கேப்டன் விஜயகாந்த்
பிரபலமான மதுரைக்காரர்கள் பட்டியலில் விஜயகாந்திற்கு முதன்மை இடம் உண்டு. 1970 களில் கீரைத்துறையில் உள்ள தந்தையின் அரிசி ஆலையை விஜயகாந்த் கவனித்து வந்தார். அவரது பூர்வீக வீடு மேல மாசி வீதியில் உள்ளது. ஆனால் அவரது "இருப்பிடம்" மேல ஆவணி மூல வீதியில் இருந்தது. அதாவது, அவ்வீதியில் உள்ள நண்பரின் வீட்டில் தான் அனைவரும் ஒன்று கூடுவார்கள். மேல ஆவணி மூல வீதியை சுற்றி ஏராளமான திரைப்பட விநியோகஸ்தர்கள் இருந்தது, அங்கு கூடியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இப்போதும், அவ்வீதி பக்கம் பொடி நடையாக நடந்து சென்றால் சில பழைய விநியோகஸ்தர்களின் துருப்பிடித்த நிறுவன பலகைகளை பெயரளவில் காணலாம். அப்பகுதியில் தான் சேனாஸ் பிலிம்ஸ் இருந்தது. கண்டு களித்த திரைப்படங்களை பற்றி நண்பர்கள் வீட்டில், விநியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அமர்ந்து விவாதிப்பதை ஒரு தினசரி வேலையாக விஜயகாந்த் நண்பர்கள் பார்த்து உள்ளனர்.
மேல ஆவணி மூல வீதியை விட்டால், கரிமேடு தான் அவர்கள் ஒன்று கூடும் இடமாக இருந்திருக்கிறது. கரிமேடு (ஜெயில் ரோடு) பகுதியில் இருந்த, இன்றும் உள்ள, ராசி ஸ்டுடியோஸில் விஜயகாந்த் எடுத்த புகைப்படங்கள் தான் அவரை திரைத்துறையில் அறிமுகம் செய்தது. மேல ஆவணி மூல வீதியில் விஜயகாந்த் நண்பரின் வீட்டிற்கு (கிட்டத்தட்ட விஜயகாந்த் வீடு என்றே அடையாளம்) அருகில் இருந்த அய்யா வீட்டு திண்ணையில் கூட திரை விவாதங்கள் நடந்து இருக்கிறது.
அய்யாவின் வீட்டு திண்ணையை ஒட்டி விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் (இப்ராஹிம், திருப்பதி, ராமு வசந்தன், சுந்தர்ராஜன், காசி போன்றோர்) மாலை வேளையில் அடிக்கடி அரட்டை அடிப்பது உண்டு. அய்யா வீட்டில் இருந்தால், மாலை வேளையில் திண்ணையில் தண்ணீரை ஊற்றிவிடுவார். அந்நேரம் நண்பர்கள் குழு அருகிலுள்ள டீக்கடைக்கு போய் விடுவார்கள். அரிசி ஆலை, திண்ணை, டீக்கடை அரட்டை என்றிருந்தது விஜயகாந்தின் படை.
விஜயகாந்திற்கும் மேல ஆவணி மூல வீதிவாசிகளுக்குமான நேரடி பரிச்சயம் 1970 களின் இறுதி வரை நீடித்தது. பின்னர் 1970 களின் இறுதியில், சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக் வழிகாட்டல், இப்ராஹிம் ஆலோசனை, விஜயகாந்த் ஆசை ஆகிய மூன்றும் ஒன்று சேர, விஜயகாந்த் கதாநாயகன் ஆகும் முடிவில் சென்னைக்கு சென்றார்.
தொடக்க காலத்தில் பற்பல நிராகரிப்புகளையும் அவமானங்களையும் சந்தித்த பிறகு 1981 இல் "சட்டம் ஒரு இருட்டறை", "சாட்சி" திரைப்படங்களின் கவனிக்கத்தக்க வெற்றிகள் மூலம் தன்னை திரையுலகில் நிரூபித்தார்.
1985 களில் ரஜினி, கமலுக்கு இணையான நடிகராக உருவெடுத்தார். 1990 களில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வந்தார். விஜயகாந்தின் வெற்றி 1980 களில் தொடங்கினாலும், அவரது Peak என்பது 1990 கள் தான். இந்த Peak யை எப்படி உணர வேண்டும் என்றால், சிவாஜி கணேசனுக்கு 1970 களில் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றவை. அது போல தான் விஜயகாந்திற்கு 1990 கள் காலகட்டத் திரைப்பயணம்.
2000 கள் வரை விஜயகாந்த் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய மவுசு இருந்தது. 2000 களில் ஷா திரையரங்கில் பொங்கல் அன்று பார்த்த "வாஞ்சிநாதன்" திரைப்படம், அண்ணாமலை திரையரங்கில் பார்த்த "ரமணா" திரைப்படம் எல்லாம் பசுமரத்தாணி போல நினைவில் உள்ளது. அவரது திரையுலகின் கடைசி வெற்றி திரைப்படமாக "பேரரசு" திரைப்படத்தை சொல்லலாம். செந்தூர பூவே திரைப்படத்தில் கேப்டன் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு, "கேப்டன்" அடைமொழியை பெற்றார். "கூலிக்காரன்" திரைப்படத்தில் இருந்து "புரட்சிக்கலைஞர்" என்று அழைக்கப்பட்டார்.
செய்யதகு நலத்திட்ட உதவிகளால் "கருப்பு எம்.ஜி.ஆர்" என்ற பெயரை பெற்றார். குறிப்பாக, சுயமாக ஈட்டிய பணத்தை பிறருக்கு, அதிலும் குறிப்பாக ரத்த உறவை தாண்டி சாதி மத பின்னணியை தாண்டி உதவி புரிய மனசு வேண்டும், அது விஜயகாந்திற்கு இருந்தது. விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வேளையில் நடிகர் ஸ்ரீமன் சொன்னது போல, விஜயகாந்த் செய்த சேவைகள் வெளியில் தெரிய வருவது 20% தான் இருக்கக்கூடும்.
இப்படிப்பட்ட, விஜயகாந்தை செதுக்கியவர்கள் இப்ராஹிம் மற்றும் ராமு வசந்தன் என்று சொன்னால் அது மிகையாகாது. நண்பர்களால் முன்னேறியவர், நண்பர்களையும் முன்னேற்றியவர் விஜயகாந்த். திரைப்பட சம்பளத்தை தாண்டி தான் நடித்த படத்தை குறிப்பிட்ட ஏரியா எடுத்து ரிலீஸ் செய்து பணம் ஈட்டும் வழக்கத்திற்கு அடிகோலியவர்.
அங்கீகரிக்கப்பட்ட திரைப்பட்டறையில் இருந்து வந்த பிறவி கலைஞன் கமல், திரைப்பட கல்லூரி மாணவர் ரஜினி பெற்ற வெற்றி போற்றத்தக்கது. அதே நேரத்தில் எந்த திரை பின்னணியும் இல்லாமல் கடும் உழைப்பில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய விஜயகாந்த் பெற்ற வெற்றி என்பது அசாத்தியமானது.
தொடக்க கால அரசியலில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை விஜயகாந்த் பெற்று இருந்தாலும், அவரது அரசியல் மீது எனக்கு மாற்று கருத்து உண்டு. அரசியலில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ரசிகர்களின் நடுநிலை ஆதரவைப் பெற்ற விஜயகாந்த், சினிமாவில் அவர்களுடன் ஒப்பிடும்போது, தொடர்ந்து மூன்றாவது இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இது அவரது அரசியல் குறிக்கோள்களுக்கு குறிப்பிட்ட அளவில் உதவியது. மேலும், இன்று சமூக வலைத்தளங்களில் தவறிழைக்கும் ஊடகத்துறையை சாமானியர்கள் கேள்விக்குள் ஆக்குவது போல, 2010 அரசியல் காலகட்டத்தில் ஒற்றை ஆளாக ஊடகத்துறையின் முகத்திரையை கிழித்ததில் விஜயகாந்த் முக்கியமானவர் என்றால் மிகையாகாது.
ஜெயலலிதாவை எதிர்த்து பேசிய ஒரு பக்கத்தின் காணொளியையும், ஊடகத்துறையை போட்டு சாத்திய காணொளியையும் திரித்து பரப்பி, விஜயகாந்த் அரசியல் இமேஜ் நொறுக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவின் பழிவாங்கும் படலத்தில் ஒரே நேரத்தில் பல மாவட்டங்களில் பல அவதூறு வழக்குகளை சந்தித்தது விஜயகாந்தாக மட்டும் தான் இருக்கக்கூடும்.
விஜயகாந்த் இருந்த வரை திரையுலக பிரபலங்கள் விஜயகாந்த் குறித்து ஆர்ப்பரித்து பேசியதில்லை; ஆனால், அவர் மறைவுக்கு பிறகு பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருவது கவனிக்கத்தக்கது. இன்று, திரைப்படங்களில் விஜயகாந்த் பற்றி வசனங்கள், பாடல்கள், காட்சிகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, லப்பர் பந்து, GOAT.
அன்று விஜயகாந்தை வேறு மாதிரி பேசிய சில ஊடகவாதிகளும், அ.தி.மு.க அரசியல்வாதிகளும் காலமான பிறகு விஜயகாந்தை நல்லவர், வல்லவர், பேராற்றல் வாய்ந்தவர் என்று பேசுகிறார்கள். இவ்விடத்தில், விஜயகாந்த் கேப்டன் டிவியில் "அன்னைக்கு நம்மள திட்டுன வாய், நாம ஜெயிச்சா பாராட்டி பேசும்" என்று பேசியது நினைவுக்கு வருகிறது. அவரது மரணம் வழக்கம் போல ஒரு நாள் செய்தியாக கடக்கப்பட்டு இருந்தாலும், அவரால் பலன் அடைந்த திரை நடிகர்கள், ஈழ முகாமில் வசிக்கும் மக்கள், அவரது மன்றங்கள் மூலம் கணினி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தான் அவரது அருமை நேரடியாக புரிந்து இருக்கும்.
1990 இல் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் விஜயகாந்தின் திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர். 1996 இல் ஜெயலலிதா ஆட்சியின் போது திரையுலகமே அஞ்சிய காலத்தில், கலைஞரின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி கலைஞருக்கு தங்கப் பேனா வழங்கி சிறப்பித்தவர் விஜயகாந்த். வெளிநாட்டு சிகிச்சை முடிந்து சென்னைக்கு திரும்பிய போது, உடல்நிலை குன்றிய நிலையில் இருந்தும், வீட்டுக்கு செல்லாமல் நேரடியாக மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியவர் விஜயகாந்த். மேலும், கலைஞர் மறைவுக்கு இரங்கல் கூறும் போது அவர் வெளிப்படுத்திய பாசம் அனைவரின் மனதையும் தொட்டது.
யாருக்கும் அஞ்சாத குணம், திரையுலக வெற்றிக்கு உதவிய அளவுக்கு அவரது அரசியல் வாழ்வில் உதவவில்லை. அதற்கு காரணம் அவரது மேலோட்டமான அரசியல் புரிதல், அவரை அரசியலில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை. திரையில் பாகிஸ்தான் எதிரி நாடு, இஸ்லாமிய தீவிரவாதி, மக்கள் நலக்கூட்டணி, அரசியலில் வலுதுசாரி கூட்டணி என்று அவர் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. இப்படி சில இடங்களில் சறுக்க நேரிட்டாலும் "பசிப்பிணி" போக்க முயற்சி செய்தவர் என்ற வகையில் விஜயகாந்த் தனித்துவம் வாய்ந்தவர்.
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.