காந்தி அகிம்சைவாதியா?
குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம்
- முகவுரை
- அகிம்சை இயக்கங்கள்
- கீழ்ப்படியாமை இயக்கம்
- இரட்டை வாக்குரிமை விவகாரம்
- வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- சமூக சேவை திட்டங்கள்
- விமர்சனங்கள்
- இறுதி முடிவு
- ஆரிய காந்தி முதல் திராவிட காந்தி
- முடிவுரை
முகவுரை
முதல் உலகப் போருக்குப் பிறகு, 1919 இல் "மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்" மூலம், இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசில் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, முதல் உலகப் போரின் இறுதிக் காலகட்டத்தில், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கிய காந்தி, நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, பெண்களின் உரிமைகளை ஆதரிக்க, வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த, முதன்மையாக சுயாட்சியையும் பின்னர் முழுச் சுதந்திரத்தையும் அடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்.
அகிம்சை இயக்கங்கள்
1917 இல் சம்பாரன் சத்தியாகிரகம் (Champaran Satyagraha), 1918 இல் கெடா சத்தியாகிரகம் (Kheda Satyagraha), 1920 இல் முஸ்லிம்களால் தொடங்கப்பட்ட கிலாஃபத் இயக்கத்திற்கு ஆதரவு (Khilafat Movement), 1920 இல் ஒத்துழையாமை இயக்கம் (Non-Cooperation Movement), 1930-1934 இல் உப்பு சத்தியாகிரகம் உட்பட கீழ்ப்படியாமை இயக்கம் (Civil Disobedience Movement, இரண்டு கட்டங்களில்: 1930-1931 மற்றும் 1932-1934), மற்றும் 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (Quit India Movement) ஆகியவை காந்தியின் முக்கிய அகிம்சை இயக்கப் போராட்டங்கள் ஆகும்.
காந்தியின் "ஒத்துழையாமை இயக்கம்" 1920 முதல் 1922 வரை நடந்தது. அப்போது, 1921 இல் பால கங்காதர திலகரின் முதல் ஆண்டு நினைவு நாளில், அவருக்கு அஞ்சலி செலுத்தவும், சுதந்திரப் போராட்டத்தை ஊக்குவிக்கவும், இந்தியர்களிடம் தன்னார்வப் பங்களிப்புகளைக் கோரி ஒரு கோடி ரூபாய் திலக் சுயராஜ் நிதியை (Tilak Swaraj Fund) திரட்டும் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
கீழ்ப்படியாமை இயக்கம்
பிரிட்டிஷ் அரசின் உப்பு வரியை எதிர்க்க 1930 இல் "கீழ்ப்படியாமை இயக்கம்" சார்பில் நடைபெற்ற தண்டி யாத்திரை எனப்படும் உப்பு சத்தியாகிரகம், அரபிக்கடல் நோக்கிய நீண்ட நடைப்பயணமாக அமைந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான காந்தியின் எதிர்ப்பை வெளிப்படுத்திய இந்தச் செயலுக்குப் பிறகு, மக்களிடையே சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றது.
இதை தொடர்ந்து, 1931 இல் "காந்தி-இர்வின் உடன்படிக்கை" மூலம் கீழ்ப்படியாமை இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர், மற்றும் காந்தி லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால், இரண்டாவது வட்ட மேசை மாநாடு எந்த முக்கியமான முடிவுகளையும் எட்டாமல் தோல்வியடைந்ததால், காந்தி இந்தியா திரும்பிய பிறகு கீழ்ப்படியாமை இயக்கத்தை (1932-1934) மீண்டும் தொடங்கினார்.
இரட்டை வாக்குரிமை விவகாரம்
கீழ்ப்படியாமை இயக்கத்தை மீண்டும் தொடங்கிய காந்தி கைது செய்யப்பட்டார். காந்தி எரவாடா சிறையில் இருந்த காலத்தில், பிரிட்டிஷ் அரசு தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை (Separate Electorates) வழங்கியது. தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டால், அவர்கள் இந்து மதத்திலிருந்து பிரிக்கப்படுவார்கள் என கருதிய காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
அதன் விளைவாக, சமூக அழுத்தத்திற்கு உள்ளான அம்பேத்கர், வேறு வழியின்றி காந்தியுடன் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பூனா ஒப்பந்தத்தின் மூலம், தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை கொண்ட தொகுதிகளுக்குப் பதிலாக, இட ஒதுக்கீடு கொண்ட தொகுதிகள் (Joint Electorates) வழங்கப்பட்டதால், தலித்துகளின் அரசியல் உரிமைகள் திசைமாறியதாக கருதப்படுகிறது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்த்தது, ஆனால் காந்தியின் முழுச் சுதந்திரக் கோரிக்கையை மறுத்தது. க்ரிப்ஸ் தூதுக்குழு (Cripps Mission) போருக்குப் பிறகு மட்டுமே மேலாட்சி அந்தஸ்து (Dominion Status) வழங்க முடியும் என்று முன்மொழிந்தது. உடனடி சுதந்திரம் இல்லை என்பதால், காந்தி இதை நிராகரித்தார்.
இதனால், உடனடி சுதந்திரத்தைக் கோரி 1942 இல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தைத் தனது சக்திவாய்ந்த "செய் அல்லது இறப்பு" அழைப்புடன் காந்தி தொடங்கினார். அதையடுத்து காந்தி, நேரு உட்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மே 1944 வரை புனேவின் ஆகா கான் அரண்மனைச் சிறையில் காந்தி அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவரது செயலாளர் மகாதேவ் தேசாய் மற்றும் மனைவி கஸ்தூர்பா இருவரும் இறந்தனர்.
ஜப்பான் படையெடுப்பு இந்தியாவை அச்சுறுத்தியபோது, காந்தி ஜப்பானிய படைகளுக்கு எதிராகவும் தீவிர அகிம்சை எதிர்ப்பை முன்மொழிந்தார். இருப்பினும், பிரிட்டிஷ் முதலில் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் வழங்கினால் இராணுவ பாதுகாப்பை ஆதரிப்பதை சுருக்கமாகப் பரிசீலித்தார். எனினும், அவர் உண்மையில் இராணுவப் பங்கேற்பை ஒருபோதும் ஆமோதிக்கவில்லை. "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தின் மூலம், போர் முடிந்தவுடன் முழுமையான சுதந்திரம் உடனடியாக வழங்கப்பட வேண்டும், பகுதி சுயாட்சியோ தாமதமான சுதந்திரமோ அல்ல என்பதில் காந்தியும் இந்திய மக்களும் உறுதியாக இருந்தனர்.
சமூக சேவை திட்டங்கள்
சுகாதாரம், கல்வி, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு, நிவாரணப் பணி, காதி நெசவு, தையல் மற்றும் விவசாயம் போன்ற திட்டங்களின் மூலம் விளிம்புநிலை கிராமப்புற மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை முன்னேற்றுவதற்காக காந்தி 1915 இல் கோச்சராப் ஆசிரமம், 1936 இல் சேவாகிராம் ஆசிரமம் மற்றும் 1945 இல் கஸ்தூரிபா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையை நிறுவினார்.
விமர்சனங்கள்
நேதாஜி, பகத் சிங், அம்பேத்கர் ஆகியோரின் அரசியல் குறித்த காந்தியின் நிலைப்பாடுகள், தலித்துகளுக்கு வழங்கப்பட்ட இரட்டை வாக்குரிமையைப் பறிக்கும் விதமாக எரவாடா சிறையில் மேற்கொண்ட அவரது உண்ணாவிரதம், இந்து மதத்தில் தலித்துகளின் நிலை பற்றிய அவரது கருத்துகள் மற்றும் சனாதனம் குறித்த அவரது பார்வைகள் ஆகியவை கடும் விமர்சனத்துக்கு உரியவை.
இறுதி முடிவு
பௌத்த மதத்தை தழுவிய அம்பேத்கர் மற்றும் கடவுள் நம்பிக்கையை மறுத்த பெரியாரைப் போல தீர்க்கமான பாதையைத் தேர்ந்தெடுக்காமல், காந்தி இந்து மதத்திற்குள் இருந்தபடியே மதத்தைச் சீரமைக்க முயன்றார். பார்ப்பன இந்துக்களுக்கும், பார்ப்பனர்களால் தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும் ஒரே நேரத்தில் நல்லவராகத் தோற்றம் அளிக்க முயற்சித்தார். இந்த வழிமுறைகளுக்கு எதிராக, இந்துத்துவத்தை பரப்பும் RSS அமைப்பின் உறுப்பினரான நாதுராம் கோட்சே, 1948 இல் காந்தியைப் படுகொலை செய்தார்.
ஆரிய காந்தி முதல் திராவிட காந்தி
அகிம்சைவாதியாக வாழ்ந்த ஆரிய காந்தி
இறுதியில் கொல்லப்பட்ட திராவிட காந்தி
இதுவே காந்தியின் இரண்டடி சுருக்கமாகும்.
இறந்த காந்தியார் நம் காந்தியார்; இந்த நாட்டுக்கு "காந்தி தேசம், காந்திஸ்தான்" என்று பெயரிட வேண்டும்; இருந்தவர் ஆரிய காந்தி, இறந்தவர் திராவிட காந்தி என்று பெரியார் பேசியதும், "உத்தமர் காந்தியின் உயிரைக் குடித்தது ஒரு ஊதாரி பார்ப்பான்" என்று கலைஞரின் முரசொலி தலையங்கம் வெளியிட்டதும் கவனிக்கத்தக்க அரசியல் செய்திகளாகும்.
மொத்தத்தில், காந்தியை பல அடுக்குகளில் ஆய்வு செய்யலாம்; ஆனால், காந்தியின் "அரசியல் இருப்பு", பிரிட்டிஷ் அரசின் அணுகுமுறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டது என்பதை மறுக்க முடியாது.
முடிவுரை
"காந்தி அகிம்சைவாதியா?" என்ற கேள்வி, காந்தியின் அகிம்சைக் கொள்கையை மறுப்பதற்காக அல்ல; மாறாக, அவரது சிக்கலான அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனபூர்வமாக ஆராய்வதற்காகவே எழுப்பப்படுகிறது. அதே நேரத்தில், தற்போது காவிமயத்தை நோக்கி நகரும் இந்தியாவில், இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட, காந்தியின் அகிம்சை வழிமுறைகளும், அவரது குறியீட்டு மதிப்பும் அவசியமானவை என்பதை மறந்துவிடக் கூடாது. காந்தியை விமர்சிக்கும் உரிமையும், அதே நேரத்தில் பாசிச சக்திகளுக்கு எதிராக காந்தியை கருவியாகப் பயன்படுத்தும் தேவையும் ஒரே காலத்தில் இருக்க முடியும் என்பதே இந்த விவாதத்தின் மையக்கருத்து.
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.

No comments:
Post a Comment