Chocks: யாரிந்த சுகுமார குருப்?

Monday, November 22, 2021

யாரிந்த சுகுமார குருப்?

யாரிந்த சுகுமார குருப்?

சுருக்கம் 
  1. முகவுரை
  2. இறந்தது யார்?
  3. சிக்கிய தடயங்கள்
  4. மர்மத்தை விலக்கிய மருத்துவ அறிக்கை
  5. இறந்தது சுகுமார குருப்பா?
  6. குற்றம் நடந்தது என்ன?
  7. கோபாலகிருஷ்ணா குருப்
  8. ஏன் போலி இறப்பு சான்றிதழ்?
  9. வளைகுடா வாழ்க்கை
  10. வளைகுடா இளவரசர்
  11. என்ன சதித்திட்டம்?
  12. அன்றிரவு காரில் ஏறிய நபர்
  13. கொல்லப்பட்டது யார்?
  14. விசாரணை படலம்
  15. வழக்கின் முடிவு 
  16. தேடும் படலம்
  17. ஆயுத வியாபாரி 
  18. உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?
  19. கவனத்தை ஈர்த்த வழக்கு 
  20. முடிவுரை
  21. விவரணைகள்
முகவுரை

இக்கட்டுரையை சுகுமார குருப் கூட வாசிக்கக்கூடும்? என்னப்பா! தொடக்கமே  விவகாரமாக இருக்கிறதே என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. உயிரோடு இருக்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அப்படி இருந்தால், 37 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி எங்கு எப்படி உருமாறி இருக்கிறார் என்பதை யாரறிவார்? சரி வாருங்கள்! "கதைக்குள் கதை" காண்போம்.
இறந்தது யார்?

ஜனவரி 22, 1984 அன்று பனிமூட்டம் நீடித்த அதிகாலை 4 மணியளவில் மாவேலிக்கரை காவல் நிலைய பணியில் இருந்த தலைமைக் காவலரை நோக்கி ஓடோடி வந்த உள்ளூர்வாசி "அருகிலுள்ள நெல் வயலில் KLQ 7831 என்ற எண் கொண்ட கருப்பு நிற அம்பாசிடர் கார் விபத்துக்குள்ளாகி ஓட்டுநர் இருக்கையில் கருகிய உடலுடன் ஒருவர் தீயில் எரிந்துவிட்டதாக" கூறி திடுக்கிட்டார். 

புகாரை பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். அவ்விடத்தில் குழுமியிருந்த கிராமத்தினர் "கார் சாலையை விட்டு விலகி வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்திருக்கலாம் என்றும் அந்நேரத்தில் அதே சாலையில் மற்றொரு காரில் சிலர் செல்வதைக் கண்டதாகவும்" பேசிக்கொண்டனர்.
சிக்கிய தடயங்கள்

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) ஹரிதாஸ் குழுவினர் அதிகாலை 5:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுற்றுப்புறச் சூழலை உன்னிப்பாக ஆய்வு செய்த பிறகு தான், இந்த சம்பவம் ஒரு சாதாரண கார் விபத்து என்பதை விட ஏதோ சதி நடந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டும் சிறிய தடயங்கள் குவியத் தொடங்கின. எடுத்துக்காட்டாக, தீப்பெட்டி, காலணி, முடியுடன் கூடிய ரப்பர் கையுறை, யாரோ தப்பி ஓடியதைக் குறிக்கும் வகையில் சேற்றில் கால்தடங்கள் போன்றவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மர்மத்தை விலக்கிய மருத்துவ அறிக்கை

சம்பவ இடத்திற்கு தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் உமாதாதன் (Dr Umadathan) குழு வரவழைக்கப்பட்டு இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இறந்தவரின் சுவாசக் குழாயில் கரி அல்லது சாம்பலின் தடயங்கள் இல்லாததால் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமருவதற்கு முன்பு இந்த நபர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் செரிமான மண்டலத்தில் மதுவும் ஈதரும் இருந்தது என்றும் தரப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை காவல்துறையினரின் ஐயத்தை உறுதிப்படுத்தியது.

சுகுமார குருப் வழக்கின் மருத்துவ ஆய்வு குறித்து டாக்டர் உமாதாதன் தனது "Dead Men Tell Tales" புத்தகத்தில் விவரித்துள்ளார். இப்புத்தகத்தில் சுகுமார குருப் வழக்கு, பானூர் சோமன் வழக்கு, போலக்குளம் பீதாம்பரன் வழக்கு (ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு படத்தின் கதை) போன்ற கேரளாவை உலுக்கிய முக்கிய வழக்குகள் குறித்து பதிவு செய்துள்ளார்.
இறந்தது சுகுமார குருப்பா?

காரில் இறந்தவர், மாவேலிக்கரைக்கு அருகில் உள்ள செரியநாட்டைச் சேர்ந்தவரும் வளைகுடாவில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு இந்தியா வந்தவருமான சுகுமார குருப் என தகவல் பரவியது. அவரது உறவினர்கள் சிலர் அழுது கொண்டே சம்பவ இடத்திற்கு வந்து அவரை கடைசியாகப் பார்க்க முயன்றனர். இறந்தவரின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியிருந்தாலும், உயரம் மற்றும் உடல்வாகு மூலம் அது சுகுமார குருப் தான் என்றும் முந்தைய நாள் அதே காரில் அருகில் உள்ள ஆலப்புழாவுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும் அவரது மைத்துனன் பாஸ்கர பிள்ளை சாட்சியமளித்தார். முதல்கட்ட விசாரணை முடிந்த பிறகு உடலை தகனம் செய்யக்கூடாது, புதைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சுகுமார குருப் குடும்பத்தினரிடம் உடலை காவல்துறை ஒப்படைத்தது.
குற்றம் நடந்தது என்ன?

அடுத்த கட்ட விசாரணை தொடங்கிய போது, காரில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் என்றும் நான்கு பேர் இணைந்து தீட்டிய காப்பீட்டு மோசடி சதிக்கு அவர் பலியாகிவிட்டார் என்றும் தெரியவந்தது. அடுத்து என்ன நடந்தது என்பதை பற்றிய தெளிவான புரிதலை பெற, விசாரணைக்களம் விரிவடைவதை காண்போம் வாருங்கள்.
கோபாலகிருஷ்ணா குருப்

ஆலப்புழா மாவட்டத்தில், செரியநாடு கிராமத்தில், நாயர் குடும்பத்தில், நடுத்தர பின்னணியில் பிறந்த கோபாலகிருஷ்ணா குருப் சிறுவயதிலிருந்தே சாகச வாழ்க்கையை வாழ விரும்பினார். PUC படிப்பை முடித்த பிறகு இந்திய விமானப்படையில் விமானப்படை வீரராக சேர்ந்தார். அங்கு தீடீரென உடல்நலக் கோளாறு இருப்பதாகக் கூறி நீண்ட கால விடுப்புக்கு விண்ணப்பித்துவிட்டு வீடு திரும்பினார் கோபாலகிருஷ்ணா குருப்.

விடுப்பில் வந்த கோபாலகிருஷ்ணா குருப், மீண்டும் விமானப்படை பணிக்குத் திரும்ப விருப்பமில்லாமல் கிராமத்திலுள்ள காவல்துறையின் சிறப்புப் பிரிவு காவலருக்கு லஞ்சம் கொடுத்து தான் இறந்துவிட்டதாக போலியான இறப்பு சான்றிதழ் அறிக்கையை இந்திய விமானப்படை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
ஏன் போலி இறப்பு சான்றிதழ்?

சென்னை விமானப்படை பணியில் இருந்த போது, விமானப்படை பொருட்களுக்கு கூடுதல் விலை தருவதாக வெளி நண்பர்கள் ஆசைக்காட்ட, விமானப்படை கிடங்கில் பணிபுரியும் கணக்காளர் உதவியுடன் விமானப்படை கிடங்கில் இருந்து முதல் தர மதுபானங்கள், செப்பல்கள், காலணிகள் போன்ற பொருட்களை வெளி நண்பர்களுக்கு விற்று வந்தார் கோபாலகிருஷ்ணா குருப். இதற்கிடையில், சென்னை விமானப்படை உயரதிகாரி கோபாலகிருஷ்ணா குருப் உட்பட பலரை வழக்கமான இடமாற்ற முறைப்படி மும்பைக்கு இடமாற்றம் செய்தார்.

திடீரென மும்பைக்கு இடம் மாறியதால் சென்னை விமானப்படை கிடங்கு சம்பாத்தியம் பறிபோனாலும், மும்பை விமானப்படையில் ஆயுதக்கிடங்கு கணக்காளராக பணி நியமனம் செய்யப்பட்டதால் புதிய பணியை விரும்பி ஏற்கலானார். சென்னை கிடங்கில் சின்ன சின்ன பொருட்களை விற்று காசு பார்த்தவர், மும்பை ஆயுதக்கிடங்கு பணியை நினைத்து பேராசை எண்ணங்களை வளர்ந்து கொண்டார்.

மும்பை ஆயுதக்கிடங்கின் கணக்காளர் பணியை கேடயமாகப் பயன்படுத்தி, 1971 இந்தியா (வங்காளதேசம்) - பாகிஸ்தான் போரின் போது இந்தியா பல்வேறு ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததால், மும்பை துறைமுகத்தில் உள்ள நண்பர்களின் உதவியுடன் ஆயுதக்கிடங்கு கணக்கில் வராத ஆயுதங்களை பிரிவினைவாத மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு ரகசியமாக அதிக விலைக்கு ஆயுதங்களை விற்று வந்தார்.

இதற்கிடையில், மும்பை விமானப்படையின் உயரதிகாரி ஒரு கட்டத்தில், போர் முடிந்த சில நாட்களுக்குள் துல்லியமான ஆயுதப் பட்டியலை சமர்ப்பிக்கும்படி கேட்டார். இதையெடுத்து, இதே பணியில் தொடர்ந்தால், ஒரு நாள் இல்லை ஒரு நாள் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்ற ஐயத்தில் எதிர்கால விசாரணையை தவிர்க்க, விமானப்படை பணியில் இருந்து விலக போலி இறப்பு சான்றிதழ் அறிக்கையை கொடுத்து தப்பித்தார் கோபாலகிருஷ்ணா குருப்.
வளைகுடா வாழ்க்கை

விமானப்படை பணியை உதறி தள்ளிய பிறகு, வளைகுடாவிற்கு குடிபெயர்வதற்காக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த போது கோபாலகிருஷ்ணா குருப் தனது பெயரை சுகுமார பிள்ளை என்று மாற்றிக் கொண்டார். இதை தொடர்ந்து சுகுமார பிள்ளை சுகுமார குருப் என்ற பெயராலேயே அழைக்கப்படலானார். கேரளாவில் உள்ள நாயர் சமூகத்தின் துணை சாதிகள் பிள்ளை மற்றும் குருப் என்பது குறிப்பிடத்தக்கது.

அபுதாபி மரைன் ஆப்பரேட்டிங் நிறுவனத்தில் உயரதிகாரி  பணியில் சேர்ந்தது, நிலையான வருமானத்தை ஈட்டியது, நெருங்கிய நண்பர்களின் வட்டம் பெரிதானது, சுகு நம்பிக்கைக்குரிய நண்பரானது, மனைவி தனியார் மருத்துவமனையில் செவிலியராக சேர்ந்தது என்று அபுதாபியில் சுகுமார குருப் வாழ்க்கை அமைதியாக கழிந்தது. தன் பெற்றோர் வீட்டில் வெகுகாலம் பணி செய்தவரின் மகள் சரசம்மாவை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார் சுகுமார குருப்.
வளைகுடா இளவரசர்

நெருங்கிய நண்பர்கள் மூலம் வளைகுடா மன்னரின் இளம் வாரிசான இளவரசரை நெருங்கி அவரது முழு நம்பிக்கையை பெற்றார் சுகுமார குருப். மன்னர் இருக்கும் வரை இளவரசர் வசதி வாய்ப்புகளை அனுபவிக்கலாம் ஆனால் ஆட்சி, அதிகாரம், தொழில் என்று எதுவும் மன்னரின் மேற்பார்வை இல்லாமல் செய்ய இயலாது என்பது நடைமுறை. அதனால், மன்னருக்கு தெரியாமல் கடத்தல் தொழில் செய்ய விரும்பிய இளவரசர் எண்ணத்திற்கு வண்ணம் கொடுத்தார் சுகுமார குருப். இளவரசரின் கடைக்கண் பார்வையால் கடத்தல் (எண்ணெய், ஆயுதம், தங்கம்) தொழிலில் கொடிகட்டி பறந்தாலும், இளவரசர் தனக்கு வரும் பெரும் லாபத்தில் சொற்ப அளவிலே சுகுமார குருப்புக்கு கொடுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில், அபாயகரமான பணிகளை செய்தாலும் அதற்குரிய லாபம் குறைந்த அளவிலே கிடைத்து வந்ததால், இளவரசருக்கு தெரியாமல் ஒரு பெரிய கடத்தலை செய்து கோடிக்கணக்கான பணத்தை ஈட்ட திட்டமிட்டார் சுகுமார குருப். அதன்படி, வெற்றிகரமாக கடத்தலை செய்து முடித்து, கோடிகளில் பணத்தை ஈட்டிய பிறகு, வளைகுடாவில் தன் பெயரில் காப்பீட்டை பதிவு செய்து கொண்டார்.

கடத்தல் தொழிலில் சுகுமார குருப்பின் துரோகத்தை அறிந்த இளவரசர் அவரை கொல்ல திட்டமிட்டார். சுகுமார குருப்பை கண்காணிக்க இளவரசர் திட்டமிட்ட நேரத்தில், அவர் தனது நண்பர் சுகுவுடன் சேர்ந்து, ஒரு பெரிய சதித்திட்டத்துடன் அவசரமாக இந்தியா திரும்பினார்.
என்ன சதித்திட்டம்?

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சுகுமார குருப்பும் சுகுவும் 8,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட செகண்ட் ஹேண்ட் அம்பாசிடர் காரில் வீடு திரும்பியவுடன் சதித்திட்டம் குறித்து கலந்தாலோசித்தனர். ஒரு விபத்தில் சுகுமார குருப் இறந்துவிட்டதாக காவல்துறையையும் உள்ளூர் மக்களையும் நம்ப வைத்து, காப்பீட்டு பணம் 8 லட்சம் ரூபாயை கூட்டாளிகள் பிரித்து கொள்வதே அந்த சதித்திட்டமாகும். இந்த சதித்திட்டத்திற்கு, பண தேவையில் இருந்த நண்பர் சுகு, மைத்துனன் பாஸ்கர பிள்ளை மற்றும் ஓட்டுநர் பொன்னப்பன் ஆகியோரை பயன்படுத்தி கொண்டார் சுகுமார குருப்.

இதையொட்டி, சுகுமார குருப் போலவே உயரம் மற்றும் உடல்வாகு கொண்ட ஒரு இறந்த உடலை பெறுவதற்காக, "ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த பாஸ்கர பிள்ளையின் உறவினர் மூலம் உரிமை கோரப்படாத ஒரு சடலத்தைப் பெறுவது இல்லையேல் மயானத்தில் இருந்து உடலை திருடுவது" என்பதே ஆரம்பகட்ட யோசனையாக இருந்துள்ளது. சில நாட்கள் முயன்றும் இறந்த உடலை தேடும் படலம் பலனளிக்காததால், சதித்திட்டம் சாத்தியமில்லை என்று பாஸ்கர பிள்ளை வருத்தத்துடன் கூறிய போது ​​சுகுமார குருப் மிக சாதாரணமாக ஒரு கொலைத் திட்டத்தை பரிந்துரைத்தார். அப்போதிருந்து விஷயங்கள் விரைவாக நகர்த்தப்பட்டன.
அன்றிரவு காரில் ஏறிய நபர்

ஜனவரி 21, 1984 அன்று இரவு சுகுமார குருப், பாஸ்கர பிள்ளை, பொன்னப்பன், சுகு ஆகிய நால்வரும் கருவாட்டாவில் உள்ள கல்பகவாடி உணவகத்தில் இரவு உணவை உண்ட பிறகு, சுகுமார குருப் புதிதாக வாங்கிய KLQ 7831 காரிலும் மற்றவர்கள் KLY 5959 காரிலும் பயணித்தனர்.

சுகுமார குருப்புடன் யாரேனும் ஒத்திருப்பதைக் கண்டு கொலை செய்யலாம் என்ற எண்ணத்தில் நால்வரும் சரியான நபரை தேடி இரண்டு கார்களில் ஒன்றன் பின் ஒன்றாக இரவு பயணம் செய்தனர். அப்போது, ஹரிபாட் கிராமத்தில் உள்ள ஹரி திரையரங்கம் அருகே சென்ற போது, சாலையோரம் சுகுமார குருப் போல ஒத்திருந்த நபர் லிஃப்டுக்காக கையை நீட்டிக் கொண்டிருப்பதை கண்டு காரை நிறுத்தினர். "நீங்கள் ஆலப்புழா நோக்கி செல்கிறீர்களா?" என்று அந்த நபர் கேட்க, "ஆமாங்க! உள்ள வாங்க" என்றார் ஓட்டுநர் பொன்னப்பன். பாஸ்கர பிள்ளையையும் சுகுவையும் பார்த்து வணக்கம் வைத்த பிறகு, திரையரங்கில் டிக்கெட் வசூலை மதிப்பீடு செய்துவிட்டு வீடு திரும்புவதாக கூறிவிட்டு காரில் ஏறினார் அந்த நபர்.

கார் ஆலப்புழாவை நோக்கிச் சென்ற போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாஸ்கர ​​பிள்ளை, ஈதர் தடவிய ஒரு கோப்பை மதுவை குடிக்கச் சொல்லி அந்த நபரிடம் நீட்டினார். அந்த நபர் மறுத்துவிடவே இரண்டாவது முறையாக கடுமையான தொனியில் குடிக்க வற்புறுத்தினார் பாஸ்கர ​​பிள்ளை. அந்த நபர் மறுபடியும் மறுப்பு சொன்னதும் ஓட்டுநர் பொன்னப்பன் காரை நிறுத்த, பின் இருக்கைக்கு மாறிய பாஸ்கர பிள்ளை "அட! சும்மா குடி" என்று குரலை உயர்த்த இந்த முறை பயத்தால் மதுவை குடித்த அந்த நபர் சில நொடிகளில் மயங்கினார்.
கொல்லப்பட்டது யார்?

பாஸ்கர பிள்ளையும் சுகுவும் சேர்ந்து ஒரு துண்டைப் பயன்படுத்தி அந்த நபரின் கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர் நால்வரும் சுகுமார குருப் மனைவிக்கு சொந்தமான ஸ்மிதா பவனுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அந்த நபரின் முகத்தை அடையாளம் காண முடியாதபடி எரித்தனர். இறந்த நபரின் உடை, மோதிரம், கைக்கடிகாரம் ஆகியவற்றைக் கழற்றிவிட்டு சுகுமார குருப்பின் உடை, மோதிரம், கைக்கடிகாரம் ஆகியவற்றை அந்ந நபருக்கு அணிவித்தனர். அவரது உடலை KLY 5959 காருக்குள் வைத்து, இரண்டு கார்களில் அந்தக் கும்பல் தண்ணீர்முக்கத்தில் உள்ள நெல் வயலை நோக்கி பயணித்தது. அங்கு கொலை செய்யப்பட்ட உடலை எடுத்து KLQ 7831 காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர வைத்து நெல் வயலை நோக்கி காரை தள்ளிவிட்டு அதன் மீது பெட்ரோலை ஊற்றி தீயிட்டனர்.

மாவேலிக்கரை காவல் நிலையத்தில் புகாரளித்த உள்ளூர்வாசி மூலம் இந்த விவகாரம் வெளியானவுடன், இந்த கார் விபத்தில் ஐயம் கொண்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) ஹரிதாஸ், இறந்தவரின் அடையாளத்தை சரியாக கண்டறிய, ஆலப்புழா பகுதியில் பதிவான காணாமல் போனோர் விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார். அப்போது, ஆலப்புழாவில் காணாமல் போனவரின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், உடல் ஒற்றுமையின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை காவல்துறையால் உறுதிப்படுத்த முடிந்தது. கொல்லப்பட்ட பிறகு காரில் கொழுந்துவிட்டு எரிக்கப்பட்ட அந்த நபரின் பெயர் சாக்கோ என்பதும் சுகுமார குருப், பாஸ்கர பிள்ளை, பொன்னப்பன் மற்றும் சுகுவின் காப்பீட்டு மோசடி சதித்திட்டத்திற்கு ஆலப்புழாவை சேர்ந்த திரைப்பட பிரதிநிதி சாக்கோ பலியானார் என்பதும் தெரியவந்தது.
விசாரணை படலம்

விசாரணையின் தொடக்கத்தில், சுகுமார குருப் இறந்ததாகக் கூறப்பட்ட போது, "குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டார் என்ற துக்க மனநிலை அவரது வீட்டில் யாருக்கும் இருக்கவில்லை. மேலும், விபத்து நடந்த அன்று மதிய உணவிற்கு கோழிக்கறி கூட தயாரித்து வைத்திருந்தார்கள். ஆனால், குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அன்றே நாளில் கோழிக்கறி சமைக்கப்படுவதில்லை" என்று நினைவு கூர்ந்தார் காவலர் ஹரிதாஸ்.

மேலும், அன்று பாஸ்கர பிள்ளையின் நெற்றியிலும் கையிலும் ஏற்பட்ட தீக்காயங்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்த போது "முதலில் குளிரைத் தடுக்க தீ மூட்டும் போது தீக்காயம் ஏற்பட்டதாகவும், சில நிமிடங்களுக்கு பிறகு பாத்திரத்தில் வெந்நீரை எடுத்துச் செல்லும் போது தீக்காயம் ஏற்பட்டதாகவும்" பாஸ்கர பிள்ளை கூறினார். விசாரணையில் பாஸ்கர பிள்ளை முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்ததால், பாஸ்கர பிள்ளையின் தீக்காயங்களானது அவர் காரைத் தீ வைத்த போது தற்செயலாக ஏற்பட்டு இருக்கலாம் என்ற காவல்துறையின் ஐயத்திற்கு வலு சேர்த்தது.

கடலோர பகுதியான சாவக்காட்டில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி கொச்சிக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து வளைகுடாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்ட சுகுவை மாவேலிக்கரை காவல் ஆய்வாளர் தேவாசியா உரிய நேரத்தில் கைது செய்தார். சுகு கைது செய்யப்பட்டு சாக்கோவின் கொலை மற்றும் முன் சம்பவங்கள் குறித்து விசாரித்தனர். விசாரணையின் முடிவில் சுகுவின் சாட்சியம் வழக்கின் அடித்தளமாக அமைந்தது.

ஜெர்மனியில் ஒரு குற்றவாளி தனது மரணத்தை போலியாக உருவாக்கி காப்பீட்டு மோசடி திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டவர் (Nominee) மூலம் பணம் பெற்றதை உதாரணமாகக் கூறி, சுகுமார குருப்பை போன்ற ஒருவரைக் கொன்றால், அதன் மூலம் கிடைக்கும் காப்பீட்டு பணத்தை பிரித்து தருவதாக பாஸ்கர பிள்ளை, பொன்னப்பன், சுகு ஆகியோருக்கு பணத்தாசை காட்டியும் வளைகுடா இளவரசர் தான் இறந்துவிட்டதாக நம்ப வைக்கவும் சுகுமார குருப் கொலைத் திட்டத்தை தீட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், விசாரணையில் சுகுமார் குருப்பின் சடலம் என கருதி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது ஆலப்புழாவில் உள்ள விடுதியில் சுகுமார் குருப் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதற்கிடையில், கேரள காவல்துறையின் உடனடி நடவடிக்கையால் காப்பீட்டு நிறுவனத்தினர் சுகுமார குருப்பின் காப்பீட்டு தொகையை முடக்கியதாகவும் தெரிகிறது.
வழக்கின் முடிவு 

சுகுமார குருப்பைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கொலை, சதித்திட்டம், சாட்சியத்தை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முதலாவது குற்றவாளியாக பாஸ்கர பிள்ளை மற்றும் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக பொன்னப்பன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முதலில் குற்றவாளிகளில் ஒருவராக குற்றம் சாட்டப்பட்ட சுகு பின்னர் அரசு தரப்பில் சாட்சி சொல்லும் குற்றவாளியாக மாறினார். அமர்வு நீதிமன்றத்தால் பாஸ்கர பிள்ளை மற்றும் பொன்னப்பன் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் மூன்றாவது மற்றும் நான்காவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட சுகுமார குருப் மற்றும் பாஸ்கர பிள்ளையின் மனைவிகள் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். 

விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சுகுமார குருப் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும், 1984 ஆம் ஆண்டு தலைமறைவான சுகுமார குருப்பை கைது செய்யுமாறு 33 ஆண்டுகளுக்குப் பிறகு மாவேலிக்கரை குற்றவியல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டிக்கு உத்தரவு பிறப்பித்தது.
தேடும் படலம்

வெவ்வேறு காலங்களில், இந்தியா முழுவதும் காவல்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் பின்தொடர்தல் முயற்சிகளின் மையமாக நான்கு குற்றவாளிகள் இருந்தனர். அந்த நான்கு குற்றவாளிகள் ஒற்றைக்கண் சிவராசன், வீரப்பன், தாவூத் இப்ராஹிம் மற்றும் சுகுமார குருப் ஆவர். இதில் ஒற்றைக்கண் சிவராசன் மற்றும் வீரப்பன் ஆகிய இருவரும் இறந்துவிட்டார்கள். பல்வேறு குழுக்களின் பாதுகாப்பில் தாவூத் இப்ராஹிம் வெளிநாட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், இன்று முகம் எப்படி இருக்கும்? எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்? அவர் முதலில் இருக்கிறாரா? என்று 37 ஆண்டுகளாக எந்த தகவலும் கிடைக்காமல் இருக்கும் ஒரே குற்றவாளி சுகுமார குருப். இன்று உயிருடன் இருந்தால் சுகுமார குருப்பிற்கு 77 வயது இருக்கும்.

அந்த காலகட்டத்தில், சுகுமார குருப்பின் தாடி வைத்த புகைப்படம் காவல்துறையினரால் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டதால், அவரைக் கண்டதாக கூறி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பல்வேறு அழைப்புகள் மற்றும் கடிதங்கள் வந்தன. அதில் நம்பகமான தகவல்களை சேகரித்து, கேரளா மாநிலம் தாண்டி உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்காளம், அசாம், சத்தீஸ்கர், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், அமெரிக்கா, பூட்டான், வளைகுடா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சுகுமார் குருப்பைத் தேடி சென்று கேரள காவல்துறை தோல்வியுடன் திரும்பினர். கேரள காவல்துறையில் அதிக பயணப்படி (Travel Allowance) வழங்கப்பட்ட வழக்கு, சுகுமார குருப் வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுத வியாபாரி 

சுகுமார குருப், "அலெக்சாண்டர்" என்ற பெயரில் சட்டவிரோத ஆயுத வியாபாரத்தில் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது. விடுதலைப் புலிகளின் கறுப்புச் சந்தை ஆயுத வியாபாரியாகச் செயற்பட்ட செல்வராசா பத்மநாதன் (கே.பி.) போன்று அலெக்சாண்டர் என்ற பெயரை பயன்படுத்தி சுகுமார குருப் தலைமையிலான குழுவினர் கறுப்புச் சந்தையில் ஆயுதக் கொள்வனவு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முடியாட்சி மற்றும் பிரிவினைவாத குழுக்களின் இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்கும் ஆயுத வியாபாரியாக அறியப்படுகிற அலெக்சாண்டரின் நடவடிக்கைகள் உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

ராஞ்சி மருத்துவமனையில் சுகுமார் குருப் சிகிச்சை பெற்றதாக தகவல் பரவியதை அடுத்து கேரள போலீசார் ராஞ்சி சென்றனர். இது தொடர்பான விசாரணையில், தீவிர நோயால் பாதிக்கப்பட்ட சுகுமார் குருப் நீண்ட நாட்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று ராஞ்சி மருத்துவக் குழுவினர் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ராஞ்சி தேடுதல் நடவடிக்கையில் சுகுமார குருப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், ஜோஷி என்ற பெயரில் சுகுமார் குரு புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் பரவியதையடுத்து கேரள போலீசார் புனே சென்றனர். ஆனால், தகனம் செய்யப்பட்ட உடலை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இந்த இரண்டு கோட்பாடுகளும் சுகுமார குரு வழக்குடன் உறுதிப்படுத்தப்படாத தொடர்பை கொண்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்.

கட்டி முடிக்கப்படாத தனது வீட்டில் மாறுவேடத்தில் இருந்த சுகுமார குருப்பை முதலில் காவல்துறையினர் கைது செய்தனர். எனினும், கைரேகை விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர், சில நாட்கள் விசாரணைக்கு பிறகு, அவரது கைரேகையை எல்.ஐ.சி பாலிசியுடன் ஒப்பிட்டுப் பார்த்ததன் மூலம் அவரது உண்மையான அடையாளத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். முன்னதாக, தனது தாடியை மழித்து, வெளிப்புற மச்சத்தை மறைத்து காவல்துறையினரிடம் இருந்து தப்பினார். அந்த நேரத்தில், அவர் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார் என்று பரவலாக நம்பப்பட்டது.
கவனத்தை ஈர்த்த வழக்கு 

சுகுமார குரு பிடிபடாத நிலையிலும், சாதாரண கார் விபத்தை விசாரித்து அதன் சதி வலையை அவிழ்த்து, வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வந்த கேரளா காவல்துறையின் விசாரணை பாராட்டத்தக்கது. இந்நிலையில், சுகுமார குருப்பின் தலைமையில் பாஸ்கர பிள்ளை, பொன்னப்பன், சுகு ஆகியோர் அரங்கேற்றிய சதித்திட்டம் ஊடகங்களில் கவனம் பெற்றது. அந்த காலகட்டத்தில், இந்த வழக்கு ஆரம்பத்தில் செரியநாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது, பின்னர் ஆலப்புழா மாவட்ட மக்களின் ஆர்வத்தைத் தூண்டியது, பின்னர் அதன் செல்வாக்கு கேரள மாநிலம் முழுவதும் பரவியது. இறுதியில், இந்திய மக்கள் அதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கியபோது அது தேசிய கவனத்தை ஈர்த்தது. இந்த வழக்கு இன்டர்போல் அறிக்கை மூலம் உலகளாவிய கவனத்தை கூட ஈர்த்தது.
முடிவுரை

கோபாலகிருஷ்ணா குருப், சுகுமார குருப், சுகுமார பிள்ளை, அலெக்சாண்டர் ஆகிய நான்கு பெயரை கொண்ட ஒரே மனிதர். இந்தியாவில் விமானப்படை ஆயுதக் கடத்தல் சர்ச்சையில் இருந்து தப்பிக்க கோபாலகிருஷ்ணா குருப் தான் இறந்துவிட்டதாக நாடகமாடி சுகுமார குருப் ஆனார். வளைகுடாவில் இளவரசர் எடுக்கும் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சுகுமார குருப் அலெக்சாண்டர் ஆனார். வளைகுடா இளவரசரின் நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காகவும் தனது மனைவி மூலம் 8 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையை பெறுவதற்காகவும் சுகுமார குருப் தான் இறந்துவிட்டதாக நாடகமாடி அலெக்சாண்டர் ஆனார். 

மேலும், இந்திய விமானப்படை பணியில் இருந்த போது ஆயுதக் கடத்தல் செய்யவும், வளைகுடா பணியில் இருந்த போது இளவரசரை நம்பிக்கைக்குரிய நபராக அணுகவும், அலெக்சாண்டர் என்ற பெயரில் சர்வதேச ஆயுத வியாபாரியாக வளரவும் சுகுமார குருப்புக்கு உதவியவர்கள் அடையாளம் காணப்படவில்லை. மேலும், சுகுமார குருப் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை நிரூபிக்க உறுதியான ஆதாரம் இல்லை.

விவரணைகள் 

Malayalam Movies - NH47 (1984), Pinneyum (2016), Kurup (2021)

Sukumara Kurup Case


Most Travel Allowance



Sukumara Kurup destroyed many families


Sukumara Kurup would have killed me - Shahu 


Police nabbed Kurup once but was released as they failed to identify him 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

  1. மிகவும் அருமையாக தொகுத்து இருக்கீங்க. நன்றி.

    ReplyDelete

சீமானின் வரலாறு காவி

சீமானின் வரலாறு காவி  பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட படை  தமிழ் தேசியத்...