Chocks: அதானி குழுமமும் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியும்

Sunday, June 9, 2024

அதானி குழுமமும் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியும்

அதானி குழுமமும் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியும்

பொருளடக்கம்
  1. முகவுரை
  2. குற்றச்சாட்டுகளும் பங்கு சரிவும்
  3. பரேக்கும் அதானிகளும்
  4. ஒழுங்குமுறை ஆய்வு
  5. உச்ச நீதிமன்ற உத்தரவு
  6. நம்பிக்கையும் கவலையும்
  7. அதானியும் மோடியும்
  8. முடிவுரை
  9. விவரணைகள்
விளக்கம்

அதானி நிறுவனத்தின் "பங்குக் கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி" (Stock Manipulation & Account Fraud) தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி (Hindenburg Research) நிறுவனத்தின் அறிக்கைகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளை இந்தக் கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

முகவுரை

உலகளாவிய நிதித்துறையில், கூட்டு நிறுவனங்களின் (Conglomerates) எழுச்சி மற்றும் வீழ்ச்சியானது, ஒழுங்குமுறை ஆய்வு (Regulatory Scrutiny) மற்றும் முதலீட்டாளர்கள் உணர்வின் (Investors Sentiment) பிரதிபலிப்பாகும். எடுத்துக்காட்டாக, கௌதம் அதானியின் அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வறிக்கையில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் மற்றும் அதையொட்டிய விசாரணைகள் அதானி குழுமத்தையும் பங்குச்சந்தையையும் கணிசமாக உலுக்கியுள்ளன.
குற்றச்சாட்டுகளும் பங்கு சரிவும்

ஜனவரி 2023 அன்று தடயவியல் நிதிப் பகுப்பாய்விற்கு (Forensic Financial Researchபெயர் பெற்ற ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் "பங்குக் கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி" செய்ததாக குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டுக்கள் இந்திய பங்குச்சந்தையில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி, சுமார் 150 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதானி பங்குகளை விற்பனைக்கு தூண்டியது.

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியின் ஆய்வறிக்கைகள், வரி புகலிடங்களை (Tax Havens) முறையற்ற வகையில் பயன்படுத்துதல், ஷெல் நிறுவனங்கள் (Shell Companies) மூலம் உயர்த்தப்பட்ட பங்கு மதிப்புகள் மற்றும் குழுமத்தின் அதிக கடன்கள் (High Debts) போன்ற பிரச்சினைகளை மையமாகக் கொண்டதாகும்.
பரேக்கும் அதானிகளும்

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டு ஆண்டுகள் அதானி குழுமத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து அறிக்கைகளைத் தயாரித்தது. அதில் அதானி குழுமத்திற்கும் பிரபல மோசடியாளர் கேதன் பரேக்கிற்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆய்வு செய்தது.

உதாரணமாக, எலாரா மூலதனம் (Elara Capitals) நிறுவனம் அதானி நிறுவனங்களின் கணிசமான பங்குகளை வைத்திருப்பதும், அதானி நிறுவனங்களின் பங்குகளை கேதன் பரேக்கின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு மாற்றியதும், அதானி விளம்பரதாரர்கள் (Adani Promoters) கேதன் பரேக்கிற்கு பங்குகளை கையாள்வதில் உதவியதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், எலாரா மூலதனம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் பட், கேதன் பரேக்கின் நெருங்கிய கூட்டாளியும் பட்டயக் கணக்காளருமான தர்மேஷ் தோஷியுடன் வணிக உறவு கொண்டிருந்ததாகவும் அறியப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் முந்த்ரா துறைமுகத்திற்கு (Mundra Port) நிதியளிக்கும் ஒரு பகுதி என்று 2007 இல் அதானி குழுமம் பதிலளித்தது. அதானி குழுமமும் நிதித்துறையும், நிதி திரட்டுவதற்கான சட்டபூர்வமான வழிமுறையாக இத்தகைய பரிவர்த்தனையை கருதுகிறதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.

கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, இந்தியாவில் உள்ள அதானி நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள ஷெல் நிறுவனங்களுக்கும் இடையேயான பரிவர்த்தனைகளின் தன்மையை (Nature of Related Party Transactions) வெளியிடாமல் பல பில்லியன் டாலர்களை பரிமாற்றம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கூடுதலாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டத்தின் (Organized Crime and Corruption Reporting Project-OCCRP) விசாரணையில், வினோத் அதானியின் ஆதரவுடன் மொரீஷியஸ் நாட்டை சார்ந்த முதலீட்டு நிதி நிறுவனங்கள் ஒழுங்குமுறை வரம்புகளை மீறி அதானியின் பங்குகளை வர்த்தகம் செய்தது கண்டறியப்பட்டது.

மேலும், 2007 இல் கேதன் பரேக்குடன் தொடர்புடைய தர்மேஷ் தோஷியின் தரகு நிறுவனம், வினோத் அதானி பங்குதாரராகவும் இயக்குநராகவும் இருந்த ஜினேஷ்வர் ஹோல்டிங்ஸ் (Jineshwar Holdings) என்ற மருந்து நிறுவனத்தில் முறைகேடாக பங்குகளை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பங்குக் கையாளுதலுக்காக பலமுறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள கேதன் பரேக், கௌதம் அதானி, வினோத் அதானி மற்றும் ராஜேஷ் அதானி உள்ளிட்ட அதானி குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது கவலைகளை எழுப்புகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 2007 இல் அதானி குழுமம் மற்றும் கேதன் பரேக் இணைந்து பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதன் அடிப்படையில், அதானி விளம்பரதாரர்கள் (Adani Promoters) பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு செபி தடை விதித்தது. ஆனால், இன்றும் பல்வேறு வழிகளில் அதானி மற்றும் பரேக் உறவு தொடர்வதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, கேதன் பரேக், தர்மேஷ் ஜோஷி, ராஜ் பட், கௌதம் அதானி, வினோத் அதானி மற்றும் ராஜேஷ் அதானியைச் சுற்றியுள்ள நிதி பரிவர்த்தனைகளை விசாரித்தால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும்.
ஒழுங்குமுறை ஆய்வு

அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியின் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, அதானி குழுமத்துடன் தொடர்புடைய "பெருநிறுவன நிர்வாகம் (Corporate Governance), இரண்டு நெருங்கிய தொடர்புடைய வணிக நிறுவனங்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் (Related Party Transactions), வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் உரிமையைச் சுற்றியுள்ள சிக்கல்கள் (FPI Ownership) மற்றும் தணிக்கையாளர்களின் பங்கு (Auditor’s Role)" பற்றிய விசாரணையை இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி (SEBI) துரிதப்படுத்தியது.

வெளிநாட்டு முதலீடுகளை வெளியிடுவதற்கான விதிகள் போதுமான அளவு கடுமையாக இல்லாததால், செபியின் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டது. இது விசாரணையை கடினமாக்கி, வெளிப்படைத்தன்மை பற்றிய கவலைகளை எழுப்பியது. வெளிப்படைத்தன்மை இல்லாததால் அதானி குழுமத்தின் நிதிப் பரிவர்த்தனைகளை கண்டுபிடிப்பது கடினமானது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக, ஆகஸ்ட் 2023 அன்று முதலீட்டாளர்கள் வெளிநாட்டு முதலீடு பற்றிய கூடுதல் விவரங்களைப் பகிர்ந்து கொள்வதை செபி கட்டாயமாக்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு

பாரபட்சமற்ற விசாரணை நடத்த தேவையான தகுதியும் சுதந்திரமும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபிக்கு இல்லை என்றும், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார மோசடி தொடர்பான அதானி ஊழல் மீதான விசாரணையை நீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அதானி குழுமம் கூறியது மற்றும் விசாரணைகளை திறம்பட மேற்கொள்ள போதுமான தகுதியும் சுதந்திரமும் இருப்பதாக செபி வாதிட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க செபிக்கு ஜனவரி 2024 அன்று உத்தரவிட்டது. கூடுதலாக, விசாரணையை மேற்பார்வையிடும் செபியின் அதிகாரத்தை உறுதி செய்து, வழக்கை மாற்று ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு மாற்றுவதற்கான கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. 

இதன் மூலம், அதானி குழுமம் மீதான விசாரணையை பலவீனப்படுத்தியதில் உச்ச நீதிமன்றத்துக்கு பெரும் பங்கு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், பங்கு ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது மட்டுமல்லாமல், விசாரணையின் முடிவை தீர்மானிக்க செபிக்கு பிரத்யேக அதிகாரத்தை வழங்கியதன் மூலம் செபி மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், அதானி ஊழல் மீதான விசாரணையை செபி மேற்கொள்ளட்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், கௌதம் அதானியால் கையகப்படுத்தப்பட்ட ஊடக நிறுவனமான N.D.T.V தொலைக்காட்சியின் இயக்குநராக செபியின் முன்னாள் தலைவர் யு.கே.சின்ஹாவை கௌதம் அதானி நியமித்துள்ளது செபியின் சுதந்திரம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

பின்குறிப்பு =  பிப்ரவரி 2024 அன்று அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க செபியை அனுமதிக்கும் முடிவை மறுஆய்வு செய்யக் கோரி அனாமிகா ஜெய்ஸ்வால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தவறிழைத்து உள்ளதாகவும், கடந்த காலத்தில் செபி விவகாரங்களை எவ்வாறு கையாண்டது என்பது குறித்த கவலைகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜனவரி 2024 தீர்ப்பின்படி அதானி குழுமம் விதிகளை மீறியதா என்பதை செபி இன்னும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 2024 அன்று அதானி குழுமத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ததாக செபி தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் மீது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் குற்றம் சாட்டியது, மற்றொரு அதிர்ச்சி அலையை உருவாக்கியது. இதையெடுத்து, அதானி ஊழலை செபி விசாரிக்கக் கூடாது என்றும், செபி தலைவர் மதாபி பூரி புச் பதவி விலக வேண்டும் என்றும், அதானி மீதான ஊழல் புகார் குறித்து ஒன்றிய பா.ஜ.க அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையும் கவலையும்

ஜனவரி 2024 அன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அதானி குழுமம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை விரைவாக மீட்டெடுத்தது. இதனால், அதானி பங்குகளின் விலை உயர்ந்தது. மேலும், இந்த தீர்ப்பு அதானி குழுமத்தின் நேர்மையை நிரூபித்ததாக கௌதம் அதானி கூறியது பங்குதாரர்களிடம் சாதகமாக எதிரொலித்தது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதானி குழுமத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும், அதானி குழுமம் ஸ்திரத்தன்மையுடன் விரிவடைவதற்கான வழிகளைத் திறக்கும் என்றும் பங்கு ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில், அதானி உடனான பிரதமர் மோடியின் நட்பு காரணமாக அதானியின் ஊழல், தலைப்பு செய்திகளில் இருந்து மறைந்துவிட்டது என்றும், இந்த ஊழலை வெளிக்கொணரவும் அதன் பயனாளிகளை அடையாளம் காணவும் அதானி மீது கண்காணிப்பு அமைப்புகள் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதானியும் மோடியும்

அதானி ஊழல் பற்றிய செய்திகள், பெருநிறுவன நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை ஆய்வு மீதான கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், அதானிக்கும் மோடிக்கும் இடையிலான ஐயத்துக்கிடமான உறவும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கௌதம் அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான நட்பு மற்றும் மோடியின் அரசியல் செல்வாக்கின் கீழ் கௌதம் அதானியின் அபரிமிதமான வணிக வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டியதும் கட்டாயமாகும். ஏனெனில், அரசாங்கத்தின் செல்வாக்கை பயன்படுத்தி பெரு முதலாளிகள் பற்பல நிறுவனங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதும், நியாயமற்ற முறையில் முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டுவதும், செயற்கையாக விலையை உயர்த்தி லாபம் ஈட்டுவதும் பற்றிய உதாரணங்கள் உலகெங்கிலும் உள்ளன என்றால் அது மிகையாகாது.

இந்தப் பின்னணியில், அதானி குழுமம் சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்பட்டிருந்தும், கிடுக்கிப்பிடி விசாரணையைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறது, இந்த நிலையானது கௌதம் அதானி மீதான மோடி அரசாங்கத்தின் மெத்தனப் போக்கை பிரதிபலிக்கிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். “அதானி - ஹிண்டன்பர்க்” விவகாரத்தில், “அதானி - மோடி” தொடர்பு காரணமாக முறையான விசாரணை நடைபெறாமல் போகலாம். எனவே, பா.ஜ.க பிரதமர் நரேந்திர மோடிக்கும் கெளதம் அதானிக்கும் அவரது நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை செய்வது அவசியமாகும். இதற்கிடையில், அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் 55.4 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை பா.ஜ.கவுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. எனவே, அதானிக்கும் மோடிக்கும் இடையே உள்ள தொடர்பு மட்டுமல்லாமல் அதானியின் நன்கொடை பலன்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
முடிவுரை

பொது ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில், வைரங்கள், இரும்புத் தாது, நிலக்கரி மற்றும் மின் சாதனங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வது தொடர்பான மோசடிகளுடன் அதானியின் வணிக சாம்ராஜ்யம் வளரத் தொடங்கியது. இப்போது, ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, "பங்குக் கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி" ஊழலில் அதானி குழுமம் சிக்கியுள்ளது. மேலும், அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியின் குற்றச்சாட்டுகள், இந்தியாவின் ஒழுங்குமுறை அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஏனெனில், பங்கு வர்த்தகத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை பேணுவதற்கும் வணிகச் சூழலில் சமநிலையை பேணுவதற்கும் அரசுகளும் நிறுவனங்களும் சீரான ஒழுங்குமுறைகளுக்கு முன்னுரிமை அளிப்பது கட்டாயமாகும்.

மொத்தத்தில், எந்தவொரு நிறுவனமும் பல்வேறு துறைகளில் விரிவடையும் போது, நிறுவனத்தை திறம்பட நிர்வகிப்பதும், செயல் திறனைப் பேணுவதும், சாதி, மதம், இனம் அல்லது அரசியல் செல்வாக்கு ஆகியவற்றுடன் தொடர்பு இல்லாத பொது நம்பிக்கையை வளர்ப்பதும் அதன் நீடித்த வெற்றி மற்றும் நற்பெயருக்கு முக்கியமானதாக இருக்கும்.

விவரணைகள் 


Adani Case Related News












வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...