Chocks: திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பு

Sunday, October 4, 2020

திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பு

திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பு

குறிப்பு 1 = இந்த சுருக்கமான கட்டுரை முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, தலைப்பில் இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

குறிப்பு 2 = தமிழறிஞர்கள் கூற்றுப்படி, பறப்பவற்றின் இளமை எனப்படும் "பார்ப்பு" என்ற சொல்லின் அடிப்படையில், பார்ப்பனர் என்பது "வேத விற்பன்னர், ஜோதிடம் சொல்பவர், குறி பார்ப்பவர்" எனப்படும். பார்ப்பனர் என்பது வசைச்சொல் அல்ல, அது அவர்கள் "பார்க்கும்" தொழிலை குறிப்பதாகும். இக்கட்டுரையில், பார்ப்பனர், பிராமணர், ஆரியர் ஆகிய சொற்கள் ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், "ஐயர், ஐயங்கார், நம்பூதிரி, பாண்டே, பரத்வாஜ், தேஷ்முக், குல்கர்னி, தேசாய், கவுல், திரிவேதி, சதுர்வேதி, அக்னிஹோத்ரி, முகர்ஜி, சட்டர்ஜி, ஆச்சார்யா, கோஸ்வாமி, பட், சர்மா, சாஸ்திரி, திவாரி" ஆகியவை பிராமண சாதியின் பொதுவான பெயர்கள் ஆகும்.
பொருளடக்கம்
  1. முகவுரை
  2. மனித வேர்கள்
  3. குமரிக்கண்டம்
  4. சங்க காலம் 
  5. திராவிட நிலம்
  6. திராவிட தொழில் நிலை 
  7. திராவிட சமுதாயம்
  8. திராவிட வழிபாடு
  9. ஆரிய நுழைவு
  10. ஆரிய அரசியல் 
  11. ஆரிய கோட்பாடுகள்
  12. ஆரிய மத தத்துவங்கள்
  13. அறம், பொருள், இன்பம்
  14. பண்டாரமும் பரதேசியும்
  15. இடங்கையும் வலங்கையும் 
  16. ஐயனாரும் ஐயப்பனும்
  17. சைவம் - வைணவம் கோட்பாடுகள்
  18. சைவம் - வைணவம் பிரிவினை
  19. களப்பிரர்களின் ஆட்சி
  20. பேரரசுகளின் ஆதரவில் ஆரியர்கள்
  21. பக்தி இயக்கம்
  22. உருவாக்கப்பட்ட இந்து மதம்
  23. இந்து என்ற சொல்
  24. சித்தர்கள் மரபு
  25. வள்ளலாரும் அய்யா வைகுண்டரும்
  26. ஆரியமும் திராவிடமும் 
  27. நவீன கால ஆரியம்
  28. நவீன கால திராவிடம்
  29. முடிவுரை
  30. விவரணைகள்
முகவுரை

கடந்த கால வரலாற்றை பகுத்தறிவு பார்வையோடு அணுகும் நோக்கில் “திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பு” என்ற கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கத்தியின்றி ரத்தமின்றி ஒரு படையெடுப்பை ஆரியர்கள் நடத்தினர், அது தான் பண்பாட்டு படையெடுப்பு. மனிதன் பரிணாமம் அடைந்த காலகட்டம் முதலாக இந்திய நிலப்பரப்பில் ஆரியர்கள் ஊடுருவி இங்கிருந்த நகர நாகரிகத்தை எப்படி மாற்றி அமைத்தார்கள், பார்ப்பனிய நலனுக்கு ஏற்றபடி இந்த மண்ணின் மைந்தர்களான திராவிடர்களை - சாதிகளாக, இனங்களாக எப்படி பிரித்தார்கள் என்பதை வரலாற்று நோக்கில் யாவரும் எளிமையாக அறிந்து கொள்ளும் வகையில் எழுத முற்பட்டுள்ளேன். சுருக்கமாகச் சொன்னால், இந்த கட்டுரையானது சமத்துவத்தை முன்னிறுத்திய திராவிடர்கள் மற்றும் சமத்துவமின்மையை முன்வைத்த ஆரியர்கள் பற்றிய வரலாறு ஆகும்.
மனித வேர்கள்

சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பெரு வெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory) மூலம் அண்டம் (Universe) உருவானது. இதைத் தொடர்ந்து, பூமி, சந்திரன், சூரியன், கோள்கள், நட்சத்திரங்கள், துகள்கள் உள்ளிட்ட வானப் பொருட்கள் பல பில்லியன் ஆண்டுகளாக உருவாகின. அண்ட மற்றும் கிரக வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களுக்கு பிறகு உயிரின் தோற்றம் ஏற்பட்டது. சுமார் 3.5 முதல் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செல் உயிரினங்கள் தோன்றின. மேலும், விலங்குகள், பூச்சிகள், தாவரங்கள், கொடிகள் மற்றும் மனிதர்கள் போன்ற பலதரப்பட்ட உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்து வந்தது. மனிதர்கள், ஒரு இனமாக, சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றினர்.

குரங்குகளும் மனிதர்களும் பொதுவான மூதாதையரில் (Common Ancestor) இருந்து பரிணமித்தார்கள் என்ற டார்வினின் படிவளர்ச்சிக் கொள்கை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் கோட்பாடு ஆகும். இதற்கிடையில், திக்தாலிக் (Tiktaalik) மீன்கள் கடலில் இருந்து கரைக்கு வந்து மனிதர்களாக படிமலர்ச்சி அடைந்ததாக கருதும் ஆராய்ச்சியாளர்களும் உண்டு.

அறிவியல் தரவுகளின்படி, 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் பரிணமித்த ஹோமோ பேரினத்தின் (Homo Genus) இறுதி வடிவமான ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens) இனம் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் பரிணமித்தது. இவ்வகையில், ஹோமோ சேப்பியன்ஸ் என அறியப்படும் மனித இனத்திற்கு ஆப்பிரிக்கா தான் பூர்வகுடி. ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம், சுற்றுச்சூழல் காரணிகளால் வெவ்வேறு காலங்களில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து, நமது இனங்களின் உலகளாவிய பன்முகத்தன்மைக்கு பங்களித்தனர்.
வெவ்வேறு தேசங்களில் எகிப்தியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள், திராவிடர்கள், ஆரியர்கள் என்று பல்வேறு இனங்கள் பரிணமித்தது. அரசியல் காரணங்களுக்காக ஆரியர்கள் மறுத்தாலும், சிந்து சமவெளி நாகரிகம் மூலம் இந்திய மண்ணை செதுக்கியவர்கள் திராவிடர்கள் என்றும் பல நூற்றாண்டுகள் கழித்து தான் ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்றும் அறிவியல் தரவுகள் சொல்கிறது. ஆரியர்களின் நுழைவுக்கு பிறகு, சுமார் 2000 ஆண்டுகளாக திராவிட பண்பாட்டிற்கு  எதிராக எண்ணற்ற மாற்றங்களும், திணிப்புகளும் நிகழ்ந்துள்ளன.

குமரிக்கண்டம் 
சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் நூலில் இருந்து மேற்கண்ட குறிப்பை அடிப்படையாக வைத்து "பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கும் கொண்ட குமரிக்கண்டத்தில் மனித இனம் தோன்றியது என்றும், அம்மனிதர்கள் பேசிய மொழி ஆதி தமிழ் என்றும், பண்டைய கால தமிழ் நாகரிகம் கோலோச்சிய குமரிக்கண்டம் கடற்கோளால் அழிந்தது என்றும், குமரிக்கண்டத்தை விட்டு வெளியேறிய தமிழ் மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு சென்று வெவ்வேறு நாகரிகங்களை தோற்றுவித்தனர் என்றும்" தமிழ் தேசியர்கள் ஆராய்ச்சி தரவுகள் இல்லாமல் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.

குமரிக்கண்டம் என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள "லெமூரியா" என்றும் அழைக்கப்படும் ஒரு கற்பனையான "இழந்த நிலத்தின்" பெயராகும். ஆனால், நவீன அறிவியலின் வளர்ச்சியால், கண்டத்தட்டு இயக்கவியல் (Plate Tectonics) கோட்பாட்டின் அடிப்படையில், குமரிக்கண்டம் பற்றிய கருத்துக்கள் இன்று வழக்கற்றுப் போய்விட்டன.

சங்க காலம்

முச்சங்கமான முதல் சங்கத்தில் அகத்தியரின் அகத்தியம், இடை சங்கத்தில் தொல்காப்பியரின் தொல்காப்பியம், கடை சங்கத்தில் கபிலரின் நூல்கள் மற்றும் பல்வேறு நூல்கள் தமிழின் தொன்மையான சங்க கால நூல்களாக அறியப்படுகின்றன. மிகப் பழமையான தமிழ் இலக்கண நூலாக தொல்காப்பியம் தான் உள்ளது. தொல்காப்பியத்துக்கு முன்னர் எழுதப்பட்ட நூல்கள் கடற்கோளால் அழிந்து போயிற்று என்று இலக்கிய குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது. தொல்காப்பியத்துக்கு மூலநூலாக கருதப்படுகின்ற அகத்தியம் (பேரகத்தியம் என்றும் கூறுவர்) என்னும் இலக்கண நூல் கிடைக்கவில்லை. ஆனால் ஆரியர்கள் அகத்தியம் நூலை வட இந்திய அகஸ்தியர் முனிவருடன் இணைத்து "கடலை குடித்தவர், காவேரியை உண்டாக்கியவர்" என்று திரித்து விட்டனர். சங்க கால தொடக்கத்தில் "இறை" என்பது "இயற்கை" வழிபாடாக இருந்தது. பின்னர் கடைச்சங்க காலகட்டத்தில் வணிக தொடர்பு காரணமாக வடமொழி மற்றும் வடநெறி தமிழ் நிலத்தில் புகுந்ததன் மூலம் ஆரிய கலப்பு படிப்படியாக ஆரம்பமாயிற்று. மேலும், ஆண்களுக்கு அடிமையாக பெண்கள் இருக்க வேண்டும் என்று ஆரியர்கள் வலியுறுத்தி வந்த போது திராவிட மண்ணில் 1446 சங்கப் புலவர்களில் 32 பெண் புலவர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட நிலம்
இடை சங்க தொல்காப்பியம் நூலில், தொல்காப்பியர் இயற்கையின் அமைப்பை அடிப்படையாக கொண்டு காடுகள் நிறைந்த பகுதி, மலைகள் மிகுந்த பகுதி, வயல்கள் நிரம்பிய பகுதி, கடல் ஓரப் பகுதி, வறட்சியான பகுதி என்று நிலங்களைக் ஐந்து திணைகளாக குறித்தார். இதில், நான்கு நிலங்களின் இயல்பு திரிந்தால் (வறட்சியான பகுதி) அது பாலை திணை எனப்படும். மலையில் காடும் உள்ளடங்கி இருப்பதுண்டு என்ற வகையில் முல்லை நில மக்களும் குறிஞ்சி நில மக்களும் நெருக்கமான குடிகளாவர். பின்னர் இவர்களில் சிலர் குடிபெயர்ந்து மருதம் மற்றும் நெய்தல் நிலங்களை கண்டார்கள்.

முல்லை நில தலைவனாக மாயோன் (திருமால்), குறிஞ்சி நில தலைவனாக சேயோன் (முருகன்), மருதம் நில தலைவனாக வேந்தன் (அரசர்கள்), நெய்தல் நில தலைவனாக வருணன் (கடற்காற்று), பாலை நில தலைவியாக பாலை முதுமகள் (கொற்றவை) ஆகியவை குறிக்கப்படுகிறது. வேந்தன் மற்றும் வருணன் நிலைத்த அடையாளங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே ஆதி வாழ்வை குறிப்பது முல்லை, குறிஞ்சி, பாலை பகுதி மற்றும் நாகரிக வளர்ச்சியை குறிப்பது மருதம், நெய்தல் பகுதி. மேலும் திருமால், முருகன், கொற்றவை தமிழர்களின் வணக்க மரபுக்கு உரியவை.

திராவிட தொழில் நிலை 

சங்க காலத்தில் மக்கள் தங்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். சங்க காலத்தில் நிலவிய பல்வேறு தொழில்களை பின்னாட்களில் ஆரியர்கள் தங்களின் வேத வர்ணங்களை கொண்டு சாதி பிரிவுகளாக மாற்றினர். ஆரியர்கள் இங்கு நிலைத்த பிறகு, அவர்கள் பூக்கள் தொடங்கி பறவைகள் வரை அனைத்தையும் சாதிகள் ஆகப் பிரித்தனர்.
மேலும், தொல்காப்பியத்தின் குறிப்புகளின்படி, பண்டைய சமுதாயத்தில், "அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்" தொழில் நிலைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தணர் என்றால் பார்ப்பனர் என்றும் சங்க காலத்தில் சாதி பிரிவுகள் இருந்தது என்றும் பார்ப்பனர்கள் பொய் பிரச்சாரம் செய்வது உண்டு. ஆனால் ஆய்வறிஞர்கள் கூற்றுப்படி, அந்தணர் என்றால் அறத்தின்படி வாழ்பவர் என்று பொருள். சங்க இலக்கிய குறிப்புகளின் அடிப்படையில் சங்க காலத்தில் எவ்விதமான சாதி பாகுபாடும் இருந்ததில்லை. எடுத்துக்காட்டாக, அழுந்தூர் வேளிர் மகளை இளஞ்சேட்சென்னி சோழ அரசர் மணந்தார், நாங்கூர் வேளிர் மகளை கரிகாலன் சோழ அரசர் மணந்தார் என்ற வகையில் சங்க காலத்தில் மேல் சாதி கீழ் சாதி என்ற ஆரியம் வகுத்த வர்ண பாகுபாடு இருந்ததில்லை என தெளிவாகிறது. சங்க கால வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப வெவ்வேறு தொழில்களை பலர் செய்து வந்தாலும் ஒரு தொழில் செய்வோர் இன்னொரு தொழிலில் ஈடுபடக்கூடாது என்ற சட்டம் இருக்கவில்லை.

*அந்தணர் - அறிவும் அனுபவமும் கொண்டு மக்களுக்குத் சமுதாயத் தொண்டாற்றுதல்.

*அரசர் - நாட்டையும் மக்களையும் காக்கும் பொறுப்பை மேற்கொள்ளுதல்.

*வணிகர் - நெல், சோளம், பயறு வகைகளை வணிகம் செய்தல்.

*வேளாளர் - வேளாண்மை தொழில் செய்தல்.

திராவிட சமுதாயம்
பழமையான பொதுவுடைமை சமூகத்தில் அனைவரும் சமமாக வாழ்ந்து, கிடைத்ததை பகிர்ந்து கொண்டனர். வேட்டையாடுதல், வரைதல், உண்ணுதல், உறங்குதல் போன்ற வேலைகளில் செலவழித்த நேரம் போக அவர்கள் மீதமுள்ள நேரம் குகைக்குள் தங்கினர். பழமையான பொதுவுடைமை சமூகத்தில் தெய்வ வழிபாடு பிறக்கவில்லை ஆனால் இயற்கை மீது நேசமும் அதே சமயம் அச்சமும் உலவியது குறிப்பிடத்தக்கது.

மண்பாண்டம் போன்ற கைத்தொழில் உருவானவுடன் குறு, சிறு மற்றும் நடுத்தர குழு ஆட்சிக்கு வித்திட்டு அடிமை முறை தோன்றியது. இவ்வமைப்பில் தனி உடைமைகள் முக்கியத்துவம் பெற்றன. "தான்" என்ற அகங்காரம், ஆட்சி முறைக்கு ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர குழு ஆட்சியில் சம்பளம் (சம்பா[அரிசி] + அளம்[உப்பு]) முறை தோன்றியது. கடுமையான அடிமை முறை ஆட்சியிலிருந்து விடுபட மக்கள் இயற்கை மீதான நம்பிக்கையை தாண்டி சிறு தெய்வ வழிபாடுகளை முன்னெடுத்தனர்.

நாளடைவில் வேளாண்மை வளர்ச்சி அடைய குறு, சிறு மற்றும் நடுத்தர குழு ஆட்சி பேரரசு ஆட்சிக்கு இட்டுச்சென்றது. ஆரியர்களின் வைதீக பிரச்சாரத்திற்கு பிறகு சிறு தெய்வ வழிபாடு கீழிறங்கி பெருந்தெய்வ வழிபாடு மேலோங்கியது. பேரரசர்கள் உத்தரவின் பேரில் ஆரியர்களுக்கு தனி சாப்பாடுகள், கோவில்கள், மடங்கள், தேவதாசிகள், நிலங்கள், மனைகள், அதிகாரங்கள், பரிசுகள், வேலையாட்கள் எல்லாம் செய்து தரப்பட்டன. அரசர்களிடம் தானமாக இடங்களை பெற்று வசித்து வந்த ஆரியர்களின் இருப்பிடம் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பெருந்தெய்வக் கோவில்களில் கருவறைக்குள் பேரரசர்கள் நுழைவது கூட தீட்டு எனக்கூறி அனைவரையும் விட தாங்களே உயர்ந்தவர்கள் என்று ஆரியர்கள் தங்களை நிலை நிறுத்தி கொண்டனர்.

பேரரசு ஆட்சியின் இறுதி வடிவமாக இன்று ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகாரம் கொண்ட முதலாளித்துவம் வளர்ந்தது. முதலாளித்துவ ஆட்சியில் மதங்கள் நிறுவனமயமானது. முதலாளித்துவ கொள்கைப்படி கூலி வழங்கப்படாத தொழிலாளியின் உழைப்பு முதலாளிக்கு கூடுதல் லாபமானது.
திராவிட வழிபாடு
உணவு தேடிய சமூகமாக இருந்த போது இறை என்பது இயற்கை / நடுகல் வழிபாட்டையே குறித்தது. வழிபடு என்றால் வணங்குதல் அல்லது பின்பற்றுதல். வழிபடு என்பதிலிருந்து வழிபாடு என்ற சொல் வந்தது. உலகம் முழுவதும் மனிதன் இயற்கையை கண்டு அஞ்சியதால் இயற்கையான காற்று, நீர், நிலம், நெருப்பு மற்றும் வெளியை (ஆகாயம்) வணங்க தொடங்கினான். பிறகு தொடர்ச்சியாக மர வழிபாடு உருவானது. இதன் வெளிப்பாடாக இன்றும் கோவில்களில் தலவிருட்ச மரம் இருப்பதை காணலாம். இறந்தவர்களின் நினைவாக நடுகல் எனப்படும் நினைவுக்கல் எடுக்கப்பட்டு படையலுடன் வழிபாடு செய்யப்பட்டது. சங்க காலம் தொட்டே இறந்தவர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவு தேடிய சமுதாயத்தில், வேல் ஆயுதத்துடன் உணவு தேடி காட்டுக்கு சென்ற வேடன் உணவு உற்பத்தி செய்யும் சமுதாயத்தின் வேலனாக மாறினான். வேல் ஆயுதம் கொண்ட வேலன் தான் முருகன். பெண் இனத்தை குறிக்க கொற்றவை தாய் தெய்வமாகவும்,  தாய்க்கு மகனாக, ஆண் இனத்தை குறிக்க முருகன் ஆண் தெய்வமாகவும் மாறினர். தொடர்ச்சியாக வேலனுக்கு வேடர் குலப் பெண் வள்ளி மனைவியானாள், பெண் தெய்வம் கொற்றவை அம்மனாகி சிவன் ஆண் துணையானான். இப்படி உணவு உற்பத்தி செய்யும் சமூகத்தில் தனி குழுக்கள் ஆட்சி புரிய தொடங்கிய போது சிறு தெய்வ வழிபாடாகிய நாட்டார் தெய்வ வழிபாடு தழைத்தோங்கியது. பூசாரிகள் படையலிடுதல், வேலன் வெறியாடுதல், குரவைக் கூத்தாடுதல் போன்ற வழக்கங்கள் தோன்றின. வேலன் உருவாக்கத்தின் வெளிப்பாடு தான் இன்று வரை தமிழ்நாட்டில் முருகன் வழிபாடு முக்கிய இடம் வகிக்க காரணமாகும்.

சங்க கால இறுதியில் மற்றும் களப்பிரர் கால தொடக்கத்தில் பௌத்தம், ஜைனம், ஆரியம் சமயங்கள் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறந்தது. களப்பிரர் உள்ளிட்ட சிலர் ஆரியத்தை எதிர்த்து வந்திருந்தாலும் நாளடைவில் பேரரசு ஆட்சிக் காலத்தில் ஆரியர்களின் வலுவான வைதீக அரசியல் பிரச்சாரத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் சமய சூழல் மாறி சிறு தெய்வ வழிபாடுகள் குறைந்து பெருந்ததெய்வ வழிபாடுகள் பெருகியது. முதலில் குழுக்களின் நடுகல் வழிபாடு, பின்னர் சமூகங்களின் சிறுதெய்வ வழிபாடு, இறுதியில் அனைவரின் பெருந்தெய்வ வழிபாடு என்று தெய்வ வழிபாடுகள் மாறி மாறி பயணித்து வந்துள்ளது.
முன்னோர்களை வழிபட உருவான நடுகல் நாளடைவில் சிறு தெய்வ வழிபாடாக மாறியது. சிறு தெய்வங்கள் காவல் தெய்வங்கள் ஆகும். இன்றும் மக்களுக்கு குலதெய்வம் என்பது சிறு தெய்வங்களே (கருப்பர், முனியாண்டி, மாரியம்மன் மற்றும் பல) என்பது குறிப்பிடத்தக்கது. யாருக்கும் வணிகரீதியில் கட்டப்பட்ட பெருங்கோவில்கள் குலதெய்வமாக இருப்பதில்லை. அரிசியைப் பக்குவமாகச் சோறாக்குவது (சமை - சமைத்தல்) சமையல் என்றானது போல மனிதனை இறை சார்ந்து நிலைப்படுத்துவது (சமை - சமையம்) சமயம் என்றானது. கடவுள் (கட + உள்) என்றால் உள்ளத்தைக் கடந்தவனாகிய மறை பொருள். சமூகத்தில் தனிமனிதனின் சாதி கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது என்று ஆரிய மதம் கூறுகிறது. அதே சமயம் பௌத்தம், ஜைனம் மற்றும் சீக்கியம் ஆகியவை ஆரிய மதத்தில் வேரூன்றியிருக்கும் ஜாதிப் பாகுபாட்டை நிராகரித்து "அனைவரும் சமம்" என்ற கொள்கையை வலியுறுத்துகின்றன.
ஆரிய நுழைவு

ரஷ்ய காக்கேசியா (Caucasus) மலை பகுதிகளை சார்ந்த மக்களில் ஒரு பிரிவினர் ஈரானுக்கும் இன்னொரு பிரிவினர் ஜெர்மனிக்கும் இடம் பெயர்ந்தார்கள். ஈரானில் இருந்து இந்தியா சென்றவர்கள் "பார்ப்பன ஆரியர்கள்" என்று அழைக்கப்பட்டனர், மற்றும் ஜெர்மனிக்கு சென்றவர்கள் "நோர்டிக் ஆரியர்கள்" என்று அழைக்கப்பட்டனர். ஆரிய வம்சாவழியினர், மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி (Steppe) புல்வெளி பகுதியிலிருந்து பல்வேறு துணைக்கிளைகளாக பிரிந்து சென்றனர்.

ஆரியர்கள் குதிரைகளை தங்களின் செல்வமாகக் கருதினார்கள். அந்த குதிரைகள் மேயும் போது, புற்களை வேருடன் சேர்த்து உண்டதால், மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், மலைக்குறைவான ஸ்டெப்பி பகுதிகளில் புற்கள் மீண்டும் வளர்வதற்கு நிறைய ஆண்டுகள் ஆகின. இதனால், குதிரைகளின் மேய்ச்சலும் ஆரியர்களின் இடப்பெயர்வுக்கும் ஒரு காரணமாக அமைந்தது.

ஆரியர்கள், ரஷ்யாவில் இருந்து புறப்பட்டு சிரியா வழியில் ஈரான் சென்று சில காலம் தங்கிவிட்டு கைபர் - போலன் கணவாய் (Khyber - Bolan Pass) வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். ஆரியர்கள் இந்தியாவுக்குள் படையெடுத்து வந்து திராவிடர்களை அழித்ததாக சிலர் கதைப்பதுண்டு. ஆனால், உண்மை என்னவென்றால் செழிப்பாக இருந்த சிந்து சமவெளி மக்களை அண்டி பிழைக்க வந்த நாடோடி கூட்டமே ஆரியர்கள். நாடோடிகளான ஆரியர்கள் நுழைந்த போது, சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சிக்கு முன்னரான கட்டத்தை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு உட்பட்ட சிந்து நதி பகுதியில் தழைத்தோங்கிய சிந்து சமவெளி நாகரிகம் காலநிலை (Climate) மற்றும் வானிலை (Weather) மாற்றங்களினால் வறண்டது. அதுவே சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சிக்குக் காரணம் என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு, ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிட மக்கள், சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி மற்றும் வேத விற்பன்னர்களான ஆரியர்களின் வருகைக்குப் பிறகு, தெற்கே இடம்பெயர்ந்தனர்.

ஆரிய அரசியல்

ஈரானில் மிட்டானி (Mitanni) பகுதியில் ஆரியர்கள் வசித்த போது பாரசீக மொழி மற்றும் இறை செய்திகளை கற்றறிந்து இந்தியா வந்த பிறகு அதன் பின்னணியில் ரிக் வேதத்தை இயற்றினர். ஆரியர்களின் வேத நூல்களில் சரதுசத்தின் (Zoroastrianism) நிறுவனர் சரத்துஸ்தர் எழுதிய அவெஸ்டா (Avesta) என்ற மத நூலின் பல அம்சங்கள் காணப்படுகின்றன. இந்த வழியில், ஆரியர்கள் தங்களை தேவர்களாகவும் திராவிடர்களை அசுரர்களாகவும் கட்டமைத்தனர். தங்கள் சொந்த பலன்களை அறுவடை செய்ய தங்கள் சொந்த பாணியிலான கடவுள்களை பிரச்சாரம் செய்தனர். எடுத்துக்காட்டாக, வேத நெறியின் வழியில் திருமாலை விஷ்ணு என்றும், முருகனை சுப்ரமண்யன் / ஸ்கந்தன் / கார்த்திகேயா என்றும், வேந்தனை இந்திரன் என்றும், வருணனை மித்ரா என்றும், கொற்றவையை துர்கா / பார்வதி என்றும், பார்வதியின் மகன் சுப்ரமண்யன் (முருகன்) என்றும், சுப்பிரமண்யனின் அண்ணன் கணேஷ் (விநாயகர்) என்றும் ஆரியர்கள் ஒருங்கிணைத்தனர். மேலும், உலகில் உள்ள பல சமயங்கள் "பிறவாப் பெருநிலை" கோட்பாடுகளை உருவாக்கிய நிலையில், ஆரிய இந்து மதம் சாதி, பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் அடிமைத்தனம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்ட ஒரு அருவருப்பான மதமாக நிறுவப்பட்டது.

சிந்து சமவெளி மக்களை நோக்கி வந்த ஆரியர்கள் இங்கு நிலவிய இணக்கமான சமூக பண்பாட்டை சீர்குலைத்தனர். எடுத்துக்காட்டாக, ஓரிடத்தில் நிலையாக தங்காமல் அலைந்து திரிந்த நாடோடிகளிடம் இறந்தவரை எரிக்கும் வழக்கமும், ஓரிடத்தில் நிலையாக குடியிருக்கும் மக்களிடம் இறந்தவரை புதைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. ஆரியர்கள் எரிக்கும் வழக்கமும், திராவிடர்கள் புதைக்கும் வழக்கமும் உடையவர்கள். ஆனால், ஆரிய பண்பாட்டு படையெடுப்பின் காரணமாக திராவிடர்களும் எரிக்கும் வழக்கத்தை பின்பற்றத் தொடங்கினர். மேலும், ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்று கூறி மற்றவர்களை அடக்க முயன்றனர். வேதகால ஆரியர்களுக்கு பிடித்தமான பானமாக சோம பானமும் பிடித்தமான உணவாக இறைச்சி உணவும் இருந்தது. ஆனால், மற்ற குழுக்களை விட தங்களை உயர்ந்தவர்கள் என்று வேறுபடுத்திக் கொள்ள, ஆரியர்கள் இறைச்சி உணவையும் சோம பானம் அருந்துவதையும் தவிர்த்தனர்.

சிந்து சமவெளி நாகரிகத்தில் உருவ வழிபாட்டின் தொல்பொருள் சான்றுகள் இல்லாத நிலையில், உருவ வழிபாடு என்பதே பிற்கால பேரரசுகளின் காலத்தில் ஆரியர்களின் சூழ்ச்சியுடன் தான் தொடங்கியது. சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்த காலகட்டத்தில் ஆரியர்கள் வட இந்தியர்களுடன் கலந்ததாகவும், தெற்கே சென்றவர்கள் கீழடி நாகரிகத்தை கட்டமைத்திருக்கலாம் என்றும் பரவலாக கருதப்படுகிறது. வருங்காலத்தில், தமிழ்நாட்டில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் சிந்து சமவெளியுடன் பண்பாட்டு தொடர்பை ஏற்படுத்தலாம். சிந்து சமவெளி விட்ட இடமும் கீழடி தொட்ட இடமும் ஒன்றாக இருக்கலாம்.

நவீன கால அரசியலில், திராவிடர்களிடம் இருந்து வேறுபடுத்திக் கொள்ள ஆரியர்கள் தங்களை ராமரின் பக்தர்களாக அடையாளப்படுத்தி கொண்டனர். பின்னர், ஒரு கட்டத்தில் இந்துத்துவா அரசியலை அறுவடை செய்து அரியணையை அடைவதற்காக ராமரை ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் அடையாளமாக முத்திரை குத்த ஆரியர்கள் முயன்றனர். அதற்காக, அயோத்தியில் உள்ள பாபர் மசூதி நிலம், எந்த தொல்பொருள் ஆதாரமும் இல்லாத, நம்பமுடியாத ராமாயண இதிகாசத்தின் அடிப்படையில் இந்துத்துவா மதத்தை பரப்புவதற்கான முயற்சியாக ஆரியர்களால் சர்ச்சைக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வடநாட்டு அரசியலை போல் ராமர் கோவில் விவகாரம் தென்னாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை, ஏனென்றால் வேர்கள் வேறு வேறு.

பழனி கோவிலில் நவபாஷாண முருகன் சிலையை செய்தவர் போகர் சித்தர். அவருக்கு உறுதுணையாக இருந்தவர் புலிப்பாணி சித்தர். அந்த பழனி கோவிலில் கருவறை பூஜைகளை செய்து வந்தது புலிப்பாணி வகையறாவை சேர்ந்த சைவ பண்டாரங்கள். நாயக்கர் ஆட்சியின் போது பார்ப்பனரான தளவாய் ராமப்பா அய்யன், பழனி கோவிலுக்கு வந்த போது, புலிப்பாணி பூசாரிகள் கையில் பிரசாதம் வாங்க கூடாது என்று எண்ணினார். அதையொட்டி, ஒரு சதித்திட்டம் தீட்டி தமிழ் பூசாரிகளை பழனி கோவிலில் இருந்து விரட்டிவிட்டு சமஸ்கிருத பூஜைகளை செய்ய ஏதுவாக பார்ப்பனர்களை கோவில் பணிக்கு அமர்த்தினார். இது ஒரு கட்டுக்கதை அல்ல, நடந்த கதை. இதற்கு, ஆதாரமாக அந்த கால செப்பு பட்டயங்கள் உள்ளது.

ஆரிய கோட்பாடுகள்

பண்படா மனிதர்களை, பண்பட்ட மனிதர்களாக மாற்ற சமயம் பயன்படுத்தப்பட்டது. இறுக்கமான சடங்கு, குடும்பம் மற்றும் வணிக மரபுகளுக்கு மக்களை அடிபணியச் செய்ய மதம் பயன்படுத்தப்பட்டது. பிற்கால திராவிடர்களின் இரு சமயமாக அறியப்படுவது சைவம் மற்றும் வைணவம் மட்டுமே. சிவனையும் முருகனையும் வழிபடுபவர்களை குறிக்க சைவமும் திருமாலை வழிபடுபவர்களை குறிக்க வைணவமும் பயன்படுத்தப்பட்டது. ஆரியர்களின் வருகைக்கு பின் சமய சூழலும் அரசியல் சூழலும் மாறியது. குறிப்பாக ஆரியர்களின் பிரச்சாரத்திற்கு பின் சமயம் என்பதே மதம் என்றாகி போனது.

பௌத்தம், ஜைனம் போன்ற சமயங்களில் கடைப்பிடிக்கப்பட்ட சில மரபுகளை அபகரித்துக் கொண்டும், வைதீகம் போற்றும் சாதிக்கொரு நீதி வகுத்த மனுதர்ம நூலை அடிப்படையாக கொண்டும் இந்து மதம் வளர்ந்தது. நாளடைவில் வைதீக அடிப்படையில் சில ஆரியர்கள் சிவ அர்ச்சர்கர்களாகவும் சைவ கோவில்களில் சிவனை ருத்ரன் என்றும் சில ஆரியர்கள் வைணவ அர்ச்சர்கர்களாகவும் வைணவ கோவில்களில் திருமாலை விஷ்ணு என்றும் போற்றினர்.
திராவிட மண்ணிற்கு சிறிதும் தொடர்பில்லாத வைதீகம் கூறும் வேத வேள்வியை, 4 வடமொழி வேதங்களை, பல்வேறு உபநிடங்களை, மனுதர்ம நூல் கூறும் 4 வர்ணங்களை, 18 புராணங்களை, 2 இதிகாசங்களை ஆரியர்கள் வலிந்து புகுத்தினர். 4 வேதங்கள் என்பது ரிக், யசுர், சாம, அதர்வண வேதம் ஆகும். ரிக் வேதத்தில் இந்திரனும் அக்னியும் முதன்மையாக போற்றப்பட்டுள்ளனர். வேத கால இறுதியில் இந்திரனின் நிலை கீழிறங்கி பல்வேறு கடவுள் வழிபாடுகள், வேள்விகள், கலைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

*ரிக் வேதம் = காற்று, நீர், நிலம், நெருப்பு மற்றும் வெளி ஆகிய இயற்கை கூறுகள் போற்றப்பட்டது.

*யசுர் வேதம் = வேள்விகள், சடங்கு, சம்பிரதாயம் முறைகள் உண்டாக்கப்பட்டது.

*சாம வேதம் = வேதங்கள் இசையுடன் பாடப்பட்டது.

*அதர்வண வேதம் = ஆரியர்களின் வாழ்க்கை, பிரார்த்தனை, மந்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

நாளடைவில் மக்கள் மத்தியில் இவ்வேதங்கள் செல்வாக்கை இழந்ததால் வேதத்தின் இறுதியில் வேதாந்தம் அல்லது உபநிடதங்கள் எழுதப்பட்டது. உபநிடதங்கள் "கேள்வி – பதில்" பாணியில் யோகம், ஞானம், ஆன்மா, தத்துவம் ஆகியவற்றை பற்றி பேசியது. மனுதர்ம நூல் (மனுஸ்மிருதி) என்பது பிறப்பு முதல் இறப்பு வரை மக்கள் பின்பற்ற வேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், சாத்திரங்கள், வர்ணங்கள், ஒழுக்கங்கள் பற்றி பேசுவதாகும். மேலும், அண்டம், இல்லறம், துறவறம், கர்மா, தர்மா, முத்தி ஆகியவற்றை பற்றியும் பேசியது. நவீன யுகத்திலும் இந்தியாவில் ஆண்கள் எப்படி வாழ்ந்தாலும் தப்பில்லை ஆனால் பெண்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனுதர்ம நூலின் வெளிப்பாடு தான். ஏனெனில் பெண்களுக்கு சம வாய்ப்பை மறுப்பதெற்கென்றே எழுதப்பட்டது மனுதர்ம நூல்.

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதங்களைப் படித்த பார்ப்பனர்கள் மட்டுமே வேதங்களை கற்பிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஸ்ருதி என்பது வாய்வழி பிரச்சாரம் (வேதங்கள்) என்றும், ஸ்மிருதி என்பது எழுத்துவழி பிரச்சாரம் (புராணங்கள் மற்றும் இதிகாசங்கள்) என்றும் அறியப்படுகிறது. ஸ்ரௌத (Srauta) பிராமணர்கள் ஸ்ருதியில் கவனம் செலுத்துகிறார்கள், அதே சமயம் ஸ்மார்த்த (Smarta) பிராமணர்கள் ஸ்மிருதியில் கவனம் செலுத்துகிறார்கள். இதற்கிடையில், வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் ஆகியவற்றை விட ஆரியர்களின் மத எழுச்சிக்கும் அரசியல் எழுச்சிக்கும் அதிகமாக பயன்பட்டது புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் தான். புராணங்களை இயற்றிய பிறகே "சொர்க்கம் – நரகம்" பிரச்சாரம் வளர்ந்து பக்தி என்பது கடவுள் வெறியாக மடை மாற்றப்பட்டது. ரிக் வேதத்தில் கொண்டாடப்பட்ட இந்திரன், புராணங்களில் குழந்தை கிருஷ்ணாவுக்கு சேவகன் ஆக்கப்பட்டான். ருத்ரன் வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு போற்றுதலுக்கு உரியதாக மாறியது.

வழிப்பறிக் கொள்ளையை விட்டுவிட்டு முனிவரான வால்மீகி எழுதிய ராமாயணம் இதிகாசத்தின் கதைக்களம் அயோத்தியில் ராமர் ஆட்சி புரிவதற்கு முன்னும் பின்னும் நடந்தாகும். ராமாயணத்தில் ராமர், சீதை, ராவணன், அனுமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன், வாலி, சுக்ரீவன் போன்ற பல கதாபாத்திரங்களை கொண்டது. இதில், சூர்யவன்ஷா குல சத்திரியரான ராமர், விஷ்ணுவின் 7வது அவதாரமாக பரப்பப்பட்டது.

முனிவர் வியாசர் எடுத்துரைக்க விநாயகர் எழுதியதாக கூறப்படும் மகாபாரதம் இதிகாசத்தின் கதைக்களம் அஸ்தினாபுரத்தின் ஆட்சி உரிமை குறித்து பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடைபெற்ற அதிகார சண்டையாகும். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் உறவினராக பஞ்சாயம் செய்வதே கிருஷ்ணனின் கதாபாத்திரம். இதில், யாதவர் (இடையர் - கோனார்) குல சத்திரியரான கிருஷ்ணனின் அறிவுரைகளே பகவத் கீதை நூலாகும். கிருஷ்ணன், விஷ்ணுவின் 8வது அவதாரமாக பரப்பப்பட்டது.

வட இந்தியாவில் முருகன், கார்த்திகேயன் என்ற பெயரில் பிரம்மச்சரியம் பூண்டவர் மற்றும் விநாயகர், கணேஷ் என்ற பெயரில் சித்தி புத்தி என இரு பெண்களை திருமணம் புரிந்தவர். ஆனால், தமிழ்நாட்டில் முருகன் வள்ளி தெய்வானை என இரு பெண்களை திருமணம் புரிந்தவர், விநாயகர் பிரம்மச்சரியம் பூண்டவர். மேலும் "முருகன் – வள்ளி" தான் ஆதி தமிழர்களின் வழிபாடு. ஆனால், வள்ளி என்ற குறத்திப் பெண்ணை பார்ப்பனர்கள் வணங்க விரும்பாததால், இந்திரனின் மகளாக்கப்பட்ட தெய்வானையை முருகன் மணம் முடித்ததாக கதைக்க நாளடைவில் அக்கதையே நிலைத்துவிட்டது.

ஆரிய மத தத்துவங்கள்

உபநிடதங்களின் அடிப்படையில் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்று மத தத்துவ நிலைகள் ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் கூற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டன. ஜீவாத்மா என்பது தனி நபரின் ஜீவன் அல்லது உயிர் மற்றும் பரமாத்மா என்பது இறைவன் அல்லது பிரம்மம் எனப்படும்.
*அத்வைதம் = ஜீவாத்மா - பரமாத்மா ஆகிய இரண்டும் வேறல்ல, சகல உயிர்களுக்கும் ஆத்மா பொதுவானது.

*விசிட்டாத்துவைதம் = ஜீவாத்மா - பரமாத்மா ஆகிய இரண்டும் ஒரே பொருளாலானவை, ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது.

*துவைதம் = ஜீவாத்மா - பரமாத்மா ஆகிய இரண்டும் வெவ்வேறு, ஜீவாத்மாவின் கர்மத்தை நீக்கினால் பரமாத்மாவை அடையலாம்.
அறம், பொருள், இன்பம்

குறள் எண் 501     =    அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
                                          திறந்தெரிந்து தேறப் படும்.

அறவழியில் உறுதியானவனாக, பொருள் வகையில் நாணயமானவனாக, இன்பத்தை நாடி செல்லாதவனாக, உயிருக்கு அஞ்சாதவனாக வாழ்பவனை ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும். இவ்வகையில், திருக்குறள் கூற்றின்படி "அறம், பொருள், இன்பம்" என்பது திராவிட வாழ்வியல் முறைகளாகும். எட்டாம் நூற்றாண்டில் தண்டி என்னும் வடமொழிப் புலவர் தண்டியலங்காரம் என்னும் வடமொழி நூலை இயற்றினார். இதை தழுவி தமிழில் தண்டியலங்காரம் என்னும் நூல் எழுதப்பட்டது. இந்நூலில் "அறம், பொருள், இன்பம்" என்ற கூற்று "அறம், பொருள், இன்பம், வீடுபேறு" என்று திரிக்கப்பட்டது.

பண்டாரமும் பரதேசியும்

"பண்டாரம் = பண்டு  + ஆரம்" என்பதில் பண்டு என்றால் பொருள் மற்றும் ஆரம் என்றால் கழுத்தில் அணியும் அணிகலன். பண்டாரம் என்றால் தங்கம், வெள்ளி, வைரம், முத்து போன்ற விலையுயர்ந்த பொருட்கள் நிறைந்த கருவூலம் என்று பொருள். அரசு / கோவில் கருவூலங்களில் காப்பாளர் பணி செய்தவர்களை "பண்டாரம்" என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தார்கள். அரசர்களின் நம்பிக்கைக்குரிய காப்பாளர் பணியுடன் கோவில் பூசை பணிகளையும் பண்டாரங்கள் செய்து வந்தனர். பண்டைய காலத்தில், பண்டாரம் பதவி ஒரு நிதியமைச்சர் பதவிக்கு சமமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால், நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து, என்ன செய்ய வேண்டும் என்று அரசருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு பண்டாரங்கள் வாழ்ந்தனர். பண்டாரம் என்றால் செல்வதை குறிக்கும் பொருட்டு "மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே" (இறைவனின் அருள் செல்வத்தைப் பெற முந்துங்கள்) என்று மாணிக்கவாசகர் பாடியுள்ளார். செல்வங்களை பெற்ற மடாதிபதிகள் "பண்டார சந்நிதிகள்" எனப்பட்டனர். குமரகுருபரர் தனது குருவான தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிகரை போற்றி "பண்டார மும்மணிக்கோவை" பாடியுள்ளார்.

ஊர் விட்டு ஊர் மாறிச் செல்லும் பரதேசி இரந்துண்டு வாழ்பவர், அரசின் சொத்துக்களை பாதுகாக்கும் அரசு அலுவலரான பண்டாரம் உழைத்து வாழ்பவர். பண்டாரம் என்றால் "பொருள் இருப்பவர்" என்றும் பரதேசி என்றால் "பொருள் இல்லாதவர்" என்றும் பொருள்படும் வகையில் அக்காலத்தில் "பண்டாரமும் பரதேசியும்" என்ற சொற்றொடர் மேடு பள்ளம் போல சமூகத்தில் நிலவிய ஏற்ற தாழ்வை குறிக்க பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் பார்ப்பனீய சூழ்ச்சியால் "பண்டாரம்" வசைச்சொல்லாக மாற்றப்பட்டு வறியவர்கள் ஆக்கப்பட்டனர். அத்துடன் கோவில் பூசையில் ஈடுபட்டு வந்த பண்டாரங்களை துரத்திவிட்டு பூசை உரிமைகளை பார்ப்பனர்கள் கைப்பற்றி கொண்டனர். இதை தொடர்ந்து, பண்டாரம் கோவிலில் பூமாலை கட்டுவது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்யும் சாதியாக மாற்றப்பட்டனர். இப்போது "பண்டாரமும் பரதேசியும்" என்ற சொற்றொடர் உணவிற்கு கூட வழியில்லாத வறியவர்களை குறிக்கும் வகையில் "இல்லாதவர்" என்ற பொருளை மட்டும் பெற்று நின்றிருக்கிறது.

இடங்கையும் வலங்கையும் 

சோழர் காலத்தில் உச்சம் பெற்ற "இடங்கை" மற்றும் "வலங்கை" மக்களில் யார் உயர்ந்தவர்கள் என்ற குழப்பம் காரணமாக சமூகத்தில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் தோன்றி இருக்கின்றன. இத்தகைய "இடங்கை" மற்றும் "வலங்கை" என்ற இரண்டு சாதி பிரிவுகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அவற்றில் ஓரிரு கருத்துக்களை இப்போது பார்ப்போம்.

"வலங்கை" என்பது கோவில்களுடன் தொடர்புடைய நிலவுடைமை உடைய ஆளும் சாதிகளை குறிக்கும். "இடங்கை" என்பது வேளாண்மை சாராத ஆளப்படும் சாதிகளைக் குறிக்கும். இதன் மூலம், கோவிலின் நிலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சாதியக் கட்டமைப்புகளும் பிரிவினைகளும் சோழப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் உச்சத்தை அடைந்ததாக மரபுக்கதை கூறுகிறது.

வணிகத்தில் ஈடுபட்ட சாதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறை சோழ அரசர் தலையிட்டு காஞ்சிபுரம் கோவிலில் சமாதானம் செய்ததாகவும், அப்போது கடவுளின் சன்னிதி அருகில் இடது புறத்தில் ஒரு பிரிவினரும், வலது புறத்தில் மற்றொரு பிரிவினரும் நின்று, அரசரின் இடது மற்றும் வலது கைகளிலிருந்து வெற்றிலை மற்றும் பாக்கு பெற்றதாகவும், அன்றிலிருந்து அவர்கள் "இடங்கையர்" மற்றும் "வலங்கையர்" என்று அழைக்கப்பட்டதாகவும் மரபுக் கதை கூறுகிறது.

1876 இல் ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் தனது "இந்திய பழமை" என்ற நூலில் குறிப்பிடும்படி, விஸ்வகர்மா சாதியரும் பார்ப்பனர்களும் புரோகிதத் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், விஸ்வகர்மர்களை ஆதரிப்பவர்கள் இடங்கையினராகவும், பார்ப்பனர்களை ஆதரிப்பவர்கள் வலங்கையினராகவும் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டதாக மரபுக் கதை கூறுகிறது.

ஐயனாரும் ஐயப்பனும்
தமிழ் நாட்டின் ஐயனார் வழிபாடு தான் கேரளாவில் ஐயப்பன் வழிபாடானது என்பது சமய அறிஞர்களின் கருத்தாகும். கேரள ஐயப்பனை பக்தர்கள் சாஸ்தா என்றும் அழைக்கின்றனர். சாஸ்தா என்றால் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவர் என்று பொருள்படும். அமரகோசம் என்ற வடமொழி நிகண்டில் (Dictionary), புத்தரின் பெயர்களில் ஒன்றாக சாஸ்தா கூறப்படுகிறது. பண்டைய தமிழ் சமூகத்தில், வடமொழி பெயரான சாஸ்தா என்பது புத்தரின் பெயராக தமிழில் சாத்தன் / சாத்தனார் என்று விளக்கப்பட்டது. சாத்தனாருக்கு ஐயன் / ஐயனார் / ஐயப்பன் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. பௌத்தர்கள் சாத்தன் என்ற பெயரைப் பரவலாக பயன்படுத்தினர் என்பது சங்க கால நூல்களிலிருந்து அறியப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சங்க கால பௌத்த நூலான மணிமேகலை நூலை இயற்றியவர் பௌத்த சமயத்தை சேர்ந்த சாத்தனார் ஆவார்.

சாக்கிய குலத்தை சேர்ந்த புத்தருக்கு சாக்கிய முனி என்ற பெயரும் உண்டு. ஜைன சமயத்தில் 24 தீர்த்தங்கரரில் 20 வது தீர்த்தங்கரர் முனிஸ்வரநாதர் ஆவார். ஆசீவக கோட்பாட்டின் படி ஆண் நாடியா பெண் நாடியா என்று பகுத்தறிய இயலாத ஐய நிலையினை கைவரப் பெற்றவர்களே ஐயன் (சாத்தன்) / ஐயனார் (சாத்தனார்) என்றும் வழங்கப்பெற்றனர். ஐயன் என்றால் மூத்தோன், உயர்ந்தோன், குரு, ஆசான் என்று பொருள்படும். ஐயம், ஐயன், ஐயா, ஐயர் மற்றும் ஐயங்கார் சொற்கள் ஆசீவக பண்பாட்டில் இருந்து உருவானவை.

பண்டைய இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோலோச்சி வந்த ஆசீவகம், பௌத்தம், ஜைனம் போன்ற அவைதீக சமயங்கள் ஒரு கட்டத்தில் ஆரியர்களின் சூழ்ச்சியால் வீழ்ந்தன. அதே நேரத்தில், ஆசீவகம், பௌத்தம், ஜைனம் சமயக் கொள்கைகளை ஜீரணித்து, உள்வாங்கி கொண்டு வைதீக இந்து மதம் வளர்ந்தது. எடுத்துக்காட்டாக, சமத்துவம் போற்றிய பௌத்த கொள்கைகளை வீழ்த்த மகாயான பிரிவாக பௌத்த மதத்திற்குள் நுழைந்து பௌத்த கொள்கைகளை பார்ப்பனர்கள் நீர்த்து போக செய்தனர். அத்துடன், விஷ்ணுவின் ஓர் அவதாரமாக புத்தர் மாற்றப்பட்டார். பார்ப்பனர்கள் புத்தரை விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்தையாக கற்பனை செய்து அதை ஐயப்பனின் சரித்திரமாக மாற்றினார்கள். பௌத்த துறவியான தாராதேவியை திரௌபதி அம்மன், பகவதி அம்மன், சரஸ்வதி அம்மன் என்று மாற்றியது.

பெருங்கோவில்களில், விஷ்ணு வரதராசர், திருவரங்கர், வெங்கடேசர் என்று பல்வேறு பெயர்களிலும் சிவன் கபாலீஸ்வரன், தியாகராசர், சுந்தரேஸ்வரர் என்று பல்வேறு பெயர்களிலும் ஆரியர்களால் உயர்நிலையில் வைத்து வணங்கப்படுகிறது. ஆனால், ஆரிய இந்து மதமானது புத்தர் என்று அழைக்கப்படும் சாஸ்தாவை தாழ்த்தி சாத்தனார், ஐயனார், முனீஸ்வரர், தருமராசா என்று பல்வேறு பெயர்களில் கிராம மக்களால் வணங்கப்படும் காவல் தெய்வமாக மாற்றப்பட்டார்.

சைவம் - வைணவம் கோட்பாடுகள்

சமயங்கள் வளர்ந்த பிறகு தமிழில் சைவ ஆகம நூல் 28, வைணவ ஆகம நூல் 108, சக்தி ஆகம நூல் 77 இயற்றப்பட்டது. தமிழ் ஆகமங்கள் பலவும் கடற்கோளால் அழிந்த பிறகு மீதமிருந்த தமிழ் ஆகமங்களை ஆரியர்கள் வடமொழியில் பெயர்த்து அதையே தமிழ்நாட்டு கோவில்களில் பயன்படுத்தி வருகின்றனர். சைவ கோவில்களில் உள்ள வடமொழி அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் எனவும், வைணவ கோவில்களில் உள்ள வடமொழி அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு, கோவில்களில் தமிழ் பூசாரிகளை விரட்டிவிட்டு வடமொழி ஆதிக்கத்தை பார்ப்பனர்கள் நிலைநாட்டினர்.

சைவ சமயத்தின் பிரிவுகளில் ஒன்றான காஷ்மீர சைவத்தின் நிறுவனர் வசுகுப்தர் ஆவார். காஷ்மீர சைவத்தை பின்பற்றியதாக  கருதப்படுகிற  திருமூலர் எடுத்துரைத்த "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" மிக பிரபலமான சமய கூற்றாகும். சைவ சமயத்தின் பிரிவுகளில் ஒன்றான வீர சைவத்தின் நிறுவனர் பசவன்னா ஆவார். அவரது வழியில் வீர சைவர்கள் லிங்காயத் சமூகமாக ஒன்றிணைந்தனர். சைவ சமயத்தின் பிரிவுகளில் ஒன்றான சைவ சித்தாந்தத்தின் நிறுவனர் மெய்கண்டார் ஆவார். பதி, பசு, பாசம் என்று இறைவன், உயிர், உலகம் ஆகிய மூன்றுக்கும் இடையில் உள்ள உறவை வரையறை செய்த தத்துவம் சைவ சித்தாந்தம் ஆகும். நமக்குள் இருக்கின்ற இறைவனை அடைய உயிரும் உடலும் கொண்ட உயிரி போகப்பொருட்களிடமிருந்து விடுபட்டால் இறை நிலையை அடையலாம் என்பது சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்தத்தை ஏற்காமல் ஆதிசங்கரர் வழியை தொடர்ந்தவர்கள் சைவ வேதாந்தத்தை பின்பற்றினர். இந்த பின்னணியில், "தெய்வம் தந்த வீடு" என்ற பாடலில் "தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்! அது தெரியாமல் போனாலே வேதாந்தம்!" என்று கவியரசு கண்ணதாசன் எழுதிய வரிகள் குறிப்பிடத்தக்கது.

ஆதிசங்கரரின் அத்வைதம் கொள்கையை பின்பற்றி ஐயர் எனக்கூறி ஆரியர்கள் ஒருங்கிணைந்தனர். அப்பிரிவில் இருந்து விலகி இராமானுசரின் விசிட்டாத்துவைதம் கொள்கையை பின்பற்றி ஐயங்கார் எனக்கூறி ஆரியர்கள் ஒருங்கிணைந்தனர். வைதீக அரசியலால் ஐயங்கார் பிரிவில் "வடகலை – தென்கலை" உருவானது. 
சைவம் - வைணவம் பிரிவினை

ஆரிய பார்ப்பனர்கள் தங்களின் வைதீக மரபை வளர்ப்பதற்காக சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே பிளவுபடுத்தும் சூழ்ச்சிகளை மேற்கொண்டனர். எடுத்துக்காட்டாக, 7 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் நரசிம்மவர்மன் சிதம்பரம் நடராசர் கோவிலில் கோவிந்தராச பெருமாள் கோவிலை கட்டினார். 12 ஆம் நூற்றாண்டில் சைவ வேதாந்த தீட்சிதர்கள், சிவத்தலமான சைவ கோவில் வளாகத்திற்குள் விஷ்ணுவுக்கு வைணவ கோவில் இருப்பது ஆட்சிக்கு நன்மை பயக்காது என்று சொன்னதால் கோவிந்தராச பெருமாள் கோவிலின் விஷ்ணு சிலையை சைவ சமயரான இரண்டாம் குலோத்துங்க சோழன் கடலில் வீச முடிவு செய்தான். விஷ்ணு சிலையை எடுக்க கூடாது என்று ராமானுஜர் வாதித்தார். ராமானுஜரின் கருத்துக்கு ஆதரவாக கூரத்தாழ்வார் வைணவ கடவுளே உயர்ந்தவர் என்று அவையில் பேசினார். இதனை சிறிதும் விரும்பாத இரண்டாம் குலோத்துங்க சோழன் கூரத்தாழ்வார் கண்களை சிதைக்குமாறு உத்தரவிட்டார். இதையொட்டி, சோழ நாட்டில் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் தன் இருப்பிடத்தை காலி செய்து ராமானுஜர் கருநாடகம் சென்றார். இறுதியில் இரண்டாம் குலோத்துங்க சோழன் தான் எண்ணியது போலவே விஷ்ணு சிலையை கடலில் வீசி வைணவர்களை எதிரி ஆக்கிக்கொண்டார். இந்த கதை சில மாற்றங்களுடன் 2008 இல் வெளியான கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தில் காட்டப்பட்டது. பின்னர் வந்த நாயக்கர் ஆட்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கோவிந்தராச பெருமாள் கோவிலில் விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவி தீட்சிதர்களை எதிரி ஆக்கிக்கொண்டார்.

களப்பிரர்களின் ஆட்சி

ஒரு கட்டத்தில் சங்க கால சேர, சோழ, பாண்டிய அரசுகளை வீழ்த்தி களப்பிரர்கள் ஆட்சி புரிந்தனர். களப்பிரர்கள் ஆட்சியின் போது பௌத்தம், ஜைனம் பட்டி தொட்டி எங்கும் பரவியதால், களப்பிரர் ஆட்சியை "இருண்ட காலம்" என்று ஆரியர்கள் பொய் பரப்பினர். ஆனால் தமிழ் இலக்கிய நூல்கள் குறிப்பாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சில, திருமூலரின் திருமந்திரம், காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி, முதல் ஆழ்வார்கள் எனக் அறியப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் பாடிய திருவந்தாதி போன்ற பல நூல்கள் களப்பிரர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்டவையே. ஆய்வுகளின் படி களப்பிரர் ஆட்சியில் பல்வேறு சமயங்கள் இருந்திருந்தாலும் சமய சண்டைகள் நிகழவில்லை. குறிப்பாக பௌத்தம், ஜைனம் கோலோச்சினாலும் களப்பிரர்கள் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்கள் பாடிய நூல்களில் பௌத்தம், ஜைனம் சமயத்தை இழித்தும் பழித்தும் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய ஆட்சிக் காலகட்டத்தில் சமய கருத்துக்களை ஆராய்வதற்குரிய வாத சபையான பட்டி மண்டபங்களில் சமயக் கருத்து வேறுபாடுகள் குறித்து சொற்போர் நடத்தி சமயவாதிகள் தீர்த்துக் கொண்டனர் என்று மணிமேகலை நூல் வாயிலாக தெரிய வருகிறது. அன்றைய சமய சொற்போர் நிகழ்ச்சிகளே இன்றைய நவீன கால பட்டிமன்ற நிகழ்ச்சிகளுக்கு தொடக்க புள்ளி.

பேரரசுகளின் ஆதரவில் ஆரியர்கள்

அதியர், ஆவியர், ஆதன், இளையர், உதியர், எவ்வி, ஒளியர், கவுரியர், கழார், கிள்ளி, கொங்கர், சென்னி, செழியன், பழவர், பழையர், பஞ்சவர், புலியர், வழுதியர், வில்லோர், ஓரி, தித்தன், அழிசி, மலையமான், பெரியன், ஆயண்டிரன், அன்னி, பாரி, விராஅன் உள்ளிட்ட பல்வேறு சங்க கால இனக் குழுக்களையும், சிற்றரசுக்களையும் அழித்தும் உட்கொண்டும் பேரரசுகள் உருவாகின.

அப்படி உருவான  பேரரசுகள் வெவ்வேறு காலக்கட்டத்தில் சைவம், வைணவம், பௌத்தம், ஜைனம் சமயங்களை பின்பற்றி ஆட்சி புரிந்தனர். இறுதியில் ஆரியர்களின் அரசியல் மற்றும் சமய சூழ்ச்சியால் இடைக்காலத்திற்கு பிறகு வைதீக சமயத்திற்கு ஆதரவாக பேரரசுகள் ஆட்சி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சோழர் கால ஆட்சி "பார்ப்பனர் - வேளாளர்" கூட்டணிக்கு பொற்காலமாக இருந்தது என்றால் மிகையல்ல.

பேரரசுகளின் ஆட்சியின் போது அரசர்களின் அபரிமிதமான அனுசரணையின் காரணமாக, ஆரியர்கள் தங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப வாழும் சமூக சூழலை மாற்றினர். குறிப்பாக பிற்கால சோழர்கள் ஆட்சியில் ஆரியர்கள் அரசியல் தர்பாரில் தலையிடும் அளவுக்கு அதிகாரத்தோடு வலம் வந்தனர். சங்க காலத்தில் நடைபெறாத கொடுமைகளை பேரரசுகள் காலத்தில் ஆரியர்கள் அரங்கேற்றினர். எடுத்துக்காட்டாக, வர்ணத்தின் அடிப்படையில் பறையர்கள், வண்ணார்கள், சாணார்கள், இடையர்கள், கலைஞர்கள் ஆகியோரை கீழ்ச் சாதிகள் ஆக்கினர். இவ்விடத்தில், "பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பாரில்லாமல் கீழ்ச் சாதியானான்" என்ற முதுமொழி கவனிக்கத்தக்கது. வர்ண பாகுபாடுகளை ஏற்காதவர்கள் கீழ்ச் சாதிகளாக என்றென்றும் நிலைத்திருக்கவில்லை, அது பார்ப்பனர்களின் தலையீட்டால் ஏற்பட்டதாகும்.


விலங்கின் தோல் தீட்டு எனக்கூறி பறையர்களை, அழுக்கு துணிகள் துவைப்பது கேவலம் எனக்கூறி வண்ணார்களை, கள் இறக்குதல் பாவத்தொழில் எனக்கூறி சாணார்களை, விலங்குகளை மேய்ப்பது தான் சம்பளம் எனக்கூறி இடையர்களை, கூத்துக்கு மானம் தேவையில்லை எனக்கூறி கலைஞர்களை அவமானப்படுத்தினர் ஆரியர்கள். தமது அரசியல் நடவடிக்கைகளுக்கு கீழ்ச் சாதியாக அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் பயன்படுவார்கள் எனக்கருதி அரசர்களும் ஆரியர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.
ஆட்டுப்பாலும், எருமைப்பாலும் வழிபாட்டுக்கு உகந்ததல்ல தீட்டு என்றும் பசுவின் பால் தான் வழிபாட்டுக்கு உகந்தது என்று இடையர்களிடமும் அரசர்களிடமும் வலியுறுத்தி கோவில் வழிபாடுகளில் பசுவின் பாலையும் நெய்யையும் ஆரியர்கள் திணித்தனர். சோழர்களின் ஆட்சியில் இடையர்கள் வெட்டிக்குடிகள் (சம்பளம் இல்லாத வேலையாள்) என்று அழைக்கப்பட்டனர். இடையர்கள் இன்று கோனார்கள் / யாதவர்கள் என்று அறியப்படுகின்றனர். பசுவின் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது எண்ணெய் விளக்குகள் பிரபலமானது. இதையொட்டி, ஜோதிடத் தொழில் புரிந்த பார்ப்பனர்கள் கோவிலுக்கு சென்று எண்ணெய் விளக்கு வைத்தால் நல்லது நடக்கும், அதுவே சிறந்த பரிகாரம் எனக்கூறி தங்கள் வயிற்றை நிரப்பினர்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை நீர் (பதநீர்) மூலம் சாணார்கள் தயாரிக்கும் கருப்பட்டி என்கிற பனை வெல்லம் கோவில் மடப்பள்ளிக்கு உகந்ததல்ல தீட்டு என்றும் சக்கரை (சீனி) தான் உகந்தது என்றும் ஆரியர்கள் மாற்றினர். சாணார்கள் / ஈழவர்கள் இன்று நாடார்கள் என்று அறியப்படுகின்றனர். கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள் நகைகள் அணியவும் மேலாடை அணியவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதை பற்றிய விரிவான தகவலுக்கு "தோள் சீலைப் போராட்டம்" பற்றி படிக்கவும். மேலும், நம்பூதிரி பார்ப்பனரை தீட்டுப்படுத்தாமல் இருக்க, தாழ்த்தப்பட்ட சாதியினர் அவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடைப்பிடிக்க வற்புறுத்தப்பட்டனர். நாயர், சாணர், ஈழவர், புலையர், பறையர் உள்ளிட்டோர் குறிப்பிட்ட தூரத்தில் நிற்க வேண்டும் என்று தீண்டாமைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இன்று சமூகத்தில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் உயர்ந்த நிலையை அடைந்துள்ள நாடார்கள், பார்ப்பனர்களுக்கு அடிவருடிகளாகச் செயல்பட்டு, சத்திரியர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதுடன், பிற தாழ்த்தப்பட்ட சாதியினரை சமூகத்தில் வளர உதவாமல் ஒடுக்க முயல்கின்றனர்.

சோழ நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் பிறந்த நந்தனார், 63 நாயன்மார்களில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பறையர், தன் கனவில் தோன்றிய சிதம்பரம் நடராசரைக் காண விரும்பினார். அதையொட்டி, நடராசர் கோவில் எல்லைக்குள் நந்தனார் வந்த போது "தாழ்த்தப்பட்டவர் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்றால் நெருப்பில் மூழ்கி பார்ப்பனர் வடிவில் வர வேண்டும்" என்று வேள்வி செய்யும் பார்ப்பன தீட்சிதர்கள் கூறினர். தீட்சிதர்களின் சூழ்ச்சி அறியாமல் திராவிட மண்ணின் மைந்தன் நந்தனார் கோவிலுக்குள் நுழைய வேண்டி திருச்சிற்றபலம் எனக் கூறி நெருப்பில் இறங்கி உயிர் நீத்தார். இன்று வரை தீட்சிதர்கள், நந்தனார் நெருப்பில் இறங்கி "இறந்தார்" என்று சொல்லாமல் "மறைந்தார்" என்று கதைக்கின்றனர். ஆனால், அறிவியல் ரீதியாக ஒரு மனிதனால் மறைவது சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நந்தனார் நுழைந்த கோவில் உள்பிரகார தெற்கு வாயில் இன்றும் மூடப்பட்டுள்ளது. நந்தனாரின் மரணத்திற்கு வித்திட்டது பார்ப்பனீயம் என்பதை மறுக்க இயலாது.

சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் வீழ்ந்த பிறகு சுல்தானகம், விஜயநகரம், நாயக்கர் அரசுகள் அடுத்தடுத்து ஆட்சி பொறுப்பை ஏற்றனர். இதில் மதுரை நாயக்கர் ஆட்சியில் முதன்மை அமைச்சர் அரியநாத முதலியார் நிர்வாக வசதிக்காகவும் அரசியல் காரணத்திற்காகவும் பாண்டிய நாட்டை 72 பாளையங்களாக பிரித்தார். மேலும், சோழர்களின் எழுச்சியை அடக்க தஞ்சை நாயக்கர்கள் சோழ நாட்டை 48 பாளையங்களாக பிரித்தனர். மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சை பகுதிகளில் பாளையங்கள் எனப்படும் நிலப்பரப்பினை ஆட்சி புரிந்த குறுநில அரசர்கள் பாளையக்காரர்கள் எனப்பட்டனர்.

இந்த பாளையங்களைச் சேர்ந்த "சேதுபதி, கட்டபொம்மன், ஊமைத்துரை, பூலித் தேவன், முத்து வடுகநாதர், வேலு நாச்சியார், குயிலி, மருதநாயகம், தீரன் சின்னமலை மற்றும் பலர்" ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக கடுமையாக போராடினர். இதற்கிடையில், பாளையக்காரர்கள் (பின்னாட்களில் ஜமீன்தார்கள் / நிலக்கிழார்கள்) ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினர் என்றாலும் சாதிய அடுக்குகளை அவர்கள் கைவிடவில்லை. பாளையக்காரர்களின் சாதிப்பெருமை மனநிலையை பயன்படுத்தி வைதீக மரபை வளர்க்கத் திட்டமிட்ட பார்ப்பனர்கள், பாளையக்காரர்களை அரவணைத்து, அவர்களை சுய சாதி பெருமை பேசி துயில செய்தனர். இதன் வெளிப்பாடாக, இன்றும் தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் கடைநிலை சாதி மக்களுக்கு இடையில் (குறிப்பாக முக்குலத்தோர், வன்னியர்கள், கவுண்டர்கள் மற்றும் தலித்துகள்) ஆண்ட பரம்பரை அடிமை பரம்பரை என்ற விவாதமும் சண்டையும் நடைபெறுகிறது கவனிக்கத்தக்கது.

பக்தி இயக்கம்
களப்பிரர்களின் ஆட்சியில் கோலோச்சிய பௌத்தம் மற்றும் ஜைனத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, சைவம் மற்றும் வைணவத்தை பரப்புவதற்கு பேரரசுகளின் ஆட்சிக் காலத்தில் பக்தி இயக்கம் ஒரு மத இயக்கமாக உருவானது. பௌத்தமும் ஜைனமும் துறவு வாழ்க்கையை பாராட்டியதால், பக்தி இயக்கம் குடும்ப வாழ்க்கையை வலியுறுத்தி, தமிழ் பாடி சைவத்தையும் வைணவத்தையும் வளர்த்தது. இந்து மத உருவாக்கத்திற்கு பக்தி இயக்கம் முக்கிய பங்காற்றியது. 6 - 9 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் கோலோச்சிய பக்தி இயக்கம், 15 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் ஆதரவாகவும், எதிர்மறையாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உதாரணமாக, வடக்கில் இந்து மதத்திற்கு எதிரான நிலையில் சீக்கிய மதம் உருவாகியது.

சைவ சமயத்தை சேர்ந்த 63 நாயன்மார்கள் சிவனை போற்றி பாடியதை மூலமாக கொண்டு 12 ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் பெரியபுராணம் என்ற நூலை தொகுத்தார். சைவ சமய நூல்களின் தொகுப்புகள் சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும். மொத்தமுள்ள 12 திருமுறைகளின் தொகுப்புகளில் நாயன்மார்களின் 18,246 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சைவம் போற்றும் 63 நாயன்மார்களில் இசைஞானி, காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசி என்று 3 பெண் நாயன்மார்கள் உள்ளனர். வைணவத்தை சேர்ந்த 12 ஆழ்வார்கள் திருமாலை போற்றி பாடியதை மூலமாக கொண்டு 10 ஆம் நூற்றாண்டில் நாதமுனிகள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்ற நூலை தொகுத்தார். முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி, இயற்பா என்று நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 4000 பாடல்கள் உள்ளது. வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் ஆண்டாள் என்ற பெண் ஆழ்வாரும் உள்ளார்.

உருவாக்கப்பட்ட இந்து மதம்
ஒவ்வொரு சமய பிரிவுக்கும் வெவ்வேறு ஆகமங்கள், முறைகள் மற்றும் வழிபாடுகள் இருந்த போது, பக்தி இயக்க காலகட்டத்தில் ஆதி சங்கரர் 8 ஆம் நூற்றாண்டில் அனைத்து சமயப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்து "ஸ்மார்த்த பிராமணர்கள்" என்ற புதிய பிரிவை உருவாக்கினார். இதுவே சமயம் மறைந்தும், இறையியல் பிரிவுவாதத்தை மறுத்தும், நிறுவனமயமான மதமாக இந்து மதம் உருவெடுக்க காரணமாயிற்று. இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஸ்மார்த்த பிராமணர்களுக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை ஏனெனில் வேதங்கள் உருவ வழிபாட்டை மறுத்து இழித்து பேசுகிறது. ஆனால் இன்று பெரும்பாலான கோவில்களில் ஸ்மார்த்த பிராமணர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர் என்பதிலே ஆரியத்தின் அரசியல் சூழ்ச்சி வெளிப்படுகிறது. சுருக்கமாக, இன்றுள்ள சிலை வழிபாடு என்பது வேத நடைமுறைகளின் மைய அம்சமாக இருக்கவில்லை. ஆனால், இந்து வழிபாட்டின் பிற்கால கட்டங்களில், குறிப்பாக இந்து மதம் நிறுவன ரீதியாக வளர்ந்த போது சிலை வழிபாடு முக்கியத்துவம் பெற்றது. கூடுதலாக, உருவ வழிபாட்டை நிராகரிக்கும் வேதங்களை புனித நூல்களாகக் கருதும் ஸ்மார்த்த பிராமணர்கள், கோவில்களில் தலைமை அர்ச்சகர்களாக பணியாற்றுவது விந்தையானது.

சங்க காலத்தில் சூரியன் மற்றும் விநாயகர் வழிபாடு இருந்ததில்லை. பௌத்தம், ஜைனம் சமய வீழ்ச்சிக்கும் பக்தி இயக்க எழுச்சிக்கும் இடையில் தான் தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு நுழைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, 7 ஆம் நூற்றாண்டில் தேவாரப் பாடல்களில் தான் விநாயகரை பற்றிய குறிப்பு தொடங்குகிறது. இவ்வகையில், பேரரசு காலத்தில் ஆரியர்களின் எழுச்சிக்கு பின், 6 - 7 ஆம் நூற்றாண்டில் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் பரவியது.

இந்து என்ற சொல்

இந்து என்ற சொல் சிந்து (சிந்து நதி) என்ற சொல்லில் இருந்து வந்தது. இந்து என்ற சொல்லை பொதுவெளியில் பிரலப்படுத்தியது ஆங்கிலேயரான வில்லியம் ஜோன்ஸ் (William Jones) ஆவார். கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக ஆரியர்களுடன் கலந்தாலோசித்து, சமஸ்கிருதத்தில் இருந்து மனுதர்ம நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் தவிர பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களை இந்து என்றவொரு மதத்தின் கீழ் ஒன்றிணைத்து இந்து சட்டத்தை வில்லியம் ஜோன்ஸ் இயற்றினார்.

பூர்வீக இந்தியர்களான திராவிடர்கள் மற்றும் பிழைக்க வந்த ஆரியர்கள் வம்சாவளியினரிடையே நீடித்த இனப் பிரிவினைக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல் இந்திய துணைக்கண்டத்தில் "ஆரிய படையெடுப்பு" என்ற கருத்தை முதன் முதலில் முன்மொழிந்த ஆங்கிலேயர் வில்லியம் ஜோன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. "பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நல்ல பிள்ளை" போல வில்லியம் ஜோன்ஸ் ஆரியப் படையெடுப்பு பற்றிப் பேசினார், அதே நேரத்தில், அவர் இல்லாத இந்து மதத்தையும் உருவாக்கி ஆரியர்களின் மனுதர்ம நூலின் அடிப்படையில் இந்து சட்டத்தை இயற்றினார்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், "இந்து" என்ற சொல் ஒரு மதமாக பதிவு செய்யப்பட்ட போது, தாழ்த்தப்பட்ட சாதியினரையும் இணைத்து இந்து என்ற மதப் பெயருடன் ஒரே அடையாளத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாது ஏனெனில் அது தங்களின் சமூக அந்தஸ்தைக் குறைக்கும் என்று உயர்சாதியினர் எதிர்த்தனர். இருப்பினும், காலப்போக்கில், உயர்சாதிக் குழுக்கள், இந்து என்ற மதப் பெயரை, தங்களின் சாதி ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் ஒரு வழியாக ஏற்றுக்கொண்டனர். இந்த பின்னணியில், சாதி அடுக்குகளை நிலைநிறுத்த, இந்து மதம் அச்சுறுத்தலில் இருப்பதாக சித்தரித்து, முஸ்லிம்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட சாதி மக்களை திரட்டி, இந்து என்ற மதப் பெயரை, உயர்சாதியினர் தங்களின் அஸ்திவாரமாக பயன்படுத்தத் தொடங்கினர். இதன் மூலம், இந்தியாவின் அரசியல் பிரச்சனையை இந்து-மூஸ்லிம் பிரச்சனையாக மாற்றினர். ஆனால், உண்மையான பிரச்சினை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இல்லை; மாறாக, உயர் சாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும் இடையே உள்ளது.

சித்தர்கள் மரபு

பேரரசு காலத்தில் ஆரிய இந்து மதம் பரப்பிய வேதம், வர்ணம், சடங்கு, சம்பிரதாயம், சிலை வழிபாடு உட்பட பலவற்றை கடுமையாக எதிர்த்தது சித்தர்கள் படை. பெரும்பாலும் காடுகளில் வாழ்ந்த சித்தர்களின் எண்ணிக்கையில் மாற்றுக் கருத்து நிலவினாலும் பொதுவாக 18 சித்தர்கள் என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. சித்தர்கள் சைவம், வைணவம் என்ற பேதமின்றி தமிழ் மரபு வழி நின்று மருத்துவ மூலிகைகளை ஆராய்ச்சி செய்து வந்தனர். 

பேரரசுகள் வீழ்ந்த பிறகு, ஆரிய பார்ப்பனர்களை எதிர்த்த சித்தர்களின் தேவைகள் வெகுவாக குறைந்து, சித்தர்களின் பாரம்பரியம் முறிந்தது. நாளடைவில் சித்தர்கள் நாவிதர்களாகவும் சித்த மருத்துவர்களாகவும் கரைந்தனர். சித்தர்களின் வாழ்க்கை வரலாறுகள் சரியாக ஆவணப்படுத்தப்படாததால், சித்தர்கள் பற்றிய துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை. சித்தர்களின் தொடர் சங்கிலி அறுபடாமல் இருந்திருந்தால், தமிழ்நாட்டின் சமய வளர்ச்சியின் பாதை இன்றைய வழிபாட்டு முறையிலிருந்து வேறுபட்டிருக்கலாம் என்று சமய அறிஞர்கள் கூறுகின்றனர்.

வள்ளலாரும் அய்யா வைகுண்டரும்

வள்ளலார் (1823-1874)
1823 அக்டோபர் 5 அன்று கடலூர் மாவட்டத்தில், வடலூர் நகராட்சியில், மருதூர் கிராமத்தில் சைவ சமய குடும்பத்தில் ஐந்தாவது மகனாக வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார் பிறந்தார். சிதம்பரம் அருகே வடலூரில் சத்திய ஞான சபை என்ற வழிபாட்டு தலத்தையும், "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலார் மக்களின் பசிப்பிணி போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார்.
வேதம், ஆகமம், வர்ணம், புராணம், இதிகாசம், சைவம், வைணவம், வைதீகம், இனம், சாதி பேதங்கள் கூடாது என்று எல்லா மதத் தத்துவங்களையும் எதிர்த்த புரட்சியாளர் வள்ளலார், "கண்மூடி வழக்கமெல்லாம் மண் மூடி போகவும், இறந்த உடலை எரிக்காமல் மண்ணுக்கு உரமாக புதைக்கவும், இறைவன் ஒருவனே என்று ஜோதியை வணங்கவும், மூடநம்பிக்கையை எதிர்க்கவும், பாலின சமத்துவம், சுயநலமாக வாழாமல் பொதுநலமாக வாழவும், முதியோருக்கு கல்வி வழங்கவும், திருக்குறளை பரப்புவும், கல்வெட்டு ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், புலால் உணவை மறுக்கவும்" பிரச்சாரம் செய்தார். மேலும், மரணம் உடலுக்கு தான், நமக்கில்லை என்று “மரணமில்லாப் பெருவாழ்வு” கூற்றை நிறுவினார்.

சங்கராச்சாரியும் வள்ளலாரும் சந்தித்ததாக ஒரு கதை உள்ளது, அதன்படி சங்கராச்சாரி அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி வடமொழி என்று கூறினார், அதற்கு வள்ளலார் வடமொழி தாய்மொழி என்றால் தமிழ் மொழி தந்தை மொழி என்று பதிலளித்தார். வள்ளலார் பாடிய 5,818 பாடல்களின் தொகுப்பு திருவருட்பா நூல் எனப்படும். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சைவ சமயவாதி ஆறுமுக நாவலர், வள்ளலாரின் திருவருட்பா பாடல்கள் அருட்பா அல்ல மருட்பா என்று வாதிட்டார். வள்ளலாரின் போதனைகளை எதிர்த்து ஆறுமுக நாவலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவருட்பாவில் ஆறாம் திருமுறையை வெளியிட்டவர் பெரியார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறாம் திருமுறையில் வள்ளலார் எழுதிய புரட்சிக் கருத்துக்கள் இன்று வரை இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அனைவரும் சமம் என்ற கொள்கையை பலரும் ஏற்காததால் "கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன்" என்று ஆழ்ந்த கவலையுடன் வள்ளலார் கூறியது வேதனைக்குரியது.

இறுதி நாட்களில், வடலூர் சித்தி வளாகத்தின் அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டு வள்ளலார் ஜோதியில் கலந்ததாகக் கூறப்படுகிறது. வள்ளலார் மறைந்தது அறிவியல் ரீதியாக உண்மை இல்லாததால் வைதீகர்களின் சதியாக இருக்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் வள்ளலாரை "நாத்திகர்" என்று வசைபாடிய ஆரியர்கள் 20 ஆம் நூற்றாண்டில் அவரை "ஆத்திகர்" என்று போற்றி ஜீரணிக்க முயல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், உண்மையில் வள்ளலார் ஆரியர்களின் வேத மரபுகளை நிராகரித்து சமூக நீதிக் கருத்துக்களை போதித்தவர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அய்யா வைகுண்டர் (1809-1851)
1809 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில், தாமரைகுளம் கிராமத்தில் சாணார் (நாடார்) குடும்பத்தில் பிறந்தார் அய்யா வைகுண்டர். அய்யா வைகுண்டரின் தத்துவங்களை எடுத்துரைப்பது அய்யாவழி எனப்படும். அய்யாவழி (அய்யா = இறைவன் / வழி = சேரும் வழி) என்றால் "இறைவனை சேரும் வழி" என்று பொருள்படும்.

அய்யா வைகுண்டரின் சிந்தனைகளை உள்ளடக்கிய நூல் அகிலத்திரட்டு அம்மானை எனப்படும். அதன்படி, அய்யாவழி சமயமானது சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் உருவ வழிபாடுகளையும் ஒதுக்குகிறது. மேலும், சாதியற்ற சமய போதனைகள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து அவர்களிடையே ஒற்றுமை உணர்ச்சியை ஏற்படுத்த அய்யா வைகுண்டரால் தோற்றுவிக்கப்பட்ட தலங்கள் பதி என்றும், அதன் வளர்ச்சியாக தோன்றியவை நிழல் தாங்கல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அய்யாவழியின் தலங்கள் சிலைகள் இல்லாத கூட்டு வழிபாட்டு தலமாகவும், பாட சாலைகளாகவும், அன்ன மடமாகவும் திகழ்கின்றது.
ஆரியமும் திராவிடமும் 

வரலாற்று ஆய்வுகளின் படி, நாகர், அசுரர் மற்றும் திராவிடர் என்றவை ஒரே இன மக்களைக் குறிக்கின்றன. நாகர் என்பது இனப் பெயராகவும், திராவிடர் என்பது மொழியியல் பெயராகவும் உள்ளது. தாசர்கள், அசுரர்கள், நாகர்கள், திராவிடர்கள் ஆகியோர் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என கூறலாம். வரலாற்று ரீதியில், இந்தியாவில் ஆரியர்கள் மற்றும் நாகர்கள் (திராவிடர்கள்) மட்டுமே முக்கியமான இரண்டு இனங்களாக இருந்தன.

மானுடவியல் ஆய்வுகளின் படி, ஒவ்வொரு மனிதனும் தோலின் அடியில் ஆப்பிரிக்க வம்சாவளியினரின் மரபணுக்களை கொண்டிருப்பவர்கள் என்பதால், எந்த சாதியிலும் "தூய்மை" பிரிவுகள் இருக்க முடியாது. வெவ்வேறு காலகட்டங்களில் இங்கு உள்ள இனங்கள் ஒன்றாக கலந்திருக்கின்றன. ஆனால், இன்றும் வாழ்வியல் கொள்கை ரீதியில் வேற்றுமைகளை வாதிடும் "ஆரியம்" (பார்ப்பனீயம்) என்றால் அது "சனாதன தர்மம்", ஒற்றுமையை நாடும் "திராவிடம்" என்றால் அது "சமதர்மம்" எனப்படும். ஒரு கட்டத்தில், வெறும் 3% பார்ப்பனர்களுக்காக 97% மக்களை பார்ப்பனரல்லாதோர் என அழைப்பதற்குப் பதிலாக, ஆரியர்களை (பார்ப்பனர்களை) அந்நியப்படுத்த "திராவிடர்" என்ற குறிப்புச் சொல்லால் அழைக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கருத்தை முன்வைத்து, தந்தை பெரியார் பிரச்சாரம் செய்தார்.

நவீன கால ஆரியம்

1826 இல் ஆப்கானிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் பகுதியில் சார்லஸ் மாசன் (Charles Mason) என்கிற ஆங்கிலேயர் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது சிந்து நதியின் இடது கரையில் அமைந்த ஹரப்பாவைக் கண்டு அதிசயித்து அதைப்பற்றி தனது நூல் குறிப்பில் எழுதினார். இதுவே சிந்து சமவெளி நாகரிக அகழாய்வின் ஆரம்ப புள்ளியாகும்.

1912 இல் ஆங்கிலேய வரலாற்றாசிரியர் ஜான் பிளீட் (John Fleet) ஹரப்பா பகுதியில் பழங்கால முத்திரைகளை கண்டு பிடித்தார். அதனை தொடர்ந்து 1921 இல் ஆங்கிலேய தொல்பொருள் ஆய்வாளர் ஜான் மார்ஷல் (John Marshall) தலைமையில் ஆங்கிலேய குழு மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வாளர் ரக்கல்தாஸ் பானர்ஜி தலைமையில் இந்திய குழு தொடர் அகழாய்வு பணிகளை திறம்பட நடத்தி சிந்து சமவெளி நாகரிகத்தை உலகிற்கு வெளிக்கொணர்ந்தனர். சிந்து சமவெளி நாகரிக அகழாய்வுகளில் தெய்வ சிலைகள் எதுவும் அகப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் உலக போர் (1914-1918) முடிந்த காலகட்டத்தில் இந்திய விடுதலை இயக்கங்கள் அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் தீவிரமாக போராட தயாராகினர். அச்சூழலில் 1920 களில் சிந்து சமவெளி நாகரிக அகழாய்வுகளில் கோவில் வழிபாடு இருந்ததற்கான சிலை ஆதாரங்கள் இல்லை என்ற செய்திகளும் "இந்து – முஸ்லீம்" அரசியல் பிரச்சனை குறித்த செய்திகளும் வளர்ந்து கொண்டிருந்தது. அப்போது 1925 இல் "இந்துக்களுக்கு நாங்களே பாதுகாவலர்கள்" என்று கூறிக்கொண்டு ஒரு இயக்கம் கிளம்பியது, அது தான் ஆர்.எஸ்.எஸ். இதுவே நவீன கால ஆரியத்திற்கு அடிகோலியது.

சிந்து சமவெளி நாகரிகம் வெளிக்கொணர்ந்த வரலாற்று உண்மைகளை ஜீரணிக்க முடியாமல் ரிக் வேதத்தில் கூறப்பட்ட சரஸ்வதி நதியின் பெயரால் சிந்து சமவெளி நாகரிகத்தை "சரஸ்வதி சிந்து நாகரிகம்" எனப் பெயரிட்டு தாங்கள் அந்நியர்கள் அல்ல இம்மண்ணின் பூர்வகுடி மைந்தர்கள் என்று நவீன கால ஆரியர்கள் அழைத்துக் கொள்ள தொடங்கினர். உலகளவில் சிந்து சமவெளி நாகரிகத்தின் அகழ்வாராய்ச்சிகள் ஏற்படுத்திய தாக்கம் வீரியமானது. ஆனால் இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்தின் அகழ்வாராய்ச்சிகள் பேசுப் பொருளாக மாறாமல் இந்துத்துவா அமைப்புகள் பார்த்துக் கொண்டன.

சுதந்திர போராட்டத்தின் போது இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்கும் என்று காந்தி அறிவித்தார். அந்த நேரத்தில், ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆதரவுடன், இந்தியாவில் இந்துத்துவ ஆதிக்கம் வளர்ந்ததால், முஸ்லிம்களுக்கு தனி நாடு கோரி ஜின்னா வெற்றி பெற்றார். "இந்தியா – பாகிஸ்தான்" பிரிவினையில் பாரபட்சம் காட்டியதாக பொய்யான குற்றசாட்டை சுமத்தி இந்தியாவின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் காந்தியை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான நாத்தூராம் கோட்சே சுட்டுக் கொன்றார். ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்துவா அமைப்பின் அரசியல் வடிவம் பா.ஜ.க கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

கணவனை எரிக்கும் ஈமத்தீயில் உடன்கட்டை ஏற மனைவியை கட்டாயப்படுத்தியது, அடுப்பங்கரையை பெண்களின் வாழ்விடம் ஆக்கியது, கைம்பெண்ணுக்கு மறுமணத்தை தடுத்தது, கற்பு என்பது பெண்களின் சொத்து என்றது, தலித்துகளை இழிவாக நடத்தியது (எடுத்துக்காட்டாக, ஆரியர்களின் சதியால் தலித்துகள் இடுப்பில் துடைப்பத்தை கட்டிக்கொண்டு தெருக்களில் நடக்கும் போது அவர்களின் கால் தடங்களை பெருக்கி சுத்தம் செய்ய வேண்டியிருந்தது), உயர் அரசு பதவிகள் ஆரியர்களுக்கே என்றது, சடங்கு, சம்பிரதாயங்கள் மூலம் தங்கள் வயிற்றை வளர்த்தது, ஆரியர்களை தவிர மற்றவர்கள் படிப்பது, சிந்திப்பது, எழுதுவது பாவம் என்றது. இப்படி ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சமூகத்தை கட்டிக் காத்தது நவீன கால ஆரியம். 
ஆரியர்கள் இன்றும் வழிபாடுகள், பரிகார சடங்குகள் மற்றும் இடைநிலை சாதியினரின் வழியாக தாங்கள் எண்ணியதை செய்து வருகின்றனர். மேலும், ஆரியர்களுக்கு உறுதுணையாக, அவர்களை முன்மாதிரியாக கொண்டு, பார்ப்பனிய மனப்பான்மையுள்ள சில இடைநிலை சாதி மக்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். எடுத்துக்காட்டாக, வைதீகத்தால் கடைநிலை சாதியாக முத்திரை குத்தப்பட்ட சாணார்கள், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, நாடார்கள் என்று பெயர் மாற்றி இன்று சமூகத்தில் இடைநிலை சாதி ஆகிவிட்டனர். சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முன்னேறிய நாடார்கள், உள்பட சில சாதி பிரிவுகள், தீண்டாமையால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு குரல் எழுப்பாமல், ஆரியர்களின் காலாட்படையாக செயல்படுவதாக "நாடார் வரலாறு கறுப்பா காவியா?" என்ற நூலில் வழக்கறிஞர் லஜபதி ராய் கூறியுள்ளார்.

நவீன கால திராவிடம்

19 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி, "ராபர்ட் கால்டுவெல், அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், மனோன்மணியம் சுந்தரனார், அத்திப்பாக்கம் வெங்கடாசலனார், மறைமலை அடிகளார், சி.நடேசன், பிட்டி தியாகராயர், பனகல் ராஜா, பி.முனுசாமி, பொப்பிலி ராஜா, பி.டி.ராஜன், பெரியார், அண்ணா, கலைஞர்" உட்பட பல்வேறு ஆளுமைகள் நவீன கால திராவிட கோட்பாடுகளுக்கான அடித்தளம் அமைத்தனர்.

1924 இல் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்ற ஊரில் சோமநாதர் கோவிலுக்குள் செல்லவும் கோவிலை சுற்றியிருக்கும் தெருக்களில் நடக்கவும் கீழ் சாதியினருக்கு தடை என்ற தீண்டாமை உத்தரவுக்கு எதிராக வைக்கம் போராட்டம் நடைபெற்றது. வைக்கம் போராட்டத்தில் பெரியார், ஸ்ரீ நாராயண குரு, டி.கே.மாதவன், கேசவ மேனன், சகோதரன் ஐயப்பன் மற்றும் பல்வேறு சமூக நீதி ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு களப்பணி ஆற்றினர். வைக்கம் போராட்டத்திற்கு பிறகு இட ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கினார். நாளடைவில் நீதிக்கட்சி பெரியாரின் சமூக நீதி திட்டங்களையும், பெரியாரின் தலைமையையும், சுயமரியாதை கொள்கைகளையும் ஏற்றது. 1944 இல் நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தி கொண்டு சமூக சீர்திருத்தப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.

பெரியாருடன் ஏற்பட்ட கருத்து முரணால் திராவிடர் கழகத்தில் இருந்து விலகி 1949 இல் ராபின்சன் பூங்காவில் பெரியாரின் கொள்கைகளை உள்ளடக்கி திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற கட்சியை அண்ணா தொடங்கினார். 8 வருடங்கள் கழித்து 1957 முதல் தேர்தல்களில் போட்டியிட தொடங்கியது தி.மு.க. தேர்தல்களில் வென்று அரசியல் அதிகாரங்கள் கிடைத்த போதெல்லாம் தி.மு.க ஆரிய கொள்கைகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக சமூகத்திற்கு தேவையான பல திட்டங்களை கொண்டு வந்தது. பெரியாரின் சமூக நீதி கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வந்து சாத்தியம் ஆக்கியது திராவிட மாடல் அரசியல்.

சுயமரியாதை திருமணம், கைம்பெண் மறுமணம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, கோவிலில் தமிழ் ஆகமங்கள் ஒலிப்பது, கோவில் சொத்துக்களை பராம்பரிக்க இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை, சமசீர் கல்வி பாடத்திட்டம், நில உச்சவரம்பு சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை, மருத்துவ காப்பீட்டு திட்டம், மாற்றுத்திறனாளி நலவாரியம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு, தொழில் பூங்காக்கள் போன்ற பல்வேறு சமூக நல திட்டங்கள் திராவிட அரசியல் வாயிலாக தமிழ்நாட்டிற்கு கிடைத்தது. திராவிட அரசியலின் திட்டங்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்மாதிரியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. மக்களை படிக்க, சிந்திக்க, எழுத செய்து சமுதாயத்தின் தலைகீழாக்கத்தை நேர் செய்தது திராவிட இயக்கம். பேரரசுகள் வீழ்ந்து ஜனநாயகம் பிறந்த பிறகும் ஆரியம் பாதை மாறாமல் ஏற்றத்தாழ்வுகளை உறுதி செய்து கொண்டிருந்த நேரத்தில் தமிழ்நாட்டில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து வீறு கொண்டு கிளம்பிய இயக்கம் திராவிட இயக்கமாகும். சுருக்கமாக சொன்னால், ஆரியர்களால் பிற்படுத்தப்பட்டவர்கள் (பிற்படுத்தப்பட்டோர்), மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்), தாழ்த்தப்பட்டவர்கள் (தாழ்த்தப்பட்டோர்) ஆகிய தரப்புகளுக்கு திராவிட இயக்கம் அரணாக அமைந்தது.

எந்த சாதியிலும் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போதிக்கும் சனாதன பார்ப்பனிய மனப்பான்மை கொண்டவர்களை திராவிட இயக்கம் கடுமையாக எதிர்க்கிறது. இதற்கிடையில், "தன் விருப்பப்படி வாழ்வது சுதந்திரம், சம உரிமையுடன் வாழ்வது சமத்துவம்" என்றான நிலையில் குறிப்பிட்ட சமூக மக்களின் சுதந்திரத்தை ஆரியர்கள் மற்றும்  ஆரிய அடிமை சாதியினர் ஒடுக்கிய போது சமுதாயத்தில் சுதந்திரமும் சமத்துவமும் பாதிக்கப்பட்டது. அவ்வாறு, அரசியல் ரீதியாக ஏற்பட்ட சமுதாயப் பாதிப்பை சரி செய்ய முனைந்தது திராவிட இயக்க அரசியல் என்றால் அது மிகையாகாது.
முடிவுரை

"தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள்" என்ற வேற்றுமை ஆரிய மாடலை பிரதிபலிக்கிறது, "எல்லோருக்கும் எல்லாம்" என்ற ஒற்றுமை திராவிட மாடலை பிரதிபலிக்கிறது. எதையும் இடிக்காமல் உருவாக்குதல், எதையும் சிதைக்காமல் சீராக்குதல், யாரையும் பிரிக்காமல் இணைப்பது, யாரையும் தாழ்த்தாமல் சமமாக்குவது, யாரையும் புறக்கணிக்காமல் அரவணைப்பது என்பதே திராவிட மாடலின் சாராம்சம். இதன் மூலம், ஆரிய மாடலால் விலங்கிடப்பட்ட அடிமைச் சங்கலியை உடைத்து, சமத்துவம் மற்றும் ஒருமித்த சமூகத்தை உருவாக்க திராவிட மாடல் இடைவிடாது முயற்சிக்கின்றது.

திராவிடம் தந்த உலகப் பொதுமறை நூலான திருக்குறளின் பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் (Birth Circumstances - All Are One) என்ற வரிகளை மேற்கோள் காட்டி கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

விவரணைகள் 


திராவிடம் என்பது என்ன? ஆசிரியர் வீரமணி விளக்கம்


https://www.youtube.com/watch?v=tuUVCNosnB4


திராவிடம் என்றால் ஏன் இவ்வளவு பதட்டம்


https://www.youtube.com/watch?v=VY_tkv46CzU


தமிழ்நாட்டில் திராவிடமும் ஆரியமும் 


https://www.youtube.com/watch?v=v6FtOrg_9Nc


கொற்றவை என்னும் தமிழ்க் கடவுள்


https://dosa365.wordpress.com/2012/10/20/73/


நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த கதை


https://www.youtube.com/watch?v=SumXiNABQeI


திராவிட மாடல் VS ஆரிய மாடல் 


https://www.youtube.com/watch?v=LfNWjlrAH_E


திராவிடம் என்றால் என்ன?


https://www.youtube.com/watch?v=C6iHGD1oSxs


திராவிட மாதத்தின் கதை


https://www.youtube.com/watch?v=6ydwzVb6sfg


அண்ணாவின் கதை 


https://www.youtube.com/watch?v=9RKG_YIunt4


பெரியாரின் கதை


https://www.youtube.com/watch?v=YkYukNWjSL8


The Untouchables: Who Were They and Why Did They Become Untouchables?


Fluvial Landscapes of the Harappan Civilization


https://www.pnas.org/doi/10.1073/pnas.1112743109


Aryan Invasion Theory - Episode 1


https://www.youtube.com/watch?v=GhRAAskuZRg


Aryan Invasion Theory - Episode 2


https://www.youtube.com/watch?v=-lVwJzQnCyQ


Aryan Invasion Theory - Episode 3


https://www.youtube.com/watch?v=EuIvPljltgw


Aryan Invasion Theory - Episode 4


https://www.youtube.com/watch?v=gAe45ujMkZY


வாசித்தமைக்கு நன்றி.


வணக்கம்.

8 comments:

  1. Very nice bro Thanks👍👍👏👏

    ReplyDelete
  2. அறியப்படாத புதியன பொருந்தி அமைந்துள்ளன.மிகச்சிறப்பு.

    ReplyDelete
  3. இந்த முழு கட்டுரையையும் எனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசில் தொடர் கட்டுரையாக பதிவிட்டு முடித்துவிட்டேன்...
    மிக அருமையான சுருக்கமான வரலாறு...மீண்டும் இது போல் கட்டுரைகளை மக்களுக்கு கொடுத்துக்கொண்டே இருப்பது தமிழினத்திற்கு செய்யும் தொண்டாகும்....
    எனது வாழ்த்துக்கள்💐💐💐

    ReplyDelete
  4. அருமையான விளக்கம் & கட்டுரை

    ReplyDelete
  5. நல்ல முயற்சி தோழர்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...