Chocks: தொ.ப என்கிற தொ.பரமசிவன்

Wednesday, February 3, 2021

தொ.ப என்கிற தொ.பரமசிவன்

தொ.ப என்கிற தொ.பரமசிவன் 

சுருக்கம் 
  1. முகவுரை
  2. கல்விப்பணி
  3. பண்பாடு
  4. அழகர் கோவில்
  5. அறியப்படாத தமிழகம்
  6. காலத்தின் தேவை தொ.ப
  7. முடிவுரை
  8. விவரணைகள்
முகவுரை

வரலாற்றியல், சமூகவியல், மானுடவியல், தொல்லியல், இலக்கியவியல், கலையியல் என்று பல துறைகளில் ஆய்வு செய்தவர் தொ.ப என்கிற தொ.பரமசிவன். பெரியாரிய அடிப்படையில் திராவிடத்திற்கும் நாட்டார் மரபிற்கும் உள்ள தொடர்பை திராவிடக் கருத்தியலோடு ஆய்வு செய்ததில் முன்னோடி ஆவார்.

கல்விப்பணி

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950 இல்  பிறந்தார் தொ.பரமசிவன். தந்தை இளம் வயதிலேயே இறந்து விட தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். பொருளாதாரத்தில் இளங்கலை படிப்பை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் தமிழில் முதுகலை படிப்பை மதுரை பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்ட ஆய்வை மதுரைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய பிறகு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.

பண்பாடு

பண்பாடு என்றால் நாகரிகம், நாகரிகம் என்றால் வெளிப்பாடு அவ்வகையில் "பண்பாடு என்றால் வெளிப்பாடு” என்பதை நிறுவியவர். கூடி வாழ்தல், விருந்தினர் உபசரிப்பு, உதவும் மனப்பான்மை, முதியோரை மதித்தல், பெற்றோரை பேணுதல், கல்வியறிவு பெறுதல், அனைவரையும் அரவணைத்தல் போன்றவைகளை நாட்டார் பண்பாட்டு கூறுகளாகவும் மானம் காக்க பயன்படும் கோவணம் என்பதும் பண்பாடு தான் நாட்டார் தெய்வத்திற்கு படையலிடப்படும் கறி விருந்து என்பதும் பண்பாடு தான் என்பதை உரக்க கூறியவர்.
அழகர் கோவில்

புத்தங்கங்கள் துணையுடன் மேற்கொள்ளப்படும் மேசை ஆய்வுக்கு மாற்றாக அக்காலத்திலே கள ஆய்வுக்கு அடிகோலிட்டவர் தொ.ப. அவ்வகையில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட அழகர் கோவில் நூலானது ஆய்வு நூல் என்பதையும் தாண்டி ஒரு வரலாற்று ஆவண நூலாகும். 1976 - 1979 ஆகிய மூன்று ஆண்டுகளில் தொ.ப நிகழ்த்திய கள ஆய்வின் விளைவாக எழுதப்பட்ட அழகர் கோவில் நூல் நான்கு பாகங்களை உள்ளடக்கியது.

அழகர் கோவில் அமைவிடம், அழகர் கோவில் தோற்ற வரலாறு, அழகர் கோவிலுக்கும் பிற வைணவ கோவிலுக்கும் உள்ள வேறுபாடுகள், வெவ்வேறு ஆட்சியின் கீழ் அழகர் கோவில் நிர்வாகம், இலக்கிய குறிப்புகள், சமூகத் தொடர்புகள், சித்திரை திருவிழா, மரபுக் கதைகள், வர்ணிப்புப் பாடல்கள், நாட்டுப்புற சங்கதிகள், கோவில் பணியாளர்கள், பதினெட்டாம்படிக் கருப்பசாமி, பழமுதிர்சோலை, வாலி வழிபாடு, கல்வெட்டுக் குறிப்புகள், பட்டயங்கள், தொழில் அட்டவணைகள், வேடமிட்டு வழிபடும் அடியவர்கள், வினாப் பட்டிக்கு விடையளித்தோர் பட்டியல், சித்திரைத் திருவிழாவுக்கு மாட்டுவண்டி கட்டி வந்த அடியவர்களின் ஊர்கள், வரைபடங்கள், புகைப்படங்கள், துணை நூற்பட்டியல், விவரணைகள் உட்பட பல்வேறு செய்திகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூதத்தாழ்வார், இளம்பெருவழுதியார் பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரத்தின் அடிப்படையில் இக்கோவிலானது பௌத்தக் கோயிலாக இருந்து வைணவக் கோவிலாக மாறிருக்க வேண்டும் என்று மயிலை சீனி வேங்கடசாமியின் கூற்றை ஆமோதிக்கிறார். நாட்டுப்புற மக்களாகிய கள்ளர், இடையர், வலையர், பள்ளர், பறையர் ஆகியோர் அழகர் கோவிலோடு இன்றளவும் கொண்ட உறவு முறைகள் குறித்து மிக நேர்த்தியாக விவரித்துள்ளார். இப்படி அழகர் கோவில் குறித்த தொன்ம வரலாறுகளை, வழிபாட்டு மரபுகளை, சமூக நடைமுறைகளை அறிந்திட “அழகர் கோவில்” நூல் வாசிப்பு முக்கிய இடம் வகிக்கிறது.

அறியப்படாத தமிழகம்

தொ.பவின் ஆராய்ச்சி தனித்துவத்தை அறிந்திட “அறியப்படாத தமிழகம்” நூல் முக்கிய இடம் வகிக்கும். நாம் அறிந்த தமிழ்நாட்டின் அறியாத பண்பாட்டு வரலாற்று பக்கங்களை படம் பிடித்த நூல் “அறியப்படாத தமிழகம்”. சங்க காலம், பௌத்தம் , சமணம், பக்தி இயக்கம், இசுலாமியம், கிருத்துவம் என பல்வேறு நிலைகளில் தமிழ் மக்களின் வாழ்வியலை ஆராயும் இந்நூலானது "இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" என நீரின் மேன்மை குறித்த வாக்கியத்துடன் தொடங்கி “கறுப்பு - சிவப்பு” குறித்த அழகுணர்ச்சி வரை பண்பாட்டு அசைவுகள் தளத்தில் இருந்து ஒரு பொருட்டாக பலரும் கருதாத செய்திகளை எடுத்துக் கொண்டு அதில் பண்பாடும் வரலாறும் எப்படி பொதிந்துள்ளது என விளக்குகிறது. எடுத்துக்காட்டாக உலகின் முதல் ரசாயனமாக அறியப்படும் உப்பில் இருந்தே உணவின் பல சுவைகள் எழுந்துள்ளது, சம்பாவும் அளமும் (உப்பும்) சேர்த்து கொடுக்கப்பட்டதே சம்பளம் என்றானது, குளிர்ப்பதற்கு பயன்படுத்தும் நீர் குளம் என்றானது, ஊர் மக்கள் உணவுக்கு பயன்படுத்தும் நீர் ஊருணி என்றானது, ஏர் தொழிலுக்கு பயன்படுத்தும் நீர் ஏரி என்றானது, பல்லாங்குழி விளையாட்டில் உள்ள விதிமுறைகள் வாழ்க்கையின் நெறிமுறைகளை விளக்குகிறது, தமிழ்நாட்டில் அந்நியர்களின் ஆட்சிக்கும் ஆரியர்களின் ஆதிக்கத்திற்கும் பிறகு நமது பண்பாடு அதிகளவில் உருமாறியது உட்பட பல்வேறு தகவல்களை அலசுகிறது “அறியப்படாத தமிழகம்” நூல்.

காலத்தின் தேவை தொ.ப

தொ.ப புத்தகங்களை படித்தால் "மத சகிப்புத்தன்மை என்ற சொல் ஒரு கெட்ட வார்த்தை" என்பதை அறியலாம் காரணம் பல நூற்றாண்டுகளாக அனைவரையும் அரவணைத்து செல்லும் சமூக பண்பாட்டையும் சமூக மரபையும் கொண்ட நாட்டார் மக்களுக்கு “மத சகிப்புத்தன்மை” என்பது ஆரியர்கள் உருவாக்கிய கவர்ச்சி சொல்லாகும். ஏனெனில் யாதும் ஊரே யாவரும் கேளிர் (எல்லா ஊரும் நமது ஊரே எல்லா மனிதரும் நமது உறவே) என்று எடுத்துரைத்த மண் நமது திராவிட மண்.

அந்நிய மதங்கள் என்று சிலரால் வெறுக்கப்படும் கிறிஸ்துவம், இஸ்லாம் மதங்கள் இந்தியாவுக்கு அறிமுகம் ஆவதற்கு முன்னரே கூட இந்தியா ஒரு மதத்தின் முகமாக இருந்ததில்லை. ஆரியர்கள் வற்புறுத்தும் இந்துத்துவா இந்தியாவின் ஆதி மத கோட்பாடாக இருக்கவில்லை என்பதே வரலாற்று உண்மையாகும். இந்துத்துவா என்ற ஒற்றை சங்கிலியில் மக்களை இறுக்கிட நினைக்கும் இவ்வேளையில் தொ.ப போன்றவர்களின் ஆய்வுகளை படித்தறிவது அவசியமாகிறது இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு தமிழனின் கடமையாகிறது அப்படி செய்தால் தான் நமது தலைமுறை அடுத்த தொ.பவை உருவாக்க இயலும் வருங்காலத்தை தற்காத்திட இயலும்.

முடிவுரை

உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் ஒரு கட்டத்தில் சிகிச்சை பலனின்றி 24 டிசம்பர் 2020 அன்று பெரியார் மறைவுற்ற அதே நாளில் 70 வயதில் பெரியார்வாதியான தொ.ப காலமானார். இவருக்கு மனைவி பாப்பா என்ற இசக்கியம்மாள், மகன் மாசான மணி, மகள் விஜயலெட்சுமி, பேரக்குழந்தைகள் ஆகியோர் உள்ளனர்.

கொண்டாடப்பட வேண்டிய மனிதர்

ஆனால் காலத்தின் கோலங்கள்

சமூக மரபு துரித உணவானது

வாசிப்பு மரபு குறைவானது

சிந்தனை மரபு சாகக்கிடக்குது

நமது மரபை பேச தவறினால்

நமது வரலாறை பேச தவறினால்

நமது பண்பாட்டை பேச தவறினால்

நாம் யார்? அவாள் யார்? என்பதை உணர தவறிவிடுவோம்.

விவரணைகள்

யார் இந்த பேராசிரியர் தொ.பரமசிவன்?


தமிழர் பண்பாட்டை ஆராய்ந்த பேராசான்


பெரியாரும் தமிழ்த்தேசியமும்


அதிகாரத்தால் மறைக்கப்பட்ட தமிழர்களின் பண்பாட்டை மீட்டவர்


அதிகாரத்துக்கு எதிரானவர் பெரியார்


மானுடவியலாளர் தொ.பரமசிவன்


நம்மாழ்வார் அய்யா குறித்து தொ.பரமசிவன்


திருநெல்வேலியின் மூல வளங்கள் அழிந்தன


சமணம் குறித்த பார்வை 


சாதியும் சமூகமும்


பெரியாரும் பேசுவார் பெரியாழ்வாரும் பேசுவார்


சோறும் நீரும் விற்பனைக்கு அல்ல


பயணங்கள்


பண்பாட்டு அசைவுகள்


மஞ்சள் மகிமை


தொ.பரமசிவனின் படைப்புகள்


தொ.பரமசிவனின் புத்தங்கங்கள் விற்பனைத்தளம் 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...