இந்திய ஒன்றியத்தின் சுருக்கமான வரலாறு
பொருளடக்கம்
- முகவுரை
- சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு 3300 - கி.மு 1300)
- வேத காலம் (கி.மு 1500 - கி.மு 500)
- கீழடி நாகரிகம் (கி.மு 600 - கி.மு 200)
- பௌத்த - சமணக் காலம் (கி.மு 600 - கி.பி 800)
- மகாஜனபாதங்கள் (கி.மு 600 - கி.மு 345)
- நந்த வம்சம் (கி.மு 345 - கி.மு 321)
- மௌரியப் பேரரசு (கி.மு 320 - கி.மு 185)
- சுங்க வம்சம் (கி.மு. 185 - கி.மு 73)
- பார்ப்பனீயத்தின் உச்சம்
- குசானப் பேரரசு (கி.பி 30 - கி.பி 375)
- குப்தப் பேரரசு (கி.பி 319 - கி.பி 550)
- குப்தப் பேரரசின் வீழ்ச்சி
- ஹர்சப் பேரரசு (கி.பி 606 - கி.பி 647)
- பக்தி இயக்கம் (தெற்கு - வடக்கு)
- டெல்லி சுல்தானகத்திற்கு முன்பு
- டெல்லி சுல்தானகம் (1206 - 1526)
- முதலாம் பானிபட் போர் (1526)
- முகலாயப் பேரரசு (1526 - 1857)
- போர்த்துகீசியம் மற்றும் முகலாய தொடர்பு
- ஸ்வாலி போர் (1612)
- பிராந்திய இராச்சியங்களின் எழுச்சி
- பாளையக்காரர்களின் போர்க்குரல் (1800)
- பிளாசி போர் (1757)
- ஆங்கிலேயர்களின் எழுச்சி
- வேலூர் சிப்பாய் எழுச்சி (1806)
- இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி (1857)
- பிரிட்டிஷ் இந்தியா (1858 - 1947)
- இந்திய விடுதலை இயக்கம் (1905 - 1947)
- இந்துத்துவா இயக்கம் (1925)
- சமூக நீதி இயக்கம் (1925)
- தமிழ்நாட்டு அரசியல்
- முடிவுரை
- விவரணைகள்
முகவுரை ⏬
பல்வேறு கலாச்சாரங்கள், சமயங்கள், பேரரசுகள் மற்றும் சமூக இயக்கங்களை கொண்ட இந்தியாவின் வரலாறு ஒரு பல்சுவைத் தொகுப்பாகும்.
"இந்திய ஒன்றியத்தின் சுருக்கமான வரலாறு" என்பது சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி நவீன இந்தியா வரை, ஒவ்வொரு காலகட்டத்திலும் தனித்துவமான சமூக, கலாச்சார வளர்ச்சிகள் மற்றும் அரசியல் மாற்றங்களை தழுவிய ஒரு பயணமாகும்.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு 3300 - கி.மு 1300) ⏬
உலகின் முதன்மை நகர நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகம், நகர திட்டமிடல் மற்றும் வர்த்தகத்திற்குப் பெயர் பெற்றது.
ஆரம்ப ஹரப்பா கட்டம் (கி.மு 3300 - கி.மு 2600) = ஆரம்ப குடியேற்றங்கள் மற்றும் நகரமயமாக்கலின் வளர்ச்சி.
நன்கு வளர்ந்த ஹரப்பா கட்டம் (கி.மு 2600 - கி.மு 1900) = மொஹெஞ்சதாரோ, ஹரப்பா போன்ற திட்டமிடப்பட்ட நகரங்களின் உச்சம்.
பிற்பகுதி ஹரப்பா கட்டம் (கி.மு 1900 - கி.மு 1300) = படிப்படியாக வீழ்ச்சி, பிராந்திய பரவல்.
வேத காலம் (கி.மு 1500 – கி.மு 500) ⏬
கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் (பார்ப்பனர்கள்) வேத காலத்தில் கோலோச்சினர். வெவ்வேறு காலகட்டங்களில் பார்ப்பனர்கள் உருவாக்கிய நான்கு வர்ணங்கள் மற்றும் வேதங்களின் பின்னணியில், பெண்ணடிமைத்தனம் முதல் தீண்டாமை வரை பரிணாமம் அடைந்த இந்துத்துவா கொள்கைகள் உருவாகின.
கீழடி நாகரிகம் (கி.மு 600 - கி.மு 200) ⏬
சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழடி நாகரிகம், மேம்பட்ட எழுத்து முறை, நன்கு திட்டமிடப்பட்ட வீட்டுக் கட்டமைப்புகள் மற்றும் செழிப்பான வர்த்தக வலையமைப்பு ஆகியவற்றின் சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி சிந்து சமவெளி நாகரிகத்துடன் ஒரு கலாச்சார தொடர்பை வலுவாக பரிந்துரைக்கிறது.
தற்போது, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு குமரி முனையிலிருந்து தொடங்க வேண்டும் என பரிந்துரைக்கும் குறிப்பிடத்தக்க தொல்பொருள் சான்றுகளைக் கண்டறிந்த இந்தியாவின் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மேலும் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் முதன்முதலில் தமிழ்நாட்டில் இரும்பு உருகியதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
பௌத்த - சமணக் காலம் (கி.மு 600 - கி.பி 800) ⏬
சித்தார்த்த கௌதமர் (புத்தர்) மற்றும் மகாவீரரால் வழிநடத்தப்பட்ட பௌத்தம், சமணம் அறிவொளி மற்றும் தத்துவ சிந்தனைகளுக்கு புதிய வடிவம் அளித்தது.
பார்ப்பனீய மயத்தை எதிர்த்து எழுந்து நின்ற பௌத்தத்தையும் சமணத்தையும் அழிக்கும் நோக்கில், பேரரசுகளின் ஆதரவுடன் மெல்ல ஊடுருவிய பார்ப்பனர்கள், பார்ப்பனீயத்தை மீண்டும் நிலைநாட்டி, பௌத்தத்தையும் சமணத்தையும் இந்து மதத்தின் துணைக்கிளைகளாக மாற்றி முடிவுரை எழுதியனர்.
பேரரசுகளின் ஆதரவுடன் பார்ப்பனர்கள் படிப்படியாக ஊடுருவி பார்ப்பனீயத்தை மீண்டும் நிலைநிறுத்தி, அதற்கு எதிராக நின்ற பௌத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்தி, அவற்றை இந்து மதத்தின் துணைக் கிளைகளாக மாற்றினர்.
மகாஜனபாதங்கள் (கி.மு 600 – கி.மு 345) ⏬
வட இந்தியாவில் "அங்கம், அஸ்மகம், அவந்தி, சேதி, காந்தாரம், காசி, கம்போஜம், கோசலம், குரு, மகதம், மல்லம், மத்சயம், பாஞ்சாலம், சூரசேனம், வஜ்ஜி, வத்சம்" ஆகிய 16 சிறுகுழு அரசுகள் தோன்றின.
நந்த வம்சம் (கி.மு 345 – கி.மு 321) ⏬
மகதப் பகுதியை ஆட்சி செய்த நந்த வம்சம் மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்கும் செல்வத்திற்கும் புகழ் பெற்றது. சந்திரகுப்த மௌரியர் நந்த வம்சத்தை தோற்கடித்தார்.
மௌரியப் பேரரசு (கி.மு 320 - கி.மு 185) ⏬
சந்திரகுப்த மௌரியரால் நிறுவப்பட்ட மௌரியப் பேரரசு, அசோகரின் ஆட்சியில் உச்சத்துக்கு வந்தது. அசோகர் புத்த மதத்தை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார்.
சுங்க வம்சம் (கி.மு. 185 - கி.மு 73) ⏬
மௌரியப் பேரரசின் ஆட்சியாளர் பிருஹத்ரதனைக் கொன்று, புஷ்யமித்திரர் சுங்க வம்சத்தை நிறுவினார். நகரங்களின் மூலை முடுக்கெல்லாம் பார்ப்பனீயத்தை பரவச் செய்வதில் முக்கிய பங்காற்றினார்.
பார்ப்பனீயத்தின் உச்சம் ⏬
சுங்கர்கள் முதல் குப்தர்கள் காலம் வரை, வேத காலத்திற்குப் பிறகு நாடெங்கிலும் பார்ப்பனீயம் மறுமலர்ச்சியைக் கண்டது.
குசானப் பேரரசு (கி.பி 30 - கி.பி 375) ⏬
மத்திய ஆசியாவைச் சேர்ந்த குசானப் பேரரசு வட இந்தியா, மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளை ஆட்சி செய்தது. மகாயான பௌத்த நெறிகளை பரப்புதல், பட்டுப்பாதையில் வர்த்தகத்தை ஊக்குவித்தல், மற்றும் காந்தாரக் கலையை செழித்து வளர்த்தல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தது. அரசர் கனிஷ்கரின் காலத்தில், குசானப் பேரரசு தனது உச்சத்தை அடைந்தது.
குப்தப் பேரரசு (கி.மு 319 - கி.பி 550) ⏬
சந்திரகுப்தா தோற்றுவித்த குப்தப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் அறிவியல், கலை, மற்றும் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில் பார்ப்பனீய மரபுகள் வலுப்பெற்றன, பல்வேறு இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் எழுதப்பட்டன. இதனால், இந்துத்துவ அறிஞர்கள் இதை இந்திய கலாச்சாரத்தின் "பொற்காலம்" என குறிப்பிட்டனர்.
குப்தப் பேரரசின் வீழ்ச்சி ⏬
படையெடுப்புகள் மற்றும் உள் பிளவுகள் காரணமாக குப்தப் பேரரசு பலவீனமடைந்தது. இது ராஜபுத்திரர்கள், வாகாடகர்கள், பல்லவர்கள், சாளுக்கியர்கள் போன்ற பல பிராந்திய ராஜ்யங்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.
ஹர்சப் பேரரசு (கி.பி 606 - கி.பி 647) ⏬
ஹர்சவர்தனின் ஆட்சி வட இந்தியாவில் அரசியல் ஒற்றுமையையும் கலாச்சார வளர்ச்சியையும் கொண்டு வந்தது. மத சகிப்புத்தன்மை மற்றும் கலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
பக்தி இயக்கம் (தெற்கு - வடக்கு) ⏬
தமிழ்நாட்டில் 6 முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் பௌத்தம் மற்றும் சமணத்தை எதிர்த்து, சைவம் மற்றும் வைணவத்தை ஆதரிக்கும் வகையில் பக்தி இயக்கம் தோன்றியது. துறவறத்தைப் போற்றிய பௌத்த, சமண சமயங்களுக்கு எதிராக, குடும்ப வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி, சைவ நாயன்மார்கள் (63 பேர்) மற்றும் வைணவ ஆழ்வார்கள் (12 பேர்) தங்களது தமிழ்ப் பாடல்களால் சைவ, வைணவ சமயங்களை வளர்த்தனர்.
பல சமய மரபுகளை வைதீகத்துடன் இணைத்துக் கொண்டு இந்து மதம் உருவாக, பக்தி இயக்கம் முக்கிய பங்கு வகித்தது. தெற்கில் கோலாச்சிய பக்தி இயக்கத்தின் தாக்கம் வட இந்தியாவிலும் எதிரொலித்தது. 15ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் டெல்லி சுல்தான்களும் முகலாய பேரரசர்களும் ஆட்சி செய்த காலத்தில், கபீர், மீராபாய், துளசிதாஸ் போன்றோரின் தத்துவ போதனைகள் புகழ் பெற்றன. இதே காலத்தில், குரு நானக் தனது போதனைகளை அடிப்படையாகக் கொண்டு சீக்கிய மதத்தை நிறுவினார்.
டெல்லி சுல்தானகத்திற்கு முன்பு ⏬
டெல்லி சுல்தானகத்தின் எழுச்சிக்கு முன், ராஜ்புத் ராஜ்ஜியங்கள் மற்றும் குரித்து பேரரசு ஆகியவை கி.பி 700 முதல் கி.பி 1200 வரை வட இந்தியாவில் மேலாதிக்க சக்திகளாக இருந்தன.
மேலும், கோரின் முகம்மதுவின் அரசியல் வெற்றிகள் பிராந்தியத்தின் அரசியல் நிலப்பரப்பில் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்ததுடன், தொடர்ந்து டெல்லி சுல்தானகத்தை நிறுவுவதற்கான அடித்தளத்தையும் அமைத்தன.
டெல்லி சுல்தானகம் (1206 - 1526) ⏬
குரித்து பேரரசை சேர்ந்த கோரின் முகம்மதுவின் தளபதியாக இருந்த குதுபுத்தீன் ஐபக், வட இந்தியாவில் குரித்து பேரரசின் நிலப்பரப்புகளை நிர்வகித்தார். 1206 ஆம் ஆண்டில், கோரின் முகம்மது எதிரிகளால் கொல்லப்பட்ட பின், இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசராக பொறுப்பேற்ற குதுபுத்தீன் ஐபக், டெல்லி சுல்தானகத்தை நிறுவினார்.
தொடர்ந்து, துருக்கிய மற்றும் ஆப்கானிய வம்சங்கள் டெல்லி சுல்தானகத்தை ஆண்டு வந்தனர். டெல்லி சுல்தானகத்தின் ஆட்சியில், இஸ்லாம் மதத்தின் தாக்கம் ஏற்பட்டதுடன், கலாச்சார மற்றும் அரசியல் மாற்றங்களும் உருவாயின. இதற்கிடையில், கிறிஸ்தவம் இந்தியாவிற்கு இஸ்லாத்தை விட முன்னதாக வந்தது. எனினும், கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு முன்னர் இந்தியாவில் ஆட்சி செய்தது இஸ்லாமிய சாம்ராஜ்யம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் பானிபட் போர் (1526) ⏬
பானிபட் போரில் கடைசி டெல்லி சுல்தானான இப்ராஹிம் லோடியை தோற்கடித்து, பாபர் முகலாயப் பேரரசை நிறுவினார். இஸ்லாமிய கலாச்சாரத்தால் குறிப்பிடத்தக்க தாக்கம் பெற்ற டெல்லி சுல்தானகத்தின் வீழ்ச்சிக்கு பின்னர், இஸ்லாமிய மரபுகளால் ஆழமாக வடிவமைக்கப்பட்ட முகலாயப் பேரரசு அதிகாரத்திற்கு உயர்ந்தது.
முகலாயப் பேரரசு (1526 - 1857) ⏬
முகலாயப் பேரரசு, குறிப்பாக அக்பர், ஷாஜகான், ஔரங்கசீப் போன்ற ஆட்சியாளர்களின் கீழ், பன்முக கலாச்சாரம், கட்டிடக் கலை, வர்த்தக மேம்பாடு, மையப்படுத்தப்பட்ட அதிகாரம், மத சகிப்புத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறிப்பிடத்தக்க மையமாயின.
போர்த்துகீசியம் மற்றும் முகலாய தொடர்பு ⏬
1498 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள், முகலாய பேரரசுடன் வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் கூட்டணிகளை உருவாக்கினர். எனினும், அவர்களின் செல்வாக்கு கரையோர பகுதிகளுக்கு மட்டுமே முற்றுப்பெற்றது.
ஸ்வாலி போர் (1612) ⏬
ஸ்வாலி போரில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி போர்த்துகீசியர்களை தோற்கடித்து, இந்தியாவின் வர்த்தக பாதைகளில் ஆதிக்கம் பெற்றது. இதன் விளைவாக, இந்தியாவில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பல்வேறு வடிவங்களான ஆங்கிலேய ஆட்சிக்கு அடித்தளம் அமைந்தது.
பிராந்திய இராச்சியங்களின் எழுச்சி ⏬
முகலாயப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, மராத்தியர்கள், சீக்கியர்கள், பாளையக்காரர்கள் மற்றும் நிஜாம் போன்ற பிராந்திய சக்திகள் ஆங்கிலேயர்களின் விரிவாக்கத்தை எதிர்த்து முக்கிய பங்கு வகித்தனர்.
பிளாசி போர் (1757) ⏬
பிளாசி போரில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ அதிகாரி ராபர்ட் கிளைவின் தலைமையில், வங்காள நவாபின் தளபதி மிர் ஜாபரின் உதவியுடன் நவாப் சிராஜ்-உத்-தௌலாவை தோற்கடித்தனர். இந்த வெற்றி, வங்காளத்தின் அபாரமான செல்வத்தை பிரிட்டிஷ் விரிவாக்கத்திற்கு முக்கிய நிதியுதவியாக மாற்றியது.
ஆங்கிலேயர்களின் எழுச்சி ⏬
ஸ்வாலி போர் இந்தியாவுக்கான கடல் வர்த்தக வழிகளில் பிரிட்டிஷ் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த முக்கிய பங்காற்றியது, பிளாசி போர் இந்தியாவின் மீது பிரிட்டிஷ் அரசியல் கட்டுப்பாட்டை நிறுவுவதில் முக்கிய திருப்பமாக அமைந்தது.
இந்த வெற்றிகளின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய ஒன்றியத்தில் வலுவாக காலூன்ற தொடங்கினர். படிப்படியாக கிறிஸ்தவம் பரவியதோடு, கல்வி, கலை, பண்பாடு மற்றும் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் ஆங்கிலேயர்கள் புத்துணர்ச்சி ஏற்படுத்தினர்.
பாளையக்காரர்களின் போர்க்குரல் (1800) ⏬
குறுநில அரசர்களே பாளையக்காரர்கள் என அழைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, நெல்லை, தஞ்சை, ஆந்திராவில் ராயலசீமா, கர்நாடகத்தில் மைசூர், கேரளத்தில் திருவிதாங்கூர் மற்றும் கோட்டயம் பகுதிகளைச் சேர்ந்த பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினர். பாளையக்காரர்களின் போர்குரல்களை அடக்கிய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, அவர்களை சமஸ்தானங்கள் அடிப்படையில் ஜமீன்தார்கள் அல்லது நிலக்கிழார்கள் என்ற நிலைக்கு மாற்றியது.
வேலூர் சிப்பாய் எழுச்சி (1806) ⏬
1805 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் இருந்த சிப்பாய்கள், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி பிறப்பித்த சில உத்தரவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த உத்தரவுகளில் தலையில் "கிருதாவை சீவுதல், சமய அடையாளங்களை தவிர்த்தல், மற்றும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிதல்" ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிப்பாய்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தினர். வேலூர் சிறையில் இருந்த திப்பு சுல்தானின் மகன்கள், சிப்பாய்களை கிளர்ச்சிக்கு தூண்டியதாக கூறப்படுகிறது. ஒரே நாளே நீடித்த இந்த கிளர்ச்சியில் இரு தரப்பிலும் பல உயிர்கள் பலியாகின.
இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி (1857) ⏬
பீரங்கிகளுக்கு பயன்படுத்தப்படும் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கொழுப்பு விவகாரத்தில் இந்தியச் சிப்பாய்க் கலகம் வெடித்தது. மத மற்றும் கலாச்சார பதட்டங்கள் காரணமாக, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக இந்தியச் சிப்பாய்கள் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது, நேரடி பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தது.
பிரிட்டிஷ் இந்தியா (1858 - 1947) ⏬
முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பல சிறுகுழுக்களின் எதிர்ப்பை சமாளித்து, ஆங்கிலேயர்கள் அதிகாரத்தை ஒருங்கிணைத்து அதிகாரப்பூர்வமாக பிரிட்டிஷ் ஆட்சியை நிறுவினர். இதனால், பார்ப்பனீய அடக்குமுறைகளால் பல காலமாக தடை செய்யப்பட்ட கல்வி இந்தியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உருவானது. பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சி முறையே சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்தது.
இந்திய விடுதலை இயக்கம் (1905 - 1947) ⏬
1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினை இந்தியாவில் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கி, தேசியவாத உணர்வையும் சுதந்திரப் போராட்டத்தையும் ஒருங்கிணைத்தது. இது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக லால்-பால்-பால் குழுவின் தலைமையில் சுதேசி இயக்கம் தோன்ற வழிவகுத்தது. இதனால், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தீவிர அரசியல் உணர்வு இந்தியா முழுவதும் வளர்ந்தது. பின்னர், 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் காந்தியின் அரசியல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியது, அவரை சுதந்திரப் போராட்டத்தின் அகிம்சை தலைவராக மாற்றியது.
லால்-பால்-பால் குழு, காந்தி-நேரு குழு, நேதாஜி குழு, எம்.என்.ராய் குழு உட்பட பல்வேறு குழுவை சேர்ந்தவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய விடுதலைப் போராளிகள் குழு, இந்திய தீவிரவாத இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உள்ளிட்ட பல தேசியவாத இயக்கங்களின் எழுச்சி 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது. மேலும், பல்வேறு அரசியல் காரணங்களால் பாகிஸ்தான் இந்தியாவை விட்டு பிரிந்து சென்றது.
இந்துத்துவா இயக்கம் (1925) ⏬
2,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய மக்கள் அறிவு ரீதியாக முன்னேறியிருந்ததை இந்திய வரலாறு தெளிவாக நிரூபிக்கிறது. இதை சிந்து சமவெளி எழுத்துகள் மற்றும் தமிழ் சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன. இருப்பினும், ஆரியர்கள் இந்தியாவில் ஊடுருவிய பிறகு, திராவிடர்கள் ஆரிய மதக் கோட்பாடுகளின் செல்வாக்குக்கு உட்பட்டனர். அதன்பின், திராவிடர்களுக்குக் கல்விக்கான அணுகல் மறுக்கப்பட்டது.
காலப்போக்கில், பௌத்தமும் சமணமும் பார்ப்பனீயத்திற்கு எதிரான தத்துவ இயக்கங்களாக உருவெடுத்தன. ஆனாலும், இறுதியில் மத அதிகாரத்தையும் அரச ஆதரவையும் பயன்படுத்தி, பௌத்தத்தையும் சமணத்தையும் மற்றும் பிற சமயங்களையும் உள்வாங்கி செரித்து, பார்ப்பனீயம் வெற்றி கண்டது. பிற்காலத்தில், கிறிஸ்தவம் கல்விக்கு பங்களித்தது; இஸ்லாம் மதச்சார்பின்மையை ஊக்குவித்தது; ஆனால் இந்து மதம் சாதி அமைப்பை கெட்டிப்படுத்தியது. மேலும், பார்ப்பன ஆதிக்கத்தை நிலைப்படுத்த, சாதி அமைப்பை காப்பாற்ற, 1925 ஆம் ஆண்டு உருவான ஆர்.எஸ்.எஸ், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக நீதி இயக்கம் (1925) ⏬
இந்திய நிலப்பரப்பில் "ஆரியர் x திராவிடர்" அரசியல் வரலாற்றுச் சூழலில், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த சமூக நீதி இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. பார்ப்பனர் அல்லாதோரின் நலனை கருத்தில் கொண்டு, பெரியார், அம்பேத்கர் மற்றும் பொதுவுடமை வழியில் எண்ணற்ற தலைவர்களும் தோழர்களும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு, சமுதாயத்தின் தலைகீழாக்கத்தைச் சரிசெய்ய முயன்றும் முயன்று கொண்டிருக்கின்றனர்.
1925 ஆம் ஆண்டு பெரியார் வளர்த்த சுயமரியாதை இயக்கம் "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற கொள்கைகளை முன்னிறுத்தியது. அம்பேத்கர் வளர்த்த தலித் இயக்கம் "கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்" என்ற கொள்கைகளை முன்வைத்தது. பொதுவுடமை தோழர்கள் வளர்த்த பொதுவுடமை இயக்கம் "எல்லாவற்றிலும் சமத்துவம், வர்க்கப் படிநிலைகளை ஒழித்தல், புரட்சிகரமான மாற்றம்" என்பதைக் கொண்டது.
தமிழ்நாட்டு அரசியல் ⏬
வரலாற்றுக்கு முந்தைய காலம், சங்க காலம், சங்கம் மருவிய களப்பிரர் காலம், பண்டைய சேர, சோழ, பாண்டிய, பல்லவ பேரரசுகள், மதுரை சுல்தானகம், விஜயநகர பேரரசு, நாயக்கர் ஆட்சி, ஆற்காடு நவாப், தஞ்சை மராத்தியர், பாளையக்கார ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி, திராவிட இயக்கங்களின் ஆட்சி என தமிழ்நாட்டின் வரலாறு பல்வேறு காலக்கட்டங்களை கடந்து வந்துள்ளது. பாளையக்காரர்களின் எழுச்சியும் சிப்பாய் கலகங்களும் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை பறைசாற்றுகின்றன. சுதந்திர இந்தியாவிற்கு பிறகு, திராவிட அரசியல் தமிழ்நாட்டில் சமூக மாற்றத்திற்குத் தூணாக அமைந்தது.
வடவர்கள் தமிழ்நாட்டை முழுமையாக கைப்பற்றி ஆட்சி செய்த வரலாறு இல்லை என்பதும், 57 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் அரணாக திராவிடக் கட்சிகள் இருந்து வருவதும், 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டை ஆள முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முடிவுரை ⏬
இந்திய ஒன்றிய வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களைப் பற்றிய அறிவு அதன் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பரிணாமங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவுகிறது. வரலாற்று ரீதியாக, இந்தியா எப்போதும் ஒரு தேசமாக இருந்ததில்லை; மாறாக, அது எப்போதும் வெவ்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் நிர்வாக வடிவங்களைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக இருந்தது. இதுவே இன்றைய மதசார்பினைக்கு அடித்தளமாக அமைந்தது.
மேலும், இந்து மதம், அதன் சாராம்சத்தில், பிறப்பால் பார்ப்பனீயம் ஆகும். அதே சமயம், தாழ்த்தப்பட்ட இந்துக்கள் தங்களின் சுயமரியாதைக்காக இஸ்லாமையும் கிறிஸ்தவத்தையும் சுவீகரித்தனர். இது மத ரீதியான முக்கிய மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும், இந்திய ஒன்றியத்தின் சூழலை உணரவும் உதவுகிறது.
குறிப்பு = இந்தியா ஒரே நாடாக இருந்ததில்லை. பிரிட்டிஷார்களால் சுதந்திரம் அளிக்கப்பட்ட போது, இந்தியா பல்வேறு சமஸ்தானங்களின் தொகுப்பாக இருந்தது. பிரிட்டிஷார் சென்ற பிறகு, காங்கிரஸ் இந்தியாவை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து, மொழி அடிப்படையில் மாநிலங்களை பிரித்தது.
விவரணைகள் ⏬
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment