அ.தி.மு.க பிறந்த கதை
சுருக்கம்
- முகவுரை
- காரணம் ஒன்று கணக்கு
- காரணம் இரண்டு நாவலர்
- காரணம் மூன்று ஜெயலலிதா
- காரணம் நான்கு மு.க.முத்து
- காரணம் ஐந்து இந்திரா காங்கிரஸ்
- காரணம் ஆறு அமைச்சர் பதவி
- அ.தி.மு.க உருவாக காரணிகள்
- கால அட்டவணை
- விவரணைகள்
- முடிவுரை
முகவுரை
தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க தலைவருமான அண்ணாதுரை 3 பிப்ரவரி 1969 அன்று மறைந்தார். அவர் மறைவை தொடர்ந்து தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? என்ற குழப்பமான சூழல் நிலவியது. தமிழ்நாட்டின் முதல்வராக நாவலர் நெடுஞ்செழியன் ஆசைப்பட்டாலும் கட்சிக்குள் அவருக்கு பெரிய ஆதரவு இல்லை ஏனெனில் எம்.ஜி.ஆர் உட்பட தி.மு.க உறுப்பினர்கள், தொண்டர்கள் பெருவாரியாக (கலைஞர் மறுத்து வந்த நிலையிலும்) கலைஞரை தான் முதல்வராக ஆதரித்தனர். பின்னர் இறுதியில் கலைஞர் முதல்வராக, தி.மு.க தலைவராக நாவலர் நெடுஞ்செழியன் அமைச்சராக, தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பினை ஏற்றனர்.
காரணம் ஒன்று கணக்கு
1972இல் மதுரையில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டில் மேடையில் எம்.ஜி.ஆர் "தி.மு.க ஊழல் கட்சி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது, மக்களாகிய நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?" என கேட்டார். உடனே மக்கள் தி.மு.க ஊழல் கட்சி அல்ல என்று கரகோஷம் எழுப்பினர் அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என கூறினார். இப்படி தி.மு.க அரசியல்வாதியாக அறியப்பட்ட எம்.ஜி.ஆர் பின்னர் அதே வருடம் உட்கட்சி கூட்டத்தில் பேச வேண்டியதை பொதுவெளியில் தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்து கொண்டே தி.மு.க மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அந்த குற்றச்சாட்டு என்னவெனில் "தி.மு.க தலைவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அவர்கள் தங்களது சொத்துக் கணக்குகளைக் காட்ட வேண்டும்" என்றார். மேலும் 1972இல் மதுரையில் நடந்த கட்சி மாநாட்டிற்கு சேகரிக்கப்பட்ட தொகையின் கணக்கு குறித்தே முதலில் சர்ச்சை எழுந்தது. சேகரிக்கப்பட்டது ஐந்து லட்சம் என்றார் எம்.ஜி.ஆர், ஒரு லட்சம் தான் என்றார் கலைஞர்.
இதனை தொடர்ந்து நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் பலர் தி.மு.க செயற்குழுவை கூட்டி கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட எம்.ஜி.ஆர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலைஞரிடம் கூறினர். 10 அக்டோபர் 1972இல் நடைபெற்ற தி.மு.க கட்சி கூட்டத்தில் 32 உறுப்பினரில் 26 உறுப்பினர் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக நாவலர் நெடுஞ்செழியன் அறிவித்தார். 11 அக்டோபர் 1972இல் தி.மு.க சார்பில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி எம்.ஜி.ஆரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இடைநீக்க செய்தி "நேற்று இன்று நாளை" படப்பிடிப்புக்கு சத்யா ஸ்டுடியோவில் இருந்த எம்.ஜி.ஆருக்கு எட்டியது. படப்பிடிப்பு முடிந்ததும் எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர்களை சந்தித்தார், பாயசம் வழங்கினார், இடைநீக்கம் செய்யப்பட்டதால் மகிழ்வதாக கூறினார். ரசிகர்கள் தங்களது உச்ச நட்சத்திரம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ததைக் கேட்டு திகைத்துப் போனார்கள் அதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்றது. நோட்டீஸ் அனுப்பிய பிறகு தி.மு.க சார்பில் நாஞ்சில் மனோகரன், சத்யவாணி முத்து போன்றவர்கள் எம்.ஜி.ஆரிடம் மத்தியஸ்தம் பேசினர். இருப்பினும் நோட்டீஸுக்கு பதில் கூறாமல் 17 அக்டோபர் 1972 இல் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்ற தனி கட்சி தொடங்கினார்.
காரணம் இரண்டு நாவலர்
எம்.ஜி.ஆரை இடைநீக்கம் செய்திட கலைஞர் அவசரம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கலைஞரால் தான் தான் முதல்வராக முடியவில்லை என கருதிய தி.மு.க பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் கலைஞரை வேதனைக்குள்ளாக்க அந்நேர அரசியல் சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டு கலைஞரை ஆலோசிக்காமல் எம்.ஜி.ஆர் இடைநீக்க செய்தியை கட்சிக்குள் உறுதி செய்வதற்கு முன்னரே ஊடகத்திடம் கசியவிட்டார்.
தி.மு.கவில் அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் ஏப்ரல் 1977இல் ராஜாராம், மாதவன், சண்முகம் போன்றவர்களுடன் கட்சியை விட்டு வெளியேறி "மக்கள் தி.மு.க" என்ற கட்சியை தொடங்கினார். மக்கள் தி.மு.க 1977 தேர்தலில் தனியாக போட்டியிட்டது ஆனால் 1977இல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் செப்டம்பர் 1977இல் மக்கள் தி.மு.க அ.தி.மு.கவுடன் இணைந்தது. தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆரை இடைநீக்கம் செய்ய முக்கிய காரணியாக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். எம்.ஜி.ஆரின் வப்பாட்டி ஜானகி என்றெல்லாம் எம்.ஜி.ஆரை மிக கடுமையாக எதிர்த்தவர் பிறகு இறுதியில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க கட்சியிலே நம்பர் டூ இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
1972இல் மதுரையில் நடந்த தி.மு.க மாநாட்டில் ஜெயலலிதாவை மேடையில் உட்கார வைக்குமாறு மதுரை முத்துவிடம் எம்.ஜி.ஆர் கோரிக்கை வைத்தார். அதற்கு மதுரை முத்து மறுத்திட கலைஞரிடம் சென்று முறையிட்டார் எம்.ஜி.ஆர். தி.மு.கவின் முன்னணி தோழர்களுடன் தி.மு.கவின் உறுப்பினரல்லாதவரை இணைத்து மேடையில் உட்கார வைக்க அனுமதியளிக்க இயலாது என்று நாசூக்கான முறையில் நியாயமான வழியில் மறுத்தார் கலைஞரை. இதனை எண்ணி எம்.ஜி.ஆர் கோபம் கொண்டார்.
கலைஞரின் மகன் மு.க.முத்து சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான பிள்ளையோ பிள்ளை பட விழாவை 1972இல் எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்தார். பிள்ளையோ பிள்ளை படத்தில் இடம்பெற்ற "மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ" பாடலை வாலி எழுதினார். அதற்கு எம்.ஜி.ஆர் வாலியிடம் "மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்துவிடம் தானா?" என்று சினத்துடன் கேட்டுள்ளார். மு.க.முத்துவின் கதாபாத்திரங்கள் எம்.ஜி.ஆரை ஒத்திருந்தது. மேலும் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் மு.க.முத்து படங்களையும் கொண்டாடியது எம்.ஜி.ஆருக்கு சங்கடங்களை அதிகரித்தது. தி.மு.கவில் தன் செல்வாக்கை குறைக்க முயற்சிகள் நடக்கிறதோ என்று எம்.ஜி.ஆர் யோசிக்க தொடங்கினார்.
காரணம் ஐந்து இந்திரா காங்கிரஸ்
1971இல் காங்கிரஸ் அரசு எம்.ஜி.ஆரை இழுக்க ரிக்க்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கொடுத்து கௌரவித்தது (பாவம் சிவாஜிக்கு அரசியல் தெரியவில்லை). 1972இல் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எம்.ஜி.ஆர் அதிக பொருட்ச்செலவில் தயாரித்தார் அப்போது எம்.ஜி.ஆரின் கணக்குகளை கேட்டு மத்திய அரசு வருமான வரி சோதனை ஏவலாம் என்ற பேச்சு இருந்தது. எது எப்படியோ தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீண்டும் புத்துணர்ச்சி பெற மாநில கட்சியான தி.மு.கவின் பிளவு தேவையான ஒன்றாக இருந்தது அதற்கான அம்பு எம்.ஜி.ஆர்.
இதயவீணை படப்பிடிப்புக்கு காஷ்மீர் சென்ற எம்.ஜி.ஆர் அங்கிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு 1971இல் தி.மு.க தேர்தல் வெற்றிக்கு கலைஞரை வாழ்த்திவிட்டு தனக்கு ஒரு அமைச்சர் பதவியை ஒதுக்குமாறு கேட்டார். அதற்கு கலைஞர் நன்றாக தரலாம் ஆனால் நீங்கள் முழுநேர அரசியல்வாதியாக அதுவும் அமைச்சராக செயல்பட விரும்பினால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திட வேண்டுமே என்றார். சினிமாவே தனது ஆயுதம் என கருதியதால் சினிமாவை விட்டு விலகிட எம்.ஜி.ஆர் விரும்பவில்லை அதனால் அந்நேரத்தில் எம்.ஜி.ஆர் தி.மு.கவில் அமைச்சர் பதவியும் பெறவில்லை.
*தி.மு.க = கணக்கு விபரம்
*மு.க.முத்து = நாயகனாக அறிமுகம்
*ஜெயலலிதா = மதுரை மாநாடு மேடை மறுப்பு
*நாவலர் = முதல்வர் பதவி கிடைக்காத வெறுப்பு
*கலைஞர் = எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி மறுப்பு
*இந்திரா காந்தி = தமிழ்நாட்டில் காங்கிரஸ் சவாரி செய்ய
கால அட்டவணை
*ஜூன் 1972 = பரங்கிமலை தொகுதியில் ஒரு பகுதியை "கருணாநிதிபுரம்" என பெயரிட்டு கூட்டத்தில் எம்.ஜி.ஆர் உரையாற்றினார்.
*8 ஏப்ரல் 1972 = தி.மு.க செங்கல்பட்டு கூட்டத்தில் எம்.ஜி.ஆர் உரையாற்றினார்.
*27 ஏப்ரல் 1972 = பல்லாவரம் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் எம்.ஜி.ஆர் உரையாற்றினார்.
*28 ஜூலை 1972 = சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற எம்.ஜி.ஆருக்கு தி.மு.க நடத்திய பாராட்டு விழா கூட்டத்தில் எம்.ஜி.ஆர் நன்றி உரையாற்றினார்.
*5 ஆகஸ்ட் 1972 = தி.மு.க மதுரை மாநாட்டில் எம்.ஜி.ஆர் உரையாற்றினார்.
*8 அக்டோபர் 1972 = தி.மு.க தலைவர்கள் சொத்துக் கணக்குகளைக் காட்ட வேண்டும் என எம்.ஜி.ஆர் பேச்சு.
*10 அக்டோபர் 1972 = தி.மு.க செயற்குழுவில் எம்.ஜி.ஆர் மீது நடவடிக்கை எடுக்கவும் அவரை தற்காலிகமாக விலக்கி வைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*11 அக்டோபர் 1972 = தி.மு.க சார்பில் விளக்கம் கேட்டு எம்.ஜி.ஆருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
*14 அக்டோபர் 1972 = தி.மு.க பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார்.
*17 அக்டோபர் 1972 = மதுரையில் அ.தி.மு.க கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கினார்.
முடிவுரை
பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆரை தன் கட்டுக்குள் தான் வைத்திருந்தார். ஆனால் அண்ணாவின் மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டின் அரசியல் போக்குகள் மாறியது. அதன் சாட்சியாக அண்ணாவுக்கு முன் அண்ணாவுக்கு பின் என்று எம்.ஜி.ஆரின் படங்களை அணுகலாம். அண்ணா இருக்கும் போது நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன் என்று எம்.ஜி.ஆரின் பல படங்களில் அரசியல் பேசப்பட்டாலும் அண்ணாவின் மறைவுக்கு பிறகு எம்.ஜி.ஆர் 1969இல் தான் நம் நாடு என்ற நேரடி அரசியல் படத்தில் நடித்தார். முழுநேரம் அரசியலில் இறங்கவும் மக்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளவும் நம் நாடு படத்தை எம்.ஜி.ஆர் பயன்படுத்திக்கொண்டார். மேலும் அண்ணா இறந்த 44 மாதங்களில் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்ற தனி இயக்கத்தை கண்டார்.
எம்.ஜி.ஆர் "கணக்கு" என பேசியது அவரின் தனிப்பட்ட அரசியல் கணக்கு தான்.
தி.மு.க தலைவர்களிடம் கொண்ட "பிணக்கு" தான் எம்.ஜி.ஆரின் கணக்கு.
விவரணைகள்
கலைஞரின் செயலர் சண்முகநாதன் பேட்டி
Periyar About MGR Politics
MGR Expulsion From DMK
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.