பொருளடக்கம்
- சிறையில் பூத்த மலர்
- கலைஞரின் முயற்சி
- 1977 தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல்
- 1977 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- இந்திரா காந்தியின் பதிலடி
- 1980 தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல்
- தமிழ்நாட்டின் கூட்டணி கதைகள்
- விவரணைகள்
சிறையில் பூத்த மலர்
இந்திரா காந்தி அமல்படுத்திய "நெருக்கடி நிலை" காலத்தில் வட இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். திகார் சிறையில் எதிர்க்கட்சித் தலைவர்களிடையே நடந்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, சோசலிசம் முதல் இந்துத்துவா வரையிலான சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்து, "ஜனதா கட்சி" கூட்டணி உருவாக்கப்பட்டது. இப்படியாக உருவான "ஜனதா கட்சி" கூட்டணியை, நெருக்கடி நிலைக்கு எதிராக போராட்டங்களை வழிநடத்தி வடக்கில் மக்களிடையே குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்ற ஜெயபிரகாஷ் நாராயணன் வழிநடத்தினார்.
1980 வரை தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்திலும் "ஜனதா கட்சி" கூட்டணி குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருந்தது. இத்தகைய பின்னணியில், 1977 முதல் 1980 வரை தமிழ்நாட்டில் JP, INC ஆகிய தேசியக் கட்சிகளுக்கும் DMK, ADMK ஆகிய திராவிடக் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி உறவுகளைப் பற்றி காண்போம்.
கலைஞரின் முயற்சி
15-12-1976 அன்று, DMK நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியனின் டெல்லி இல்லத்தில், இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கவும், நெருக்கடி நிலை நடவடிக்கைகளை எதிர்க்கவும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து கலைஞர் ஒரு கூட்டத்தை நடத்தினார்.
டெல்லியில் கலைஞர் மேற்கொண்ட இம்முயற்சி, ஜனதா தலைவர்களின் ஆதரவுடன் இயங்கிய "ஜனதா கட்சி" கூட்டணிக்கு புத்துணர்ச்சியை ஊட்டியது. நெருக்கடி நிலை நடவடிக்கைகளை எதிர்க்கும் பொருட்டு, ஜனதா கட்சியுடன் தனது கூட்டணியைத் தக்க வைத்துக்கொள்வதே கலைஞரின் நோக்கமாக இருந்தது. நெருக்கடி நிலை காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உட்பட சிலருக்கு DMK அடைக்கலம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
1977 தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல்
மார்ச் 1977 இல் நடைபெற்ற தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தலில், CPM + INC (O) உள்ளிட்ட "ஜனதா கட்சி" கூட்டணியுடன் இணைந்து DMK போட்டியிட்டது. ஆனால், INC (Indira) + CPI உடன் கூட்டு சேர்ந்த ADMK வெற்றி பெற்றது. இருப்பினும் இந்தியளவில், “ஜனதா கட்சி” கூட்டணி 1977 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், கலைஞர் மற்றும் பிற முக்கிய தலைவர்கள் பிரதமர் மொரார்ஜி தேசாயை சந்தித்தனர். ஆனால், அந்த சந்திப்பு கூட்டத்தை மொரார்ஜி தேசாய் சரிவர கையாளவில்லை. இதன் முடிவில், தமிழ்நாட்டில் DMK உடன் இருந்த கூட்டணியை முறித்து கொண்டு “ஜனதா கட்சி” விலகியது.
இந்த காலத்தில், INC (Indira) உடன் இணைந்திருந்த கூட்டணியை விட்டு விலகி, “ஜனதா கட்சி” கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்த MGR, பிரதமர் மொரார்ஜி தேசாயை ஆதரித்தார். மேலும், பிரதமர் சரண் சிங் அமைச்சரவையில் ADMK இடம் பெற்றது. MGR மேற்கொண்ட நடவடிக்கை இந்திரா காந்திக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
1977 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
ஜூன் 1977 இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், DMK மற்றும் "ஜனதா கட்சி" கூட்டணி தனித்தனியாக போட்டியிட்டன. இந்தத் தேர்தலில், 57.34 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ADMK கூட்டணி சார்பில் MGR முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தனித்து போட்டியிட்ட DMK 42.58 லட்சம் வாக்குகளைப் பெற்றது. DMK கூட்டணியை விட்டு பிரிந்த “ஜனதா கட்சி” கூட்டணி 28.51 லட்சம் வாக்குகளைப் பெற்றது. DMK மற்றும் “ஜனதா கட்சி” கூட்டணி இணைந்து போட்டியிட்டிருந்தால், அவர்களின் மொத்த வாக்குகள் 71.09 லட்சம் வாக்குகளாக இருந்திருக்கும், இது ADMK கூட்டணி பெற்ற மொத்த வாக்குகளைவிட 13.75 லட்சம் வாக்குகள் அதிகமாகும்.
மொத்தத்தில், 1977 தமிழக நாடாளுமன்றத் தேர்தலைப் போல, 1977 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் DMK மற்றும் "ஜனதா கட்சி" கூட்டணி நீடித்திருந்தால், வாக்குச் சதவீதம் அடிப்படையில் MGR முதலமைச்சர் ஆகியிருக்க வாய்ப்பில்லை. இதனால், தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பு (Political Landscape) மாறி இருக்கக்கூடும்.
இந்திரா காந்தியின் பதிலடி
1979 இல் தஞ்சாவூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட விரும்பியிருந்த நிலையில், "ஜனதா கட்சி" கூட்டணி கொடுத்த அழுத்தத்தால், முதலமைச்சர் MGR இந்திரா காந்தியின் முடிவுக்கு இசைவு தெரிவிக்கவில்லை.
ஜனதா கட்சியை ஆதரித்த ADMK மீது கோபத்தில் இருந்த இந்திரா காந்தி, ஜனதா கட்சியை எதிர்த்த DMK உடன் 1980 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி வைத்தார். இந்திரா காந்தியும் கலைஞரும் சென்னை கடற்கரையில் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். அப்போது கலைஞர் தமது கருத்துகளை இப்படி வெளிப்படுத்தினார்: “டெல்லியில் கேலிக்கூத்தான அரசு அமைவதை விரும்பவில்லை. நிலையான அரசு மத்தியில் அமைய வேண்டும் என விரும்புகிறோம். இந்திரா காந்தியால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும். அதனால், நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என்றார். சுவாரஸ்யமாக, இந்திரா காந்தி தமது கருத்துகளை இப்படி வெளிப்படுத்தினார்: “நாங்கள் தவறு செய்திருக்கிறோம். அதை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இனி தவறுகள் நடக்காது" என்றார்.
1980 தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல்
ஜனவரி 1980 இல் நடைபெற்ற தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தலில் DMK + INC (Indira) கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். அதே நேரத்தில், மே 1980 இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், DMK + INC கூட்டணி தோல்வியை தழுவியது, ADMK வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டின் கூட்டணி கதைகள்
1980-1990 களில் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் ADMK சரியான வாய்ப்புகளைப் பயன்படுத்தியது. அதே நேரத்தில், 2000 களில் இருந்து தேசியக் கட்சிகளுடன் முறையான கூட்டணிகளைப் பேணுவதன் மூலம் DMK மாநில அரசியல் அரங்கத்தை தாண்டி தேசிய அரசியல் அரங்கையும் கைப்பற்றியது.
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.