Chocks: January 2025

Thursday, January 23, 2025

பெரியார் குறித்து அவதூறு பரப்பும் சீமான்

பெரியார் குறித்து அவதூறு பரப்பும் சீமான்

பொருளடக்கம்
  1. முகவுரை
  2. ஏன் பெரியார் மட்டும் அதிகமாக எதிர்க்கப்படுகிறார்?
  3. பெரியாருக்கு பின்னால் திரண்ட படை 
  4. தமிழ் தேசியத் தலைவர்கள்
  5. மறைமலை அடிகள் பார்வையில் பெரியார்
  6. பெருஞ்சித்திரனார் பார்வையில் பெரியார் 
  7. பாரதிதாசன் பார்வையில் பெரியார்
  8. வ.உ.சி பார்வையில் பெரியார்
  9. கி.ஆ.பெ.விசுவநாதம் பார்வையில் பெரியார்
  10. சீமானின் கொடியத் திட்டம் 
  11. முடிவுரை 
  12. விவரணைகள் 
முகவுரை

2000 களில் பெரியாரை ஆதரித்து பெரியாரிய மேடைகளில் முழங்கிய சீமான், 2010 ஆம் ஆண்டில் நாம் தமிழர் கட்சி தொடங்கி, அதே ஆண்டில் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியாரை ஆதரித்து பேசிய சீமான், 2022 வரை பெரியார் நினைவேந்தலை நடத்திய சீமான், இன்று இந்தியா ஒன்றியமே நெருக்கடியான சூழலில் சிக்கியிருக்கும் நிலையில் திடீரென பெரியாரை எதிர்த்து பேசுகிறார்.

நடிகர் சோ. ராமசாமி மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆதரவில் "நாம் தமிழர்" கட்சி பெயரை சி.பா.ஆதித்தனார் (1958 முதல் 1967 வரை "நாம் தமிழர்" பெயரில் அரசியல் கட்சியை நடத்தியவர்) குடும்பத்தினரிடமிருந்து இரவல் வாங்கிய சீமான், இன்று RSS கும்பலின் கைப்பாவையாக மாறி, வெளிப்படையாக பெரியாரை ஏசுகிறார். இவ்வாறு, சீமான் பெரியாரை எதிர்க்க காரணமென்ன என்பதை காண்போம் வாருங்கள்!

ஏன் பெரியார் மட்டும் அதிகமாக எதிர்க்கப்படுகிறார்?

ஒரு மின்சார பொருளின் கண்டுபிடிப்பிற்கு ஒரே ஒரு விஞ்ஞானியின் பெயர் கூறப்படுவது சான்றாக இருந்தாலும், அந்த விஞ்ஞானிக்கு முன்னர் பல விஞ்ஞானிகள் அந்த வெற்றியை எட்டுவதற்கான அடிப்படைகளை உருவாக்கி விட்டு சென்றிருப்பார்கள்.

ஒரு மருத்துவ பரிசோதனையின் வெற்றிக்கு ஒரே ஒரு மருத்துவர் காரணமாக சொல்லப்பட்டாலும், முன்பே பல மருத்தவர்கள் அந்த பரிசோதனைக்கு அதை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்லும் முயற்சிகளை செய்திருப்பார்கள்.

ஒரு விளக்கொளி வெளிச்சம் பாய்ச்சினால், அந்த ஒளிக்கு பல்வேறு திரிகளும், எண்ணெய்யும், தீக்குச்சியும் காரணமாக அமைந்திருக்கும்.

ஒரு மரம் வெட்டப்படுகையில், அந்த கடைசி வெட்டில் அது கீழே விழுந்தாலும், அந்த கடைசி வெட்டிற்கு முன்பே அந்த மரம் பல்வேறு வெட்டுகளை பெற்றிருக்கும்.

அது போல பார்ப்பனீயத்திற்கு எதிரான கிளர்ச்சிகளில் பல்வேறு காலகட்டங்களில் பல தலைவர்கள் பங்காற்றியுள்ளார்கள் என்பது மறுக்க முடியாதவையே. மேலும், வள்ளுவர், வள்ளலார், அயோத்திதாசர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் இம்மண்ணுக்கான சமூக விடுதலையைப் பற்றி பேசியிருக்கின்றனர். இந்நிலையில், ஏன் பெரியார் மட்டும் அதிகமாக எதிர்க்கப்படுகிறார்?"

அதற்கான காரணம், பெரியார் மட்டுமே பேசுவதோடு மட்டுமல்லாமல், எழுதுவதோடு மட்டுமல்லாமல், களத்திற்கு வந்தார்! இடைவிடாது போராடினார்! பார்ப்பனிய சூழ்ச்சிகளை தோலுரித்து காட்டுவதையே தனது அன்றாட பணியாக அமைத்து கொண்டார்! இவ்வகையிலேயே, பெரியார் தனித்து நிற்கிறார்!

ஆங்கிலேயர்களுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை தலைவர்கள் விடுதலை கோரி போராடி கொண்டிருந்த வேளையில், நமக்கு விடுதலை என்பது ஆங்கிலேயர்களுக்கு எதிரானதாக மட்டுமல்ல, சமூக விடுதலை என்பதும் முக்கியம் என்றவர் பெரியார். சமூக விடுதலைக்கு தடையாக உள்ள பார்ப்பனீய சூழ்ச்சிகளை அகலமாக மட்டுமல்ல, ஆழமாகவும் தனது சமூக நீதி கருத்துக்களால் அம்பலப்படுத்தியவர் பெரியார். இன்னும் சொல்ல போனால், ஆரிய பார்ப்பனீயத்தை எதிர்க்கும் கருவியாக திராவிடத்தை வெகுமக்களிடம் கொண்டு சேர்த்தவர் பெரியார் என்றால் அது மிகையாகாது.

பெரியாருக்கு பின்னால் திரண்ட படை 

தமிழ்நாட்டின் நூற்றாண்டு கால அரசியல் என்பது வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட “ஆரிய-திராவிட” போரில் தான் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. இத்தகைய சூழலில், திராவிட அரசியலுக்கு ஆதரவாக பெரியார் காட்டியே ஒளியே திராவிட இயக்கங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

சமூகம் விழிப்புணர்வு செய்யத் தகுதியான பல காரியங்களை செய்து, நமக்குள் "இனம், மொழி, கல்வி, சுயாட்சி" என்ற உணர்வுகளை ஊட்டி, திராவிட இயக்கத்தை வலிமையாக கட்டமைத்த பெரியார் பின்னால், மாபெரும் தம்பிகள் படைத் தானே அணிவகுத்தனர். அந்த படையில் பணியாற்றிய அண்ணா, கலைஞர், அன்பழகன் உட்பட பல்வேறு திராவிட இயக்கத் தலைவர்கள், பெரியாரிடம் பயின்று, தேர்தல் அரசியல் இயக்கமான தி.மு.கவை தொடங்கினர். அப்பேற்பட்ட தி.மு.கவுக்கு துணையாக, நேற்றும் இன்றும் பலதரப்பட்ட பெரியாரிய அமைப்புகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.

பெரியார் மற்றும் அவர்தம் தம்பிகள் படையினரின் வலிமை மிக்க அரசியல் போராட்டத்தால் தான் தமிழ்ச் சமூகம் பல்வேறு மாற்றங்களை கண்டிருக்கிறது, கண்டும் வருகிறது. பிற இந்திய மாநிலங்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்களை கணக்கிட்டால், நிறை குறை இருப்பினும் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது வெள்ளிடை மலை.

தமிழ் தேசியத் தலைவர்கள்

தமிழ் தேசியத் தலைவர்களான "மறைமலை அடிகள், பெருஞ்சித்திரனார், பாரதிதாசன், வ.உ.சி, கி.ஆ.பெ.விசுவநாதம்" போன்றோர் பெரியாருக்கு எதிராக செயல்பட்டனர் என்று உண்மையை திரித்து பேசுகிறார் சீமான். 

ஆனால், தலைசிறந்த தமிழறிஞர்களை ஒருங்கிணைக்கும் தமிழ்ப் பாலமாக விளங்கிய பெரியாரை "மறைமலை அடிகள், பெருஞ்சித்திரனார், பாரதிதாசன், வ.உ.சி, கி.ஆ.பெ.விசுவநாதம், திரு.வி.க, நாவலர் சோமசுந்தர பாரதியார், இலக்குவனார், தேவநேயப் பாவாணர், அண்ணல் தங்கோ, குன்றக்குடி அடிகளார்" போன்றோர் ஆதரித்தனர் என்பதே உண்மை.  அதே நேரத்தில் சில தமிழ் தேசியத் தலைவர்களுக்கும் பெரியாருக்கும் இடையே நிலவிய முரண்கள் கருத்து முரண் தானே தவிர பகை முரண் அல்ல என்பது திண்ணம்.

மறைமலை அடிகள் பார்வையில் பெரியார்

"யான், ஆராய்ந்து எழுதி அரிதே அச்சிட்டு வெளிப்படுத்துங் கோட்பாடுகள் யாவும் கலைஞர்க்கும், புலவர்க்கும், பொதுமக்களிற் சிறந்தார் சிலர்க்குமே பயன் தருகின்றன. ஆனால் ஈ.வெ.ராவின் கிளர்ச்சியோ சிற்றூர் - பேரூர்களிலெல்லாம் பரவி பயன் விளைக்கின்றது. இதனால் எனது நோக்கங்களும், விருப்பங்களும் அவராலே எளிதில் எங்கும் முற்றுறுகின்றன. ஆதலால் ஈ.வெ.ரா. நெடிதினிது வாழ்க! அவர் முயற்சி வெல்க!"

 பெரியார் பற்றி மறைமலை அடிகள்

பெருஞ்சித்திரனார் பார்வையில் பெரியார் 

பெரியார் பிறந்தார்! 
பிறந்தது உள்ளொளி! 
அரியார் நாம் எனும் ஆக்கமும் சிறந்ததே!

பெரியார் பற்றி பெருஞ்சித்திரனார்

திரவிடத்தின் மக்கட்குத் தீந்தமிழின் ஆற்றல் தான் அவர் தம் மூச்சு!

திராவிடம் பற்றி பெருஞ்சித்திரனார்

பாரதிதாசன் பார்வையில் பெரியார்

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னட நன்மொழிகள்
அந்த மிகுந்த திராவிடம் அல்லது
ஆரியச் சொல் லாமோ - அவர்
வேர் வந்த சொல்லாமோ?

- திராவிடம் பற்றி பாரதிதாசன் 

சுயமரியாதைப் பெயர்கொள் பயிர்செழிக்கத்
தொண்டு செய்யும் இராமசாமித் தலைவா!

பெரியார் பற்றி பாரதிதாசன் 

வ.உ.சி பார்வையில் பெரியார்

"ஈ.வெ.ராவிடத்தில் உள்ள சிறப்புக் குணம் என்னவென்றால் மனதில் படும் உண்மைகளை ஒளிக்காமல் சொல்லும் ஒரு உத்தமக் குணம் தான். அவரை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் அயோக்கியர்கள் சிலர் வந்து புகுந்த பிற்பாடு நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு அவர் ஆரம்பித்து நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால் என்னால் ஆன உதவியை அவ்வியக்கத்திற்கு செய்து வருகிறேன். அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் தமிழ்நாட்டில் எல்லாத் தலைவர்களைவிட பெரிய தியாகி என்று தான் சொல்ல வேண்டும். ஆகையினால் அவருடைய திருஉருவப் படத்தை ஒவ்வொருவரும் வைத்து காலை, மாலை பகல் முதலிய வேளைகளில் வணங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்".

சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி வ.உ.சி 

கி.ஆ.பெ.விசுவநாதம் பார்வையில் பெரியார்

“சுயமரியாதை இயக்கத்தை இனி எக்காலத்திலும் எவராலும் எந்த வகையிலும் அழிக்க முடியாது. அப்படி அழித்துவிடலாம் என்று எண்ணுவது சமுத்திரத் தண்ணீரை இறைத்துவிடலாம் என்பதைவிட மோசமானது".

சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி கி.ஆ.பெ.விசுவநாதம்

சீமானின் கொடியத் திட்டம் 
 
இன்றைய சூழலில், சமூக-அரசியல் உலகில் பெரியாருக்கு கொடுக்கப்பட்டுள்ள உயரிய இடத்தை, அதாவது 'Larger than Life' என்ற இடத்தை உடைத்தெறிந்து, அதை வைத்தே இளைய சந்ததியினருக்குப் பெரியார் குறித்து அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி, அவரது அரசியல் பணிகளை சர்ச்சைகளுக்குள்ளாக்கி, பெரியாரால் எழுப்பப்பட்ட திராவிட அடையாளத்தை மங்கச் செய்து, நாம் தமிழரின் தமிழ் தேசியமான (உண்மையான தமிழ்த் தேசியம் என்பது சமத்துவமே) சாதி தேசியத்தை அரசியலில் நுழைக்க முயற்சிகள் மேற்கொள்வதே சீமானின் கொடியத் திட்டமாகும்.

முடிவுரை 

1960-1980 களில், பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையிலான வேறுபாட்டை சினிமாவில் லாவகமாக பயன்படுத்தி, எம்.ஜி.ஆர் சினிமாவிலும், அரசியலிலும் முன்னேறி வெற்றிக் கண்டார். அந்த பாணியை சீமான் இப்போது பின்பற்ற முயல்கிறார். ஆனால், இன்றைய காலகட்டத்தில், சீமானின் விபரீத ஆசை நிறைவேறுமா? அவர் பாணியில் பதில் சொல்ல வேண்டுமானால், "வாய்ப்பு இல்ல ராசா".
 
உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்த துரோகியும், பைத்தியக்காரனில் கெட்டிக்காரன் வகையறாவைச் சேர்ந்த சீமான், RSS கும்பலிடம் கைகோர்த்து, திரள்நிதி சுகத்தில் வாழும் சீமான் ருசி கண்ட பூனையாக உருமாறிவிட்டார். இனி பொதுவெளியில் சீமானை அம்பலப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. அத்துடன், மக்களிடம், குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடம், பெரியாரை அதிகளவு கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. 

விவரணைகள்


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

பெரியார் குறித்து அவதூறு பரப்பும் சீமான்

பெரியார் குறித்து அவதூறு பரப்பும் சீமான் பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட...