மும்பை நிழல் உலகம்
குறிப்பு = இந்த சுருக்கமான கட்டுரை முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, தலைப்பில் இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சுருக்கம்
- முகவுரை
- மூவர் சாம்ராஜ்யம்
- ஹாஜி மஸ்தான்
- வரதராஜன் முதலியார்
- கரீம் லாலா
- மன்யா சர்வே
- வடலாவில் துப்பாக்கிச் சூடு
- தாவூத் இப்ராஹிம்
- கிரிக்கெட் சூதாட்டம்
- லோகந்த்வாலா துப்பாக்கிச் சூடு
- தாவூத் இப்ராஹிமின் வளர்ச்சி
- 1993 மும்பை குண்டுவெடிப்பு
- அபு சலேம்
- சஞ்சய் தத் வழக்கு
- குல்ஷன் குமார் கொலை
- அருண் கவ்லி
- ராஜன் வகையறா
- முடிவுரை
- விவரணைகள்
முகவுரை
இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகள் உள்ளன, அதில் 806 மாவட்டங்கள் உள்ளன, அதில் மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டு மாவட்டங்கள் குற்றங்களின் தலைநகரங்களாக வர்ணிக்கப்படுவதுண்டு. மும்பை வட இந்தியாவின் பொருளாதார தலைநகரம் மற்றும் பெங்களூரு தென்னிந்தியாவின் பொருளாதார தலைநகரம் ஆகும். இங்கு நடக்கும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது அல்லது தடுப்பது என்பது அதிகாரிகளுக்கு எப்போதுமே கடினமான செயலாக இருந்து வருகிறது.
மும்பை நிழல் உலகம் பற்றிய கட்டுரைகள் ஆய்வுக்குரியதாக இருந்தாலும், பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை எழுதினேன். அவ்வகையில் ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார் மற்றும் கரீம் லாலா ஆகியோர் மும்பை நிழல் உலகை 1960 கள் முதல் 1980 கள் வரை ஆண்டனர். 1980 களுக்கு பிறகு இன்று வரை, தாவூத் இப்ராஹிம் மும்பையின் நிழல் உலகத்தை ஆள்கிறார். இரவுக்கு ஆயிரம் கண்கள் உடைய மும்பையில் தலைவிரித்தாடும் நிழல் உலகம் (மாஃபியா) பற்றி காண்போம், வாருங்கள்!
மூவர் சாம்ராஜ்யம்
1950 களின் பிற்பகுதியிலிருந்து 1980 களின் ஆரம்பம் வரை இந்த மூவரும் மும்பை நிழல் உலகத்தை ஆண்டனர். அவர்கள் முறையே ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார் மற்றும் கரீம் லாலா. ஹாஜி மஸ்தான் மற்றும் வரதராஜன் முதலியார் ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று பேர் கொண்ட கும்பலுக்கு இடையே மரியாதைக்குரிய தொழில்முறை இடைவெளி பராமரிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலிலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தால் மும்பையின் முதல் பெண் தாதா ஜெனாபாய் தர்வாலி சமரசம் பேசி தீர்த்து வைப்பார்.
ஹாஜி மஸ்தான்
1926 இல் இந்தியாவின் முதல் நிழல் உலக தாதா என்று அழைக்கப்படும் மஸ்தான் மிர்சா என்ற ஹாஜி மஸ்தான், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பனைக்குளம் கிராமத்தில் பிறந்தார். ஹாஜி என்பது மக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்ட முஸ்லிம்களைக் குறிக்கிறது. 8 வயதில் தந்தையுடன் மும்பைக்கு குடிபெயர்ந்து வறுமையில் வாடிய ஹாஜி மஸ்தான், இளம் வயதிலேயே கோடீஸ்வரனாக வேண்டும் என்று நினைத்தார்.
1944 இல் ஹாஜி மஸ்தான் மும்பை துறைமுகத்தில் வெளிநாட்டு கப்பல்களில் இருந்து கொள்கலன்களை இறக்கும் தொழிலாளியாக சேர்ந்தார். துறைமுகத் தொழிலாளியாக பணி புரிந்தபோது கடத்தல் வித்தைகளைக் கற்றுக்கொண்டார். அப்போது, அரபு வம்சாவளியைச் சேர்ந்த ஷேக் முகமது அல் காலிப், ஹாஜி மஸ்தானிடம், கடத்தல் பொருள்களை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறும், கடத்தல் பொருட்களை மாற்ற உதவுமாறும் கேட்டுக் கொண்டார். இது மஸ்தானின் சகாப்தத்தை தொடங்கியது.
1956 இல் குஜராத்தை சேர்ந்த சுகுர் நாராயண் பாக்கியாவுடன் நட்பு ஏற்பட்ட பிறகு ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை மாறியது. ஆரம்ப காலத்தில், ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து மும்பை துறைமுகத்திற்கு வரும் தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் மின்னணு கடத்தல் பொருட்களை மஸ்தான் மற்றும் பாக்கியா கையாண்டனர்.
1975 இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது சிறையில் அடைக்கப்பட்ட ஹாஜி மஸ்தான், 18 மாத சிறைவாசத்துக்கு பிறகு வெளிவந்து, வியக்கத்தக்க வகையில் நிழல் உலக நாயகனாக உருவெடுத்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் ஹாஜி மஸ்தானுக்கு நெருக்கமாக இருந்து, நெருக்கடி நிலை காலத்தில் ஹாஜி மஸ்தானின் கூட்டாளிகள் பலருக்கு தமிழ்நாட்டில் அடைக்கலம் கொடுத்தார். கடந்த 2012 இல் பசுபதி பாண்டியன் பண்ணையார் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாஜி மஸ்தான், மும்பை சோபியா கல்லூரிக்கு எதிரே உள்ள ஆடம்பரமான பகுதியான பெதார் சாலையில் உள்ள பைத்துல் சுரூர் (அரபியில் மகிழ்ச்சியின் இல்லம்) என்ற மாளிகையில் வசித்து வந்தார். வெள்ளை நிற டிசைனர் ஆடைகளை அணிந்து கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டை புகைத்தப்படி, வெள்ளை நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் பயணம் செய்வது ஹாஜி மஸ்தானின் கவர்ச்சி முத்திரை ஆகும். அவருடன் அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறை, ஊடகங்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நெருங்கிப் பழகினர்.
பாலிவுட் நடிகை மதுபாலாவின் அழகை கண்டு வியந்த ஹாஜி மஸ்தான், மதுபாலாவை மனைவியாக்க பலமுறை முயற்சித்து தோல்வியடைந்தார். 1969 இல் மதுபாலாவின் மரணத்திற்கு பிறகு, மதுபாலாவைப் போல முகச்சாயலை கொண்ட நடிகை ஷாஜஹான் பேகத்தை மணந்தார்.
1983இல் அகில இந்திய தலித் முஸ்லிம் பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியை தொடங்கி, நிழல் உலக நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்காமல், வரதராஜன் முதலியார் மற்றும் கரீம் லாலாவுடன் இணைந்து தனது கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்ட ஹாஜி மஸ்தான் 25-06-1994 அன்று மாரடைப்பால் காலமானார்.
வரதராஜன் முதலியார்
தமிழ்நாட்டின் வட ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வட ஆற்காட்டில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு கப்பல் தளவாட பணிக்காக குடிபெயர்ந்தது. இந்த குடும்பத்தில் 1926 இல் தூத்துக்குடியில் பிறந்தவர் வர்தாபாய் என்ற வரதராஜன் முனிசாமி முதலியார். வர்தாபாயின் குடும்பம் 1945 இல் மும்பைக்கு குடிபெயர்ந்தது. வர்தாபாய் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணி புரியும் போது ரயில்வே பொருட்களை திருடி தனது குற்ற வாழ்க்கையை தொடங்கினார்.
சுமை தூக்கும் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கி, சட்டவிரோதமாக மது விற்பனை செய்யத் தொடங்கிய போது தான் வர்தாபாயின் வளர்ச்சி எகிறியது. கள்ளக்கடத்தல், ஒப்பந்த கொலை, மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை, நில ஆக்கிரமிப்பு, சூதாட்டம், மதுபான பார், மதுபான உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றை வர்தாபாய் கவனித்து வந்தார்.
மும்பையில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் பேரவை என்ற சமூக நல அமைப்பை ஏற்படுத்தி மருத்துவ முகாம், மருத்துவ ஊர்தி, கல்விக்கடன், இரத்ததானம், அன்னதானம் போன்ற இலவச சேவைகளை வழங்குதல், வேலையில்லா தோழர்களை பெருநிறுவனங்களில் வேலைக்கு பரிந்துரை செய்தல் போன்ற நற்காரியங்களால் மும்பையில் வாழும் தமிழர்களின் மகத்தான ஆதரவு வர்தாபாய்க்கு கிட்டியது. 1983 இல் சென்னையில் நடந்த வர்தாபாய் மகள் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரும் அவரது மனைவி ஜானகியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் திருமணமான தம்பதிகள் எம்.ஜி.ஆருடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியானது குறிப்பிடத்தக்கது.
குற்றச் செயல்களைப் பொறுத்தவரை, ஹாஜி மஸ்தான் கடத்தல் மற்றும் சட்டவிரோத நிதியுதவியையும், வர்தாபாய் தாராவி, மாகிம், மாட்டுங்கா, சியோன் கோலிவாடா, செம்பூர் மற்றும் கட்கோபர் போன்ற பகுதிகளையும் கரீம் லாலா பைதோனி, நாக்பாடா, மற்றும் கமாதிபுரா போன்ற பகுதிகளையும் கவனித்து வந்தனர். தமிழர்கள் அதிகம் வாழும் மாட்டுங்கா, தாராவி போன்ற பகுதிகளில் அரசுக்கு இணையாக தனி ராஜாங்கத்தை நடத்தி வந்தார் வர்தாபாய். மாட்டுங்கா ரயில் நிலையம் அருகே, வர்தாபாய் ஏற்பாடு செய்த மாட்டுங்கா கணபதி பந்தல் கொண்டாட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் முதல் திரைப்பட நட்சத்திரங்கள் வரை சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள மிகவும் பிரசித்தி பெற்றது.
இப்படிப்பட்ட சூழலில் 1980 களில் மும்பையில் குற்றச் செயல்களை தடுக்க IPS அதிகாரி Y.C.பவார் திட்டமிட்டு கடுமையான நடவடிக்கைளை மேற்கொண்டார். காவல்துறை உத்தரவின் பேரில் வர்தாபாய் கணபதி பந்தலுக்கு வெளியேற்ற நோட்டீஸ் (Eviction Notice) வழங்கப்பட்டது. காவல்துறையின் தொடர்ச்சியான அடக்குமுறைகளின் விளைவாக வர்தாபாய் கும்பலின் பெரும்பாலான உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் சிலர் மும்பையிலிருந்து தப்பி சென்றனர்.
இந்நிலையில், தனிப்பட்ட செல்வாக்கை இழந்த காலகட்டத்தில், காவல்துறை நடவடிக்கையை தவிர்க்க சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுப்பதாக கூறி, மும்பையில் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு பெற்று சென்னைக்கு குடிபெயர்ந்த வர்தாபாய் 02-01-1988 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். வர்தாபாய் விருப்பப்படி வர்தாபாயின் உடலை இறுதிச் சடங்குகளுக்காக தனி விமானத்தில் மும்பைக்கு கொண்டு வந்தார் ஹாஜி மஸ்தான். வரதராஜன் முதலியார் பற்றிய கூடுதல் தகவலுக்கு Nayagan (1987) திரைப்படத்தை காணவும்.
கரீம் லாலா
1911இல் ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் ஷேகல் மாவட்டத்தில் அப்துல் கரீம் ஷெர்கான் என்ற கரீம் லாலா பிறந்தார். பதான் பரம்பரையை சேர்ந்த கரீம் லாலாவின் குடும்பம் 1920 களில் ஆப்கானிஸ்தானில் இருந்து தெற்கு மும்பைக்கு குடிபெயர்ந்தது. பதான் பரம்பரை என்பது கிழக்கு - தெற்கு ஆப்கானிஸ்தான், வடமேற்கு பாகிஸ்தான் மற்றும் பலூச்சிஸ்தான் ஆகிய பழங்குடிப் பகுதிகளில் வாழும் பஷ்தூ மொழி பேசும் கிழக்கு ஈரானிய மக்களின் இனக்குழு ஆகும்.
கரீம் லாலா 1940 களின் முற்பகுதியில் மும்பை துறைமுகத்தில் ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் மார்வாரி மற்றும் குஜராத்தி வியாபாரிகளுக்காக சட்டவிரோதமாக மிரட்டி பணம் பறிக்கும் முகவராக பணியாற்றினார். ஹாஜி மஸ்தான் மற்றும் வரதராஜன் முதலியார் ஆகியோருடன் இணைந்த பிறகு கரீம் லாலா குற்றச் செயல்களில் முக்கிய இடத்தை.
மும்பையில் சூதாட்டம், நில அபகரிப்பு, தங்கம் கடத்தல், மதுபான பார்கள், மிரட்டி பணம் பறித்தல், ஒப்பந்த கொலை, மோசடிகளை திட்டமிடுதல், மின்னணு பொருட்கள் விநியோகம், கள்ள நோட்டு விநியோகம், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளித்தல் என பல்வேறு சட்டவிரோத செயல்களில் கரீம் லாலா ஈடுபட்டு வந்தார். இந்த கும்பல் நடத்தும் கேரம் கிளப்புகள் பிரபலமானது.
கரீம் லாலா கொடிகட்டி பறந்த காலத்தில் நடத்திய பார்ட்டிகள் மற்றும் ஈத் கொண்டாட்டங்களில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஏழைகளுக்கு உதவுவதில் பெயர் பெற்ற கரீம் லாலா, வாரந்தோறும் தர்பார் நடத்தி வந்தார். தர்பாரில் பங்குபெறும் மக்களுக்கு அவர்களின் பல்வேறு குறைகளை கூறுவதன் மூலம் நிதி அல்லது நீதியைப் பெறுவதற்கு அவர் தனது கும்பலின் சக்தியைப் பயன்படுத்தினார்.
1970 களின் பிற்பகுதியில் கரீம் லாலா உடல் நலக்குறைவு காரணமாக பதான் கும்பலின் தலைமைப் பொறுப்பை தனது மருமகன் சமத் கானிடம் சகோதரர் ரஹீம் கானின் மேற்பார்வையில் படிப்படியாக ஒப்படைத்தார். பதான் கும்பலுக்கும் தாவூத் கும்பலுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வந்தது. பதான் கும்பல் சார்பில், மன்யா சர்வே, தாவூத் இப்ராகிமின் சகோதரர் சபீர் இப்ராகிமை 1981 இல் கொன்றார். இதற்கு பழிவாங்கும் வகையில் 1984 இல் சமத் கானும், 1986 இல் ரஹீம் கானும் தாவூத் இப்ராகிமின் கும்பலால் கொல்லப்பட்டனர். மருமகன் சமத் கான் மற்றும் சகோதரர் ரஹீம் கான் கொல்லப்பட்ட பிறகு, கரீம் லாலா சோர்வடைந்தார். இறுதியில் கரீம் லாலாவின் முதுமை காரணமாக பதான் கும்பல் வலுவிழந்தது. கரீம் லாலா முதுமை காரணமாக 19-02-2002 அன்று தனது 90வது வயதில் காலமானார்.
மன்யா சர்வே
08 ஆகஸ்ட் 1944 அன்று மகாராஷ்டிராவில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ரன்பார் கிராமத்தில் மனோகர் அர்ஜுன் சர்வே என்ற மன்யா சர்வே பிறந்தார். 1952 இல் தனது தாய் மற்றும் வளர்ப்புத் தந்தையுடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார். மும்பை கீர்த்தி எம்.தூங்குர்சி கலைக் கல்லூரியில் 78% மதிப்பெண்களுடன் B.A பட்டம் பெற்றார். பாலிவுட் நடிகர் நானா படேகரின் உறவினர் மன்யா சர்வே என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டம் பெற்ற பிறகு, மான்யா சர்வே தனது கூட்டாளியான சுமேஷ் தேசாய் உடன் சேர்ந்து சிறு குற்றங்களில் ஈடுபட்டார், இறுதியில் அவர் சகோதரர் பார்கவ் மற்றும் கூட்டாளி மன்யா போட்கரின் உதவியுடன் 1969 இல் தண்டேகர் என்பவரை படுகொலை செய்தார். 1969 இல் தண்டேகர் கொலை வழக்கில் மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். 9 ஆண்டுகள் சிறையில் இருந்த மன்யா சர்வே, 1979 இல் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்படும் கனநேரத்தில் தப்பித்தார்.
சிறையில் இருந்து தப்பிய மன்யா சர்வே மீண்டும் மும்பை வந்து புதிய கும்பலை உருவாக்கினார். 1979 இல் ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார் மற்றும் கரீம் லாலா கும்பல் பிரமிக்கும் வகையில், நிழல் உலகில் உயர்ந்தார். திட்டமிடுதலுக்கு பெயர் பெற்ற மன்யா சர்வே, நிழல் உலக செயல்பாட்டின் இரண்டு ஆண்டுகளுக்குள் முக்கியத்துவம் பெற்றார். மான்யா சர்வே கும்பல் கொலை, கொள்ளை, கடத்தல், சூதாட்டம் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக அரசு பால்வளத் துறையில் இருந்து பணத்தையும், கனரா வங்கி கிளையில் இருந்து ரூ.1.6 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து மும்பை நிழல் உலகில் கவனத்தை ஈர்த்தனர்.
இரண்டு தசாப்தங்களாக நிழல் உலகை ஆண்டு வந்த கரீம் லாலாவின் பதான் கும்பல், வளர்ந்து வரும் எதிரியான D Company கும்பலின் தலைவர் சபீர் இப்ராகிம் மற்றும் அவரது சகோதரர் தாவூத் இப்ராகிமைக் கொலை செய்ய மன்யா சர்வே உதவியை நாடினர். அதையொட்டி, முதலில் சபீர் இப்ராகிமை 12 பிப்ரவரி 1981 அன்று கனகச்சிதமாக திட்டமிட்டு கொலை செய்தது மன்யா சர்வே கும்பல். அடுத்ததாக, தாவூத் இப்ராகிமை கொலை செய்ய நேரம் பார்த்துக் கொண்டிருந்த மன்யா சர்வேக்கு தாவூத் இப்ராகிம் முன்கூட்டியே நேரம் குறித்தார்.
சுருங்கச்சொன்னால், மன்யா சர்வே உயிரோடு இருந்திருந்தால் தாவூத் இப்ராகிமை கொன்றிருக்க முடியும், சகோதரர் சபீர் இப்ராகிம் இறந்த 11 மாதங்களுக்குப் பிறகு, தன்னை தற்காத்து கொள்ள தாவூத் இப்ராகிம் கசியவிட்டதாக கூறப்படும் தகவலின் அடிப்படையில் 1982 இல் மன்யா சர்வே காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டார். குறுகிய காலமே வாழ்ந்தாலும், இரண்டு வருட நிழல் உலக பயணத்தில் தாவூத் இப்ராகிமுக்கு இன்று வரை யாரும் செய்யாத கணிசமான சேதத்தை மன்யா சர்வே செய்துள்ளார். தாவூத் இப்ராகிமை விட சக்தி வாய்ந்த மன்யா சர்வேயின் திடீர் மரணத்திற்கு பிறகு தாவூத் இப்ராகிம் மும்பை நிழல் உலகில் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்யா சர்வே கும்பலின் பல்வேறு குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டுமென அரசும் ஊடகமும் மக்களும் காவல்துறைக்கு பெரும் அழுத்தம் கொடுத்தனர். இதையொட்டி, மன்யா சர்வே கும்பலின் குற்றச் செயல்களைக் தடுக்க, மன்யா சர்வேயை என்கவுண்டர் செய்வது தான் ஒரே வழி என நினைத்த காவல்துறையினர் Operation Manya Surve திட்டத்தை வகுத்தனர். இதன் அடிப்படையில் 11 ஜனவரி 1982 அன்று அம்பேத்கர் கல்லூரி சந்திப்பு அருகே உள்ள அழகு நிலையத்திற்கு மன்யா சர்வே வாடகை காரில் வருவார் என தாவூத் இப்ராகிமிடம் இருந்து மும்பை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மதியம் 1:30 மணியளவில், 18 குற்றப்பிரிவு அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து மன்யா சர்வே சம்பவ இடத்திற்கு வரும் வரை காத்திருந்தனர். அதிகாரிகளின் நடமாட்டத்தை தெரிந்தவுடன் மன்யா சர்வே துப்பாக்கியை வெளியே எடுத்தார். இருப்பினும், அவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, காவல்துறை அதிகாரிகள் மன்யா சர்வேயை என்கவுண்டர் செய்தனர். மன்யா சர்வேயின் மரணம் மும்பையில் பதிவு செய்யப்பட்ட முதல் என்கவுன்டர் என்று அறியப்படுகிறது. வடலா துப்பாக்கிச் சூடு பற்றிய கூடுதல் தகவலுக்கு Agneepath (1990) மற்றும் Shootout at Wadala (2013) திரைப்படத்தை காணவும்.
தாவூத் இப்ராஹிம்
26-12-1955 அன்று மகாராஷ்டிராவில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கெத் கிராமத்தில் பொருளாதார சிக்கல் நிறைந்த குடும்பத்தில் 8 சகோதரர்கள் மற்றும் 4 சகோதரிகள் உடன் பிறந்த தாவூத் இப்ராகிம், மத்திய மும்பையின் டோங்ரியில் வளர்ந்தார். தந்தை இப்ராகிம் கஸ்கர் மும்பை காவல்துறையில் தலைமைக் காவலராகவும், தாய் அமினா இல்லத்தரசியாகவும் இருந்தார்.
அகமது சைலோர் உயர்நிலை பள்ளியில் படித்து வந்த தாவூத் இப்ராகிம், தனது தந்தையால் பள்ளிக் கட்டணத்தை தொடர்ந்து செலுத்த முடியாததால் பள்ளிப்பபடிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். அதன் பிறகு, விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசையால் டோங்கிரி சிறுவர்களை ஒருங்கிணைத்து சட்டவிரோத கும்பலை உருவாக்கி, சிறு கடத்தல் மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபட்டார். டோங்கிரியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட போது நிகழ் உலக கவனத்தை ஈர்த்த தாவூத் இப்ராகிம் ஹாஜி மஸ்தானுக்காக வேலை செய்ய தொடங்கினார். 1980 களில் முதன்முதலில் கொள்ளை வழக்கில் கைதாகி விடுதலையான பிறகு தாவூத் இப்ராகிமின் குற்றச் செயல்கள் அதிகரித்தன.
கரீம் லாலாவின் பதான் கும்பலுக்கும் தாவூத் இப்ராகிமின் கும்பலுக்கும் இடையே நடந்த சண்டை மும்பையில் நடந்த கொடூரமான கும்பல் சண்டைகளில் ஒன்றாக விவரிக்கப்படுகிறது. இந்த சண்டையில், 1981இல் தாவூத் இப்ராகிமின் சகோதரர் சபீர் இப்ராகிமை மன்யா சர்வே கொன்றார். இதன் விளைவாக, 1984 இல் கரீம் லாலாவின் மருமகன் சமத் கானும், 1986 இல் கரீம் லாலாவின் சகோதரர் ரஹீம் கானும் தாவூத் இப்ராகிமின் கும்பலால் கொல்லப்பட்டனர். இறுதியில் தாவூத் இப்ராஹிம், பதான் கும்பலையும் பிற கும்பலையும் கட்டுப்படுத்தி நிழல் உலகில் மெல்ல வளர தொடங்கினார்.
ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார், கரீம் லாலா கும்பல் கடைப்பிடித்த அடிச்சுவடுகளை பின்பற்றாமல் தனி நபராக செயல்பட போட்டி, வன்முறை மற்றும் பகைமையை வளர்க்க தொடங்கினார் தாவூத் இப்ராகிம். மன்யா சர்வேயின் மரணத்திற்கு பிறகு தனக்கு தொல்லை கொடுத்து வந்த கரீம் லாலாவின் உறவினர்களை கொன்று, வர்தாபாயின் கும்பலை அடக்கி சமாளித்து கொண்டிருக்கையில் ஹாஜி மஸ்தான் அரசியலில் குதித்த பிறகு, ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார், கரீம் லாலா தலைமையில் மூவேந்தர் சாம்ராஜ்யமாக இருந்த மும்பை நிழல் உலகை தனி ஒருவன் சாம்ராஜ்யமாக மாற்றி 1980 களின் மத்தியில் மும்பை நிழல் உலகின் முடிசூடா மன்னனாக உருவெடுத்தார் தாவூத் இப்ராகிம்.
சமத் கான் கொலைக்காக மும்பை காவல்துறையால் தேடப்பட்டு வந்த தாவூத் இப்ராகிம், 1986 இல் இந்தியாவை விட்டு துபாய்க்கு தப்பி சென்றார். இந்தியாவை விட்டு வெளியேறினாலும் D Company கூட்டாளிகள் மூலம் மும்பை நிழல் உலகத்தை தாவூத் இப்ராகிம் கட்டுப்படுத்துவதாக அறியப்படுகிறார். காலப்போக்கில் வெளிநாட்டு தொடர்புகள் அதிகரித்ததால் நிழல் உலகில் மிகவும் சக்திவாய்ந்தவராகவும் ஆபத்தானவராகவும் மாறினார். சில பாலிவுட் பிரபலங்கள் முதலீடுகளுக்காக தாவூத் இப்ராகிமை தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். மேலும் தாவூத் இப்ராகிம் நக்மா, அனிதா அயூப், மந்தாகினி போன்ற நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
போதைப்பொருள், பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி, ஹவாலா பரிவர்த்தனை, ஆயுதக்கடத்தல், சூதாட்டம், ஆட்ட நிர்ணயம், திரைத்துறையை கட்டுப்படுத்துதல் என பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார் தாவூத் இப்ராகிம். அவரது வலதுகரமான சோட்டா ஷகீலின் (இவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதில் மர்மம் நிலவுகிறது) மேற்பார்வையில் நடத்தப்படும் கிரிக்கெட் பந்தயம் சூதாட்டத்தின் முக்கிய அம்சமாகும். மேலும் உலகெங்கிலும் நடைபெறும் பிரபல விளையாட்டு போட்டிகளின் பந்தயங்களில் மூன்றில் இரண்டு பங்கு முடிவை தீர்மானிக்கும் இடத்தில் தாவூத் இப்ராகிம் இருப்பதாக நம்பப்படுகிறது.
கிரிக்கெட் சூதாட்டம்
1980 களில் இருந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வரும் தாவூத் இப்ராகிம், 2000 ஆம் ஆண்டு ஆட்ட நிர்ணயம் சர்ச்சையிலும் சிக்கினார். 2008 இல் ஐ.பி.எல் அறிமுகமான பிறகு தான் பலர் அதில் நேரடியாக கவனம் செலுத்த ஆரம்பித்தனர். 2013 இல் தாவூத் இப்ராகிமின் சகோதரர் அனீஸ் இப்ராகிம் ஐ.பி.எல் பந்தயத்தை நடத்த நட்சத்திர வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் சிலரை அச்சுறுத்தியதாகவும் இந்தியா டுடே பத்திரிகை செய்தி வெளியிட்டது. ஒவ்வொரு ஐ.பி.எல் தொடரிலும் பி.சி.சி.ஐ, அணி உரிமையாளர், அணி வீரர்கள், விளம்பரதாரர்கள் லாபம் ஈட்டுவதை காட்டிலும் தாவூத் இப்ராகிம் கும்பல் பந்தயங்கள் மூலம் பல மடங்கு லாபத்தை ஈட்டுகின்றனர். தாவூத் இப்ராகிம் கிரிக்கெட் பந்தயம் மட்டுமின்றி கிரிக்கெட் குடும்பத்துடன் தொடர்புடையவர். அதாவது, 2006 இல் தாவூத் இப்ராகிமின் மகள் மஹ்ருக் இப்ராகிம், பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டமின் மகன் ஜுனைத் மியாண்டம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
லோகந்த்வாலா துப்பாக்கிச் சூடு
1980 களின் பிற்பகுதியில் கஞ்சூர்மார்க்கில் அரசியல்வாதி அசோக் ஜோஷி கும்பலுக்காக மஹிந்திரா டோலாஸ் என்ற மாயா டோலாஸ் பல மோசடிகளை அரங்கேற்றினார். 03-12-1988 அன்று தாவூத் இப்ராகிமின் உத்தரவின் பேரில் சோட்டா ராஜன் கும்பல் அசோக் ஜோஷியை படுகொலை செய்தது. அசோக் ஜோஷியின் படுகொலைக்கு பிறகு, மாயா டோலாஸ் தனது சொந்த கும்பலை உருவாக்கி, தாவூத் இப்ராகிமுக்கு ஆதரவாக திலீப் புவாவுடன் இணைந்து பணியாற்றினார். ஆரம்பத்தில் இருந்தே மாயா டோலாஸ் நம்பகத்தன்மையற்றவராக கருதப்பட்டதால், ஒரு நாள் மாயா டோலாஸ் மூலம் காவல்துறை தங்களை நெருங்கிவிடுவார்கள் என்று நினைத்து தங்களை பாதுகாத்து கொள்ள மாயா டோலஸ் கும்பல் இருக்கும் இடத்தை தாவூத் இப்ராகிம் கும்பல் காவல்துறையிடம் கசியவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன.
16-11-1991 அன்று காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், லோகந்த்வாலா வளாகத்தில் மாயா டோலாஸ் உட்பட 7 குண்டர்களுக்கும் மும்பை கூடுதல் காவல் ஆணையர் அப்தாப் அகமது கான் குழுவினருக்கும், பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கும் இடையே 4 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதன் முடிவில் மாயா டோலாஸ் உட்பட 7 பேரும் மரணமடைந்தனர். இந்தியாவின் முதல் பகல்நேர என்கவுண்டர் சம்பவமான லோகந்த்வாலா வளாக துப்பாக்கிச் சூடு, பொதுமக்களின் பார்வைக்கு மத்தியில் காணொளி பதிவு செய்யப்பட்டது. லோகந்த்வாலா துப்பாக்கிச் சூடு குறித்து மேலும் அறிய Shootout at Lokhandwala (2007) திரைப்படத்தை காணவும்.
தாவூத் இப்ராஹிமின் வளர்ச்சி
தாவூத் இப்ராகிம் தனது பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் பழிவாங்கலுக்காக மன்யா சர்வே மற்றும் மாயா டோலாஸை ஒழிக்க விரும்பினார். மேலும் தாவூத் இப்ராகிம் தனது பணம், அதிகாரம் மற்றும் தொடர்புகளை பயன்படுத்தி மும்பையில் குற்றங்களை தடுக்க மன்யா சர்வே மற்றும் மாயா டோலாஸ் ஆகிய இருவரையும் கொல்வதே சிறந்த வழி என்று மும்பை காவல்துறையை நம்ப வைத்தார் என்று பரவலாக நம்பப்படுகிறது.
ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார், கரீம் லாலா, மன்யா சர்வே, மாயா டோலாஸ் ஆகியோர் மும்பை நிழல் உலக போட்டியில் இருந்து விலக்கப்பட்டதை அடுத்து தாவூத் இப்ராகிமின் தேசிய குற்ற வலையமைப்பு சர்வதேச குற்ற வலையமைப்பாக வளர்ந்தது குறிப்பிடத்தக்கது. கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகள் இல்லாமல் வளர்ந்த தாவூத் இப்ராகிமின் சர்வதேச வலைப்பின்னலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக 1993 மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு பிறகு உலகின் மிகவும் தேடப்படும் குற்றவாளியாக தாவூத் இப்ராகிம் மாறினார்.
1993 மும்பை குண்டுவெடிப்பு
06-12-1992 அன்று அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இந்து கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, டிசம்பர் 1992 மற்றும் ஜனவரி 1993 இல், ராமர் கோயிலுக்கு ஆதரவாகவும் பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக போராடிய முஸ்லிம்களுக்கு எதிராகவும் இந்து கரசேவகர்கள் கலவரத்தில் ஈடுபட நாடு முழுவதும் பரவலான மதக் கலவரங்கள் வெடித்தன. 1997 இல் வெளியான ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கைப்படி மும்பையில் நடந்த மதக் கலவரங்களால் தோராயமாக 900 நபர்கள் இறந்ததாகவும், 2000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் கண்டறியப்பட்டது. மேலும் பால் தாக்கரேவின் உத்தரவின் பேரில் பழிவாங்கும் நோக்கத்துடன் முஸ்லிம்கள் மற்றும் அவர்களது உடைமைகள் மீது சிவசேனா கட்சியினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியதாக அறிக்கை குற்றம்சாட்டியது.
டிசம்பர் 1992 மற்றும் ஜனவரி 1993 மத கலவரத்தைத் தொடர்ந்து மார்ச் 1993 மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இது இந்திய வரலாற்றில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பு சம்பவமாகும். 12-03-1993 மும்பையில் 12 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1400 பேர் காயமடைந்தனர். காவல்துறையின் தீவிர விசாரணையில், பயங்கரவாத தாக்குதலுக்கு கூட்டாளிகளான டைகர் மேமன் மற்றும் யாகூப் மேமன் மூலம் தாவூத் இப்ராகிம் ஒருங்கிணைத்தது தெரியவந்தது.
1993 மும்பை குண்டுவெடிப்பு விசாரணையில், 100 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு 99 பேருக்கு பல்வேறு கால அளவில் சிறைத்தண்டனை மற்றும் யாகூப் மேனனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. யாகூப் மேனன் 2015 இல் தூக்கிலிடப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் கைது செய்யப்படவோ அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படவோ இல்லை.
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு, கொலை வழக்கு, மோசடி வழக்கு, கடத்தல் வழக்கு போன்ற குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம் இன்று வரை பிடிபடவில்லை. இன்று, பல்வேறு சர்வதேச புலனாய்வு அமைப்புகளால் உலகம் முழுவதும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக இருக்கும் தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க வடிவமைப்பை கொண்ட வெள்ளை மாளிகையில் இருப்பதாக நம்பப்படுகிறது.
அபு சலேம்
உத்தரபிரதேசத்தில் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள சராய் மிர் கிராமத்தில் பிறந்த அபு சலேம், ஆரம்பத்தில் தாவூத் இப்ராகிம் கும்பலில் கடத்தல் பொருட்களை கொண்டு செல்லும் ஓட்டுநராக பணிபுரிந்தார். இறுதியில் தாவூத் இப்ராகிமின் தயவால் நிழல் உலகில் மெதுவாக வளர்ந்து பாலிவுட் விவகாரங்களை கவனிக்க தொடங்கிய அபு சலேம், பாலிவுட் நடிகை மோனிகா பேடியுடன் தொடர்பில் இருந்தார்.
பாலிவுட் திரையுலகை கட்டுப்படுத்தும் வகையில், திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் பணம் பறிப்பது, விநியோக உரிமையை அபகரிப்பது, பாலிவுட் படங்களை பினாமி பெயர்களில் தயாரிப்பது போன்றவற்றில் அபு சலேம் கும்பல் ஈடுபட்டது. அவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்காத தயாரிப்பாளர் ஜாவேத் சித்திக், T-Series நிறுவனர் குல்ஷன் குமார் போன்ற பிரபலங்களை கொலை செய்தனர். மேலும் தங்களுக்கு கீழ்ப்படியாத சுபாஷ் கோய், ராஜீவ் ராய் மற்றும் ராகேஷ் ரோஷன் ஆகியோரைக் கொல்ல முயன்று தோல்வியடைந்தனர்.
ஓட்டுநர் பணி, பாலிவுட் பணி போக தாவூத் இப்ராகிமின் உத்தரவுக்கு இணங்க சொந்த ஊரான ஆசம்கரில் வேலையில்லாத இளைஞர்களிடம் பணத்தாசை காட்டி அவர்களை மும்பைக்கு வரவழைத்து கொலை, கொள்ளை போன்ற சட்டவிரோத காரியங்களை கச்சிதமாக அரங்கேற்றி மறுநாள் ஆசம்கருக்கு அனுப்பி வைப்பதும் அபு சலேமின் முக்கிய வேலையாக இருந்துள்ளது.
2002 இல் அபு சலேமும் நடிகை மோனிகா பேடியும் போலி கடவுச்சீட்டை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் போர்ச்சுகலின் தலைநகர் லிஸ்பனில் இன்டர்போலால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அபு சலேமுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், மோனிகா பேடிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து போர்ச்சுகல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், அவர்கள் 2005 இல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு, T-Series நிறுவனர் குல்ஷன் குமார் கொலை வழக்கு, நடிகை மனிஷா கொய்ராலா செயலாளர் அஜித் திவானி கொலை வழக்கு, ரியல் எஸ்டேட் நிறுவனர் பிரதீப் ஜெயின் கொலை வழக்கு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட வழக்குகளில் அபு சலேம் குற்றம் சாட்டப்பட்டார். 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குஜராத்தில் இருந்து மும்பைக்கு ஆயுதங்களை கடத்தியதாகவும் மற்றும் 1995 பிரதீப் ஜெயின் கொலை வழக்கிலும் அபு சலேமுக்கு 2017 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று மும்பை சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறார் அபு சலேம். மேலும், விசாரணையில், சஞ்சய் தத்துக்கு துப்பாக்கிகளை வழங்கியதாக அபு சலேம் ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சஞ்சய் தத் வழக்கு
ஜனவரி 1993 இல், தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளான சமீர் ஹிங்கோரா மற்றும் ஹனிப் கடவாலா ஆகியோருடன் சஞ்சய் தத்தின் வீட்டிற்கு துப்பாக்கிகளை வழங்க சென்றதாகவும், அங்கு சஞ்சய் தத் வெடிமருந்துகளுடன் மூன்று AK-56 ரக துப்பாக்கிகளை பெற்றதாகவும் அபு சலேம் கூறினார். குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை சஞ்சய் தத்தின் வீட்டின் கேரேஜில் மறைத்து வைத்திருந்ததாக ஹனிப் கடவாலா மீது குற்றம் சாட்டப்பட்டது.
06-12-1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த மும்பை கலவரத்தின் போது பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட தனது குடும்பத்தை பாதுகாக்க சஞ்சய் தத் ஆயுதங்களைப் பெற்றார். 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சமீர் ஹிங்கோரா மற்றும் ஹனிப் கடவாலா ஆகியோர் கைது செய்யப்பட்டதை அறிந்த சஞ்சய் தத் தனது நண்பர் யூசுப் நுல்வல்லாவிடம் துப்பாக்கிகளை அழிக்க சொல்லியுள்ளார்.
இதனிடையே, சஞ்சய் தத் AK-56 ரக துப்பாக்கி வைத்திருப்பதாக பத்திரிக்கையாளர் பல்ஜீத் பர்மர் மூலம் பத்திரிகைகளில் செய்தி கசிந்ததால், அந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து மகன் சஞ்சய் தத்திடம் தந்தை சுனில் தத் கேட்க அவரும் இல்லையென மறுத்துள்ளார். இந்நிலையில், 19-04-1993 அன்று மொரீஷியஸில் படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பை திரும்பிய சஞ்சய் தத்தை காவல்துறை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2016 இல், சிறையில் இருந்து வெளிவந்த சஞ்சய் தத் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். சஞ்சய் தத் வழக்கு பற்றிய தகவலுக்கு Sanju (2018) திரைப்படத்தை காணவும்.
குல்ஷன் குமார் கொலை
T-Series நிறுவனர் குல்ஷன் குமார், ஜிதேஷ்வர் மகாதேவ் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது 16 தோட்டாக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குல்ஷன் குமாரை கொலை செய்வதற்கான திட்டம் தாவூத் இப்ராகிமின் சகோதரர் அனீஸ் இப்ராகிமின் வீட்டில் திட்டமிடப்பட்டது. குல்ஷன் குமார் சுட்டுக் கொல்லப்பட்ட போது குல்ஷன் குமாரின் கதறலை தொலைபேசியில் கேட்டு அபு சலேம் மகிழ்ந்ததாக கூறப்படுகிறது. தாவூத் இப்ராகிமின் கூட்டாளி அபு சலேம், அப்துல் ரவூப், TIPS ஆடியோஸ் நிறுவனர் ரமேஷ் தௌராணி, இசையமைப்பாளர் நதீம்-ஷ்ரவன் மற்றும் பலர் குற்றம் சாட்டப்பட்டனர்.
இரண்டு முறை மிரட்டப்பட்டாலும், எந்தவித முன்னெச்சரிக்கை உணர்வும் இல்லாமல் குல்ஷன் குமார் அசட்டு தைரியத்தில் இருந்துள்ளார். ஆனால் குல்ஷன் குமார் அகால மரணத்திற்கு பிறகும், அவரது குடும்பத்தினரின் முயற்சியால், T-Series இன்றும் இசைப்பதிவு துறையில் ஒரு வெற்றிகரமான நிறுவனமாக உள்ளது.
அருண் கவ்லி
17-07-1955 அன்று மகாராஷ்டிராவில் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள போஹேகான் கிராமத்தில் குலாப்ராவ் குடும்பத்தில் அருண் கவ்லி பிறந்தார். 1970 களில், மத்திய மும்பையில் அமைந்துள்ள ஜவுளி ஆலைகளில் மில் தொழிலாளியாக பணிபுரிந்தார். 1970 களின் பிற்பகுதியிலிருந்து 1980 களின் முற்பகுதி வரை, ஜவுளித் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மும்பை ஜவுளி ஆலைகள் பூட்டப்பட்டன. இதன் விளைவாக வேலை இழந்த அருண் கவ்லி, குறுக்கு வழியில் விரைவாக பணம் சம்பாதிக்க விரும்பி ராமா நாயக் மற்றும் பாபு ரெஷிம் தலைமையிலான பைகுல்லா கும்பலில் சேர்ந்து போதைப்பொருள், சட்டவிரோத மதுபானம், மிரட்டி பணம் பறித்தல், மட்கா சூதாட்டம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். லாட்டரி பந்தயத்தின் ஒரு வடிவமான மட்கா சூதாட்டம் என்பது நியூயார்க் காட்டன் எக்ஸ்சேஞ்சில் இருந்து டெலிபிரிண்டர்கள் மூலம் பாம்பே காட்டன் எக்ஸ்சேஞ்சிற்கு அனுப்பப்படும் பருத்தியின் தொடக்க மற்றும் இறுதி விகிதங்களில் பந்தயம் கட்டுவதை உள்ளடக்கியது.
1980 களில் அருண் கவ்லி உள்ளிட்ட கும்பல்களை ஒடுக்க மும்பை காவல்துறை முயன்ற போது, சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே "அவர்கள் நம்முடைய பையன்கள்" என்று அருண் கவ்லிக்கு ஆதரவாக பேசியதன் மூலம் அரசியலில் கவனம் பெற்றார். 1990 களின் பிற்பகுதியில் சிவசேனா கட்சியுடனான உறவை முறித்து கொண்ட பிறகு, 1997 இல் அகில பாரதிய சேனா கட்சியை தொடங்கினார் மற்றும் 2004 இல் சின்ச்போக்லி (Chinchpokli) சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
2007 இல் சிவசேனாவின் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் உறுப்பினரான கமலாகர் ஜாம்சண்டேகர், அருண் கவ்லி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். நில பேரத்துடன் தொடர்புடைய இந்த கொலையை செய்ய அருண் கவ்லி ரூ.30 லட்சம் பெற்றார். கமலாகர் ஜம்சண்டேகரை கொலை செய்த குற்றத்திற்காக 2012 இல் அருண் கவ்லிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ராஜன் வகையறா
1970 களின் பிற்பகுதியில், கேரளாவை சேர்ந்த ராஜன் மகாதேவன் நாயர் என்ற படா ராஜன் மும்பையின் கிழக்கு புறநகர் பகுதிகளான காட்கோபர், பந்த் நகர், செம்பூர் மற்றும் திலக் நகர் போன்ற இடங்களில் சட்டவிரோத கும்பலை இயக்கி வந்தார். மும்பை நிழல் உலகில் தாவூத் இப்ராகிமுடன் இணக்கமாக பணியாற்றினார் படா ராஜன். மேலும், திரையரங்கில் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்து கொண்டிருந்த ராஜேந்திர நிகல்ஜே கும்பலை படா ராஜன் தனது கும்பலில் சேர்த்து கொண்டார். இறுதியில் படா ராஜனின் வலதுகரமாக செயல்பட தொடங்கிய ராஜேந்திர நிகல்ஜே சோட்டா ராஜன் என்று அழைக்கப்பட்டார்.
செம்பூரில் உள்ள ஷெல் காலனியில் ஒரு பெண் தட்டச்சரை ஏகடியம் செய்ததற்காக அப்துல் குஞ்ச் கும்பலை படா ராஜன் கும்பல் தாக்கியதில் இருந்து அப்துல் குஞ்ச் படா ராஜனுடன் நீண்டகாலமாக பகை கொண்டிருந்தார். ஒருவரையொருவர் கொல்லத் துணியும் அளவுக்கு இச்சம்பவம் கொடிய பகையாக மாறியது.
தாவூத் இப்ராகிமுக்கு உதவியாக 06-09-1982 அன்று செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே படா ராஜனின் அறிவுறுத்தலின் பேரில் டேவிட் பர்தேசி என்பவரால் பதான் கும்பலைச் சேர்ந்த அமீர்சாதா நவாப் கான் கொல்லப்பட்டார். இந்த சூழலை பயன்படுத்தி கொண்ட அப்துல் குஞ்ச், பதான் கும்பலை சேர்ந்த மகேஷ் தோலாகியா மூலம் படா ராஜனை கொல்ல திட்டமிட்டார். இதனால், தங்கையின் திருமணத்திற்கு பணம் தேடி அலைந்து கொண்டிருந்த சந்திரசேகர் சபாலிகா என்ற ரிக்சா ஓட்டுநரை வேலைக்கு அமர்த்தினர். 21-09-1982 அன்று மகேஷ் தோலாகியா மற்றும் அப்துல் குஞ்ச் ஆகியோரின் திட்டத்தின் பேரில் எஸ்பிளனேட் நீதிமன்றத்திற்கு வெளியே படா ராஜனை வழிமறித்து சுட்டுக் கொன்றார் சந்திரசேகர் சபாலிகா. அமீர்சாதா நவாப் கான் கொல்லப்பட்ட 15 நாட்களுக்கு பிறகு படா ராஜன் கொலை செய்யப்பட்டார்.
தனது வழிகாட்டியான படா ராஜனை கொன்ற கொலையாளிகளை பழிவாங்க திட்டமிட்டு, அதன்படி சந்திரசேகர் சபாலிகா, அப்துல் குஞ்ச் மற்றும் அவர்களது கும்பலை சோட்டா ராஜன் அழித்தார். படா ராஜன் போல தாவூத் இப்ராகிமுடன் இணைந்து சட்டவிரோத வேலைகளை செய்து வந்த சோட்டா ராஜன், கடைசியில் தாவூத் இப்ராகிமின் எதிரியாக மாறி, தனித்து வேலைகளை செய்ய தொடங்கினார்.
27 வருடங்கள் தலைமறைவாக வாழ்ந்த சோட்டா ராஜன் 25-10-2015 அன்று பாலியில் இந்தோனேசிய காவல்துறையால் கைது செய்யப்பட்டு 06-11-2015 அன்று பாலியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 02-05-2018 அன்று பத்திரிகையாளரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். தற்போது சிறை கண்காணிப்பில் இருந்து கொண்டு மற்ற வழக்குகளை சந்தித்து வருகிறார். சோட்டா ராஜனின் சகோதரர் தீபக் நிகல்ஜே பா.ஜ.க கூட்டணியில் உள்ள ராம்தாஸ் அத்வாலேயின் குடியரசு கட்சியின் தேசிய தலைவராக உள்ளார்.
முடிவுரை
ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார், கரீம் லாலா, தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், யாகூப் மேனன், டைகர் மேனன், அபு சலேம், அருண் கவ்லி, படா ராஜன், சோட்டா ராஜன் போன்ற பல நபர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய மும்பை நிழல் உலகம் நிரம்பியுள்ளது. நிழல் உலகத்தின் முழு விவரங்களையும் ஆராய்வது சிக்கலான புராணக் கதையை அவிழ்ப்பது போல் இருக்கும் என்பதால் விவரங்களை விரிவாக்கவில்லை.
உலகம் முழுவதும் நிழல் உலக செயல்பாட்டால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம். இத்தகைய உண்மையான வரலாற்று சூழலில், நிழல் உலக சக்திகளின் செயல்பாடுகளை ஒடுக்குவதற்கு ஒரு நாள் சட்டம் தன் கடமையை செய்யும் என்று நம்புவோம்.
விவரணைகள்
ஹாஜி மஸ்தான் கதை
வரதராஜன் முதலியார் கதை
கரீம் லாலா கதை
தாவூத் இப்ராஹிம் கதை
1992 பாபர் மசூதி கதை
Naresh Fernandes Recollects Reporting the 1992-1993 Riots
1993 மும்பை குண்டுவெடிப்பின் கதை
Srikrishna Commission Panel
1991 Lokhandwala Complex Shootout (Viewer Discretion Advised)
Criminal Files - The Indian Mafia
Few Indian Gangster Movies List
Few Indian Female Gangsters List
யார் இந்த சுகுமார குருப்?
மாஃபியா வரலாறு
Mafia History
Dawood Ibrahim Cover Stories
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.