Chocks: சில ஊர்களின் பெயர் காரணம்

Sunday, April 11, 2021

சில ஊர்களின் பெயர் காரணம்

சில ஊர்களின் பெயர் காரணம் 

சென்னை 
செஞ்சியில் விஜயநகரப் பேரரசு வலுவாக அமைய காரணமானவர் தளபதி தாமல் சென்னப்ப நாயக்கர். இதன் வெளிப்பாடாக அரசன் இரண்டாம் வெங்கட்டா அவர்கள் சென்னப்ப நாயக்கரை சிற்றரசர் ஆக்கியதோடு வேலூர் அருகே காலி இடங்களை பரிசாக அளித்தார். பிற்காலத்தில் அந்த காலி இடங்களை கிழக்கு இந்தியா கம்பெனி 22 ஆகஸ்ட் 1639 அன்று தாமல் சென்னப்ப நாயக்கரின் வாரிசுகளிடம் விலைக்கு வாங்கியது. அதுவே சென்னப்ப நாயக்கரின் பெயரில் அன்றைக்கு சென்னபட்டணம் என்றும் இன்றைக்கு சென்னை என்றும் அழைக்கப்படலாயிற்று. இவ்வகையில் சென்னை தினம் ஆண்டுதோறும் 22 ஆகஸ்ட் அன்று கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

சென்னபட்டணம் = சென்னை

மதுரை 
மருத நிலமாக விளங்கிய வைகை ஆற்றோரத்திலும் வயலோரத்திலும் மருத மரங்கள் மிகுதியாக காணப்பட்டதால் அவ்விடம் மருதை எனவும் பாண்டியர்களின் குல தெய்வமாக மதி (சந்திரன்) என்பதால் தங்களது தலைநகரத்திற்கு மதிறை எனவும் கடல் கொந்தளிப்பிலிருந்து மாநகரத்தை காக்க மதில்கள் அரணாக விளங்கிய காரணத்தால் மதிரை எனவும் அழைக்கப்படலாயிற்று. இப்படி "மதுரை" பெயர் காரணம் குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படலாயிற்று.

# மருதை (மருதம்) = மதிறை (மதி + உறை) = மதிரை (மதில் + நிரை) = மதுரை

கோயம்புத்தூர்
சங்க கால கொங்கு நாட்டில் கோசர் குல மக்கள் வாழ்ந்த ஊர் "கோசர் புத்தூர்" எனவும் கோனன் என்னும் வேட்டுவ தலைவனின் மகள்களான கோணி மற்றும் முத்தா வாழ்ந்த ஊர் "கோணி முத்து ஊர்" எனவும் கோவன் என்னும் இருளர் தலைவன் வாழ்ந்த ஊர் "கோவன் புத்தூர்" எனவும் அழைக்கப்படலாயிற்று. இப்படி "கோயம்புத்தூர்" பெயர் காரணம் குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படலாயிற்று. மேலும் புதிதாக உருவான ஊரை "புத்தூர்" (புது + ஊர்) என்பர்.

# கோசர் + புத்தூர் = கோயர் + புத்தூர் = கோயன் + புத்தூர் = கோயம்புத்தூர்

# கோணி + முத்து + ஊர் = கோணி + முத்தூர் = கோயம்புத்தூர்

# கோவன் + புத்தூர் = கோயன் + புத்தூர் = கோயம்புத்தூர்

திருச்சிராப்பள்ளி 
சீவரம் என்பது பௌத்த துறவிகளான பிக்குகள்  மற்றும்  பிக்குணிகள் அணியும் ஆடை ஆகும். உள்ளாடை (Antarvasaka), மேலாடை (UttaraSanga), வெளியாடை (Sanghati) என மூன்று சீவர ஆடையை "திரி சீவரம்" என்பர். பௌத்த துறவிகள் வாழ்கின்ற மடத்தை "பள்ளி" என்பர். இந்த "திரி சீவரம் பள்ளி" இடமே "திருச்சிராப்பள்ளி" என்றாகியது.

# திரி + சீவரம் + பள்ளி = திருச்சிராப்பள்ளி

திருநெல்வேலி
சங்க காலத்தில் மூங்கில் காடாக விளங்கிய இடத்தில் மூங்கில் நெல்களை கொண்டு மக்கள் தங்களது பசியை போக்கி கொண்டுள்ளனர். பசி போக்கும் மூங்கில் நெல்லுக்கு வேலியிட்டு அவ்விடத்தை சிறப்பித்து "திருநெல்வேலி" என் அழைக்கப்படலாயிற்று.

# திரு + நெல் + வேலி = திருநெல்வேலி

சேலம்
சைலம் என்றால் "மலைகள், பாறைகள், கற்கள் சூழ்ந்த இடம்" என்று பொருள். ஆரம்ப காலத்தில் சைலம் என அழைக்கப்பட்டு நாளடைவில் சேலம் என்றாகியது.

# சைலம்  = சேலம்

வாசித்தமைக்கு நன்றி.


வணக்கம்.


No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -