Chocks: தமிழ்நாட்டில் இரும்பு காலம்

Friday, January 24, 2025

தமிழ்நாட்டில் இரும்பு காலம்

தமிழ்நாட்டில் இரும்பு காலம்

கால வரிசை = முதலில் கற்காலம் அதன் பிறகு வெண்கல காலம் அதன் பிறகு இரும்பு காலம்!

பொருளடக்கம்
  1. முகவுரை 
  2. தமிழர்கள் மற்றும் இரும்பு
  3. தொழில்நுட்ப வளர்ச்சி: ஒப்பீடு
  4. திராவிட மரபின் பாகங்கள்
  5. திராவிடர் மற்றும் ஆரியர்
  6. இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு
  7. என்ன செய்தோம்?
  8. முடிவுரை
  9. பின்ணினைப்பு
  10. விவரணைகள்  
குறிப்பு = பழம்பெருமை சோறு போடாது. அதனால், நம் வரலாற்றின் பெருமைகளை ஆதிக்கவாதமாக பயன்படுத்துவது தவறு. அதற்குப் பதிலாக, வரலாற்று தரவுகளை முறையாக வெளிக்கொணர்ந்து, நமது தொன்மையைப் புரிந்து கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதே சிறந்தது.

முகவுரை 

தமிழ்நாட்டில் அண்மைக்கால அகழ்வாராய்ச்சிகளில் "கொடுமணல், கீழ்நமண்டி, மயிலாடும்பாறை, ஆதிச்சநல்லூர், சிவகளை" போன்ற இடங்களில் பரவலாக கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு பொருட்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதன்படி, உலகளவில் இரும்புக் காலம் கி.மு. 1200 இல் மேற்கு ஆப்பிரிக்காவில் தொடங்கியது என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஆரிய-திராவிட போரை உறுதி செய்யும் வகையில் கி.மு. 3345 லேயே (5370 ஆண்டுகளுக்கு முன்பு) தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு அறிமுகமானது என்ற அசாத்திய ஆய்வறிக்கையை 23-01-2025 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட இரும்பு பொருட்கள் உலகின் மற்ற பகுதிகளுக்கு முன்னதாக இருப்பதை நிரூபித்துள்ளது.
தமிழர்கள் மற்றும் இரும்பு

இந்தியா துணைக்கண்டத்தின் இரும்புக் காலம் கி.மு. 1400 இல் ஆரம்பமானதாகவும், இரும்பை ஆரியர்கள் கண்டுபிடித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே தமிழ் நிலப்பரப்பில் இரும்பை பிரித்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் இருந்தது என்பது ஆய்வறிக்கைகள் மூலம் தற்போது அறிவியல்பூர்வமாக உறுதியாகியுள்ளது. எனவே, ஆரியர்களுக்கு முன்பே தமிழர்கள் முன்னேறிய நாகரிகத்தை கொண்டவர்கள் என்பது உறுதியாகியுள்ளது.

மொத்தத்தில் இந்தியாவுக்கு இரும்பை அறிமுகம் செய்தது ஆரியர்களே என்ற வாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வேதங்களை விட தமிழ் தொன்மையானது என்பதும், ஆரியர்களுக்கு முன்பே திராவிட வழித் தோன்றலான தமிழர்கள் இரும்பை கைக்கொண்டு இருந்தனர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் தொழில் மரபு, ஆரியர்களுக்கு முன்னதாக இருந்தது என்பதையும் இது நிரூபிக்கின்றது.
தொழில்நுட்ப வளர்ச்சி: ஒப்பீடு

சிந்து சமவெளி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் வெண்கலத்தை பயன்படுத்திய காலத்தில், தமிழ் நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் இரும்பை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த நிலை, தமிழ் மக்கள் தொழில்நுட்ப ரீதியாக சிந்து சமவெளி மக்களைக் காட்டிலும் முன்னேறி வாழ்ந்திருக்கின்றனர் என்பதை நிரூபிக்கின்றது. Beta Carbon Dating தரவுகளின் அடிப்படையில், இரும்பு பயன்பாடு தமிழ்நாட்டில் சிந்து சமவெளி மக்களுக்குப் முன்னதாக இருந்தது என்பதை காட்டுகிறது.

தொழில்நுட்ப கால வரிசையில் (கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம்), தமிழ் நிலப்பரப்பானது சிந்து சமவெளி நிலப்பரப்பை விட தொழில்நுட்ப ரீதியாக விரைவில் முன்னேறியது, அல்லது சிந்து சமவெளி தமிழ் நாட்டை விட பின்னடைந்திருந்தது என கூறலாம்.

திராவிட மரபின் பாகங்கள்

இந்த வேறுபாடுகள், சிந்து சமவெளி மற்றும் தமிழ்நாடு மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை காட்டுகின்றன. ஆனால் இந்த இரு நாகரிகங்களும் பரந்த திராவிட மரபின் பாகங்களாகும். சிந்து சமவெளி மற்றும் தமிழ்நாடு உட்பட பழம்பெரும் இந்தியாவில் வாழ்ந்த, வாழும் நம் அனைவருக்கும் முன்னோர்களே திராவிடர்கள். புரோட்டோ-திராவிட மொழி, இந்த இரு நாகரிகங்களின் முந்தைய மொழியாக இருந்தது. காலப்போக்கில், மொழிகள் பிரிந்து, தற்போதைய இந்தியா மாநிலங்களின் வடிவம் உருவானது. அதன்படி, இந்தோ-ஆரிய மற்றும் திராவிட மொழி குடும்பங்கள் உருவாகின.

திராவிடர் மற்றும் ஆரியர்

இந்தியா துணைக்கண்டத்தில் திராவிடர் எனக் குறிப்பிடப்படுவோர் தமிழர்கள், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், துளுவர்கள் ஆகியோரே. ஆரியர்கள் எனக் குறிப்பிடப்படுவோர் பல பிரிவுகளில் வாழும் பார்ப்பனர்களின் குழுக்கள்.  

திராவிட மரபினத்தை சேர்ந்த சிந்து சமவெளி நாகரிகமும் தமிழ்நாட்டின் நாகரிகமும் தொன்மை வாய்ந்தவை. நமக்கு மூதாதையர்கள் திராவிடர்கள்! ஆரியர்கள் இடையில் வந்தவர்கள். தமிழ் நிலப்பரப்பில் தொல்லியல் மேடுகள் கிடைத்தால், மேலும் பல புதுமையான தகவல்கள் வெளியாகக்கூடும்.

 இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு

சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு Homo Sapiens ஆன நாம் ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பி இந்தியாவில் குடியேறினோமா? அல்லது தமிழ்நாடு தான் மனித வழித்தோன்றல்களின் தொடக்க இடமா? இவ்வாறு, தமிழ்நாட்டின் தொல்லியல் துறையின் மேலான ஆராய்ச்சிகள் புதிய தகவல்களை வெளிப்படுத்தத் தொடங்கினால், இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்று மையம் தமிழ்நாட்டில் தொடங்குவதை உறுதிப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

என்ன செய்தோம்?

தமிழ் நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் உலகில் முதன்முறையாக இரும்பை உருக்கி பயன்படுத்தத் தொடங்கியவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, இதுவரை கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், 2500 ஆண்டுகளுக்கால சேர, சோழ, பாண்டிய பேரரசுகளுக்கு முன்னரே, 5300 ஆண்டுகளுக்கு முன் கைக்கொண்ட அந்த இரும்பை கொண்டு அந்த காலகட்டத்தில் நாம் என்னென்ன செய்தோம்? இதற்கும் மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

முடிவுரை

மொத்தத்தில், தொடர்ச்சியான ஆராய்ச்சிகளே வரலாற்று புதிர்களுக்கு பல்வேறு விடைகளை அளிக்க முடியும். அதற்கு, பேரறிஞர் அண்ணா கூறியது போல், முதலில் நாம் "காத்திருக்க பழக வேண்டும்". ஏனெனில் காலமும், முயற்சியும் செவ்வனே பணிகளைச் செய்யும்; இடையில் வந்தவர்களைச் சுட்டிக் காட்டும்.

பின்ணினைப்பு

// கொடுமணல் வாள் //

பழங்காலத்தில் தமிழ் அரசர்களும் படை வீரர்களும் தங்களது போர்களில் வாளாதிருக்கவில்லை. அவர்கள் பல போர்களில் விவேகத்துடன் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட போர்களில் முதன்மையான ஆயுதமாக இருந்தது வாள், அதாவது வாள் சண்டை தான். வாள் ஏந்தி போராடுவது வீரத்தின் அடையாளம், வெற்றியின் அடையாளம் என கருதப்பட்டது.

பழங்காலத்தில் உலகின் பல நாடுகளுக்கு, குறிப்பாக ரோமாபுரிக்கும் சிரியாவுக்கும் அதிகளவில் எஃகு வாள் (Wootz Steel) ஏற்றுமதி செய்தது தமிழ்நாட்டில் ஈரோட்டில் உள்ள "கொடுமணல்" என்ற வணிக நகரமாகும். கொடுமணல் ஏற்றுமதி செய்த எஃகு (Wootz Ingot) மூலம் பற்பல வாள்கள் வடிவமைக்கப்பட்டன, எடுத்துக்காட்டாக சிரியாவின் டமாஸ்கஸ் ஸ்டீல் (Damascus Steel). கொடுமணல் வாள் தான் உலகின் நவீன வாள் (Modern Swords) பயன்பாட்டுக்கும், கலப்பு உலோக ஆராய்ச்சிக்கும் (Alloys in Material Science) வித்திட்டது.

சேரர்கள் ஆண்ட கொங்கு பகுதியில் கொடுமணல் வாள் உலகளவில் பிரபலமாக காரணம் அங்கே தான் இரும்பை (Iron) எஃகு (Steel) ஆக்கும் தொழில்நுட்பம் அறியப்பட்டது. இன்றைய கொடுமணல் தொல்லியல் ஆராய்ச்சி மூலம் விதவிதமான வாள்கள், ரோமாபுரி காசுகள், வாள் தயாரிக்கும் கருவிகள் உட்பட நிறைய கிடைத்துள்ளது.

மின்சாரத்தின் தந்தை (Father of Electricity) என்று அழைக்கப்படும் மைக்கேல் பாரடே (Michael Faraday) 1819 இல் கொடுமணல் வாள் பற்றி அதிகளவில் ஆராய்ச்சி செய்துள்ளார். கொடுமணல் வாள் குறித்த மைக்கேல் பாரடேயின் ஆராய்ச்சி Material Science (Metallurgy) வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.

வாள் ஏந்தி போராடியதன் வரலாற்று எச்சமாக இன்று பல நாடுகளில் வீரத்தின் அடையாளமாகவும், எதிரிகளை வீழ்த்த வேண்டியும், அரசியல் தலைவர்களுக்கு வாள் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பழங்கால தமிழ்நாட்டின் கொடுமணல் வாள் தான் உலக பிரசித்தம் அடைந்தது; அவ்வகையில் எஃகு குறித்த ஆராய்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது கொடுமணல் வாள்.

விவரணைகள் 

இரும்பின் தொன்மை 


Antiquity of Iron


A Tale of Wootz Steel  


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

தமிழ்நாட்டில் இரும்பு காலம்

தமிழ்நாட்டில் இரும்பு காலம் கால வரிசை = முதலில் கற்காலம் அதன் பிறகு வெண்கல காலம் அதன் பிறகு இரும்பு காலம்! பொருளடக்கம் முகவுரை   தமிழர்கள் ...