தமிழ்நாட்டின் சுருக்கமான வரலாறு
சுருக்கம்
- முகவுரை
- வரலாற்றுக்கு முன்
- சங்க காலம்
- தொல்காப்பியம்
- இடைக்காலம்
- பேரரசுகளின் காலம்
- மதுரை சுல்தானகம்
- நாயக்கர் காலம்
- பாளையக்காரர்
- ஆற்காடு நவாப்
- தஞ்சை மராத்திய அரசு
- கிழக்கு இந்தியா கம்பெனி
- பிரெஞ்சுக்காரர்களை வென்ற ஆங்கிலேயர்கள்
- வேலூர் சிப்பாய் கலகம்
- 1857 சிப்பாய் கலகம்
- பிரிட்டிஷ் ஆட்சி
- சுதந்திர இந்தியா
- திராவிட அரசியல்
- முடிவுரை
- விவரணைகள்
முகவுரை
வரலாறு இல்லாமல் உலகம் இல்லை, நேற்று என்பதே ஒரு வரலாறு தான். இப்படிப்பட்ட வரலாறு என்பதை ஒரு சில பக்கங்களில் அடக்கிவிட முடியாது. இருப்பினும் தமிழ்நாட்டு வரலாறு குறித்து நான் படித்த, கேட்ட, உணர்ந்த வரலாற்று செய்திகளை என்னால் இயன்ற வரை ஒரு சில பக்கங்களில் பிறரிடம் பகிர முயற்சி செய்து இதனை எழுதியுள்ளேன். தமிழ்நாட்டின் சுருக்கமான வரலாறு என்று தலைப்பு வைக்கப்பட்டாலும் பல்வேறு செய்திகளை பேசுவதில் இருந்து விடுபட இயலவில்லை என்பதை கூற விழைகிறேன். ஆட்சிகளின் வருடங்கள் தோராயமாக குறிப்பிடப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். வரலாற்று ரீதியிலான மாற்றங்கள் என்பது கீழ்கண்ட வகையில் உலகம் முழுவதும் நடந்தேறியது.
*பழமையான பொதுவுடைமை (Primitive Communism)
*அடிமை முறையில் தனி உடைமை (மண்பாண்டம் போன்ற கைத்தொழில்)
*நிலப்பிரபுக்கள் முறையில் தனி பெருவுடைமை (வேளாண்மை வளர்ச்சி மற்றும் வரி வசூல்)
*முதலாளித்துவ முறையில் முதலாளி / தொழிலாளி பிரிவு (கூலி தரப்படாத உழைப்பு என்பது முதலாளிக்கு லாபம்)
இப்படிப்பட்ட முதலாளித்துவ முறை பின்னர் ஆடம் ஸ்மித் மூலம் கேப்பிடலிஸம் என்ற பெயரில் உலகம் முழுவதும் பரவியது. இம்முறையை எதிர்த்து கார்ல் மார்க்ஸின் கம்யூனிசம், சார்லஸ் ஃபோரியரின் சோசலிசம் முறைகள் தோன்றின.
வரலாற்றுக்கு முன் (Pre History)
* கற்காலம் (Stone Age)
* வெண்கல காலம் (Bronze Age)
* இரும்பு காலம் (Iron Age)
வரலாற்றுக்கு முன் காலகட்டத்திலே சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி காரணமாகவும் ஆரியர்களின் சூழ்ச்சி காரணமாகவும் சிந்து சமவெளி மக்கள் தென்முனையில் குறிப்பாக தமிழ்நாட்டில் குடியேறி இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் தற்போதைய தரவுகளின் படி ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி தொடர் அகழாய்வு சங்க காலத்துடன் மட்டுமல்லாமல் வரலாற்றுக்கு முன் காலகட்ட தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. மேலும் சிந்து சமவெளி மற்றும் கீழடி நாகரிகத்தில் கோவில் வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதும் கோவில் வழிபாடு என்பதே இந்த நாகரிகங்களின் வீழ்ச்சிக்கு பிறகு தான் என்பதும் அறியவருகிறது.
சங்க காலம் (கி.மு 600 - கி.பி 300)
சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் வாயிலாக சங்க காலத்தில் வைதீகம் பற்றிய குறிப்புக்கள் இல்லை என்பதும் திராவிட சமுதாயம் ஏற்ற தாழ்வு அற்ற சமுதாயமாக உருவாகி வந்திருக்கிறது என்பதும் திண்ணம். பிறகு பிற்கால பேரரசுகள் வெவ்வேறு காலக்கட்டத்தில் சைவம், வைணவம், பௌத்தம், ஜைனம் மற்றும் பிற சமயங்களை பின்பற்றி ஆட்சி புரிந்தனர். இறுதியில் ஆரியர்களின் சூழ்ச்சியால் இடைக்காலத்திற்கு பிறகு பெரும்பாலும் வைதீகமான பிராமணியத்திற்கு ஆதரவாகவே அனைத்து பேரரசுகளும் ஆட்சி புரிந்தது குறிப்பிடத்தக்கது.
முச்சங்கம்
* தலைச் சங்கம்
* இடைச் சங்கம்
* கடைச் சங்கம்
முச்சங்கம் என அறியப்படுகிற முதல் சங்கத்தில் அகத்தியரின் அகத்தியம், இடை சங்கத்தில் தொல்காப்பியரின் தொல்காப்பியம், கடை சங்கத்தில் கபிலரின் நூல்கள் மற்றும் பல்வேறு நூல்கள் தமிழின் தொன்மையான சங்க கால நூல்களாகும். தொன்மையான சங்க கால நூல்களின் அடிப்படையில் (மெசொப்பொத்தேமியா, எகிப்து போன்ற நாகரிகம் தவிர்த்து) அந்நிய மண்ணில் மொழி வளர்ந்து வந்த வேளையில் இங்கு மொழிக்குரிய எழுத்து வடிவவும் நூல்களும் சங்க காலத்திலே வந்துவிட்டதை எண்ணி பார்த்திடல் வேண்டும்.
தொல்காப்பியம் பிரதி தான் நம்மிடம் உள்ளது ஏனெனில் தொல்காப்பியத்துக்கு முன்னர் எழுதப்பட்ட நூல்கள் கடற்கோளால் அழிந்து போயிற்று என்று இலக்கிய குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது. அகத்தியம் (பேரகத்தியம் என்றும் கூறுவர்) நூலானது முழுமையாக கிடைக்கவில்லை ஆனால் ஆரியர்கள் அகத்தியம் நூலை அகஸ்தியர் முனிவருடன் இணைத்து கடலை குடித்தவர், காவேரியை உண்டாக்கியவர் என்று திரித்து விட்டனர். தமிழ் தேசியர்கள் கடற்கோளால் அழிந்தது குமரிக்கண்டம் என்று அறிவியல் சார்ந்த தரவுகள் இல்லாமல் பிரச்சாரம் செய்கின்றனர் ஆனால் உண்மையில் கண்டத்தட்டு இயக்கவியல் படி கடற்கோளால் அழிந்த கண்டம் பெரிய நிலப்பரப்பு பகுதியாக இருந்திருக்க வாய்ப்பில்லை.
தொல்காப்பியம்
முல்லை நில தலைவனாக மாயோன் (திருமால்), குறிஞ்சி நில தலைவனாக சேயோன் (முருகன்), மருதம் நில தலைவனாக வேந்தன் (பல அரசர்கள்), நெய்தல் நில தலைவனாக வருணன் (கடற்காற்று), பாலை நில தலைவியாக பாலை முதுமகள் (கொற்றவை) ஆகியவற்றை குறிக்கிறது. வேந்தன் மற்றும் வருணன் நிலைத்த அடையாளங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே ஆதி வாழ்வை குறிப்பது முல்லை, குறிஞ்சி, பாலை நிலப்பகுதி மற்றும் நாகரிக வளர்ச்சியை குறிப்பது மருதம், நெய்தல் நிலப்பகுதி. மேலும் திருமால், முருகன், கொற்றவை தமிழர்களின் வணக்க மரபுக்கு உரியவை.
பிற்காலத்தில் ஆரியர்கள் வேத நெறியின் வழியில் திருமாலை விஷ்ணு என்றும், முருகனை சுப்ரமண்யன் / ஸ்கந்தன் என்றும், வேந்தனை இந்திரன் என்றும், வருணனை ரிக் வருணன் என்றும், கொற்றவையை துர்கா / பார்வதி என்றும், பார்வதியின் மகன் சுப்ரமண்யன் என்றும், சுப்பிரமண்யனின் அண்ணன் விநாயகர் என்றும் கதைக்கட்டி இடைச்செருகல் செய்துள்ளனர்.
சேரர்கள்
சங்க கால சேரர்கள் கொங்கு நாட்டு பகுதிகளை குறிப்பாக கரூர் மற்றும் வஞ்சி நகரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர். மேற்கு தமிழ்நாட்டையும் கேரளாவையும் ஆண்டது சேரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சோழர்கள்
முற்காலச் சோழர்கள் காவிரிப்பூம்பட்டினம், உறையூர் மற்றும் திருவாரூர் நகரங்களை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற, முதல் நீர்ப்பாசன திட்டம் கொண்ட அணை என பரவலாக அறியப்படும் கல்லணையை கி.பி 1 ஆம் நூற்றாண்டில் திருச்சி அருகே கரிகால சோழன் கட்டினார். பெரிப்ளசு என்ற பண்டைய கிரேக்க நூல், முற்காலச் சோழர்களின் நாட்டையும், அதன் நகரங்கள், துறைமுகங்கள், வர்த்தகம் போன்றவற்றை போற்றி உள்ளது.
பாண்டியர்கள்
சங்க கால பாண்டியர்கள் கொற்கை மற்றும் மதுரை நகரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர். சோழர்களுக்கு தெற்கிலும் சேரர்களுக்கு கிழக்கிலும் பாண்டியர்களின் பகுதிகள் பரவி இருந்தது. மதுரையில் உள்ள வைகை நதி மற்றும் கிருதுமால் நதி தமிழ்நாட்டின் தொன்மையான நீர்நிலைகளில் ஒன்று. இலக்கியங்களில், புராணங்களில் அதிகம் பேசப்பட்ட ஊர் மதுரை என்பது குறிப்பிடத்தக்கது. சங்க கால மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்கள் சங்க கால மூவேந்தர்கள் ஆட்சியில் கோலோச்சியதாக அறியப்படுகிறது.
இடைக்காலம் (300 - 600)
சங்க கால (முற்காலம்) மூவேந்தர்களை வீழ்த்தி இடைக்காலத்தில் களப்பிரர்கள் ஆட்சிக்கு வந்தனர். தமிழ்நாட்டில் பௌத்தம், ஜைனம் உச்சத்தில் இருந்த காலகட்டம் என்பதால் ஆரியர்கள் களப்பிரர் ஆட்சியை இருண்ட காலம் என்பர். ஆனால் உண்மையில் தமிழை வளர்க்கும் விதமாக தமிழின் தலைசிறந்த இலக்கியங்களில் பற்பல நூல்கள் களப்பிரர்கள் ஆட்சி காலத்தில் தான் இயற்றப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். களப்பிரர் ஆட்சி காலத்தில் தான் மொழி, எழுத்து மற்றும் கலை தங்குதடையின்றி தமிழ்நாட்டில் வளர தொடங்கியது.
பேரரசுகளின் காலம் (600 - 1300)
களப்பிரர்களை வீழ்த்தி மூவேந்தர் இனத்தினர் மீண்டும் பேரரசுகளாக ஆட்சி பொறுப்பேற்றனர். ஆரியர்களின் வருகைக்கு பிறகு பேரரசுகளின் காலத்தில் தமிழ்நாட்டில் சிறு தெய்வ வழிபாடு குறைந்து பெருந்தெய்வ வழிபாடு பெருகியது. இப்பேரரசுகளின் ஆட்சி காலத்தில் தான் தமிழ்நாட்டில் இப்போதுள்ள பல பெருங்கோவில்கள் கட்டப்பட்டன. களப்பிரர் கால இறுதியில் தொடங்கப்பட்டு பேரரசு கால தொடக்கத்தில் கொடி கட்டி பறந்த இயக்கம் பக்தி இயக்கம் ஆகும். பக்தி இயக்கம் மூலம் சைவம், வைணவம் வளர தொடங்கிய போது பௌத்தம், ஜைனம் புகழ் குறைய தொடங்கியது. பௌத்தம், ஜைனம் துறவு வாழ்க்கையை வலியுறுத்தியதால் குடும்ப நெறியை வலியுறுத்தி சைவம், வைணவம் வளர்ந்தது. ஒரு கட்டத்தில் பௌத்தம், ஜைனம், திராவிடம் சமயத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சில மரபுகளை வைதீகம் மரபானது அபகரித்துக் கொண்டு இந்து மதம் உருவாக பக்தி இயக்கம் முக்கிய பங்காற்றியது. 6-9ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் கோலோச்சிய பக்தி இயக்கம் 15ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வியக்கம் மூலம் 63 நாயன்மார்கள் சிவனை போற்றியும் 12 ஆழ்வார்கள் திருமாலை போற்றியும் பாடல்களை இயற்றினர். 6-9 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் கோலோச்சிய பக்தி இயக்கம் 15 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலும் நுழைந்தது.
சேரர்கள்
தமிழ்நாட்டின் சில பகுதிகள் மற்றும் கேரளாவை சேரர்கள் ஆட்சி செய்து வந்தனர். சேரர்கள் காலத்தில் இந்தியாவின் முதல் மசூதி கேரளாவில் சேரமான் பெருமாள் அரசனால் கட்டப்பட்டது. சேரர்கள் ஆண்ட பகுதிகளில் மலைகள், காடுகள், மரங்கள், யானைகள், வாழைகள், கரும்புகள் போன்றவை அதிகம் காணப்பட்டது. இதன் அடிப்படையில் இன்றைய நவீன கேரளாவும் இயற்கை எழில் மிகுந்த மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
சோழர்கள்
இடைக்கால சோழர்கள் தஞ்சை, கும்பகோணம் மற்றும் சிதம்பரம் நகரங்களை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். பிற்காலச் சோழர்கள் கங்கைகொண்ட சோழபுரம், பழையாறை மற்றும் தாராசுரம் நகரங்களை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.
பேரரசுகளின் காலத்தில் தந்தையும் மகனும் இணைந்து ஆட்சி புரிவது மிகவும் குறைவாகவே நடக்கும் செயல் என்ற நிலையில், 1012 இல் ராஜராஜ சோழன் தனது மகனான முதல் ராஜேந்திர சோழனுக்கு இணை அரசனாக பட்டம் சூட்டினார். முதலாம் ராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டினார், மேலும், முதலாம் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டினார். இலங்கை, மாலத்தீவுகள், கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, போர்னியோ போன்ற பல்வேறு நாடுகளை சோழ அரசர்கள் கைப்பற்றினர். கடல் மாநகரங்களை சோழர்கள் போல எந்த இந்திய பேரரசும் கைக்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சி "பார்ப்பனர்-வேளாளர் கூட்டணி" (மதம்-வணிகம்) தரப்புக்கு பொற்காலமாக இருந்தது. மேலும், பிற சமயங்களை ஒதுக்கி, வைதீக ரீதியிலான சைவ சமயத்தை வளர்த்தார்கள். சிறுதெய்வ வழிபாட்டை ஒதுக்கி, பெருந்தெய்வ வழிபாட்டை ஊக்குவித்தார்கள். இறுதி காலங்களில் உழுகுடி, வெட்டிக்குடி, வணிகக்குடி இடையிலான பிரச்சனைகள் மற்றும் அதிக வரி விதிப்பு சோழர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.
// சாளுக்கிய சோழ வம்சம் //
ராஜராஜ சோழன், தனது மகளான குந்தவைக்கு, சாளுக்கிய நாட்டில் (இன்றைய ஆந்திராவின் கோதாவரி-கிருஷ்ணா பகுதி) வேங்கியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த விமலாதித்தனுக்கு மணம் முடித்தார். அவர்களது மகன் ராஜராஜ நரேந்திரன், முதலாம் ராஜேந்திர சோழனின் மகளான மங்கை தேவியை மணம் முடித்தார்.
முதலாம் ராஜராஜ சோழனின் எள்ளுப் பேரனான வீரராஜேந்திர சோழனின் மகனான அதிராஜேந்திர சோழன் வாரிசு இல்லாமல் இறந்ததால், கீழைச் சாளுக்கிய அரச மரபைச் சேர்ந்த ராஜராஜ நரேந்திரனின் மகன், கீழைச் சாளுக்கிய இளவரசன் "முதலாம் குலோத்துங்க சோழன்" சோழ நாட்டை ஆட்சி புரிய தொடங்கினார். இதனால், சோழர்களின் ஆட்சி சாளுக்கிய சோழ வம்சமாக மாறியது.
பாண்டியர்கள்
பிற்கால பாண்டியர்கள் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர். இவர்கள் ஆட்சி காலத்தில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது. மாபெரும் பேரரசாக விளங்கிய பாண்டியர்கள் மதுரையில் சுல்தான்களின் ஆட்சி ஏற்பட்டவுடன் தென்காசி சென்று குறுநில அரசர்களாக ஆட்சி புரிந்தனர். தென்காசி பாண்டியர்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள் நாயக்கர்களுக்கு வரி செலுத்தி வந்துள்ளனர். கி.பி 6 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசன் நின்றசீர் நெடுமாறன் உத்தரவினால் சைவரான திருஞானசம்பந்தர் நாயன்மாரிடம் வாதத்தில் தோற்று சமணர்கள் (ஜைனர்கள்) கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.
பல்லவர்கள்
பல்லவர்கள் பூர்வகுடி தமிழர்களா? அல்லது வெளியிலிருந்து வந்த தமிழரல்லாத இனத்தவர்களா? என்பதில் உறுதிமிக்க தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. ஆடல், பாடல், இலக்கியம் சார்ந்த கலைகள் பல்லவர்கள் ஆட்சி காலத்தில் நன்கு வளர்ந்தது. இடைக்கால களப்பிரர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததில் பாண்டிய அரசன் கடுங்கோன் மற்றும் பல்லவ அரசன் சிம்மவிஷ்ணு ஆகியோருக்கு முக்கிய பங்குண்டு. பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மனால் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் மகாபலிபுரம் கட்டப்பட்டது. இவரே சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் கோவிந்தராஜ பெருமாள் கோவிலை கட்டியதாக அறியப்படுகிறார். கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இக்கோவிலின் பெருமாள் சிலையை சைவ சமய கொள்கை உடைய இரண்டாம் குலோத்துங்க சோழன் கடலில் வீசினார். பின்னர் வந்த நாயக்கர் ஆட்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் பெருமாள் சிலையை கோவிலில் மீண்டும் நிறுவினார். இதன் செய்தி வடிவமே 2008 தசாவதாரம் படத்தின் ஆரம்ப கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை சுல்தானகம் (1335 - 1378)
மதுரை மாறவர்மன் குலசேகர பாண்டியன் அரசன் இறந்த போது அவரின் வாரிசுகள் வீர பாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் ஆகியோரில் யார் நாட்டை ஆள்வது? என்ற பிரச்சனையில் டெல்லி சுல்தானிடம் உதவி கோரப்பட்டது. பாண்டியர்களின் அரசியல் கொந்தளிப்பு சூழலை அறிந்து கொண்ட டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி (கில்ஜி வம்சம்) தனது பிரதிநிதியாக மாலிக் கபூர் தலைமையில் தென் இந்தியாவை ஆக்கிரமிக்க குறிப்பாக பாண்டியர்கள் தேசத்தை ஆக்கிரமிக்க வழியனுப்பி வைத்தார். மாலிக் கபூரும் பாண்டியர்களுக்கு பஞ்சாயம் செய்யாமல் பாண்டியர்களை வீழ்த்தி தென் இந்தியாவின் (குறிப்பாக தமிழ்நாடு) வளங்களை கொள்ளையடித்து டெல்லிக்கு திரும்பினார். இதன் பிறகு மதுரை தொடர்ந்து டெல்லியின் தாக்குதலுக்கு ஆளானது. நாளடைவில் டெல்லி சுல்தானிடம் இருந்து விலகி மதுரை சுல்தானகம் என்று நிறுவி தானே முடிசூட்டி கொண்டார் ஜலாலுதீன் குசன் கான்.
நாயக்கர் காலம் (1529 - 1736)
தமிழ்நாட்டில் டெல்லி இஸ்லாமியர்களின் வளர்ச்சியை தடுக்க எண்ணிய தெலுங்கு தேச விஜயநகர பேரரசு மதுரை சுல்தான்களிடம் போர் புரிந்து மதுரையை மீட்க தங்கள் பிரதிநிதியாக நாயக்கர்களை மதுரைக்கு அனுப்பி வைத்தது. சுல்தான்களிடம் இருந்து மதுரையை மீட்ட நாயக்கர்கள் மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள் என்று பிரித்து கொண்டு விஜயநகர பேரரசு கிருஷ்ணதேவராயரின் விசுவாசியாக அவரது இறையாண்மையை ஏற்று ஆட்சி புரிந்து வந்தனர். இவருக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் சிலை நிறுவப்பட்டுள்ளது. பிறகு கி.பி 16 ஆம் நூற்றாண்டில் வலுவிழந்திருந்த விஜயநகர பேரரசுக்கு அடிபணிவதை நிறுத்திக்கொண்டு சுய அரசாக நாயக்கர்கள் செயல்பட ஆரம்பித்தனர்.
ஆசியாவின் பழமையான நூலகமாக அறியப்படுகிற சரஸ்வதி மகால் நூலகம் தஞ்சை நாயக்கர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது. செஞ்சியில் விஜயநகரப் பேரரசு வலுவாக அமைய காரணமானவர் தளபதி தாமல் சென்னப்ப நாயக்கர். இதன் வெளிப்பாடாக அரசன் இரண்டாம் வெங்கட்டா சென்னப்ப நாயக்கரை சிற்றரசர் ஆக்கியதோடு வேலூர் அருகே காலி இடங்களை பரிசாக அளித்தார். பிற்காலத்தில் அந்த காலி இடங்களை கிழக்கு இந்தியா கம்பெனி 22 ஆகஸ்ட் 1639 அன்று தாமல் சென்னப்ப நாயக்கரின் வாரிசுகளிடம் விலைக்கு வாங்கியது. அதுவே சென்னப்ப நாயக்கரின் பெயரில் அன்றைக்கு சென்னபட்டணம் என்றும் இன்றைக்கு சென்னை என்றும் அழைக்கப்படலாயிற்று. இவ்வகையில் சென்னை தினம் ஆண்டுதோறும் 22 ஆகஸ்ட் அன்று கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை மாநகரம் விரிவாக்கம், மீனாட்சி அம்மன் கோவில் விரிவாக்கம், சித்திரைத் திருவிழா, மீனாட்சி அம்மன் கோவில் உள்ளே அனைத்து சாதி மக்களும் வணிகக் கடை வைத்து கொள்ளலாம் என்ற உத்தரவு எல்லாம் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் தான் அரங்கேறியது. மதுரை நாயக்கர் ஆட்சியில் குறிப்பிடத்தக்கவர்கள் விஸ்வநாத நாயக்கர், திருமலை நாயக்கர், இராணி மங்கம்மாள் மற்றும் இராணி மீனாட்சி.
பாண்டியர்களின் எழுச்சியை அடக்கவும் நிர்வாக வசதிக்காகவும் மதுரை விஸ்வநாத நாயக்கரின் முதன்மை மந்திரி அரியநாத முதலியார் பாண்டிய நாட்டை 72 பாளையங்களாக பிரித்தார். மீனாட்சி அம்மன் கோவிலில் அரியநாத முதலியார்க்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. 72 பாளையங்களை சேர்ந்தவர்களே சேதுபதி, கட்டபொம்மன், ஊமைத்துரை, பூலித் தேவன், வேலு நாச்சியார், குயிலி, மருதநாயகம், தீரன் சின்னமலை மற்றும் பலர். தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சியாளர்கள் ஆண்ட போதிலும் பாளையக்காரர் அமைப்பு குலையவில்லை காரணம் சிறிய மாகாணங்களில் ஆட்சி புரிந்து வந்த பாளையக்காரர்களின் வலுவான அரசியல் கட்டமைப்பு பேரரசுகளுக்கு தேவைப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் முதலாக போர்க்குரல் எழுப்பியது பாளையக்காரர்களே. இவ்வகையில் ஆங்கிலேயர்கள் தென் இந்தியாவை முழுமையாக கைப்பற்ற வெகு நாட்கள் தடையாக இருந்தது இந்த பாளையக்காரர் அமைப்பே என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் பாளையக்கார அமைப்பை போலவே ஆந்திரத்தில் ராயலசீமா, கர்நாடகத்தில் மைசூரு (திப்பு சுல்தான்), கேரளத்தில் திருவிதாங்கூர் (மார்த்தாண்ட வர்மா) / கோட்டயம் (பழசி ராஜா வர்மா) போன்ற பல்வேறு பாளையக்கார குழுக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்தனர்.
பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பன், சித்திரங்குடி மயிலப்பன், விருப்பாச்சி கோபாலர், கேரள பழசி ராஜா வர்மா, மைசூரு தூந்தாகி வாக் ஆகியோரை இணைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட தென்னிந்திய கூட்டமைப்பை மருது சகோதரர்கள் உருவாக்கினர். புதுக்கோட்டை அரசன் தொண்டைமான் சூழ்ச்சியால் ஆங்கிலேயர்களிடம் பிடிபட்ட மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801 அன்று தூக்கிலிடப்பட்டனர். இதனை தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து தொடர்ந்து போராடிய பாளையக்காரர் அமைப்புக்கு 1801 இல் ஆங்கிலேயர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களிடம் பிடிபடவும் பாளையக்காரர் அமைப்பு சீர்குலையவும் முக்கிய காரணமாக அமைந்தவர் புதுக்கோட்டை அரசன் தொண்டைமான் ஆவார்.
இதற்கு பிறகு ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்த பாளையக்காரர்கள் பலரும் அதிகார பசியால் ஆங்கிலேயர்களிடமே நட்பாக பழகி அவர்களின் புதிய சட்ட திருத்தங்களுடன் சமஸ்தானங்களை பெற்று ஜமீன்தார்கள் / நிலக்கிழார்கள் என்ற பெயரில் பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்தனர். பின்னர் 1969 இல் பிரதமர் இந்திரா காந்தி ஜமீன்தார்கள் / நிலக்கிழார்கள் சலுகைகளை ஒழித்து சமஸ்தானம் இடங்களை அரசுடைமையாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மராத்திய அரசு (1674 - 1855)
தஞ்சை விஜயராகவ நாயக்கர் அவரது மகளை தமக்கு திருமணம் செய்து வைக்க மறுத்த காரணத்தால் கோபம் கொண்ட மதுரை சொக்கநாத நாயக்கர் தஞ்சை விஜயராகவ நாயக்கரின் தலையை துண்டித்து அவர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மதுரை சொக்கநாத நாயக்கர் தன் தம்பி அழகிரி நாயக்கரை தஞ்சை நாயக்கராக நியமனம் செய்தார். சில காலம் மதுரைக்கு உட்பட்டு ஆண்டு வந்த அழகிரி நாயக்கர் பிறகு சுயேச்சையாக ஆளத் தொடங்கினார். வேதியர் வெங்கண்ணா மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில் அழகிரி நாயக்கரை வீழ்த்த எண்ணி விஜயராகவ நாயக்கரின் மகன் செங்கமலதாச நாயக்கரை தஞ்சை அரசனாக்க பீஜப்பூர் சுல்தானிடம் உதவி கோரினார்.
கோரிக்கைக்கு செவி சாய்த்து பீஜப்பூர் சுல்தான் தனது பிரதிநிதியாக வெங்கோஜியை (மராத்திய பேரரசன் சத்ரபதி சிவாஜியின் தம்பி) தஞ்சைக்கு அனுப்பி வைத்தார். வெங்கோஜி அழகிரி நாயக்கரை எளிதில் வீழ்த்தி செங்கமலதாச நாயக்கரை அரசனாக்கினார். செங்கமலதாசரும் அரசவையில் பணிபுரிய மந்திரி பதவி தராததால் அவரை வீழ்த்த எண்ணிய வேதியர் வெங்கண்ணா வெங்கோஜியை சந்தித்து நீங்களே தஞ்சையை ஆள வேண்டும் என்று யோசனை கூறினார். வெங்கண்ணாவின் தூண்டுதலின் பெயரில் செங்கமலதாசரை வீழ்த்திய வெங்கோஜி பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து விலகி தனி அரசாக 1674 அன்று தஞ்சை மராத்திய அரசை நிறுவினார். 1674 முதல் 1799 வரை தனி அரசாகவும் பிறகு ஆங்கிலேயர்களின் ஒருங்கிணைந்த கிழக்கு இந்தியா கம்பெனியின் கட்டுப்பாட்டில் 1855 வரை தஞ்சை மராத்தியினர் ஆட்சி புரிந்து வந்தனர். தென் நாட்டவர்களை தாண்டி வட நாட்டவர்களான மராத்தியர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி புரிய வேதியர் வெங்கண்ணாவின் அரசியல் சூழ்ச்சி முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்காடு நவாப் (1692 - 1867)
முகலாய அரசன் அவுரங்கசீப் கர்நாடக பகுதிகளில் வரிவசூல் செய்ய நவாப்புகளை நியமித்தார். அவ்வாறு நியமிக்கப்பட்ட நவாப்புகள் வரிவசூல் செய்ததுடன் விஜயநகர, மராத்திய, நாயக்க அரசுகளையும் வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் முகலாய அரசு பிரதிநிதியாக இருந்து வந்த நிசாம்-உல்-முல்க் 1724 இல் இருந்து ஹைதராபாத் நிசாம் என்ற சுயாட்சியை நிறுவினார். 1765 இல் முகலாய பேரரசிற்கு அடிபணியாமல் ஹைதராபாத் நிசாம் உடன் நட்பு பாராட்டி ஆற்காடு நவாப்புகளும் தங்களை தனி ராஜ்ஜியமாக அறிவித்து கொண்டனர். தென் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நுழைய ஆற்காடு நவாப்புகளின் அரசியல் சச்சரவுகள் முக்கிய காரணம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1731 இல் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்ததால் மனைவி மீனாட்சி தமது நாயக்கர் குடும்பத்தை சேர்ந்த அரசு பிரதிநிதி பங்காரு திருமலை நாயக்கர் மகனை தத்தெடுத்தார். வளர்ப்பு மகன் வளரும் வரை நாயக்கர் ஆட்சியை வழி நடத்தும் ராணியாக மூடி சூட்டி கொண்டார் மீனாட்சி.
வளர்ப்பு மகனின் தந்தை பங்காரு திருமலை நாயக்கர் ஆட்சி பொறுப்பை ராணியிடம் இருந்து தனக்கு வாங்கி தரும்படி ஆற்காடு நவாப் தோஸ்த் அலி கானிடம் உதவி கேட்டார். பங்காரு திருமலை நாயக்கர் உதவி கேட்டதற்காக தோஸ்த் அலி கான் தனது மகன் சப்தார் அலி கானை பஞ்சாயம் செய்ய அனுப்பி வைத்தார். பங்காரு திருமலை நாயக்கரை அரசராக அறிவித்துவிட்ட பிறகு தன் உறவினர் சந்தா சாகிப்பை (தோஸ்த் அலி கானின் மருமகன்) மேலும் ஆக வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க கூறிவிட்டு சப்தார் அலி கான் ஆற்காடு திரும்பினார். இதற்கிடையில் ராணி மீனாட்சி சந்தா சாகிப்பிடம் தனக்கு மூடி சூட்டிட உதவி கேட்டார். ராணி மீனாட்சிக்கு உதவுவதாக கூறிவிட்டு வலுவிழந்த அரசியல் சூழலை பயன்படுத்தி சந்தா சாகிப் பங்காரு திருமலை நாயக்ககர் ஆட்சியை வீழ்த்தி ராணி மீனாட்சியை கைது செய்து ஆற்காடு நவாப் ஆட்சியை நிறுவினார். தோல்வி காரணமாக ராணி மீனாட்சி தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக 1867 இல் ஆற்காடு நவாப் அரச மரபை சார்ந்த ஆஸிம் ஜா பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவிடம் ஒப்பந்தம் செய்ததன் அடிப்படையில் நவாப் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை பிரிட்டிஷ் பெற்றனர். அதற்கு பிரிட்டிஷ் அரசால் ஆர்காடு இளவரசர் என்றும் அங்கிகரிக்கப்பட்டு ஓய்வுதியமாக தொகையினை ஆஸிம் ஜா பெற்றார்.
கிழக்கு இந்தியா கம்பெனி
கிழக்கு இந்தியா கம்பெனி 1608 இல் முகலாய பேரரசின் அனுமதியுடன் இந்தியாவில் சூரத் பகுதியில் தங்களது ஜவுளி வணிகத்தை தொடங்கினர். 1612 இல் போர்ச்சுகல் படைகளை வீழ்த்தி சூரத்தில் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலையை நிறுவியது பரவலாக அறியப்பட்டாலும் அதற்கு முன்பே 1611 இல் தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆந்திராவில் மச்சிலிப்பட்டணம் பகுதியில் வணிக தொழிற்சாலைகளை அமைத்தனர். தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் வணிகம் செய்யும் நோக்கில் 1640 இல் சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை (இன்றைய தலைமை செயலகம்) ஒன்றை நிறுவி வணிகம் செய்து வந்தனர். 1746 இல் பிரெஞ்சுக்காரர்கள் சென்னையை கைப்பற்றினர். இதனால் கிழக்கு இந்தியா கம்பெனி கடலூர் பகுதிக்கு இடம் மாறி செயின்ட் டேவிட் கோட்டையில் இருந்து கொண்டு வணிகம் செய்து வந்தது. பிறகு மீண்டும் 1748 இல் ஆங்கிலேய படைகள் சென்னையை வெற்றிகரமாக மீட்டனர்.
வங்காள நவாப்பின் படை பிரெஞ்சுக்காரர்ககளின் படை ஆதரவுடன் கல்கட்டாவில் ஆங்கிலேயர்களை தொடர்ந்து தாக்கினர். வங்காள நவாப்பின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் ஆங்கிலேய படைகள் வங்காளத்தை தாக்கினர். இதற்கிடையில் ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய படைகளுடன் வங்காள நவாப்பின் தளபதி மீர் ஜாஃபர் அணிமாறியதால் கிழக்கு இந்தியா கம்பெனி வங்காளத்தை எளிதில் வென்றது. 1757 பிளாசி சண்டை என அழைக்கப்படும் இதுவே கிழக்கு இந்தியா கம்பெனியின் முதல் இந்திய அரசியல் தலையீடு மற்றும் வெற்றி என்று கருதப்படுகிறது. இந்தியாவில் கிழக்கு இந்தியா கம்பெனி வலுவாக கால் ஊன்ற "ராபர்ட் கிளைவ்" என்பவரின் வியூகங்கள் முக்கிய காரணமாகும்.
பிரெஞ்சுக்காரர்களை வென்ற ஆங்கிலேயர்கள்
1744 இல் ஆற்காடு நவாப் சப்தர் அலி கான் மகன் இரண்டாம் சததுல்லா கான் மரணித்த பிறகு அன்வருதீன் கான் ஆங்கிலேயர்களுடன் நெருக்கம் காட்டி நவாப் ஆனார். 1749 இல் அன்வருதீன் கான் மரணித்த பிறகு ஆங்கிலேயர்கள் அன்வருதீன் கான் மகன் முகமது அலி கான் வாலாஜாவை ஆற்காடு நவாப்பாக ஆதரித்தனர், பிரெஞ்சுக்காரர்கள் சந்தா சாகிப் ஆற்காடு நவாப்பாக ஆதரித்தனர்.
பிரெஞ்சு உதவியுடன் பலம் பொருந்திய சந்தா சாகிப் ஆற்காடு நவாப்பாக பதவியேற்றார். அரசியல் சூழல் தமக்கு சாதகமா இல்லாததால் வெளியுறவு தொடர்பை அறுத்துவிட்டு முகமது அலி கான் வாலாஜா திருச்சி கோட்டைக்குள் தங்கி கொண்டு ஆங்கிலேயர்கள் உதவியை நாடினார். இச்சமயத்தில் திருச்சி கோட்டையை கைப்பற்ற சந்தா சாகிப் தமது வீரர்களுடன் சென்ற நேரத்தில் சந்தா சாகிப்பின் தலைமை நகரான ஆற்காட்டை ராபர்ட் கிளைவ் ஆங்கிலேய படைகளுடன் சென்று 1751 இல் கைப்பற்றினார். இப்படி தோல்வி அடைந்த பிறகு ஆங்கிலேயர்களின் தொடர் தாக்குதலில் இருந்து தப்பிக்க தஞ்சை சென்ற சந்தா சாகிபை 1752 இல் தஞ்சை மராத்திய அரசன் பிரதாப் சிங் உத்தரவின் பெயரில் கொலை செய்யப்பட்டார்.
பிறகு 1754 இல் ஒருங்கிணைத்த ஆற்காடு நவாப்பாக முகமது அலி கான் வாலாஜா பதவியேற்றார். 1765 இல் முகலாயப் பேரரசிற்கு அடிபணிவதை மறுத்து நவாப் ஆட்சியை சுதந்திர அரசாக முகமது அலி கான் வாலாஜா அறிவித்து கொண்டார். தனது சமஸ்தானங்களை விரிவுபடுத்தவும் கட்டுப்படுத்தவும் கிழக்கு இந்தியா கம்பெனி படைகளை பயன்படுத்தி கொள்ள ஆங்கிலேயர்களுடன் நட்புறவை மேற்கொண்டார். ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் சண்டையில் ஆங்கிலேயர்களை ஆதரித்து முகமது அலி கான் வாலாஜா கடனில் மூழ்கினார். அதன் பலனாக கிழக்கு இந்தியா கம்பெனிக்கு தனது நாட்டின் பல பகுதிகளை விற்றார்.
1795 இல் முகமது அலி கான் வாலாஜா மரணித்த பிறகு மகன் உம்தத் உல் உமாரா ஆற்காடு நவாப்பாக பதவியேற்று திப்பு சுல்தானிடம் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிரமாக போராடினார். 1799 இல் திப்பு சுல்தான் மரணித்தார். 1801 இல் உம்தத் உல் உமாரா மரணித்தார். பிறகு ஆற்காடு நவாப்பாக 1801 இல் அஸிம் உத் டவுலா (உம்தத் உல் உமாரா உறவினர்) பதவியேற்றார். புதிதாக பதவியேற்ற நவாப்பிடம் உம்தத் உல் உமாரா ஆற்காடு நவாப்பாக திப்பு சுல்தானுடன் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதாக குற்றம் சாட்டி ஆற்காடு பகுதிகள் முழுவதையும் எழுதி வாங்கி கொண்டது கிழக்கு இந்தியா கம்பெனி.
வேலூர் சிப்பாய் கலகம்
குறிப்பு - கலகம், கிளர்ச்சி, புரட்சி, போர் போன்ற வெவ்வேறு சொற்கள் தரும் பொருளானது அதிகாரத்திற்கு எதிரான போராட்டங்கள் எனப்படும்.
1805 இல் கிழக்கு இந்தியா கம்பெனி அதிகாரி வேலூர் கோட்டையில் பணியில் இருந்த வீரர்களிடம் சமய அடையாளங்கள் கூடாது எனவும், ஐரோப்பிய ராணுவ உடைகளை அணியவும், குழாய் வடிவ தொப்பியுடன் தோல் பட்டையைப் அணியவும் உத்தரவிட்டார். இப்படி சமய கொள்கைகளில் ஆங்கிலேயர்களின் தலையீட்டை எதிர்த்து வேலூர் சிறையில் இருந்த திப்பு சுல்தான் மகன்களின் ஆதரவுடன் வேலூர் சிப்பாய் கலகம் வெடித்தது. 1857 சிப்பாய் கலகத்திற்கு 1805 வேலூர் சிப்பாய் கலகம் முன்னோடியாக கருதப்படுகிறது.
1857 சிப்பாய் கலகம்
சிப்பாய் கலகம் பல்வேறு மாநிலங்களில் பரவ காரணங்கள்,
*வணிக நோக்கங்களுக்காக இந்தியா வந்த கிழக்கு இந்தியா கம்பெனி இந்தியாவின் அரசியல் மற்றும் சமய நடவடிக்கைகளில் தலையிட்டது.
*இந்தியாவின் வளங்களை எடுத்து கொண்டாலும் இந்தியர்களுக்கு பொருளாதார நன்மைகளை செய்யாதது.
*இந்திய வீரர்கள் என்பீல்டு வகை துப்பாக்கிகளை உபயோகிக்க மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களின் உறையை வாயால் கடித்து அகற்ற வேண்டுவதால் சமய சார்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கருதப்பட்டது.
பெருந்திரள் மக்கள் போராட்டமாக சிப்பாய் கலகம் மாறினாலும் ஆங்கிலேய படைகள் இதனை முறியடித்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சி
சிப்பாய் கலகத்தை தொடர்ந்து 1857 முதல் கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சி நேரடி பிரிட்டிஷ் ஆட்சிக்கு கைமாறியது. பிரிட்டிஷ் ஆட்சியிலும் இந்தியர்களுக்கு நன்மைகள் பயக்கவில்லை. இந்தியாவில் விடுதலை வேண்டி பல புரட்சி இயக்கங்கள் தோன்றின. இதில் சில இந்திய விடுதலை இயக்கங்கள் ஜெர்மனி (இந்து - ஜெர்மானிய சதியும் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் ரஷ்ய போல்ஷெவிக்குடன் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அதனை விசாரப்பதற்கு ரௌலட் கமிட்டியை அமைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். இவ்விசாரணையின் முடிவாக காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை விசாரணையின்றி பிணை இல்லாமல் இரண்டு ஆண்டுகள் வரை சிறையிலிடவும், கூட்டங்களில் பங்கெடுக்கத் தடை விதிக்கவும், நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு மேல்முறையீட்டை மறுக்கவும் ரௌலட் சட்டம் மார்ச் 1919 இல் இயற்றப்பட்டது. ஏப்ரல் 1919 இல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜாலியன் வாலாபாக் பகுதியில் ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராடும் விதமாகக் கூடியிருந்த பொதுமக்களை ராணுவ அதிகாரி ஜெனரல் டயர் உத்தரவின் பெயரில் ஆங்கிலேய படைகளின் துப்பாக்கியால் சுடப்பட்டு சுமார் 400 பேர் மரணித்தனர், 1200 பேர் படுகாயமடைந்தனர். இதுவே ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முன்னரே தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களின் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக அரங்கேறிய பெருங்காமநல்லூர் படுகொலை, மருது சகோதரர்களை வேதனைக்குள்ளாக்க சிவகங்கையில் அரங்கேறிய படுகொலை போன்ற துன்பியல் சம்பவங்கள் பலருக்கும் தெரியாமல் போனது ஆய்வுக்குரியதாகும்.
ரௌலட் சட்டத்திற்கு எதிராகவும், ஜாலியன்வாலாபாக் படுகொலையை கண்டித்தும், இந்திய விடுதலையை வேண்டியும் காந்தி ஒத்துழையாமை இயக்கம் என்ற மக்கள் இயக்கத்தை 1920 இல் முன்னெடுத்தார். பிப்ரவரி 1922 இல் இப்போராட்டம் உத்தர பிரதேசத்தில் நடந்த போது வன்முறை (சௌரி சௌரா) வெடித்து பல பொது மக்களும் காவலர்களும் இறந்த காரணத்தினால் காந்தி இப்போராட்டத்தை கைவிட்டார். பிரிட்டிஷ் அரசும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு மார்ச் 1922 இல் ரௌலட் சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது.
பிரிட்டிஷ் அரசு விதித்த உப்பு வரிக்கு எதிராக மார்ச் 1930 இல் உப்புச் சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை) மற்றும் 1942 இல் வெள்ளையனே வெளியேறு என்ற அறவழி போராட்டத்தை அறிவித்தார் காந்தி. நேதாஜி ஆயுதப்படை வழியில் அந்நியர்கள் உதவியுடன் ஆங்கிலேயர்களை எதிர்க்க ஆயுதமானார். இவ்வாறு தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை பல்வேறு தலைவர்கள் முன்னெடுத்தனர். இறுதியில் இரண்டாம் உலக போர் (செப்டம்பர் 1939 - செப்டம்பர் 1945) முடிவில் பிரிட்டிஷ் அரசாங்கம் வென்றாலும் பொருளாதார சிக்கலில் தவித்ததை (காலனிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட செலவினங்கள் கூடியதால்) தொடர்ந்து தன்னுடைய காலனிகளை சுதந்திரமாக நாடாக விடுவித்து வந்தது. அவ்வகையில் இந்தியர்களின் தொடர் போராட்ட வாயிலாகவும் பேச்சுவார்த்தை வாயிலாகவும் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்து 15 ஆகஸ்ட் 1947 நள்ளிரவு அன்று சுதந்திரம் வழங்கியது.
சுதந்திர இந்தியா
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவியேற்றார் ஜவகர்லால் நேரு. சுதந்திர இந்தியா ஜனநாயக நாடாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நடுவண் அரசு - மாநில அரசுகள் செயல்படும் என்பதை உறுதி செய்தவர் நேரு. மேலும் ஐந்தாண்டுத் திட்டங்கள், IIT, IIM, AIIMS, பெருநிறுவனங்கள், மதசார்பின்மை, சோசலிசம், வெளியுறவு கொள்கை உட்பட அடிப்படை இந்திய கட்டமைப்பு நேருவின் 18 ஆண்டு கால ஆட்சியில் நிகழ்த்தப்பட்டது. உலகில் உள்ள வளரும் நாடுகளை ஓர் அணியாக ஒருங்கிணைக்க முயன்ற பெருமைக்குரியவர் நேரு. சுதந்திர இந்தியாவுக்கு உலகின் பிரசித்தி பெற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் வடிவமைத்தார். 01-11-1956 அன்று மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இன்று இந்தியாவில் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. நேருவை தொடர்ந்து கீழ்கண்ட பிரதமர்கள் இந்தியாவை ஆண்டு உள்ளனர்.
*லால் பகதூர் சாஸ்திரி (ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்துடன் விவசாயிகள் வளர்ச்சி)
*இந்திரா காந்தி (வங்கி தேசியமயமாக்கல், கார் தொழிற்சாலை, மிதமான வரி, பசுமைப் புரட்சி)
*மொரார்ஜி தேசாய் (Coco-Cola மற்றும் IBM போன்ற அந்நிய நிறுவனங்கள் வெளியேற்றம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை)
*ராஜிவ் காந்தி (உயர்ரக தொழில்நுட்பம், முறையான சீர்திருத்தங்கள், பட்ஜெட் விரிவாக்கம்)
*வி. பி. சிங் (பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, இந்திய அமைதி படையை திரும்ப பெறுதல்)
*நரசிம்ம ராவ் (தாராளமயமாக்கல், தேசிய பாதுகாப்பு, அணு பாதுகாப்பு, பாபர் மசூதி இடிப்பு சம்பவம்)
*வாஜ்பாய் (வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல், தனியார்மயமாக்குதல், தங்க நாற்கரச் சாலைத் திட்டம், அணுகுண்டு சோதனை)
*மன்மோகன் சிங் (மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நேரடி அந்நிய முதலீடு, சுகாதாரமான இந்தியா, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், 100 நாள் வேலைத்திட்டம்)
திராவிட அரசியல்
1924 இல் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்ற ஊரில் சோமநாதர் கோவிலுக்குள் செல்லவும் கோவிலை சுற்றியிருக்கும் தெருக்களில் நடக்கவும் கீழ் சாதியினருக்கு தடை என்ற தீண்டாமை உத்தரவுக்கு எதிராக வைக்கம் போராட்டம் நடைபெற்றது. வைக்கம் போராட்டத்தில் பெரியார், ஸ்ரீ நாராயண குரு, டி.கே.மாதவன், கேசவ மேனன், சகோதரன் ஐயப்பன் மற்றும் பல்வேறு சமூக நீதி ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு களப்பணி ஆற்றினர். 1924 இல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் தன் பொறுப்புகளை ராஜாஜியிடம் கொடுத்துவிட்டு இப்போராட்டத்தில் களப்பணி ஆற்றினார். வைக்கம் போராட்ட காலகட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சாதிய பாகுபாடுகளை ஊக்குவிப்பதை எண்ணி வருந்தி காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி சுயமரியாதை இயக்கத்தை 1925 இல் தொடங்கினார் பெரியார். தமது குடிஅரசு பத்திரிகையில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக வளரும் நீதிக்கட்சி (நீதிக்கட்சி அல்லது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1917) செயல்பாடுகள் குறித்து பாராட்டி எழுதி வந்தார். நாளடைவில் நீதிக்கட்சியானது பெரியாரின் சமூக நீதி திட்டங்களையும், பெரியாரின் தலைமையையும், சுயமரியாதை கொள்கைகளையும் ஏற்று கொண்டது. 1944 இல் நீதிக்கட்சியானது திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தி கொண்டு தொடர்ந்து சமூக சீர்திருத்தங்களில் ஈடுபட தொடங்கியது.
1949 இல் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து முரணால் விலகி ராபின்சன் பூங்காவில் பெரியாரின் கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட முன்னேற்ற கழகத்தை (தி.மு.க) தொடங்கினார் அண்ணா. 8 வருடங்கள் கழித்து 1957 முதல் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டது தி.மு.க. பெரியார் காட்டிய பாதையில் அண்ணா சென்ற வழியில் கலைஞர், கே.அன்பழகன், ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன், கண்ணதாசன், மதுரை முத்து, சத்தியவாணி முத்து, சி.பி.சிற்றரசு, டி.கே.சீனிவாசன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, கே.கே.நீலமேகம், ராம.அரங்கண்ணல், எஸ். சேதுராமன், எஸ்.மாதவன், ராம.சுப்பையா, முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், பண்ருட்டி ராமச்சந்திரன், சாதிக் பாஷா, காரோட்டி கண்ணப்பன், ராஜாராம், சுப்பு, ரகுமான் கான், துரை முருகன் மற்றும் எண்ணற்ற தோழர்கள் தி.மு.க கட்சியை வலுப்படுத்தினர்.
மார்ச் 1967 இல் தி.மு.க முதல் முதலாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்றார். ஒரு ரூபாய்க்கு ஒருபடி அரிசி, சுயமரியாதை திருமணம், கல்வி வளர்ச்சி, தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் - ஆங்கிலம் கொண்ட இருமொழி கொள்கை உட்பட பல்வேறு சட்டங்களும் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து 18-07-1967 அன்று தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 14-01-1969 அன்று மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது. தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுதலுக்கு சங்கரலிங்கனார், ம.பொ.சி, அண்ணாதுரை ஆகியோரின் பங்கு அளப்பரியது.
1961 இல் தி.மு.கவில் இருந்து வெளியேறி ஈ.வெ.கி. சம்பத் தமிழ் தேசியக் கட்சிவை தொடங்கினார். 1972 இல் தி.மு.கவில் இருந்து வெளியேறி எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.கவை தொடங்கினார். 1994 இல் தி.மு.கவில் இருந்து வெளியேறி வைகோ ம.திமு.கவை தொடங்கினார். மேலும் திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் சார்ந்து பல்வேறு இயக்கங்கள் தமிழ்நாட்டில் தோன்றின. இத்தனை பிளவுகள் ஏற்பட்ட போதிலும் 1994 இல் காங்கிரஸ் கட்சி தலைவர் கபில் சிபல் பேசுகையில் “இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு கட்சிகள் இருப்பினும் தி.மு.க அ.தி.மு.க மட்டும் தொடர்ந்து கூடுதல் பலத்துடன் இருப்பதற்கு காரணம் பிற கட்சிகளில் இல்லாத வகையில் அடிப்படை கட்டுமானம் வலுவாக இருப்பதோடு தொண்டர்களும் உணர்வாளர்களாக இருப்பதே” என்றார். ஏனெனில் சமூகத்தில் ஆரியர்களின் நுண்ணரசியலால் சமநிலை தவறிய போது அங்கே நீதியின் வழியில் நின்று சமத்துவத்தை வளர்த்தெடுத்த இயக்கம் திராவிட இயக்கமாகும்.
முடிவுரை
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சங்க காலத்திலிருந்தே திராவிட சித்தாந்தம் தழைத்தோங்கி வளர்ந்து வந்துள்ளளது. வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய இந்திய தேசிய பாடலான ஜன கண மன பாடலில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் பகுதிகளை திராவிட என்றே குறித்திருப்பார். திராவிடம் என்பது இனத்தை, நிலத்தை, மொழியை, சமூக நீதியை குறிப்பதாகும். இந்தியா விடுதலை பெற்ற பிறகு வர்ண அமைப்புக்கும், உயர் சாதிக்கும் முக்கியத்துவம் கேட்டு சில தலைவர்கள் முனைந்த போது விதிவிலக்காக தமிழ்நாட்டில் சமூக நீதி குரல் ஓங்கி ஒலித்தது.
இந்திய சுதந்திரத்திற்கு ஆதரவாக 1857 சிப்பாய் கலகம், காங்கிரஸ் போராட்டம், பல்வேறு விடுதலை இயக்கங்கள், பல்வேறு தலைவர்கள், பல்வேறு மாநிலங்கள் குறிப்பிடப்பட்டாலும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் குரல் எழுப்பியதாக மட்டுமல்லாமல் முதல் போராட்டம் நடத்தியதாகவும் அறியப்படுகிற மாநிலம் தமிழ்நாடு மாநிலம். அதற்கு சான்றாக அமைவது பாளையக்காரர் போராட்டங்கள் மற்றும் வேலூர் சிப்பாய் கலகம். இதற்கிடையில், பாளையக்காரர் அமைப்பானது சாதி அரசியல் செய்ததும் ஆய்வுக்குரியதாகும்.
சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் வெளி மாநிலங்களை வெளி நாடுகளை கைப்பற்றி வந்த நிலையில் இறுதி காலங்களில் தமிழ்நாடு பேரரசுகளின் அரசியல் சூழல் பலவீனம் அடைய வெளி மாநில பேரரசுகள் தமிழ்நாட்டை குறி வைத்தனர். பேரரசுகளின் வீழ்ச்சிக்கு பிறகு வெளியில் இருந்து வந்து தமிழ்நாட்டை வெகுகாலம் ஆண்டது நாயக்கர்களே. அவ்வகையில் இன்றைய தமிழர்கள் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் பண்பாடும் நாயக்கர்களின் கலாச்சாரமும் கொண்ட பிரிவினர் ஆவர்.
உலகம் முழுவதும் ஜனநாயகமோ சர்வதிகாரமோ யார் கீழாவது மக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது இயல்பான நடைமுறை அரசியலாகும். இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால் அரசின் ஆட்சியும் அதிகாரமும் மக்களின் பண்பாடும் கலாச்சாரமும் பொருளாதாரமும் பிண்ணி பிணைந்தது. அவ்வகையில் ஆட்சியாளர்களால் மக்களுக்கு துன்பம் வரும் போதெல்லாம் புரட்சி பிறந்திருக்கிறது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் தேர்தல் வாய்ப்பற்ற மன்னராட்சியில் இருந்து விடுபட்டு இன்று தேர்தலில் ஓட்டளிப்பதன் மூலம் நமக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் முறைக்கு வந்துள்ளோம். ஆகவே வாழ்வில் என்றும் மறக்காமல் வாக்களிப்பீர்.
விவரணைகள்
திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பு
சிந்து சமவெளியின் தொடர்ச்சி கீழடி
சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்?
கொற்றவை என்னும் தமிழ்க் கடவுள்!
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
Good collection.... author has taken lot of efforts to consolidate the history and it has come out nicely
ReplyDeleteGood consolidated facts of Tamilnadu history.
ReplyDelete