத்தின் முடிவுகளுக்கு முற்றிலும் முரணானது என்றும் லிபரான் கூறியது குறிப்பிடத்தக்கது.

மும்பை கலவரமும் குண்டுவெடிப்பும்

சமத்துவம் பேசிய அம்பேத்கர் நினைவு நாளான 06 டிசம்பர் 1992 அன்று பிரிவினை பேணும் இந்துத்துவா கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் பிறகு , டிசம்பர் 1992 மற்றும் ஜனவரி 1993 இல், அயோத்தி கோவிலுக்கு ஆதரவாகவும், பாபர் மசூதி இடிப்புக்கு எதிராகப் போராடிய முஸ்லீம்களுக்கு எதிராகவும் இந்துத்துவா கரசேவகர்கள் கலவரத்தைத் தூண்டினர். நாடு முழுவதும் மதக் கலவரங்கள் பரவி, சுமார் 1000 பேர், பெரும்பாலும் முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், கொல்லப்பட்டனர். குறிப்பாக, மும்பை இரத்தக்களரியானது.
டிசம்பர் 1992 மற்றும் ஜனவரி 1993 இல் ஏற்பட்ட மதக் கலவரத்தைத் தொடர்ந்து மார்ச் 1993 இல் நவீன இந்திய வரலாற்றில் மிக மோசமான குண்டுவெடிப்பான மும்பைக் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. 12 மார்ச் 1993 அன்று மும்பையில் 12 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1400 பேர் காயமடைந்தனர். காவல்துறையின் தீவிர விசாரணையில், தாவூத் இப்ராகிம் தனது கூட்டாளிகளான டைகர் மேமன் மற்றும் யாகூப் மேமன் மூலம் மும்பை பயங்கரவாதத் தாக்குதலை ஒருங்கிணைத்தது தெரியவந்தது.
ஸ்ரீகிருஷ்ணா ஆணையம்

டிசம்பர் 1992 முதல் ஜனவரி 1993 வரையிலான மும்பைக் கலவரம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அமைக்கப்பட்டது. பல தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை செய்தபின், 1998 இல் ஆணையம் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், "முஸ்லீம்களுக்கு எதிராகத் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்த சிவசேனா உறுப்பினர்களுக்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே உத்தரவிட்டதே மும்பைக் கலவரத்தின் பெரும்பகுதிக்குக் காரணமாகும். பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சிவசேனா தலைவர்களும், காவல்துறை அதிகாரிகளும் முஸ்லீம்களுக்கு எதிராக மத வன்முறையை தூண்டிவிட்டதாலே பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைச் சிவசேனா கொண்டாடியதே முஸ்லீம்களை எதிர்த்துப் போராடத் தூண்டியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணையம் சிவசேனா மீது பகிரங்கக் குற்றசாட்டுகளை முன் வைத்த போதும், அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த சிவசேனா, குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளை விசாரணையின்றி உயர் பதவிகளில் நியமித்தது. மேலும் சிவசேனா தலைவர்களை முழுமையாக விசாரிக்காமல் விடுவித்தது.

குஜராத் ரயில் எரிப்பும் கலவரமும் 

2002 இல் குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி ரயிலின் S6 பெட்டியில் அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த 58 இந்துத்துவா கரசேவகர்களைக் கொன்ற ரயில் எரிப்புச் சம்பவம் குஜராத் கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ரயில் எரிப்பு மற்றும் அதற்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வி சர்ச்சைக்குரிய விஷயமாகவே உள்ளது. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட குஜராத் கலவரத்தில் சுமார் 1,000 பேர், பெரும்பாலும் முஸ்லீம்கள், பல்வேறு வழிகளில் கொல்லப்பட்டனர்.

பின் குறிப்பு = குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடி நேரடியாக ஈடுபட்டதாக ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் 2011 இல் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டு அரசியலில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது மற்றும் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் சஞ்சீவ் பட் பல வழக்குகளைச் சந்திக்க வழிவகுத்தது. உதாரணமாக, அதிக அங்கீகரிக்கப்படாத விடுப்புகளை எடுத்ததாகக் கூறி 2015 இல் வேலையில் இருந்து நீக்கப்பட்டார், போலீஸ் காவலில் இருந்த ஒருவர் இறந்ததாகக் குற்றம் கூறி நீதிமன்றம் 2019 இல் ஆயுள் தண்டனை விதித்தது மற்றும் பழைய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றம் 2024 இல் தீர்ப்பளித்தது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் கூறினர்.
நானாவதி-மேத்தா ஆணையம்

2002 இல் சர்ச்சைக்குரிய கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி நானாவதி தலைமையில் நானாவதி-மேத்தா ஆணையம் அமைக்கப்பட்டது. பல தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை செய்தபின், 2014 இல் ஆணையம் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், "முன்கூட்டியே திட்டமிட்ட சதியின் விளைவாக சபர்மதி ரயிலின் S6 பெட்டி எரிக்கப்பட்டது என்றும் அது விபத்து அல்ல என்றும் தெரிவித்தது. மேலும், குஜராத் பா.ஜ.க முதல்வர் நரேந்திர மோடி அரசில் உள்ள எவரும் வன்முறையில் நேரடியாக ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை கலவரமும் குண்டுவெடிப்பும் 

1997 இல் கோவையில் அல் உம்மா நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்திய போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் முஸ்லீம் இளைஞரால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து கலவரம் வெடித்தது. இதைத் தொடர்ந்து, இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி உறுப்பினர்கள் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 18 முஸ்லீம்களும் 2 இந்துக்களும் கொல்லப்பட்டனர். வன்முறையில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
1992 இல் இந்துத்துவா கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அல் உம்மா என்ற இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் தீவிரமடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியில், 1997 இல் கோவையில் ஏற்பட்ட மதக் கலவரத்தைத் தொடர்ந்து 1998 இல் கோவைக் குண்டுவெடிப்பை அல் உம்மா அரங்கேற்றியது. 14 பிப்ரவரி 1997 அன்று கோவையில் 11 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 58 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 பேர் காயமடைந்தனர். காவல்துறையின் தீவிர விசாரணையில், கோவை மதக் கலவரத்திற்கு பதிலடியாகப் பா.ஜ.க தலைவர் அத்வானியைக் கொல்ல குண்டுவெடிப்பு திட்டமிடப்பட்டது தெரியவந்தது. இறுதியில், முக்கிய சதிகாரராக அடையாளம் காணப்பட்ட அல் உம்மாவின் நிறுவனர் பாஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
கோகுலகிருஷ்ணன் ஆணையம்

1998 இல் கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமையில் கோகுலகிருஷ்ணன் ஆணையம் அமைக்கப்பட்டது. பல தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை செய்தபின், 2000 இல் ஆணையம் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், "மதக் கலவரங்கள் குறித்த எச்சரிக்கைகளைக் காவல்துறை கவனத்தில் கொண்டு கண்காணிப்பையும் பரிசோதனையையும் முடுக்கிவிட்டிருந்தால், 1998 கோவை குண்டுவெடிப்பு தடுத்திருக்ககலாம். 1997 கலவரத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அல் உம்மாவால் ஏவப்பட்ட மூன்று மனித வெடிகுண்டுகள் அத்வானியை அணுக இயலவில்லை. ஏனெனில் அவருடன் பாதுகாப்புப் படையினரும் இருந்தனர். இக்குழு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் காணொளிகளை அனுதாபத்திற்காகவும் நிதி உதவிக்காகவும் பயன்படுத்திக் கொண்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சோதனைச் சாவடிகளை அமைக்கவும், சட்டவிரோத அமைப்புகளைத் தடை செய்யவும், உளவுத்துறை முயற்சிகளை மேம்படுத்தவும், விரிவான பாதுகாப்பு ஆய்வுகளைத் திட்டமிடவும் இவ்வாணையம் பரிந்துரைத்தது.

2010 உயர் நீதிமன்ற தீர்ப்பு

2010 இல் அயோத்தி நிலப்பிரச்சனை தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது. அதன்படி, அயோத்தி நிலம் மூன்றாக பிரிக்கப்பட்டு ⅓ இந்து மகாசபையின் ராம் லல்லாவுக்கும், ⅓ சன்னி வக்பு வாரியத்திற்கும், ⅓ நிர்மோஹி அகாராவுக்கும் ஒதுக்கப்பட்டது. இதையெடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இந்து மகாசபை மற்றும் சன்னி வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்திற்குத் சென்றன. அதையொட்டி, சர்ச்சைக்குரிய இடத்தை மூன்று பகுதிகளாக பிரித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் 2011 இல் இடைக்காலத் தடை விதித்து, தற்போதைய நிலையே தொடரும் என்று கூறியது.

2019 உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மேல்முறையீடு வழக்கின் இறுதி விசாரணையைத் தொடங்கியது. 2010 உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான நிலத்தை அறக்கட்டளைக்கு வழங்குமாறு 2019 இல் உத்தரவிட்டது. அத்துடன், அயோத்தி நகர எல்லைக்குள் 5 ஏக்கர் நிலத்தை உத்தரப் பிரதேச சன்னி வக்பு வாரியத்திற்கு மசூதி கட்டும் நோக்கத்திற்காக வழங்கவும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு உத்தரவிட்டது. இதையெடுத்து, 12 டிசம்பர் 2019 அன்று இறுதித் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய  தாக்கல் செய்யப்பட்ட 18 மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளும் தற்போது வெவ்வேறு அரசு பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதித் தீர்ப்பின் சாராம்சங்கள் 

உச்ச நீதிமன்றம் கூறியதாவது : இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினர், பாபர் மசூதி அமைந்துள்ள நிலத்தின் மீதான தங்கள் உரிமைக்கோரல் தொடர்பான சில முக்கியப் புள்ளிகளை நிரூபிக்க முடியவில்லை. மேலும், இஸ்லாம் அல்லாத கட்டமைப்பின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டது என தொல்பொருள் அறிக்கையில் குறிப்பிட்டாலும், பாபர் மசூதியின் கீழ் இந்து கோவில் இருந்ததை அது உறுதிப்படுத்தவில்லை. இதற்கிடையில், 1528 முதல் 1857 வரை மசூதியில் தொடர்ந்து தொழுகை நடத்தியதாகவும், அதன் மீது தனிக் கட்டுப்பாட்டை வைத்திருந்ததாகவும் முஸ்லீம்களால் நிரூபிக்க முடியவில்லை. அதே போல, இந்துக்களால் தங்கள் வழக்கிற்குப் போதிய ஆதாரங்களை அளிக்க முடியவில்லை. இவ்வாறு, இரு தரப்பிலும் தெளிவான ஆதாரங்கள் இல்லாத போதிலும், நிகழ்தகவுகளின் சமநிலை (Balance of Probabilities) அடிப்படையில் நிலத்தை இந்துக்களுக்கு வழங்க வேண்டும். இதனால், இந்துக்கள் தங்கள் வழக்கை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்திருக்கிறார்கள் என்று பொருளல்ல. மாறாக முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முஸ்லீம்களை விட இந்துக்களின் கூற்று ஏற்கத்தக்கதாக உள்ளது. அதனால், பாபர் மசூதி நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை ஒன்றிய அரசு நிறுவ வேண்டும், அறக்கட்டளை உருவாக்கப்படும் வரை சர்ச்சைக்குரிய இடம் ஒன்றிய அரசின் வசம் இருக்கும். அறங்காவலர் குழுவை மூன்று மாதங்களுக்குள் அமைக்க வேண்டும். ராமர் கோவிலை நிர்வகிக்க வேண்டும் என்ற நிர்மோகி அகாராவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், அறங்காவலர் குழுவில் அதற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றும் மதச்சார்பற்ற நாட்டில், முஸ்லீம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, பாபர் மசூதியைச் சட்டவிரோதமாக இடித்ததன் மூலம் நடந்த தவறுகளைச் சரி செய்ய வேண்டியது அவசியம். எனவே, இழப்பீடாக, மசூதி கட்டுவதற்கு மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். மேலும், பாபர் மசூதியின் உரிமைக்காக சன்னி வக்பு வாரியத்திற்கு எதிரான ஷியா வக்பு வாரியத்தின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

அயோத்தியில் கோவில் 

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய இடத்தில் அறக்கட்டளை மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என ஒன்றிய பா.ஜ.க அரசு அறிவித்தது. இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாக அயோத்தியில் உள்ள தன்னிப்பூரில் முஸ்லீம்களுக்கு மசூதி கட்ட மாற்று இடத்தையும் வழங்கியது. இதற்கிடையில், 22 ஜனவரி 2024 அன்று அயோத்தி ராமர் கோவில் திருவிழா நடைபெற்றுள்ள நிலையில், தன்னிபூர் மசூதித் தளம் கட்டுமானத்திற்கானத் தேவையான அரசின் அனுமதி மற்றும் நிதிக்காகக் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் 22 ஜனவரி

1965 முதல், ஆஸ்திரேலிய கிறிஸ்தவரான கிரஹாம் ஸ்டெயின்ஸ் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்ய தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இந்நிலையில், கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக இந்துத்துவா அமைப்புகள் குற்றம் சாட்டின. அதையொட்டி, 22/23 ஜனவரி 1999 இரவு, கிரஹாம் ஸ்டெயின்ஸ், அவரது இரண்டு மகன்கள் பிலிப் மற்றும் திமோதி அவர்கள் காரில் தூங்கிக் கொண்டிருந்தபோது, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் ஆதரவாளர்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த தாரா சிங் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த துன்பியல் சம்பவம் பரவலான கண்டனத்தைத் தூண்டியது மட்டுமல்லாமல், இந்தியாவில் மதச் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சம் போட்டு காட்டியது. அதே 22 ஜனவரி 2024 அன்று அயோத்தித் திருவிழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆரிய அரசியல் 

பண்டைய காலத்திலிருந்தே, ஜெருசலேமில் உள்ள கோவில் மலையின் உரிமைக்காக யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களுக்கு இடையில் மோதல் உள்ளது. இதே போன்று, 19 ஆம் நூற்றாண்டு முதல் ஆரியர்களும் அயோத்தி கோவிலின் உரிமை தொடர்பான சர்ச்சையை வெற்றிகரமாக தொடங்கினர்.

நவீன கால அரசியலில், திராவிடர்களிடம் இருந்து வேறுபடுத்திக் கொள்ள ஆரியர்கள் தங்களை ராமரின் பக்தர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர். பின்னர், ஒரு கட்டத்தில் இந்துத்துவா அரசியலை அறுவடை செய்து அரியணையை அடைவதற்காக, ராமரை ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் அடையாளமாக முத்திரை குத்த ஆரியர்கள் முயன்றனர். அதற்காக, அயோத்தியில் உள்ள பாபர் மசூதி நிலம், எந்த தொல்பொருள் ஆதாரமும் இல்லாத, நம்பமுடியாத ராமாயண இதிகாசத்தின் அடிப்படையில் இந்துத்துவா மதத்தை பரப்புவதற்கான முயற்சியாக ஆரியர்களால் சர்ச்சைக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வடநாட்டு அரசியலை போல் ராமர் கோவில் விவகாரம் தென்னாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஏனென்றால் வேர்கள் வேறு வேறு.
பாகிஸ்தானில் ஒரு வழக்கு 

18 ஆம் நூற்றாண்டில், பாகிஸ்தானின் (மேற்கு பஞ்சாப்) நவ்லாகா பஜாரில், லாகூர் கவர்னர் ஜகாரியா கான் உத்தரவின்படி குற்றவியல் தண்டனைகளுக்கான இடமாக ஒரு மசூதிக்கு அருகில் உள்ள பொதுச் சதுக்கம் செயல்பட்டது. வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படாத ஒரு சிறிய மசூதிக்கு அருகில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் இரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர். மகாராஜா ரஞ்சித் சிங் பஞ்சாபின் ஆட்சியைக் கைப்பற்றிய போது, முஸ்லீம் சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி மசூதியைக் கைப்பற்றி வெற்றிகரமாக குருத்வாராவாக மாற்றினர்.

ஆங்கிலேயர் காலத்தில், குருத்வாரா கட்டிடக்கலைச் சான்றுகளின் அடிப்படையில் ஒரு மசூதி என்று முஸ்லீம்களால் உரிமை கோரப்பட்டது. அதே நேரத்தில் சீக்கியர்கள் அது குருத்வாராவாக மாறியதாகக் கூறினர். லாகூர் உயர் நீதிமன்றம், முஸ்லீம் வழிபாட்டு சாட்சிகள் இல்லாத நிலையில், சீக்கியர்களின் பக்கம் நின்றது. இருப்பினும், கட்டிடத்தின் வடிவமைப்பை மாற்ற நினைத்த சீக்கியர்கள் அந்த இடத்தை 1935 இல் இடித்துத் தள்ளினர். இதைத் தொடர்ந்து, ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்தவும் பிரச்சனையைத் தீர்க்கவும் முகமது அலி ஜின்னாவின் தரப்பு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன, ஆனால் குருத்வாரா நிலை நீடித்தது. 1940 இல் பம்பாய் உயர் நீதிமன்றம் “கட்டிடம் மசூதியாக இருந்திருந்தாலும் சீக்கியர்கள் 170 ஆண்டுகளுக்கும் மேலாக இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். எனவே, மசூதியை சட்டப்பூர்வமாக மீட்டெடுப்பதற்கான வரம்புச் சட்டம் (Statute of Limitation) காலாவதியாகிவிட்டது” என்று தீர்ப்பளித்தது. 1947 பிரிவினைக்குப் பிறகு, மசூதியை மீட்டெடுக்க கோரி பாகிஸ்தான் நீதிமன்றத்தில் பல்வேறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அந்த இடத்தில் நீண்ட காலமாக முஸ்லிம்கள் வழிபாடு செய்ததற்கான ஆதாரம் இல்லாததை சுட்டிக்காட்டி, குருத்வாராவின் நிலையை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது. மேலும், 1994 இல் பாகிஸ்தான் அரசு சீக்கியக் குழுவுக்கு கட்டிடத்தைப் புதுப்பிக்க அனுமதி வழங்கியது.

இந்த வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றமும், அரசும் முஸ்லீம்களை விட சீக்கியர்களுக்கு ஆதரவாக இருந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் இஸ்லாமிய நட்பு நாடாக அறியப்பட்டாலும், மதப் பதற்றம் மற்றும் இதர பாதிப்புகளைத தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், அறிஞர்களின் கருத்துப்படி, மதச்சார்பற்ற நட்பு நாடாக அறியப்படும் இந்தியா, பாபர் மசூதி விவகாரத்தில் முரண்பாடான தீர்வை வழங்கியுள்ளது.

ஜெயலலிதாவின் நிலைப்பாடு

23 நவம்பர் 1992 அன்று டெல்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தில், அயோத்தியில் கோவில் கட்டுவதையும், கரசேவைத் திட்டத்தையும் அ.தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஜெயலலிதா கடுமையாக ஆதரித்தார். சுவாரஸ்யமாக, தென் மாநிலங்களில் இருந்து அயோத்திக்கு அதிக எண்ணிக்கையிலான கரசேவகர்களை தமிழ்நாடு அனுப்பியது. மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வெடித்த வன்முறை காரணமாக பிரதமர் நரசிம்ம ராவ் பரிந்துரையின் பேரில், 15 டிசம்பர் 1992 அன்று மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பா.ஜ.க அரசுகளைக் குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ததற்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார்.

2003 இல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜெயலலிதா, இது தொடர்பான நாடாளுமன்ற சட்டத்தை அ.தி.மு.க ஆதரிக்கும் என்றார். மேலும், 2010 இல் அயோத்தி பிரச்சனையில் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றார். சங்கப் பரிவார் அமைப்புகளுடனான தனது ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையில், "இந்தியாவில் ராமருக்கு கோவில் கட்ட முடியாவிட்டால் வேறு எங்கு கட்ட முடியும்?" என்று கேள்வி எழுப்பி, அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட ஆதரவு தெரிவித்தார்.

1998 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜ.க கால் பதித்ததில் ஜெயலலிதாவின் அ.தி.மு.க முக்கியப் பங்காற்றியது. பா.ஜ.க சார்பில் வாஜ்பாய் குறைந்த பெரும்பான்மையுடன், தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.கவின் பெரும் ஆதரவுடன் பிரதமரானார். ஆனால், 13 மாதங்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த தி.மு.க ஆட்சியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை வாஜ்பாய் நிறைவேற்றாததால் தனது ஆதரவை வாபஸ் பெற்றார். இறுதியில், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து பிரதமர் பதவியை இழந்தார் வாஜ்பாய். இதற்கிடையில், 1996 முதல் வாஜ்பாய், தேவகவுடா,  குஜ்ரால் என்று பிரதமர் பதவியில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டதால் இந்தியாவின் சர்வதேச அரசியல் பிம்பம் பாதிக்கப்பட்டது. குஜ்ரால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, 1998 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி ஆதரவு மூலம் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தார் வாஜ்பாய். 1999 இல் ஜெயலலிதா எடுத்த முடிவால் மீண்டும் நாடாளுமன்றத்துக்குத தேர்தல் வந்தது. அன்றைய சூழலில், மற்ற கட்சித் தலைவர்கள் பிரதமராகும் நிலை இல்லாததால், மத்தியில் வலுவான ஆட்சி அமைக்க வாஜ்பாய்க்கு ஆதரவாக, தி.மு.க உள்ளிட்ட பல மாநில கட்சிகள் திரண்டன.
கலைஞரின் நிலைப்பாடு 

1990 களில் பாபர் மசூதியை இடித்து அயோத்தி கோவிலைக் கட்டுவோம் என்று கரசேவகர்கள் நடத்திய பிரச்சாரத்தைத் தி.மு.க தலைவர் கலைஞர் கடுமையாக எதிர்த்தார். கோவில் கட்டுவதற்காக, மசூதியை இடிக்கும் சங்கப் பரிவார் அமைப்புகளின் நோக்கத்தைக் கலைஞர் கண்டித்தார். இதற்கிடையில், 05 டிசம்பர் 1992 அன்று "கரசேவகர்கள் என்றால் கடவுளுக்கு சேவை செய்பவர்களா? அல்லது அமைதியின்மையை விதைப்பவர்களா? 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று கூறப்படுகிறது. அதை யார் பார்த்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது? அதை பற்றி எழுதியவர் யார்? இது ராமர் பிறந்த இடம் என்று சொல்லி இஸ்லாமியர்களின் வரலாற்றை அழிப்பது எப்படி சரியாகும்? அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்று சொன்னால், அதை நிச்சயம் ஏற்க முடியாது" என்று முரசொலியில் எழுதினார் கலைஞர். மறுநாள், 06 டிசம்பர் 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், அதைத் தடுக்கத் தவறிய அரசாங்கத்தின் செயலையும் கலைஞர் கடுமையாக விமர்சித்தார்.

1999 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.கவுடன் தி.மு.க கூட்டணி அமைத்த போது, தி.மு.க தலைவர் கலைஞர், பா.ஜ.கவிடம் இருந்து பொது குறைந்தபட்ச திட்டம் (Common Minimum Programme - CMP) எனப்படும் உறுதிமொழியைப் பெற்ற பின்னரே தி.மு.க பா.ஜ.கவை ஆதரித்தது என்று விளக்கினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படக்கூடாது, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யக்கூடாது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது போன்ற உறுதிமொழிகள் இந்த உத்தரவாதத்தில் அடங்கும்.

2000 களில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் பிரச்சாரம் செய்த போது, பா.ஜ.க கூட்டணியில் இருந்த தி.மு.க சார்பில் கலைஞர், "ராமர் என்ற கடவுள் ஒரு கட்டுக்கதை" என்று கூறியதற்கு பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி உட்பட வலதுசாரி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த கலைஞர், "ஜவஹர்லால் நேருவின் 'கண்டறிந்த இந்தியா' (The Discovery of India) நூலில், வட இந்தியர்கள் என்று பொருள்படும் ஆரியர்களுக்கும், தென் இந்தியர்கள் என்று பொருள்படும் திராவிடர்களுக்கும் இடையிலான அதிகாரப் போராட்டத்தைச் சித்தரிக்கிற ராமாயணம் என்ற இதிகாச நூல் ஆரியர்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட கதை என்று கூறிய ஜவஹர்லால் நேருவை விட ராமரைக் காக்க வருபவர்கள் பெரியவர்கள் இல்லை" என்று கூறினார்.

2000 களில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பா.ஜ.க உறுப்பினர்கள் குரல் எழுப்பிய போது, நாடாளுமன்றத்தில் அப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால் அதை எதிர்த்து தி.மு.க வாக்களிக்கும் என்று கலைஞர் கூறினார். பா.ஜ.கவுடன் தி.மு.க கூட்டணி வைத்திருந்தாலும், "அயோத்தியில் கோவில் கட்டுவது தேவையற்றது என்றும், ஆன்மிகத் தேவைகளை பூர்த்தி செய்ய அயோத்தி உட்பட நாடு முழுவதும் ஏற்கனவே போதுமான கோவில்கள் இருக்கிறது என்றும், அயோத்தி மூலம் மத வெறியைத் தூண்டுவதை விட மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது" என்று கலைஞர் வலியுறுத்தினார்.

2004 இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (POTA) தொடர்பான செயல்பாடு மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட பொது குறைந்தபட்ச திட்டத்தில் (CMP) இருந்து விலகி வகுப்புவாதத்தை வெளிப்படுத்திய வாஜ்பாயின் பா.ஜ.க கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியேறியது. அதைத் தொடர்ந்து, வகுப்புவாத பா.ஜ.க மீண்டும் வருவதைத் தடுக்கவும், மதச்சார்பின்மையை மேம்படுத்தவும் 2004, 2009, 2019, 2024 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது தி.மு.க.
முடிவுரை 

சுருக்கமாக, அயோத்தி நிலப்பிரச்சனை என்பது 1992 வரை இருந்த பாபர் மசூதியின் இடத்தைச் சுற்றியுள்ள 2.77 ஏக்கர் நிலம் குறித்தது ஆகும். இந்த நிலத்தை இந்துத்துவா அமைப்புகள் ராமர் பிறந்த இடம் என்றும், முஸ்லீம் அமைப்புகள் முகலாயப் பேரரசரால் கட்டப்பட்ட மசூதியின் இடம் என்றும் உரிமை கோருகின்றன. அந்த நிலத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாபர் மசூதி இருந்தது என்பது வெள்ளிடை மலையாக உள்ளது. இந்நிலையில், 1992 இல் இந்து கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பரவலான வன்முறையில் சுமார் 4000 பேர் உயிரிழந்தனர். இப்போது, 2024 இல் பிணக்குவியல் மீது ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

பின் குறிப்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அயோத்தி ராமர் கோவிலை முன்னிறுத்தி பா.ஜ.க பிரச்சாரம் செய்தது. ஆனால் முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. இது பா.ஜ.கவின் சிறுபான்மை ஆட்சிக்கு வழிவகுத்தது. இதைத் தொடர்ந்து, "ஜெய் ராம்" பிரச்சாரத்திலிருந்து "ஜெய் ஜெகநாத்" பிரச்சாரத்திற்கு பா.ஜ.க மாறியது. இது இந்துத்துவாவின் பச்சோந்தித் தன்மையை வெளிப்படுத்தியது.

1990 களில், பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு, "அயோத்தி ராமர் கோவில் ஒரு தொடக்கம், காசி மதுரா இன்னும் எஞ்சியிருக்கிறது" என்ற முழக்கத்தை சங்கப் பரிவார் அமைப்புகள் கொண்டிருந்தது. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியும், மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோவிலுக்கு அருகில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியும் சங்கப் பரிவார் அமைப்புகளின் எதிர்கால இலக்குகளாக உள்ளன. இந்த பின்னணியில், உலகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்துத்துவா மற்றும் அதனுடன் தொடர்புடைய சாதியைத் திணிக்கவும், சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் காவிமயமாக்கலை நோக்கி இந்தியா நகர்வது மிகவும் வருத்தமளிக்கிறது. இப்போது, இருக்கும் மசூதியை இடித்துக் கோவில் கட்டுவது முக்கியமா? அல்லது சீரான சமூக வளர்ச்சியை ஏற்படுத்தி மக்கள் நலனைக் காப்பது முக்கியமா? என்று மக்களும் காவி அரசியல்வாதிகளும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்.

விவரணைகள் 

News Articles about Ayodhya Disputes














Pakistan Mosque - Gurdwara Dispute


Liberhan Commission Report


Sri Krishna Commission Report


Nanavati-Mehta Commission Report


Liberhan About Acquittal of BJP Leaders



2019 Supreme Court Verdict on Ayodhya Dispute


2024 District Court Orders on Gyanvapi Dispute


DMK Leader Kalaignar about Ayodhya Dispute


வாஜ்பாய் மென்மையானவரும் அல்ல, அவரது ஆட்சி ஊழலற்றதும் அல்ல


ராமாயணம் பற்றி அறிஞர் அண்ணாவின் விமர்சனம்


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பெரியார் குறித்து அவதூறு பரப்பும் சீமான்

பெரியார் குறித்து அவதூறு பரப்பும் சீமான் பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட...