Chocks: சிந்து சமவெளியின் தொடர்ச்சி கீழடி

Tuesday, September 22, 2020

சிந்து சமவெளியின் தொடர்ச்சி கீழடி

சிந்து சமவெளியின் தொடர்ச்சி கீழடி
சுருக்கம் 
  1. சிந்து சமவெளியும் சில குறிப்புகளும்
  2. கோயில் தான் அரண்மனையா?
  3. பாண்டியர்களும் அரண்மனையும்
  4. மதுரையும் பழங்கால குறிப்புகளும் 
  5. கீழடியின் கீழ்
  6. மதுரை கிராமமல்ல
  7. முடிவுரை 
  8. விவரணைகள்
சிந்து சமவெளியும் சில குறிப்புகளும்

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து சமவெளி எழுத்துக்களை ஆராயும் போது இரு சதுர வடிவில் உள்ள எழுத்தை கவனித்து அதில் வெளியே உள்ள சதுரம் “கோட்டை” என்றும் உள்ளே இருக்கின்ற சதுரம் “பிரதான குடியிருப்பு” ஆக இருக்கலாம் என்றும் பொருள் கூறினார். 

சேரர்கள் உயரதிகாரிகளாகவும் சோழர்கள் அறிவுரையாளர்களாகவும் பாண்டியர்கள் குடியிருப்புவாசிகளாகவும் குடும்பம் குடும்பமாக தொடக்க காலத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக நாட்டுப்புற குறிப்புகள் உள்ளது என்றும் அகத்தியர் வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவுக்கு 18 குடும்பங்களை அழைத்து வந்ததாக குறிப்புகள் உள்ளது என்றும் தெரிவிக்கிறார். அவ்வகையில் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்றும் யூகிக்கிறார்.

பண்டைய எகிப்து நாகரிகம் பற்றிய தொல்லியல் ஆராய்ச்சியில் எகிப்திய எழுத்துக்கள் மற்றும் எகிப்திய குடியிருப்புகள் முக்கிய பங்காற்றியது நினைவு கூறத்தக்கது. அது போல சிந்து  சமவெளி எழுத்துக்களில் உள்ள மீன் வடிவங்கள் மற்றும் சிந்து சமவெளி பகுதியில் உள்ள வீடுகள் சதுரமாகவும் செவ்வகமாகவும் உள்ளது ஆராயத்தக்கது. 

தமிழ்நாட்டில் பாண்டியர்களால் கட்டமைக்கப்பட்ட பழங்கால மதுரை சதுர வடிவமாகவே இருக்கின்றது. பாண்டியர்களின் அரசு கொடியில் மீன் வடிவம் இடம் பெற்றுள்ளது. அவ்வகையில் சேர, சோழ, பாண்டிய வரலாற்று ரீதியான ஆராய்ச்சியும் சிந்து சமவெளி எழுத்துக்கள் மற்றும் குடியிருப்புகள் பற்றிய ஆராய்ச்சியும் திராவிட நாகரீகம் குறித்த வெளிச்சத்தை பாய்ச்சும் என்று நம்பலாம். 



கோயில் தான் அரண்மனையா? 

சிந்து சமவெளி மற்றும் கீழடி நாகரிகத்தில் கோயில் வழிபாடு இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலக்கிய குறிப்புகளின் காலகட்டத்தை கணக்கில் கொள்ளும் போது கோயில் வழிபாடு என்பதே திராவிட நாகரிக வீழ்ச்சிக்கு பிறகு தான் என்று அறியவருகிறது. இவ்வகையில் முற்கால பாண்டியர்கள் ஆட்சியின் போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முதலில் பெருங்கோயில் அல்லாமல் அரண்மணை ஆக இருந்திருக்க வேண்டும்.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர், பூவின்
இதழகத்து அனைய தெருவம், இதழகத்து
அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்!

- பரிபாடல் (எட்டாம் பாடல்)

இங்கு கவனிக்க வேண்டிய விசயம் கோயில் என்பதன் பொருள் மன்னன் இருக்கும் இடம் என்பதாகும். கோ என்றால் மன்னன், இல் என்றால் குடியிருக்கும் இடம். கோ என்றால் கடவுள் என்று குறிப்பிடும் வழக்கம் காலத்தால் பிந்தியவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

விரிந்த தாமரை மலரின் நடுவில் பொன்னிறத்தில் அதன் பொகுட்டு இருக்கும். பொகுட்டைச் சுற்றி அடுக்கடுக்காக இதழ்கள் அமைந்திருக்கின்றன. அதேபோல் மதுரை மாநகரின் நடுவில் சதுரமாக இருக்கிறது பாண்டியர்கள் அரண்மனை. அரண்மனையின் முதல் அடுக்கில் நான்கு ஆடி வீதி, இரண்டாம் அடுக்கில் நான்கு சித்திரை வீதி, மூன்றாம் அடுக்கில் நான்கு ஆவணி மூல வீதி, நான்காம் அடுக்கில் நான்கு மாசி வீதி. தாமரைப் பொகுட்டை போன்ற அமைப்பை அரண்மனையுடன் இணைத்து பார்த்திடல் வேண்டும். இப்போது மதுரை மாநகரின் மையத்தில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோயில் பழங்கால பாண்டிய அரண்மனையாக இருந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் மதுரை மாநகரம் பலமுறை சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி ஆவணி மூல வீதிகளில் கோட்டை மதிலும், நேதாஜி ரோட்டில் பெரிய அகழியும் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. கீழ ஆவணி மூல வீதிக்கு அருகில் அம்மன் சன்னதி தெருவில் உள்ள “விட்டவாசல்” பாண்டியர்கள் கோட்டையின் “நுழைவு வாசல்” என்கிறது ஆங்கிலேயர்களின் 1935 ஆம் ஆண்டு கல்வெட்டு. மதுரை மாநகரப் புனரமைப்பு பணியின் போது ஆட்சியாளர்கள்  இதனை இடிக்காததால் இது விட்டவாசல் என்று பெயர் பெற்றது.
பாண்டியர்களும் அரண்மனையும்

சங்கம் வைத்து மதுரையை ஆண்ட முற்கால பாண்டியர்களின் அரண்மனை இன்றைய மீனாட்சி அம்மன் கோயிலாக இருக்க வேண்டும். முற்கால பாண்டியர்களை வீழ்த்தி களப்பிரர்கள் மதுரையை ஆண்டனர். பிறகு களப்பிரர்களை வீழ்த்தி இடைக்கால பாண்டியர்கள் அரியணை ஏறினர்.  களப்பிரர்கள் பயன்படுத்திய அதே அரண்மனையை மீண்டும் பயன்படுத்த இடைக்கால பாண்டியர்கள் தவிர்க்கும் விதமாக அரண்மனையை  சிவன் கோயிலாக 7ஆம் நூற்றாண்டில் மாற்றிருக்க வேண்டும். இன்றைய மீனாட்சி அம்மன் கோயில் 12ஆம் நூற்றாண்டில் பிற்கால பாண்டியரான குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது. 15ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் காலத்தில் இக்கோயில் சீரமைத்து புதுப்பிக்கப்பட்டது. எப்படியாகினும் மீனாட்சி அம்மன் கோயில் கட்டப்பட்ட நாள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

மகாபாரதம் என்ற இதிகாச நூலில் பாண்டியர்களின் தலைநகரம் என்று குறிப்பிடப்பட்டு உள்ள மணலூர் கீழடியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையை ஆண்ட நாயக்கர்களின் அரண்மனை மதுரை மாநகரிலே எழுப்பட்டுள்ளது. ஆனால் பாண்டியர்களுக்கு அரண்மனை எங்கு இருக்கிறது? என்ற கேள்விக்கு இன்னும் தீர்க்கமான விடை கிடைக்கவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தான் பாண்டியர்களின் அரண்மனையா? அல்லது அரண்மனை மண்ணுக்குள் புதைந்து விட்டதா? அல்லது அரண்மனை இடிக்கப்பட்டதா? அல்லது அரண்மனையை தேட வேண்டிய திசை இன்னும் நமக்கு பிடிபடவில்லையா? என்பது இன்று வரை புலப்படவில்லை. மொத்தத்தில் கீழடி முதல் மதுரையின் பாரம்பரியத்தை ஆராய்வதற்கு பாண்டிய அரண்மனையின் சரியான இடத்தைக் கண்டுபிடிப்பது முக்கியம்.
மதுரையும் பழங்கால குறிப்புகளும் 

வியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெட்டு புராணங்களுள் முதல் புராணமான மச்சபுராணத்தில் விஷ்ணு மதுரை வைகை நதியில் (கிருதுமால் நதி) மீன் வடிவில் வந்து மக்களை காப்பாற்றியதாக கதை உண்டு. யூத மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம், இந்து மதம் இணையும் புள்ளிகள் "மலைகள் மற்றும் நீர்நிலைகள்". விந்திய மலைத்தொடர் நில அடிப்படையில் இந்தியாவை வட இந்தியா தென் இந்தியா என இரண்டாகப் பிரிக்கிறது. சிந்து சமவெளி பகுதியில் பல்வேறு மலைகள் மற்றும் நீர்நிலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலும் பரவலாக மலைகள் மற்றும் நீர்நிலைகள் இருப்பினும் மிகவும் தொன்மையான மலைகளும் நீர்நிலைகளும் கொண்டது மதுரை மாநகரம்.

தமிழ்நாட்டில் அமைதியான சூழலில் தவம் புரியவும், சமயக் கொள்கையை விளக்கவும், சீடர்களை உருவாக்கவும் பௌத்தர்களும் ஜைனர்களும் மலைகள் அதிகம் கொண்ட மதுரை சுற்றுவட்டாரத்தை முக்கிய மையமாக தேர்ந்தெடுத்தனர். இலக்கியங்கள், புராணங்கள் மற்றும் அறிஞர்கள் Marco Polo, Megasthenes, Pliny, Xuanzang, Strabo, Ptolemy ஆகியோரின் குறிப்புகளில் "பாண்டியர் ஆட்சி, பாண்டியர் அரண்மனை மற்றும் பாரம்பரிய மதுரை மாநகரம்" முக்கிய இடம் வகிக்கிறது. இன்றும் கூட அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் மதுரை மாநகரம் முக்கிய இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
கீழடியின் கீழ்

பண்டைய காலத்தில் "தனி குழுக்கள்" ஆட்சி செய்தன. அதை தொடர்ந்து "பேரரசுகள்" ஆட்சி செய்தன. "ஆரியர்கள்" வருகைக்கு பின்னர் "பேரரசுகள்" ஆட்சி முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு "மதங்கள்" வளர்ந்திருக்கிறது. இம்மண்ணில் நிறுவனப்படுத்தப்பட்ட "மதங்கள்" நுழைவதற்கு முன்னரே தோன்றிய நாகரிகங்கள் சிந்து சமவெளி மற்றும் கீழடி என்பதால் இங்கெல்லாம் இன்று வரை சிலை வழிபாடு நிரூபிக்கப்படவில்லை.
கீழடி தொழில் நகரமாக இருந்திருக்கக்கூடும் என்பதற்கு ஏற்றார் போல் கீழடியில் ரோம நாட்டுடன் தொழில் வணிகம் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரையிலான கீழடி அகழாய்வு மூலம் தமிழ் பிராமி எழுத்துக்கள் உடைய பானை ஓடுகள், எலும்பிலான வரைகோல், தறியில் தொங்கவிடும் கருங்கல், செம்பினாலான ஊசி, சுடுமண் பாத்திரம் , நூல் நூற்கப் பயன்படும் தக்கிளி, கற்களால் ஆன வளையல், தங்க ஆபரணத் துண்டு, விளையாட்டுக்கான ஆட்டக்காய், பகடைக்காய் கிடைத்துள்ளது.

பானை ஓடுகளில் குவிரன் மற்றும் ஆதன் உள்ளிட்ட பெயர்களும் சில எழுத்துகளும் கிடைத்துள்ளது. இதில் ஆதன் என்ற பெயர் அதன் என்று குறிப்பிடப்படுகிறது. ஆரம்ப கால தமிழ் பிராமியில் நெடிலைக் குறிக்க ஒலிக்குறியீடும் வழக்கமில்லை என்பதால் இந்த கீழடி தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் முந்தியவையாக கருதப்படுகிறது. பானை ஓடுகளில் உள்ள எழுத்தின் கையெழுத்து வடிவம் ஒரே மாதிரியாக இல்லாததால் வெவ்வேறு மனிதர்கள் இவற்றை எழுதியிருக்கக்கூடும். இதன் அடைப்படையில் கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத படிக்க தெரிந்த கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும்.
சிந்து சமவெளி நாகரிக காலகட்டத்தில் சில பிரிவினர் சிந்து சமவெளியிலிருந்து தெற்கே இடம் பெயர்ந்திருக்கலாம் என்ற ஆய்வுக் குறிப்பை நாம் கவனிக்க வேண்டும். ~300 கி.மு முதல் ~200 கி.பி. வரையிலான காலப்பகுதியே சங்க காலம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வரையிலான கீழடி ஆராய்ச்சி  முடிவுகள் சங்க காலத்தை மேலும் மூன்று நூற்றாண்டுகள் கூட்டியுள்ளது. இவ்வகையில் கீழடி என்பது இரும்பு காலம் தொட்டு மக்கள் வசித்திருக்க வாய்ப்புகள் உள்ளது.

சிந்து சமவெளி நாகரிகம் முடிவுற்ற காலம் ~1300 கி.மு என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. இது நாள் வரையில் நிகழ்ந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் கீழடி நாகரிகத்தின் தொடக்க காலம் ~600 கி.மு என்று நிறுவப்பட்டு உள்ளது. தொல்லியல் துறையினர் கீழடி ஆராய்ச்சியை இடைவிடாது முனைப்புடன் ஆராய்ந்தால் சிந்து சமவெளி விட்ட இடமும் கீழடி தொட்ட இடமும் ஒன்றாக இருக்கலாம். வருங்காலங்களில் கீழடியின் கீழ் நமக்கான தொல்லியல்  பொக்கிஷங்கள் அகப்படலாம்.  நீண்ட ஆய்வுகளுக்கு பின்னரே தொல்லியல் ஆராய்ச்சி குறித்த முடிவுக்கும் வர இயலும் என்பதால் அதுவரையில் காத்திருப்போம்!
மதுரை கிராமமல்ல

இன்று பலர் மதுரையின் சங்ககால பெருமையை மறந்து பெரிய கிராமமாக கருதுவது வருத்தம் அளிக்கிறது. மதுரையை சாதிய நகரமாக சித்தரிப்பதற்கு அரசியலும் சினிமாவும் முக்கிய காரணமாகும் ஆனால் இந்தியாவின் பழமையான மற்றும் உயிரோட்டமான நகரம் மதுரை என்பது தான் உண்மை. மதுரைத் தமிழ்ச் சங்கம் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் தமிழ் வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. 

மதுரைக்கு பெருமை சேர்க்கும் வகையில் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த மதுரையை தமிழ்நாட்டின் துணைத் தலைநகராக அறிவித்து மதுரையின் முக்கியத்துவத்தை அரசாங்கம் குறிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவுரை 

கீழடி ஆராய்ச்சியுடன் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சியையும் தொல்லியல் துறை தொடர வேண்டும். ஆதிச்சநல்லூருக்கு 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொற்கையும் ஒரு காலத்தில் பாண்டியர்கள் தலைநகராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் தொல்லியல் ஆராய்ச்சிக்கு அறிவு பெட்டகங்களாக "கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர்" இருக்கும் என்றால் மிகையாகாது.
விவரணைகள் 
  1. வால்கா முதல் கங்கை வரை - ராகுல் சாங்கிருத்தியாயன் 
  2. மதுரை மாநகர் ஊரும் பேரும் - தமிழண்ணல் 
  3. ஆதி இந்தியர்கள் - டோனி ஜோசப்
  4. ஐராவதம் மகாதேவன் கட்டுரைகள்
மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை

http://sangacholai.in/Essays-4.6A.html

தமிழ்நாட்டின் சுருக்கமான வரலாறு

https://chocksvlog.blogspot.com/2020/10/blog-post.html

கொற்றவை என்னும் தமிழ்க் கடவுள்

https://dosa365.wordpress.com/2012/10/20/73/

சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்? 

திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பு

https://chocksvlog.blogspot.com/2020/10/blog-post_4.html

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும்

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும் பொருளடக்கம்    முதலாவது  பகடை விளையாட்டு சகுனியின் எதிர்பார்ப்பு சகுனியின் கேலி தருமனின் இறுதி தோல்வி திரௌப...