Chocks: April 2025

Monday, April 14, 2025

தமிழ்நாடு அரசு எதிர் ஆளுநர் வழக்கு

தமிழ்நாடு அரசு எதிர் ஆளுநர் வழக்கு
பொருளடக்கம் 
  1. முகவுரை 
  2. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்கள்  
  3. பொதுவான சட்ட நடைமுறை
  4. அரசாணை - அரசிதழ்
  5. 10 மசோதாக்கள் மீதான தீர்ப்புக்கு பின்னர்
  6. மசோதாக்கள் நகர்வுகளின் காலவரிசை
  7. அங்கீகரிக்கப்பட்ட 10 மசோதாக்கள்
  8. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அட்டவணை
  9. உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில்
  10. முடிவுரை 
  11. விவரணைகள்
முகவுரை 

தற்போது, ​​பல மாநிலங்களில் ஆளுநர்கள் பா.ஜ.க அரசின் முகவர்களாகக் கருதப்படுகிறார்கள், இது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு ஏற்ப இரட்டை ஆட்சி முறைக்கு வழிவகுக்கிறது. சமீபத்தில், ஆளுநரின் அத்துமீறல்களை எதிர்கொள்ள, மாநில அரசின் செயல்பாடுகளில் ஆளுநரின் செல்வாக்கைக் குறைக்கும் வகையில் அல்லது கேள்விக்குள்ளாக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் "தமிழ்நாடு அரசு எதிர் ஆளுநர்" வழக்கில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

"ஒரு அரசியலமைப்பு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றால், அது முறையாக செயல்படுத்தப்பட வேண்டும்; இல்லையெனில், அது முற்றிலும் பயனற்றதாகிவிடும்" என்றார் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர். இதன் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றம் இரண்டாவது முறையாக அனுப்பிய 10 மசோதாக்கள் மீது எந்தவொரு முடிவும் எடுக்காமல், அவற்றை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை, அரசியலமைப்பின் 200 வது பிரிவிற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்கள் 

13-01-2020 முதல் 28-04-2023 வரை, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் 12 மசோதாக்களை (அதில் 2 மசோதாக்கள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலும், 10 மசோதாக்கள் தி.மு.க ஆட்சிக்காலத்திலும்) நிறைவேற்றி, அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

1.மசோதா எண் 2/2020 தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம் செய்யும் மசோதா.

2.மசோதா எண் 12/2020 = தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகச் சட்டத்தில் மாற்றம் செய்யும் மசோதா.

3.மசோதா எண் 24/2022 = பல்கலைக்கழகங்களின் சட்டங்களைத் திருத்தும் மசோதா. சென்னை பல்கலைக்கழகம் தவிர, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்கள் அரசின் மூலம் நியமிக்கப்பட வேண்டும்.

4.மசோதா எண் 25/2022 = சென்னை பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம் செய்யும் மசோதா.

5.மசோதா எண் 26/2022 = சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றுக்கான பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் வகை செய்வதற்கான மசோதா.

*மசோதா எண் 25/2022 மற்றும் 26/2022 ஆகியவை இன்னும் ஜனாதிபதியின் முடிவுக்காக நிலுவையில் உள்ளன.

6.மசோதா எண் 29/2022 = தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகச் சட்டத்தில் மாற்றம் செய்யும் மசோதா.

7.மசோதா எண் 39/2022 = தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகச் சட்டத்தில் மாற்றம் செய்யும் மசோதா.

8.மசோதா எண் 40/2022 = தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகச் சட்டத்தில் மாற்றம் செய்யும் மசோதா.

9.மசோதா எண் 48/2022 = தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் மாற்றம் செய்யும் மசோதா.

10.மசோதா எண் 55/2022 = தமிழ் பல்கலைக்கழகச் சட்டத்தில் மாற்றம் செய்யும் மசோதா.

11.மசோதா எண் 15/2023 = தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகச் சட்டத்தில் மாற்றம் செய்யும் மசோதா.

12.மசோதா எண் 18/2023 = தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகச் சட்டத்தில் மாற்றம் செய்யும் மசோதா.

பொதுவான சட்ட நடைமுறை

முதல் படி = சட்ட முன்வடிவு (Bill - மசோதா) சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறது.

இரண்டாம் படி = ஆளுநருக்கு அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவிற்கு (Bill) ஆளுநர் ஒப்புதல் அளித்தால், அது ஒரு சட்டமாக (Act) மாறுகிறது.

மூன்றாம் படி = ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு, அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசால் அதிகாரப்பூர்வ அரசாணை (G.O.) வெளியிடப்படுகிறது.

நான்காம் படி = சட்டம் எந்த நாளில் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடப்பட்டு, அரசிதழில் (Gazette) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

அரசாணை - அரசிதழ்

அரசாணை = அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ உத்தரவு அல்லது அறிவிப்பு ஆகும்.

அரசிதழ் = அரசு வெளியிடும் அறிவிப்புகளின் தொகுப்பாகும். இதில் அரசாணைகள், விதிகள், பிரிவுகள் போன்றவை அடங்கும். அரசிதழ் வாயிலாகவே ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்ததாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

குறிப்பு = அனைத்து அரசாணைகளும் (G.O.) அரசிதழில் முழுமையாக வெளியிடப்பட வேண்டிய அவசியமில்லை. சில முக்கியமான உத்தரவுகள் (அரசாணை எண், அரசு குறிப்பு போன்றவை) மட்டுமே அரசிதழில் வெளியாகும். மற்றவை தொடர்புடைய அலுவலகங்களுக்கு மட்டும் அனுப்பப்படும்.

10 மசோதாக்கள் மீதான தீர்ப்புக்கு பின்னர் 

இரண்டாம் படி = ஆளுநர் கையொப்பம் இல்லாமலே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சட்ட முன்வடிவுகள் (Bills) சட்டங்களாக (Acts) மாற்றப்பட்டன.

நான்காம் படி = 18-11-2023 அன்று மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நாள் முதல், சட்டங்கள் அமலுக்கு வந்துவிட்டதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மசோதாக்கள் நகர்வுகளின் காலவரிசை

31-10-2023தமிழ்நாடு அரசு, 12 மசோதாக்களுக்கான ஆளுநரின் நடவடிக்கையின்மையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

10-11-2023உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

10-11-2023 = "பஞ்சாப் மாநிலம் எதிர் பஞ்சாப் ஆளுநரின் முதன்மைச் செயலாளர்" வழக்கில் மாநில அமைச்சரவையின் ஆலோசனையை ஆளுநர் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

13-11-202312 மசோதாக்களில், 10 மசோதாக்களை எந்த காரணமும் குறிப்பிடாமல் நிராகரித்து, அவற்றை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பிய ஆளுநர், மீதமுள்ள 2 மசோதாக்களை ஜனாதிபதியின் பரிசீலனைக்காக சமர்ப்பித்தார்.

18-11-2023 = தமிழ்நாடு அரசு, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், ஆளுநரால் ஒப்புதல் பெறாத 10 மசோதாக்களை எந்த மாற்றங்களும் செய்யாமல் மீண்டும் நிறைவேற்றி, அதே நாளில் ஆளுநருக்கு திருப்பி அனுப்பியது.

28-11-2023 = ஒப்புதல் அளிக்க மறுத்த ஆளுநர், 10 மசோதாக்களை ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பி வைத்தார்.

18-02-2024 = ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களில், ஜனாதிபதி 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் மறுத்து, 1 மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி, 2 மசோதாக்களை பரிசீலனையில் வைத்தார். (48/2022 மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார்).

07-03-2024 = 48/2022 மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.

08-04-2025 = "பஞ்சாப் மாநிலம் எதிர் பஞ்சாப் ஆளுநரின் முதன்மைச் செயலாளர்" வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, மசோதாக்களை ஜனாதிபதியின் பரிசீலனைக்காக ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியாது. ஆகவே, ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற ஆளுநர் எடுத்த முயற்சி சட்டவிரோதம் என்றதுடன், தமிழ்நாடு அரசு 10 மசோதாக்களை இரண்டாவது முறையாக 18-11-2023 அன்று அனுப்பிய நாளிலே ஆளுநர் ஒப்புதல் அளித்ததாகக் கருதி, அந்த 10 மசோதாக்கள் சட்டங்களாகக் கருதப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

11-04-2025 = உச்ச நீதிமன்றம் 415 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகு, 18-11-2023 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 10 மசோதாக்களும் சட்டங்களாகக் கருதப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தனது அரசிதழில் வெளியிட்டது.

அங்கீகரிக்கப்பட்ட 10 மசோதாக்கள்

உச்ச நீதிமன்றம் 142 வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கிய தீர்ப்புக்கு பின்னர், 10 சட்டத் திருத்தங்கள் அமலுக்கு வந்தன. இவை பெரும்பாலும், முதலமைச்சர் வேந்தராக (Chancellor) செயல்படுவது, மாநில அரசு துணைவேந்தரை (Vice-Chancellor) நியமிப்பது, விசாரணை நடத்துவது, பெயர் மாற்றம் செய்வது மற்றும் நிர்வாகத்தில் பங்கு பெறுவது போன்ற அதிகாரங்களை வழங்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

1.தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (சட்டத் திருத்தம்), 2020.

2.தமிழ்நாடு விலங்குகள் மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் (சட்டத் திருத்தம்), 2020.

3.தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் (சட்டத் திருத்தம்), 2022.

4.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (சட்டத் திருத்தம்), 2022.

5.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் (சட்டத் திருத்தம்), 2022.

6.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (சட்டத் திருத்தம்), 2022.

7.தமிழ் பல்கலைக்கழகம் (இரண்டாம் சட்டத் திருத்தம்), 2022.

8.தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் (இரண்டாம் சட்டத் திருத்தம்), 2022.

9.தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (சட்டத் திருத்தம்), 2023.

10.தமிழ்நாடு விலங்குகள் மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் (சட்டத் திருத்தம்), 2023.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அட்டவணை

மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஆளுநரின் பங்கு, அமைச்சர்கள் வழங்கும் ஆலோசனை மற்றும் நீதித்துறை எந்த அளவிற்கு இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிட முடியும் என்பது தொடர்பான சட்டக் கோட்பாடுகளை இந்த தீர்ப்பு ஆராய்கிறது. இந்த வழக்கு தொடர்பாக, "இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, சிங்கப்பூர், இலங்கை, கிரிபாஸ், பிஜி, சாலமன் தீவுகள், அண்டிக்குவா-பர்புடா, பாகிஸ்தான், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான்" உள்ளிட்ட பல நாடுகளின் அரசு நிர்வாக அமைப்புகளை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1.உண்மை பின்னணி = மசோதா ஒப்புதல்கள், ஊழல் விசாரணைகள் மற்றும் அரசியல் நியமனங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளை விளக்குகிறது.

2.சமர்ப்பிப்புகள் = வழக்கில் இரு தரப்பினரின் வாதங்களை முன்வைக்கின்றது.

3.பரிசீலனைக்கான சிக்கல்கள் = முடிவு செய்யப்பட வேண்டிய முக்கிய சட்ட கேள்விகளை பட்டியலிடுகிறது.

4.வரலாற்று சூழல் = மசோதா ஒப்புதலின் வரலாற்றையும், தொடர்புடைய அரசியலமைப்பு விவாதங்களையும் மதிப்பாய்வு செய்கிறது.

5.ஆளுநரின் அதிகாரங்கள் (200 வது பிரிவு) = மாநில அமைச்சர்கள் குழுவின் பங்கு உட்பட, 200 வது பிரிவின் கீழ் ஆளுநரின் அதிகாரத்தை ஆராய்கிறது.

6.நீதித்துறை மதிப்பாய்வு = ஆளுநரின் நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதியின் பங்கை நீதித்துறை மதிப்பாய்வு செய்ய முடியுமா என்பதை ஆராய்கிறது.

7.முடிவு = வழக்கின் இறுதி தீர்ப்பு.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில்

415 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் நகல் ஜனாதிபதிக்கும், அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், "ஆளுநர் அனுப்பிய மசோதாவைப் பற்றி ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்; இல்லையெனில் அவரது செயல்பாட்டின்மையை எதிர்த்து மாநில அரசுகள் நீதிமன்றத்தை அணுகலாம்" என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு, நீட் விலக்கு மசோதா ஜனாதிபதியிடம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதால், அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், "சுதந்திரத்திற்கு பிறகு பல ஆண்டுகள், ஒரு பெரிய கட்சி நாடு முழுவதும் ஆட்சி செய்ததால், ஒன்றிய - மாநில அரசுகளுக்கிடையிலான உறவில் பெரிதாக எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இதனால், ஆளுநரின் பங்கு மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு, மாநிலக் கட்சிகள் அதிகாரத்திற்கு வரத் தொடங்கின. இதனால், ஒன்றிய - மாநில அரசுகளுக்கிடையிலான மோதல்கள் உருவாகத் தொடங்கின. அதன் காரணமாக, ஆளுநர்கள் ஜனாதிபதி ஆட்சி பரிந்துரை செய்வது, அல்லது மாநில சட்டங்களை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்புவது போன்ற அதிகாரங்களை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கினர். இந்த பிரச்சனையை சமாளிக்க, ஒன்றிய - மாநில அரசுகளுக்கிடையிலான உறவை ஆய்வு செய்ய நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (1966), ராஜமன்னார் ஆணையம் (1971), சர்காரியா ஆணையம் (1983), புஞ்சி ஆணையம் (2007) ஆகிய ஆணையங்கள் அமைக்கப்பட்டன" என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மொத்தத்தில், "தமிழ்நாடு அரசு எதிர் ஆளுநர் வழக்கு" தீர்ப்பை முன்மாதிரியாக கொண்டு, "நிர்வாகச் சீர்திருத்தம், ராஜமன்னார், சர்க்காரியா, பூஞ்ச்" போன்ற ஆணையங்களின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆளுநரின் அதிகாரங்கள் பற்றிய விவாதம் இன்னும் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

முடிவுரை

வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு தனது தவறுகளை திருத்திக்கொள்ள பல வாய்ப்புகளை வழங்கியது. இருப்பினும், ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினார். இதன் விளைவாக, மாநில சுயாட்சி தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் எதிர்மறையான நிலையை பெற்றார்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அன்றைய முதலமைச்சர் கலைஞர், 1974 ஆம் ஆண்டு முதல் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை மாநில முதலமைச்சர்களுக்கு பெற்றுத் தந்தார். ஆளுநருடன் சட்டப்போராட்டம் நடத்தி, இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2025 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களின் வேந்தராகப் பணியாற்றும் உரிமையை மாநில முதலமைச்சர்களுக்கு பெற்றுத் தந்தார். மொத்தத்தில், கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்தி, மாநில சுயாட்சியின் நோக்கத்தை நிலைநிறுத்த தி.மு.க தொடர்ந்து வாதிடுகிறது.
விவரணைகள்


2023 - State of Punjab vs Principal Secretary to the Governor of Punjab 


2025 - The State of Tamil Nadu vs the Governor of Tamil Nadu


2025 - Government Gazette Notification


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Wednesday, April 2, 2025

1977 - 1980 தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகள்

1977 - 1980 தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகள்

பொருளடக்கம் 
  1. சிறையில் பூத்த மலர்
  2. கலைஞரின் முயற்சி
  3. 1977 தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல்
  4. 1977 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
  5. இந்திரா காந்தியின் பதிலடி
  6. 1980 தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல்
  7. தமிழ்நாட்டின் கூட்டணி கதைகள்
  8. துணுக்கு செய்தி 
  9. விவரணைகள்
சிறையில் பூத்த மலர்

இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலைக்கு எதிராக எதிர்க்கட்சிகள், சர்வோதய சங்கத்தை நடத்தி, மக்களிடையே நல்ல செல்வாக்கை கொண்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் ஆதரவு கேட்ட போது, அவர் அனைத்து கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணைவது நல்லது என்று கூறினார். இதன் காரணமாக, திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த எதிர்க்கட்சித் தலைவர்களிடையேயான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, சோசலிசம் முதல் இந்துத்துவா வரையிலான சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்து "ஜனதா கட்சி" கூட்டணி உருவாகியது. இந்த கூட்டணியை ஜெயப்பிரகாஷ் நாராயணன் வழிநடத்தினார்.

1980 வரை தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்திலும் "ஜனதா கட்சி" கூட்டணி குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருந்தது. இத்தகைய பின்னணியில், 1977 முதல் 1980 வரை தமிழ்நாட்டில் JP, INC ஆகிய தேசியக் கட்சிகளுக்கும் DMK, ADMK ஆகிய திராவிடக் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி உறவுகளைப் பற்றி காண்போம்.

கலைஞரின் முயற்சி

15-12-1976 அன்று, DMK நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியனின் டெல்லி இல்லத்தில், இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கவும், நெருக்கடி நிலை நடவடிக்கைகளை எதிர்க்கவும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து கலைஞர் ஒரு கூட்டத்தை நடத்தினார்.

டெல்லியில் கலைஞர் மேற்கொண்ட இம்முயற்சி, ஜனதா தலைவர்களின் ஆதரவுடன் இயங்கிய "ஜனதா கட்சி" கூட்டணிக்கு புத்துணர்ச்சியை ஊட்டியது. நெருக்கடி நிலை நடவடிக்கைகளை எதிர்க்கும் பொருட்டு, ஜனதா கட்சியுடன் தனது கூட்டணியைத் தக்க வைத்துக்கொள்வதே கலைஞரின் நோக்கமாக இருந்தது. நெருக்கடி நிலை காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உட்பட சிலருக்கு DMK அடைக்கலம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
கலைஞரின் நெஞ்சுக்கு நீதி பாகம் 2
1977 தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல்

மார்ச் 1977 இல் நடைபெற்ற தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தலில், CPM + INC (O) உள்ளிட்ட "ஜனதா கட்சி" கூட்டணியுடன் இணைந்து DMK போட்டியிட்டது. ஆனால், INC (Indira) + CPI உடன் கூட்டு சேர்ந்த ADMK வெற்றி பெற்றது. இருப்பினும் இந்தியளவில், “ஜனதா கட்சி” கூட்டணி 1977 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், கலைஞர் மற்றும் பிற முக்கிய தலைவர்கள் பிரதமர் மொரார்ஜி தேசாயை சந்தித்தனர். ஆனால், அந்த சந்திப்பு கூட்டத்தை மொரார்ஜி தேசாய் சரிவர கையாளவில்லை. இதன் முடிவில், தமிழ்நாட்டில் DMK உடன் இருந்த கூட்டணியை முறித்து கொண்டு “ஜனதா கட்சி” விலகியது.

இந்த காலத்தில், INC (Indira) உடன் இணைந்திருந்த கூட்டணியை விட்டு விலகி, “ஜனதா கட்சி” கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்த MGR, பிரதமர் மொரார்ஜி தேசாயை ஆதரித்தார். மேலும், பிரதமர் சரண் சிங் அமைச்சரவையில் ADMK இடம் பெற்றது. MGR மேற்கொண்ட நடவடிக்கை இந்திரா காந்திக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

1977 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

ஜூன் 1977 இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், DMK மற்றும் "ஜனதா கட்சி" கூட்டணி தனித்தனியாக போட்டியிட்டன. இந்தத் தேர்தலில், 57.34 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ADMK கூட்டணி சார்பில் MGR முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

தனித்து போட்டியிட்ட DMK 42.58 லட்சம் வாக்குகளைப் பெற்றது. DMK கூட்டணியை விட்டு பிரிந்த “ஜனதா கட்சி” கூட்டணி 28.51 லட்சம் வாக்குகளைப் பெற்றது. DMK மற்றும் “ஜனதா கட்சி” கூட்டணி இணைந்து போட்டியிட்டிருந்தால், அவர்களின் மொத்த வாக்குகள் 71.09 லட்சம் வாக்குகளாக இருந்திருக்கும், இது ADMK கூட்டணி பெற்ற மொத்த வாக்குகளைவிட 13.75 லட்சம் வாக்குகள் அதிகமாகும்.

மொத்தத்தில், 1977 தமிழக நாடாளுமன்றத் தேர்தலைப் போல, 1977 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் DMK மற்றும் "ஜனதா கட்சி" கூட்டணி நீடித்திருந்தால், வாக்குச் சதவீதம் அடிப்படையில் MGR முதலமைச்சர் ஆகியிருக்க வாய்ப்பில்லை. இதனால், தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பு (Political Landscape) மாறி இருக்கக்கூடும்.

இந்திரா காந்தியின் பதிலடி

1979 இல் தஞ்சாவூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட விரும்பியிருந்த நிலையில், "ஜனதா கட்சி" கூட்டணி கொடுத்த அழுத்தத்தால், முதலமைச்சர் MGR இந்திரா காந்தியின் முடிவுக்கு இசைவு தெரிவிக்கவில்லை.

ஜனதா கட்சியை ஆதரித்த ADMK மீது கோபத்தில் இருந்த இந்திரா காந்தி, ஜனதா கட்சியை எதிர்த்த DMK உடன் 1980 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி வைத்தார். இந்திரா காந்தியும் கலைஞரும் சென்னை கடற்கரையில் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். அப்போது கலைஞர் தமது கருத்துகளை இப்படி வெளிப்படுத்தினார்: “டெல்லியில் கேலிக்கூத்தான அரசு அமைவதை விரும்பவில்லை. நிலையான அரசு மத்தியில் அமைய வேண்டும் என விரும்புகிறோம். இந்திரா காந்தியால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும். அதனால், நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என்றார். சுவாரஸ்யமாக, இந்திரா காந்தி தமது கருத்துகளை இப்படி வெளிப்படுத்தினார்: “நாங்கள் தவறு செய்திருக்கிறோம். அதை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இனி தவறுகள் நடக்காது" என்றார்.

1980 தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல்

1979 இல் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை MGR அறிமுகப்படுத்தினார். இதனை மக்கள் மன்றத்தில் கலைஞர் கடுமையாக எதிர்த்தார். இதன் எதிரொலியாக, ஜனவரி 1980 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், DMK + INC (Indira) கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது, இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார், ADMK தோல்வி அடைந்தது.

இதன் விளைவாக, MGR தனது முடிவை மாற்றி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 31% இலிருந்து 50% ஆக உயர்த்தினார். இதனால் மொத்த இடஒதுக்கீடு 68% ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து, மே 1980 இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் DMK + INC கூட்டணி தோல்வியை தழுவியது, ADMK வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டின் கூட்டணி கதைகள்
1980-1990 களில் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் ADMK சரியான வாய்ப்புகளைப் பயன்படுத்தியது. அதே நேரத்தில், 2000 களில் இருந்து தேசியக் கட்சிகளுடன் முறையான கூட்டணிகளைப் பேணுவதன் மூலம் DMK மாநில அரசியல் அரங்கத்தை தாண்டி தேசிய அரசியல் அரங்கையும் கைப்பற்றியது.

துணுக்கு செய்தி 

நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் முக்கிய நபருமான பாபு ஜெகஜீவன் ராம், "Keep your Powder Dry" என்ற சொற்றொடரை சொல்லி, நெருக்கடி நிலையால் கடினமான காலகட்டத்தில் இருந்த தி.மு.க. தலைவர் கலைஞரை ஊக்குவித்தார். பாபு ஜெகஜீவன் ராமின் மகள் மீரா குமார், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் போது மக்களவையின் சபாநாயகராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.









வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

The Legacy of the Tamils, Iron, and Early Civilizations

The Legacy of the Tamils, Iron, and Early Civilizations Synopsis Introduction Tamils and Iron: A Technological Leap Ahead Technological ...