Chocks: ருமேனியா புரட்சியின் கதை

Monday, November 28, 2022

ருமேனியா புரட்சியின் கதை

ருமேனியா புரட்சியின் கதை
பொருளடக்கம்
  1. முகவுரை
  2. ஊடங்கங்களின் பங்களிப்பு
  3. ருமேனியா ஆட்சியும் சில செய்திகளும்
  4. அரசாங்க உத்தரவும் மக்கள் போராட்டமும்
  5. மேடை பேச்சும் நேரடி ஒளிபரப்பும்
  6. விசாரணையும் மரண தண்டனையும்
  7. ராணுவ அரசியலும் கட்சி அரசியலும்
  8. கதை சுருக்கமும் புதிய ஆட்சியும்
  9. முடிவுரை
  10. விவரணை
முகவுரை

உலகின் அதிகார நிலையை கடுமையாக மாற்றிய 1989-1991 சகாப்தம் அரசியல் ஆய்வுகளில் ஒரு முக்கிய பகுதியாகும். இதில் கம்யூனிசத்தின் வீழ்ச்சி, தாராளமயத்தின் எழுச்சி மற்றும் உலகமயமாக்கலின் வலைப்பின்னல் ஆகியவை அடங்கும்.

உதாரணமாக, "வெல்வெட் புரட்சியின் மூலம் செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் வீழ்ச்சி, செக்கோஸ்லோவாக்கியா செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா என சுதந்திர நாடுகளாக பிரிந்தது, ருமேனியப் புரட்சியின் மூலம் ருமேனியாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் வீழ்ச்சி, சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக தியானன்மென் சதுக்கம் போராட்டம், பெர்லின் சுவரை இடித்து ஜெர்மனி ஒன்றுபட்டது, ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் யூனியன் வெளியேறியது, அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான அரசியல் பனிப்போரின் முடிவு, அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசாக மாறியது, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் விரிவாக்கம், வளைகுடா போர் நெருக்கடி, தாராளமயம் என்ற பெயரில் உலகம் முழுவதும் பொருளாதார சீர்திருத்தங்களை இயற்றியது, இலங்கையில் கம்யூனிஸ்ட் தலைவர் ரோஹன விஜேவீரவின் மரணம், இந்தியாவில் முதன்முறையாக மூன்றாவது அணி ஆட்சி அமைத்தது, அமைதி காக்கும் படை திரும்பப் பெறப்பட்டது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை, ராமா ஜென்ம பூமி விவகாரம், ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சியால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது" என்று வெளிநாடு முதல் உள்நாடு வரை நூற்றுக்கணக்கான அரசியல் செய்திகள் வரலாற்றில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஊடங்கங்களின் பங்களிப்பு

நவீன வரலாற்றில், தொழில்துறை புரட்சிக்கு பின்னர் உள்நாட்டுப் போர்கள், புரட்சிகரப் போர்கள், வல்லரசு போர்கள் மற்றும் அதிகாரப் போர்கள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் பரப்புவதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மேலும் ஒரு போரை தொடங்குவதிலும், ஒரு போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், ஒரு போரை அமைதிப்படுத்துவதிலும் அல்லது ஒரு போரை நீண்ட கால உறக்கநிலையில் வைப்பதிலும் ஊடகங்கள் ஆற்றும் பணிகள் முக்கியமானது.
20 ஆம் நூற்றாண்டில் கைபேசி செயலிகளின் எழுச்சிக்கு முன் “தொலைக்காட்சி” தான் செய்தித்தாள்கள் மற்றும் வானொலிகளுக்கு அப்பால் முதன்மை ஊடக கருவியாக செயல்பட்டது. இந்த பின்னணியில், டிசம்பர் 1989 இல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ருமேனியப் புரட்சி அல்லது கிறிஸ்துமஸ் புரட்சி குறித்து காண்போம்.

ருமேனியா ஆட்சியும் சில செய்திகளும்

சர்வாதிகாரியாக கடுமையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் நன்கு அறியப்பட்ட நிக்கோலே சௌசெஸ்கு 1965 முதல் ருமேனியா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், 1967 முதல் ருமேனியா அரச தலைவராகவும், 1974 முதல் ருமேனியா அதிபராகவும் பணியாற்றினார்.
நிக்கோலே சௌசெஸ்குவின் அரசியல் பிரச்சனைகள் பெரும்பாலும் அவரது தீவிர சீர்திருத்தங்களில் இருந்து உருவானவை. உதாரணமாக, 1960 களில், நிக்கோலே சௌசெஸ்கு குறைந்த பிறப்பு விகிதத்தை உயர்த்தும் முயற்சியில் கருக்கலைப்பு மற்றும் கருத்தடை முறைக்கு தடை விதித்தார், இது பெண்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 1980 களில், நிக்கோலே சௌசெஸ்கு தேசியக் கடனைச் செலுத்துவதற்காக ஒரு சிக்கனத் திட்டத்தைத் தொடங்கினார், இது உணவு மற்றும் எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் பங்கீட்டிற்கு (Ration) வழிவகுத்தது, இதனால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

நிக்கோலே சௌசெஸ்குவின் நிர்வாக பிரச்சனைகள் பெரும்பாலும் அவரது மனைவி எலீனாவின் வற்புறுத்தலில் இருந்து உருவானவை. உதாரணமாக, நிக்கோலே சௌசெஸ்கு எலீனாவை முதல் துணைப் பிரதமராக பிரதமராகவும், இரகசிய உளவுத்துறையின் தலைவராகவும் நியமித்தார். எலீனாவின் தூண்டுதலின் பேரில் நிக்கோலே சௌசெஸ்கு சில சமயங்களில் நெருங்கிய சகாக்களை படுகொலை செய்ததாகவும் செய்திகள் உள்ளன. மேலும் சுவாரஸ்யமாக, இறக்குமதி செய்யப்பட்ட வைரங்கள் போதாதென்று, நிக்கோலே சௌசெஸ்கு ருமேனிய உளவுத்துறை முகவர்கள் மூலம் அமெரிக்காவில் இருந்து செயற்கை வைர தொழில்நுட்பத்தை  பெற்று தலைநகர் புக்கரெஸ்ட்டில் எலீனாவுக்காக செயற்கை வைரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவினார்.

கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தலைவர்கள் நிக்கோலே சௌசெஸ்குவின் சீர்திருத்தங்கள் மோசமானவை என்றும் அவர் தனது மனைவிக்காக மட்டுமே உழைக்கிறார் என்றும் கண்டித்தனர்.
அரசாங்க உத்தரவும் மக்கள் போராட்டமும்

ஹங்கேரிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த லாஸ்லோ டோக்ஸ் ருமேனியா ஆட்சியாளர் நிக்கோலே சௌசெஸ்குவின் சர்வாதிகாரக் கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தார். இதையெடுத்து, ருமேனிய அரசின் அழுத்தம் காரணமாக லாஸ்லோ டோக்ஸை உதவி பாதிரியார் பதவியில் இருந்து நீக்கவும் தேவாலயத்தில் இருந்து வெளியேற்றவும் பிஷப் பிறப்பித்த உத்தரவு ருமேனியப் புரட்சியைத் தூண்டியது.
16 டிசம்பர் 1989 அன்று, ஹங்கேரிய சிறுபான்மையினர் திமிசோராவில் அரசின் அடக்குமுறை உத்தரவுக்கு எதிராக பொது எதிர்ப்பை நடத்தினர். காவல்துறை அதிகாரிகள் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் தண்ணீர் பீரங்கிகளை இயக்கியும் சிலரை கைது செய்தும் கூட்டத்தை கலைத்தனர்.

17 டிசம்பர் 1989 அன்று, திமிசோராவில் மக்கள் போராட்டத்தை பலவந்தமாக கட்டுப்படுத்துமாறு ராணுவ படைக்கு நிக்கோலே சௌசெஸ்கு உத்தரவிட்டதையடுத்து மக்களின் போராட்டம் வீரியம் அடைந்தது.

18 டிசம்பர் 1989 அன்று, மக்களின் கிளர்ச்சியை அடக்கும் பொறுப்பை ராணுவ தலைமையகம் மற்றும் தனது மனைவி எலீனாவிடம் ஒப்படைத்துவிட்டு ஈரானுக்கு அரசாங்க விஜயம் செய்ய நிக்கோலே சௌசெஸ்கு புறப்பட்டார். ஆனால் நேரம் செல்ல செல்ல ருமேனியாவில் ஒரு அசாதாரண சூழ்நிலை தான் நிலவியது.

இதற்கிடையே, லாஸ்லோ டோக்ஸ் இன வெறுப்பை தூண்டுவதாக அரசாங்கம் குற்றம் சாட்டிய நிலையில் ஹங்கேரிய சிறுபான்மையினர் "ருமேனியர்களே, எங்களுடன் வாருங்கள், இந்த எதிர்ப்பு ருமேனியாவின் அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமானது, இது சிறுபான்மை இன விவகாரம் அல்ல” என்று கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.

மேடை பேச்சும் நேரடி ஒளிபரப்பும்

20 டிசம்பர் 1989 அன்று, ஈரானில் இருந்து நாடு திரும்பிய நிக்கோலே சௌசெஸ்கு, "இப்போராட்டம் அந்நியர்களால் திட்டமிடப்பட்டது" என்று பழித்துரைத்தார். மேலும் தனக்கு பெரும்பான்மையான ருமேனிய மக்களின் ஆதரவு இருப்பதாக உலகுக்கு நிரூபிக்கும் வகையில், நிக்கோலே சௌசெஸ்கு மறுநாள் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி தனது பலத்தை காட்ட தொலைக்காட்சி ஊடகத்தை பயன்படுத்த முடிவு செய்தார். இந்த பின்னணியில், கூட்டத்தினர் நிக்கோலே சௌசெஸ்குவை உற்சாகப்படுத்தவும், வானொலி மற்றும் தொலைக்காட்சியில் கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பை காணகவும் கம்யூனிஸ்ட் அரசாங்க அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 21 டிசம்பர் 1989 அன்று, ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் உள்ள அரண்மனை சதுக்கத்திற்கு எதிரே உள்ள பால்கனியில் முன்பு எண்ணற்ற முறை தோன்றி உரையாற்றியதை போல இம்முறையும் ஒரு பெரிய கூட்டத்தில் தோன்றி நிக்கோலே சௌசெஸ்கு உரையாற்றினார். இந்த உரை காலை 11:59 மணி முதல் 12:52 மணி வரை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது. அவர் ருமேனியாவின் அரசியல் கோட்பாடுகள் பற்றி சில நிமிடங்கள் புகழ்ச்சியாக பேசிய போது, ஆரம்பத்தில் இயந்திரத்தனமான கைதட்டலில் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தின் உற்சாகம் உண்மையானது என்று நிக்கோலே சௌசெஸ்கு பெருமிதம் கொண்டார்.
ஆனால் திடீரென கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கூட்டத்தில் முதலில் சலசலப்பை எழுப்பியது யார்? என்ற புதிர் இன்று வரை உள்ளது. கூட்டத்தினர் மெல்ல மெல்ல நிக்கோலே சௌசெஸ்குவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  கூட்டத்தின் தொடர் விசில் சத்தம் அதிகமாகி சில நொடிகளில் அரண்மனை சதுக்கத்தில் இருந்த மொத்த கூட்டமும் "திமிசோரா! டிமிசோரா!" என்று கோஷமிட்டது. திடீரென ஏற்பட்ட குழப்பத்தால் உறைந்து போன நிக்கோலா சௌசெஸ்கு, கூட்டத்தை அமைதிப்படுத்த முயன்றார். இருப்பினும், கூட்டத்தினர் நிக்கோலே சியோசெஸ்குவுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டது.

எவ்வாறாயினும், ஒளிபரப்பான சில நிமிடங்களில், கூட்டம் அமைதியடையாமல் தங்கள் தலைவருக்கு எதிராக கோஷமிட்டதை தொடர்ந்து, நேரடி ஒளிபரப்பை நிறுத்தவும், கம்யூனிஸ்ட் பிரச்சார பாடல்கள் மற்றும் நிக்கோலா சௌசெஸ்குவின் ஆட்சியை புகழ்ந்து பேசும் காணொளிகளை ஒளிபரப்பவும் பாதுகாப்பு துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொலைக்காட்சி ஒளிபரப்பு குழு ஏற்க மறுத்தது போராட்டக்காரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. முழு நிகழ்வின் நேரடி ஒளிபரப்பைத் தொடர்ந்து, பெரும்பாலான ருமேனியர்கள் அசாதாரணமான ஒன்று நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தனர். 

விசாரணையும் மரண தண்டனையும்

22 டிசம்பர் 1989 அன்று, பல்வேறு நகரங்களுக்கு போராட்டம் பரவிய சூழலில், அந்தர் பல்டியாக ருமேனிய அரசாங்க அதிகாரிகள் நிக்கோலே சௌசெஸ்குவின் ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சியை கிட்டத்தட்ட ஒருமனதாக ஆதரித்தனர். அதே நாளில், உயிருக்கு பயந்து நிக்கோலே சௌசெஸ்குவும் அவரது மனைவி எலீனாவும் தலைநகரை விட்டு வெளியேற முயற்சித்த போது கைது செய்யப்பட்டனர்.

25 டிசம்பர் 1989 அன்று, பல்வேறு குற்றச்சாட்டுகள் மீதான 55 நிமிட விசாரணைக்குப் பிறகு, நிக்கோலே சௌசெஸ்குவும் அவரது மனைவி எலீனாவும் சிறப்பு ராணுவ நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டது. அதே நாளில், மாலை 4:00 மணியளவில், புக்கரெஸ்டுக்கு வெளியே உள்ள இராணுவத் தளத்தில் கழிவறைத் தொகுதிக்கு அருகில் மூன்று ராணுவ வீரர்கள் நிக்கோலே சௌசெஸ்கு மற்றும் அவரது மனைவி எலீனாவை 120 தோட்டாக்கள் துளைக்க சுட்டுக் கொன்றனர்.
ராணுவ அரசியலும் கட்சி அரசியலும்

போராட்டத்தை அடக்குவதற்காக ராணுவ தலைவர் விக்டர் ஸ்டான்குலேஸ்குவை திமிசோராவுக்கு அனுப்பினார், நிக்கோலே சௌசெஸ்கு. 17 டிசம்பர் 1989 அன்று, திமிசோராவில் கிளர்ச்சி வேகமாக பரவியதால், விக்டர் ஸ்டான்குலேஸ்குவின் உத்தரவின் பேரில் திமிசோராவில் மட்டும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். நேரம் செல்ல செல்ல ருமேனியா முழுவதும் கிளர்ச்சி கட்டுக்கடங்காத வகையில் பரவியதால், 22 டிசம்பர் 1989 அன்று விக்டர் ஸ்டான்குலேஸ்கு, நிக்கோலே சௌசெஸ்கு மற்றும் அவரது மனைவி எலீனா ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் செல்ல ஏற்பாடு செய்தார். ஆனால், இது ரேடார் மூலம் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்துவதற்கான சதித்திட்டமாக இருக்கலாம் என அஞ்சிய விமானி, ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினார். இதைத் தொடர்ந்து, நிக்கோலே சௌசெஸ்கு தப்பிக்க ஒரு காரை கடத்தினார், ஆனால் அவரும் அவரது மனைவி எலீனாவும் விரைவில் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

திடீர் திருப்பமாக, ராணுவ தலைவர் விக்டர் ஸ்டான்குலேஸ்கு, நிக்கோலே சௌசெஸ்குவின் வீழ்ச்சியை உணர்ந்து, உடனடியாக தனது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி, நிக்கோலே சௌசெஸ்குவின் அரச கட்டளைகளை நிறைவேற்ற மறுத்து, இறுதியில் ருமேனிய அரசாங்கத்தை தூக்கியெறிந்து, நிக்கோலே சௌசெஸ்கு மற்றும் அவரது மனைவி எலீனா ஆகியோரின் படுகொலையை ஒருங்கிணைத்தார். அணி மாறிய பிறகு (After Switching Sides) பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்று, கலவரத்தை தீவிரப்படுத்தவும், தொடர்ந்து நிலைநிறுத்தவும் சதி செய்த விக்டர் ஸ்டான்குலேஸ்கு, 1990 முதல் 1991 வரை புதிய அரசாங்கத்திலும் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
22 டிசம்பர் 1989 அன்று ருமேனியப் புரட்சியின் போது ருமேனிய கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி உறுப்பினர்களான அயன் இலிஸ்கு, பீட்டர் ரோமன் மற்றும் துமித்ரு மஜிலு ஆகியோரின் தலைமையில் தேசிய முக்தி முன்னணி உருவாக்கப்பட்டது. ருமேனியப் புரட்சியானது கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து அதிகாரத்தை சாதாரண மக்களுக்கு மாற்றவில்லை, மாறாக ருமேனிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த நவ-கம்யூனிஸ்ட் கட்சியான தேசிய முக்தி முன்னணிக்கு அதிகாரம் அளித்தது என்று ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிட்டன. நியோ-கம்யூனிசம் (Neo-Communism) என்பது தாராளமயத்தையும் ஜனநாயகத்தையும் குறிக்க முதலாளித்துவவாதிகள் பயன்படுத்தப்படும் அரசியல் சொல் ஆகும்.
தேசிய முக்தி முன்னணி மக்கள் புரட்சியை முழு அளவில் ஒருங்கிணைக்கவில்லை என்றாலும் அதிர்ஷ்டவசமாக உச்சபட்ச அதிகாரத்தை விரைந்து கைப்பற்றினர். இதற்கிடையே, 1993 இல் உள்ளூர் அரசியல் குழப்பம் காரணமாக தேசிய முக்தி முன்னணி சிதறியது வேறு கதை.

1989 இல் ருமேனியப் புரட்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக விக்டர் ஸ்டான்குலேஸ்கு மீதும் 1990-1991 காலகட்டத்தில் சுரங்கத் தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதாக அயன் இலிஸ்கு மற்றும் பீட்டர் ரோமன் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. இதில் விக்டர் ஸ்டான்குலேஸ்குவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கதை சுருக்கமும் புதிய ஆட்சியும்

நிக்கோலே சௌசெஸ்கு, ஒரு சக்திவாய்ந்த தலைவராக தேசத்திற்கும் உலகிற்கும் தனது அரசியல் ஸ்திரத்தன்மையை நிரூபிக்க நேரடி ஒளிபரப்பின் கீழ் ஒரு கூட்டத்தை நடத்த முயன்றார். அவரது அரசியல் கணக்கீடுகள் முற்றிலும் தவறாகி, அவரது மரணதண்டனையில் முடிந்தது. ருமேனியப் புரட்சியானது உலகின் கடைசி மார்க்சிஸ்ட்-லெனினிச அரசாங்கத்தை அகற்ற வழிவகுத்தது.
டிசம்பர் 1989 இல் கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் மே 1990 இல் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக ருமேனியாவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டன. 1937 ஆம் ஆண்டுக்கு பிறகு ருமேனியாவில் நடைபெற்ற முதல் சுதந்திரமான தேர்தலான மே 1990 தேர்தலில் அயன் இலிஸ்கு தலைமையிலான தேசிய முக்தி முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் உலகமயமாக்கல் திட்டத்தை வரவேற்கும் வகையில் பொருளாதாரம் முதல் ஜனநாயகம் வரை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. மேலும், ருமேனியா 2004 இல் நேட்டோ உறுப்பினராகவும் 2007 இல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராகவும் இணைந்தது.

முடிவுரை

நியோ-கம்யூனிஸ்டுகளால் நிரம்பிய தேசிய முக்தி முன்னணி, விரைவாக அதிகாரத்தை கைப்பற்றி கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு எதிராக தனியார்மயமாக்கலை வரவேற்றது மற்றும் ருமேனியப் புரட்சியுடன் தொடர்புடைய இராணுவ சதிகள், அரசியல் சதிகள் மற்றும் மனித அநீதிகளை முழுமையாக விசாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதும் கூட, சில ருமேனியர்கள் நிக்கோலே சௌசெஸ்குவின் கம்யூனிச ஆட்சி படுமோசம் அல்ல என்றும், தேசிய முக்தி முன்னணியின் தலைவர்கள் ருமேனிய கம்யூனிஸ்ட் கட்சியின் இரகசிய முகவர்கள் (Sleeper Cells) என்றும், அவர்கள் ருமேனிய புரட்சியைத் தொடங்கவில்லை என்றும் நம்புகிறார்கள். எப்படியாகினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்காத ருமேனிய அதிபர் நிக்கோலே சௌசெஸ்குவின் கம்யூனிச ஆட்சியின் செயல்பாட்டை நுட்பமாக ஆராயும் போது, ருமேனியப் புரட்சிக்கு வழிவகுக்காத தேசிய முக்தி முன்னணி எவ்வாறு புதியதாக ஆட்சிக்கு வந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

என் பார்வையில், ருமேனியப் புரட்சி அதன் சொந்த நோக்கத்தைக் கொண்டிருந்தது, ஆனால் அதன் இறுதிப் பயணத்தில், அது கம்யூனிசத்திலிருந்து விலகி தாராளமயத்தை நோக்கிச் சென்றது.
விவரணை

The Romanian Revolution (Animated History)


Nicolae Ceausescu Last Speech


Mr. and Mrs. Ceausescu's Trial & Execution


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -