Chocks: பௌத்தம் - ஜைனம் - சீக்கியம் ஓர் பார்வை

Thursday, October 15, 2020

பௌத்தம் - ஜைனம் - சீக்கியம் ஓர் பார்வை

பௌத்தம் - ஜைனம் - சீக்கியம் ஓர் பார்வை

சமயம் - மதம் 

அரிசியைப் பக்குவமாகச் சோறாக்குவது (சமை - சமைத்தல்) சமையல் என்றானது போல மனிதனை இறை சார்ந்து நிலைப்படுத்துவது (சமை - சமையம்) சமயம் என்றானது. கடவுள் (கட + உள்) என்றால் உள்ளத்தைக் கடந்தவனாகிய மறை பொருள். சமூகத்தில் தனிமனிதனின் சாதி கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது என்று வேத மதம் கூறுகிறது. அதே சமயம் பௌத்தம், ஜைனம் மற்றும் சீக்கியம் ஆகியவை வேத மதத்தில் வேரூன்றியிருக்கும் ஜாதிப் பாகுபாட்டை நிராகரித்து "அனைவரும் சமம்" என்ற கொள்கையை வலியுறுத்துகின்றன.
பௌத்தம்
  1. முகவுரை 
  2. அரண்மனை வாழ்க்கை 
  3. நான்கு துன்ப காட்சிகள் 
  4. அரண்மனையை விட்டு வெளியேறுதல் 
  5. சந்நியாசிகளை சந்தித்தல் 
  6. சுஜாதையின் பாயாசம்
  7. போதி ஞானம் 
  8. புத்தரின் போதனைகள் 
  9. மும்மணிகள்
  10. கபிலவஸ்துவில் புத்தர்
  11. முதன்மை சீடர்கள்
  12. சீடரின் உணவு 
  13. இறுதிக்காலம் 
  14. புத்த மதம் 
  15. ஆரியர்களின் சூழ்ச்சி 
  16. அம்பேத்கர் 
  17. இன்று புத்த மதம் 
முகவுரை 

இந்திய நேபாள எல்லையில் அமைந்துள்ள கபிலவஸ்து பகுதியில் சாக்கிய வம்சத்தில் அரசர் சுத்தோதனர் அரசி மாயா தேவிக்கும் கிமு 623இல் (கிமு 563என்றும் அறியப்படுகிறது ஆனால் பெரும்பாலான புத்த துறவிகள் ஏற்பது கிமு 623) லும்பினி நகரத்தில் பிறந்தார் சித்தார்த்தர். பிறந்த ஏழு நாட்களில் சித்தார்த்தர் தாயார் மாயா தேவி மறைந்ததால் அவரது சகோதரியான மகாபிரஜாபதி கௌதமி சித்தார்த்தரை வளர்த்தார்.
அரண்மனை வாழ்க்கை 

சித்தார்த்தரின் ஜாதகத்தை கணித்த ஞானியொருவர் “இவன் பேரரசனாக அல்லது தத்துவ ஞானியாக வருவான்” என்று கணித்தார். மேலும் “கிழவர், நோயாளி, பிணம், சந்நியாசி” ஆகிய நான்கு துன்ப காட்சிகளை பார்க்காமல் இருந்தால் சித்தார்த்தர் தத்துவ ஞானியாக மாறுவதை தவிர்க்கலாம் என்றும் கணித்தார். உடனே தந்தை சுத்தோதனர் தன் மகனுக்கு அரண்மனையில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வெளியுலக வாழ்க்கை அவனை அண்டாத வகையில் பார்த்து கொண்டார். மாட மாளிகை, அதிகாரம், போட்டி, பொறாமை உட்பட பல அரசியல் நிகழ்வுகளை கண்டு வந்த சித்தார்த்தர் தன் 16வயதில் யசோதர் என்ற பெண்ணை திருமணம் புரிந்தார். ராகுலன் என்ற மகனும் பிறந்தார்.

நான்கு துன்ப காட்சிகள் 

வெளியுலக வாழ்வு எப்படி இருக்கும் என்பதை அறிய ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் தந்தையின் கட்டளைக்கு எதிராக தேரோட்டி சன்னா வாகனத்தை செலுத்த சித்தார்த்தர் அரண்மனையை விட்டு வெளியே கிளம்பினார். சென்ற வழியில்,

*ஒரு வயதான கிழவர் 
*உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளி 
*மனிதனின் அழுகிய பிணம் 
*சுக வாழ்வை மறுத்த சந்நியாசி

அரண்மனையை விட்டு வெளியேறுதல் 

எந்த நான்கு காட்சிகளை பார்க்கக்கூடாது என்று தந்தையும் அரசனும் ஆன சுத்தோதனர் எண்ணினாரோ அந்த நான்கு காட்சிகளை சித்தார்த்தர் கண்டார். வீடு திரும்பியவர் மனித வாழ்வு ஏன் துன்பமயமாக நிறைந்து இருக்கிறது என்று எண்ணி சித்தார்த்தர் வேதனை அடைந்தார். இதன் வெளிப்பாடாக “வாழ்வின் ரகசியம் என்ன, தனது இருத்தலுக்கு தேவை என்ன?” என்பதை அறிந்துகொள்ள சுக போக வாழ்வை வெறுத்து தந்தையை, மனைவியை, பிறந்த மகனை பார்க்காமல் அரண்மனையை விட்டு புறப்பட ஆயுத்தமானார். 

சந்நியாசிகளை சந்தித்தல் 

ஆன்மாவிற்கும் அகந்தைக்கும் உள்ள தொடர்பு பற்றிய தமது கேள்விகளுக்கு விடை தேடி அரண்மனைக்கு அருகிலுள்ள மலைகளில் வாழும் சந்நியாசிகளை காண குகைகளை நோக்கிச் சென்றார். அங்கு ஆலார காலமர் என்ற சந்நியாசியிடம் தனக்கு வழி காட்டிட கோரிக்கை வைத்தார். மேலும் உலகில் பேரின்பத்தை அடைய யோகா மற்றும் சந்நியாசத்தின் அனைத்து வடிவங்களையும் பயிற்சி செய்வதில் உறுதியாக இருந்தார். அதன்படி கடுமையான பயிற்சிகளை செய்து வந்தவர் உணவில் கவனம் செலுத்தாததால் மிகவும் பலவீனமானார். 

வீணையின் சரத்தை இறுக்கினால் கம்பி உடைந்து வீணை ஒலிக்காத அளவுக்கு ஆகிவிடும் வாழ்வில் பேரின்பம் அடைய உணவு உட்கொள்ளாமல் சித்திரவதைக்குரிய வலிகளுடன் செய்யப்படும் பயிற்சிகள் உதவப் போவதில்லை என்றும் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே மனிதனால் உள்ளார்ந்த அமைதியை அடைய முடியும் என்றும் அதற்கு ஒரே வழி தியானம் என்றும் உணர்ந்து கொண்டார். இதனால் கடுமையான பயிற்சி முறைகளைக் கைவிட்டு மீண்டும் சாப்பிடத் தொடங்கினார்.

சுஜாதையின் பாயாசம்

பனாரஸ் அருகே போத்கயா காட்டிற்குச் சென்று ஆல மர நிழலில் தியானத்தில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார் சித்தார்த்தர். அப்போது ஆலமரத்தின் கீழ் இறைவன் இருப்பான் என்று கிராமத்தினர் கூறியதை நம்பி சுஜாதை என்ற பெண் தனக்கு நல்ல கணவன் அமைந்து முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறந்தால் ஆலமரக் தேவதைக்குப் பாயாசம் படையலிடுவதாக வேண்டி இருந்தாள். தமது எண்ணம் நிறைவேறியதால் பாயாசம் படையலிடுவதற்கு அங்கு வந்த சுஜாதைக்கு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டிருந்த சித்தார்த்தரே ஆலமர தேவதையாக தோன்றினார். எனவே சித்தார்த்தரிடம் பாயாசத்தை கொடுத்துப் பருகுமாறு வேண்டினாள். சித்தார்த்தர் தான் ஒரு சராசரி மானிடன் என்று கூறி பாயாசத்தை முதலில் மறுத்து பிறகு சுஜாதையின் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்றுக்கொண்டார். 

போதி ஞானம் 

சுஜாதை கொடுத்த பாயாசத்தை எடுத்துச் சென்று அருகிலுள்ள அரச மர நிழலில் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்தார் சித்தார்த்தர். வேறு உணவு எதையும் உட்கொள்ளாமல் 49 நாட்கள் அப்பாயாசத்தை மட்டுமே சிறிது சிறிதாக பருகினார். பருகிய பிறகு தான் புத்த பதவியையடைவது உறுதியானால் இப்பாத்திரம் நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லட்டும் என்று தமக்குள் கருதி கொண்டு ஆற்று நீரில் பாத்திரத்தை வீசினார். நீரிலே விழுந்த அப்பாத்திரம் நீரோட்டத்தை எதிர்த்து சிறிது தூரம் சென்ற பிறகு நீரில் அமிழ்ந்து விட்டது. இவ்வாறு தான் புத்த பதவியையடைவது உறுதி என அறிந்த பிறகு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் காலையில் பத்திரவனத்தில் தங்கி மனதை சுத்தப்படுத்திவிட்டு மாலையில் போதி மரம் இருக்கும் இடத்திற்குச் சென்றார். இதுவே சரியான இடம் என கருதி “உடல் உலர்ந்தே போனாலும் தான் புத்த பதவியையடையாமல் இவ்விடத்தை விட்டு நகர மாட்டேன்” என்று உறுதி மிக்க எண்ணத்துடன் தமது 35ஆம் வயதில் போதி மரத்தின் கீழ் கிழக்கு நோக்கி அமர்ந்து புத்த குணங்கள் நிறைந்த போதி ஞானத்தைப் பெற்றார். இதற்கிடையில் ஞானம் அடைவதற்கு முன் புத்தரின் தவத்தை கலைக்க முயன்று தோற்று போன மாரன் என்பவரின் கதைகள் பௌத்த நூல்களில் பிரலமான ஒன்றாகும்.
புத்தரின் போதனைகள் 

ஞானோதயம் கிடைத்தப் பின் சாரநாத் மான் பூங்காவில் சீரான வாழ்விற்கு தேவையான போதனைகளையும் உபதேசங்களையும் போதித்தார் சித்தார்த்தர். உலகின் அனைத்து துன்பத்திற்கும் காரணம் ஆசைப்படுதலே என்ற கருத்தை புத்தர் எடுத்துரைத்தார். இப்பிரபலமான உபதேசம் நடைபெற்றதிலிருந்து அவர் புத்தர் என அழைக்கப்பட்டார். தமது எட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினால் மனிதர்கள் ஆசையில் இருந்து விடுபட்டு மனித விடுதலைக்கான இறுதி நோக்கத்தை அடைய முடியும் என்று சங்கம் அமைத்து உலகம் முழுவதும் போதித்தார். மனிதர்களுக்கு துன்பத்திலிருந்து விடுதலை அளிக்கும் ஒரே நோக்கத்தைத் தழுவிய புத்தரின் போதனைகளை பல்லாயிரம் சீடர்கள் ஏற்று கொண்டு அவருடைய சங்கத்தில் இணைந்து பின் தொடர்ந்தனர். புத்தரின் பல்வேறு போதனைகளை உள்ளடக்கிய திரிபிடகம் நூல் பௌத்தர்களுக்கு புனித நூலாகும்.
மும்மணிகள்
கபிலவஸ்துவில் புத்தர்

புத்தர் புகழ் நாடெங்கும் பரவிய செய்தி அவருடைய தந்தை சுத்தோதனருக்கு கிடைத்தது. புத்தர் ஒரு முறையாவது கபிலவஸ்து வர வேண்டும் அப்படி வந்தால் துறவி கோலத்தை களைந்து அரச பதவியைப் புத்தர் ஏற்றுக்கொள்வார் என்று அவர் தந்தை எண்ணினார். புத்தரை அழைத்து வருவதற்காகத் தந்தையால் அனுப்பப்பட்டவர்கள் புத்தரின் உபதேசங்களால் கவரப்பட்டு புத்தப் பிட்சுகள் ஆனார்கள். இறுதியாக தந்தை சுத்தோதனர் புத்தரின் இளமைக்கால நண்பர் காலூதியனை அனுப்பினார். அவரும் புத்த பிட்சு ஆகினார் ஆனால் தான் வந்த காரணத்தை மறக்காமல் ஒரு நாள் புத்தரிடம் கபிலவஸ்துவை நினைவூட்டி "உங்களைப் பார்க்க உங்கள் குடும்பம் ஆவலுடன் காத்திருக்கிறது. நீங்கள் ஒரு முறை அங்கு வருகை புரிய வேண்டும்" என்றார்.

காலூதியன் வேண்டுகோளை ஏற்று புத்தர் கபிலவஸ்து சென்றார். வருகை புரிந்த புத்தரிடம் தந்தை சுத்தோதனர் அரச பதவியை ஏற்று கொள்ள வேண்டுகோள் வைத்தார். துறவிக்கு எதுக்கு அரச பதவி? என்று புத்தர் பதவியை மறுத்தார். தந்தை சுத்தோதனர் “போனது போகட்டும் தயவு செய்து அரண்மனையியல் தங்கி உபதேசம் செய்யுமாறும் பிச்சை எடுக்காமல் உண்ணுமாறும் கோரிக்கை வைத்தார்”. புத்தர் “துறவிக்கு எதற்கு அரண்மனை வாழ்க்கை? மேலும் பிச்சை எடுத்து உண்பது புத்த துறவியின் பணிகளில் ஒன்று” என்றார்.

பிறகு புத்தர் மனைவி யசோதர் இருக்குமிடத்துக்கு சென்று அவளுக்கு ஆசி வழங்கினார். புத்தரை கண்டு யசோதர் நா தழுதழுக்க உணர்வு நெகிழ்ந்து அழுதாள். மேலும் புத்தர் ஏழு வயது நிரம்பிய தன் மகன் ராகுலனை சந்தித்துவிட்டு தந்தையாக தான் அளிக்கும் சொத்து என கூறி சீடர் சாரிபுத்திரனிடம் "ராகுலனுக்குத் தீட்சை அளித்துச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்றார். இறுதியில் புத்தரின் குடும்பத்தை சேர்ந்த தந்தை சுத்தோதனர், சிற்றன்னை மகாபிரஜாபதி கௌதமி, மனைவி யசோதரை, மகன் ராகுலன், மைத்துனன் தேவதத்தன், சிற்றன்னை மகன் நந்தன், சிற்றன்னை மகள் நந்தா ஆகியோர் புத்தரின் ஞான உபதேசங்களை கேட்டு சீடர்களாக இணைந்தனர். பிறகு கபிலவஸ்துவை விட்டு வெளியேறி தனது பணிகளில் ஈடுபட புத்தர் கிளம்பினார்.

முதன்மை சீடர்கள் 

புத்தரின் முதன்மை சீடர்கள் பத்து பேர் உள்ளனர். அவர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.சாரிபுத்திரன்
2.மௌத்கல்யாயனன்
3.மகாகாசியபன்
4.சுபூதி
5.பூரணன்
6.காத்தியாயனன்
7.அனுருத்தர்
8.உபாலி
9.ராகுலன் (மகன்)
10.ஆனந்தன் 

சீடரின் உணவு 

சீடர் சுந்தன்வின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு புத்தர் தனது சீடர்களுடன் உணவு உண்ணச் சென்றார். பரிமாறப்படவுள்ள உணவில் பன்றிக்கறி (காளான் என்ற குறிப்பும் உள்ளது) இருப்பதை அறிந்து புத்தர் கண்டாவிடம் தனக்கு மட்டும் பன்றிக்கறி உணவை பரிமாறிவிட்டு மற்ற உணவினை சீடர்களுக்கு பரிமாறும்படி கேட்டு கொண்டார். கெட்டு போன பன்றிக்கறியை அறியாமல் உண்டதால் புத்தர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். 

இறுதிக்காலம் 

புத்தர் மரண படுக்கையில் இருக்கும்போது சீடர்களை அழைத்து "அனைத்து கலவையான விஷயங்களும் அழிய கூடியது என்பதனை உணர்ந்து எனது பூத உடலை கௌரவிக்க முற்படாமல் உலக நன்மைக்காக துல்லியமாகவும், உற்சாகமாகவும், உறுதியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் உங்களது சொந்த விடுதலைக்காக விடாமுயற்சியுடன் போராட கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார். மேலும் புத்தர் சீடர் ஆனந்தனை அழைத்து சுந்தன் பரிமாறிய உணவில் எந்த குறையும் இல்லை என்றும் அதுதான் இறுதியாக தான் சாப்பிட சுவையான உணவு என்றும் அறிவுறுத்தும்படி கூறினார். பிறகு உடல் தள்ளாடியபடி குஷிநாகா என்ற இடத்திற்குச் சென்று காகுத்தா நதியில் குளித்துவிட்டு சில மணி நேர ஓய்விற்குப் பிறகு புத்தர் இயற்கை எய்தினார் என்று நம்பப்படுகிறது. புத்தர் தமது 80ஆம் வயதில் பரிபூரண நிலையான மரணமில்லா நிலையடைய உடலை பிரிய போவதாக தன் சீடர்களிடம் முன்கூட்டியே கூறினார். இதற்கு பின்தான் சுந்தன் பரிமாறிய உணவை உண்டார். இதனால் புத்தர் இறக்க இறுதியாக பரிமாறிய உணவு காரணமல்ல என்கின்றனர் புத்த அறிஞர்கள். 

புத்த மதம் 

புத்தரின் மறைவுக்கு பின் சீடர்கள் புத்தர் போதனைகளை பரப்பினர். சீடர்கள் புத்த பிக்குகள் என்று அழைக்கப்பட்டனர். புத்தர் கூறிய போதனைக கருத்துக்கள் கொள்கை வடிவமாகி புத்த மதம் (பௌத்த மதம்) என்ற பெயரில் பரவி வளர தொடங்கின. புத்தரின் போதனைகள் ஆரிய மதத்தின் வர்ணம் அமைப்புக்கு எதிராகவும் ஏழை பணக்காரன் பிரிவினைக்கு எதிராகவும் அனைவரும் சமம் என்ற கோட்பாடு ஆதரவாகவும் இருந்ததால் பல்வேறு தரப்பட்ட மக்களை ஈர்த்தது. புத்த மதம் கடவுள் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியை தவிர்த்துவிட்டு வாழ்வியல் நெறிகளை வகுத்து தந்தது. மௌரியப் பேரரசர் அசோகர் பெருமளவில் புத்த மதத்திற்கு ஆதரவளித்தார். சார்நாத் மற்றும் போத்கயா புத்தமதத்தின் முக்கியமான மையங்களாகக் கருதப்படுகிறது. 

ஆரியர்களின் சூழ்ச்சி 

புத்தர் கூறிய “அனைவரும் சமம்” என்ற கோட்பாடு ஆரியர்களுக்கு பெருங்கவலை அளித்தது. இதனால் புத்தரின் போதனைகளுக்கு ஆரியர்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். நாளடைவில் புத்த மதத்தில் பிளவை உண்டாக்க சீடர்களாக ஆரியர்கள் கபட எண்ணத்துடன் இணைந்தனர். ஆரியர்களின் சேர்க்கைக்கு பிறகு நாட்கள் செல்ல செல்ல புத்த மதத்தின் செயற்பாட்டிலும் அணுகுமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் புத்த மதத்தில் சீடர்களுக்கு மத்தியில் மோதல்களும் சர்ச்சைகளும் எழுந்து அதனை தீர்ப்பதற்காக சபைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்ட கலந்துரையாடலுக்குப் பிறகு புத்த மதம் தேரவாதம் மற்றும் மகாயானம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் தேரவாதம் என்று பெயரிடும் முன்னரே உலகம் முழுவதும் புத்த மதத்தின் கொள்கைகள் தேரவாதம் சார்ந்தே இயங்கி வந்தது. மகாயான பிரிவு புத்த பிக்குகள் ஆரியத்தின் பிரிவு என்றே பரவலாக நம்பப்படுகிறது.
மகாயானம் பிரிவை உண்டாக்கியதோடு நில்லாமல் வைணவ நூலான வியாசர் எழுதிய பாகவதம் நூலில் புத்தரை விஷ்ணுவின் 9வது அவதாரமாக போற்றி புகழ்வதன் மூலம் ஆரியர்கள் புத்த மதத்தை இந்து மதத்தின் கிளை போலவே பாவித்து வருகின்றனர். மேலும் மௌரியப் பேரரசுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த சுங்க பேரரசு மூலம் ஆரிய மதத்தை வலுவாக வளர்த்து வந்தது மட்டுமல்லாமல் தேரவாத புத்த பிக்குகளை துன்புறுத்தி கொடுமைப் படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பேத்கர் 

வர்ண அமைப்பை மூச்சாக கொண்ட இந்து மதத்தில் ஒற்றுமைக்கு வழியில்லை என்பதை உணர்ந்து தான் ஒரு இந்துவாக சாகமாட்டேன் என்று கூறி புத்த மதம் ஏற்க தயாரானார் டாக்டர் அம்பேத்கர். அப்போது புத்த மதத்தின் பிரிவுகளை ஏற்காமல் புதிதாக நவயான என்ற பிரிவை உண்டாக்கினார். நவயான கோட்பாடுகளை பகுத்தறிவு வழியில் புத்தரின் தோற்றம், துறவு வாழ்க்கை, போதி ஞானம், போதனைகள், உலக உறவு, இறுதிப் பயணம் குறித்து “புத்தரும் அவர் தம்மமும்” என்ற புத்தகத்தில் விரிவாக எழுதினார். அக்டோபர் 14, 1956இல் நாக்பூரில் 6 இலட்சம் மக்களுடன் புத்த மதத்தை தழுவினார் டாக்டர் அம்பேத்கர்.

“நான் மேற்கொள்ள உள்ள பௌத்தம் பகவான் புத்தர் போதித்த கொள்கைகளின்படி இயங்கும். பண்டைய பௌத்த மதப் பிரிவுகளான தேரவாதம், மகாயானம் ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் என் மக்களை ஈடுபடுத்த மாட்டேன். என்னுடைய பௌத்த சமயம் 'நவயான' என்ற புதிய பௌத்தமாக இருக்கும்."
- டாக்டர் B.R.அம்பேத்கர் 

இன்று புத்த மதம் 

ஜப்பான், சீனா, திபெத், கொரியா உட்பட பல நாடுகளில் புத்த மதம் கோலாச்சி வருவதும் சீனாவில் மகாயானம் பிரிவை சார்ந்த ஜென் பௌத்தம் (கோட்பாடுகளை விட அனுபவ அறிவை முதன்மைப்படுத்தும்) முக்கிய இடத்தை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உதயமான புத்த மதம் “இலங்கை, பூட்டான், கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ்” ஆகிய ஆறு நாடுகளில் தலைமை மதமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பௌத்தர்களின் மக்கள் தொகை 50 கோடி என்றும் உலகின் மத ஜனத்தொகை அடிப்படையில் 5வது இடம் என்றும் அறியப்படுகிறது.

ஜைனம் 
  1. முகவுரை 
  2. பெயர் காரணம் 
  3. பிரிவுகள் 
  4. 24 தீர்த்தங்கரர்கள்
  5. வழிபாட்டு நம்பிக்கை
  6. துறவறத்தார் நெறிகள்
  7. ஆரியர்களின் சூழ்ச்சி
  8. சமணர்கள் கழுவேற்றம் 
  9. பௌத்தம் - சமணம் - பக்தி இயக்கம்
முகவுரை 

ஜைனம் நெறி 24வது இறுதித் தீர்த்தங்கரான மகாவீரர் என்பவரால் கிமு 6ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆரியர்களின் வழிபாட்டு முறைகளை, வர்ண அமைப்புகளை, வேதங்களை முற்றிலும் மறுத்தவை ஜைனம். மேலும் உடம்பை ஒரு பொருளாக மதித்துப் போற்றுவது கிடையாது. தீர்த்தங்கரர்களின் போதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களை கணாதரர்கள் என்று அழைக்கப்படுவர். ஜைனர்களின் மக்கள் தொகை 50 லட்சம் என்றும் உலகின் மத ஜனத்தொகை அடிப்படையில் 13வது இடம் என்றும் அறியப்படுகிறது.
பெயர் காரணம் 

மனித உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தித் தன்னையே வென்றவர் என்பதால் மகாவீரர் (வென்றவர் என பொருள்படும்) ஜெயனா என்று அழைக்கப்பட்டார். மகாவீரர் கருத்துக்களை ஜெயனம் என்றும் அவரது கருத்துக்களை ஏற்று கொண்டவர்களை ஜெயனர் என்றும் அழைக்கப்பட்டனர். நாளடைவில் ஜெயனர் என்ற சொல் திரிந்து ஜைனர் என்றாகி அதுவே ஜைனம் மதமானது. 

தமிழ்நாட்டில் ஜைனர்கள் சமணர் என்று அழைக்கப்பட்டனர். சமணர் என்ற தமிழ் சொல் சிரமணர் என்ற வட சொல்லின் திரிபாகும். சிரமணர் என்றால் இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக பாவிப்பவர் என்று பொருள். சம்மணம் போட்டு அமருவது என்பது சமணர் உட்காரும் அமைப்பை ஒட்டி எழுந்த சொல்லாகும். (சமணர் = சமணம் = சம்மணம்)

பிரிவுகள் 

துறவு நெறியை போற்றி வளர்ந்த ஜைனத்தில் ஆடை உடுத்தல் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்ததால் திகம்பரம் மற்றும் சுவேதாம்பரம் என இரு பிரிவாக பிரிந்தது.

24 தீர்த்தங்கரர்கள்


வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த 24 தீர்த்தங்கரர்கள் ஜைன கோட்பாடுகளை வகுத்ததாக அறியப்படுகிறது. இவர்களின் போதனைகளை உள்ளடக்கிய கல்பசூத்திரம் நூல் ஜைனர்களுக்கு புனித நூலாகும். 24 தீர்த்தங்கரர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.ஆதிநாதர் அல்லது ரிசபதேவர்
2.அஜிதநாதர்
3.சம்பவநாதர்
4.அபிநந்தனர்
5.சுமதிநாதர்
6.பதுமநாபர்
7.சுபார்சவ நாதர்
8.சந்திரப் பிரபர்
9.புஷ்ப தந்தர்
10.சீதளநாதர்
11.சீறியாம்ச நாதர்
12.வாசு பூஜ்யர்
13.விமலநாதர்
14.அனந்தநாதர்
15.தருமநாதர்
16.சாந்திநாதர்
17.குந்துநாதர்
18.அரநாதர்
19.மல்லிநாதர்
20.முனீஸ்வரநாதர்
21.நமிநாதர்
22.நேமிநாதர்
23.பார்சுவநாதர்
24.மகாவீரர்


வழிபாட்டு நம்பிக்கை

24 தீர்த்தங்கரர்கள் விளக்கிய ஞானத்தின் அடிப்படையில் நல்லொழுக்கத்தைப் பின்பற்றி வாழவும் வாழ்வின் இறுதியில் தெய்வநிலையை அடையவும் தீர்த்தங்கரர்களை முன்னோர்களாக எண்ணி தெய்வமாக வணங்குகிறார்கள் ஜைனர்கள். இவ்வழிபாட்டு முறை பிராமணர்கள் கூறும் வழிபாட்டு முறையில் சேராது என்பதை கவனத்தில் கொள்ளவும் ஏனெனில் ஜைன மதமானது கடவுள் இல்லை என்று கூறியதாகும். மேலும் அகிம்சை மற்றும் வாய்மை போன்று பல்வேறு வாழ்வியல் நெறிகளை வகுத்து தந்தது ஜைனம்.
துறவறத்தார் நெறிகள்

1.ஐம்பொறி அடக்கம் ஐந்து - கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐம்பொறிகளை அடக்குதல்

2.ஆவஸ்யகம் ஆறு - கீழே படம் இணைக்கப்பட்டுள்ளது

3.மயிர் களைதல் - தீட்சை பெறுவதற்கு முன்பு உண்ணா நோன்பு இருந்து தமது தலைமுடியை கைகளால் பிடுங்கி நீக்குதல்

4.திகம்பரம் - ஆடை மற்றும் அணிகலன் அணியாமல் இருத்தல் வேண்டும்

5.நீராடாமை - குளிக்காமல் இருத்தல் வேண்டும்

6.பல் தேய்க்காமை - பற்களை தேய்க்காமல் இருத்தல் வேண்டும் 

7.தரையில் படுத்தல் - பாய் படுக்கை இல்லாமல் வெறுந்தரையில் இடது அல்லது வலது பக்கமாக சாய்ந்து படுத்தல் வேண்டும். குப்புறப்படுத்தல், மல்லாந்து படுத்தல் கூடாது. 

8.நின்று உண்ணல் - பிச்சை பெற்ற உணவைக் பாத்திரங்களில் இல்லாமல் கைகளில் ஏந்தி நின்றவாறு உண்ணுதல் வேண்டும்

9.ஒரு வேளை மட்டும் உண்ணல் - பகல் நேரத்தில் ஒரே ஒரு வேளை மட்டும் உண்ணுதல் வேண்டும்

ஆரியர்களின் சூழ்ச்சி

24வது தீர்த்தங்கரர் மகாவீரர் பாவாபுரி அரண்மனையில் கூடியிருந்த மக்களுக்கு இரவு நெடுநேரம் விழித்திருந்து உபதேசங்களை செய்தார். வெகு நேரமான காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கினர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே உறங்கினார். விடியற்காலையில் மக்கள் எழுந்து மகாவீரரை காண செல்ல அவர் முக்தி அடைந்ததைக் கண்டனர். அரண்மனையில் அரசன் அமைச்சர்களுடன் ஆலோசித்துவிட்டு மகாவீரரை மக்கள் ஆண்டுதோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் மறைந்த நாளில் ஒவ்வொரு வீட்டிலும் தீப விளக்குகள் ஏற்றி வழிபடும்படி ஏற்பாடு செய்தான். ஆரியர்கள் பிற்காலத்தில் இவ்வுண்மை நிகழ்ச்சியை மறைத்து கிருஷ்ணன் நரகாசுரனை (திராவிடன்) அழித்த நாள் என்று கதை கட்டி தீபாவளி பண்டிகையை ஆரியர்கள் இந்துத்துகள் பண்டிகையாக மாற்றினர். மேலும் மகாவீரரை விஷ்ணுவின் அவதாரமாக போற்றி பாடி ஜைன மதத்தை இந்து மதத்தின் கிளை போலவே பாவித்து வருகின்றனர்.

சமணர்கள் கழுவேற்றம் 

மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க வென்று கூற

பெரியபுராணம் பாடல்

63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் சைவ சமயத்தை தழுவினார் நின்றசீர் நெடுமாறன் பாண்டிய பேரரசர். மேலும் திருஞானசம்பந்தரிடம் வாதத்தில் தோற்று சைவ சமயத்தை தழுவ மறுத்த பல்லாயிரம் சமணர்கள் மதுரை அருகே சாமணத்தம் என்னும் கிராமத்தில் நின்றசீர் நெடுமாறன் உத்தரவால் கழுவேற்றப்பட்டனர்.
பௌத்தம் - சமணம் - பக்தி இயக்கம் 

களப்பிரர் ஆட்சியின் இறுதி காலத்திலே தமிழ்நாட்டில் கோலோச்சிய பௌத்தம், ஜைனம் சமயங்களுக்கு எதிராகவும் சைவம், வைணவம் சமயங்களுக்கு ஆதரவாகவும் பக்தி இயக்கம் தோன்றியது. பௌத்தம், ஜைனம் துறவு வாழ்க்கையை முதன்மையாக வேண்டியதால் குடும்ப வாழ்க்கையை முதன்மையாக வலியுறுத்தி பக்தி இயக்கமாக 63 சைவ நாயன்மார்கள் 12 வைணவ ஆழ்வார்கள் தமிழ் பாடி சைவ வைணவ சமயத்தை வளர்த்தனர். ஒரு கட்டத்தில் பௌத்தம், ஜைனம், திராவிடம் சமயத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சில மரபுகளை வைதீகம் மரபானது அபகரித்துக் கொண்டு இந்து மதம் உருவாக பக்தி இயக்கம் முக்கிய பங்காற்றியது. பிராமணர்களின் சூழ்ச்சியால் இன்று பெருங்கோவில்களில் பக்தி இயக்க பாடல்கள் கருவறையில் பாடப்படுவதில்லை என்பது வருந்தத்தக்க செய்தியாகும்.

சீக்கியம் 
  1. முகவுரை 
  2. ஆரியர்களின் சூழ்ச்சி
  3. சீக்கிய குருக்கள் 
  4. குரு ராம் தாஸ்
  5. பொற்கோவில் 
  6. அர்ஜனும் ஜஹாங்கீரும் 
  7. குரு தேக் பகதூர்
  8. குரு கிரந்த்
  9. சீக்கிய பண்பாடு
  10. ஐந்து ஆடுகள் 
  11. சடங்கு விழா 
  12. காலிஸ்தான் இயக்கம்
  13. புளூஸ்டார் நடவடிக்கை
  14. படுகொலையும் வன்முறையும்
முகவுரை 

6-9ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் கோலோச்சிய பக்தி இயக்கம் வட இந்தியாவில் டெல்லி சுல்தான் மற்றும் முகலாய பேரரசு ஆட்சியின் போது 15ஆம் நூற்றாண்டில் கபீர், மீராபாய், துளசிதாஸ் போன்ற பலரின் போதனைகள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த காலகட்டத்திலே பஞ்சாப் மாநிலத்தில் குரு நானக் (15-04-1469 / 22-8-1539) என்பவர் காலு மேத்தா மற்றும் மாதா திரிப்தா ஆகியோர்க்கு மகனாக பிறந்தார். இளம் வயதில் இந்து - இஸ்லாம் வெறுப்புகளை கண்டு வேதனை அடைந்து ஒற்றை கடவுளை வலியுறுத்தி 15ஆம் நூற்றாண்டில் குரு நானக் தனது போதனைகளை உள்ளடக்கி சீக்கிய மதத்தை நிறுவினார். 

பக்தி இயக்கம் வாயிலாக கபீரின் போதனைகள் குரு நானக்கிற்கு பெரிய வழிகாட்டியாக இருந்துள்ளது. மேலும் சீக்கிய மதமானது இந்து மதத்தின் பரப்பிரமம், கர்மா, தர்மா, முக்தி, மாயை ஆகிய அமைப்பையும் இஸ்லாம் மதத்தின் ஒற்றை கடவுள் கொள்கையையும் ஏற்று கொண்டு நிறுவப்பட்ட தனி மதமாகும். சீக்கியர்களின் மக்கள் தொகை 2.5 கோடி என்றும் உலகின் மத ஜனத்தொகை அடிப்படையில் 9வது இடம் என்றும் அறியப்படுகிறது. யூதர்கள், பௌத்தர்கள் மற்றும் தமிழர்கள் போல சீக்கியர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளன.
ஆரியர்களின் சூழ்ச்சி

சீக்கியர்கள் இந்துக்களின் பிரிவே என்று ஆரியர்கள் பொய் பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால் ஆரியர்களுடன் இணக்கம் காட்டாமல் சீக்கியம் வலுவாக தனித்துவமாக வளர்ந்துள்ளது. இதனால் சீக்கிய வளர்ச்சியை தடுக்க பஞ்சாப் மாநிலம் தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களில் சீக்கியம் பரவாமல் இருக்கவும் சீக்கியம் பற்றி மக்கள் அதிகம் அறியாமல் இருக்கவும் பார்த்துக்கொண்டது ஆரியர்களின் நுண்ணரசியலே.

சீக்கிய குருக்கள் 
சீக்கிய மதத்தின் மரபுகளையும் கோட்பாடுகளையும் வரையரை செய்து அதன் வளர்ச்சியில் மேற்கண்ட பத்து குருக்களும் பெரும் பங்காற்றினர். ஐந்தாம் குருவான அர்ஜன் மகனும் ஆறாம் குருவுமான ஹர் கோவிந்த் நீண்ட நாட்கள் குருவாக இருந்தவர். ஏழாம் குருவான ஹர் ராய் மகனும் எட்டாம் குருவுமான ஹர் கிருஷ்ணன் குறைந்த நாட்கள் குருவாக இருந்தவர். ஹர்கிருஷ்ணன் பெரியம்மை நோய் காரணமாக ஏழு வயதிலே மரணமடைந்தார்.

குரு ராம் தாஸ்

மூன்றாம் குருவான அமர் தாஸின் மகள் மாதா பானியை திருமணம் புரிந்தார் பாய் ஜெதா. குரு அமர் தாஸ் மரணிக்கும் முன்னர் அடுத்த குருவாக தனது மருமகன் பாய் ஜெதாவை அறிவித்தார். இவரே குரு ராம் தாஸ் என்று அழைக்கப்படலானார். நான்காம் குருவாக பதவியேற்ற குரு ராம் தாஸ் பஞ்சாப் மாநிலத்தில் காலி நிலத்தை சீக்கிய நன்கொடைகள் மூலம் 700 ரூபாய் கொடுத்து வாங்கியதாக அல்லது பேரரசர் அக்பர் நன்கொடையாக வழங்கியதாக கூறப்படுகிற நிலத்தில் மாபெரும் குளத்தை உருவாக்கியதோடு நில்லாமல் மாபெரும் நகரை கட்டமைத்து அமிர்தசரஸ் (அழியாத குளம்) என்று பெயரிட்டார். 

பொற்கோவில் 

நான்காம் குருவான ராம் தாஸின் மரணத்திற்கு பிறகு அவரது மகன் அர்ஜன் ஐந்தாம் குருவாக பதவியேற்றார். இவரே சாதி மத பாகுபாடுகள் இல்லாமல் அனைத்து தரப்பினரும் வழிபட அமிர்தசரஸ் பகுதியில் ஹர்மந்திர் என்னும் பொற்கோவிலை கட்டினார். பொற்கோவிலில் நுழைய நான்கு வழிகளை கட்டமைத்தாலும் இறைவன் ஒருவனே என்ற கூற்றை நிறுவ சன்னதிக்குள் நுழைய ஒரே வழியை ஏற்படுத்தினார். சீக்கியர்கள் ஒன்றுகூடி வழிபடும் மையமாக பொற்கோவில் திகழ்ந்தாலும் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதது சீக்கியம். மேலும் அனைத்து தரப்பினரும் வேறுபாடுகள் இல்லமால் சமமாக உண்ண உலகின் மிகப்பெரிய இலவச சமையலறை ஒன்றையும் கோவிலுடன் இணைத்தார். சீக்கியர்களுக்கான கூட்டம் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் குருத்வாரா (குருவின் கதவு) என்று அழைக்கப்பட்டது.
அர்ஜனும் ஜஹாங்கீரும் 

1605இல் மென்மையான போக்கை கடைபிடித்த முகலாயப் பேரரசர் அக்பர் மறைந்த பிறகு கடுமையான போக்கை கடைபிடித்த ஜஹாங்கீர் (அக்பரின் மகன்) ஆட்சிக்கு வந்தார். ஆட்சி பொறுப்புகளை ஏற்றவுடன் சீக்கிய குருவான அர்ஜனை இஸ்லாம் மதம் தழுவ ஆணையிட்டார் ஜஹாங்கீர். உறுதியான மனப்பான்மையுடன் தான் மதம் மாற இயலாது என மறுத்து பேசி முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் கோபத்திற்கு ஆளாகி குரு அர்ஜன் தொடர்ந்து சித்திரவதைகளுக்கு உட்பட்டு இறுதியில் 1606இல் கொலை செய்யப்பட்டார் என்று அறியப்படுகிறது. குரு அர்ஜன் மரணம் அடையும் முன்னர் தனது மகன் ஹர் கோவிந்தை ஆறாவது குருவாக நியமனம் செய்துவிட்டு முகலாயப் பேரரசு மற்றும் பல்வேறு அந்நியர்களிடம் இருந்து சீக்கிய மதத்தை தற்காத்து கொள்ள சீக்கிய பண்பாட்டில் ராணுவ கட்டமைப்பை நிறுவ ஆலோசனை கூறினார். 

குரு தேக் பகதூர்

ஆறாம் குருவான ஹர் கோவிந்தின் இளைய மகன் தேக் பகதூர் ஒன்பதாம் குருவாக 1664இல் பதவியேற்றார். முகலாயப் பேரரசுக்கு எவ்வித ஆதரவாகவும் இல்லாமல் தனித்துவமாக செயல்பட விரும்பிய தேக் பகதூரை முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் உத்தரவின் பேரில் 1675இல் கொலை செய்யப்பட்டார். மொத்தமுள்ள பத்து குருக்களில் இரண்டு குருக்கள் (குரு அர்ஜன் மற்றும் குரு தேக் பகதூர்) முகலாயப் பேரரசின் உத்தரவால் மரணித்தது குறிப்பிடத்தக்கது 

குரு கிரந்த்

ஐந்தாம் குருவான அர்ஜன் 1469 முதல் 1581 வரையில் வாழ்ந்த குருக்களின் கோட்பாடுகளை உள்ளடக்கி ஆதி கிரந்த் என்னும் நூலை வடிவமைத்தார். இதனை தொடர்ந்து பத்தாம் குருவான கோபிந்த் சிங் தனக்கடுத்த வழிகாட்டியாக மனித குருக்களின் நியமனத்தை நிறுத்திவிட்டு 1581 முதல் 1708 வரையில் வாழ்ந்த குருக்களின் கோட்பாடுகளை இணைத்து ஆதி கிரந்த் என்ற நூலை குரு கிரந்த் என்ற புனித நூலாக்கி குருவுக்கு நிகராக நியமித்தார். இன்று சீக்கியர்கள் தங்களது பதினொருவது குருவாகவும் புனித நூலாகவும் வழிகாட்டியாகவும் கருதுகிற குரு கிரந்த் நூல் 1430 பக்கங்கள் 5894 வரிகள் கொண்டவை ஆகும்.

சீக்கிய பண்பாடு
மனிதர்களின் துன்பங்களுக்கு காரணமான ஐந்தையும் விட்டொழித்து பின்பற்ற வேண்டிய ஐந்தையும் கடைப்பிடித்தால் மனிதர்கள் இன்புற்று வாழலாம் என்கிறது சீக்கியம்.

ஐந்து ஆடுகள் 

பத்தாம் குருவான கோபிந்த் சிங் வேண்டுகோளின் பேரில் 1699இல் பைசாக்கி (வருடாந்திர அறுவடை திருவிழா) திருவிழாவுக்கு சீக்கியர்கள் ஆனந்த்பூரில் கூடினர். அன்று குரு கோபிந்த் சிங் தனது கூடாரத்திலிருந்து தோன்றி ஐந்து சீக்கியர்கள் தங்களது தலையை பலியிடுமாறு ஒரு திகிலூட்டும் வேண்டுகோளை விடுத்தார். மக்கள் பயந்து மௌனமாக இருந்தனர். ஆனால் ஐந்து சீக்கியர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவரது அழைப்பை ஏற்று ஐந்து ஆடுகள் ரகசியமாகக் கட்டப்பட்டு இருந்த கூடாரத்திற்குள் சென்றனர். துணிச்சலான சீக்கியர்கள் ஒவ்வொருவரும் கூடாரத்திற்குள் சென்று மறைந்த பின்னர் குரு கோவிந்த் சிங் அடுத்தவருக்குத் திரும்பினார் அப்போது அவரது வாள் இரத்தத்தால் சொட்டியது. ஐந்து பேரும் கொல்லப்பட்டதாகத் எண்ணும் வரை இது தொடர்ந்தது. பின்னர் நீண்ட நேரம் கழித்து குரு கோவிந்த் சிங் ​​மற்றும் அவரைத் தொடர்ந்து ஐந்து சீக்கியர்கள் புதிய ஆடைகளை அணிந்து புதிய வாள்களைத் ஏந்தி கூடாரத்தை விட்டு வெளியே வந்தனர். இப்படி உறுதிமிக்க சீக்கியர்களை கொண்டு பிற சீக்கிய பெருமக்களை துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் கடமை நோக்கத்துடன் கால்சா என்னும் அமைப்பை மார்ச் 30, 1699இல் பைசாக்கி திருவிழா அன்று பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் உருவாக்கினார். இப்பணியில் உள்ளவர்கள் தூய்மையாக, தெளிவாக, சுதந்திரமாக, வீரமாக இருத்தல் வேண்டும்.

சடங்கு விழா 

1699 பைசாக்கி திருவிழா அன்றே அம்ரித் சன்ஸ்கர் என்று அழைக்கப்படும் அம்ரித் சடங்கு விழா நடைமுறை ஆக்கப்பட்டது. இவ்விழா கிட்டத்தட்ட கிறிஸ்துவ மதத்தின் ஞானஸ்நானம் போன்றது ஆனால் விபரம் அறிந்த வயதில் செய்யப்படும் சடங்குகள் ஆகும். சடங்கு நிகழ்வுகள் முடிந்தவுடன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் சாதி பாகுபாடுகளை களைய ஆண்கள் அனைவரும் சிங் என்றும் பெண்கள் அனைவரும் கவுர் என்றும் தங்கள் பெயர்களுக்கு பின்னால் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் திருமணத்திற்கு பிறகு பெண்கள் குடும்ப பெயரை மாற்ற வேண்டிய தேவையில்லை. இந்த சடங்கு விழா கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காலிஸ்தான் இயக்கம்

சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் உட்பட சில மாகாணங்களை இணைத்து தனி நாடு வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா என்பவரால் அமைக்கப்பட்டது காலிஸ்தான் இயக்கம். ஜூலை 1982இல் சீக்கிய அரசியல் கட்சியான அகாலி தளத்தின் தலைவர் ஹர்ச்சந்த் சிங் லாங்கோவால் காலிஸ்தான் இயக்கத் தலைவர் ஜர்னையில் சிங் பிந்த்ரான்வாலேயை அமிர்தசரஸ் பொற்கோவிலில் வசித்திட அழைத்தார். 
புளூஸ்டார் நடவடிக்கை

ஜர்னையில் சிங் பிந்த்ரான்வாலே மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொற்கோவில் வளாகத்தை காலிஸ்தான் இயக்கத் தலைமையகமாகவும், ஆயுதக் களஞ்சியமாகவும், பிரிவினைகளை தூண்டுவதாகவும் கூறி இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் ஆணைப்படி புளூஸ்டார் நடவடிக்கை (Operation Blue Star) மூலம் ஜூன், 1984 பொற்கோவிலுக்குள் பிரிட்டிஷ் திட்டமிடல் உதவியுடன் இந்தியா ராணுவம் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களோடு புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இந்திய ராணுவத்தின் தாக்குதலை சாமளிக்க முடியாமல் பல நூறு சீக்கியர்கள் மரணம் அடைந்தனர். கிட்டத்தட்ட இருதரப்பையும் சேர்த்து 800 பேர் வரையில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்திய ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றாலும் தாக்குதல் குறித்து அரசு அளித்த விளக்கங்கள் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. ஜலியான்வாலா பாக் படுகொலை மற்றும் புளூஸ்டார் நடவடிக்கை நடைபெற்ற இடம் அமிர்தசரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இவை இரண்டும் உலக அரசியல் அரங்கில் அபாயகரமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாக கூறப்படுகிறது.

படுகொலையும் வன்முறையும்

பிரதமருக்குரிய தனி பாதுகாவலர்கள் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங் ஆகிய சீக்கிய பாதுகாவலர்கள் அக்டோபர் 31, 1984 அன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டு கொன்றனர். இந்திரா காந்தியைக் கொன்ற மொத்த தோட்டாக்களின் எண்ணிக்கையும் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் நடந்த மருத்துவ அணுகுமுறையும் குறித்து இன்று வரை பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்திரா காந்தியின் படுகொலை புளூஸ்டார் நடவடிக்கையின் எதிரொலி என்று கூறப்பட்டாலும், சீக்கிய அரசியல் மட்டுமே அந்தப் படுகொலைக்குக் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

இந்திரா காந்தி படுகொலைக்கு பின்னர் சீக்கியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அக்டோபர் 31, 1984 - நவம்பர் 3, 1984 வரை நடைபெற்ற சீக்கிய கலவரங்களால் அரசு தரப்பில் 3,000 சீக்கியர்கள் வரை மரணம் அடைந்ததாகவும் தனியார் தரப்பில் 15,000 சீக்கியர்கள் வரை மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

9/11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு உலக அரசாங்கங்கள் இஸ்லாமியர்கள் மீது அரசியல் நடவடிக்கைகளை எடுத்தது. அச்சமயம் எதிர்பாராதவிதமாக 9/11 பிரச்னையில் சிக்கி உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். சீக்கியர்கள் தலையில் டர்பன், ஆடைக்குள் கத்தி மற்றும் நீண்ட தாடி வைத்துக் கொள்வதை பார்த்துவிட்டு அவர்கள் இஸ்லாம் மதத்தை சேர்த்தவர்கள் என்று தவறுதலாக எண்ணி துன்புறுத்தப்பட்டனர். குறிப்பாக விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது சித்திரவதைக்கு ஆளாகினர்.
பின் குறிப்பு - இங்கே பொதுவான செய்திகளை எழுதியுள்ளேன். பௌத்தம், ஜைனம், சீக்கியம் குறித்து மேலும் பல வரலாற்று தகவல்களை அறிய தாங்கள் புத்தங்களை தேடிப் படிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...