ரெளலட் - சாஸ்திரி சட்டம்
சுருக்கம்
- முகவுரை
- நீதிபதி சிட்னி ரௌலட் குழு
- ரெளலட் சட்டத்தின் வரைவு
- ரெளலட் சட்டத்தின் சாராம்சம்
- ஜாலியன் வாலாபாக் படுகொலை
- காந்தியின் அரசியல் நுழைவு
- முடிவுரை
- விவரணைகள்
முகவுரை
ஜெர்மன் மற்றும் ரஷ்ய அனுதாபிகள் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆதரிப்பதற்காக வங்காளம் மற்றும் பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவக்கூடும் என்ற தகவல்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் கடுமையான குற்றவியல் சட்டத்தை இயற்ற திட்டமிட்டது. இதையெடுத்து, இந்தியாவில் அரசியல் பயங்கரவாதத்தை (Political Terrorism) விசாரிக்க பிரிட்டிஷ் உயர்நீதிமன்ற நீதிபதி சிட்னி ரௌலட் தலைமையில், ரௌலட் ஆணையம் உருவாக்கப்பட்டது.
நீதிபதி சிட்னி ரௌலட் குழு
இந்தியாவில் அரசியல் பயங்கரவாதத்தை (Political Terrorism) மதிப்பீடு செய்வதற்காக பிரிட்டிஷ் உயர்நீதிமன்ற நீதிபதி சிட்னி ரௌலட் தலைமையிலான ரௌலட் குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.குமாரசாமி சாஸ்திரி உட்பட 6 உறுப்பினர்கள் இடம் பெற்றனர். இக்குழுவின் வரைவறிக்கையினை ஏற்று 1919 இல் குற்றவியல் சட்டமான ரெளலட் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு இயற்றியது.
ரெளலட் சட்டத்தின் வரைவு
பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து சுதந்திரத்திற்காகப் போராடிய இந்தியர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட ரெளலட் சட்ட வரைவை (Rowlatt Act Draft) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.குமாரசாமி சாஸ்திரி எழுதினார். அதற்கு, குறியீடாகவே பெரியார் தனது உரைகளில் ரெளலட் சட்டத்தை “ரெளலட்-சாஸ்திரி” சட்டம் என குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.
சி.வி.குமாராசாமி சாஸ்திரியின் சகோதரி சீத்தம்மாளை இந்திய தேசிய காங்கிரஸ் செயலாளர் சர் சி.பி.ராமசாமி ஐயர் திருமணம் செய்து கொண்டதன் வகையில் இருவரும் மைத்துனர்கள். சிட்னி ரௌலட் குழுவில் இந்தியரும் இடம் பெற வேண்டும் என்ற நோக்கில் சி.பி.ராமசாமி ஐயரின் பரிந்துரையால் சி.வி.குமாரசாமி சாஸ்திரி பிரிட்டிஷாரின் ரௌலட் குழு உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெளலட் சட்டத்தின் சாராம்சம்
ரௌலட் ஆணைய பரிந்துரைகளின் அடிப்படையில், பிரிட்டிஷ் அரசாங்கம் 1919 இல் ரௌலட் சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம் இந்தியர்களை பிணையம் இல்லாமல் கைது செய்யவும், விசாரணையின்றி சிறையில் அடைக்கவும், ஒன்று கூடுவதற்குத் தடை விதிக்கவும், குறிப்பிட்ட இடங்களில் கட்டாயமாக வசிக்கவும், மேல்முறையீட்டு உரிமைகளை மறுக்கவும் அனுமதித்தது.
இதற்கிடையில், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ரௌலட் சட்டத்தை கடுமையாக எதிர்த்த இந்தியா, சுதந்திரத்திற்குப் பிறகு ரௌலட் சட்டத்தின் மறு உருவாக்கமாக மிசா, தடா, பொடா போன்ற சட்டங்களை இயற்றியது வேதனையுடன் குறிப்பிட வேண்டிய உண்மையாகும்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
1919 இல் பைஷாகி பண்டிகையின் போது, அமிர்தசரஸ் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் ஒன்றுகூடி, அகிம்சை வழியில் ரெளலட் சட்டத்திற்கு எதிராகவும், சுதந்திர ஆதரவாளர்களான சைபுதீன் கிட்ச்லேவ் மற்றும் சத்யபால் கைது செய்யப்பட்டதற்கும் எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டக் கூட்டத்தைக் கலைக்க, பிரிட்டிஷ் இராணுவத் தளபதி ரெஜினால்ட் டயர் உத்தரவின் பேரில் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் சுமார் 10 நிமிடங்கள் துப்பாக்கி சூடு நடத்தி நூற்றுக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொன்றனர். ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று அழைக்கப்படும் இந்தப் படுகொலை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பிரதான நீரோட்டத்திற்கு வந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வு இந்தியாவின் சுதந்திர வேட்கையில் காந்தியின் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கின் தொடக்கத்தைக் குறித்தது.
உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில், பிரிட்டிஷ் அதிகாரிகளால் உத்தரவிடப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டிப்பதற்குப் பதிலாக காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசியதால் கலவரம் தூண்டப்பட்டது என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக சில இந்தியத் தலைவர்கள் பேசியது சர்ச்சையானது.
காந்தியின் அரசியல் நுழைவு
ரௌலட் சட்டத்திற்கு எதிராகவும் ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்தும் ஆகஸ்ட் 1920 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் இந்திய சுதந்திரப் போராட்டதில் ஒரு எழுச்சியை உருவாக்கியது. இந்திய தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் சீர்திருத்தங்களுக்கான ஆதரவை திரும்பப் பெற்ற பிறகு தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தின் குறிக்கோள், பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் இந்தியர்கள் ஒத்துழைப்பதை நிறுத்துவதன் மூலம் இந்தியாவிற்கு சுயாட்சி வழங்க பிரிட்டிஷ் அரசாங்கத்தை வற்புறுத்துவதாகும்.
ஒரு கட்டத்தில், ஒத்துழையாமை இயக்கத்தினருக்கும் பிரிட்டிஷ் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சௌரி சௌரா என்ற நகரில் காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. கலவரத்தில் 23 காவல் துறையினரும், 3 ஒத்துழையாமை இயக்க ஆர்வலர்களும் கொல்லப்பட்டனர். அகிம்சைப் போராட்டம் வன்முறையாக மாறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காந்தி, வன்முறைப் போராட்டங்களுக்கு எதிராகவும், சௌரி சௌரா வன்முறைக்கு வருத்தம் தெரிவிக்கவும் ஐந்து நாள் உண்ணாவிரதம் இருந்தார். இறுதியாக, பிப்ரவரி 1922 இல் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். மேலும், பலதரப்பட்ட அழுத்தத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கம் மார்ச் 1922 இல் ரெளலட் சட்டத்தை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
முடிவுரை
ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்ற நிகழ்வுகளின் வேதனையை உலகத்தால் மீண்டும் தாங்க முடியாது. எனவே, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும், இராணுவப் படையை சிக்கனமாகவும் கவனமாகவும் நியாயமாகவும் பயன்படுத்த வேண்டும், அதே நேரத்தில் அமைதியான போராட்டத்திற்கான அடிப்படை உரிமையை சமூக உரிமைகளின் அடித்தளமாக மதிக்க வேண்டும்.
விவரணைகள்
Jallianwala Bagh Massacre History
When India United In Grief For Jallianwala Bagh Massacre
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment