Chocks: முருகன் பற்றிய பார்வை

Tuesday, February 2, 2021

முருகன் பற்றிய பார்வை

முருகன் பற்றிய பார்வை

சுருக்கம் 
  1. முருகன் வணக்க மரபு
  2. ஆற்றுப்படை வீடு
  3. முருகன் - வள்ளி
  4. வெறியாடல்
  5. தென் இந்திய - வட இந்திய வேறுபாடு
  6. விநாயகர் வழிபாடு
  7. முடிவுரை
  8. விவரணைகள் 
முருகன் வணக்க மரபு

வேல் ஆயுதம் கொண்டு உணவு தேடிய சமூகத்தில் வேடன் என்றவன் உணவு உற்பத்தி செய்யும் சமூகத்தில் வேலன் என்றானான். சேயோன் மேய மைவரை உலகமும் என தொல்காப்பியம் குறிஞ்சி நிலத்தை பற்றி குறிப்பிடுகிறது. குறிஞ்சி நிலம் என்றால் மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும். மலைகளுக்கு உரிய வணக்க மரபாக சேயோன் என்ற முருகன் இருக்கின்றான். முருகு என்றால் அழகு / இளமை எனப்படும். மேலும் அழகு / இளமை என்றால் நிறத்தை குறிப்பதல்ல இயற்கையை குறிப்பதாகும். முருகு + அன் = ஆண்பால் பெயர் விகுதியால் முருகன் ஆகிற்று.
ஆற்றுப்படை வீடு

நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை நூலின்படி 4 ஆற்றுப்படை வீடுகளும் 2 பொதுவான இடங்களும் தான் முருகனின் தளங்கள். ஆற்றுப்படை என்றால் ஆற்றுப்படுத்துதல் / வழிப்படுத்துதல் எனப்படும். மன்னனிடம் சென்று ஆற்றுப்படுத்தி கொள்வது போர்ப்படை வீடாகும் அதுவே முருகனிடம் சென்று ஆற்றுப்படுத்தி கொள்வது முருகாற்றுப்படை வீடாகும். நக்கீரர் கூற்றின்படி முருகனின் அருளை பெற்று பக்தர்கள் தங்களது கவலைகளை ஆற்றுப்படுத்தி கொள்ளும் இடம் திருமுருகாற்றுப்படை (திரு + முருகு + ஆற்று + படை) ஆகும். நாளடைவில் இந்த ஆற்றுப்படை வீடு ஆறுபடை வீடு என தவறாக திரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலே முருகனுக்கு பெருங்கோவில்கள் கட்டப்பட்டன.

திருப்பரங்‌ குன்றமர்‌ சேயைம்‌ போற்றுவாம்‌ 

# 1. திருப்பரங்குன்றம் = மதுரை = மலை கீழ்

சீரலை வாய்வரு சேயைப் போற்றுவோம்

2. திருச்செந்தூர் = தூத்துக்குடி = கடல்

ஆவினன் குடிவரும் அமலற் போற்றுவோம் 

3. திருவாவினன்குடி = திண்டுக்கல் = மலை கீழ்

ஏரகத் தறுமுகன் அடிகள் ஏத்துவோம்

4. திருவேரகம் = நாகர்கோயில் = மலை கீழ்

குன்றுதோ றாடிய குமரற் போற்றுவோம் 

# 5. குன்று தோறாடல் = பல்வேறு குன்றுகள் = பொதுவான இடங்கள்

பழமுதிற் சோலையம் பகவற் போற்றுவோம்

# 6. பழமுதிர் சோலை = பல்வேறு சோலைகள் = பொதுவான இடங்கள்

முருகன் - வள்ளி

முருகன் - வள்ளி தான் தமிழர்களின் நம்பிக்கை அதாவது வள்ளி என்ற குறத்திப் பெண் முருகனை மணந்து கொண்ட கதை. தாழ்த்தப்பட்ட பெண்ணாக கருதப்பட்ட வள்ளியை வணங்க ஆரியர்களுக்கு மனம் வரவில்லை. இதனால் அரசன் இந்திரன் மகள் தெய்வானையை முருகனுடன் கதைத்து இரண்டு பெண்டாட்டிக்கு கணவனாக முருகனை மாற்றிவிட்டனர் ஆரியர்கள்.

வெறியாடல்

ஆண்மகன் மேல் காதல் வயப்படும் குறிஞ்சிப் பெண்ணின் உடலில் சில மாற்றங்கள் (உடல் இளைப்பது, கவலையின்றி இருப்பது, வெறித்து பார்ப்பது) உண்டாகின்றன. மகளின் மாற்றங்களுக்குரிய உண்மை காரணத்தை அறியாமல் மகள் முருகனால் தீண்டப்பட்டாள் என்று முடிவு செய்து முருகனுக்குச் சாந்தி செய்யும் எண்ணத்தோடு முருகன் பூசாரியான வேலனை அழைக்கிறார் தாய். வேலனின் வெறியாடல் மூலம் மகளிடம் அணங்கிய முருகனின் சினத்தை தணித்து மகளை நலம் பெற வைப்பதே தாயின் நோக்கமாகும். சங்க காலத்தில் வெறியாடல் ஓர் முக்கியமான விழா என்பது குறிப்பிடத்தக்கது.

தென் இந்திய - வட இந்திய வேறுபாடு

தென் இந்திய முருகன் வட இந்தியாவில் கார்த்திகேயன் என்ற பிரம்மச்சாரியாக வணங்கப்படுகிறான். தென் இந்திய பிரம்மச்சாரி விநாயகர் வட இந்திய கணேஷ் ஆக சித்தி புத்தி என இரு பெண்களுக்கு கணவனாக வணங்கப்படுகிறான். தமிழ்நாட்டில் அண்ணன் விநாயகர் தம்பி முருகன் அதே சமயம் வட இந்தியாவில் அண்ணன் கார்த்திகேயன் தம்பி விநாயகர். இதற்கிடையில் வட இந்திய பெண்கள் தமிழ்நாட்டில் உள்ள சைவ வைணவ தளங்களுக்கு பெருவாரியாக செல்வதுண்டு குறிப்பாக மீனாட்சி அம்மன், ஸ்ரீ ரங்கம், இராமேஸ்வரம் போன்ற கோவில்களுக்கு. ஆனால் அப்பெண்கள் முருகனை மட்டும் வணங்க மாட்டார்கள் காரணம் பிரம்மச்சாரி கார்த்திகேயன் (நம்மூரில் முருகன்) இவர்களை ஆட்கொள்வான் என்ற மூடநம்பிக்கை.

மகாபாரதம் என்ற புராண கதையில் 16 வது காண்டம் பகுதியில் முருகனை ஸ்கந்தன் என்று ஆரியர்கள் வர்ணித்துள்ளனர். ஆனால் முருகனும் வேலும் தமிழர்களின் வாழ்வியல் உடன் தொடர்புடையது அதற்கு ஆரியர்கள் கூறும் புராண வரலாறு எல்லாம் கிடையாது. கொற்றவையை பார்வதி ஆக்கி "சிவன் - பார்வதி" தம்பதியினரின் மகன் முருகன் என்பதும் ஆரியர்களின் புராண புரட்டு தான். மொத்தத்தில் தென் இந்திய - வட இந்திய இந்து வழிபாட்டு முறைகள் பலவும் ஒன்று போல அமையவில்லை. ஆனால் நாம் அனைவரும் "இந்து என்ற ஒரு மத சிந்தனையை வற்புறுத்தி" ஆரியர்கள் பல விடயங்களை ஜோடித்து மாய ஆன்மீக உலகை உருவாக்கி உள்ளார்கள்.

விநாயகர் வழிபாடு
சங்க காலத்தில் விநாயகர் வழிபாடு இருந்ததில்லை. பௌத்தம், ஜைனம் சமய வீழ்ச்சிக்கு மற்றும் பக்தி இயக்க எழுச்சிக்கு இடையில் தான் தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு நுழைந்துள்ளது. 7ஆம் நூற்றாண்டில் தேவாரப் பாடல்களில் தான் விநாயகர் பற்றிய குறிப்பு ஆரம்பமாகியுள்ளது. இவ்வகையில் பேரரசு காலத்தில் பிராமணர்களின் எழுச்சிக்கு பிறகு 6 - 7ஆம் நூற்றாண்டில் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் பரவியிருக்கக்கூடும்.

முடிவுரை

வேலுடன் வீற்றிருக்கும் தமிழ்க்கடவுள் முருகனை ஆரியர்கள் ஸ்கந்தன், சுப்பிரமண்யன் என்று மாற்றினாலும் முருகன் நேற்றும் இன்றும் நாளையும் என்றும் எளிய மக்களின் இறை நம்பிக்கையாக வீற்றிருப்பார் என்பதில் ஐயமில்லை.

விவரணைகள் 

முருகனின் வேல் 


வெறியாடல் விளக்கம் 


விநாயகர்  அரசியலுக்கு வந்த வரலாறு


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

Waterways Shaped Ancient Civilizations

Waterways Shaped Ancient Civilizations Waterways have always been vital to the development of Ancient Civilizations. By supporting agricultu...