Chocks: அழகர் கோவில் தோசை வரலாறு

Wednesday, January 20, 2021

அழகர் கோவில் தோசை வரலாறு

அழகர் கோவில் தோசை வரலாறு
பெரும்பாலான கோவில்களில் நைவேத்தியத்தில் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் அல்லது கொண்டைக் கடலை படைக்கப்படும் ஆனால் அழகர்கோவிலில் நைவேத்தியத்தில் தோசை படைக்கப்படும் மரபுள்ளது. பாரம்பரிய அழகர் கோவில் தோசையை வெளிநாட்டுப் பயணிகளும் விரும்பி சுவைக்கின்றனர். இன்று அழகர் கோவில் வளாகத்தில் உள்ள கடையில் தோசை 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு சம்பா தோசை அல்லது அடை தோசை என்ற பெயரும் உண்டு. 

பெருவாரியான கிராம மக்கள் தங்களது வயல்களில் விளையும் தானியங்களை அழகர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்குகின்றனர். பக்தர்கள் தரும் தானியங்களையும் நூபுர கங்கை தண்ணீரையும் கொண்டு அழகர் கோவில் தோசை தயாரிக்கப்படுகிறது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், சுக்கு, பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவை நன்கு அரைக்கப்பட்டு மாவாக்கி அதில் நெய் விட்டு கோவில் மடப்பள்ளியில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட பிரத்தேயகமான தோசைக் கல்லில் பெரிய தோசையாக தயாரிக்கப்பட்டு கள்ளழகருக்கு படைக்கப்படுகிறது. மேலும் மாலை நேரத்து பூஜையில் தோசையுடன் கொண்டைக் கடலை மற்றும் வடை சேர்த்து படைக்கப்படுகிறது. தாயார் கல்யாண சுந்தரவல்லிக்கு வெள்ளிக்கிழமையில் மட்டும் தோசை நைவேத்தியம் உண்டு.

லாபகரமான விவசாய அறுவடைக்கு பின்னர் விவசாயிகள் முதல் படியைக் அழகர் கோவிலுக்கு தானியமாக வழங்கிவிடுவர். அழகர் கோவிலில் இதற்கென பிரத்தேயகமான தானியக் கிடங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. கள்ளழகருக்கு தானியமாக வழங்குவதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் இன்று வரை சம்பா நெல் பயிரை அறுவடைக்கு பின்னர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி வருகின்றனர். விவசாயிகள் வழங்கிய சம்பா அரிசியை கொண்டு தோசை தயாரிக்கப்படுவதால் சம்பா தோசை என பெயர் வந்ததாக சுற்றுவட்டாரத்தினர் கூறுகின்றனர். ஆரம்ப காலத்தில் பயிர்களை நடவு செய்யும் போது செல்வத்தை அள்ளி தர வேண்டிக் கொண்டு சம்பா தோசையை விவசாயிகள் வாங்கி செல்லும் போது விபூதியிட்டு சம்பா தோசை சிறிய துண்டுகளாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

உறவினர்கள் / பங்காளிகள் / ஊர் மக்கள் தங்களின் சண்டைக்கு பிறகு ஒன்று சேர விரும்பினால் மலையில் ராக்காயி அம்மன் தீர்த்தத்தில் குளித்து விட்டு சம்பா தோசையை பகிர்ந்து உண்டால் சண்டையெல்லாம் தீர்ந்து மக்களிடையே இணக்கம் பிறந்திடும் என்பது சுற்றுவட்டார நம்பிக்கை.

சித்திரை திருவிழாவில் மாங்குளம் கிராம மக்களுக்கு தோசை உரிமை உண்டு. கள்ளர்கள் இழுக்கும் ஒரு வடத்திற்கு 2 தோசை, 2 படி அரிசி பொங்கல் பிரசாதமும் நாட்டார்களுக்கு 5 தோசை, 5 படி அரிசி பொங்கல் பிரசாதமும் உண்டு. பிரசாதத்தை காளாஞ்சி என்றும் கூறுகின்றனர். திருவிழா காலங்களில் தோசை உரிமையை பெற சண்டை கூட அரங்கியெறி இருக்கிறது என்றும் கூட / குறைய பகிரப்படும் தோசை உரிமை குறித்து அழகர் கோவில் வளாக பணியாளர்கள் வெவ்வேறு காரணங்களையும் கூறுகின்றனர். 

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

சீமானின் வரலாறு காவி

சீமானின் வரலாறு காவி  பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட படை  தமிழ் தேசியத்...