Chocks: ஐயப்பனும் மதுரையும்

Tuesday, February 2, 2021

ஐயப்பனும் மதுரையும்

ஐயப்பனும் மதுரையும்
சுருக்கம் 
  1. மதுரை பாண்டியர்கள் ஆட்சி
  2. பந்தளம் அரசு
  3. திருவாங்கூர் ராஜ்யம்
  4. பூஞ்சார் அரசு
  5. ஐயப்பன் கோவில் கதை
  6. ஐயப்பன் பிறந்த கதை
  7. ஐயனாரும் ஐயப்பனும்
  8. துணுக்கு செய்தி 
  9. விவரணைகள்
மதுரை பாண்டியர்கள் ஆட்சி

சங்க கால பாண்டியர்களை தொடர்ந்து களப்பிரர்கள் பாண்டிய நாட்டை கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு ஆண்டனர். பின்னர் களப்பிரர்கள் வீழ்ந்து கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.10 ஆம் நூற்றாண்டு வரை இடைக்காலப் பாண்டியர்கள் ஆண்டனர். இடைக்காலப் பாண்டியரான வீரகேசரி பாண்டியரின் மரணத்திற்கு பின் இடைக்காலப் பாண்டியர்கள் வீழ்ந்து கி.பி. 10 ஆம் முதல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை மதுரையில் சோழர்களின் ஆதிக்கம் இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் சோழர்களிடம் இருந்து மீண்டு கி.பி. 12 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை பிற்காலப் பாண்டியர்கள் ஆண்டனர். கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பின் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தென்காசி பாண்டியர்கள் ஆண்டனர்.
பந்தளம் அரசு

பாண்டிய நாட்டில் ஆட்சி குழப்பம் நிலவிய போது பாண்டிய அரச குடும்ப உறுப்பினர்கள் சிலர் ராஜ ராஜசேகர வர்மன் தலைமையில் கேரளாவுக்கு 903 இல் முதல் குழுவாக இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்தவர்கள் கொல்லம் பகுதியை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த வேனாட் மன்னரின் உதவியை நாடி கொன்னியின் அடர்ந்த வனப்பகுதிகளில் குடியேறினர். பின்னர் வேனாட் மன்னரின் படையில் ஒரு சிறிய இராணுவப் படை பிரிவினை பெற்று 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சிற்றரசாக பந்தளம் அரசை கொன்னி பகுதியில் 903 இல் நிறுவினர்.

பந்தளம் அரச குடும்பத்தினர் தங்கள் அன்றாட வழிபாடுகளுக்காக கொன்னியில் சிவனுக்கு ஸ்ரீ மஹாதேவர் கோவில் ஆலயம் கட்டினர். கேரள திருவாங்கூர் பகுதியை சோழர்கள் தொடர்ந்து தாக்கியதால் 1194 இல் கொன்னியை விட்டு வெளியேறி பந்தளத்தில் குடியேறினர். பந்தள அரசானது கொன்னி, ஆரியங்காவு, குளத்துப்புழை, அச்சன்கோவில், சபரிமலை, தென்காசியில் சில மலைக்காட்டுப் பகுதிகளை உள்ளடக்கி ஆண்டு வந்தது. போர்த்துகீசியத்துக்கு எதிரான குளச்சல் போரில் திருவாங்கூர் ராஜ்யத்திற்கு ஆதரவாக பந்தள அரசும் போரில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

திருவாங்கூர் ராஜ்யம்

1729 இல் வேனாட் மன்னர் மார்த்தாண்ட வர்மா வேனாட் அரச அமைப்பை புதுப்பித்து தென்னிந்தியாவில் பலம் பொருந்திய திருவாங்கூர் ராஜ்யத்தை ஸ்தாபித்தார். திருவாங்கூர் ராஜ்ய தலைநகராக முதலில் பத்மநாபபுரம் (1729 - 1795) பின்னர் திருவனந்தபுரம் (1795 - 1945) இயங்கியது. 1789 இல் திப்பு சுல்தானும் அவரது படைகளும் திருவாங்கூர் ராஜ்ய பகுதியில் நடத்திய பேரழிவுகரமான தாக்குதலுக்கு போர் நஷ்ட ஈட்டு தொகை செலுத்துவதற்கு பந்தள அரசரிடம் ரூ.2,20,000 திருவாங்கூர் ராஜ்யத்தின் மன்னர் கேட்டார். சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களிடம் வரி வசூலித்து போர் ஈட்டுத் தொகையை பந்தள அரசர் கட்டினார்.
திருவாங்கூர் மீது திப்பு சுல்தான் தாக்கிய காலகட்டத்திற்கு பிறகு பந்தளம் அரசர் தனது அதிகாரங்கள் அனைத்தையும் திருவாங்கூர் மன்னர் கார்த்திகா திருனல் ராம வர்மாவுக்கு மாற்றி 1820 இல் திருவாங்கூர் ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டு திருவாங்கூர் மன்னரின் கீழ் வாழும் ஒரு தலைவரின் நிலையை ஏற்க முடிவு செய்தார். அதனை தொடர்ந்து 1820 முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகத்தை திருவாங்கூர் ராஜ்யம் கவனித்து வந்தது. அப்போது திருவாங்கூர் ராஜ்யம் பந்தளம் அரச குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கியது. இப்போது சபரிமலை கோவிலின் நிர்வாகம் கேரள அரசின் தேவஸ்தான குழுவிடம் உள்ளது.

பூஞ்சார் அரசு

பாண்டிய நாட்டில் ஆட்சி குழப்பம் நிலவிய போது பாண்டிய அரச குடும்ப உறுப்பினர்கள் சிலர் மானவிக்ரம குலசேகர பெருமாள் தலைமையில் 1160 இல் கேரளாவுக்கு இரண்டாவது குழுவாக இடம்பெயர்ந்தனர். இவர்கள் கோட்டயம் பகுதியில் பூஞ்சார் அரசை (1160 - 1947) நிறுவினர். திருவாங்கூர் பகுதியில் இருந்த திண்டுக்கல், கம்பம், போடிநாயக்கனூர், இடுக்கி, பீர்மேடு மற்றும் கண்ணன் தேவன் மலைக் குன்று போன்ற பகுதிகளை ஆண்டனர்.

ஐயப்பன் கோவில் கதை

முதலாம் பந்தள அரசர் ராஜ ராஜசேகர வர்மன் வேட்டையாட வனப்பகுதிக்குச் சென்று போது பம்பை ஆற்றங்கரையில் ஒரு குழந்தையை கண்டெடுத்து பந்தளம் அரண்மனைக்கு கொண்டு வந்தார். குழந்தைக்கு மணிகண்டன் எனப் பெயரிட்டு குருகுல கல்வியில் சேர்த்துவிட்டு வளர்த்து வந்தார். குருகுல கல்வியை முடித்த மணிகண்டனுக்கு இளவரசர் பட்டத்தை சூட்ட முடிவுசெய்தார் பந்தள அரசர். 

அரசரின் சொந்த மகன் ஊனமுற்று கடமைகளைச் செய்வதற்கான திறனைக் கொண்டிருக்கவில்லை என்பதால் பிற்காலத்தில் நிழல் அரசனாக தாமே வலம் வரவுள்ள வாய்ப்பை எண்ணி அரசவை மந்திரி தீய எண்ணத்துடன் வளர்ப்பு மகன் இளவரசன் ஆவதை விட சொந்த மகன் இளவரசன் ஆவதே சிறந்தது என்று அரசரின் மனைவியிடம் தெரிவித்தார். தனது சொந்த மகனே அரசனாக வேண்டும் என எண்ணி அரசரின் மனைவியும் அரசவை மந்திரியின் உள்ளடி திட்டத்தை அறியாமல் அவருடன் இணைந்து மணிகண்டன் முடி சூடாமல் இருக்க திட்டம் தீட்டினார். இத்திட்டத்தின்படி ராணிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகவும் வலி நீங்கிட மணிகண்டன் புலிப் பால் கொண்டு வரவும் ஆணையிடப்பட்டது.
காட்டிற்கு புலிப் பால் தேடிச் சென்ற மணிகண்டன் காட்டில் மகிஷி எனும் அரக்கியைக் கொன்று புலிகள் மற்றும் அதன் குட்டிகளுடன் அரண்மனை நோக்கி வந்தான். புலியுடன் சவாரி செய்து மணிகண்டன் வந்த காட்சியை கண்டு குடும்பத்தினரும், மக்களும் மணிகண்டனை என் ஐயனே, என் அப்பனே எனத் துதித்தனர். இதனால் மணிகண்டனுக்கு ஐயப்பன் எனப் பெயர் வந்தது. பின்னர் அரச வாழ்வையும் குடும்ப வாழ்வையும் துறந்த ஐயப்பன் பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் அமர்ந்த இடமே சபரிமலை என்றும் அதனை கோவிலாக வடிவமைத்தது பந்தளம் அரசர் என்று கருதப்படுகிறது.

ஐயப்பன் பிறந்த கதை

அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கை மகிசீ. மகிசாசுரனின் வதத்திற்கு காரணமான தேவர்களை வதைக்க மகிசீ முடிவு செய்து பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். மகிசீ தவத்தால் இசைந்த பிரம்மா சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என வரம் அளித்தார்.

பாற்கடல் அமுதத்தை கடைந்து தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது ஆழ்ந்த யோகத்தில் இருந்த சிவனால் மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. தனது ஆழ்ந்த யோகம் களைந்த பின் திருவிளையாடலை அறிந்த சிவன் விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். பிறகு சிவனுக்காக விஷ்ணு மீண்டும் மோகினியாக அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் "இயற்கைக்கு புறமாக" ஒன்று சேர்ந்ததால் பிறந்தவரே ஐயப்பன். இது அறிவியலுக்கு புறம்பான புராணக் கதை என்பது திண்ணம்.

ஐயனாரும் ஐயப்பனும்

தமிழ் நாட்டின் ஐயனார் வழிபாடு கேரளாவில் ஐயப்பன் வழிபாடானது. கேரள ஐயப்பனை பக்தர்கள் சாஸ்தா எனவும் அழைக்கின்றனர். அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவர் என பொருள்படும் சாஸ்தா என்ற பெயர் புத்தருக்குரியது என்பது அமரகோசம், நாமலிங்கானு சாசனம் முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியலாம். புத்தருக்கு சாக்கிய வம்சத்து முனிவர் (சாக்கிய முனி) என்ற பெயரும் உண்டு. ஜைன சமயத்தில் இருபத்து நான்கு தீர்த்தங்கரரில் இருபதாவது தீர்த்தங்கரர் முனீஸ்வரநாதர் ஆவார். ஆசீவக கோட்பாட்டின் படி ஆண் நாடியா பெண் நாடியா என பகுத்தறிய இயலாத நிலையான ஐய நிலையினை கைவரப் பெற்றவர்களே ஐயன் (சாத்தன்) என்றும் ஐயனார் (சாத்தனார்) என்றும் வழங்கப் பெற்றது. ஐயம், ஐயா, ஐயர் மற்றும் ஐயங்கார் சொற்கள் ஆசீவக பண்பாட்டில் இருந்து தோன்றியவை.
சாஸ்தா என்ற வடமொழியின் திரிபாக சாத்தன் அல்லது சாத்தனார் என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராக பண்டைய காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. சாத்தனாருக்கு ஐயப்பன் என்ற பெயரும் வழங்கப்படுகிறது ஏனெனில் சாஸ்தா என்ற வடமொழியின் நேரான தமிழ்ச்சொல் ஐயன் அல்லது ஐயனார் என்பதாகும். ஐயன் என்றால் மூத்தோன், உயர்ந்தோன், குரு, ஆசான் என பொருள்படும். பண்டைய தமிழ் நாட்டிலிருந்த பௌத்த மதத்தினர் சாத்தன் என்னும் பெயரைப் பெரும்பாலும் கொண்டிருந்தனர் என்பது சங்க கால நூல்களின் வாயிலாக தெரிய வருகின்றது. பௌத்த நூலாகிய மணிமேகலையை இயற்றியவர் பௌத்த சமயத்தை சேர்ந்த சாத்தனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சங்க கால புலவர்களில் சிலர் சாத்தனார் பெயரை கொண்டதன் அடிப்படையில் அவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் ஆசீவகம், பௌத்தம், சமணம் அழிந்த பின்னர் அதன் கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் உள்வாங்கி கொண்டு வைதீக வைணவம் புத்தரைத் விஷ்ணுவின் ஓர் அவதாரமாக்கியது, வைதீக சைவம் புத்தரான சாத்தனாரை விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து சாத்தனாரைத் தமது தெய்வ பிரிவில் ஒன்றாக்கியது. பௌத்த துறவியான தாராதேவியை திரௌபதி அம்மன், பகவதி அம்மன், சரஸ்வதி அம்மன் என்று மாற்றினர்.

விஷ்ணு கோவில்கள் வரதராசர், திருவரங்கர், வெங்கடேசர் என்று வெவ்வேறு பெயருடனும் சிவன் கோவில்கள் கபாலீஸ்வரர், தியாகராசர், சொக்கலிங்கர் என்று வெவ்வேறு பெயருடனும் வழங்கப்படுவது போல புத்தரின் சாஸ்தா கோவில்கள் சாத்தனார், ஐயனார், முனீஸ்வரர், தருமராசா என்று வெவ்வேறு பெயருடன் கிராம இந்து தேவதை கோவில்கள் என்னும் தாழ்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது இந்து மதம்.

துணுக்கு செய்தி

ஐயப்பனும் மதுரையும் என்ற தலைப்பில் கேரளா - தமிழ்நாடு ஆன்மீகம் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையில் வைக்கம் போராட்டம் என்ற தலைப்பில் கேரளா - தமிழ்நாடு அரசியல் குறித்து எழுதப்பட்டுள்ள துணுக்கு செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.
கேரளாவில் திருவாங்கூர் அரசின் கீழ் வைக்கம் சோமநாதர் கோவிலின் வழிபாட்டு உரிமை நம்பூதிரிகளின் வசம் இருந்தது. ஈழவர்களும் மற்றும் பிற கீழ் சாதிகளும் கோவிலுக்குள் செல்லவும் கோவிலை சுற்றியிருக்கும் தெருக்களில் நடக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. 1905 இல் திருவாங்கூர் நம்பூதிரிகளின் அநீதிக்கு எதிராக ஈழவர்கள் நடத்திய போராட்டத்தை திவான் வேலுப்பிள்ளை முறியடித்தார். பின்னர் திருவாங்கூர் ராஜ்யத்தின் சட்டசபையில் (Sree Moolam Popular Assembly) ஸ்ரீ நாராயண குருவின் பரிபாலன சபை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களான போது இக்கோரிக்கை மீண்டும் எழுந்தது ஆனால் உடனடியாக நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து 30 மார்ச் 1924 அன்று ஸ்ரீ நாராயண குருவின் சீடரான டி.கே.மாதவன் முயற்சியில் கோவிலுக்குள் செல்லவும் கோவிலை சுற்றியிருக்கும் தெருக்களில் நடக்கவும் அனுமதி அளிக்கக் கோரி வைக்கம் போராட்டம் ஆரம்பமானது. வைக்கம் போராட்டம் துவங்கிய போது தினமும் ஒற்றை எண்ணிக்கையில் சிலர் கோவிலுக்கு அருகில் தடுக்கப்பட்ட பகுதியில் நின்று போராட அவர்களை திருவாங்கூர் அரசு கைது செய்திட என்று இப்படி சுமார் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில் போராட்ட தலைவர்களான டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்றவர்களை திருவாங்கூர் அரசு கைது செய்தது.

போராட்டத்தில் தொய்வு ஏற்பட அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து ஆதரவு திரட்ட போராட்ட குழுவினர் முடிவு செய்தனர். அதை தொடர்ந்து மே மாதம் 1924 இல் வைக்கம் போராட்ட குழுவினரிடம் இருந்து போராட்டத்தில் கலந்துகொள்ள பெரியாருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியாருக்கு மக்களைத் திரட்டி உறுதியாக போராட்டம் நடத்தவது கைவந்த கலையாக இருந்தது. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் தீவிரமாக செயல்படுவார் என்பதால் பெரியார் அழைக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராஜாஜிடம் கொடுத்துவிட்டு இப்போராட்டத்தில் பெரியார் களப்பணி ஆற்றினார்.

தொடர்ந்து வைக்கம் போராட்டத்தில் பெரியார், ஸ்ரீ நாராயண குரு, டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப், சகோதரன் ஐயப்பன், அய்யாமுத்துக் கவுண்டர், எம்.வி.நாயுடு மற்றும் பல்வேறு சமூக நீதி ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு களப்பணி ஆற்றினர். திருவாங்கூர் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் கைது செய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பசுப்புரா சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சமத்துவம் போதிக்கும் பெரியார் மரணமடைய வேண்டுமென வைதீகர்கள் “சத்ரு சம்ஹார யாகம்” நடத்தினர் ஆனால் யாகம் நடந்து கொண்டிருந்த போதே திருவாங்கூர் அரசு மன்னர் மரணமடைந்தார் என்பது வரலாறு.

மன்னர் மறைவுக்கு பிறகு கைது செய்யப்பட்ட போராட்ட வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் வைக்கத்திற்கு வருகை தந்த காந்தி ராணி மற்றும் பெரியாரிடம் சமரசம் பேசியதன் விளைவாக போராட்ட குழுவினரின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து திருவாங்கூர் அரசு நிறைவேற்றியது. அதை தொடர்ந்து 08 அக்டோபர் 1925 அன்று வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்தது. வைக்கம் போராட்டத்தில் தொண்டாற்றிய பெரியாருக்கு “வைக்கம் வீரர்” என்ற பட்டத்தை திரு.வி.க வழங்கினார். 

1927 மார்ச் 20 அன்று மகத் பகுதியில் உள்ள பொதுக் குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அம்பேத்கர் “மகத் போராட்டம்” நடத்திட பெரியார் தலைமையில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம்” ஏற்படுத்திய தாக்கம் அம்பேத்கருக்கு உத்வேகம் அளித்தது. மேலும் 1924-1925 காலகட்டத்தில் மக்கள் எழுச்சியுடன் வைக்கம் போராட்ட களத்தில் முன்னணியில் நின்று பெரியார் நடத்திய போராட்டம் ஆலய நுழைவு போராட்டத்திற்கு அச்சாரம் இட்டது. அதை தொடர்ந்து 11 ஜூலை 1939 அன்று ஆலய பிரவேச சட்டம் நிறைவேற்றப்பட்டது.

விவரணைகள்

சுவாமி ஐயப்பன் திரைப்படம் 


ஐயப்பனும் மதுரையும் - 1


ஐயப்பனும் மதுரையும் - 2


சபரிமலை - பாண்டியர் வரலாறு


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

சீமானின் வரலாறு காவி

சீமானின் வரலாறு காவி  பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட படை  தமிழ் தேசியத்...