Chocks: நேற்றும் இன்றும் என்றும் எஸ்.பி.பி

Friday, October 9, 2020

நேற்றும் இன்றும் என்றும் எஸ்.பி.பி

நேற்றும் இன்றும் என்றும் எஸ்.பி.பி

சுருக்கம் 
  1. முகவுரை 
  2. ஆரம்ப காலம் 
  3. அறிமுக காலம் 
  4. 1969இல் தமிழ் 
  5. முதல் பாடல்
  6. ஆயிரம் நிலவே வா 
  7. பொட்டு வைத்த முகமோ
  8. இளையராஜா 
  9. ரஜினிகாந்த்
  10. கமல்ஹாசன் 
  11. அஜித் அறிமுகம் 
  12. பொற்காலம் 
  13. பாடும் நிலா
  14. பன்முகத்தன்மை
  15. மாண்புகள் 
  16. சாதனைகள் 
  17. குடும்பம் 
  18. 2020இல் எஸ்.பி.பி 
  19. இறுதிக் காலம்
  20. முகவுரை 
முகவுரை 

எஸ்.பி.பி மரணம் அடைந்துவிட்டாரா? ஆம் உடலால் மரணித்திருக்கிறார் ஆனால் உள்ளதால் நிலைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடகர்கள் உண்டு ஆனால் இவர் போல இன்னொருவர் இல்லை என்று பலரும் ஒத்த கருத்துடன் சொல்வதே இவருக்கும் நமக்குமான அந்த உறவுத்தன்மை. 
இவரின் தந்தை எஸ்.பி.சாம்பமூர்த்தி இயல், இசை, நாடகம், கதா காலட்சேபம் செய்பவர். இசை குடும்ப பின்னணியில் ஜூன் 4, 1946இல் ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார் எஸ்.பி.பி. பொறியாளராக வேண்டும் என்ற நோக்கத்தோடு பொறியியல் துறையை தேர்ந்தெடுத்து படித்தார். ஆந்திராவில் JNTU யுனிவர்சிட்டியில் சேர்ந்து படித்தவர் உடல் நலமில்லாமல் போக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு உடல் நலம் தேறிய பிறகு 1964ஆம் ஆண்டு சென்னை AMIEஇல் சேர்ந்து பொறியியலை படித்தார். இசைத்துறையில் ஆர்வம் இருப்பினும் ஆரம்ப காலத்தில் சினிமாத்துறை சார்ந்து இவர் சிந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலம் 

இசை ஆர்வத்தால் முதல் முறையாக 1964இல் சென்னையில் இசையமைப்பாளர் கண்டசாலா வெங்கடேஸ்வரா ராவ் தலைமையில் நடந்த பாட்டிசை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றார். அப்போது ஜானகி அம்மா, “உங்களுக்கு குரல் வளம் சிறப்பாக இருக்கிறது! சென்னையில் தானே படித்து கொண்டு இருக்கிறீர்கள்? பகுதி நேரத்தில் இசைத்துறையில் ஈடுபட முயற்சியுங்கள்!” என்றார். இவ்வாறு பலரின் யோசனைக்கு பிறகு தந்தையிடம் ஆலோசித்துவிட்டு தொடர்ந்து படிக்கும் வேளை போக இசைத்துறையில் கவனம் செலுத்தினார். முகமது ரபி பாடல்களை எஸ்.பி.பி விரும்பி கேட்பார் என்றும் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய "நிலவே என்னிடம் நெருங்காதே" பாடலை பாடியே தமிழ் சினிமாவில் பாட வாய்ப்பு தேடினார் என்றும் கூறப்படுகிறது. எவ்வளவு முயற்சித்தும் 1964-1966 இரண்டு வருடங்கள் திரையிசை வாய்ப்புகள் ஒன்று கூட எஸ்.பி.பிக்கு அமையவில்லை.

அறிமுக காலம் 

திரைத்துறையில் பாட வாய்ப்புகள் அமையாததால் பொறியியல் துறையில் முறையாக ஈபடுவோம் என்று எண்ணி கொண்டிருந்த அதே வேளையில் டிசம்பர் 15, 1966இல் அன்று “சிறீ சிறீ சிறீ மரியாத ராமண்னா” (Sri Sri Sri Maryada Ramanna, Released on 01-January-1967) என்ற தெலுங்கு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணியின் இசையில் “எமியே விந்தா மோகம்” என்ற தெலுங்கு பாடலுக்கு பின்னணி பாடும் வாய்ப்பை பெற்றார். இவரே தன்னுடைய திரையிசை குரு என்று எஸ்.பி.பி பலமுறை குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1967ஆம் ஆண்டு வெளியான “சிறீ சிறீ சிறீ மரியாத ராமண்னா” படத்தின் கதாநாயகன் பத்மநாபாம் (Padmanabham), கதாநாயகி ராஜஸ்ரீ (Rajashree). “மரியாத ராமண்னா” என்பது ஆந்திராவின் நாட்டுப்புற கதை என்று அறியப்படுகிறது. முதல்வன் படத்தின் கதை கரு கிட்டத்தட்ட இந்த நாட்டுப்புற கதை சார்ந்தே இருக்கிறது என்பது என்னுடைய எண்ணம்.

டிசம்பர் 23, 1966இல் அன்று “நக்கரே அதே சுவர்க” (Nakkare Ade Swarga, Released on 10-March-1967) என்ற கன்னட திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.ரங்கா ராவின் இசையில் “கனசிடோ நாணசிடோ” என்ற கன்னட பாடலுக்கு பின்னணி பாடினார்.

1969இல் “சாந்தி நிலையம்” (Shanthi Nilayam, Released on 23-May-1969) என்ற தமிழ் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் “இயற்கையெனும் இளையகன்னி” என்ற தமிழ் பாடலுக்கு பின்னணி பாடினார்.

1969இல் “கடல்பாலம்” (Kadalpalam, Released on 25-July-1969) என்ற மலையாள திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.தேவராஜனின் இசையில் “ஈ கடலம் மரு கடலம்” என்ற மலையாள பாடலுக்கு பின்னணி பாடினார்.
1969இல் தமிழ்

1969இல் “ஹோட்டல் ரம்பா” (Hotel Rambha - Unreleased) என்ற தமிழ் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் “அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு” என்ற தமிழ் பாடலுக்கு முதல் முறையாக பின்னணி பாடினார். ஆனால் இத்திரைப்படமும் இப்பாட்டும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிறகு மேலே குறிப்பிடப்பட்டுள்ள “சாந்தி நிலையம்” திரைப்படத்திற்கு இரண்டாவது தமிழ் பாடலாக பின்னணி பாடினார். 
மேலும் 1969இல் எம்.ஜி.ஆர் நடித்த “அடிமைப் பெண்” (Adimai Penn / Released on 01-May-1969) என்ற தமிழ் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இசையில் “ஆயிரம் நிலவே வா” என்ற பாடலுக்கு மூன்றாவது தமிழ் பாடலாக பின்னணி பாடினார். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் “சாந்தி நிலையம்” திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே “அடிமைப் பெண்” திரைப்படத்தில் பாடிய “ஆயிரம் நிலவே வா” பாடலே இவர் பாடி வெளிவந்த முதல் தமிழ் திரைப்படம் ஆகியது.
முதல் பாடல்

1969இல் வெளியான “அடிமைப் பெண்” திரைப்படத்திற்கு “ஆயிரம் நிலவே வா” பாடலை எம்.ஜி.ஆருக்கு முதல் முறையாக பின்னணி பாடினார்.

1971இல் வெளியான “சுமதி என் சுந்தரி” திரைப்படத்திற்கு “பொட்டு வைத்த முகமோ” பாடலை சிவாஜிக்கு முதல் முறையாக பின்னணி பாடினார்.

1969இல் வெளியான “சாந்தி நிலையம்” திரைப்படத்திற்கு “இயற்கையெனும் இளையகன்னி” பாடலை ஜெமினி கணேசனுக்கு முதல் முறையாக பின்னணி பாடினார்.

1970இல் வெளியான “காதல் ஜோதி” திரைப்படத்திற்கு “காதல் ஜோதி அணையாதது” பாடலை ஜெய்சங்கருக்கு முதல் முறையாக பின்னணி பாடினார்.

1970இல் வெளியான “ஏன்?” திரைப்படத்திற்கு “இறைவன் என்றொரு கவிஞன்” பாடலை ரவிச்சந்திரனுக்கு முதல் முறையாக பின்னணி பாடினார்.

1970இல் வெளியான “அருணோதயம்” திரைப்படத்திற்கு “எங்க வீட்டு தங்க தேரில்” பாடலை முத்துராமனுக்கு முதல் முறையாக பின்னணி பாடினார்.

1969இல் வெளியான “பால் குடம்” திரைப்படத்திற்கு “மல்லிகை பூ வாங்கி” பாடலை ஏ.வி.எம்.ராஜனுக்கு முதல் முறையாக பின்னணி பாடினார்.

1969இல் வெளியான “கன்னிப்பெண்” திரைப்படத்திற்கு “பௌர்ணமி நிலவில் பனிவிழும்” பாடலை சிவகுமாருக்கு முதல் முறையாக பின்னணி பாடினார். 

1977இல் வெளியான “புவனா ஒரு கேள்விக்குறி” திரைப்படத்திற்கு “ராஜா என்பார் மந்திரி என்பார் ” பாடலை ரஜினிகாந்துக்கு முதல் முறையாக பின்னணி பாடினார்.

1973இல் வெளியான “சொல்லத்தான் நினைக்கிறேன்” திரைப்படத்திற்கு “கல்யாணம் கச்சேரி” பாடலை கமல்ஹாசனுக்கு முதல் முறையாக பின்னணி பாடினார்.

1980இல் வெளியான “தூரத்து இடி முழக்கம்” திரைப்படத்திற்கு “அலையேந்தி கொள்வோம்” பாடலை விஜயகாந்துக்கு முதல் முறையாக பின்னணி பாடினார்.

1992இல் வெளியான “நாளைய தீர்ப்பு” திரைப்படத்திற்கு “உடலும் இந்த உயிரும்” பாடலை விஜய்க்கு முதல் முறையாக பின்னணி பாடினார்.

1993இல் வெளியான “அமராவதி” திரைப்படத்திற்கு “அடி சோக்கு சுந்தரி” பாடலை அஜித்துக்கு முதல் முறையாக பின்னணி பாடினார்.

ஆயிரம் நிலவே வா

குறிப்பு - எஸ்.பி.பி பேசும் வகையில் கீழ்கண்ட எழுத்து நடை அமைக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவும்.

ஏ.வி.எம் ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆர் நடித்த தமிழ் படத்தின் தெலுங்கு டப்பிங் பதிப்பிற்காக ஒரு தெலுங்கு பாடலைப் பதிவு செய்து கொண்டிருந்தேன். அப்போது ஸ்டுடியோ மரத்தடியில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் நான் பாடிய அப்பாடலை கேட்டு இருக்கிறார். எம்.ஜி.ஆர் நான் பாடிய தெலுங்கு பாடலை ரசித்ததாகவும் அவர் நடிக்கும் “அடிமைப் பெண்” படத்தில் நான் பின்னணி பாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்புவதாகவும் உதவியாளர் என்னிடம் கூறி பாடல் ஒத்திகைக்கு ராமாவரம் தோட்டம் வர சொன்னார். நான் மகிழ்வுடன் உடனே கிளம்பி ராமாவரம் தோட்டம் சென்றேன். எம்.ஜி.ஆர் வீட்டில் கே.வி.மகாதேவன் “ஆயிரம் நிலவே வா” பாடலை எடுத்துரைத்த பிறகு நான் மிகுந்த நடுக்கத்துடன் ஜாம்பவான் பாடகி சுசீலாம்மாவுடன் இணைந்து பாடிக் காட்டினேன்.

ஒரு வாரம் கழித்து மொத்த படக்குழுவும் இப்பாடலை படமாக்க ஜெய்ப்பூர் அரண்மனைக்கு கிளம்பியது. அந்நேரத்தில் எனக்கு உடல் சுகவீனம் அடைந்துவிட படக்குழு என்னை உடல் நலம் தேறிய பிறகு ரிகார்டிங்கிற்கு வந்தால் போதும் என்றது. சென்னை ரிகார்டிங் ஸ்டுடியோவிற்கு மீண்டும் அழைப்பு வந்த பிறகு “ஆயிரம் நிலவே வா” பாடல் படமாக்கப்பட்டதால் வேறொரு பாடலை பாட தான் அழைத்திருப்பார்கள் என்று எண்ணி நான் அங்கு சென்றேன். அப்போது கே.வி.மகாதேவன் “ஆயிரம் நிலவே வா” பாடல் ஒத்திகை நினைவு இருக்கிறதா? ஹ்ம்ம் அந்த பாடலை தான் இப்பொது ரிகார்டிங் செய்ய போகிறோம் என்றார். இதனை கேட்டு நான் சற்றே திகைத்து விட்டேன். பிறகு இப்பாடல் ரிகார்டிங்கை முடித்தவுடன் எம்.ஜி.ஆர் உட்பட படக்குழுவினர் பாராட்டினர். அப்போது ரிகார்டிங் முடிந்த பிறகு தயக்கத்துடன் எம்.ஜி.ஆரிடம் சென்று ஏன் இப்பாடலை புதியவனான எனக்காக ரிகார்டிங் செய்யாமல் தள்ளி வைத்தீர்கள் என்று வினவினேன். அதற்கு எம்.ஜி.ஆர் நீ இப்பாடலை பற்றியும் எனக்காக பின்னணி பாட இருப்பதை பற்றியும் உனது உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலரிடமும் தெரிவித்து இருப்பாய். அவர்கள் ஒரு வேளை படத்தை பார்க்கும் போது உன்னுடைய குரலில் அப்பாடல் அமையவில்லை என்றால் நீ ஏதோ சரியாக பாடவில்லை அதனால் தான் நீக்கப்பட்டாய் என்று எண்ணி விட்டால்? அதனால் தான் நீ உடல் நலம் தேறி வரும் வரை அப்பாடலை படமாக்காமல் தள்ளி வைத்தோம் என்றார். இதனை கேட்டு உணர்ச்சிவசத்துடன் நான் எம்.ஜி.ஆரிடம் ஆசி பெற்றேன்.

அடிமைப் பெண் படத்திற்கு மேலும் இரண்டு பாடல்கள் பின்னணி பாடினேன் ஆனால் அவை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த புலமைப்பித்தன் வரிகளில் “வீரத்திலே கவி எழுதி” என்ற பாடலும் ஆலங்குடி சோமுவின் வரிகளில் “தாயில்லாமல் நானில்லை” என்ற பாடலும் ஆகும். “தாயில்லாமல் நானில்லை” பாடல் உணர்ச்சி பொங்கும் குரலில் அதே சமயம் மெல்லப் பாடும் தன்மையுடைய பாடல் என்பதால் டி.எம்.எஸ் அப்பாடலை பாடினார்.

பொட்டு வைத்த முகமோ

1969இல் சிவாஜி நடிப்பில் “விட்டில் பூச்சி” என்ற தமிழ் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பின்னணி பாடினார். இப்பாடல் முதலில் பாலமுரளி கிருஷ்ணா பாட வேண்டியது பிறகு இவருக்கு சிவாஜி படத்தில் பாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. என்னடா இது “விட்டில் பூச்சி” சிவாஜி பட பெயர் போல இல்லையே என்று யோசனை செய்கிறீர்களா? “விட்டில் பூச்சி” என்ற பெயர் “சுமதி என் சுந்தரி” என்று மாற்றம் செய்யப்பட்டது. சிவாஜிக்கு இவர் பாடிய அந்த முதல் பாடல் “பொட்டு வைத்த முகமோ” ஆகும். மிகவும் நுண்ணிப்பாக கவனித்தால் “ஆயிரம் நிலவே வா” பாடலை எம்.ஜி.ஆர் பாணிக்கும் “பொட்டு வைத்த முகமோ” பாடலை சிவாஜி பாணிக்கும் பாடி இருப்பார் என்பதை உணர முடியும். இச்செய்தி மிகைப்படுத்தல் அல்ல. நடிகர்களுக்கு ஏற்ப குரல் மாறி பாடுவதில் வித்தகரான டி.எம்.எஸ் வாயிலாக இவர் கற்றுக்கொண்ட பாடமாக இருக்கலாம்.

எஸ்.பி.பி தனது வலையொளியில் "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு எம்.ஜி.ஆர் பட பாடல்களிலே பிடித்த பாடல் தான் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல்" என்று மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.  மேலும் அப்பேட்டியில் சிவாஜி கணேசன் நடித்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில் வரும் ஒரு சிவாஜி கதாபாத்திரம் கமல்ஹாசனுக்கும் இன்னொரு சிவாஜி கதாபாத்திரம் ரஜினிகாந்துக்கும் தத்தமது நடிப்பு பாணிகளுக்கான தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும் என்று பேசியது குறிப்பிடத்தக்கது. நீங்கள் இப்படத்தை மீண்டும் பார்த்தால் எஸ்.பி.பியின் சினிமா ரசனை எவ்வளவு உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இளையராஜா

பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் ஆகிய மூன்று சகோதர்கள் 1969-1970 காலகட்டத்தில் “பாவலர் சகோதர்கள்” என்ற பேரில் இசைக் குழு அமைத்து எஸ்.பி.பி உடன் கூட்டு சேர்ந்து கல்கத்தா முதல் குமரி வரை மேடை கச்சேரிகள் வாயிலாக இவர்கள் அனைவரும் இணைந்து பயணிக்க தொடங்கினர். அப்போது எஸ்.பி.பி ஒரு சில திரை பாடல்கள் பாடி இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து கொண்டே இவர்களின் நண்பராக பாரதிராஜா "இயக்குனர்" ஆகும் வாய்ப்புகளுக்காக முயன்று கொண்டிருந்தார். நாளடைவில் திரைக்கதை ஆசிரியர் பஞ்சு அருணாச்சலம் வாயிலாக 1976இல் சிவகுமார் நடிப்பில் வெளியான “அன்னக்கிளி” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இளையராஜா கோலோச்ச தொடங்கினார். மேலும் பிரபல இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் உதவி இயக்குனராக சேர்ந்து நாளடைவில் தனி இயக்குனராகி தமிழ் சினிமாவின் போக்கை வெகுவாக மாற்றி அமைத்தார் பாரதிராஜா. ஆரம்ப காலத்தில் "எஸ்.பி.பி, இளையராஜா, பாரதிராஜா" ஆகியோர் திரைத்துறையில் சாதனை புரிய தொடர்ந்து முயற்சித்தனர். முயற்சியின் பலனாக பாட்டுடைத் தலைவரானார் எஸ்.பி.பி, இசைஞானி ஆனார் இளையராஜா, இயக்குனர் இமயமானார் பாரதிராஜா. இவர்களை போன்ற வெற்றி கூட்டணி கதைகள் பிற மொழி இந்திய சினிமாவில் நானறிந்த வரையில் குறைவு தான்.
ரஜினிகாந்த்

1980இல் ஆரம்ப கால ரஜினிகாந்த் படங்களில் “ஓப்பனிங் சாங்” பாடியவர் மலேசியா வாசுதேவன். குறிப்பாக பொதுவாக என் மனசு தங்கம், ஆசை நூறு வகை, வாங்கடா வாங்க, மனிதன் மனிதன் போன்ற பாடல்கள். எஸ்.பி.பிக்கு சக பின்னணி துறை நண்பரான மலேசியா வாசுதேவன் குரலும் மாற்று இல்லாத அற்புத குரலாகும். பிற்காலத்தில் ரஜினிக்கு நிரந்தர “ஓப்பனிங் சாங்” பாடகராக எஸ்.பி.பி வலம் வந்தார். குறிப்பாக வந்தேன்டா பால்காரன், நான் ஆட்டோக்காரன், அதாண்டா இதான்டா, என் பேரு படையப்பா, ஒருவன் ஒருவன் முதலாளி, புதிய மனிதா, தேவுடா தேவுடா, பல்லேலக்கா, எங்கே போகுதோ வானம், ஓ நண்பா, சும்மா கிழி போன்ற பாடல்கள்.
கமல்ஹாசன் 

நடிகர் கமல்ஹாசனை பற்றி குறிப்பிடும் போது “கமல்ஹாசன் அருமையான பாடகன் படவா இவன் மட்டும் முழுநேரம் பாடகன் ஆகிருந்தா நானெல்லாம் பாட்டுத்துறையை விட்டு வீட்டுக்கு போயிருப்பேன். எப்படி இருந்தாலும் தமிழ் சினிமா கமல்ஹாசனின் முழு திறமையை இன்னும் பயன்படுத்தி கொள்ளவில்லை அல்லது பார்க்கவில்லை என்று கூறுவதை தவிர வேறு வார்த்தையில்லை” என்று கூறினார். கமல்ஹசனின் பெரும்பாலான தமிழ் படங்களின் தெலுங்கு டப்பிங் பதிப்பிற்கு பின்னணி குரல் கொடுத்தவர் எஸ்.பி.பி. பல்வேறு நடிகர்களுக்கு டப்பிங் பணியும் செய்தமையால் டப்பிங் கிங் என்றும் அறியப்படுகிறார். 1981இல் இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஏக் துஜே கேலியே ஹிந்தி படத்தில் "தேரே மேரே பீச் மே" என்ற இந்தி பாடலின் மூலம் இந்தி திரையுலகில் தடம் பதித்தார்.
அஜித் அறிமுகம்

நடிகர் அஜித் மற்றும் எஸ்.பி.பி மகன் எஸ்.பி.பி.சரண் நெருங்கிய பள்ளி தோழர்கள். அப்போது அஜித் சில விளம்பரங்களில் மற்றும் 1990இல் “என் வீடு என் கணவர்” படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். 1992இல் தெலுங்கு திரையுலகை சேர்ந்த கோலபுடி மாருதி ராவ் மகன் கோலபுடி சீனிவாச ராவ் தான் இயக்கும் “பிரேமா புஸ்தகம்” தெலுங்கு திரைப்படத்திற்கு ஒரு புதுமுக ஹீரோவைத் தேடுகிறார் என்று கேள்விப்பட்டபோது ​​எஸ்.பி.பி அஜித்தின் பெயரை பரிந்துரைத்ததுள்ளார். அப்போது அஜீத் நடித்த “பிரேமா புஸ்தகம்” படப்பிடிப்பில் கோலபுடி சீனிவாச ராவ் ஒன்பதாம் நாள் காலமானார். கோலபுடி மாருதி ராவ் தனது மகனின் மரணத்திற்குப் பிறகு “பிரேமா புஸ்தகம்” திரைப்படத்தை இயக்கி வெளிட்டார். சிறந்த திரைக்கதைக்கான நந்தி விருதை இப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 
1992இல் தமிழில் இயக்குனர் செல்வா இயக்கிய முதல் படமும் வெற்றி படமுமான "தலைவாசல்" படத்தில் எஸ்.பி.பி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இயக்குனர் செல்வா தன்னுடைய இரண்டாவது படமாக அமராவதி படத்தில் புதுமுகங்களை வைத்து இயக்க திட்டமிட்டு இருந்தார். அப்போது செல்வாவிடம் அஜித்தை பரிந்துரை செய்தவர் எஸ்.பி.பி. இன்று திரையுலகில் அஜித்தின் உயர்வுக்கு அவரது முயற்சியே முதல் காரணம் ஆனால் அம்முயற்சியில் “பிரேமா புஸ்தகம்” மற்றும் "அமராவதி" மூலம் சிறு துரும்பை கிள்ளி போட்டவர் எஸ்.பி.பி என்றால் மிகையல்ல.

பொற்காலம்

பிரபல பாடகர் டி.எம்.எஸ் முன்னணியில் இருந்த காலத்திலே பின்னணியில் புதியவராக நுழைந்து முன்னேறி செல்ல எஸ்.பி.பிக்கு அமைந்த குரல் வளம் மட்டும் காரணமல்ல இயல்பிலேயே எஸ்.பி.பிக்கு அமைந்த மாண்புகளும் காரணமாகும். 1970களில் புதியவரான எஸ்.பி.பி இசைத்துறையில் ஜாம்பவான்களான டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எல்.ராகவன், பாலமுரளி கிருஷ்ணா, ஏ.எம்.ராஜா டி.ஆர்.மகாலிங்கம், பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி, ஜிக்கி, ஜானகி, வாணி ஜெயராம் உட்பட பலருடன் இணைந்து பயணிக்கும் பெரும் வாய்ப்பை பெற்றார்.

1970களின் ஆரம்ப கால திரைப்படங்களில் எஸ்.பி.பி பாடிய பாடல்கள் ஒற்றை இலக்கங்களிலே இருந்தது. நாளடைவில் 1970களின் இறுதியில் இருந்து நிறைய பாடல்களை பாட தொடங்கினார் குறிப்பாக இளையராஜா வருகைக்கு பின்னர். ரஜினியின் "என்னடா பொல்லாத வாழ்க்கை" பாடல் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் கமலின் "கம்பன் ஏமாந்தான்" பாடல் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் அறியப்படுகிறது. 1980களில் ஜானகி அம்மா மற்றும் கே.எஸ்.சித்ரா அம்மா உடன் இணைந்து இவர் பாடிய பாடல்கள் பல உண்டு. தொடர்ந்து 1980-2020 காலகட்டத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், வி.குமார், சங்கர் கணேஷ், இளையராஜா, டி.ராஜேந்தர், சந்திரபோஸ், மனோஜ் கியான், சிற்பி, தேவா, வித்யா சாகர், பரத்வாஜ், ஏ.ஆர்.ரஹ்மான், ஜேம்ஸ் வசந்தன், யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆன்டனி, ஹாரிஸ் ஜெயராஜ், தமன், இமான், ஜி.வி.பிரகாஷ் குமார், அனிருத் உட்பட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பற்பல பாடல்களை பாடினார். 

எஸ்.பி.பி பாடல்களில் சிரிக்கும் இடத்தை கூட ரிவைண்ட் செய்து கேட்கும் பழக்கம் சிலரை போல எனக்கும் உண்டு. குறிப்பாக பட்டு கன்னம், செங்குருவி செங்குருவி, காதலிக்க 90 நாள் போன்ற பாடல்கள். மூச்சு விடாமல் பாடிய "மண்ணில் இந்த காதலின்றி, சத்தம் இல்லாத தனிமை" போன்ற பாடல்களை யாரும் மறக்க தான் கூடுமோ. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் என்று ஒவ்வொரு நடிகருக்கும் வெவ்வேறு குரலில் பாடி அசத்தும் இயல்புடையவர் எஸ்.பி.பி. 
1980 காலகட்டத்தில் மைக் மோகன் என்று அழைக்கப்பட்ட நடிகர் மோகன் சினிமாவில் ஜொலிக்க பாடல்களும் ஓர் முக்கிய காரணமாகும். “இளையராஜா + எஸ்.பி.பி + மைக் மோகன்” கூட்டணியில் அமைந்த அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. மைக் சொல்லை அடைமொழியாக மோகன் மட்டும் பெற்றிருக்க காரணம் “இளையராஜா + எஸ்.பி.பி” கூட்டணி என்றால் மிகையல்ல. கமல்ஹாசனுக்கும் முரளிக்கும் இக்கூட்டணி பல வெற்றி பாடல்களை தந்திருந்தாலும் மோகன் பாடல்கள் சற்றே தனி ராகம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. எஸ்.பி.பி இறுதி அஞ்சலிக்கும் மோகன் படத்தில் இடம் பெற்ற "சங்கீத மேகம்" பாட்டின் வரிகளான "இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" அதிகமாக பயன்படுத்தப்பட்டது.

நடிகர் ராமராஜன் “இளையராஜா + எஸ்.பி.பி” கூட்டணியில் தனித்து ஜொலித்தார் என்பதும் நினைவு கூறத்தக்கது. மேலும் "டி.ராஜேந்தர் + எஸ்.பி.பி" கூட்டணி பாடல்களுக்கு முக்கிய இடம் உண்டு ஏனெனில் டி.ஆர் பாடல்களில் பொதுவாக “டிரம்ஸ் பீட் + பாடலின் வேகம் + பாடல் வரிகள் + காட்சியமைப்பு” அமர்க்களமாக இருக்கும். அப்படி என்றால் மற்றவர்கள் பாடல்கள் அவ்வாறு இல்லையா? என்று எண்ணிட வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன் காரணம் நான் ஒப்பிடும் நோக்கில் இக்கருத்தை குறிக்கவில்லை.

பாடும் நிலா

எஸ்.பி.பிக்கு பாடும் நிலா என்ற பெயர் நிலைக்க காரணம் உதயகீதம் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடு நிலாவே என்ற பாடலாகும். கவிஞர் மு.மேத்தா எழுதிய பாடு நிலாவே பாடலில் நாயகன் மைக் மோகன் சிறையில் இருந்து பாடுவது போலவும் நாயகி ரேவதி வெளியில் இருந்து பாடுவது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இப்பாடல் ரிகார்டிங் போது இளையராஜா கவிஞர் மு.மேத்தாவிடம் சிறைக்குள் இருந்து பாடு நிலாவே? என்று நிலவை பார்த்து நாயகன் பாடுவது இயலாத காரியம். நாயகன் பாடும் போது பாடு நிலாவே உடன் ஒரு "ம்" சேர்த்து நாயகி நிலாவை பார்த்து "பாடு நிலாவே" என்றும் நாயகன் "பாடும் நிலாவே" என்று பதில் சொல்வதும் போலவும் மாற்றி கொள்ளலாம் என்று இளையராஜா யோசனை கூறினார். கவிஞர் மு மேத்தா மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார். ஜானகி அம்மாவுடன் இணைந்து எஸ்.பி.பி பாடிய இப்பாடல் மூலமே பாடும் நிலா பாலு என்ற சரித்திர பெயர் உருவானது.
பன்முகத்தன்மை

எஸ்.பி.பியை பலருக்கும் பாடகராக தான் தெரிந்திருக்கிறது ஆனால் அவர் பாடகர் மட்டுமல்ல இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பின்னணி குரல் கலைஞர், பல்குரல் வித்தகர், சமூக சேவகர், இன்னும் பல. துடிக்கும் கரங்கள், சிகரம், மயூரி, தையல்காரன், உலகம் பிறந்தது என்னக்காக, உன்னை சரணடைந்தேன் போன்ற பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். நடிகராக பற்பல படங்களில் தந்தையாக, டாக்டராக, ஆசிரியராக, காவலராக தனது சிறந்த நடிப்பை வழங்கியிருப்பர் என்பது நினைவு கூறத்தக்கது. குறிப்பாக மனதில் உறுதி வேண்டும், சிகரம், குணா, மின்சார கனவு, கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், பரதன், மேஜிக் மேஜிக் 3டி, பிரியமானவளே, நாணயம் போன்ற படங்கள். "Happy Birthday To You" பாடலை பாடியும் ஆடியும் 1971இல் "முகமது பின் துக்ளக்" தெலுங்கு படத்தில் முதல் முதலாக திரையில் தோன்றிருப்பார்.
மாண்புகள் 

சக பாடகரை பாராட்டுவதில் பாரபட்சம் காட்டியதில்லை எஸ்.பி.பி. எடுத்துக்காட்டாக ஒரு முறை பிரபல பாடகர் ஹரிஹரனை மேடையில் வைத்து கொண்டு எஸ்.பி.பி “ஹரிஹரன் அருமையான பாடகர் என்பதில் சந்தேகமில்லை ஆனால் வருத்தப்படவேண்டிய செய்தி என்னன்னா அவரு சினிமாவில் பாட கொஞ்சம் லேட்டா வந்துட்டார் நான் கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டேன் அவ்வளவு தான் வித்தியாசம் இல்லனா நமக்கெல்லாம் அவரிடம் இருந்து சற்று கூடுதல் எண்ணிக்கையில் இனிமையான பாடல்கள் செவிக்கு வாய்த்திருக்கும்” என்று பாராட்டினார்.
ஒரு கலை விழாவில் மேடை கச்சேரி அமைப்பாளர் “சார் ரசிகர்கள் உங்களை காண ஆவலோடு வந்திருக்காங்க என்றார் உடனே எஸ்.பி.பி சந்தோசம் தம்பி நன்றி ஆனா என்ன பார்ப்பதை விட கேட்பதற்கு என்று கூறுவது தான் என் விஷயத்தில் சரியாக இருக்கும்” என்று நகைச்சுவையுடன் கூறினார்.

எஸ்.பி.பி போலவே குரல் வளம் கொண்டவர் என்று திரையுலகில் பெயரெடுத்தவர் பாடகர் மனோ. எஸ்.பி.பி கால்ஷீட் நிரம்பியிருந்த சூழலில் அவருக்கு பதிலாக பாடகர் மனோவை பலரும் பாட வைத்தனர். தனக்கு பதிலாக பாடகர் மனோவை பாட சொல்லி அதிகமாக அவரை உற்சாகப்படுத்தியவர் எஸ்.பி.பி என்பது குறிப்பிடத்தக்கது. (எஸ்.பி.பி போலவே குரல் வளம் இருப்பினும் தனது குரல் பாவனைகளில் சிறிது வேறுபாடுகளை புகுத்தி பாடும் பாடகர் மனோவின் குரலும் தனித்துவமான ஒன்றே).

எஸ்.பி.பியை இன்றைய மக்களிடம் அவர் பாடல்களுக்கு அடுத்து அதிகமா கொண்டு சேர்த்தது விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சி என்றே எண்ணுகிறேன். அதில் அவர் பேசிய உரைகள், காட்டிய பாவனைகள், வெளிக்காட்டிய உணர்ச்சிகள், பாடிய பாடல்கள், குழந்தைகளிடம் காட்டிய அன்பு, பாடகர்களிடம் கூறிய அறிவுரைகள் என அக்காட்சிகள் அவர் பாடல்கள் போலவே நம் நினைவை விட்டு என்றும் நீங்காது என்பது திண்ணம்.
திரையுலக வாய்ப்பு இல்லாமல் அல்லது திரையுலகை அணுகாமல் மேடை கச்சேரிகளில் பாடல்களை மட்டும் பாடி வரும் இசை கலைஞர்களுக்கு எஸ்.பி.பி பாடல்கள் ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது. அவர்களிடம் எஸ்.பி.பி தனக்கு ராயல்டி வேண்டும் என்று கூறவில்லை மாறாக அவர்களை பாராட்டி சீராட்டி வளர வழிவகை செய்தார் என்பது நினைவு கூறத்தக்கது. குறிப்பாக லட்சுமண் ஸ்ருதி ஆர்கெஸ்ட்ரா (லட்சுமண் ஸ்ருதி சிக்னல் என்று சொல்லும் அளவுக்கு) நிறுவனம் எஸ்.பி.பி பாடல்களை பாடியே வளர்ந்தது.

செஸ் உலகின் முடிசூடா மன்னன் விஸ்வநாதன் ஆனந்தின் முதல் ஸ்பான்சர் எஸ்.பி.பி என்பது குறிப்பிடத்தக்கது. 1983ஆம் ஆண்டில் தேசிய அணி சாம்பியன்ஷிப்பில் விஸ்வநாதன் ஆனந்தின் அணியான சென்னை கோல்ட்ஸுக்கு நிதியுதவி செய்துள்ளார். சுமார் 37 வருடங்கள் கழித்து எஸ்.பி.பி மறைந்த பிறகு இச்செய்தி நம் காதுகளை எட்டி இருக்கிறது என்றால் அவரின் மாண்புகள் என்றுமே போற்றத்தக்கது.

“அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் மோடி தனது வீட்டில் இந்திய கலைஞர்களுக்கு அளித்த சிறப்பு விருந்தில் கலந்து கொண்டேன். அப்போது நுழைவாயிலில் இருந்த பாதுகாவலர்கள் செல்போன்களை வாங்கிக் லாக்கரில் வைத்து கொண்டு அதற்கான டோக்கன் கொடுத்தார்கள். ஆனால் அதே நாளில் பாலிவுட் ஸ்டார்கள் மட்டும் பிரதமருடன் செல்ஃபிக்கள் எடுத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்” என்று வட இந்திய தென்னிந்திய வேறுபாடுகள் கலைத்துறையிலும் பார்க்கப்படுவது குறித்து கவலையுடன் எஸ்.பி.பி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சாதனைகள்

இளம் வயதில் எஸ்.பி.பி இசைக்கல்வி கற்றவரும் அல்ல பன்மொழி வித்தகரும் அல்ல. திரைக்கு பாட வரும் முன்னர் எஸ்.பி.பி கற்றிந்த மொழிகள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மட்டுமே ஆனால் 17 மொழிகளில் கிட்டத்தட்ட 40,000 பாடல்களை பாடும் அளவுக்கு தன்னை மெருகேற்றி இருக்கிறார் என்பது மெச்சத்தக்கது. திரைப்பாடல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கச்சேரி பாடல்கள், ஆல்பம் பாடல்கள், ஆன்மீக பாடல்கள், சின்னத்திரை பாடல்கள் என்று 40,000 பாடல்களை "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், இந்தி, துளு, ஒடியா, படுகா, அசாமிய, கொங்கணி, பெங்காலி, மராத்தி, கோண்டி, சௌராஷ்ட்ரா, பஞ்சாபி, சமஸ்கிருதம்" ஆகிய 17 மொழிகளில் பாடியுள்ளார். 1970இல் தான் பாடிய பாட்டை அதே பாவனைகளுடன் அச்சு பிசகாமல் 2020இல்லும் பாடும் இசை வல்லமை பெற்றவர். எஸ்.பி.பி 50 வருடங்களாக தினசரி இரண்டு பாடல்களுக்கு குறையாமல் கிட்டத்தட்ட 40,000 பாடல்களை பாடி பாட்டுத் தொண்டு ஆற்றி இருக்கிறார்.
பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகள், சிறந்த பாடலுக்கான 6 தேசிய விருதுகள், 7 பிலிம்பேர் விருதுகள், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, 5 கௌரவ டாக்டர் பட்டங்கள் உட்பட பல எண்ணற்ற விருதுகளை வாங்கியவர். 2001இல் அமெரிக்காவில் ஒரு சிறப்பு நிகழ்வில் அமெரிக்கா அதிபர் பில் கிளின்டனிடம் இவர் தான் எஸ்.பி.பி பல்லாயிரம் பாடல்களை பாடியவர் என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்ட போது பில் கிளின்டன் திகைத்து போனதாக செவிவழிச் செய்திகள் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் எஸ்.பி.பி கிட்டத்தட்ட ~ 25,000 பாடல்கள் வரை பாடியிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. சிறப்பு என்னவென்றால், மேற்கண்ட நான்கு மொழி திரைப்படங்களுக்கும் அவர் "சிறந்த பாடகருக்கான தேசிய விருதை" வென்றார். உலக புகழ் பெற்ற டைம்ஸ் நாளிதழ் சர்வதேச அளவில் மிகப்பிரபலமான 100 பாடல்களைத் தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தியது. இதில் பற்பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வாக்களித்தனர். ஓட்டெடுப்பு முடிந்த பிறகு பாடல்கள் பட்டியலை டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் ரஜினிகாந்த் நடிப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி மற்றும் ஸ்வர்ணலதா இணைந்து பாடிய “ராக்கம்மா” என்ற பாடல் முதலிடம் பிடித்தது எஸ்.பி.பியின் குரல் வளத்திற்கும் இசைஞானியின் இசை வளத்திற்கும் கிடைத்த பெருமை என்றால் மிகையல்ல.
குடும்பம் 

திரையுலகில் வளர்ந்து கொண்டிருந்த போது செப்டம்பர் 5, 1969இல் சாவித்திரியை திருமணம் புரிந்தார் எஸ்.பி.பி. தன் மகளுக்கு "பல்லவி" என்றும் மகனுக்கு "சரண்" என்றும் பெயரிட்டார். எஸ்.பி.பி உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள். இளைய சகோதரி பாடகி எஸ்.பி.சைலஜா ஆவார். இவர் “சோலைக் குயிலே காலை, மனதுக்குள் ஆடும் இளமை, வாடா என் ராஜா கண்ணா, படிப்புல ஜீரோ நடிப்புல ஹீரோ, சின்னஞ்சிறு வயதில், கல்யாணம் பாரு அப்பாவோட, ராசாவே உன்ன நா எண்ணிதா, ஆசைய காத்துல தூதுவிட்டு, மனதில் என்ன நினைவுகளோ, சூப்பர் ஸ்டாரு யாருனு” போன்ற பல பாடல்களை பாடியும் பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்தும் உள்ளார்.

2020இல் எஸ்.பி.பி 

கொரோனா தொற்று தொடர்பாக கவிஞர் வைரமுத்து எழுதிய “அணுவை விட சிறியது அணுகுண்டை போல் கொடியது” என்ற பாடலை மார்ச் 2020இல் இசையமைத்து பாடினார். இதுவே எஸ்.பி.பி கடைசியாக மக்கள் முன் தோன்றி பாடிய இறுதிப்பாட்டு. இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிப்பில் எஸ்.பி.பி பாடிய தமிழரசன் மற்றும் இமான் இசையில் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.பி.பி பாடிய அண்ணாத்தே திரைப்படங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அண்ணாத்தே திரைப்படத்திற்கு பின்னணி பாடியதே கடைசி ஸ்டூடியோ ரிகார்டிங் பாடல் ஆகும். 

சில வருடங்களுக்கு முன்பு எஸ்.பி.பி தனது வலையொளியில் தன்னுடைய திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டே வந்தார். மருத்துவமனைக்கு செல்லும் முன்னர் அவர் கடைசியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பற்றி பேசினார். இதில் முக்கிய விஷயம் என்னவெனில் பலரும் வலையொளியில் தங்களுடைய பிரபலமான சேனல்களுக்கு “Subtitles” வசதி கொடுப்பதில்லை ஆனால் தன்னுடைய திரை அனுபவ செய்திகள் அனைத்து மொழி பேசும் ரசிகர்கள் தரப்பிடம் சிரமம் இல்லாமல் சென்றடைய வேண்டும் என்பதற்காக தான் பேசிய அனைத்து காணொளிகளுக்கும் “Subtitles” வசதி இருக்க வேண்டும் என்று எஸ்.பி.பி தனது வலையொளி குழுவிடம் கூறியுள்ளார். இது இன்றைய தினத்தில் பல தரப்பட்ட மொழிகள் பேசும் மாநிலமாக இந்தியா இருந்தாலும் பல பிரபல தலைவர்கள், நடிகர்கள், வலையொளியாளர்கள் செய்ய தவறிய முயற்சி.

கொரோனா தொற்று மறைந்த பிறகு பாடகர் ஏ.எல்.ராகவனுக்கு பாராட்டு விழா எடுக்க எண்ணினார் எஸ்.பி.பி. ஆனால் அதற்குள் ஏ.எல்.ராகவன் மறைந்து போனார் என்பது கொடுமையான செய்தி. பாடகி இசைக் குயில் ஜானகி அம்மா மரணித்துவிட்டதாக சில அரக்கர்கள் வதந்தி கிளம்பிய போது நியாமான கோபத்துடன் “இப்படியெல்லாம் பேசாதீங்க! அம்மா நல்ல இருக்காங்க, இன்னும் சிறப்பாக இருப்பாங்க!” என்று காணொளியில் பேசினார் எஸ்.பி.பி. மேலும் கொரோனா காலத்திலும் மேடை கச்சேரி, வீடியோ வாயிலாக கச்சேரி எல்லாம் எஸ்.பி.பி செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

எஸ்.பி.பி கடந்த பிப்ரவரி 2020இல் காஞ்சி சங்கரமடத்துக்கு வேத பாடசாலை தொடங்க தனது நெல்லூர் பூர்வீக வீட்டை தானமாகக் கொடுத்தார். இவ்வீட்டிலே மறைந்த தந்தை எஸ்.பி.சம்பமூர்த்தி, தாயார் சகுந்தலாம்மா (தாயார் மறைந்தது பிப்ரவரி 2019) ஆகியோர் சிலையை நிறுவ விரும்பி ஆந்திராவை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் என்பவரிடம் அப்பணியை கொடுத்திருந்தார். 2020 ஆகஸ்ட் மாதம் மருத்துவமனைக்கு செல்லும் முன்னர் ஜூன் மாதம் அச்சிற்பியிடம் தனக்கும் ஒரு சிலையை செய்து தரும்படி கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிக் காலம்

எதிர்பாராதவிதமாக ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக 74 வயதான எஸ்.பி.பி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு முன் “இது லேசான அறிகுறிதான், விரைவில் நலம் பெற்று இல்லம் திரும்பிவிடுவேன், என்னை நினைத்து ரசிகர்கள் கவலை கொள்ள வேண்டாம்” என்று எஸ்.பி.பி கூறியிருந்தார். தொடர் சிகிச்சைக்கு பிறகு செப்டம்பர் 7ஆம் தேதி கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாகவும் பிற உடல் நல கோளாறுகள் காரணமாக தொடர் சிகிச்சை தேவைப்படுவதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் உயர்தர சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 25ஆம் தேதி அன்று மண்ணுலகை விட்டு மறைந்தார் பாட்டுடைத் தலைவன் எஸ்.பி.பி. ரசிகர்கள், திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முகவுரை 

50 வருடங்கள் பாடகராக 50 நாட்கள் சுகவீனம் இல்லாதவராக உடலால் மறைந்தாலும் உள்ளதால் நிறைந்தார் எஸ்.பி.பி. சமுதாயத்தை காத்த தலைவனையும் சமுதாயத்தை மகிழ்வித்த கலைஞனையும் மக்கள் என்றுமே நினைவு கூறுவார்கள். எஸ்.பி.பிக்கு பல மொழி ரசிகர்கள் இருப்பினும் தமிழ் ரசிகர்களுக்கு தனி இடம் உண்டு. பிறப்பதும் இறப்பதும் இயற்கை ஆனால் இங்கு எத்தனை பாடகர்கள் இருந்தாலும் நவீன கால தமிழ் சினிமாவின் பாட்டுக் கட்சிக்கு ஒரே தலைவன் எஸ்.பி.பி மட்டுமே. பிற பாடகர்களை அவருடைய சீடர்களாக தான் பார்க்க இயலும்.
தமிழ் சங்க இலக்கியங்களில் புலவர்கள் பாடியதை வரலாற்று பாடங்களில் இன்று படிக்கிறோம், கேட்கிறோம். அது போல இன்னும் நூறாண்டுகள் சென்றாலும் வருங்காலம் எஸ்.பி.பி என்ற மாமனிதரை படிக்கவும், கேட்கவும் செய்யும் என்றால் மிகையாகாது. எஸ்.பி.பி என்பது வெறும் சாதாரண பெயர் அல்ல அது யாருக்கும் கிடைக்காத முத்திரை.

'அடிமைப் பெண்' சங்கிலியை உடைத்தெறிந்து 'உத்தரவின்றி உள்ளே வா' என அழைத்த 'சாந்தி நிலையம்' வீட்டுக்குள் ‘கௌரவம்' ஆன 'மாணவன்' ஆக சேர்ந்து 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆக பாடி 'அரங்கேற்றம்' புரிந்து, ‘உயர்ந்த உள்ளம்’ கொண்டு தொடர்ந்து அற்புதமாக பாடி அசத்தி ‘உல்லாச பறவைகள்' ஆக ரசிகர்கள் வாழ வழி புரிந்து, எப்போதுமே பாட்டு 'தர்பார்' இல் 'தமிழரசன்' ஆக வீறு நடை போட்ட உனக்கு 2020 இறுதி என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

எங்களை நேற்றும் இன்றும் என்றும் தொடர்ந்து மகிழ்விப்பதற்காக நன்றி எஸ்.பி.பி அவர்களே! வாழ்க அவர்தம் பாட்டுத் தொண்டு!
என்னை சொல்லி குற்றமில்லை! உன்னை சொல்லி குற்றமில்லை! காலம் செய்த கோலமடி! என்ற கண்ணதாசன் வரிகளை நினைவு கூர்ந்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம். 

எஸ்.பி.பி பாடிய பல்லாயிரம் பாடல்களில் ஒரு சில பாடல்கள் வாசகர்களின் பார்வைக்கு.

எம்.ஜி.ஆருக்கு “ஆயிரம் நிலவே வா, வெற்றி மீது வெற்றி, பாடும் போது நான், அவள் ஒரு நவரச, இதழே இதழே, இரண்டு கண்கள், மாலை நேர தென்றல், நாளை நமதே, நேரம் பௌர்ணமி, அங்கே வருவது, என் யோகா ஜாதகம், இரவுகளை பார்த்ததுண்டு, நீராழி மண்டபத்தில், உங்களில் நம் அண்ணாவை” போன்ற பல பாடல்கள்.

சிவாஜி கணேசனுக்கு “பொட்டு வைத்த முகமோ, இரண்டு கைகள் நான்கானால், திருத்தேரில் வரும், என்னோடு பாடுங்கள், எத்தனை அழகு, நோட்டம் கண்ட, ஆசை தீர பேச, நாலு பக்கம் வேடர், காலம் மாறலாம், யாரோ நீயும் நானும், தலைவி தலைவி என்னை, பூ மணக்கும் பூங்குழலி, எங்கேங்கோ செல்லும், ஆத்தோரம் பூத்த மல்லி, ஓ மிஸ், பூ மொட்டு பொண்ணு, சந்தன மலரின் சுந்தர, என்னருமை செல்வங்களே, என் ராஜாத்தி வாருங்கடி, காதல் ராணி, பூ போலே உன் புன்னகையில், யமுனா நதி இங்கே, படகு படகு ஆசை, இரண்டில் ஒன்று, My Song Is For You” போன்ற பல பாடல்கள்.

ஜெமினி கணேசனுக்கு “இயற்கையெனும் இளையகன்னி, ஆயிரம் நினைவு, மங்கையரில் மகராணி, ராதா காதல் வராதா, கண்ணால் நடத்தும் ஒரு, போக போக நல்லா, ஜாம் ஜாம் என்று, ஒரு மல்லிகை மொட்டு, அன்பை குறிப்பது, கற்பனையோ கை, முத்து சிப்பிக்குள்ளே, எங்கே போவோம்” போன்ற பல பாடல்கள்.

ஜெய்சங்கருக்கு “பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில், கேள்வி கேட்கும் நேரமல்ல, கண்டேன் கல்யாண பெண், நிலவே நீ சாட்சி, காதல் ஜோதி அணையாதது, பேசு மனமே பேசு, காலங்களே காலங்களே, என்ன மகாராணி, மணிவிளக்கே மாந்தளிரே, அம்மம்மா என்னம்மா, ஒரு வீடு இரு உள்ளம், ஆவணி மலரே, பொன் என்றும் பூ, இன்று முதல், அங்கம் புதுவிதம், கல்யாண ராமனுக்கும், எதிர் பார்த்தேன், மாணிக்க பதுமைக்கு, காலம் பொன்னானது, ஒன்றே ஒன்று நீ, உலகில் இரண்டு கிளிகள், இரு மாங்கனி போல், எனக்கும் உனக்கும் வழக்கு, On A Hot Summer Morning” போன்ற பல பாடல்கள்.

ரவிச்சந்திரனுக்கு “இறைவன் என்றொரு கவிஞன், ஓ மைனா ஓ மைனா, என் காதல் கண்மணி, உத்தரவின்றி உள்ளே வா, மாதமோ ஆவணி, ஓடி வாவென, வெள்ளி முத்துக்கள், உன்னை தொடுவது, நினைத்தால் நான், தொடுவதென்ன தென்றலோ, நவாப்புக்கு ஒரு கேள்வி, ஊர்கோலம் போகின்ற” போன்ற பல பாடல்கள்.

முத்துராமனுக்கு “எங்க வீட்டு தங்க தேரில், வா இளமை அழைக்கிறது, உள்ளம் ரெண்டும் ஆடட்டும், நான் என்றால், கண்டேன் எங்கும், சம்சாரம் என்பது வீணை, கொட்டி கிடந்தது, தாலாட்டு பிள்ளை, வாழ்க கைகள் இரண்டும், படைத்தானே பிரம்ம தேவன், மறந்தே போச்சு, யம்மா கண்ணு, அம்பிகை நேரில் வந்தாள், கண்ணனை நினைக்காத, நாளை நாம் ஒரு, காவிரிக்கரை ஓரத்துல, நல்ல பேரோடு புகழ், சொந்தம் இனி உன் மடியில், ஆயிரம் ஆயிரம், கேட்டதெல்லாம் நான், பொன்னான மனம், நடப்பது சுகம்” போன்ற பல பாடல்கள்.

சிவகுமாருக்கு “உன்னை தொற்ற காற்று, என்ன சொல்ல என்ன, அன்பு மேகமே, ஒரு நாள் உன்னோடு, தேன் சிந்துதே வானம், முள்ளில்லா ரோஜா, காதல் விளையாட, மாமன் ஒரு நாள், என்னோடு வந்தான், அனங்கன் அங்கஜன், ஓடம் கடலோடும் அது, வா பொன்மயிலே, என்னோடு வந்தான், மாதென்னால் படைத்தான், என் காதலி யார் சொல்லவா, உச்சி வகுந்தெடுத்து, யாருமில்லை இங்கே, என் கண்மணி, மாமன் ஒரு நாள், பூந்தேனில் கலந்து” போன்ற பல பாடல்கள்.

ரஜினிகாந்துக்கு "My Name Is Billa, நம்ம ஊரு சிங்காரி, நான் பொல்லாதவன், ராக்கம்மா, காட்டுக்குயிலு, விழியிலே மலர்ந்தது, அடி வான்மதி, அடி ராக்கு முத்து, கொஞ்சி கொஞ்சி, வெற்றி நிச்சயம், காதலின் தீபம், கண்மணியே காதல், ஜோடி கிளி, இரு விழியின், நாட்டுக்குள்ள எனக்கொரு, கண்ணில் என்ன கார்காலம், கொக்கு சைவ, ஆணென்ன பெண்ணென்ன, பேச கூடாது, சுந்தரி கண்ணால், நானே என்றும் ராஜா, டிங் டாங் டாங், பூமாலை ஒரு, கல்யாணம் வைபோகம், ஒரு நாளும் உனை, நான் பொல்லாதவன், அத்திந்தோம் திந்தியும், வா வா பக்கம், மானின் இரு கண்கள், குறிஞ்சி மலரில், ராமன் ஆண்டாலும், தில்லு முல்லு, நதியோரம் நாணல், அதோ வாராண்டி, ஒரு கோல கிளி, நிலவே முகம் காட்டு, ஆலப்போல் வேலப்போல், ராஜா என்பார், தென்மதுரை வைகை, மெதுவாகத்தான், மாலை சூடும் வேலை, ராஜாதி ராஜா உன், என்னடா பொல்லாத வாழ்க்கை, கண்டு புடிச்சேன், ராகங்கள் 16, வாருங்கள் ஒன்றாய், காட்டிலொரு சிங்கக்குட்டியாம், காட்டுக்குயிலு, Silence Silence" போன்ற பல பாடல்கள்.

கமல்ஹாசனுக்கு "அங்கும் இங்கும், இளமை இதோ, நானாக நானில்லை, என்னடி மீனாட்சி, சாந்து பொட்டு, கண்மணியே பேசு, எங்கேயும் எப்போதும், அரே ஓரங்க ஸ்ரீலங்கா, தேவி ஸ்ரீதேவி, சொர்கம் மதுவிலே, நினைத்ததை முடிப்பது, கப்பல் ஏறி, என்ன சத்தம் இந்த, தகிட ததிமி, கடவுள் அமைத்த வைத்த, கல்யாண கச்சேரி, இன்னும் என்னை என்ன, மீண்டும் மீண்டும் வா, வனிதாமணி, அம்மம்மா சரணம், நான் பூவெடுத்து, பட்டு கன்னம், ஜெர்மனியின் செந்தேன், இதழில் கதை, நல்லதோர் வீணை செய்தேன், வலையோசை கல கலவென, மாயா மச்சீந்திரா, ஒரு நிலவும் மலரும், மேகம் கொட்டட்டும், என் ஜோடி மஞ்சக்குருவி, செம்பருத்தி பூவே, வாயா வாயா, வானிலே தேன்நிலா, நீல வான ஓடையில், சிறிய பறவை, பேரை சொல்லவா, உனக்கென்ன மேலே நின்றாய், இருமனம் கொண்ட, நெஞ்சத்தில் போராடும், உன்னை நான் பார்த்தது, சங்கீதம் எப்போதும், தீர்த்த கரையினிலே, புஞ்சை உண்டு, நம்ம சிங்காரி, சிங்களத்து சின்னக் குயிலே, அண்ணாத்தே ஆடுறார், பசி எடுக்குற நேரம், நான் கட்டில் மேலே, கம்பன் ஏமாந்தான், உன்ன நினைச்சேன், சிப்பியிருக்குது, வானம் தொட்டு, How Wonderful" போன்ற பல பாடல்கள்.

விஜயகாந்துக்கு "அலையேந்தி கொள்வோம், தேடாத இடமெல்லாம் தேடினேன், செங்குருவி செங்குருவி, போட்டாலும் ஏறல, சின்னமணி குயிலே, அடி மானாமதுரையில், கடவீதி, முத்துமணி, மணக்கும் சந்தனமே, பட்டு பாவாடை கட்டி, வெச்ச கூறி, குத்து விளக்காக, சின்ன கிளி வண்ண கிளி, வண்டிக்காரன் சொந்த, ராசாத்தி ராசாத்தி, தந்தானே தாமரை, காலை நேர பூங்குயில், செந்தூர பாண்டிக்கு, பூவான ஏட்டத்தொட்டு, மனச மடிச்சி நீதான், மருமகளே, தென்றலுக்கு தாய், ராசி தான் கை, சோறு கொண்டு, காட்டுறேன் காட்டுறேன்" போன்ற பல பாடல்கள். 

டி.ராஜேந்தர் இசையில் "வாசமில்லா மலரிது, வசந்தம் பாடி வர, இந்திர லோகத்து சுந்தரி, தாலாட்டி படித்தவளே, பகலென்றும் இரவென்றும், தினம் தினம் உன், தங்க நிலவே உன்னை, சந்தமாமா இந்த, இது குழந்தை பாடும், அட யாரோ பின்பாட்டு, மூங்கிலில் பாட்டிசைக்கும், தோள் மீது தாலாட்ட, இது ராத்திரி நேரம், அழகினில் விளைந்தது" போன்ற பல பாடல்கள்.

மோகனுக்கு "கூட்டத்திலே கோவில் புறா, இளைய நிலா பொழிகிறதே, தோகை இளமயில், மன்றம் வந்த, நிலாவே வா, விழியிலே மணி, நிலவு தூங்கும், வானுயர்ந்த சோலையிலே, நான் பாடும், கவிதை பாடு குயிலே, தேனே தென்பாண்டி, தில் தில் மனதில், இசை மேடையில், தீர்த்தகரை ஓரத்திலே, நீல குயிலே உன்னோடு, யார் வீட்டில் ரோஜா, பாட்டு தலைவன், லவ் தான், பருவமே புதிய பாடல், ஹே ஆத்தா ஆத்தோரமா, மணியோசை கேட்டு, தென்பாண்டி தமிழே, வைகரையில் வைகை, பனிவிழும் இரவு, மலையோரம் வீசும், வா வெண்ணிலா, சங்கீத மேகம், இதயம் ஒரு கோவில், தேடும் கண் பார்வை, I Want To Be A Big Man" போன்ற பல பாடல்கள்.

ராமராஜனுக்கு "மாங்குயிலே பூங்குயிலே, கலைவாணியோ ராணியோ, ஆத்து மேட்டு தோப்புக்குள்ள, வாசலிலே பூசணி பூ, தானா வந்த சந்தனமே" போன்ற பல பாடல்கள்.

விஜய்க்கு "ஒரு கடிதம் எழுதினேன், அஞ்சாம் நம்பர், மணிமேகலையே மணி, என்ன அழகு, ஒரு நாள் ஒரு கனவு, பச்ச கொடி, பாரதிக்கு கண்ணம்மா, அழகூரில் பூத்தவளே, கண்களா மின்னலா, நில்லடி என்றது, சந்தோசம் சந்தோசம், ஓ தென்றலே, உன்னை நினைத்து, ஜீவன் என் ஜீவன், உடலும் இந்த உயிரும்" போன்ற பல பாடல்கள்.

அஜித்துக்கு "அடி சோக்கு சுந்தரி, தாஜ்மஹால் தேவையில்லை, கனவே தானா, சத்தம் இல்லாத, புத்தம் புது மலரே, சிக்கி முக்கி உய்யால, உன்னை பார்த்த, சிவப்பு லோலாக்கு, நலம் நலமறிய ஆவல், காற்றில் ஒரு வார்த்தை, காதல் என்ன கண்ணாமூச்சி, வத்திக்குச்சி பத்திக்காதுடா, ஆடியில காத்தடிச்சா, ரெட் ரெட், மேகங்கள் என்னை, திலோத்தமா, சோ லாரே" போன்ற பல பாடல்கள்.

மேலும் “திருமகள் தேடி வந்தால், மதுவை எடுத்து கொஞ்சம், மல்லிகை பூ வாங்கி, வருவாயா வேல்முருகா, மானூத்து மந்தையில, மழை தருமோ என் மேகம், பொன்னாரம் பூவாரம், ஒரு பாடலை, நான் பேச வந்தேன், இமயம் கண்டேன், சின்ன புறா ஒன்று, எனக்கொரு காதலி, நான் உன்ன நெனச்சேன், மார்கழி பனியில், என் கல்யாண வைபோகம், உள்ளங்கள் பலவிதம், ஆரம்ப காலத்தில், சித்தர் கூட, காதலுக்கு கண்கள், அரைச்ச சந்தனம், அம்மாடியோ சித்தப்பா, வாடாத ரோசாப்பூ, காதலிக்க 90 நாள், சாமி கிட்ட சொல்ல, ஆஞ்சநேயா அனுமந்தையா, என் இடையிலும், தேவன் வேதமும், குளிரடிக்குதே, கீதா ஒரு நாள், ஓராயிரம் கற்பனை, ரோஜா ஒன்று முத்தம், ஆயர்பாடி மாளிகையில், ஓம் நமசிவாய, இயேசு நாமம், அழகுத் திருமுகம், அல்லாஹ்வின் பெயரை சொல்லி, மத்தாளம் கொட்டுதடி, கொட்டுக்கிளி கொட்டு, ஆயிரம் தாமரை, ஒரு நாயகன், தண்ணி குடம் எடுத்து, நடந்தால் இரண்டடி, நீல குயிலே நீல, மாணிக்க வீணையின் ராகம், கேளடி கண்மணி, முத்து சிரித்தது, வெள்ளி மலரே, பாத கொலுசு, என்னவென்று சொல்வதம்மா, கீதம் சங்கீதம், என் கண்ணுக்கொரு, குயில புடிச்சி, வனக்குயிலே, எந்தன் வானின், சங்கீதம் ஜாதி, கல்யாண மாலை, நலம் வாழ எந்நாளும், மனசுக்குள் ஒரு புயல், ரசிகா ரசிகா, பொங்கியதே காதல், தேன் மழையிலே, ஏதோ ஒரு நதியில், வாடியம்மா பொன் மகளே, வலை விரிக்கிறேன், தேன் பூவே பூவே வா, நான் பிறந்தது தனியா, மஞ்ச தாலி கட்டி, காதலிக்கும் பெண்ணின், கண்ணா என் சேலைக்குள்ள, ஏழேழு ஜென்ம பந்தம், ஏய் எர்ரானி குரதானி, ரோஜாவை தாலாட்டும், பெண் ஒருத்தி, ஓ போடு, மின்னலே நீ, துள்ளி திரிந்ததொரு காலம், ஓ வசந்த ராஜா, நான் போகிறேன், அய்யயோ நெஞ்சு, நாடோடி பாட்டு பாட, மண்ணில் இந்த காதலின்றி, வான் நிலா, வெண்ணிலவே வெண்ணிலவே, காதல் கவிதைகள், தங்க நிலவே உன்னை, வெள்ளி நிலவே, தங்க நிலவுக்குள், கண்ணுக்குள் நூறு நிலவு, ஒட்டகத்தை கட்டிக்கோ, காதலெனும் தேர்வெழுதி, வண்ணம் கொண்ட, சந்திரனே சூரியனே, ஒரு குங்கும செங்கமலம், முத்து நகையே முழு நிலவே, வா வா எந்தன் நிலவே, ஒரு வட்ட நிலவு, தேவதை இளம் தேவி, பொட்டு வச்ச கிளியே, அந்தி நேர தென்றல், வாழும் வரை போராடு, அஞ்சலி அஞ்சலி, யம்மா யம்மா, என் காதல் தீ, ஓ பட்டர்பிளை, தங்க தாமரை, போவோமா ஊர்கோலம், சித்தகத்தி பூக்களே, கற்பூர பொம்மை, மெட்டு போடு, பெண்ணல்ல பெண்ணல்ல, ஓடக்கார மாரிமுத்து, பச்சைமலை பூவு, என் காதலே என் காதலே, நிலவொன்று கண்டேன், குளிச்சா குத்தாலம், ஒரு பாட்டாலே சொல்லி, முன் பனியா, அன்ப சுமந்து, நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு, என்னை தொட்டு அள்ளிக்கொண்ட, இதயமே இதயமே, என் வானம் நீ தானா, எந்த பெண்ணிலும் இல்லாத, காதல் ரோஜாவே, மடை திறந்து, மலரே மௌனமா, இது ஒரு பொன் மாலை, சிறுபொன்மணி அசையும்" போன்ற பல பாடல்கள்.

1 comment:

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...