Chocks: இந்தியாவின் சுதந்திர போராட்டம் - அகிம்சைக்கு அப்பால்

Saturday, November 4, 2023

இந்தியாவின் சுதந்திர போராட்டம் - அகிம்சைக்கு அப்பால்

இந்தியாவின் சுதந்திர போராட்டம் - அகிம்சைக்கு அப்பால்

பொருளடக்கம்
  1. முகவுரை
  2. சிற்றரசர்களின் போராட்டம்
  3. வேலூர் கிளர்ச்சி
  4. 1857 கிளர்ச்சி
  5. சபேக்கர் சகோதரர்கள்
  6. புரட்சிகர இயக்கங்களின் எழுச்சி
  7. கெதர் இயக்கத்தின் முயற்சி
  8. கிறிஸ்மஸ் தின சதி
  9. ஜாலியன் வாலாபாக் படுகொலை
  10. பகத் சிங்கின் புரட்சி
  11. இந்தியா தேசிய ராணுவம்
  12. அன்றும் இன்றும்
  13. முடிவுரை
  14. விவரணைகள்
முகவுரை

ஆரம்பத்தில் வணிக நோக்கங்களுடன் வந்து பின்னர் அரசர்களுக்கு இடையிலான மோதல்களை பயன்படுத்தி இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்தனர். இத்தகைய ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை சுற்றியுள்ள மேலாதிக்க தகவல்கள், காந்தியின் அகிம்சை பிரச்சாரத்தை மட்டுமே முன்னிறுத்துகிறது. இந்த வரலாற்று மரபின் தாக்கம் உலக அரங்கில் தொடர்ந்து எதிரொலிக்கிறது. எவ்வாறாயினும், இந்தியாவின் சுதந்திர போராட்டமானது ஒப்பீட்டளவில் குறைவாக அறியப்பட்ட புரட்சி பரிமாணத்தையும் உள்ளடக்கியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிற்றரசர்களின் போராட்டம்

17 ஆம் நூற்றாண்டில் வணிக நோக்கத்திற்காக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் ஒரு கட்டத்தில் நமது அரசுகளுக்கு எதிராக தங்களது இராணுவ படைகளுடன் நின்றார்கள். அப்படிப்பட்ட ஆங்கிலேய அரசுக்கு எதிராக 18 ஆம் நூற்றாண்டில் முத்து வடுகநாதர், மருது பாண்டியர்கள், வேலு நாச்சியார், குயிலி, பூலித்தேவன், ஒண்டிவீரன், அழகுமுத்து கோன், கட்டபொம்மன், ஊமைத்துரை, சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, மருதநாயகம், ஹைர் அலி, திப்பு சுல்தான், உய்யலவாடா நரசிம்ம ரெட்டி, வேலுத்தம்பி, பழங்குடியினர் போன்றோர் போராடி மடிந்தார்கள்.
வேலூர் கிளர்ச்சி

சிப்பாய்களின் உடை மற்றும் தோற்றத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்துக்கள் நெற்றியில் விபூதி, நாமம், திலகம் ஆகியவற்றை இடக்கூடாது மற்றும் முஸ்லீம்கள் தாடி, மீசையை மழிக்க வேண்டும் என்ற ஆங்கிலேய அரசின் உத்தரவு, மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் முயற்சி என்று சிப்பாய்கள் நினைத்தனர். இது 1806 ஆம் ஆண்டு வேலூர் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. இது 1857 இந்திய கிளர்ச்சிக்கு அரை நூற்றாண்டுக்கு முந்தையது. சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்களை கொன்று காலையில் வேலூர் கோட்டையை கைப்பற்றி மைசூர் சுல்தானகத்தின் கொடியை சிப்பாய்கள் ஏற்றினார்கள். ஆங்கிலேய அரசு வேலூர் கிளர்ச்சியை ஒரே நாளில் அடக்கியது. 1857 கிளர்ச்சி போன்ற உடனடி வெளிப்புற ஆதரவு இல்லாதது வேலூர் கிளர்ச்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
1857 கிளர்ச்சி

ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்திய தோட்டாக்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் இந்துக்களை புண்படுத்தும் மாட்டிறைச்சி கொழுப்பும், இஸ்லாமியர்களை புண்படுத்தும் பன்றி இறைச்சி கொழுப்பும் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பின்னணியில் 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய வீரர்கள் கிளர்ச்சி செய்தனர். டெல்லி, ஆக்ரா, கான்பூர் மற்றும் லக்னோ வரை பரவிய கலகத்தை ஆங்கிலேயர்கள் நசுக்கினர் ஆனால் அவர்களது அதிகார வளர்ச்சி கேள்விக்குள்ளானது. அதையொட்டி கலகத்தின் வழக்கு விசாரணையானது கிழக்கிந்திய கம்பெனியின் திறமையின்மையின் மீது விழுந்தது. 1858 ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றம் இந்திய அரசாங்க சட்டத்தை நிறைவேற்றி இந்தியா மீதான அதிகாரத்தை கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்திடமிருந்து பிரிட்டனின் நேரடி கண்காணிப்புக்கு மாற்றியது.
சபேக்கர் (Chapekar) சகோதரர்கள்

1897 ஆம் ஆண்டு புனே நகரில் பிளேக் தொற்றுநோய்க்கு தீர்வு காணும் நோக்கில் முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்கு பொறுப்பான ஆங்கிலேய அதிகாரியான W.C.ராண்ட் என்பவரை சபேக்கர் சகோதரர்கள் படுகொலை செய்தனர். குடியிருப்புகளுக்குள் கட்டாய ஊடுருவல், நோயாளிகளை கொடுமைப்படுத்தல், பெண்களை இழிவுபடுத்தல் உள்ளிட்ட பிளேக் தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு கொடுங்கோலன் ராண்டின் மதிப்பீடுகள் மிருகத்தனமானவை என்று குற்றம் சாட்டி சபேக்கர் சகோதரர்கள் அவரை படுகொலை செய்தனர். 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு பிறகு, சபேக்கர் சகோதரர்கள் ஆங்கிலேய அதிகாரி W.C.ராண்டை கொலை செய்த சம்பவம் போர்க்குணமிக்க தேசியவாதத்தின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வாக அமைந்தது.
புரட்சிகர இயக்கங்களின் எழுச்சி

சுதந்திர கிளர்ச்சியின் மையமாக விளங்கிய வங்காளத்தின் தாக்கம் இந்தியா முழுவதும் பரவாமல் தடுக்க முயன்ற ஆங்கிலேய அரசு, 1905 ஆம் ஆண்டு வங்காளத்தை கிழக்கு வங்காளம் மற்றும் மேற்கு வங்காளம் என இரு மாகாணங்களாகப் பிரித்தது. இந்தப் பின்னணியில், அகிம்சை வழியில் சுதேசி இயக்கம் மற்றும் வன்முறை வழியில் புரட்சி இயக்கம் ஆங்கிலேய அரசுக்கு சவாலாக மாறின. உதாரணமாக, காந்தி, மக்களை சுதேசி இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைத்தார். எம்.என்.ராய், மக்களை தனது புரட்சிகரமான கருத்துக்களின் கீழ் ஒருங்கிணைத்தனர்.

1911 ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினை திரும்பப் பெறப்பட்டாலும், புரட்சிகர இயக்கங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ரகசியமாக செயல்படத் தொடங்கின. இதே காலகட்டத்தில், கிளர்ச்சியை மையமாகக் கொண்ட பல்வேறு இந்திய பத்திரிகைகள் சுதந்திரத்திற்கான ஒரு கருவியாக வாசகர்களிடையே பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

கெதர் (Ghadar) இயக்கத்தின் முயற்சி

1914 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராட, புலம்பெயர்ந்த இந்திய புரட்சியாளர்கள் ஒன்றிணைந்து, சீக்கியரான சோகன் சிங் பக்னா தலைமையில், அமெரிக்காவில் கெதர் இயக்கம் என்ற புரட்சிகர அமைப்பை உருவாக்கினர். இந்தியாவின் வைஸ்ராயை கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த புரட்சியாளரான ராஷ் பிகாரி போஸ் தலைமையின் கீழ், கெதர் இயக்க உறுப்பினர்கள் 1915 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியை தூக்கியெறிய வேண்டும் என்ற இறுதி நோக்கத்துடன், வட இந்தியாவில் ஒரு கிளர்ச்சியை உருவாக்க திட்டமிட்டனர். இதன்படி, லாகூர், ராவல்பிண்டி மற்றும் மீரட் ஆகிய இடங்களில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தை கலகம் செய்ய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், ஆங்கிலேய அரசின் சார்பாக தகவல் கொடுப்பவர் (Informer) புரட்சிகர குழுவிற்குள் ஊடுருவ முடிந்தது. அது புரட்சிகர நடவடிக்கையை ஒடுக்குவதற்கும் தீவிர சித்தாந்தங்களைக் கொண்ட பலரை கைது செய்வதற்கும் வழிவகுத்தது.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கலகத்தை தூண்டுவதை நோக்கமாக கொண்ட கெதர் இயக்கத்தின் முயற்சி தோல்வியடைந்தது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான முக்கிய சதிகாரராக ராஷ் பிகாரி போஸ் அடையாளம் காணப்பட்டார். ஆங்கிலேயர்களால் கைது செய்யப்படுவதை தவிர்க்க, ராஷ் பிகாரி போஸ் ஜப்பானுக்கு தப்பி சென்றார். அவர் 1940 களில் ஜப்பானில் இந்திய தேசிய இராணுவத்தை வழி நடத்தினார்.
கிறிஸ்மஸ் தின சதி

1906 ஆம் ஆண்டு ஆயுத போராட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தரும் நோக்கத்துடன் பாகா ஜதின், ஜதீந்திர நாத் பானர்ஜி, அரவிந்தோ கோஷ், பேரின் கோஷ், ஹேமச்சந்திர கனுங்கோ, உபென் பானர்ஜி போன்ற தலைவர்கள் இணைந்து ஜுகாந்தர் என்ற புரட்சிகர அமைப்பை கொல்கத்தாவில் உருவாக்கினர். 

1915 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த இந்திய புரட்சியாளர்கள், கொல்கத்தாவிற்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் நோக்கத்துடன் அன்னி லார்சன் மற்றும் மேவரிக் ஆகிய இரண்டு கப்பல்களை கைப்பற்றினர். அவர்கள் அந்தமான் தீவுகளின் சிறைச்சாலைகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி சிறையில் அடைக்கப்பட்ட புரட்சியாளர்களை விடுவிக்கவும் இந்திய கடற்கரை மீது ஆதிக்கம் செலுத்தி வந்த ஆங்கிலேய அரசை அச்சுறுத்தவும் கிளர்ச்சிக்கு திட்டமிட்டனர். கிறிஸ்மஸ் தின சதி என அழைக்கப்பட்ட கிளர்ச்சி, முந்தைய கெதர் இயக்கத்தின் கிளர்ச்சியை போலவே, ஆங்கிலேய அரசின் உளவுத்துறை சேவைகளால் முறியடிக்கப்பட்டது.
1900 காலகட்ட புரட்சிகர இயக்கங்களின் நடவடிக்கைகளின் விளைவாக, 1916 ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு சட்டம் உட்பட கடுமையான போர்க்காலச் சட்டம் இயற்றப்பட்டது. பல போராளிகளின் கைது செய்யப்பட்டனர். புரட்சி இயக்கங்கள் இரகசிய நடவடிக்கைகளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை

முதலாம் உலக போருக்கு பிறகு, பிப்ரவரி 1919 ஆம் ஆண்டு ரவுலட் சட்டம், முறையான விசாரணைகள் இல்லாமல் கைது செய்யப்படுவதையும், நடுவர் மன்றம் இல்லாத விசாரணையையும் அனுமதிப்பதன் மூலம் ஆங்கிலேய அதிகாரத்தை பலப்படுத்தியது. ஏப்ரல் 1919 ஆம் ஆண்டு ரவுலட் சட்டத்திற்கு எதிராகவும் சுதந்திர போராட்ட வீரர்களான சைபுதீன் கிட்ச்லேவ் மற்றும் சத்யபால் ஆகியோரின் கைதுக்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவிக்க அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் அமைதியான முறையில் மக்கள் கூட்டம் கூடியது. கர்னல் ரெஜினோல்ட் டயர் உத்தரவின் பேரில் ஆங்கிலேய படைகள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதன் விளைவாக சுமார் 1500 பேர் கொல்லப்பட்டனர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை எனப்பட்ட இந்நிகழ்வு குறிப்பிடத்தக்க அளவில் மக்களின் சீற்றத்தை தூண்டிய நிலையில், ஆங்கிலேய அரசின் வெறுப்பை முறியடிக்க புரட்சியை துறந்து அன்பை மட்டுமே மக்கள் பிரத்தியேகமாக பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தி ரவுலட் சட்டத்திற்கு எதிராக சத்தியாகிரகம் செய்ய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் காந்தி. ஒரு கட்டத்தில் அகிம்சை பேச்சுகளும் அமைதியான போராட்டங்களும் காந்தியை அகிம்சையின் முகமாக நிலைநிறுத்தியது.

பகத் சிங்கின் புரட்சி

பகத் சிங் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஆங்கிலேய ஆட்சியை கடுமையாக எதிர்த்தார். அவர் ஆங்கிலேய அரசுக்கு எதிரான இரண்டு உயர்மட்ட தாக்குதல்களிலும் ஈடுபட்டார். முதலாவது உள்ளூர் காவல்துறை தலைவர் மீதான தாக்குதல், இரண்டாவது டெல்லியில் உள்ள சட்டப்பேரவை மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த இரண்டு நடவடிக்கைகளும் அக்காலகட்டத்தில் பெரும் கவனத்தை பெற்றன. ஆங்கிலேய அரசுக்கு எதிரான தாக்குதல்களுக்காக பகத் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர்.
இந்தியா தேசிய ராணுவம்

இரண்டாம் உலக போரின் போது, ஆகஸ்ட் 1942 ஆம் ஆண்டு ஜப்பானிய பேரரசின் வழிகாட்டலில், இராணுவ அதிகாரி மோகன் சிங் தலைமையின் கீழ், ராஷ் பிஹாரி போஸ் வழிவகுத்த கொள்கையில், இந்திய சுதந்திரத்தை வேண்டி இந்திய போர்க்கைதிகளால் இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. ஆசியாவில் ஜப்பானின் போரில் அதன் பங்கு தொடர்பாக இந்திய தேசிய இராணுவ தலைமைக்கும் ஜப்பானிய இராணுவ தலைமைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் டிசம்பர் 1942 ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவம் கலைக்கப்பட்டது.

அகிம்சையால் சுதந்திரம் பெற முடியாது என்பதில் சுபாஷ் சந்திர போஸ் உறுதியாக இருந்தார். எனவே, இரண்டாம் உலக போரின் போது, "எனது எதிரியின் எதிரி என் நண்பன்" என்பதன் அடிப்படையில், இந்திய சுதந்திரத்தை வேண்டி ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற பிரிட்டன் எதிர்ப்பு நாடுகளிடம் இராஜதந்திர ரீதியிலான உதவி கேட்க சுபாஷ் சந்திர போஸ் திட்டமிட்டார். ஜெர்மனியின் உதவி கிடைக்காததால் ஜப்பான் மிக முக்கியமான முறையில் உதவ முடியும் என்ற நம்பிக்கையில் சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானுக்குச் சென்றார்.

இந்நிலையில், கலைக்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தை சுபாஷ் சந்திர போஸிடம் ஒப்படைத்தார் ராஷ் பிஹாரி போஸ். 1943 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் இவ்வியக்கம் புத்துயிர் பெற்று சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசு (Provisional Government of India) என்று அழைக்கப்பட்டது. இதற்கிடையே, இரண்டாம் உலக போரின் முடிவில், ஜப்பான் தடுமாற தொடங்கிய போது, பிரிட்டனும் ரஷ்யாவும் ஒரே அணியில் இருந்த போதிலும், பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் ரஷ்யா உதவக்கூடும் என்று கருதிய சுபாஷ் சந்திர போஸ் ரஷ்யாவிடம் உதவி பெற திட்டமிட்டதாக பரவலாக கூறப்படுகிறது. இருப்பினும், 1945 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸின் மர்மமான மறைவுக்கும் ஜப்பானின் சரணடைவுக்கும் பிறகு, முகமது ஜமான் கியானியின் தலைமையில் மீதமுள்ள வீரர்கள் ஆங்கிலேய அரசிடம் சரணடைந்தனர்.
அன்றும் இன்றும்

இந்திய அரசியல் தலைவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். காந்தியத்தின் மூலம் நவீன உலகிற்கு அகிம்சையை பரிசளித்த போதிலும், நினைவு தபால் தலைகள் மற்றும் நினைவுகூரும் நிகழ்வுகள் மூலம் சுதந்திர போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்கை இந்தியா ஒப்புக்கொண்டது. அதே சமயம், இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பயங்கரவாதம் வகித்த பங்கு மற்றும் அதன் வரலாற்று பொருத்தம் குறித்து இன்றைய தலைவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வது அவசியம்.

மேலும், உலகமயமாக்கலின் பின்னணியில், அணு ஆயுத உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள உலக அரசியல் தலைவர்களின் பங்களிப்பை ஆராய வேண்டும். அதன் மூலம் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் ஒத்துழைப்பதில் இந்த தலைவர்கள் எந்த அளவிற்கு தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள உதவும்.
முடிவுரை

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை ஒரு சம்பவத்துடன் இணைக்க முடியாது. இருப்பினும், காந்தியின் அகிம்சை திட்டம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பெருமை சேர்த்தது. காந்தியின் அகிம்சை அணுகுமுறை உலகளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், “பாளையக்காரர் முதல் போஸ்” வரையிலான புரட்சிகர தலைவர்களை உள்ளடக்கிய சுதந்திர போராட்டத்தின் முழு வரலாற்று பின்னணியும் பாரபட்சமின்றி ஆராயப்பட வேண்டும்.

மேலும், ஆங்கிலேய அரசு கலைக்கப்பட்ட பிறகு இந்திய ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதற்கான சுதந்திர போராட்ட தலைவர்களின் உள்நோக்கங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும். அதன் மூலம் அகிம்சை அல்லது புரட்சியின் அடிப்படையில், சுதந்திர போராட்ட தலைவர்கள் மக்களின் நல்வாழ்வை போதிக்கும் சமூக நீதிக்காக போராடினார்களா அல்லது பிரிவினைகளை ஆதரிக்கும் ஆரிய நீதிக்காக போராடினார்களா என்பதை நாம் தீர்மானிக்க முடியும்.
விவரணைகள்






வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும்

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும் பொருளடக்கம்    முதலாவது  பகடை விளையாட்டு சகுனியின் எதிர்பார்ப்பு சகுனியின் கேலி தருமனின் இறுதி தோல்வி திரௌப...