ஆணையங்களும் வரலாறும்
குறிப்பு = இந்த சுருக்கமான கட்டுரைத் தொகுப்பு முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின், விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கட்டுரைத் தொகுப்பு ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. எனினும் இஃது, புத்தகத் தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. கூடுதல் புரிதலுக்காக, இது தொடர்பான இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
விளக்கம் = பிரச்சனைக்கான காரணங்களை ஆராயவும், தகவல்களைக் கண்டறியவும், தேவையான பரிந்துரைகளை வழங்கவும் அரசின் அதிகாரம் பெற்ற ஒரு நபர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட அமைப்பே “ஆணையம்” என்று அழைக்கப்படுகின்றது. ஆணையங்கள் வெளியிட்ட அறிக்கைகளால் அரசியல் அரங்குகள் அதிர்ந்த கதைகளும் உண்டு. பொது மக்களின் வாழ்வு மேம்பட்ட கதைகளும் உண்டு. இவ்வாறு, ஒவ்வொரு ஆணையத்தின் அறிக்கைக்கும் ஒரு பின்னணி உண்டு. குறிப்பிட்ட பணிகளைச் செய்ய நியமிக்கப்படுகின்றன. “ஆணையம், குழு அல்லது சபை” (Commission, Committee or Council) குறித்து பல்வேறு கோணங்கள் உள்ள நிலையில் இந்த கட்டுரையில் சில ஆணையங்களின் வரலாறு குறித்து காண்போம்.
பொருளடக்கம்
- முகவுரை
- ஆணையங்கள்
- கள யதார்த்தம்
- வாரன் ஆணையம் (1963)
- வாட்டர்கேட் ஆணையம் (1973)
- இந்திய கல்வி ஆணையங்கள்
- மிண்டோ-மோர்லி சீர்திருத்த ஆணையம் (1909)
- மான்டேக்-செல்ம்ஸ்போர்ட் சீர்திருத்த ஆணையம் (1919)
- ரௌலட் ஆணையம் (1919)
- சைமன் ஆணையம் (1927)
- இந்திய தேர்தல் ஆணையம் (1950)
- காலேல்கர் ஆணையம் (1953)
- மாநில மறுசீரமைப்பு ஆணையம் (1953)
- கபூர் ஆணையம் (1964)
- இளையபெருமாள் ஆணையம் (1965)
- மண்டல் ஆணையம் (1979)
- வைத்தியலிங்கம் ஆணையம் (1980)
- சர்க்காரியா ஆணையம் (1983)
- தக்கர் ஆணையம் (1984)
- வர்மா ஆணையம் (மே 1991)
- ஜெயின் ஆணையம் (ஆகஸ்ட் 1991)
- லிபரான் ஆணையம் (1992)
- ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் (1993)
- வோரா ஆணையம் (1993)
- நானாவதி-மேத்தா ஆணையம் (2002)
- பூஞ்சி ஆணையம் (2007)
- கலைஞரின் ஆணையங்கள்
- ராஜமன்னார் ஆணையம் (1969)
- சர்க்காரியா ஆணையம் (1976)
- பாமதி ஆணையம் (1992)
- கோகுலகிருஷ்ணன் ஆணையம் (1998)
- சதாசிவம் விசாரணை ஆணையம் (1999)
- ஆறுமுகசாமி ஆணையம் (2017)
- அருணா ஜெகதீசன் ஆணையம் (2018)
- இதர ஆணையங்கள்
- முடிவுரை
- விவரணைகள்
முகவுரை
ஒரு பிரச்சனை பற்றிய தகவல்களைக் கண்டறிய அல்லது பிரச்சனைக்கான காரணங்களை ஆராய, அரசின் அதிகாரம் பெற்ற ஒரு நபர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழுக்கள் "ஆணையம்" என்று அழைக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சியின் போது ஆணையங்கள் முக்கியப் பங்காற்றியதன் விளைவாக, ஆணையப் பரிந்துரைகளின் சார்பில் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பொதுவாக ஒவ்வொரு ஆணையத்திற்கும் ஒரு கதை இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் ஆணையங்களை அமைப்பது பயனற்றது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். மேலும், ஆணையங்களின் முடிவுகளைக் கையாள்வதில் அரசியல்வாதிகள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
ஆணையங்கள் உண்மையில் பயனுள்ளதா? இல்லையா? என்ற கேள்விக்குப் பதில் சொல்ல, அசுரன் திரைப்படத்தின் ஒரு காட்சியை இரவல் வாங்கிக் கொள்கிறேன். அப்படத்தின் ஒரு காட்சியில் நடிகர் வெங்கடேஷ் “அரசாங்கத்த நடத்துறதே நாங்க தான் தெரியும்ல?” என்பார். அதற்கு எதிர்வினையாக நடிகர் பிரகாஷ் ராஜ் “அந்த அரசாங்கத்துல ஒரே ஒரு நேர்மையான அதிகாரி இருந்தா உங்க ஜோலி முடிஞ்சது தெரியும்ல?” என்பார். நீங்கள் இக்காட்சியுடன் ஆணையங்களின் வரலாற்றையும் இணைத்து அணுக வேண்டும்.
ஆணையங்கள்
ஆணையங்கள் தற்காலிக அமைப்பாக அல்லது நிரந்தர அமைப்பாக அமைக்கப்படலாம். தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ஆணையம், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம், மனித உரிமைகள் ஆணையம், மத்திய புலனாய்வுப் பணியகம், இந்தியத் தேர்தல் ஆணையம், மத்தியத் தகவல் ஆணையம், திட்டக்குழு ஆணையம், நிதி ஆணையம் போன்றவை நிரந்தர அமைப்புகளாகும். மேலும், நிரந்தர ஆணையங்கள் Constitutional, Statutory, Quasi-Judicial அமைப்பின் கீழ் வருகின்றன. இக் கட்டுரைத் தொகுப்பில், நிரந்தர ஆணையங்களை விட ஒரு பிரச்சனையை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக ஆணையங்கள் குறித்து தான் பெருமளவில் காண இருக்கிறோம்.
கள யதார்த்தம்
ஆணையங்கள் வெளியிட்ட அறிக்கைகளால் மக்கள் மன்றங்கள் அதிர்ந்து போன கதைகள் ஏராளம். எடுத்துக்காட்டாக, ஜெயின் ஆணையம் மற்றும் மண்டல் ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகளால் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி இரண்டு முறை கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆணையத்தின் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கவும், ஆணையத்தைக் கலைக்கவும், ஆணையத்தை மாற்றவும் அரசுகளுக்கு உரிமை உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிரிட்டிஷ் இந்தியா மற்றும் சுதந்திர இந்தியாவின் அரசுகள் பல்வேறு தலைப்புகளில் விசாரணைகளை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள நூற்றுக்கணக்கான ஆணையங்களை அமைத்துள்ளன. அனைத்து ஆணையங்களையும் விரிவாக உள்ளடக்குவதற்கு நீண்ட பக்கங்கள் தேவைப்படும் என்பதால், மேற்கோள் நோக்கத்திற்காக, அமெரிக்காவிலிருந்து தொடங்கி இந்திய ஒன்றியம் முதல் தமிழ்நாடு வரையிலான சில ஆணையங்களின் சுருக்கங்கள் (Summary) மட்டுமே இப்புத்தகத்தில் கையாளப்படுகின்றன.
வாரன் ஆணையம் (1963)
அமெரிக்காவில் ஜனாதிபதி ஜான் எப்.கென்னடியின் படுகொலை குறித்தும் கொலையாளி என்று கூறப்பட்ட லீ ஹார்வி ஓஸ்வால்ட் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் விசாரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன் அவர்களால் வாரன் ஆணையம் (Warren Commission) நியமிக்கப்பட்டது.
வாரன் ஆணையம் தனது விசாரணை அறிக்கையில், ஜான் எப்.கென்னடியின் படுகொலை மற்றும் லீ ஹார்வி ஓஸ்வால்டின் நடவடிக்கைகள் குறித்து விவரித்திருந்தாலும், அது ஓஸ்வால்டின் நோக்கங்களைப் பகுப்பாய்வு செய்ய முயற்சிக்கவில்லை என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது. மேலும், இரகசியப் பாதுகாப்புச் சேவையை வலுப்படுத்தவும், ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தவும், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியின் கொலையை மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாக மாற்றும் சட்டத்தையும் வாரன் ஆணையம் முன்மொழிந்தது.
வாட்டர்கேட் ஆணையம் (1973)
வாட்டர்கேட் ஊழல் என்பது "1972 ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ரிச்சர்ட் நிக்சனை மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கும் பொருட்டு, ஜனநாயக கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளின் அரசியல் உரையாடல்களை ஒட்டுக்கேட்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் நிர்வாகம் மேற்கொண்ட சட்டவிரோத முயற்சியாகும்." வாஷிங்டன் போஸ்ட் நிருபர்கள் வாட்டர்கேட் ஊழலை ஜூன் 1972 அன்று முதன்முதலில் வெளிப்படுத்தினர். ரிச்சர்ட் நிக்சன் நவம்பர் 1972 அன்று ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வாட்டர்கேட் ஊழல் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன. இது இறுதியில் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் ராஜினாமாவிற்கு வழிவகுத்தது. மேலும், வாட்டர்கேட் ஊழல் காரணமாக பதவியை ராஜினாமா செய்த ஒரே அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் ஆவார்.
செனட்டர் சாம் எர்வின் தலைமையில் அமைக்கப்பட்ட வாட்டர்கேட் ஆணையம் (Watergate Committee), அரசியல் குற்றங்களைச் செய்ததற்காக வெள்ளை மாளிகை அதிகாரிகளைக் குற்றஞ்சாட்டுவதற்கும், ரிச்சர்ட் நிக்சனின் உதவியாளர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கும் ஆதாரங்களை சேகரிப்பதில் முக்கியப் பங்கு வகித்தது. மேலும், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும், அரசாங்கத்திற்குத் தகுதிநிலையுடன் கூடிய சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கவும், காங்கிரஸில் சட்டச் சேவையை உருவாக்கவும் வாட்டர்கேட் ஆணையம் பரிந்துரைத்தது.
இந்திய கல்வி ஆணையங்கள்
வரலாற்றுச் சூழலின் வெளிச்சத்தில், பிரிட்டிஷ் இந்தியாவிலும் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவிலும் வெவ்வேறு காலகட்டங்களில் நிறுவப்பட்ட பல்வேறு கல்வி ஆணையங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
// மெக்காலே கல்வி குழு (1835) //
ஆரம்பகால இந்தியாவில், மருத்துவக் கல்வி உட்பட பல்வேறு கல்விப் பாடங்கள் சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளில் கற்பிக்கப்பட்டன. இந்த நடைமுறை சமமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கான சவால்களை முன்வைத்தது. இதையொட்டி, பிரிட்டிஷ் இந்திய அரசு, அறிஞர் தாமஸ் மெக்காலேயை இந்திய கல்வி நிலையை மதிப்பிடும்படி பணித்தது. அதன் அடிப்படையில், “இந்திய கல்வியின் நிமிடம்“ என்ற தாமஸ் மெக்காலேவின் ஆலோசனைகள் மேற்கத்திய கல்வி முறையை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. ஆங்கிலத்தை பயிற்றுவிக்கும் மொழியாக அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியக் கல்வி முறையை பிரிட்டிஷ் வழியில் சீர்திருத்த வேண்டும் என்று தாமஸ் மெக்காலே வாதிட்டார். இந்தப் பரிந்துரை 1835 இல் ஆங்கிலக் கல்விச் சட்டத்தின் மூலம் சட்டமாக இயற்றப்பட்டது.
// உட்ஸ் ஆணையம் (1854) //
பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், கல்வியில் பாலின சமத்துவம், தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழி கற்பித்தல், மேல்நிலைப் பள்ளிகளில் இருமொழிக் கல்வி, பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வழிகாட்டுதல், மாகாணங்களில் கல்வித் துறை மற்றும் முக்கிய நகரங்களில் பல்கலைக்கழகங்களை நிறுவுதல் என்று இந்தியாவில் ஆங்கிலக் கல்விக்கான சீர்திருத்தங்களை முன்மொழிந்து கட்டமைக்கப்பட்ட கல்வி முறையை நிறுவ உட்ஸ் ஆணையம் (Wood's Despatch) வழிவகுத்தது.
// ஹண்டர் ஆணையம் (1882) //
பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், உட்ஸ் ஆணையத்தின் பரிந்துரைகளில் நடைமுறைப்படுத்தப்படாத பிரிவுகளை ஆராய்ந்து, அடிப்படைக் கல்வி, தொழிற்கல்வி மற்றும் தேர்வு முறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய கல்வி ஆணையம் என்ற ஹண்டர் ஆணையம் (Hunter Commission) முன்மொழிந்தது.
// ராலே ஆணையம் (1902) //
பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், செனட் மற்றும் சிண்டிகேட் அமைப்பை அறிமுகப்படுத்துதல் உட்பட உயர்கல்வி சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆணையம் என்ற ராலே ஆணையத்தின் (Raleigh Commission) அறிக்கை, இந்திய பல்கலைக்கழக சட்டத்தை (1904) இயற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தது.
// ராயல் ஆணையம் (1912) //
பிரிட்டிஷ் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், மோர்லி-மிண்டோ (1909) சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாண பொது சேவைகளில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் பிரதிநிதித்துவத்தை ராயல் ஆணையம் (Royal Commission) பகுப்பாய்வு செய்தது.
// சாட்லர் ஆணையம் (1917) //
பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், கல்வித்துறையில் அரசின் தலையீட்டைத் தடுத்தல், கௌரவத் கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்தல், பல்கலைக்கழகங்களுக்கு இடையே வாரியங்களை நிறுவுதல் மற்றும் 10+2+3 போன்ற தரப்படுத்தப்பட்ட கல்வி முறை என்று பல்வேறு பரிந்துரைகளை கல்கத்தா பல்கலைக்கழக ஆணையம் என்ற சாட்லர் ஆணையம் (Sadler Commission) முன்மொழிந்தது.
// கோமான் ஆணையம் (1918) //
சென்னை மாகாணத்தில் மேற்கத்திய மருத்துவ முறைகளில் பயனுள்ள உள்நாட்டு மருந்துகளை ஒருங்கிணைக்கவும் அதே நேரத்தில் அறிவியலற்ற உள்நாட்டு மருத்துவ முறைகளை ஓரங்கட்டவும் கோமான் ஆணையத்தின் (Koman Commission) அறிக்கை பயன்பட்டது. இந்த அறிக்கையுடன் உடன்படாத உள்நாட்டு வைத்தியர்களின் அழுத்தம் காரணமாக, பிரிட்டிஷ் இந்தியா அரசு உள்நாட்டு மருத்துவம் குறித்து ஆராய நீதிக்கட்சியைச் சேர்ந்த முகமது உஸ்மான் தலைமையில் ஒரு புதிய ஆணையத்தை உருவாக்க முன்மொழிந்தது.
// உஸ்மான் ஆணையம் (1921) //
சென்னை மாகாணத்தில் உள்நாட்டு மருந்துகளை ஆராயவும், உள்நாட்டு மருத்துவக் கல்விக்கு மாநில அரசின் ஆதரவை அதிகரிக்கவும் உஸ்மான் ஆணையம் (Usman Committee) பரிந்துரைத்தது. மேலும், ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்திய மருத்துவப் பள்ளி (School of Indian Medicine) 1925 இல் சென்னை மாகாணத்தில் நிறுவப்பட்டது.
இந்நிலையில், பார்ப்பனர்களுக்கு ஆதரவாக மருத்துவக் கல்வியில் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பயிற்று மொழியாக்கவும், ஆயுர்வேத கல்வியை பரப்பவும் ஆணையத்தின் செயலாளரும், ஆயுர்வேத மருத்துவத்தின் ஆதரவாளரும், தியோசாபிகல் சொசைட்டி உறுப்பினருமான சீனிவாசமூர்த்தி முன்மொழிந்தார். இந்த முன்மொழிவை ஆணையத்தின் தலைவரும், நீதிக்கட்சி உறுப்பினருமான முகமது உஸ்மான் எதிர்த்தார். கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கியது ஆணையத்தின் அறிக்கை. ஆனால், பார்ப்பனர் அல்லாதவர்களுக்கும் அதிகாரம் அளிப்பதையும், சமஸ்கிருதம் அல்லாத வட்டார மொழி மற்றும் ஆங்கில மொழியை வளர்க்கவும், சம வாய்ப்புகளை உறுதி செய்யவும், மருத்துவக் கல்வியில் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பயிற்று மொழியாக்க நீதிக்கட்சி அரசு மறுத்தது.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் “எனது நண்பர்கள்” நூலில் கூறியுள்ள “மருத்துவப் பட்டத்திற்கு விண்ணப்பம் போடுகிறவர்கள் சமஸ்கிருதம் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கொடுமையை அழித்து ஒழித்தது” என்பது மருத்துவ நுழைவுத்தேர்வைப் பற்றியதா என்பதைப் பொறுத்தவரை, அத்தகைய கூற்றை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அலோபதி மருத்துவராகத் தயாராகி வருபவர்களுக்கு சமஸ்கிருதத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான ஆணை இருந்திருக்குமா என்ற கேள்வி எழுந்தால், உஸ்மான் ஆணையத்தின் ஒரு பகுதியான சீனிவாசமூர்த்தி அறிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பது தான் பதில். ஆனால் மாகாண அரசாங்கம் சமஸ்கிருதத்தை அலோபதி பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை ஒதுக்கி வைத்தது. எனவே, இதன் அடிப்படையில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் வரிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
// பணியாளர் தேர்வு ஆணையம் (1924) //
ரோஸ்டர் முறையைப் (Roster System) பயன்படுத்தி அரசு ஊழியர்களை நியமிக்க பணியாளர் தேர்வு ஆணையத்தை (Staff Selection Board) நீதிக்கட்சி அரசு நிறுவியது. இந்த அமைப்பு குறிப்பிட்ட சதவீதங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பணிநிலைகளுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு பிரிவுகளுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தது. பணியாளர் தேர்வு ஆணையம் பின்னர் இன்றைய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமாக (Tamil Nadu Public Service Commission) மாற்றப்பட்டது.
// ஹார்டாக் ஆணையம் (1929) //
பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அடிப்படைக் கல்வியில் தேக்க நிலையைத் தடுக்கவும், கல்வி முறையை ஒருங்கிணைக்கவும், தொழில்நுட்பக் கல்வி மற்றும் வணிகவியல் கல்வியை மேம்படுத்தவும் ஹார்டாக் ஆணையம் (Hartog Commission) முன்மொழிந்தது.
// சார்ஜென்ட் ஆணையம் (1944) //
பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 3 முதல் 6 வயது குழந்தைகளுக்கு முன்-தொடக்கக் கல்வி, 6 முதல் 11 வயது (இளையோர் அடிப்படை) மற்றும் 11 முதல் 14 வயது (மூத்தோர் அடிப்படை) குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்வியை வலியுறுத்தியது. சார்ஜென்ட் ஆணையம் (Sargent Commission) 1984 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் எழுத்தறிவு முழுமையாக அடையப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
// ராதாகிருஷ்ணன் ஆணையம் (1948) //
சுதந்திர இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், கிராமப்புறக் கல்லூரிகளை நிறுவுதல், கல்வியில் தேசிய சேவையை தன்னார்வத் திட்டமாக ஊக்குவித்தல் மற்றும் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிப்படிப்பை கட்டாயமாக்குதல் என்று பல்வேறு பரிந்துரைகளை ராதாகிருஷ்ணன் ஆணையம் (Radhakrishnan Commission) என்ற பல்கலைக்கழக கல்வி ஆணையம் முன்மொழிந்தது.
// இடைநிலைக் கல்வி ஆணையம் (1952) //
சுதந்திர இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், கல்வி நிலைகள், கல்விப் பாடங்கள், பெண்களின் கல்வி மற்றும் பிராந்திய மொழிகளின் பயன்பாடு என்று பல்வேறு பரிந்துரைகளை இடைநிலைக் கல்வி ஆணையம் (Secondary Education Commission) முன்மொழிந்தது. இறுதி அறிக்கையானது தரப்படுத்தப்பட்ட உயர்நிலைக் கல்வி முறை மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவை உருவாக்க வழிவகுத்தது.
// கோத்தாரி ஆணையம் (1964) //
சுதந்திர இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும், நோக்கில் கணிதம் மற்றும் அறிவியல் கல்விக்கு முக்கியத்துவம், 10+2+3 என்ற கல்வி கட்டமைப்பு, பல்வகைப்பட்ட படிப்புகள், சமத்துவத்தை பேணும் பொது பள்ளி அமைப்பு, ஆசிரியர்களின் நலன், ஊனமுற்றோர் கல்வி, தாராளமயமாக்கப்பட்ட கல்வி நிதி, இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழியை ஊக்குவிக்கும் மும்மொழிக் கொள்கை என்று பல்வேறு பரிந்துரைகளை கோத்தாரி ஆணையம் (Kothari Commission) முன்மொழிந்தது.
மிண்டோ-மோர்லி சீர்திருத்த ஆணையம் (1909)
"இந்தியக் கவுன்சில்கள் சட்டம், 1858" கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கட்டுப்பாட்டை மகுடத்திற்கு மாற்றியது. இது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்குக் களம் அமைத்தது. "இந்தியக் கவுன்சில்கள் சட்டம், 1861" நிர்வாகத்தை இலாகாக்களாக ஒழுங்குபடுத்தியது. செயல்திறனை மேம்படுத்தியது மற்றும் அதிகாரத்தைப் பரவலாக்கியது. "இந்தியக் கவுன்சில்கள் சட்டம், 1892" கவுன்சில் செயல்பாடுகளை மேம்படுத்தியது. சட்டமன்றக் கொள்கை விஷயங்களில் காலனித்துவக் கவுன்சில்களுக்கு அதிகாரம் அளித்தது.
1858, 1861 மற்றும் 1892 இன் இந்திய கவுன்சில்கள் சட்டங்களுக்கு மாற்றாக, 1909 இல் இராஜப்பிரதிநிதி (Viceroy) மிண்டோ பிரபு மற்றும் செயலாளர் (Secretary) ஜான் மோர்லி ஆகியோர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுகையில் இந்தியர்களின் ஈடுபாட்டின் வரையறுக்கப்பட்ட அதிகரிப்பை முன்மொழிந்தனர். அதுவே மிண்டோ-மோர்லி சீர்திருத்தங்கள் (Minto-Morley Reforms) எனப்பட்டது. இந்த சீர்திருத்தங்களில் "இந்தியர்களை நேரடியாக நியமிப்பதற்குப் பதிலாக, தேர்தல் கல்லூரி (Electoral College) மூலம் மறைமுகத் தேர்தலை அறிமுகப்படுத்துதல், கவுன்சில்களில் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துதல், முஸ்லிம்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கத் தனித் தொகுதிகளை நிறுவுதல் மற்றும் முஸ்லிம்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்குதல்" ஆகியவை அடங்கும். இந்த சீர்திருத்தங்களின் அடிப்படையில் “இந்தியக் கவுன்சில்கள் சட்டம், 1909” நிறைவேற்றப்பட்டது.
மான்டேக்-செல்ம்ஸ்போர்ட் சீர்திருத்த ஆணையம் (1919)
1919 இல் இராஜப்பிரதிநிதி (Viceroy) செம்ஸ்ஃபோர்ட் பிரபு மற்றும் செயலாளர் (Secretary) எட்வின் சாமுவேல் மாண்டேக் ஆகியோர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் பிரிட்டிஷ் இந்தியாவில் அரசியல் நிர்வாகத்தில் மாற்றங்களை முன்மொழிந்தனர். அதுவே மான்டேக்-செல்ம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் (Montagu-Chelmsford Reforms) எனப்பட்டது. இச்சீர்திருத்தங்களின் அடிப்படையில், சட்டமன்றங்களில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், மாகாண அளவில் சுயராஜ்யத்தை ஆதரிக்கவும், பிரிட்டிஷ் இந்தியாவில் இரட்டை ஆட்சி (Diarchy) முறையின் கீழ் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் “இந்திய அரசுச் சட்டம், 1919” நிறைவேற்றப்பட்டது.
இந்த சீர்திருத்தங்கள் முழுமையான சுயாட்சிக்கான இந்திய அபிலாஷைகளை விடக் குறைவாக இருந்தாலும், அவை அதிக நிர்வாகப் பங்கேற்புக்கான இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்களின் தொகுப்பாகும். சுருக்கமாக, மாண்டேக்-செல்ம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் அரசியலமைப்பு வளர்ச்சியின் படிப்படியான செயல்முறையின் தொடக்கத்தைக் குறித்தது.
ரௌலட் ஆணையம் (1919)
ஜெர்மன் மற்றும் ரஷ்ய அனுதாபிகள் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆதரிப்பதற்காக வங்காளம் மற்றும் பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவக்கூடும் என்ற தகவல்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் கடுமையான குற்றவியல் சட்டத்தை இயற்றத் திட்டமிட்டது. இதையெடுத்து, இந்தியாவில் அரசியல் பயங்கரவாதத்தை (Political Terrorism) விசாரிக்க பிரிட்டிஷ் உயர்நீதிமன்ற நீதிபதி சிட்னி ரௌலட் தலைமையில், ரௌலட் ஆணையம் (Rowlatt Committee) உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து சுதந்திரத்திற்காகப் போராடிய இந்தியர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட ரெளலட் சட்ட வரைவை (Rowlatt Act Draft) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.குமாரசாமி சாஸ்திரி எழுதினார். அதற்குக், குறியீடாகவே பெரியார் தனது உரைகளில் ரெளலட் சட்டத்தை “ரெளலட்-சாஸ்திரி” சட்டம் என குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.
ரௌலட் ஆணைய பரிந்துரைகளின் அடிப்படையில், பிரிட்டிஷ் அரசாங்கம் 1919 இல் ரௌலட் சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம் இந்தியர்களைப் பிணையம் இல்லாமல் கைது செய்யவும், விசாரணையின்றிச் சிறையில் அடைக்கவும், ஒன்று கூடுவதற்குத் தடை விதிக்கவும், குறிப்பிட்ட இடங்களில் கட்டாயமாக வசிக்கவும், மேல்முறையீட்டு உரிமைகளை மறுக்கவும் அனுமதித்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ரௌலட் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்த இந்தியா, சுதந்திரத்திற்குப் பிறகு ரௌலட் சட்டத்தின் மறு உருவாக்கமாக மிசா, தடா, பொடா போன்ற சட்டங்களை இயற்றியது வேதனையான உண்மை.
// ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919) //
1919 இல் பைஷாகி பண்டிகையின் போது, அமிர்தசரஸ் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒன்றுகூடி, அகிம்சை வழியில் ரெளலட் சட்டத்திற்கு எதிராகவும், சுதந்திர ஆதரவாளர்களான சைபுதீன் கிட்ச்லேவ் மற்றும் சத்யபால் கைது செய்யப்பட்டதற்கும் எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டக் கூட்டத்தைக் கலைக்க, பிரிட்டிஷ் இராணுவத் தளபதி ரெஜினால்ட் டயர் உத்தரவின் பேரில் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் சுமார் 10 நிமிடங்கள் துப்பாக்கி சூடு நடத்தி நூற்றுக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொன்றனர். ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று அழைக்கப்படும் இந்தப் படுகொலை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பிரதான நீரோட்டத்திற்கு வந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வு இந்தியாவின் சுதந்திர வேட்கையில் காந்தியின் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கின் தொடக்கத்தைக் குறித்தது.
// ஒத்துழையாமை இயக்கம் (1920) //
ரௌலட் சட்டத்திற்கு எதிராகவும் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்தும் ஆகஸ்ட் 1920 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் இந்திய சுதந்திரப் போராட்டதில் ஒரு எழுச்சியை உருவாக்கியது. இந்திய தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் சீர்திருத்தங்களுக்கான ஆதரவை திரும்பப் பெற்ற பிறகு தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தின் குறிக்கோள், பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் இந்தியர்கள் ஒத்துழைப்பதை நிறுத்துவதன் மூலம் இந்தியாவிற்கு சுயாட்சி வழங்க பிரிட்டிஷ் அரசாங்கத்தை வற்புறுத்துவதாகும்.
ஒரு கட்டத்தில், ஒத்துழையாமை இயக்கத்தினருக்கும், பிரிட்டிஷ் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சௌரி சௌரா என்ற நகரில் காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. கலவரத்தில் 23 காவல் துறையினரும், 3 ஒத்துழையாமை இயக்க ஆர்வலர்களும் கொல்லப்பட்டனர். அகிம்சைப் போராட்டம் வன்முறையாக மாறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காந்தி, வன்முறைப் போராட்டங்களுக்கு எதிராகவும், சௌரி சௌரா வன்முறைக்கு வருத்தம் தெரிவிக்கவும் ஐந்து நாள் உண்ணாவிரதம் இருந்தார். இறுதியாக, பிப்ரவரி 1922 இல் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். மேலும், பலதரப்பட்ட அழுத்தத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கம் மார்ச் 1922 இல் ரெளலட் சட்டத்தைத் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சைமன் ஆணையம் (1927)
மொன்டேகு-செல்ம்ஸ்போர்ட் அறிக்கை 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விரிவான கணக்கெடுப்பை நடத்த முன்மொழிந்தது. இதன் விளைவாக, “இந்திய அரசுச் சட்டம், 1919” சட்டத்தின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்வதற்கும் மேலும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் 1927 இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சைமன் ஆணையம் (Simon Commission) என்ற இந்திய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது. பல பிரிட்டிஷ் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆணையத்திற்கு சர் ஜான் சைமன் தலைமை தாங்கினார். எந்த இந்தியப் பிரதிநிதித்துவமும் இல்லாமல் பிரிட்டிஷ் உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த சைமன் ஆணையம் இந்தியத் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது.
1930 இல் இரட்டை ஆட்சி முறைக்கு பதிலாக மாகாணங்களுக்கு அதிக சுயாட்சியை வழங்க சைமன் ஆணையம் பரிந்துரைத்தது. இந்த அரசியல் ஏற்பாடு பிரிட்டிஷ் ஆளுநர்களிடம் அவசரகால அதிகாரங்களைத் தக்கவைத்து அதன் மூலம் மாகாண சுயாட்சியைக் கட்டுப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில், அதிக சுயாட்சிக்கான இந்திய அபிலாஷைகளை பூர்த்தி செய்யாமல் அரசியல் அமைதியின்மையை உருவாக்கிய சைமன் ஆணையத்தின் பரிந்துரைகள், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான கோரிக்கையை வலுப்படுத்தியது.
சைமன் ஆணையத்தின் இந்திய அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு எதிரான அமைதியான போராட்டத்தின் போது காவல்துறையின் தடியடியினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக லாலா லஜபதி ராய் காலமானார். லாலா லஜபதி ராயின் மரணம் நாடு முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கி சுதந்திரப் போராட்டத்தை விரிவுபடுத்தியது. 1927 இல் பகத்சிங் உள்ளிட்ட புரட்சியாளர்கள் லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு ஆங்கிலேயர்களை பழிவாங்கினார்கள். பின்னர் அவர்களும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
// வட்ட மேசை மாநாடு (1930 - 1932) //
ஆகஸ்ட் 1928 இல் மோதிலால் நேருவின் “நேரு அறிக்கை”, இந்தியாவிற்கு ஆதிக்க அந்தஸ்துடன் (Dominion Status) சுதந்திரம் அளிக்க பரிந்துரைத்தது. மேலும், மதத்தின் அடிப்படையில் தனித்தனி வாக்களிக்கும் குழுக்களைக் கொண்டிருக்காமல், அனைவரும் ஒன்றாக வாக்களிக்கும் வண்ணம், ஒரு ஒருங்கிணைந்த வாக்களிக்கும் முறையைப் பயன்படுத்தி, சட்டமன்றத்தில் சிறுபான்மை குழுக்களுக்கு இடங்களை ஒதுக்குமாறு முன்மொழியப்பட்டது.
மார்ச் 1929 இல் நேரு அறிக்கைக்கு மாற்றாக “சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 1/3 பங்கு பிரதிநிதித்துவம், மாகாணக் கட்டுப்பாட்டில் எஞ்சிய அதிகாரங்கள், தனி முஸ்லீம் வாக்காளர்கள், வங்காளம் மற்றும் பஞ்சாபில் விகிதாசார இட ஒதுக்கீடு” என்று முகமது அலி ஜின்னா 14 செய்திக்கூறுகளை முன்வைத்தார். ஜின்னாவின் முன்மொழிவுகளை இந்திய தேசியக் காங்கிரஸ் நிராகரித்ததால், இந்தியாவின் ஒருமைப்பாடு என்ற கருத்தில் இருந்து ஜின்னா மெல்ல மெல்ல விலக வழிவகுத்தது.
அக்டோபர் 1929 இல் இராஜப்பிரதிநிதி (Viceroy) இர்வின் பிரபு, இந்தியாவிற்கான ஆதிக்க அந்தஸ்து மற்றும் பிற அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்க வட்ட மேசை மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். நேருவின் அறிக்கை (1928), ஜின்னாவின் 14 செய்திக்கூறு (1929) மற்றும் சைமன் ஆணையத்தின் பரிந்துரைகள் (1930) ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியத் தலைவர்களின் பல்வேறு அரசியல் கோரிக்கைகளைக் கேட்க 1930, 1931 மற்றும் 1932 இல் லண்டனில் மூன்று வட்ட மேசை மாநாடுகள் நடத்தப்பட்டன. இறுதியில், சைமன் ஆணையம் மற்றும் வட்ட மேசை மாநாட்டின் பரிந்துரைகளின்படி, “இந்திய அரசுச் சட்டம், 1935” நிறைவேற்றப்பட்டது. இது இரட்டை ஆட்சி முறையை ஒழித்து 1937 இல் தேசிய அளவில் இல்லாமல் மாகாண அளவில் சுயாட்சியை வழங்கியது.
// இந்திய விடுதலைச் சட்டம் (1947) //
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் அரசின் போர் முயற்சிக்கு இந்தியத் தலைவர்களிடம் ஆதரவைப் பெற பிரிட்டிஷ் அரசாங்கம் 1942 இல் கிரிப்ஸ் தூதுக்குழுவை (Cripps Mission) இந்தியாவுக்கு அனுப்பியது. போருக்கான ஆதரவைக் கோரியதுடன், இந்தியாவிற்கு ஆதிக்க அந்தஸ்து வழங்குவது குறித்தும் தூதுக்குழு விவாதித்தது. ஆனால், இந்தியத் தலைவர்களின் பல கோரிக்கைகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் முறையாகப. பதிலளிக்காததால், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலம் ஆங்கிலேயர்களை உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேறுமாறு காந்தி கோரினார். இதற்கு மாறாக, ஜின்னாவின் முஸ்லீம் லீக் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைக் கண்டித்து மாகாண அரசாங்க நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்றது.
சில ஆண்டுகளுக்கு பிறகு, 1945 பொதுத் தேர்தலில் பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் சார்பில் வெற்றி பெற்று வின்ஸ்டன் சர்ச்சிலுக்குப் பிறகு கிளமென்ட் அட்லீ பிரிட்டனின் பிரதமரானார். சைமன் ஆணையத்தின் உறுப்பினராக இருந்த கிளெமென்ட் அட்லீ தலைமையிலான தொழிலாளர் அரசாங்கம், பிரிட்டிஷ் பேரரசு எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினையாக இந்திய சுதந்திரத்தை விரைவாகக் கண்டறிந்து அதைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. கிளெமென்ட் அட்லியின் ஆலோசனையின் பேரில், இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவதற்கான செயல்முறையை விவாதிக்க 1946 இல் அமைச்சரவை தூதுக்குழு (Cabinet Mission) இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸும், முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக்கும் பல ஆண்டுகளாக சுதந்திரத்திற்காகப் பிரச்சாரம் செய்து வந்தாலும், அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதில் உடன்படவில்லை. ஏனெனில், இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்றுபட்ட மதச்சார்பற்ற இந்திய அரசாங்கத்தையும், முஸ்லீம் லீக் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளுக்கு தனி இஸ்லாமிய அரசாங்கத்தையும் வாதிட்டது.
இறுதியாக, "இந்திய சுதந்திரச் சட்டம், 1947" பிரிட்டிஷ் இந்தியாவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு புதிய சுதந்திர நாடுகளாகப் பிரித்தது. இந்த சட்டம் 15 ஜூன் 1947 அன்று நிறைவேற்றப்பட்டு 18 ஜூலை 1947 அன்று பிரிட்டிஷ் பேரரசின் ஒப்புதலைப் பெற்றது. மேற்கு மற்றும் கிழக்கு (இன்றைய பங்களாதேஷ்) பகுதிகளை உள்ளடக்கிய பாகிஸ்தானுக்கு 14 ஆகஸ்ட் 1947 அன்றும் இந்தியாவிற்கு 15 ஆகஸ்ட் 1947 அன்றும் பிரிட்டிஷ் பேரரசால் சுதந்திரம் வழங்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் (1950)
உலகின் மிகப்பெரிய மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக 15 ஆகஸ்ட் 1947 அன்று இந்திய ஒன்றிய அரசு உருவான பிறகு, 25 ஜனவரி 1950 அன்று அரசியலமைப்பின் 324 வது பிரிவின் கீழ் ஒரு நிரந்தர அரசியலமைப்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India) நிறுவப்பட்டது.
ஒன்றிய அளவிலும் மாநில அளவிலும் தேர்தல் செயல்முறைகளை நிர்வகிக்கும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அரசியலமைப்பாகும். சுருக்கமாக, மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டமன்றங்கள், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியவற்றுக்கான தேர்தல்களை நடத்துதல், கண்காணித்தல், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகியவற்றை இந்திய தேர்தல் ஆணையம் நிர்வகிக்கிறது.
இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் பரிணாம வளர்ச்சி இருந்த போதிலும், வாக்குச் சீட்டுகள் வாக்காளர்களுக்குத் தனிப்பட்ட சரிபார்ப்புக்காகக் கொடுக்கப்பட்டு, அவர்களால் ஒரு தனி வாக்குப்பெட்டியில் வைக்கப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து 100% சீட்டுகளை எண்ண வேண்டும் என்று காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்ததும், அதற்குத் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
காலேல்கர் ஆணையம் (1953)
காகா காலேல்கர் தலைமையில் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 29 ஜனவரி 1953 அன்று இந்திய அரசியலமைப்பின் 340 வது பிரிவின் கீழ் அமைக்கப்பட்டது. இது சாதிய படிநிலை, கல்வி நிலை மற்றும் அரசு பணியில் பிரதிநிதித்துவம் போன்ற அளவுகோல்களைப் பயன்படுத்தி சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டது.
2,399 பிற்படுத்தப்பட்ட சமூகங்களை வகைப்படுத்தி, ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், கல்வி மற்றும் பணிகளில் இட ஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை பரிந்துரை செய்து ஆணையம் தனது அறிக்கையை 30 மார்ச் 1955 அன்று சமர்ப்பித்தது. அறிக்கை மீதான விவாதங்கள் ஆறு ஆண்டுகளாக நீடித்த நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கண்டறிவதற்கான புறநிலை அளவுகோல்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை எனக் கூறி ஆணையத்தின் அறிக்கையை 1961 இல் ஒன்றிய அரசு நிராகரித்தது. அதே நேரத்தில், மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையங்களை அமைத்து தேவையான நடவடிக்கை எடுக்கலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. இதற்கிடையில், இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1979 இல் ஒன்றிய அரசால் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாநில மறுசீரமைப்பு ஆணையம் (1953)
ஜூன் 1948 இல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், இந்தியாவில் மொழியியல் அடிப்படையில் மாநிலங்களை உருவாக்குவதற்காக எஸ்.கே.தார் தலைமையில் தார் ஆணையத்தை அமைத்தார். டிசம்பர் 1948 இல் தார் ஆணையத்தின் பரிந்துரைகளை மதிப்பீடு செய்ய காங்கிரஸ் JVP குழுவை அமைத்தது. JVP என்பது ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் மற்றும் பட்டாபி சீதாராமையா ஆகிய மூன்று தலைவர்களின் முதலெழுத்துக்களில் இருந்து பெறப்பட்டது.
1953 இல் காங்கிரஸ் அரசு, மாநில எல்லைகளைப் பற்றி பரிந்துரைகள் செய்ய நீதிபதி பசல் அலி, பணிக்கர் மற்றும் குன்ஸ்ரு ஆகியோரின் தலைமையில் ஒரு மாநில மறுசீரமைப்பு ஆணையத்தை (State Reorganisation Commission) அமைத்தது. மொழியியல் அடிப்படையில் மாநில சீரமைப்பை மதிப்பீடு செய்ய, ஒவ்வொரு ஆணையமும் அதன் அறிக்கைகளை வெவ்வேறு காலங்களில் சமர்ப்பித்தது. பல பரிந்துரைகள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதியில் பல்வேறு ஆதரவு மற்றும் எதிர்ப்புகளுக்கு இடையில், 01 நவம்பர் 1956 அன்று மாநில மறுசீரமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது சட்டரீதியாக சொல்வதென்றால் எல்லைகள் வரையறுக்கப்பட்டு பல இந்திய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
கபூர் ஆணையம் (1964)
1964 இல் காந்தி படுகொலை வழக்கில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில் புனேவில் நடைபெற்ற கூட்டத்தில் “காந்தி கொல்லப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு காந்தியைக் கொல்லும் எண்ணத்தை நாதுராம் கோட்சே வெளிப்படுத்தியதாகவும், தொடக்கத்தில் எதிர்த்து அந்த்த் தகவலை புனே காங்கிரஸ் தலைவர் பாலுககா கனிட்கர் வாயிலாக கடிதம் மூலம் பம்பாய் முதல்வர் பி.ஜி.கேருக்கு தெரிவித்ததாகவும்” பாலகங்காதர திலகரின் பேரன் கஜனன் விஸ்வநாத் கேட்கர் பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக, கஜனன் விஸ்வநாத் கேட்கர் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, காந்தியின் படுகொலைச் சதியை விசாரிக்க கோபால் சுவரூப் பதக் தலைமையில் 1965 இல் பதக் ஆணையம் அமைக்கப்பட்டது. பதக் ஒன்றிய அமைச்சராகவும் பின்னர் மைசூர் ஆளுநராகவும் பணியாற்ற வேண்டியிருந்ததால் பதக் ஆணையத்துக்கு பதிலாக கபூர் ஆணையம் (Kapur Commission) 1966 இல் அமைக்கப்பட்டது.
காந்தி படுகொலை வழக்கில் முன்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத சாவர்க்கரின் மெய்க்காப்பாளர் ராமச்சந்திர காசர் மற்றும் செயலாளர் கஜனன் விஷ்ணு டாம்லே ஆகியோரின் சாட்சியங்களைக் கபூர் ஆணையம் ஆய்வு செய்தது. காந்தியின் படுகொலைக்கு முன்னும் பின்னும் கோட்சே கும்பல் சாவர்க்கரைப் பலமுறை சந்தித்ததை ராமச்சந்திர காசர் மற்றும் கஜனன் விஷ்ணு டாம்லே இருவரும் உறுதிப்படுத்தினர்.
“காந்தி படுகொலையில் சாவர்க்கரின் உடந்தையை நிரூபிக்கும் இரண்டு சாட்சியங்கள் (Corroborative Evidence) விசாரிக்கப்படவில்லை. காந்தி படுகொலை வழக்கின் முதற்கட்ட நீதிமன்ற விசாரணை போது இருவரையும் முறையாக விசாரித்திருந்தால் காந்தி படுகொலையில் சாவர்க்கரின் பங்கு உறுதி செய்யப்பட்டு அவருக்கு குறைந்தபட்ச ஆயுள் தண்டனை கிடைத்திருக்கும்” என்று கபூர் ஆணையம் தெரிவித்த கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. சாவர்க்கர் 1966 இல் இறந்தார் என்பதையும் கபூர் ஆணையத்தின் இறுதி அறிக்கை 1969 இல் வெளியிடப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இளையபெருமாள் ஆணையம் (1965)
1965 இல் இளையபெருமாள் தலைமையில் உருவாக்கப்பட்ட அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு ஆணையம் (இளையபெருமாள் ஆணையம் - Elayaperumal Committee) இந்தியாவில் தீண்டாமை பிரச்சினையை ஆய்வு செய்வதற்கும், தீண்டாமை ஒழிப்புச் சட்டம், 1955 இன் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் பிரதமர் இந்திரா காந்தி வழிகாட்டலின் கீழ் அமைக்கப்பட்டது. இளையபெருமாள் ஆணையத்தினர் இந்தியா முழுவதும் பயணம் செய்து, தீண்டாமை தொடர்பான சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர். அத்துடன், தலித்துகளுக்கு தரமான கல்வி, பொருளாதார மேம்பாடு, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் பொது வழிபாட்டுத் தலங்களில் தலித்துகள் செல்வதற்கான உரிமை குறித்தும் ஆய்வு செய்தனர். 1969 இல் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையில், நாடெங்கும் தொடரும் தீண்டாமைப் பழக்கவழக்கங்களை முன்வைத்து, இந்த பிரச்சினைகளைத் தீர்க்க சமூக சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தனர்.
இளையபெருமாள் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை மேற்கொண்டன. உதாரணமாக, 1989 இல் தலித்துகளை பாகுபாடு மற்றும் வன்முறையில் இருந்து பாதுகாப்பதை உறுதி செய்யும் விதமாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (SC, ST [Prevention of Atrocities] Act) அறிமுகப்படுத்தப்பட்டது, இது 1995 முதல் நடைமுறைக்கு வந்தது. கூடுதலாக, சமூக சீர்திருத்தங்களுக்கான இளையபெருமாள் ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, தமிழ்நாடு அரசு 1971 இல் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை திருத்தி, கோவில்களில் பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்தது. மொத்தமாக, இந்தியாவில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்க்கும் சட்டம் மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்கான அடித்தளமாக இளையபெருமாள் ஆணையத்தின் பணி அமைந்தது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சோசலிஸ்ட் கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து, டிசம்பர் 1978 அன்று, ஜனதா கட்சியின் பிரதமர் மொரார்ஜி தேசாய், இந்தியாவில் சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கண்டறிந்து, சாதி ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறையாக இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.மண்டல் தலைமையில் மண்டல் ஆணையத்தை (Mandal Commission) அமைத்தார். மண்டல் ஆணையம் இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்றும் அறியப்பட்டது.
ஜனதா ஆட்சியில் மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டாலும், டிசம்பர் 1980 அன்று "சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரை வரையறுப்பதற்கான அளவுகோல்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்கு வெவ்வேறு காலக்கெடுவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான அரசு வேலை மற்றும் கல்வி இட ஒதுக்கீடு" ஆகியவற்றை பரிந்துரைத்து மண்டல் ஆணையம் அதன் அறிக்கையை இந்திரா காந்தி ஆட்சியில் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்கள் தொகையில் 52 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை உள்ளடக்கியதாக ஆணையம் கண்டறிந்தது. இந்த பின்னணியில், மண்டல் ஆணையம், ஒன்றிய அரசு பணிகளில் 52 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று முதலில் வாதிட்டது. இருப்பினும், அரசியலமைப்பின் 15(4) மற்றும் 16(4) பிரிவுகளின் கீழ் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலை கருத்தில் கொண்டு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சாதிகளுக்கு முன்பு இருந்த 22.5 சதவீத இடஒதுக்கீட்டுடன் கூடுதலாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது.
// வி.பி.சிங் ஆட்சி கவிழ்ப்பு //
1989 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு ஏற்றுக்கொண்டது. அதையொட்டி, 07 ஆகஸ்ட் 1990 அன்று ஒன்றிய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்து, மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் தி.மு.க தலைவர் கலைஞரின் முயற்சியால் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் செயல்படுத்தப்பட்டது.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த முடிவு செய்த பிரதமர் வி.பி. சிங்கின் ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்து இந்துத்துவா தரப்பை கவர அத்வானி தலைமையிலான பா.ஜ.க ராம ரத யாத்திரை நடத்தியது. இதையெடுத்து, பீகாரில் முதல்வர் லாலு பிரசாத் அத்வானியை கைது செய்தார். இதனால், வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க வாபஸ் பெற்றது. மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட போது, ஆதரவாக 142 வாக்குகளும், எதிராக 346 வாக்குகளும் பெற்று வி.பி.சிங் அரசு பெரும்பான்மையை இழந்தது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி, "உங்களுக்கு எப்படிப்பட்ட நாடு வேண்டும்?" என்று வி.பி.சிங் கேட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
வைத்தியலிங்கம் ஆணையம் (1980)
1979 இல் ஜனதா கட்சிக்குள் ஏற்பட்ட கிளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில், ஜனசங்கப் பிரிவைச் சேர்ந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அத்வானி, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டு, பிரதமரின் குடும்பத்தினர் மற்றும் உள்துறை அமைச்சரின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பிரதமர் மொரார்ஜி தேசாய் நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜினாமா செய்வதாக மிரட்டினார். இதையொட்டி, விசாரணைக் ஆணையத்தை அமைக்க கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதைத் தவிர்க்க, 1979 இல் பிரதமர் மொரார்ஜி தேசாய் தாமாக முன்வந்து தனது குடும்பத்தினர் மற்றும் உள்துறை அமைச்சர் சரண் சிங் குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தார்.
ஆணையத்திற்கு தலைமை தாங்க மொரார்ஜி தேசாய் முதலில் நீதிபதி சந்திரசூட்டை அணுகினார். ஆனால், சந்திரசூட் மறுத்ததால் வைத்தியலிங்கம் நியமிக்கப்பட்டார். வைத்தியலிங்கம், பிரதமர் மொரார்ஜி தேசாய் மகன் காந்திலால் தேசாய், மருமகள் பத்மா தேசாய் மற்றும் உள்துறை அமைச்சர் சரண் சிங் மனைவி காயத்ரி தேவி மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை தயாரித்தார்.
பிரதமர் மொரார்ஜி தேசாய் மகன் காந்திலால் தேசாய், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Taxes - CBDT) உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.வி.குருவில்லாவை நீக்கியதாகவும், இழை நூல் இறக்குமதியில் அரசாங்கக் கொள்கையை தனது நெருங்கிய நண்பரான கபாடியா குழுமத்திற்கு ஆதரவாகக் கையாண்டதாகவும், கணிசமான வரி பாக்கிகள் இருந்த போதிலும் தர்ம தேஜா நாட்டை விட்டு வெளியேற உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. காந்திலால் தேசாய் மனைவியும், பிரதமர் மொரார்ஜி தேசாய் மருமகளுமான பத்மா தேசாய், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, வரி மேல்முறையீடுகளில் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றதாகவும், மேல்முறையீடுகளைத் தொடர வேண்டாமென்று வரித்துறை ஆணையரைத் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
உள்துறை அமைச்சர் சரண் சிங் மனைவி காயத்ரி தேவி, தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, சௌக்ரா சம்பவம் தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளில் தலையிட்டதாகவும், சுரேந்திர பிரதாப் சிங் என்ற காவல்துறை அதிகாரியை இடமாற்றத்தைத் தடுத்ததாகவும், இளைஞர்களிடம் வேலை வாங்கி தருவதாக பணம் கேட்டு ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
1979 இல் ஜனதா அரசின் ஆலோசனையின் பேரில் வைத்தியலிங்கம் ஆணையம் அமைக்கப்பட்டாலும், 1980 இல் புதிதாக அமைக்கப்பட்ட இந்திரா காந்தி அரசிடம் ஆணையத்தின் இறுதி அறிக்கையை வைத்தியலிங்கம் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது. ஆணையத்தின் அறிக்கைகள் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. ஜனதா கட்சி, இந்த அறிக்கைகள் காங்கிரஸால் எழுதப்பட்டவை என்றும் இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றும் கூறியது. எவ்வாறாயினும், கிடைக்கப்பெற்ற பதிவுகளின்படி, இறுதி அறிக்கை முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு உறுப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சர்க்காரியா ஆணையம் (1983)
1983 இல் ஒன்றிய அரசு “கூட்டாட்சி முறையை மேம்படுத்தவும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள அதிகார சமநிலையை ஆய்வு செய்யவும், இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் மாற்றங்களை பரிந்துரைக்கவும்” சர்க்காரியா ஆணையத்தை (Sarkaria Commission) அமைத்தது. குறிப்பாக சட்டமன்றத்தின் அதிகாரங்கள், ஆளுநர்களின் அதிகாரங்கள் மற்றும் 356 வது சட்டப்பிரிவின் பயன்பாடு குறித்து பல்வேறு மாநில அரசுகள் முன்வைத்த வாதங்கள் ஆராயப்பட்டன. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அதிகார பகிர்வு குறித்து சர்க்காரியா ஆணையம் தனது அறிக்கையை 1988 இல் சமர்ப்பித்தாலும் சர்க்காரியா ஆணையத்தின் பெரும்பாலான பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தக்கர் ஆணையம் (1984)
பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட இருபது நாட்களுக்கு பிறகு, படுகொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகளை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி.தக்கர் தலைமையில் தக்கர் ஆணையம் (Thakkar Commission) அமைக்கப்பட்டது. இதனுடன், இந்திரா காந்தி படுகொலையின் சதி கோணத்தை விசாரிக்க ஆனந்த் ராம் IPS தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனந்த் ராம் ஆணையம் (Anand Ram Commission) தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவே இல்லை.
பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்பு குழுவில் இருந்து நீக்கப்பட்ட பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோரை மீண்டும் பணியில் சேர்த்ததாகவும், 31 அக்டோபர் 1984 இல் காலை பீட்டர் உஸ்டினோவ் உடனான இந்திரா காந்தியின் தொலைக்காட்சி நேர்காணலின் நேரத்தை கவனக்குறைவாக கையாண்டதன் மூலம் படுகொலையை எளிதாக்கியதாகவும் ஆர்.கே.தவான் மீது குற்றம் சாட்டப்பட்டது. “குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்க கணிசமான காரணங்கள் உள்ளன என்ற முடிவில் இருந்து தவான் தப்ப முடியாது” என்று தக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்திரா காந்தியின் தொலைக்காட்சி நேர்காணல் காலை 8:30 மணிக்கு திட்டமிடப்பட்ட பிறகு, அது பிரதமரின் நாட்குறிப்பில் 8:45 மணி ஆக மாற்றப்பட்டு, அச்சிடப்பட்ட அட்டவணையில் காலை 9 மணி ஆக பட்டியலிடப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தியின் அலுவலகத்தில் இருந்து வந்த மர்மமான தொலைபேசி அழைப்பு பீட்டர் உஸ்டினோவை நேர்காணலுக்கு காலை 8:30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு வருமாறு கூறியது. பீட்டர் உஸ்டினோவும் மர்மமான தொலைபேசி அழைப்பை உறுதிப்படுத்தினார். ஆணையத்தின் விசாரணைப்படி, நேரத்தை மாற்றி பீட்டர் உஸ்டினோவை அழைத்த மர்ம நபர் குறித்து கண்டறியப்படவில்லை.
ஐந்து தொகுதிகளை கொண்ட தக்கர் அறிக்கையின் இரண்டு தொகுதிகள் மட்டுமே நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டன. பிரதமரின் பாதுகாப்பை கையாளும் பாதுகாப்பு குழு மற்றும் பிரதமரின் உடல்நிலையை கையாளும் மருத்துவக் குழு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அறிக்கை முன்வைத்தது. மேலும், வெளிநாட்டு தொடர்புகளை ஆணையம் நிராகரிக்கவில்லை. இந்திரா காந்தியின் சிறப்பு உதவியாளர் ஆர்.கே.தவான், பாதுகாப்பு ஆலோசகர் ராம்நாத் காவ், டெல்லி காவல் ஆணையர் டாண்டன், உளவுத்துறை இணை இயக்குனர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கடமை தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
வர்மா ஆணையம் (மே 1991)
குறிப்பு = ராஜீவ் காந்தி படுகொலையின் போது, தமிழ்நாடு குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தது.
ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களை விசாரிக்க வர்மா ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பேரில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள் குறித்து வர்மா ஆணையம் (Verma Commission) விசாரித்தது.
வர்மா ஆணையம் உளவுத்துறை அமைப்புகளின் தவறுகளை கண்டறிந்தது. பிரதமர் வி.பி.சிங்கின் தேசிய முன்னணி அரசு, ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்பு குழுவின் (Special Protection Group - SPG) பாதுகாப்பை திரும்ப பெற்றதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் பிரச்சார கூட்டத்தில், ராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்யவில்லை என்றும், பொறுப்பற்ற முறையில் கட்சியினர் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், குற்றம் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
மனித வெடிகுண்டு தனுவை ராஜீவ் காந்திக்கு அருகில் செல்லவிடாமல் காவலர் தடுக்க முயன்றார் என்ற காவல்துறையின் வாதத்தை வர்மா நிராகரித்தார். பாதுகாவலர்கள் பெண்களை அரிதாகவே சோதனை செய்ததாகவும், தணு மாலையுடன் நடந்து சென்று ராஜீவ் காந்தியை தடையின்றி சென்றடைந்ததையும் புகைப்படங்கள் காட்டுவதாகவும், வெடிகுண்டு வெடித்தவுடன் மைதானத்தில் இருந்த மொத்த கூட்டமும் சிதறியதாகவும் வர்மா கூறினார். மேலும், ராஜீவ் காந்தியை காண துடித்த தொண்டர்களின் கூட்டத்தை அடக்க, தணு உட்பட தொண்டர்களை 30 அடி தூரத்தில் தள்ளியே நிற்க வைத்திருந்தால், வெடிகுண்டு வெடித்திருந்தாலும் ராஜீவ் காந்தி தப்பியிருக்கலாம் என்று வர்மா கூறினார். இதற்கிடையில், வர்மா ஆணையத்தின் அறிக்கை அனைவரையும் குற்றம் சாட்டியதால் பரந்த ஆதரவை பெறவில்லை.
ஜெயின் ஆணையம் (ஆகஸ்ட் 1991)
ராஜீவ் காந்தி படுகொலை ஏற்படுத்திய அரசியல் தாக்கங்கள், 1981 முதல் 1991 வரையிலான ராஜீவ் காந்தியின் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் சதியில் ஒரு நபர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அல்லது வெளிநாட்டு உளவு நிறுவனம் ஈடுபட்டதா என்பதை விசாரிக்க ஜெயின் கமிஷன் (Jain Commission) அமைக்கப்பட்டது.
சீக்கிய விடுதலை அமைப்பு, காஷ்மீர் விடுதலை அமைப்பு, அசாம் விடுதலை அமைப்பு, ஈழ விடுதலை அமைப்பு, நேபாளம் மன்னர் வகையறா உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து ஒருங்கிணைந்த அச்சுறுத்தல்களை ராஜீவ் காந்தி எதிர்கொண்டதாக ஆணையத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியது. மேலும், படுகொலைக்கு மதகுரு சந்திரசாமி நிதியுதவி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. ஜெயின் ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, அதன் பரிந்துரைகள் முறையாக ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
// சீக்கிய விடுதலை அமைப்பு //
ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவின் தம்தாமி தக்சல் (Damdami Taksal) அமைப்பு, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற புதிய நாட்டை உருவாக்க போராடியது. இதையொட்டி, காலிஸ்தான் இயக்கத்தை ஒடுக்க இந்திரா காந்தி பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டார், இது சீக்கிய கோவில் வளாகத்தில் ப்ளூஸ்டார் நடவடிக்கைக்கு (Operation Bluestar) வழிவகுத்தது. இது உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, இந்தியா முழுவதும் சீக்கியர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் கலவரமாக மாறின.
கலவரம் குறைந்த பின், "ஒரு பெரிய மரம் விழுந்தால் பூமி குலுங்கும்" என்ற ராஜீவ் காந்தியின் கருத்து சீக்கியர்கள் மத்தியில் கோபத்தை உருவாக்கியது. ராஜீவ் காந்தியின் படுகொலையில் சீக்கிய போராளிகளின் பங்கு உள்ளதா என்ற கேள்வி இன்னும் தீர்க்கப்படவில்லை.
// காஷ்மீர் விடுதலை அமைப்பு //
காஷ்மீர் மீதான உரிமையை கோரும் பிரச்சினை முதன்மையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ளதாகும். அதே நேரத்தில், சீனா மூன்றாம் தரப்பு பாத்திரமாக உள்ளது. 1947ல் இந்தியாவின் பிரிவினைக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரின் முழு உரிமையை கோர தொடங்கின. பல்வேறு கட்ட ஆயுத மோதலுக்கு பிறகு, காஷ்மீர் பிராந்தியத்தின் நிலப்பரப்பில் சுமார் 55% இந்தியா கட்டுப்பாட்டில், 30% பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் மற்றும் 15% சீன கட்டுப்பாட்டில் உள்ளது.
"போராட்டம், வாக்கெடுப்பு, மதப் பிரச்சாரம் மற்றும் மத்தியஸ்தம்" போன்ற பல்வேறு வழிகளில், பல காஷ்மீர் விடுதலை அமைப்புகள் சுதந்திர காஷ்மீர் பெறுவதற்காக குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், ராஜீவ் காந்தியின் படுகொலையில் காஷ்மீர் போராளிகளின் பங்கு இருந்ததா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
// அசாம் விடுதலை அமைப்பு //
அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front of Asom - ULFA) அசாமின் பழங்குடியினருக்கு தனி மாநிலம் கோரி ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டது. இந்நிலையில், அசாம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர 1985 இல் அசாம் ஒப்பந்தம் (Assam Accord) கையெழுத்தானது. இது பழங்குடி அசாமிய மக்களின் கலாச்சார, சமூக மற்றும் அரசியல் உரிமைகளை காக்கவும், 1971 க்குப் பிறகு வந்த ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை அடையாளம் கண்டு நாடு கடத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. அத்தியாவசிய பிரச்சினைகளை போதுமான அளவில் கையாளத் தவறியதாக ULFA ஒப்பந்தத்தை நிராகரித்தது. இதன் விளைவாக, சுதந்திர அசாமின் ஆயுதப் போராட்டம் நீடித்தது.
இதற்கிடையில், ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு மூல காரணமான ஒற்றைக்கண் சிவராசனின் நாட்குறிப்பில் (Diary) ULFA அமைப்பு பற்றிய குறிப்புகள் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் ராஜீவ் காந்தியின் படுகொலையில் அசாம் போராளிகளின் பங்கு குறித்து தீர விசாரிக்கப்படவில்லை.
// ஈழ விடுதலை அமைப்பு //
இந்திய ஒன்றிய அரசும் இலங்கை அரசும் இந்திய அமைதி காக்கும் படை (Indian Peace Keeping Force - IPKF) ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜூலை 1987 அன்று இந்திய அரசின் விருந்தினராக டெல்லியில் உள்ள அசோகா விடுதியில் அறை எண் 518 இல் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்தார். இச்சந்திப்பில் ஈழ அரசியல் நடவடிக்கை மற்றும் இந்திய அமைதி காக்கும் படை ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இலங்கையில் தமிழ் மாகாணங்களின் ஆட்சியை வலுப்படுத்தவும், ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கவும் உறுதிமொழி கூறிய ஒன்றிய அரசின் கோரிக்கைக்கு ஈடாக, இந்திய அமைதி காக்கும் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க விடுதலைப் புலிகள் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டனர்.
எவ்வாறாயினும், நாளடைவில் ஈழத்தில் நடைபெற்ற சம்பவங்களை தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இந்திய அமைதி காக்கும் படையில் இருந்து 'அமைதி' கைவிடப்பட்டதாக குற்றம் சாட்டி, விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிராக திரும்பினர். இந்த பின்னணியில், ராஜீவ் காந்தி படுகொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய சிறப்பு புலனாய்வு குழு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு = விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் (குறிப்பாக ஜனாதிபதி ரணசிங்கே பிரேமதாச) இணைந்து, இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையிலிருந்து வெளியேற்றவும், ஈழத்தின் பிற போராளிக் குழுக்களை ஒழிக்கவும் கூட்டணி அமைத்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த கூட்டணி விடுதலைப் புலிகள் வளர வழிவகுத்த நிலையில், பின்னர் அதே விடுதலைப் புலிகள் ஜனாதிபதி பிரேமதாசவை கொன்றது தனிக்கதை. PLOTE, EPRLF, மற்றும் TELO போன்ற அமைப்புகளின் முக்கிய தலைவர்களை கொன்று, எதிர்ப்பில்லாத தனிப்பெரும் அமைப்பாக விடுதலைப் புலிகள் உருவெடுத்தது.
// நேபாளம் மன்னர் வகையறா //
நேபாளத்தின் ஆட்சிமுறைக்கு எதிரான அமைதியின்மை நிலவிய சூழலில், சீனா நேபாளத்திற்கு விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் (Anti-aircraft Guns) வழங்கி, நேபாளத்துடன் நெருக்கமாகச் செயல்பட்டு வந்த நிலையில், போக்குவரத்து ஒப்பந்தங்கள் தொடர்பான சர்ச்சையை காரணமாகக் கொண்டு பிரதமர் ராஜீவ் காந்தி 1989 இல் நேபாளத்திற்கு முற்றுகை (Blockade) விதித்தார். இதிலிருந்து விடுபட, அரசியல் கட்சிகளின் பங்களிப்பு இல்லாத முடியாட்சியான (Absolute Monarchy) பஞ்சாயத்து முறையை கைவிட்டு, நேபாள மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியலமைப்பு முடியாட்சிக்கு (Constitutional Monarchy) மாறுமாறு நேபாளத்தை காங்கிரஸ் அரசு வலியுறுத்தியது. இவை அனைத்தும் 1990 இல் மக்கள் இயக்கப் போராட்டத்திற்கும், நேபாள கம்யூனிச எழுச்சிக்கும் வழிவகுத்தது, இது முழுமையான முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேபாள மன்னரை ஜனநாயக சீர்திருத்தங்களை ஏற்கும்படி அரசியலமைப்பு முடியாட்சியை நிறுவியது.
நேபாளத்தின் இந்து மன்னராட்சிக்கு எதிராக போராடிய கட்சிகளை ராஜீவ் காந்தி ஆதரித்ததாக நேபாள மன்னர் குடும்பம் கருதியது. இந்நிலையில், 10 கோடி ரூபாய்க்கு ராஜீவ் காந்தி கொலைக்கு ஏற்பாடு செய்யுமாறு நேபாள ஜெனரலுக்கு நேபாள ராணி அறிவுறுத்தியதாக ஜெயின் ஆணையம் குறிப்பிட்ட போதிலும், ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக நேபாள மன்னர் குடும்பத்திடம் உரிய விசாரணை நடைபெறவில்லை.
// ஐ.கே.குஜ்ரால் ஆட்சிக் கவிழ்ப்பு //
நவம்பர் 1997 அன்று, ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளுடன் தி.மு.க நட்புறவை பேணியதாக ஜெயின் ஆணையத்தின் அறிக்கை கசிந்ததை தொடர்ந்து, ஜனதா தளம் பிரதமர் ஐ.கே.குஜ்ரால், தி.மு.க அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அரசுக்கு அளித்து வரும் ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொள்ளும் என்று கூறியது. இதையெடுத்து, 1998 இல் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் தி.மு.க கட்சியில் இல்லை என்றும், தி.மு.கவை படுகொலையில் தொடர்புபடுத்துவது தவறு என்றும் வலுவான காரணம் இல்லாமல் தி.மு.க அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் கூறி ஐ.கே.குஜ்ரால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
// கோப்புகள் காணவில்லை //
ராஜீவ் காந்தி படுகொலை விசாரணையின் போது, "1987 இல் ராஜீவ் காந்தி ஆட்சியை கவிழ்க்க ஜைல் சிங் மற்றும் சந்திரசாமி முயற்சித்த பங்கு, சந்திரசாமி மற்றும் சுப்பிரமணியசாமிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் வெளிநாட்டு உளவு நிறுவனங்களில் இருந்து இடைமறித்த செய்திகள், வர்மா மற்றும் ஜெயின் ஆணையங்களின் குறிப்புகள் அடங்கிய கோப்பு எண் 1/12014/5/91-IAS/DIII, நவம்பர் 1989 முதல் ராஜீவ் காந்திக்கான பாதுகாப்பு குறித்த அதிகாரப்பூர்வ குறிப்புகள் அடங்கிய கோப்பு எண் 8-1-WR/JSS/90/Vol.III" உள்ளிட்ட முக்கியமான கோப்புகள் ஒன்றிய அரசின் அலுவலகத்தில் இருந்து காணாமல் போனது என்பது சர்ச்சையானது.
// சிறப்பு புலனாய்வு குழு விசாரணை //
வர்மா ஆணையம் மற்றும் ஜெயின் ஆணையம் தவிர, உள்நாடு மற்றும் வெளிநாடுகள் வரை சென்று விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, விடுதலைப் புலிகள் சார்பில் ஒற்றைக்கண் சிவராசன் தலைமையில் திட்டமிடப்பட்ட சதியால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற முடிவுக்கு வந்தது. இதற்கிடையில், ராஜீவ் காந்தி படுகொலையில் விடுதலைப் புலிகளின் பங்கு குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டாலும், பொதுவாக விடுதலைப் புலிகள் தங்களின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்பதாக ஒப்புக்கொள்ளும் நிலையில் இந்த படுகொலை நடவடிக்கையில் அவர்கள் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளனர்.
இதனிடையே, இப்படுகொலை தொடர்பாக பிரபாகரன், சந்திராசாமி, அட்னன் கஷோகி, சுப்ரமணிய சுவாமி, எம்.கே.நாராயணன், ஆர்.கே.ராகவன் போன்ற முக்கிய நபர்களிடம் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் விடுதலைப் புலிகளை தாண்டி விசாரணை கோணம் நகரவில்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அதிகாரிகளில் ஒருவரான கே.ரகோத்தமன் கூறியது கவனிக்கத்தக்கது. அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ள ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விசாரணை, விரிவான ஆய்வு மற்றும் அலசல்களுக்கு உட்பட்டதாக உள்ளது.
லிபரான் ஆணையம் (1992)
1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் லிபரான் ஆணையம் (Liberhan Commission) அமைக்கப்பட்டது. 2009 இல் ஆணையம் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், பல்வேறு பா.ஜ.க அரசியல் தலைவர்கள் மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் திட்டமிட்ட சதியின் விளைவாக பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டியது. மேலும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, அடல் பிஹாரி வாஜ்பாய், பால்தாக்கரே, சாத்வி ரிதம்பரா, கல்யாண் சிங், கல்ராஜ் மிஸ்ரா, வினய் கட்டியார், நிருத்ய கோபால் தாஸ், அசோக் சிங்கால், லால்ஜி தாண்டன் உட்பட 68 வலதுசாரி தலைவர்கள் பாபர் மசூதி இடிப்புக்கு வழிவகுத்த "மத மோதலை தூண்டிய குற்றவாளிகள்" என்று ஆணையம் கூறியது.
ஆணையத்தின் அறிக்கையின்படி செயல்பட காங்கிரஸ் திட்டமிட்டிருந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் புதிய வழக்கை பதிவு செய்ய முதன்மையான ஆதாரம் இல்லாததால், அது சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்பட்டது அல்ல என்று புலனாய்வு துறை கூறியதை அடுத்து அது கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையில், 2020 இல், பாபர் மசூதி இடிப்பு அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் நடத்தப்பட்டது என்றும் அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி மற்றும் 28 பேர் வன்முறையை தூண்டவில்லை என்றும் கூறி நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையெடுத்து, விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் விரிவானவை என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆணையத்தின் முடிவுகளுக்கு முற்றிலும் முரணானது என்றும் லிபரான் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் (1993)
டிசம்பர் 1992 முதல் ஜனவரி 1993 வரையிலான மும்பை கலவரம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் (Sri Krishna Commission) அமைக்கப்பட்டது. 1998 இல் ஆணையம் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், "முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல்களை நடத்த சிவசேனா உறுப்பினர்களுக்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே உத்தரவிட்டதே மும்பை கலவரத்தின் பெரும்பகுதிக்கு காரணமாகும். பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிவசேனா தலைவர்களும், காவல்துறை அதிகாரிகளும் முஸ்லிம்களுக்கு எதிராக மத வன்முறையை தூண்டிவிட்டதாலே பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை சிவசேனா கொண்டாடியது முஸ்லிம்களை எதிர்த்து போராடத் தூண்டியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணையம் சிவசேனா மீது பகிரங்க குற்றசாட்டுகளை முன் வைத்த போதும், அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த சிவசேனா, குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளை விசாரணையின்றி உயர் பதவிகளில் நியமித்தது மற்றும் சிவசேனா தலைவர்களை முழுமையாக விசாரிக்காமல் விடுவித்தது.
வோரா ஆணையம் (1993)
மார்ச் 1993 அன்று நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு இந்தியாவில் நிழல் உலகக் குற்றவாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பிரபலங்களுக்கிடையேயான தொடர்புகளை விசாரிக்க வோரா ஆணையம் ஜூலை 1993 அன்று ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டது. சுருக்கமாகச் சொல்வதானால், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க உதவும் உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண வோரா ஆணையம் (Vohra Commission) அமைக்கப்பட்டது.
அரசியல்வாதிகளின் ஆதரவுடனும், அரசு அதிகாரிகளின் பாதுகாப்புடனும், அரசு இயந்திரத்தை இருளில் மூழ்கடித்து, இணை ஆட்சி நடத்திய நிழல் உலகக் குற்றவாளிகள் குறித்து, ஆணையம் ஆராய்ந்தது. 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு முன்னும், பின்னும் D Company குற்றவாளிகளுக்கு உதவிய அரசியல்வாதிகள் மற்றும் பல ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. வோரா ஆணையத்தின் அறிக்கையில் சரத் பவார், அகமது படேல் போன்ற மகாராஷ்டிரா அரசியல்வாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், மகாராஷ்டிர அரசியல்வாதிகள், நிழல் உலகத் தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் போல செயல்பட்டு ஹவாலா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதாக விமர்சிக்கப்பட்டனர்.
வோரா ஆணையத்தின் அறிக்கை அக்டோபர் 1993 அன்று அரசுக்கு வழிகாட்டும் பரிந்துரைகளுடன் சமர்ப்பிக்கப்பட்டது. ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும், அதன் பரிந்துரைகள் குறிப்பிடத்தக்க அளவில் செயல்படுத்தப்படவில்லை. மேலும், அறிக்கையின் 13 பக்கங்கள் மட்டுமே வெளியாகி மீதமுள்ள 100 பக்க அறிக்கை வெளியிடப்படாமல் அதிகாரத்தின் தாழ்வாரத்தில் புதைந்து கிடக்கிறது. இந்நிலையில், வோரா ஆணையத்தின் மீதமுள்ள பக்கங்களின் விவரம் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஒன்றிய தகவல் ஆணையர் ஷைலேஷ் காந்தி தாக்கல் செய்த மனுவானது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டு, இறுதியில் அத்தகைய கோப்புகள் எதுவும் இல்லை என பதில் வந்தது குறிப்பிடத்தக்கது.
நானாவதி-மேத்தா ஆணையம் (2002)
2002 இல் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் மற்றும் குஜராத் கலவரம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி நானாவதி தலைமையில் நானாவதி-மேத்தா ஆணையம் (Nanavati-Mehta Commission) அமைக்கப்பட்டது. 2014 இல் ஆணையம் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், "இஸ்லாமியர்களால் முன்கூட்டியே திட்டமிட்ட சதியின் விளைவாக சபர்மதி ரயிலின் S6 பெட்டி தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது, அது விபத்து அல்ல என்றும், குஜராத்து பா.ஜ.க அரசில் முதல்வர் நரேந்திர மோடி உட்பட எவரும் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்குறிப்பு = குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடி நேரடியாக ஈடுபட்டதாக ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் 2011 இல் குற்றம் சாட்டினார். மேலும், நானாவதி-மேத்தா ஆணையம் முன்பு குறுக்கு விசாரணைக்கு உட்படுவதற்கு முன் வந்தாலும், ஆணையம் தன்னை அழைக்கவில்லை என்று கூறினார். இந்த குற்றச்சாட்டு அரசியலில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது மற்றும் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் சஞ்சீவ் பட் பல வழக்குகளை சந்திக்க வழிவகுத்தது. உதாரணமாக, அனுமதியின்றி அதிக விடுப்புகளை எடுத்ததாகக் கூறி 2015 இல் வேலையில் இருந்து நீக்கப்பட்டார், போலீஸ் காவலில் இருந்தவர் இறந்த வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றம் 2019 இல் ஆயுள் தண்டனை விதித்தது மற்றும் பழைய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றம் 2024 இல் தீர்ப்பளித்தது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் கூறினர்.
பூஞ்சி ஆணையம் (2007)
பூஞ்சி ஆணையம் (Punchhi Commission), 27 ஏப்ரல் 2007 அன்று முன்னாள் தலைமை நீதிபதி மதன் மோகன் பூஞ்சி தலைமையில் நிறுவப்பட்டது. இது சர்க்காரியா ஆணையத்திற்கு பிறகு, இரண்டாவது முறையாக இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த முயற்சித்தது. ஆணையம் தனது இறுதி அறிக்கையை மார்ச் 2010 இல் சமர்ப்பித்து, ஒன்றிய அரசு தனது அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க அரசியலமைப்பில் சில முக்கிய மாற்றங்களை பரிந்துரைத்தது. மேலும், உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயங்களைக் கையாள தேசிய ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கவும் பரிந்துரைத்தது.
அவசரக் காலங்களில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உதவவும், அரசியல் சார்பு இல்லாமல் ஆளுநர்கள் நியமிக்கப்படுவதை உறுதி செய்யவும், மாநிலங்கள் மீதான ஒன்றிய அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், மாநில அளவிலான முடிவுகளை ஒன்றிய அரசு ஊக்குவிக்கவும் பரிந்துரைத்தது. ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் நிர்வாகத்தில் நேர்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாக பூஞ்சி ஆணையம் கொண்டுள்ளது.
கலைஞரின் ஆணையங்கள்
தமிழ்நாட்டில் கலைஞரின் தி.மு.க ஆட்சிக்காலத்தில் மக்கள் நலன் கருதி பல்வேறு ஆணையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் பலவும் "இந்தியாவில் முதன்முதலாக" என்ற தலைப்பைத் தாங்கி நிற்கின்றன. ஆணையத்தின் பரிந்துரைகளின்படி பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டன. கலைஞரின் சில ஆணையங்களுக்கு எடுத்துக்காட்டாக,
*1969 = தமிழ்நாடு காவல் ஆணையம்
*1969 = மாநில சுயாட்சி குறித்து ஆராய ராஜமன்னார் ஆணையம்
*1969 = பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து ஆராய சட்டநாதன் ஆணையம்
*1971 = மாநிலத் திட்டக்குழு ஆணையம்
*2011 = பஞ்சமி நிலங்களை மீட்க மருதமுத்து ஆணையம்
ராஜமன்னார் ஆணையம் (1969)
1967 இல் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திலும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை ஆராய ஒரு குழுவின் அவசியத்தைப் பேரறிஞர் அண்ணா வலியுறுத்தினார். இதன் பிறகு, அண்ணா மறைவுக்குப் பிறகு, அண்ணாவின் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில், 1969 இல் ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை ஆராய உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய பி.வி.ராஜமன்னார் தலைமையில் ராஜமன்னார் ஆணையத்தை (Rajmannar Commission) கலைஞர் அமைத்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.லெட்சுமணன், ஆந்திர முன்னாள் தலைமை நீதிபதி பி.சந்திரா ஆகியோரும் ஆணையத்தில் உறுப்பினர்களாக இருந்தனர்.
ராஜமன்னார் ஆணையம், “நிதி ஆணையத்தை நிரந்தர அமைப்பாக்குதல், மாநிலங்களுக்கு இடையேயான சபைகளை அமைத்தல், அகில இந்தியப் பணிகளான IAS - IPS - IFS ஆகியவற்றை ஒழித்தல், ஒன்றிய திட்டக்குழு ஆணையத்திற்குப் பதிலாக சட்டப்பூர்வ அமைப்பை நிறுவுதல், குடியரசுத் தலைவர் ஆட்சியை கையாளும் 356 / 357 / 365 ஆகிய பிரிவுகளை நீக்குதல்” போன்ற முக்கியமான பரிந்துரைகளை வழங்கியது. மேலும், சர்வதேச சட்ட அறிஞர்களின் கருத்துக்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், கட்டுரைகள் மற்றும் செய்தித்தாள் அறிக்கைகளை மேற்கோள் காட்டி, “சட்டமன்ற அதிகாரம், நிதி உறவுகள், நிர்வாகப் பரவலாக்கம், நெருக்கடி மேலாண்மை, வர்த்தக மேம்பாடு” உள்ளிட்ட 21 தலைப்புகளில் ராஜமன்னார் ஆணையம் 1971 இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
இன்றும் மாநில அதிகாரங்கள் தொடர்பான கோரிக்கைகள் எழுப்பப்படும் போதெல்லாம் ராஜமன்னார் ஆணையத்தின் அறிக்கை மேற்கோள் காட்டப்படுகிறது. மேலும், ராஜமன்னார் ஆணையத்தின் அறிக்கையை ஒன்றிய அரசு முழுமையாக ஏற்கும் என்ற நம்பிக்கையில் முன்வைக்கப்படவில்லை. அதே நேரத்தில் மாநில சுயாட்சிக் குரலை நியாயமாக வெளிப்படுத்தும் வாய்ப்பாக இந்த அறிக்கை பார்க்கப்பட்டது.
சர்க்காரியா ஆணையம் (1976)
1972 இல் அ.தி.மு.க தலைவர் எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் தமிழ்நாடு முதல்வர் கலைஞருக்கு எதிராக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் ஊழல் புகார்களை அளித்தனர். 1976 இல் நெருக்கடி நிலை அடக்குமுறைக்கு அடிபணியாத கலைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு முனைந்ததைத் தொடர்ந்து, நான்கு ஆண்டுகள் கழித்து, 1972 இல் எம்.ஜி.ஆரும் கல்யாணசுந்தரமும் கொடுத்த ஊழல் புகார்களை ஒன்றிய அரசு தூசி தட்டி, 1971 முதல் 1976 வரை தமிழ்நாடு முதல்வராகப் பணியாற்றிய கலைஞர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, 1976 இல் ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் சர்க்காரியா ஆணையம் (Sarkaria Commission) அமைக்கப்பட்டது.
அண்ணா திரையரங்க அவதூறு, லண்டன் டிராக்டர், திருவாரூர் வீடு, மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ், வீராணம் ஒப்பந்தம் என பல குற்றச்சாட்டுகள் கலைஞர் மீது சுமத்தப்பட்டன. பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு கலைஞர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றசாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று சர்க்காரியா கூறினார்.
சர்க்காரியா ஆணையத்தின் விசாரணை அறிக்கை எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்குப் பலனளிக்காததால், அதைச் சரிக்கட்டுவதற்காக கலைஞர் விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று பொய் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். உண்மையில் சர்க்காரியா தனது விசாரணை அறிக்கையில் விஞ்ஞான பூர்வமாக ஊழல் என்று எங்கும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாமதி ஆணையம் (1992)
1992 இல் பல அரசு அதிகாரிகள் வாச்சாத்தி கிராமத்திற்குச் சென்று, கடத்தப்பட்ட சந்தன மரங்களை தேடியும், வீரப்பன் உதவியாளர்களைக் கைது செய்யவும் வந்ததாகக் கூறி, கொடூரமான வன்முறையில் ஈடுபட்டனர். திட்டமிட்ட தாக்குதலால் விளைந்த வன்முறையால் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். ஆண்கள் தாக்கப்பட்டனர். வீடுகள் சூறையாடப்பட்டன. கால்நடைகள் கொல்லப்பட்டன. நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வன்முறைக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சி புகார்களைப் பதிவு செய்தது. ஆனால், புகார்கள் ஜோடிக்கப்பட்டவை என்று கூறி ஜெயலலிதாவின் அ.தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க மறுத்தது.
இதையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலம், 1992 இல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி ஐ.ஏ.எஸ் தலைமையில் பாமதி ஆணையத்தை (Bhamathi Commission) நியமித்தார். பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தினார்கள். இறுதியில், பாமதி ஆணையத்தின் விரிவான அறிக்கை வாச்சாத்தி தாக்குதலின் திட்டமிட்ட, வெட்கக்கேடான, கொடூரமான தன்மையை வெளிப்படுத்தியது. மேலும், வாச்சாத்தி மக்களின் கோரிக்கையை ஏற்று, பாமதியின் விரிவான அறிக்கையின் அடிப்படையில், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த சி.பி.ஐக்கு உத்தரவிட்டது.
2011 இல் தருமபுரி நீதிமன்றம் 122 வனத்துறை அதிகாரிகள், 4 இந்திய வனப்பணி அதிகாரிகள், 84 காவல்துறை அதிகாரிகள், 5 வருவாய்த் துறை அதிகாரிகள் உட்பட 215 அதிகாரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 215 பேருக்கு ஒன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நீண்ட மேல்முறையீடு மற்றும் சட்டப்போராட்டத்திற்குப் பிறகு, 2023 இல் தருமபுரி நீதிமன்றத் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிகள் மற்றும் பாமதி ஆணையத்தின் அறிக்கைகள் இவ்வழக்கில் முக்கியப் பங்கு வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கோகுலகிருஷ்ணன் ஆணையம் (1998)
1998 இல் கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமையில் “கோகுலகிருஷ்ணன் ஆணையம்” (Gokulakrishnan Commission) அமைக்கப்பட்டது. 2000 இல் ஆணையம் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், "மதக் கலவரங்கள் குறித்த எச்சரிக்கைகளைக் காவல்துறை கவனத்தில் கொண்டு கண்காணிப்பையும் பரிசோதனையையும் முடுக்கிவிட்டிருந்தால், 1998 கோவை குண்டுவெடிப்பு தடுத்திருக்ககலாம். 1997 கலவரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அல் உம்மாவால் ஏவப்பட்ட மூன்று மனித வெடிகுண்டுகள் அத்வானியை அணுக இயலவில்லை. ஏனெனில் அவருடன் பாதுகாப்புப் படையினரும் இருந்தனர். இக்குழு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் காணொளிகளை அனுதாபத்திற்காகவும் நிதி உதவிக்காகவும் பயன்படுத்திக் கொண்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சோதனைச் சாவடிகளை அமைக்கவும், சட்டவிரோத அமைப்புகளைத் தடை செய்யவும், உளவுத்துறை முயற்சிகளை மேம்படுத்தவும், விரிவான பாதுகாப்பு ஆய்வுகளைத் திட்டமிடவும் இவ்வாணையம் பரிந்துரைத்தது.
சதாசிவம் விசாரணை ஆணையம் (1999)
1993 இல் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசின் காவல்துறைகள் இணைந்து வீரப்பனைப் பிடிக்க ஒரு சிறப்பு அதிரடிப்படையை (Special Task Force - STF) அமைத்தது. பின்னர் 2004 இல் சிறப்பு அதிரடிப்படையினரால் வீரப்பன் கொல்லப்பட்டார். ஆனால் இந்த நடவடிக்கைகளில் வருந்தத்தக்க வகையில், சிறப்புப் அதிரடிப்படையின் நடவடிக்கைகளின் போது மலைவாழ் மக்கள் மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டனர். இதில் சட்டவிரோத்த் கொலைகள், தன்னிச்சையான தடுப்புக்காவல், பாலியல் வன்முறை, மின்சார அதிர்ச்சி மற்றும் தடாவின் கீழ் போலி வழக்குகள் ஆகியவை அடங்கும்.
இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission of India - NHRC), சமூக ஆர்வலர்களின் வழிகாட்டலின் மூலம் மலைவாழ் மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையின் நடவடிக்கை குறித்து விசாரிக்க நீதிபதி சதாசிவம் தலைமையில் சதாசிவம் விசாரணை ஆணையத்தை (Sadashiva Commission) 1999 இல் அமைத்தது. சிறப்பு அதிரடிப்படை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, இழப்பீடுகளைப் பரிந்துரைத்து, 2003 இல் ஆணையம் தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து, சிறப்பு அதிரடிப்படை அட்டூழியத்தால் பாதிக்கப்பட்ட 89 பேருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2.80 கோடியை NHRC அறிவித்தது.
2004 இல் ஆணையத்தின் அறிக்கையில், சிறப்பு அதிரடிப்படைக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, வீரப்பனைக் கொன்றதற்காக சிறப்பு அதிரடிப்படையினருக்கு பாராட்டு விழா நடத்தி பதக்கங்கள் வழங்கியது சர்ச்சையானது. சிறப்பு அதிரடிப்படை அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் வீரப்பன் மரணத்தை சுற்றியுள்ள சூழ்நிலைகள் இன்னும் விவாதத்திற்குரியவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆறுமுகசாமி ஆணையம் (2017)
செப்டம்பர் 2017 அன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணமான சூழ்நிலைகளை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை (Arumughaswamy Commission) அமைத்தது.
ஜெயலலிதா இறந்த தேதியில் முரண்பாடு இருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது. அதாவது, 05 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 04 டிசம்பர் 2016 அன்று மாலை 3 மணி முதல் 3.30 மணிக்கு இடையில் ஜெயலலிதா காலமானார் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜெயலலிதாவின் மறைவு தொடர்பான உண்மைகள் குறித்து சசிகலா மற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கு நன்கு தெரியும் என்றும் ஆணையம் குற்றம் சாட்டியது.
ஜெயலலிதாவின் ஒரே அரசியல் வாரிசாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள ஓ.பன்னீர்செல்வம் முயற்சிப்பதை தற்செயலாகக் கருத முடியாது என்றும், அதிகார மையத்தின் சூழ்ச்சியால் தனது முதல்வர் பதவி நீண்ட நாள் நீடிக்கவில்லை என கோபமடைந்த ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் அரசியல் செய்தார் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், டாக்டர் சிவக்குமார் (சசிகலாவின் உறவினர்), சசிகலா, அப்பல்லோ மருத்துவர்கள் உட்பட பலர் மீது விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பல்வேறு ஐயங்களை எழுப்பி உள்ளது.
*லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மூத்த மருத்துவர்களின் பரிந்துரைகளை அப்பல்லோ மருத்துவக் குழு ஏன் முழுமையாகப் பின்பற்றவில்லை?
*ஜெயலலிதா இருந்த படுக்கை தொகுதியில் (Ward) பொருத்தப்பட்டிருந்த CCTV கருவிகளை அப்பல்லோ மருத்துவமனை அகற்றியது ஏன்?
*ஜெயலலிதாவை காப்பாற்ற மருத்துவக் குழு குருதிக்குழாய்ச் சீரமைப்பை (Angioplasty) செய்ய விடாமல் சசிகலா தடுத்தது ஏன்?
*அமெரிக்க மருத்துவர் சமீன் சர்மாவின் பரிந்துரைப்படி ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை ஏன் செய்யப்படவில்லை?
*ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை பொய்யான அறிக்கைகளைக் கொடுத்தது ஏன்?
*ஜெயலலிதாவை உயர் மருத்துவச் சிகிச்சைக்காகச் சுகாதாரத்துறை ஏன் வெளிநாடு அழைத்துச் செல்லவில்லை?
அருணா ஜெகதீசன் ஆணையம் (2018)
22 மற்றும் 23 மே 2018 அன்று தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்பட்ட மாசுபாட்டை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள் மீது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க அ.தி.மு.க அரசு சார்பில் அருணா ஜெகதீசன் ஆணையம் (Aruna Jagadeesan Commission) 23 மே 2018 அன்று அமைக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டதாக கூறியிருந்தார். ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிலவரத்தை அதிகாரிகள் நிமிடத்திற்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்ததாக ஆணையத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் கூற்று பொய் என்பது நிரூபணமானது.
தூத்துக்குடி கலவரத்திற்குச் சமூகவிரோதிகளே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு ஆதாரம் இல்லை என்றும், பிரபலங்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கும் போது சமூக பொறுப்பை உணர்ந்து ஆதாரத்துடன் பேச வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது. மேலும், அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது, அரசு இயந்திரம் நெறிமுறைகளைப் பின்பற்றாதது, காவல்துறை வரம்பு மீறி செயல்பட்டது எனப் பல்வேறு விசயங்களை ஆணையம் கண்டறிந்தது.
அசாதாரண சூழ்நிலையை சரியாகக் கையாளாத தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மூன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீடாக ரூபாய் 20 லட்சத்திற்கு பதிலாக ரூபாய் 50 லட்சத்தை வழங்கவும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்தது. இதையொட்டி, ஆணையத்தின் பரிந்துரையின்படி தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதர ஆணையங்கள்
ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு அளவில் பல்வேறு ஆணையங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு அறிக்கைகள் வெளிவந்துள்ளன. ஆனால், "ஒவ்வொரு ஆணையமும் தெளிவான நிலைப்பாட்டுடன் அதன் இறுதி இலக்கை அடைந்துள்ளதா?" என்ற கேள்விக்கு எளிமையாக பதில் சொன்னால், சில ஆணையங்கள் முடிவுகளை அளித்தன, மற்றவை முடிவில்லாதவை. எடுத்துக்காட்டாக, 1980 இல் நடந்த விமான விபத்தில் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி அகால மரணம் அடைந்தது குறித்து நீதிபதி எம்.எல்.ஜெயின் தலைமையிலான ஆணையம் விசாரித்து வந்தது. ஆனால் வெளியிடப்படாத காரணங்களால் அது திடீரென கலைக்கப்பட்டது.
மேற்கூறிய ஆணையங்களைத் தவிர, “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து ஆராய்ந்த ஃபிக்ஜெஸ் அறிக்கை (1946), ஷா நவாஸ் ஆணையம் (1956), ஜப்பானிய அரசாங்க அறிக்கை (1956), கோஸ்லா ஆணையம் (1970), முகர்ஜி ஆணையம் (2005), லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் குறித்து விசாரித்த ராஜ் நாராயணன் ஆணையம் (1977), பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை மேம்படுத்த ஹனுமந்த ராவ் ஆணையம் (1983), ஜி.வி.கே.ராவ் ஆணையம் (1985), எல்.எம்.சிங்வி ஆணையம் (1986), பி.கே.தூங்கன் ஆணையம் (1989), ஹர்லால் சிங் கர்ரா கமிட்டி (1990), பல்வேறு திருத்தங்களையும் புதுப்பிப்புகளையும் பரிந்துரைத்த தேசிய கல்விக் கொள்கை ஆணையம் (1968 - 1986 - 2020), கல்வி திட்டமிடல் மற்றும் கொள்கைகளில் கவனம் செலுத்திய ஈஸ்வர் பாய் படேல் குழு (1977), கல்வியில் சமூக நீதி தொடர்பான பிரச்சனைகளை எடுத்துரைத்த மால்கம் அடிசீசியா குழு (1978), திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய சுப்பிரமணியப் பிள்ளையின் மரணம் குறித்து விசாரித்த பால் ஆணையம் (1982), அம்பாசங்கர் தலைமையிலான இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (1982), சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து விசாரித்த நானாவதி ஆணையம் (1984), பல்கலைக்கழக மானியக் குழுவின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்த ராமமூர்த்தி மறுஆய்வுக் குழு (1990), காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் (1990), இந்தியாவின் வங்கித் துறைக்கான விதிமுறைகளை ஆய்வு செய்த நரசிம்மம் ஆணையம் (1991), 1986 தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்து மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கிய ஜனார்த்தன ரெட்டி குழு (1992), உயர்கல்விச் சீர்திருத்தங்கள், பாடத்திட்ட மேம்பாடு மற்றும் கல்வி- தொழில்நுட்பக் கொள்கைகளில் கவனம் செலுத்திய யஷ்பால் குழு (1993 - 2009), மாஞ்சோலைப் பேரணியில் நடந்த வன்முறை குறித்து விசாரித்த மோகன் ஆணையம் (1999), கல்வியில் தனியார் துறை ஈடுபாட்டிற்கான உத்திகளை ஆராய்ந்த அம்பானி - பிர்லா குழு (2000), கலைஞரின் நள்ளிரவுக் கைதுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரித்த பக்தவச்சலம் ஆணையம் (2001), ஏர்வாடி தீ விபத்து குறித்து விசாரித்த ராமதாஸ் ஆணையம் (2001), கும்பகோணம் தீ விபத்து குறித்து விசாரித்த சம்பத் ஆணையம் (2004), இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்து ஆய்வு செய்த சச்சார் குழு (2005), கல்வியறிவு மற்றும் ஆராய்ச்சிக் கொள்கைகளை மேம்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட தேசிய அறிவு ஆணையம் (2005), தெலங்கானாவின் தனி மாநில கோரிக்கையை ஆய்வு செய்த ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் (2010), இந்தியாவில் பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்திய நாராயண மூர்த்தி குழு (2012), பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஆகியவற்றை ரத்து செய்து, அதற்குப் பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்க பரிந்துரைத்த இந்திய உயர்கல்வி ஆணையம் (2018)” போன்று பல்வேறு ஆணையங்கள் இந்திய அளவிலும் மாநில அளவிலும் செயல்பட்டு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன.
முடிவுரை
உலகளவில், கடந்த காலச் சம்பவங்கள் மற்றும் எதிர்கால மாற்றங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசுகளுக்கு வழிகாட்டும் ஒரு பயனுள்ள கருவியாக ஆணையங்களானது பார்க்கப்படுகிறது. ஆணையங்கள் பொதுவாக நீதித்துறை, நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் அனுபவம் கொண்ட தலைவர்களால் (Chairperson) வழிநடத்தப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், பரிந்துரைகளை வழங்குவது ஆணையங்களின் பணி மற்றும் அதற்கான நடவடிக்கைகளை சீராய்ந்து எடுப்பது அரசுகளின் வேலை என்றால் அது மிகையல்ல.
விவரணைகள்
Royal Commission (1912)
Montagu–Chelmsford, the Rowlatt Act, and Non-Cooperation Movement (1919)
Usman Committee (1921)
Sargent Commission (1944)
University Education Commission (1948)
Secondary Education Commission (1952)
State Reorganization Commission (1953)
Warren Commission (1963)
Kothari Commission (1964)
Kapur Commission (1964)
Ilayaperumal Commission (1969)
Watergate Committee (1973)
Mandal Commission (1979)
Vaidialingam Commission (1980)
Thakkar Commission (1984)
Verma Commission (May 1991)
Jain Commission (August 1991)
Vachathi Case (1992)
Srikrishna Commission (1993)
Vohra Commission (1993)
Gokulakrishnan Commission (1998) (Page No 81-83)
Amnesty on Sadashiva Commission (1999)
Aarumugasamy Commission (2017)
Aruna Jagadeesan Commission (2018)
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment