Chocks: December 2024

Sunday, December 8, 2024

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள்

பொருளடக்கம் 
  1. முகவுரை
  2. ஹெல்டர் ஸ்கெல்டர்
  3. டெர்ரி மெல்ச்சர்
  4. கொலைக்கான காரணங்கள் 
  5. முடிவுரை
  6. பின்குறிப்பு 
  7. விவரணைகள் 
முகவுரை

மேன்சன் குடும்பத்தின் தலைவரான சார்லஸ் மேன்சனின் ஆதரவாளர்கள், 1969 ஆகஸ்ட் 9 இரவு 8 மாத கர்ப்பிணியான ஷரோன் டேட், அவரது நண்பர்களான ஜே செப்ரிங், அபிகெய்ல் ஃபோல்கர், வோஜ்சிக் ஃப்ரைகோவ்ஸ்கி மற்றும் ஸ்டீவன் பேரன்ட் ஆகிய 5 பேரை கொன்றனர். அடுத்த நாள் மாலை, சார்லஸ் மேன்சன் குழு லெனோ லேபியான்கா மற்றும் ரோஸ்மேரி லேபியான்காவை கொலை செய்தது. ஏழு கொலைகள், ஒவ்வொன்றும் வெவ்வேறு முறையில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மரணித்தவர்களின் வீடுகளில் நிகழ்ந்தன.
ஹெல்டர் ஸ்கெல்டர்

பிரபல ராக் இசைக்குழுவான "தி பீட்டில்ஸ்", குறிப்பாக அவர்களின் 1968 "ஒயிட் ஆல்பம்" பற்றி சார்லஸ் மேன்சன் அடிக்கடி பேசினார். அந்த ஆல்பத்தின் 30 பாடல்களில், "ஹெல்டர் ஸ்கெல்டர்" பாடலில் கவனம் செலுத்திய சார்லஸ் மேன்சன், இது அமெரிக்காவில் வரவிருக்கும் இனப் போரை பற்றிய செய்தி என்று நம்பினார். சுருக்கமாக, இந்த கொலைகள் சார்லஸ் மேன்சனின் மாயமான "இனப் போர்" நம்பிக்கையால் தூண்டப்பட்டன, அதை அவர் "ஹெல்டர் ஸ்கெல்டர்" என்று குறிப்பிட்டார் என பரவலாக செய்திகள் பரவியது. இருப்பினும், இந்த கொலைகள் அவரது தனிப்பட்ட விரக்தியின் காரணமாக நடத்தப்பட்டதாகவும் விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

டெர்ரி மெல்ச்சர்

சார்லஸ் மேன்சன் ஒரு வெற்றிகரமான இசைக்கலைஞராக ஆசைப்பட்டு, ஒரு இசைப்பதிவு ஒப்பந்தத்தைப் பெற முயன்றார். இதற்காக, அவர் இசை தயாரிப்பாளரான டெர்ரி மெல்ச்சரை சந்தித்தார். டெர்ரி மெல்ச்சர் ஆரம்பத்தில் சார்லஸ் மேன்சனின் இசையில் ஆர்வம் காட்டினார். ஆனால், இறுதியில் சார்லஸ் மேன்சனுக்கும் ஸ்டண்ட் நடிகரான கேரி கென்ட்டிற்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலை அறிந்த பிறகு, டெர்ரி மெல்ச்சர் சார்லஸ் மேன்சனை சரியில்லாதவர் என எண்ணி விலகினார். டெர்ரி மெல்ச்சரின் தீடீர் நிராகரிப்பு சார்லஸ் மேன்சனை ஆழமாக கோபப்படுத்தியது.
கொலைக்கான காரணங்கள் 

டெர்ரி மெல்ச்சர் முன்பு ஷரோன் டேட் மற்றும் அவரது கணவர், பிரபல இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி வாழ்ந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார். சார்லஸ் மேன்சனின் ஆதரவாளர்கள், டெர்ரி மெல்ச்சர் வசித்த வீட்டை தங்கள் சொந்த துன்பத்தின் அடையாளமாகக் கருதி, அந்த வீட்டை குறிவைத்து, சார்லஸ் மேன்சனின் குழு அந்த வீட்டில் டெர்ரி மெல்ச்சர் இல்லாத போதும் கொலைகளை அரங்கேற்றினர். கொலைகள் நடந்த நேரத்தில், ரோமன் போலன்ஸ்கி வெளிநாட்டில் ஒரு திரைப்படத்தில் வேலை செய்து கொண்டிருந்த காரணத்தால் தப்பித்தார். டெர்ரி மெல்ச்சருக்கு எதிரான பழிவாங்கல் கொலைகளுக்கான நோக்கமாகக் குறிப்பிடப்பட்டாலும், இக்கொலைகளின் பின்னணியில் பாபி பியூசோலைலை காப்பாற்றவே காரணமாக இருந்தன என்ற குற்றச்சாட்டுகளும் இருந்தன.

சார்லஸ் மேன்சன் குழுவை சேர்ந்த பாபி பியூசோலைல், இசையாசிரியர் கேரி ஹின்மேன் கொலை வழக்கில் தண்டனை பெற்றார். கேரி ஹின்மேனைக் கொன்ற பிறகு, இந்த கொலையை அரசியல் தீவிரவாதிகள் குழு செய்ததாக காவல்துறையை நம்ப வைக்கும் முயற்சியில், அவரது இரத்தத்தில் "பன்றி" என்று எழுதியிருந்தார். இந்த பின்னணியில், சார்லஸ் மேன்சன் குழுவை சேர்ந்த சூசன் அட்கின்ஸ், கொலை செய்யப்பட்ட ஷரோன் டேட் என்ற இளம் நடிகையின் இரத்தத்தைப் பயன்படுத்தி, அவரது வீட்டின் முன் கதவில் "பன்றி" என்று எழுதியிருந்தார்.

கேரி ஹின்மேனின் கொலையை நகலெடுப்பதற்காக "நகல் குற்றம்" என்ற கோட்பாட்டின் அடிப்படையில், டேட்-லேபியங்கா கொலைகள் செய்யப்பட்டதாக சூசன் அட்கின்ஸ் விசாரணையின் போது கூறினார். இது, சார்லஸ் மேன்சன் குழுவை சேர்ந்த பாபி பியூசோலைலை சிறையிலிருந்து வெளியேற்ற உதவும் என்றும், காவல்துறையின் விசாரணை கோணத்தை வேறு திசையில் திருப்பும் என்றும், சார்லஸ் மேன்சன் குழு நம்பியிருந்தது. ஆனால் அவர்கள் நம்பியது போல எதுவும் அவ்வாறு நடக்கவில்லை என்பதும், தேவையின்றி ஏழு கொலைகள் அரங்கேற்றப்பட்டதும் வேதனைக்குரிய உண்மையாகும்.
முடிவுரை

சார்லஸ் மேன்சன் கொலைகளை செய்யவில்லை என்றாலும், அவரது சித்தாந்தம் வெளிப்படையான சதிச்செயல்களுக்கு காரணமாக அமைந்தது என்று அமெரிக்க அரசுத் தரப்பு வாதிட்டது. சார்லஸ் மேன்சன் வழக்கு விசாரணை செய்யப்பட்டு பல கட்டங்களில் பலருக்கு தண்டனைகள் வழங்கப்பட்டன.

சார்லஸ் மேன்சன் இனப்போர் வாதத்தை மறுத்தார். இந்தக் கொலைகள் உண்மையில் அவரது நண்பர் பாபி பியூசோலைலுக்கு உதவுவதற்காகவே செய்யப்பட்டதாகக் கூறினார். 2017 ஆம் ஆண்டு பெருங்குடல் புற்றுநோயால் இறப்பதற்கு முன் வரை சார்லஸ் மேன்சன் கொலைகளுக்கு தண்டனை பெற்று சிறையில் இருந்தார். மானுடத்திற்கு விரோதமான சார்லஸ் மேன்சனின் திரிக்கப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் தனிப்பட்ட மனக்கசப்புகளால் உந்தப்பட்ட டேட்-லேபியங்கா கொலைகள், அமெரிக்க குற்றவியல் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன.

பின்குறிப்பு 

1977 ஆம் ஆண்டு, 13 வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமைக்காக ரோமன் போலன்ஸ்கி குற்றம் சாட்டப்பட்டார். விசாரணையின் முடிவில் சிறையில் அடைக்கப்படலாம் என்பதை அறிந்ததும், தண்டனை அறிவிப்புக்கு முன்பு, 1978 ஆம் ஆண்டு பிரான்சுக்குத் தப்பிச் சென்றார் ரோமன் போலன்ஸ்கி. அதன் பிறகு, அவர் 46 ஆண்டுகளாக பிரான்சில் வசித்து வருகிறார். அமெரிக்க வழக்கு நிலுவையில் இருப்பதால், அமெரிக்காவிற்கு செல்வதையும், அமெரிக்காவிற்கு ஒப்படைக்கக்கூடிய நாடுகளுக்கு செல்வதையும் ரோமன் போலன்ஸ்கி தவிர்த்து வருகிறார்.

உலகறிந்த பிரபல இயக்குனரான குவென்டின் டரான்டினோ இயக்கிய "Once Upon a Time in Hollywood" என்ற புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படத்தில் ஷரோன் டேட்டின் கதை இடம்பெற்றுள்ளது.
விவரணைகள் 

How Sharon Tate’s Death and the Manson Killings Gripped Los Angeles


Polanski, Facing Court Sentence, Flies to Europe


The mysteries surrounding the Manson Family


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...