பாவல் வழக்கு
சுருக்கம்
- முகவுரை
- பாவல் குடும்பம்
- கதையின் தொடக்கம்
- கதையின் திருப்பம்
- சன்யாசியா? ராஜாவா?
- நீதிமன்றத்தில் வழக்கு
- ராஜா தரப்பின் வாதம்
- மருத்துவரின் வாதம்
- மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு
- உயர்நீதிமன்ற தீர்ப்பு
- பிரிவி கவுன்சில் தீர்ப்பு
- தீர்ப்பும் மரணமும்
- என்ன நோக்கம்?
- தடயவியல் ஆய்வுத் துறை
- முடிவுரை
- விவரணைகள்
முகவுரை
சுதந்திரத்திற்கு முந்தைய பரபரப்பான வழக்குகளில் ஒன்றான "பாவல் வழக்கு" என்பது கிழக்கு வங்காளத்தில் (இன்றைய வங்கதேசம்) உள்ள பாவல் இராச்சியத்தின் மூன்று பங்குதாரர்களில் ஒருவரான ராஜா ராமேந்திர நாராயண் ராய் குறித்த வழக்கு ஆகும்.
நீதிமன்ற நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம், குடும்ப சூழ்ச்சி மற்றும் வீணடிக்கப்பட்ட செல்வம் நிறைந்த ஒரு நம்பமுடியாத கதையை சொல்கிற பாவல் வழக்கின் கதையைச் சுருக்கமாகச் சொல்ல முயற்சித்து உள்ளேன். மேலும் பாவல் வழக்கு பற்றி தமிழில் வெளிவந்த முதல் நீண்ட கட்டுரை இதுவாகும்.
பாவல் குடும்பம்
1878 அன்று கிழக்கு வங்காளத்தில் உள்ள ஷ்ரோத்ரிய பிராமண சாதியைச் சேர்ந்த பாவல் குடும்பத்தில் காளி நாராயணுக்கு ராய் (ராஜா = ஜமீன்) பட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கியது. பாவல் இராச்சியத்தின் முதல் ராஜாவான காளி நாராயண் ராய்யின் தலைமையகமும் வசிப்பிடமும் காசிபூரில் (ஜாய்தேப்பூர்) இருந்தது. ராஜாவின் இல்லத்தை ராஜ்பரி என்று அழைப்பர்.
காளி நாராயண் ராய் மற்றும் சத்தியபாமா தம்பதிக்கு ராஜேந்திர நாராயண் ராய் என்ற மகனும் கிருபாமோய் என்ற மகளும் பிறந்தனர். அரச பட்டம் பெற்ற பிறகு 1878 அன்று ராஜா காளி நாராயண் காலமான பிறகு அவரது ஒரே மகன் ராஜேந்திர நாராயண் ராய் ராஜாவானார். ராஜேந்திர நாராயண் ராய் மற்றும் பிலாஸ்மணி தம்பதிக்கு மூன்று மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தனர். 1901 அன்று ராஜா ராஜேந்திர நாராயண் ராய் காலமானார். இதையெடுத்து, பாவல் இராச்சியத்தின் சொத்துக்களை மூன்று மகன்களும் சம பங்குகளாகப் பெற்றனர்.
1901 அன்று மூத்த மகன் ரணேந்திர நாராயண் ராய் சரஜுபாலா தேவியை மணந்தார். 1902 அன்று இரண்டாவது மகன் ராமேந்திர நாராயண் ராய் பிபாபதி தேவியை மணந்தார். 1904 அன்று மூன்றாவது மகன் ரவீந்திர நாராயண் ராய் ஆனந்த குமாரி தேவியை மணந்தார். மூன்று சகோதரர்கள் குடும்பம், மூன்று சகோதரிகள் குடும்பம், பாட்டி சத்யபாமா மற்றும் ராஜேந்திர நாராயண் ராய்யின் சகோதரி கிருபாமோய் குடும்பம் ஆகியோர் குடும்ப உறுப்பினர்களாக ராஜ்பாரியில் வசித்து வந்தனர்.
28 ஜூலை 1884 அன்று பிறந்த இரண்டாவது மகன் ராஜா ராமேந்திர நாராயண் ராய் தமக்குரிய இராச்சியத்தின் சொத்துக்களை முழுமையாக நிர்வகிப்பதற்கு முன்பு 1909 அன்று 25 வயதிலே காலமானார். அவருக்கு பிறகு 1910 அன்று ரணேந்திர நாராயண் ராய், 1913 அன்று ரவீந்திர நாராயண் ராய் மற்றும் 1920 அன்று கிருபாமோய் காலமாகினர்.
கதையின் தொடக்கம்
18 ஏப்ரல் 1909 அன்று ராஜா ராமேந்திர நாராயண் ராய் தனது மனைவி பிபாபதி தேவி, மைத்துனர் சத்யேந்திர நாத் பானர்ஜி மற்றும் பெரிய குழுவினருடன் காலநிலைக்காகவும் சிகிச்சைக்காகவும் டார்ஜிலிங் சென்றார். 08 மே 1909 அன்று ராஜா ராமேந்திர நாராயண் ராய் டார்ஜிலிங்கில் திடீரென பித்தப்பை கற்கள் பாதிப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமாகிவிட்டார் என்றும் அவரது உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டதாகவும் வெளியான செய்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் அவரது மனைவியும் மற்றவர்களும் ராஜாவுக்கு இரங்கல் நிகழ்ச்சியை நடத்திட வீட்டிற்கு திரும்பினர்.
இதையெடுத்து, பாவல் இராச்சியத்தின் சொத்துக்களில் காலமான ராஜாவின் பங்குகள் மனைவி பிபாபதி தேவி குடும்பத்தின் சார்பாக காப்புளார் மன்றத்தால் (Court of Wards) நிர்வகிக்கப்பட்டது. சுதந்திரமாகச் செயல்பட முடியாத இளையோர் (Minors) அல்லது கைம்பெண் (Widoe) வாரிசுகளாகக் கருதப்படும் போது அவர்களின் சொத்துக்களை பாதுகாப்பது காப்புளார் மன்றத்தின் பணியாகும்.
கதையின் திருப்பம்
சுமார் 10 வருடங்கள் கழித்து யாருமே எதிர்பார்க்காத வகையில் ராஜா ராமேந்திர நாராயண் ராய் 1920 அன்று டாக்காவில் சன்யாசி வேடத்தில் மீண்டும் தோன்றினார். அவர் எவ்விடத்திலும் "பாவல் இராச்சியத்தின் மூன்று பங்குதாரர்களில் தானும் ஒருவர்" என்ற அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் 1921 அன்று அவரை அடையாளம் கண்டுகொண்ட சிலர் அவரை ராஜ்பரி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
சன்யாசியா? ராஜாவா?
ராஜ்பரி வீட்டில் எல்லாவற்றிலும் போதுமான பரிச்சயத்தை வெளிப்படுத்திய ராஜா ராமேந்திர நாராயண் ராய்யை பிபாபதி தேவி குடும்பத்தினர் ராஜாவாக அங்கீகரிக்க மறுத்துவிட்டனர். மேலும் 1909 அன்று ராஜா ராமேந்திர நாராயண் ராய் டார்ஜிலிங்கில் காலமாகிவிட்டார் என்று பிபாபதி தேவி குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தினர். சன்யாசியை ராஜ்பரி வீட்டிற்கு அழைத்து வந்தவர்களும் அவரது உண்மையான அடையாளத்தை நிறுவுவதில் சிரமப்பட்டனர்.
1921 அன்று பொதுமக்களின் அழுத்தம் காரணமாக சன்யாசி "தான் தான் ராஜா ராமேந்திர நாராயண் ராய் என்றும் பாவல் இராச்சியத்தின் மூன்று பங்குதாரர்களில் ஒரு உரிமையாளர் என்றும் வெளிப்படையாக வெளிப்படுத்தினார். ராமேந்திர நாராயண் ராய் ராஜாவாக உரிமை கோரியதை நிராகரித்து சன்யாசி ஒரு ஏமாற்றுக்காரர் என்று பிபாபதி தேவி குடும்பத்தினர் உடனடியாக அறிவித்தனர். மேலும் சன்யாசியை ராஜாவாக பலரும் அங்கீகரித்தாலும் மனைவி பிபாபதி தேவி அவரை தன் கணவராக அங்கீகரிக்க மறுத்துவிட்டார்.
சன்யாசியிடம் இருந்து தங்களையும் இராச்சியத்தின் சொத்துக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று பிபாபதி தேவி குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதையெடுத்து, ராஜா ராமேந்திர நாராயண் ராய்யின் உடல் டார்ஜிலிங்கில் தகனம் செய்யப்பட்டதாகவும் இராச்சியத்தில் உரிமை கோருபவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றும் வருவாய் வாரியம் பகிரங்கமாக அறிவித்தது.
நீதிமன்றத்தில் வழக்கு
1921 முதல் 1929 வரை மேற்கொள்ளப்பட்ட சமரச தீர்வுக்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்ற பிறகு 1930 அன்று ராஜா ராமேந்திர நாராயண் ராய் டாக்காவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். ராஜா ராமேந்திர நாராயண் ராய் சார்பில் வழக்கறிஞர் சாட்டர்ஜி ஆஜரானார். சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் குடும்பத்தினர் ராஜா ராமேந்திர நாராயண் ராய்க்கு ஆதரவாக இருந்தனர். பிபாபதி தேவி குடும்பத்திற்கு ஆதரவாக காப்புளார் மன்றம் ஆஜரானது.
ராஜா தரப்பின் வாதம்
"வேலையில்லா பட்டதாரி மைத்துனர் சத்யேந்திர நாத் பானர்ஜி தனது குழந்தையில்லாத சகோதரி (ராஜாவின் மனைவி) உதவியுடன் இராச்சியத்தில் தனது பங்குகளை கட்டுப்படுத்த தீட்டிய சதித்திட்டத்திற்கு தான் பலியாகியதாக" ராஜா ராமேந்திர நாராயண் ராய் கூறினார். மேலும் சத்யேந்திர நாத் தனது திட்டத்தை நனவாக்க குடும்ப மருத்துவர் அசுதோஷ் தாஸ்குப்தாவை கூட்டாண்மையில் இணைத்துக் கொண்டதாக கூறினார்.
1905 முதல் பால்வினை நோயால் (Syphilis) பாதிக்கப்பட்ட ராஜாவை சிகிச்சைக்காக 18 ஏப்ரல் 1909 அன்று டார்ஜிலிங் சென்று வர குடும்ப மருத்துவர் அசுதோஷ் தாஸ்குப்தா வற்புறுத்தினார். அங்கு சென்ற குழுவினர் அனைவரும் புதிய இடுகாடுக்கு அருகில் உள்ள விடுதியில் தங்கினர். 07 மே 1909 அன்று வலி சிகிச்சைக்கு மருந்து செலுத்தப்படுவதாக கூறி விஷத்தன்மை கொண்ட மயக்க மருந்து செலுத்தப்பட்டதன் விளைவாக ராஜா மயங்கியுள்ளார்.
08 மே 1909 அன்று இரவு மயங்கிக் கிடந்த ராஜாவின் உடலை துணியால் மூடி தகனம் செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தகனம் செய்வதற்கு முன் பலத்த ஆலங்கட்டி மழை பெய்ததால் தகனம் செய்வது தடைபட்டது. மழை பெய்ததால் பணியாளர்கள் வேறு இடத்தில் தஞ்சம் அடைந்து மழை ஓய்ந்ததும் இடுகாட்டுக்கு திரும்பிய போது உடல் காணாமல் போனது. ராஜா காலமான செய்தி பரவியதாலும் தகனம் செய்ததற்கான ஆதாரம் கட்டாயம் என்பதாலும் அனாதை சடலம் ஒன்று வாங்கப்பட்டு எரிக்கப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், ராஜாவின் உடலை தகனம் செய்வதற்குப் பதிலாக மற்றொரு உடலை தகனம் செய்தார்கள். அத்துடன் காணாமல் போன ராஜாவின் உடலை தேடாமல் விட்டுவிட்டனர்.
இதற்கிடையே, 08 மே 1909 அன்று இரவு இடுகாடு வழியாக சென்று கொண்டிருந்த சன்யாசிகள் குழுவினர் இடுகாட்டில் மயங்கிக் கிடந்த ராஜாவை "யார் என்பதை அறியாமலே" தங்கள் குகைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். ராஜா குணமடைந்ததாலும் அப்போதைக்கு நினைவாற்றலை இழந்திருந்தார். அவர் 1909 முதல் 1920 வரை ராஜா சன்யாசிகளுடன் நாடோடியாக வாழ்ந்தார்.
1920 அன்று சிட்டகாங்கில் இருந்து டாக்காவுக்குத் திரும்பிய போது திடீரென்று அவருக்கு நினைவு திரும்பியது. அதன் பிறகு டாக்காவில் உள்ள சதர்காட்டில் உள்ள பக்லாண்ட் பண்டில் சன்யாசியாக குடியேற முடிவு செய்தார். மீண்டும் பாவலுக்கு சென்று இராச்சியத்தில் தனது உரிமையைக் கோர அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் கால சூழ்நிலைகள் அவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தவும் வழக்கை தாக்கல் செய்யவும் கட்டாயப்படுத்தியது.
மருத்துவரின் வாதம்
விசாரணையில் 07 - 08 மே அன்று என்ன நடந்தது, தகனத்தின் நேரம் என்ன, யார் தகனம் செய்யப்பட்டார்கள் என்பது பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது. டார்ஜிலிங்கில் ராஜாவின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு இந்திய ராணுவ மருத்துவ சேவையில் கர்னல் பதவிக்கு உயர்ந்த திறமையான மருத்துவர் ஜான் டெல்ஃபர் கால்வர்ட் சிகிச்சை அளித்தார்.
சன்னியாசி ஒரு ஏமாற்றுக்காரர் என்று மருத்துவர் ஜான் டெல்ஃபர் கால்வர்ட் உறுதியாக நம்பினார். மேலும் காலமான ராஜா பற்றிய விரிவான விவரங்களை கூறினார். பித்தப்பைக் கல்லால் அவதிப்பட்ட ராஜாவை நன்றாக கவனித்துக் கொண்டிருந்தேன். அவரது இறப்பு அந்த நேரத்தில் என் மனதில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. என் அறிவுரையை மட்டும் கேட்டிருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என்று நினைத்தேன். கடுமையான வலியால் அவதிப்பட்ட ராஜாவுக்கு வலுவான வலி நிவாரணி ஊசி போடப்பட்டிருந்தால் அது அவருக்கு உடனடி நிவாரணம் அளித்திருக்கும். ஆனால் அவர் ஊசியை மறுத்துவிட்டார் ஏனெனில் அக்காலத்தில் வலி நிவாரணி ஊசி போடப்பட்ட போது அவரது தாயார் காலமாகிவிட்டார். வாந்தியின் காரணமாக அவரது உடலில் ஓபியம் தக்கவைக்கப்படவில்லை. அவர் வலி நிவாரணத்திற்காக மருத்துவ ஆலோசனையை கேட்காமல் கடுமையான வலிப்பு காரணமாக காலமானார்.
மேலும் தகனத்திற்கு தான் தலைமை தாங்கியதாக மருத்துவர் ஜான் டெல்ஃபர் கால்வர்ட் கூறினார். ஆனால் அவர் முக்கியமாக அதை நேரடியாக மேற்பார்வையிடவோ அல்லது முகம் துணியால் மூடப்பட்டிருந்ததால் தகனம் செய்யப்பட்டது ராஜாவின் உடல் என்பதை உறுதிப்படுத்தவோ இல்லை என்று கூறினார்.
ராஜாவின் அரச குடும்பத்தினரை வரவழைக்க "ராஜாவுக்கு கடுமையான உடல் நலக்குறைவு, தயவுசெய்து சீக்கிரம் வாருங்கள்" என்று ஒரு தந்தி அனுப்பப்பட்டது. அரச குடும்பம் டார்ஜிலிங்கிற்கு ரயில் பயணத்தின் போது தான் ராஜா காலமானதாகவும் அதன்படி அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு
புகைப்படங்கள், கடிதங்கள், உடல் அடையாளங்கள், உடல் பண்புகள், விசாரணை அறிக்கைகள் மற்றும் தடயவியல் சான்றுகள் ஆகியவை ராஜாவின் அடையாளத்திற்கு ஆதரவாக இணைக்கப்பட்டன. சன்யாசி உண்மையில் ராஜா ராமேந்திர நாராயண் ராய் என்று தடயவியல் ஆய்வுத் துறை பரிந்துரைத்தது.
சன்யாசி தான் ராஜா ராமேந்திர நாராயண் ராய் என்று நீதிமன்ற விசாரணை முடிவுகள் பறைசாற்றியதை ஒட்டி 24 ஆகஸ்ட் 1936 அன்று விசாரணையின் அடிப்படையிலும் அடையாளங்களின் அடிப்படையிலும் சன்யாசி ராஜா ராமேந்திர நாராயண் ராய் தான் என்றும் அவர் பாவல் இராச்சியத்தின் பங்காளர் என்றும் நீதிபதி பன்னாலால் போஸ் தீர்ப்பளித்தார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு
மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜாவின் மனைவி பிபாபதி தேவி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதி சாரு சந்திர பிஸ்வாஸ் தனது நீண்ட தீர்ப்பில் நீதிபதி பன்னாலால் போஸின் முடிவுகளை ஆதரித்தார் மற்றும் ராஜா ராமேந்திர நாராயண் ராய் காலமாகிவிட்டார் என்பதை பிரதிவாதிகள் நிரூபிக்கத் தவறிவிட்டனர் என்று கூறினார். மேலும் பிரதிவாதிகள் சாட்சிகளுக்கு பயிற்சி அளித்து மோசடியான முறையில் தயார் செய்ததாகவும் கூறினார். 25 நவம்பர் 1940 அன்று மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
பிரிவி கவுன்சில் தீர்ப்பு
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலில் பிபாபதி தேவி மேல் முறையீடு செய்தார். 30 ஜூலை 1946 அன்று ஏற்கனவே நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களையும் விசாரணை முடிவுகளையும் மறுபரிசீலனை செய்ய மறுத்து பிபாபதி தேவியின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே லண்டன் பிரிவி கவுன்சில் உறுதிப்படுத்தியது.
தீர்ப்பும் மரணமும்
1921 முதல் 1929 வரையிலான சமரச முயற்சிகள் தோல்வியை தழுவினாலும் 1930 அன்று டாக்கா மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து 1946 அன்று லண்டன் பிரைவி கவுன்சிலுக்குச் சென்ற வழக்கு ராஜா ராமேந்திர நாராயண் ராய்யின் வெற்றிக்கு வழிவகுத்தது.
30 ஜூலை 1946 அன்று இறுதி தீர்ப்பு வந்த பிறகு ராஜா ராமேந்திர நாராயண் பிரார்த்தனை செய்ய சென்ற போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு 62 வயதில் காலமானார்.
என்ன நோக்கம்?
சகோதரன் சத்யேந்திர நாத் பானர்ஜியின் தூண்டுதலின் பேரில் இராச்சியத்தின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு தன் கணவனுக்கு பிபாபதி தேவி துரோகம் செய்ததாக ராஜாவின் ஆதரவாளர்கள் கதைத்தனர். இறுதி தீர்ப்பு வந்தவுடன் ராஜாவாக மாறிய சன்யாசி கோவிலில் பிரார்த்தனையை முடித்த பிறகு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு காலமானதை பிபாபதி தேவி ஆதரவாளர்கள் அதை இறைவனின் தண்டனை என்று கதைத்தனர்.
இராச்சியத்தின் சொத்துக்களை (சுமார் 8 லட்சம் ரூபாய்) நிர்வகிக்க மறுத்து ஹூக்லி மாவட்டம் உத்தரபாரா நகரத்தில் கங்கைக்கு அருகில் பிபாபதி தேவி வாழ்ந்து மறைந்தாக கூறப்படுகிறது. இதையெடுத்து, இராச்சியத்தை காப்புளார் மன்றம் கவனித்து வந்தது. பிபாபதி தேவி குறித்து மேலதிக விவரங்கள் உறுதிபட தெரியவில்லை.
அடையாளம் காணப்பட்ட ராஜா காலமாகி போனார். இராச்சியத்தின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்ட பிபாவதி தேவி இராச்சியத்தை விட்டு விலகி போனார். இந்த கண்ணோட்டத்தின் படி பாவல் வழக்கு குறித்து உண்மையை சுருக்கமாகச் சொன்னால், "யாரும் வெற்றி பெறவில்லை".
தடயவியல் ஆய்வுத் துறை
தடயவியல் ஆய்வுத் துறையில் ஆதாரங்களை "அடையாளம் காண்பதற்கு" பாவல் வழக்கு மிக பிரபலமானது. நீதிமன்ற விசாரணைகளில் "அடையாளம்" பற்றிய கேள்விகளை பாவல் வழக்கு முன்னுக்கு கொண்டு வந்தது. ராஜா மற்றும் சன்யாசிக்கு இடையே உள்ள பல்வேறு ஒற்றுமைகள் மூலம் ஒரு நபரை அடையாளம் காண பல்வேறு அடையாளத் தரவுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய யோசனையை இது வழங்கியது. இன்றும் இந்தியாவில் உள்ள சட்டப் பள்ளிகளில் பாவல் வழக்கு அடையாளம் காணல் மற்றும் அறிவியல் தரவுகள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் முறைகளின் அவசியத்தை விளக்குவதற்கு ஒரு குறிப்பாக பயன்படுத்தப்படுகிறது.
சன்யாசிக்கு சாதகமாக இருவரின் புகைப்படங்களும் மிகவும் ஒத்திருந்தன. அவர்களின் நடை, குரல் மற்றும் வெளிப்பாடு கூட 21 அடையாளங்கள் கச்சிதமாக இருந்தது. அக்காலத்தின் அனைத்து பிரபலமான வஞ்சகர் மற்றும் தவறாக அடையாளம் காணப்பட்ட கதைகளில், "வஞ்சகருக்கு" (Imposter) ஆதரவாக தீர்க்கப்பட்ட ஒரே கதை இது தான் என்று பரவலாக கருதப்படுகிறது.
பாவல் வழக்கின் போது கைரேகை தொழில்நுட்பம் நன்கு நிறுவப்பட்டது. ஆனால் 1909 வரையிலான ராஜாவின் கைரேகை பதிவுகள் எதுவும் இல்லாததால் ஆய்வுக்கு பயன்படுத்த முடியவில்லை. மேலும் அந்தக் காலத்தில் DNA தொழில்நுட்பம் இருந்திருந்தால் பாவல் வழக்கை ஒரு வாரத்திற்குள் அதிக செலவு இல்லாமல் தீர்த்திருக்க முடியும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சுருக்கமாகச் சொன்னால், கிட்டத்தட்ட 25 ஆண்டுகால கடும் போராட்டத்திற்கு பிறகு முடிவுக்கு வந்த பாவல் வழக்கு நடைபெற்ற போதே நாட்டில் அதிநவீன தடயவியல் தொழில்நுட்பம் இருந்திருந்தால் குறுகிய காலத்தில் தீர்க்கப்பட்டிருக்கும்.
முடிவுரை
சுவாரஸ்யமாக, பாவல் வழக்கில் சட்டரீதியான தடயவியல் சான்றுகள் பல ஆதாரங்களைக் கொண்டுள்ளன ஏனெனில் சன்னியாசி உடலும் பண்பும் இளவரசரை போலவே இருந்தது. சன்னியாசியின் ஆண்குறியின் பின்புறத்தில் ஒரு மச்சம் கூட ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொதுவாக இராச்சியத்திற்கு ஆதரவாக செயல்படக்கூடிய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சக்திகளால் புறக்கணிக்க முடியாத ஆதாரங்கள் சன்னியாசிக்கு ஒரு பெரிய அடித்தளமாக இருந்த காரணத்தால் சன்னியாசிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1930-1940 களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாவல் வழக்கும் அதன் நீதிமன்ற நடவடிக்கைகளும் பல்வேறு கற்பனைக் கதைகளுக்கு வித்திட்டன. கிசுகிசுக்களால் மக்களின் ஆர்வத்தைத் தணிக்க எல்லாப் பத்திரிகைகளிலும் விவாதிக்கப்பட்டது. நாளடைவில் பாவல் வழக்கு கலைகளின் அடையாளமாகவும், புத்தகங்கள், பாடல்கள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்களின் பொருளாகவும் மாறியது. மேலும் பாவல் வழக்கு குறித்து எழுத்தாளர் பார்த்தா சாட்டர்ஜி எழுதிய "ஒரு இளவரசர் வஞ்சகரா?" என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது.
விவரணைகள்
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.