Chocks: ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

Sunday, June 16, 2024

ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

பொருளடக்கம் 
  1. முகவுரை 
  2. ஜனதா கட்சி உருவாக்கம்
  3. 1977 பொதுத் தேர்தல் முடிவுகள்
  4. மண்டல் ஆணையம்
  5. வைத்தியலிங்கம் ஆணையம்
  6. இரட்டை உறுப்பினர் பதவி
  7. மொரார்ஜி தேசாய் ராஜினாமா
  8. சரண் சிங் ராஜினாமா
  9. ஜனதா ஆட்சி வீழ்ந்த கதை
  10. ஜெகசீவன் ராம் வீழ்ந்த கதை
  11. 1980 பொதுத் தேர்தல்
  12. வைத்தியலிங்கம் அறிக்கை
  13. முடிவுரை 
  14. விவரணைகள் 
முகவுரை

1970 களில் கோலக்நாத் வழக்கு, கேசவானந்த பாரதி வழக்கு, ராஜ் நரேன் வழக்கு, மக்கள் இயக்க போராட்டங்கள் போன்றவற்றால் நிலவிய அரசியல் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்திரா காந்தி 1975 இல் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். 1977 இல் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, இந்திரா காந்தி புதிய பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். மக்கள் மத்தியில் எதேச்சாதிகாரம் பின்னடைவை ஏற்படுத்தியதால் காங்கிரஸ் பொதுத்தேர்தலில் வெற்றி பெறவில்லை. நெருக்கடி நிலைக்கு பிந்தைய பொதுத்தேர்தலில் ஜனதா கட்சி ஆட்சி அமைக்க ஒரு தீர்க்கமான வெற்றியை விளைவித்தது.

ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராஜ் நரேன், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜெகசீவன் ராம் மற்றும் பல தலைவர்கள் நெருக்கடி நிலைக்கு பிந்தைய ஜனதா ஆட்சியை அமைப்பதில் பெரும் பங்கு வகித்தனர்.
ஜனதா கட்சி உருவாக்கம்

1977 இல் நெருக்கடி நிலை (The Emergency) நிழலின் கீழ், இந்திரா காந்தியின் அரசியல் மேலாதிக்கத்தை எதிர்த்துப் பலதரப்பட்ட கூட்டணி உருவானது. இந்த கூட்டணி ஜனதா கட்சி (Janata Party - JP) என்று அழைக்கப்பட்டது மற்றும் JP என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண் (Jayaprakash Narayanan) தலைமையில், ராஜ் நரேன் மற்றும் பல தலைவர்களின் கூட்டு முயற்சியால், சோசலிசம் முதல் இந்துத்துவா சித்தாந்தக் குழுக்கள் வரை வேறுபட்ட அரசியல் கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. சுதந்திரக் கட்சி (ராஜாஜி), சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி (ஜார்ஜ் பெர்னாண்டஸ்), பாரதிய கிராந்தி தளம் (சரண் சிங்), உட்கல் காங்கிரஸ் (பிஜு பட்நாயக்) போன்றவை இணைந்து உருவாக்கிய பாரதிய லோக் தளம் மற்றும் ஸ்தாபன காங்கிரஸ் (காமராஜர்), பாரதிய ஜனசங்கம் (வாஜ்பாய்) மற்றும் ஜனநாயகத்திற்கான காங்கிரஸ் (ஜெகசீவன் ராம்), பிற சிறிய கட்சிகள் ஜனதா கூட்டணியில் இணைந்தன.
1977 பொதுத் தேர்தல் முடிவுகள்

“JP யின் JP க்கு வாக்களியுங்கள்" என்பது ஜனதா கட்சியின் தேர்தல் முழக்கங்களில் ஒன்றாக இருந்தது. 1977 பொதுத் தேர்தலில் ஜனதா கூட்டணி வெற்றி பெற்று, முன்னாள் ஸ்தாபன காங்கிரஸ் தலைவரான மொரார்ஜி தேசாய் பிரதமரானார். 1977 பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி 7.8 கோடி வாக்குகளைப் பெற்று 295 இடங்களை வென்று, அப்போது இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. இந்த வெற்றி காங்கிரஸின் தடையற்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய ஒன்றிய அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையை ஏற்படுத்தியது.

குறிப்பிடத்தக்க வகையில், ராஜாஜியின் மரணத்திற்குப் பிறகான சுதந்திரக் கட்சி ஜனதா கட்சியுடன் இணைக்கப்படுவதற்கு முன்பு பாரதிய லோக் தளம் கட்சியுடன் இணைந்தது. அதே நேரத்தில், காமராஜரின் மரணத்திற்குப் பிறகான ஸ்தாபன காங்கிரஸ் நேரடியாக ஜனதா கட்சியுடன் இணைந்து அதன் உறுப்பினர் மொரார்ஜி தேசாய் இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமரானார். காந்தி விசுவாசியும் தலித் தலைவருமான ஜெகசீவன் ராம், ஜனதா கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸிலிருந்து விலகி துணைப் பிரதமரானார். மேலும், 1977 இல் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமதுவின் மறைவுக்குப் பிறகு, ஜெயப்பிரகாஷ் நாராயண் (JP) இந்தியாவின் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று ஜனதா அரசாங்கம் விரும்பியது. ஆனால், JP மறுத்ததால், நீலம் சஞ்சீவ ரெட்டி ஜனாதிபதியானார்.
மண்டல் ஆணையம்

சோசலிஸ்ட் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, 1978 டிசம்பரில், பிரதமர் மொரார்ஜி தேசாய், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு குறித்து ஆராய்ந்து அறிக்கை தயாரிக்க, பீகாரின் முன்னாள் முதல்வர் பி.பி. மண்டல் தலைமையில் மண்டல் ஆணையத்தை அமைத்தார். இருப்பினும், ஜனதா கட்சியின் ஒரு அங்கமான பாரதிய ஜனசங்கத்தின் உறுப்பினர்கள் மண்டல் ஆணையத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும்கூட, இந்தியாவில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரைக் கண்டறிந்து, சாதிய ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாடுகளை நிவர்த்தி செய்ய இடஒதுக்கீடு உள்ளிட்ட தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் பணி ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜனதா ஆட்சியில் மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டாலும், அதன் இறுதி அறிக்கை இந்திரா காந்தி ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்டது. 1990 இல் வி.பி.சிங் ஆட்சியில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டது. பா.ஜ.க தலைவர் அத்வானி, மண்டல் ஆணையத்தின் அமலாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அயோத்தியில் கோவில் கட்ட ரத யாத்திரை தொடங்கி, பீகாரில் கைது செய்யப்பட்டார் மற்றும் இறுதியில் வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க வாபஸ் பெற்றதால் வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது. மண்டல் ஆணையம் 1990 களில் குறிப்பிடத்தக்க அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.
வைத்தியலிங்கம் ஆணையம்

1979 இல் ஜனதா கட்சிக்குள் ஏற்பட்ட கிளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில், ஜனசங்கப் பிரிவைச் சேர்ந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அத்வானி, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டு, பிரதமரின் குடும்பத்தினர் மற்றும் உள்துறை அமைச்சரின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பிரதமர் மொரார்ஜி தேசாய் நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜினாமா செய்வதாக மிரட்டினார். இதையொட்டி, விசாரணைக் ஆணையத்தை அமைக்க கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதைத் தவிர்க்க, 1979 இல் பிரதமர் மொரார்ஜி தேசாய் தாமாக முன்வந்து தனது குடும்பத்தினர் மற்றும் உள்துறை அமைச்சர் சரண் சிங் குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தார்.

ஆணையத்திற்கு தலைமை தாங்க மொரார்ஜி தேசாய் முதலில் நீதிபதி சந்திரசூட்டை அணுகினார். ஆனால், சந்திரசூட் மறுத்ததால் வைத்தியலிங்கம் நியமிக்கப்பட்டார். வைத்தியலிங்கம், பிரதமர் மொரார்ஜி தேசாய் மகன் காந்திலால் தேசாய், மருமகள் பத்மா தேசாய் மற்றும் உள்துறை அமைச்சர் சரண் சிங் மனைவி காயத்ரி தேவி மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை தயாரித்தார்.
இரட்டை உறுப்பினர் பதவி

ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இரண்டிலும் பாரதிய ஜனசங்க உறுப்பினர்களின் இரட்டை உறுப்பினர் பதவி தொடர்பாக சரண் சிங் மற்றும் மொரார்ஜி தேசாய் இடையே மோதல் ஏற்பட்டதால், ஜனதா அரசு உள்கட்சி பூசல்களை எதிர்கொண்டது. ஆர்.எஸ்.எஸ் உடனான உறவை பாரதிய ஜனசங்கம் முறித்துக் கொள்ள வேண்டும் என்று சரண் சிங் வலியுறுத்தினார். இந்த கோரிக்கை ஏற்கப்படாததால், ​​சரண் சிங் ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து ஜனதா கட்சி (மதச்சார்பற்ற) என்ற ஒரு பிரிவை உருவாக்கினார், பின்னர் அது சோசலிஸ்ட் கட்சி (லிமாயே) மற்றும் ஒரிசா ஜனதா கட்சியுடன் இணைந்து லோக் தளம் என்றானது.
மொரார்ஜி தேசாய் ராஜினாமா

இரட்டை உறுப்பினர் பதவி மற்றும் இந்திரா காந்தி உட்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சம்பந்தப்பட்ட நெருக்கடி கால முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மோசமாக கையாள்வதாக மொரார்ஜி தேசாய் மீது ராஜ் நரேன் மற்றும் சரண் சிங் குழுவினர் குற்றம் சாட்டியதால், உள்கட்சி அழுத்தம் காரணமாக 1979 இல் மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து, சரண் சிங் பிரதமரானார். மேலும், இரட்டை உறுப்பினர் பதவி தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து பாரதிய ஜனசங்கத்தின் உறுப்பினர்கள் ஜனதா கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியை 1980 இல் உருவாக்கினர்.
சரண் சிங் ராஜினாமா

இந்திரா காந்தியின் காங்கிரஸ் ஆரம்பத்தில் சரண் சிங்கிற்கு ஆதரவளித்தது, ஆனால் அதன் ஆதரவை மிக விரைவில் விலக்கிக் கொண்டது. அதற்காக பிரதமராக பதவியேற்ற சரண்சிங், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது அரசியல் களத்தை சூடாக்கியது. இம்முடிவு அவரது 24 நாள் கூட்டணி அரசாங்கத்தை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை சந்திப்பதைத் தடுத்தது. சரண் சிங் ராஜினாமா ஒரு அரசியல் நெருக்கடியைத் தூண்டியது, இது ஜெகசீவன் ராம் தேவையான ஆதரவுடன் இந்தியாவின் முதல் தலித் பிரதமராக ஆவதற்கு வழிவகுத்தது.

இதற்கிடையில், சரண் சிங் ராஜினாமா செய்து, புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியதாக கூறப்பட்ட நிலையில், ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜெகசீவன் ராமை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. மொத்தத்தில், சரண் சிங் ராஜினாமாவுக்குப் பின் மக்களவையை கலைத்து புதிய நாடாளுமன்ற தேர்தலுக்கு ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி அழைப்பு விடுத்தார்.
ஜனதா ஆட்சி வீழ்ந்த கதை

இரட்டை உறுப்பினர் பதவி தொடர்பான சர்ச்சை, நெருக்கடி கால விசாரணைகளில் மெத்தனம், மொரார்ஜி தேசாயின் மகன் காந்திலால் தேசாய் மற்றும் சரண் சிங்கின் மனைவி காயத்ரி தேவி போன்றவர்களின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளால் ஜனதா அரசாங்கம் சீர்குலைந்தது. இவ்வாறு, உள்கட்சி பூசல், குடும்ப மேலாதிக்கம், கொள்கை வேறுபாடுகள், உறுப்பினர் தகராறுகள் மற்றும் பதவிகள் தொடர்பான மோதல்கள் இறுதியில் ஜனதா அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்குள் வீழ்ச்சியடைய வழிவகுத்தது.

ஜெகசீவன் ராம் வீழ்ந்த கதை

1977 முதல் 1979 வரை துணைப் பிரதமராகப் பணியாற்றிய ஜெகசீவன் ராம், சரண் சிங்கின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் முதல் தலித் பிரதமராக வருவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். இருப்பினும், மேனகா காந்தி மற்றும் குஷ்வந்த் சிங் நிர்வகித்த சூர்யா இதழில் ஜெகசீவன் ராமின் மகன் சுரேஷ் ராம் குறித்த பாலியல் வழக்கு தொடர்பாக வெளியான புகைப்படங்கள் ஊடகங்களில் பேசுபொருளானதும், ஜெகசீவன் ராம் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆட்சி அமைக்கவும் வாய்ப்பளிக்காமல் புதிய தேர்தலுக்கு ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி அழைப்பு விடுத்ததும் ஜெகசீவன் ராமின் அரசியல் நல்வாழ்வை உலுக்கியது.

1969 இல் இந்திரா காந்தியின் காங்கிரஸ் பிரிவுக்கு தலைமை தாங்கிய ஜெகசீவன் ராம், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான நீலம் சஞ்சீவ ரெட்டியை ஆதரிக்கவில்லை என்று பரவலாக ஊகிக்கப்படுகிறது. அவர் ரெட்டியை ஆதரித்திருந்தால், 1969 இல் ஜனாதிபதியாக ரெட்டி வெற்றி பெறுவதற்கு வழிவகுத்திருக்கலாம். இப்போது, ​​ஜெகசீவன் ராமுக்கு புதிய ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்காமல், புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டியின் முடிவு, இரு ஆளுமைகளும் காங்கிரஸ் கட்சியை விட்டு 1977 இல் வெளியேறிய போதிலும், அரசியல் ஆய்வாளர்களால் பழிவாங்கும் அரசியலாக கருத இடமுண்டு.
1980 பொதுத் தேர்தல்

அரசியல் செல்வாக்குமிக்க ஜெகசீவன் ராம் பரந்த ஆதரவுடன் தான் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்திருக்கலாம் என்று நம்பிய நிலையில், ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டியின் முடிவை ஜனநாயக விரோதமானது என்று விமர்சித்தார். அத்துடன் ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி, சரண் சிங்குடன் கைகோர்த்து செயல்பட்டு, ஜெகசீவன் ராமுக்கு ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மறுத்ததாக ஜனதா கட்சித் தலைமை குற்றம் சாட்டியது. மொரார்ஜி தேசாய், ஜெகசீவன் ராம், சந்திரசேகர், வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி, அரசியலமைப்பு நலன்களுக்கு எதிராக செயல்படும் ஜனாதிபதியை தண்டிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்து 1980 தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.

1980 பொதுத் தேர்தலில், ஜனதா கட்சி சார்பில் ஜெகசீவன் ராம் மற்றும் ஜனதா கட்சி (மதச்சார்பற்ற) சார்பில் சரண் சிங் ஆகிய இருவரையும் பிரதமர் வேட்பாளர்களாக முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், தேர்தலில் இரு அணிகளும் மோசமாக செயல்பட்டன. ஜனதா கட்சிக்குள் ஏற்பட்ட உள் பிளவுகள் அதன் செய்யப்பட்டது நிலையை கணிசமாக பலவீனப்படுத்தியது. ஜனதா கட்சிக்குள் ஏற்பட்ட உள் பிளவுகள் இரு கட்சிகளும் தேர்தல்களில் மோசமாக செயல்பட காரணமாக அமைந்தது, இது அதன் எதிர்கால அரசியல் நிலையை கணிசமாக பலவீனப்படுத்தியது. இறுதியில், 1980 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8.4 கோடி வாக்குகளைப் பெற்று 353 இடங்களை வென்று, தனிப்பெரும்பான்மையுடன் இந்திரா காந்தி நான்காவது முறையாக இந்தியாவின் பிரதமரானார்.
வைத்தியலிங்கம் அறிக்கை

பிரதமர் மொரார்ஜி தேசாய் மகன் காந்திலால் தேசாய், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Taxes - CBDT) உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.வி.குருவில்லாவை நீக்கியதாகவும், இழை நூல் இறக்குமதியில் அரசாங்கக் கொள்கையை தனது நெருங்கிய நண்பரான கபாடியா குழுமத்திற்கு ஆதரவாகக் கையாண்டதாகவும், கணிசமான வரி பாக்கிகள் இருந்த போதிலும் தர்ம தேஜா நாட்டை விட்டு வெளியேற உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. காந்திலால் தேசாய் மனைவியும், பிரதமர் மொரார்ஜி தேசாய் மருமகளுமான பத்மா தேசாய், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, வரி மேல்முறையீடுகளில் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றதாகவும், மேல்முறையீடுகளைத் தொடர வேண்டாமென்று வரித்துறை ஆணையரைத் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

உள்துறை அமைச்சர் சரண் சிங் மனைவி காயத்ரி தேவி, தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, சௌக்ரா சம்பவம் தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளில் தலையிட்டதாகவும் , சுரேந்திர பிரதாப் சிங் என்ற காவல்துறை அதிகாரியை இடமாற்றத்தைத் தடுத்ததாகவும், இளைஞர்களிடம் வேலை வாங்கி தருவதாக பணம் கேட்டு ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

1979 இல் ஜனதா அரசின் ஆலோசனையின் பேரில் வைத்தியலிங்கம் ஆணையம் அமைக்கப்பட்டாலும், 1980 இல் புதிதாக அமைக்கப்பட்ட இந்திரா காந்தி அரசிடம் ஆணையத்தின் இறுதி அறிக்கையை வைத்தியலிங்கம் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது. ஆணையத்தின் அறிக்கைகள் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. ஜனதா கட்சி, இந்த அறிக்கைகள் காங்கிரஸால் எழுதப்பட்டவை என்றும் இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றும் கூறியது. எவ்வாறாயினும், கிடைக்கப்பெற்ற பதிவுகளின்படி, இறுதி அறிக்கை முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு உறுப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

முடிவுரை 

ஜனதா கட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இந்தியாவில் பரவலாக ஆய்வு செய்யப்பட்ட அரசியல் தலைப்பு ஆகும், ஏனெனில் ஜனதா கட்சி மூன்று தசாப்த கால காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு 1977 இல் நாட்டின் முதல் காங்கிரஸ் அல்லாத ஆட்சியைக் குறித்தது. இருப்பினும், ஊழல்கள், உள்கட்சி மோதல்கள், கொள்கை மோதல்கள் போன்ற பலவற்றால் ஜனதா ஆட்சி நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கவில்லை.

விவரணைகள் 

Morarji Desai Became Prime Minister (1977)


Jagjivan Ram's Son Suresh Ram in a Sex Scandal (1978)



Vaidialingam Commission (1980)



வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...