Chocks: கண்ணதாசன் குறித்த பார்வை

Friday, November 20, 2020

கண்ணதாசன் குறித்த பார்வை

கண்ணதாசன் குறித்த பார்வை

சுருக்கம் 
  1. முகவுரை 
  2. ஆன்மீக பாதை
  3. ஆயிரத்தில் ஒருவன்
  4. கலைஞர் என்னும் காதலன் 
  5. அரசியல் நாகரிகம் 
  6. முடிவுரை 
  7. விவரணைகள் 
முகவுரை 

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்று எழுதியவரும் கண்ணதாசனே என்னை படியுங்கள் ஆனால் என் வாழ்க்கையை எப்போதும் பின் தொடராதீர்கள் என்று எழுதியவரும் கண்ணதாசனே. 

தி.மு.கவை விட்டு வெளியேறிய பிறகு ஈ.வி.கே.சம்பத்துடன் தமிழ் தேசிய அரசியல் பிறகு காமராஜருடன் இந்திய தேசிய அரசியல் பிறகு எம்.ஜி.ஆருடன் இணக்கம் என அரசியலில் தொடர்ந்து எதிர் நீச்சல் அடித்தவர் கண்ணதாசன். அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் கண்ணதாசன் என்றுமே இருந்ததில்லை காரணம் அவருக்கு அரசியல் என்பது எதிர்நீச்சல் ஆகிப்போனது. 

ஆன்மீக பாதை

கண்ணதாசன் தனது வாழ்க்கையில் பல்வேறு காலகட்டத்தில் இருவேறு மனநிலைகளை கையாண்டவர் ஏனெனில் தனக்கு தானே இறப்பு ஒத்திகை நடத்திய கவியரசர் அவர். அவ்வகையில் பிற்காலத்தில் கண்ணதாசன் ஆன்மீக பாதை தேர்தெடுக்க அவர் வாழ்க்கையில் நடந்த ஓர் விபத்தே முக்கிய காரணமாக கூறப்படுகிறது (இது குறித்த செய்தி இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது). இதன் பிறகு நாட்டார் தெய்வம், சைவம், வைணவம் என ஆன்மீகத்தை பேசினார் வடமொழி கூட படியுங்கள் என்றார் ஆனால் தமிழை தாழ்த்தியோ தமிழை வெறுத்தோ அவர் அரசியல் செய்யவில்லை.

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு பாடலுக்கு வரிகள் எழுத கவிஞர் வாலி திணற உடனே பந்துலு கண்ணதாசனை எழுத சொல்லி அதை காட்சிப்படுத்தினார். அப்போது எம்.ஜி.ஆர் இது வாலி வரிகள் போல தெரியவில்லையே என்றார். அதற்கு பந்துலு எம்.ஜி.ஆரிடம் “உங்களுக்கும் அவருக்கும் இணக்கம் இல்லாததால் இது குறித்து உங்களிடம் பேசாமல் இருந்துவிட்டேன்" என்றார். பிறகு "எம்.ஜி.ஆர் - கண்ணதாசன்" இணைந்துவிட்டது வேறு கதை.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய அப்பாடல் 

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ

ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

எம்.ஜி.ஆர் குறித்து “உள்ளும் புறமும்” என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தை கண்ணதாசன் எழுதினார். அப்புத்தகத்தை எம்.ஜி.ஆர் தடை செய்துவிட்டு கண்ணதாசனுக்கே அரசவை கவிஞர் பதவி கொடுத்து அவரை அருகில் வைத்துக் கொண்டார் என்பது வரலாறு.

ஆன்மீக பார்வை 

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

அவள் ஒரு தொடர்கதை படத்தில் கண்ணதாசன் எழுதிய மேற்கண்ட பாடலின் பொருள் "நாட்டார் தெய்வம், சைவம், வைணவம் என்பது புரிகின்ற கொள்கை அதுவே சித்தாந்தமானது. ஆரியம், வைதீகம் என்பது புரியாத வேதம் அதுவே வேதாந்தமானது. வைதீக நெறிப்படி கிடா வெட்டு தவறு ஆனால் தமிழர் நெறிப்படி கிடா வெட்டுவது மரபு" என்பதாகும். 

திருப்பதி சென்று திரும்பி வந்தால் 

திருப்பம் நேருமடா உன் விருப்பம் கூடுமடா

கண்ணதாசன் இறை நம்பிக்கை கொண்டாலும் யதார்த்தமான மனிதர் என்பதற்கு மூன்று தெய்வங்கள் படத்தில் இடம் பெற்ற மேற்கண்ட பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இப்பாடலில் திருப்பதி சென்று "திரும்பி" வந்தால் என எழுதி இருப்பார் கண்ணதாசன். காரணம் திருப்பதி சென்று திரும்பும் வழியில் ஏதேனும் சிரமமோ விபத்தோ இல்லாமல் வீடு திரும்பிவிட்டால் தானே வாழ்வில் திருப்பம் ஏற்படும் அதனால் "திரும்பி" என்ற சொல்லை இணைத்து இருப்பார்.

கலைஞர் என்னும் காதலன் 
கலைஞரின் இலக்கிய காதலன் தான் என்றும் அவரும் நானும் இணைந்து உறவாடிய நாட்கள், உண்ட நாட்கள், உறங்கிய நாட்கள் எவ்வளவோ உண்டு என்றும் அவை யாவையும் மறக்க இயலாத இன்பமயமான நாட்கள் என்றும் நினைவுகூர்ந்தவர் கண்ணதாசன். மேலும் யார் எதிர்த்து அரசியல் செய்தாலும் யாரிடமும் இல்லாத ஒரு ஈர்ப்புத் தன்மை கலைஞரிடம் இருப்பதாலே அவர் அரசியலில் ஜொலிக்க முடிகிறது என்று மனதார பாராட்டியவர் கண்ணதாசன். 

தன் சுயசரிதையில் கண்ணதாசன் தன்னைத்தானே "அவன்" என குறிப்பிட்டு ரயிலில் டிக்கெட் இல்லாமல் திருட்டுப் பயணம் செய்ததை குறிப்பிட்டு இருப்பார் ஆனால் இதற்கு கண் காது மூக்கு வரைந்து கட்டுக்கதை கட்டி வலதுசாரிக்கள் கண்ணதாசன் கலைஞரை தான் குறிப்பிடுவதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

"கண்ணதாசன் - கலைஞர்" இருவருக்கும் இடையே நிலவிய ஆழமான உறவை பற்றி அறியாமல் போகிற போக்கில் "கண்ணதாசனை கலைஞர் மன்னித்தார்" என சொல்வதே தவறு ஏனெனில் "கண்ணதாசன் - கலைஞர்" என்றைக்குமே தங்களை எதிரியாக நினைத்துக் கொண்டதில்லை. கண்ணதாசனுக்கு திரையில் எம்.ஜி.ஆர் சிவாஜியுடன் சண்டை அரசியலில் கலைஞருடன் சண்டை என்பதெல்லாம் ஊடல் கூடல் தான். மேலும் கலைஞரின் தனிப்பட்ட வாழ்வில் கா.மு.ஷெரிப், கண்ணதாசன், சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆற்றிய பணிகள் என்றும் நினைவுகூரத்தக்கது. 

அரசியல் நாகரிகம் 

அக்கால அ.தி.மு.கவில் முக்கிய தலைவராக விளங்கிய நாவலரை அ.தி.மு.க மறந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. ஓ.பி.எஸ் வருகைக்கு முன்னர் நாவலர் தான் திராவிட அரசியலில் வெகுகாலம் நம்பர் 2 இடத்தில இருந்தவர். எப்படி இருப்பினும் மாற்றுக் கட்சியை சார்ந்த நாவலருக்கு நூற்றாண்டு விழா எடுத்து நினைவுகூர்ந்தது தி.மு.க. அரசியல் நாகரிகம் குறித்து அறிய தி.மு.க நடத்திய இந்நிகழ்ச்சி ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. இந்த நாகரிகம் கண்ணதாசனை அணுகும் போதும் நமக்கு வேண்டும். 

முடிவுரை 

தொடக்கால தமிழ்நாட்டு அரசியல் மற்றும் சினிமா அருமையான செய்திகள் பலவற்றை உள்ளடக்கியது. இதில் 1960-1980 வரையிலான காலகட்டத்தில் கண்ணதாசன் ஆற்றிய தமிழ்ப்பணியினை ஓர் இரவில் பேசி முடிக்க இயலாது. குழந்தை மனம் கொண்ட கண்ணதாசன் வெறுப்புக்குரிய மனிதர் அல்ல கற்றலுக்கு உரிய மனிதர். 

கண்ணதாசன் மீது சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் ஆயிரம் இருக்கலாம் ஆனால் அவர் திராவிட அரசியலுக்கு பரம வைரி அல்ல, அல்லவே அல்ல!

குறிப்பு - கண்ணதாசன் பிறப்பு = 24-ஜூன்-1924, இறப்பு = 17-அக்டோபர்-1981

விவரணைகள் 

Kannadasan’s Book On MGR


கலைஞரும் கவியரசும் - நியூஸ் 7


கவியரசு உடனான நட்பு பற்றி கலைஞர் 


கவியரசு பற்றி இசைஞானி 


கவியரசு பற்றி கங்கை அமரன்


கண்ணதாசன் ஆத்திகராக மாறிய கதை


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும்

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும் பொருளடக்கம்    முதலாவது  பகடை விளையாட்டு சகுனியின் எதிர்பார்ப்பு சகுனியின் கேலி தருமனின் இறுதி தோல்வி திரௌப...